என். சொக்கன்
காந்தியைப் பின்பற்றுவது எப்போதுமே சிரமம்தான். இப்போது அது மேலும் சிரமமாக இருக்கிறது.
இத்தனைக்கும் காந்தி புதிதாக எதையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. நல்ல பழகுமுறைகள் என்று உலகம் காலங்காலமாக நம்பியவற்றைத்தான், பல்வேறு மொழிகள், பண்பாடுகளின் அற நூல்கள் சொன்ன எளிய உண்மைகளைத்தான் அவர் தன்னுடைய தேடலில் கண்டறிந்தார், பின்பற்றினார், பிறருக்கும் எடுத்துரைத்தார். ஆனால், நாம் அதிலிருந்து மிகவும் விலகி வந்துவிட்டதால், வெளிநாட்டில் பிறந்து, வளர்ந்த பேரனோ, பேத்தியோ தன்னுடைய தாத்தா, பாட்டி பேசுவது புரியாமல், அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதைப்போல் திகைக்கிறோம்.
காந்தி வலியுறுத்தியவற்றைப் பின்பற்றுவதில் இன்னொரு சிக்கல், அவர் பேசியவற்றின் அளவும் வீச்சும் மிகப் பெரியவை, மிகப் பரந்தவை. தனிப்பட்ட, பொது வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் படிநிலைகளுக்கும் காந்திய வழிகாட்டுதல்கள் உள்ளன. அத்தனையையும் புரிந்துகொண்டு அவற்றின்படி நடப்பது என்கிற எண்ணமே நமக்கு மலைப்பைத் தரும். மொத்தத்தையும் பின்பற்றாவிட்டாலும் ஓரிரு எளிய விஷயங்களையாவது பின்பற்றலாமே என்றால் அப்படியெல்லாம் சிறிதினும் சிறிது கேட்கக் காந்தி நமக்குப் பழக்கவில்லை. பின்பற்றியவற்றை நினைத்து வருகிற மகிழ்ச்சியைவிட, பின்பற்றாதவற்றை நினைத்து வருகிற வருத்தம்தான் கூடுதலாக இருக்கும்.
இப்படி நாம் வருந்திக்கொண்டிருக்கிற நேரத்தில், காந்தியத்தைப் பின்பற்றவேண்டும் என்கிற தேவையோ விருப்பமோ நாட்டமோ இல்லாத பெரும்பான்மையினர் எதிர்த்திசையில் இன்னும் விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதனால், நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் கூடுகிறது. அது நமக்கு இன்னும் அழுத்தத்தை உண்டாக்குகிறது.
ஏனெனில், பெரும்பான்மை செய்வதுதான் சரி என்கிற இயல்பான நம்பிக்கை நம் எல்லாருக்கும் இருக்கிறது. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது மிகவும் வசதியான ஓர் அறிவுரை. பெரும்பாலும் அது சிக்கலில்லாத ஒரு வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுத்துவிடுவதால், அதைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியோ என்கிற மயக்கம் வருவது இயல்புதான்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூரில் ஒரு பெரிய வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வண்ணமயமான பல பிளாஸ்டிக் துண்டுகள் தரப்பட்டன. அவர்கள் அவற்றைப் பலவிதமாக அடுக்கிப் பொருத்தி அழகிய உருவங்களை உருவாக்கவேண்டும். நடுவர்கள் தேர்ந்தெடுக்கிற சிறந்த உருவங்களுக்குச் சில ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் போட்டிக்கான விதிமுறைகளில் ஒன்று, குழந்தைகள் தானாகச் சிந்தித்து அந்த உருவங்களைச் செய்யவேண்டும், பெற்றோரோ மற்றவர்களோ அவர்களுக்கு உதவக்கூடாது.
ஆனால், இந்த விதிமுறையை அங்கு வந்திருந்த பெற்றோர் யாரும் மதிக்கவில்லை. அவர்கள் போட்டி நடைபெறும் நீள்வட்டப் பரப்பின் விளிம்பில் நின்றபடி தங்கள் குழந்தைகளுக்குப் பலவிதமான யோசனைகளைக் கத்திக் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் அந்த விளிம்பையும் தாண்டிச் சென்று தாங்களே உருவங்களைச் செய்து கொடுக்க முயன்றார்கள்.
போட்டியை நடத்தியவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘தயவுசெய்து யாரும் உள்ளே வரவேண்டாம், குழந்தைகளுக்கு உதவவேண்டாம்’ என்று அவர்கள் அறிவித்தார்கள், கெஞ்சினார்கள், கொஞ்சினார்கள், மிரட்டினார்கள். அங்கிருந்த மெத்தப் படித்த பெற்றோரில் யாரும் அதையெல்லாம் மதிக்கவில்லை, பொருட்படுத்தவில்லை.
