ச.பாலமுருகன்
நம் நாட்டில் இறந்த பின்னரும் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்டும், அடையாளத்தை மறைக்கவும் ஒரு பெரும் முயற்சி அம்பேத்கர் மீது நிகழ்கின்றது. அம்பேத்கரின் சிலைகள் நிறுவப்படுவதை ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தடுப்பதும், சிலை நிறுவப்பட்ட இடங்களில் அந்த சிலைகளை சேதப்படுத்துவதும் வழக்கமான செய்தியாகி விட்டது. அம்பேத்கர் ஏதோ ஒரு வகையில் சமத்துவம் மறுப்பாளர்களுக்கு எதிரான அடையாளமாக விளங்கி வருகின்றார். அவர் இன்னமும் தனது கொள்கைகள் மற்றும் மக்களின் உணர்வில் உயிரோட்டமாக இருக்கின்றார்.
கோயமுத்தூர் போன்ற ஒரு பெரு நகரத்தில் அம்பேத்கருக்கென நகரின் மையத்தில், அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் ஒரு அம்பேத்கரின் சிலை இல்லை. நீண்ட காலம் சனநாயக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். ஆனால் அது நடைமுறைக்கு வராத கனவாகவே உள்ளது. கடந்த 2007 ஆண்டு கோயமுத்தூர் மாநகராட்சி அம்பேத்கரின் சிலையை மாவட்ட நீதிமன்றத்தின் முன் உள்ள ரவுண்டானாவில் அமைக்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதன் பிறகு அது நடைமுறைக்கு வரவில்லை. சமுக ஆர்வலர்கள், தலித் இயக்கத்தினர் தொடர்ந்து சில வருடங்கள் அம்பேத்கரின் சிலை போன்ற ஒரு மாதிரியை வைத்து போராடி பார்த்தனர். அரசு சிலை அமைக்க அனுமதிக்கவில்லை. அரசு அதிகாரிகள் காவல்துறை சிலை அமைக்க இசைவு தரவில்லை என்றார்கள். உயர்நீதிமன்றத்தில் இதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் கோயமுத்தூரில் அம்பேத்கரின் சிலை அமைக்க பரிசீக்க உத்தரவிட்டது. இவை எவற்றிக்கும் அரசிடமிருந்து நேர்மறையான எதிர்வினை இல்லை. அம்பேத்கர் சிலை தொடர்பாக அணுகும் போது உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்றம் சாலை ஓரம் சிலை அமைக்க வேந்தாம் என கூறி விட