வியப்பான விஷயம், தங்களுடைய பெற்றோர் இப்படி உதவுவதைப் பெரும்பாலான குழந்தைகள் விரும்பவில்லை என்பது அவர்களுடைய முகக்குறிப்பிலேயே தெரிந்தது. அவர்கள் சொந்தமாக உருவங்களை உருவாக்கி வெற்றி பெறத்தான் விரும்பினார்கள். ஆனால், வானளாவிய அதிகாரம் படைத்த பெற்றோர் செய்வதை அவர்களால் எப்படித் தடுத்து நிறுத்தமுடியும்?
எங்கள் குழந்தைகளும் அந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். நானும் என் மனைவியும் அவர்களுக்கு உதவவில்லை. ஆனால், சுற்றியிருக்கிற எல்லாரும் அப்படிச் செய்யும்போது நாம் மட்டும் ஒதுங்கி நின்றால் நம் பிள்ளைகள் வெற்றி பெறமாட்டார்களோ என்கிற கலக்கம் எங்களுக்கு வந்திருக்கும்தானே?
காந்தியைப் பயில்வோர் இந்த மனக் குழப்பத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறோம். ஏனெனில், இன்றைய உலகின் அதிகாரப்பூர்வமற்ற வெற்றி விதிமுறைகளாக வகுக்கப்பட்டிருக்கிறவை பெரும்பாலும் காந்தியத்துக்கு எதிரானவை. ‘நீ வெல்லவேண்டுமென்றால் துணிந்து பொய் சொல்’ என்றோ, ‘யாருக்கு என்ன ஆனால் என்ன? நீ முன்னேறுவதுதான் முக்கியம்’ என்றோ யாரும் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். ஆனால், அவைதான் வேலை செய்யும், அவற்றைப் பின்பற்றாதவர்கள் தோற்றுப்போவார்கள் என்கிற பேசப்படாத (Implicit) விதிமுறையை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால், காந்தியைப் பின்பற்றுவது இந்தக் காலத்துக்குச் சரிப்படாதோ என்று அவ்வப்போது திகைக்கிறோம்.
உண்மையில், காந்தியைப் பின்பற்றுவது எந்தக் காலத்துக்கும் சரிப்படாது என்றுதான் உலகம் சொல்லிவந்திருக்கிறது. காந்தியிடமே அவர்கள் அதைத்தான் சொன்னார்கள். ஒருவேளை, பலப்பல நூற்றாண்டுகளுக்குமுன்னால் அனைத்தும் அறத்தின்படி நடந்த ஓர் உலகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது கற்பனையில்மட்டும்தான் இருக்கிறது. அதைத் தங்களுடைய சிறு வட்டத்துக்குள் ஓரளவேனும் உண்மையாக்க விரும்புவோர் மேற்சொன்ன பேசப்படாத விதிமுறையால் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள்.
சில நேரங்களில் இந்த மிரட்டல்கள் அன்பான, அக்கறையான அறிவுறுத்தல்களாக வருகின்றன. ஆனால், ‘உன்னை அடிச்சுப் பொளந்திடுவேன்’ என்பதும், ‘நீ இப்படியெல்லாம் நடந்தா உலகம் உன்னை அடிச்சுப் பொளந்துடும்’ என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அறிவுரை சொல்பவர்மீது நாம் வைத்திருக்கிற மதிப்பு, அது சரியான அறிவுரைதானா என்று சிந்தித்துச் செயல்படுவதை அல்லது நிராகரிப்பதைத் தடுத்துவிடக்கூடாது.
பலனைமட்டும் பார் என்கிறது இன்றைய உலகம். அந்தப் பலனை அடைவதற்குப் பயன்படுத்துகிற பாதையும் தூய்மையாக இருக்கவேண்டும் என்றார் காந்தி. அதன்மூலம் கிடைக்கிற மன நிறைவு அதைப் பின்பற்றியவர்களுக்கு மட்டும்தான் புரியும். அதை எப்படி விளக்கிச் சொல்வது?
இதில் இன்னொரு பெரிய சிக்கல், சிலர்மட்டும் இதைப் பின்பற்றினால் அந்த நன்மைகள் அவரவர் வட்டத்துக்குள் நின்றுவிடும். எல்லாரும் அப்படிச் செயல்பட்டால்தான் அதன் கூட்டு விளைவால் (Combined Effect) உலகம் மிகச் சிறப்பானதாக, மிக மகிழ்வானதாக மாறும். அப்படி ஓர் உலகத்தை இப்போது நாம் கற்பனையில் மட்டும்தான் பார்க்கமுடியும்.
அதற்காக நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை. அனைவரையும் மாற்றுவது நம் கையில் இல்லாவிட்டாலும், நம்மால் இயன்றதை, அதாவது, நம் செயல்பாடுகளை நாம் மாற்றலாம்; மற்றவர்களுக்கு அறிவுறுத்தலாம்; திணிப்பதைக் காந்தி விரும்பமாட்டார்.
ஆனால், மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் அளவுக்குக் காந்தியை நமக்குத் தெரியுமா?
நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். என் தந்தையும் நானும் முதலாண்டுப் படிப்புக்கான புத்தகங்களை வாங்கச் சென்றிருந்தோம். அந்தப் புத்தகங்களில் ஒன்று சுமார் ஆயிரத்தி ஐநூறு பக்கங்களைக் கொண்டது, சிறு தலையணையைப் போன்ற தோற்றம் கொண்டது.
அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் என் தந்தைக்கு மிகவும் கவலையாகிவிட்டது, ‘இத்தனைப் பெரிய புத்தகத்தை நீ எப்படிடா படிக்கப்போறே?’ என்று அக்கறையுடன் கேட்டார்.
கடைக்காரர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க சார், இதுல சுமார் 200 பக்கம்தான் முதல் ஆண்டுக்குப் பாடம். மீதியுள்ள பக்கங்களை அடுத்தடுத்த செமஸ்டர்கள்ல கொஞ்சங்கொஞ்சமாப் படிச்சாப் போதும்’ என்று விளக்கினார்.
அதுவரை ஒரு பாடத்துக்கு ஓராண்டுக்கு ஒரு முழுப் புத்தகம் என்கிற பள்ளி அமைப்பை மட்டுமே அறிந்திருந்த எனக்கு இந்தப் புதிய முறை ஒரு பெரிய திறப்பாக இருந்தது, பொறியியல் படிப்பைப்பற்றி நான் கொண்டிருந்த மலைப்பைக் குறைத்து உதவியது, எத்தனைச் சிக்கலான தலைப்பையும் கொஞ்சங்கொஞ்சமாக அணுகினால் கண்டிப்பாகக் கற்றுக்கொண்டுவிடலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்து இன்றுவரை வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.
காந்தியத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் சொன்னவற்றில் நான் அறிந்தவை ஐந்து சதவிகிதம்கூட இருக்காது, புரிந்துகொண்டவை மூன்று சதவிகிதம்கூட இருக்காது, பின்பற்றுகிறவை ஒரு சதவிகிதம்கூட இருக்காது. இன்னும் படிக்க, முயன்று பார்க்க, ஏற்றுக்கொள்ள, நிராகரிக்க ஏராளமாக இருக்கிறது என்கிற நம்பிக்கை என்னைச் செலுத்துகிறது.
அப்படியானால், ஊரோடு ஒத்து வாழ்வது?
இந்த விஷயத்தில் பெரும்பான்மை நம்புவதும் பின்பற்றுவதும் சரியில்லை என்று நாம் உறுதியாக உணர்கிறோம். ஆனாலும், அந்த உணர்வு சரியா, தவறா என்கிற கலக்கம் அவ்வப்போது வரும். அப்போது முரட்டுத்தனமாக ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் இரு வாய்ப்புகளையும் அலசிப் பார்த்து, தேவைப்பட்டால் பரிசோதித்துச் சரியான தீர்மானத்துக்கு வருவதும் காந்தியத்தின் ஒரு பகுதிதான். அந்தத் தீர்மானத்தில் சில நெகிழ்வுகள் இருக்கலாம்; அவை தவறுகளாகவேகூட ஆகிவிடலாம்; அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை நம்மை மேம்படுத்திக்கொள்ள முயல்வதும் காந்தியத்தின் இன்னொரு பகுதிதான்.
குறிப்பாக, இதுபற்றிய ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் தொடர்ந்து நிகழவேண்டும். தன்னைப்பற்றிய மிகையான புகழ்ச்சிகளைவிட, இருதரப்பினரும் கலந்து பேசித் தீர்மானிப்பதைத்தான் காந்தி விரும்புவார். வரலாறெங்கும் அப்படிப்பட்ட உரையாடல்கள்தான் காந்தியத் தொண்டர்களை உருவாக்கிவந்திருக்கின்றன, இனியும் உருவாக்கும். அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும், பெரும்பான்மையின் மனங்களை உறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
அந்த உறுத்தல் நல்லது; உலகம் தன்னுடைய வேர்களிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு விலகிவந்துள்ளது என்பதற்கான நினைவூட்டல் அது; என்றேனும் நல்ல மாற்றம் வரும் என்பதற்கான நம்பிக்கைத் துளியும் அது.
***
என். சொக்கன் – இயற்பெயர் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன். தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் பிறந்து வளர்ந்த சொக்கன் கோவையில் பொறியியல் கற்றவர், மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கடந்த இருபதாண்டுகளாகப் பெங்களூரில் வசித்துவருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் இவரது நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. மின்னஞ்சல்: nchokkan@gmail.com

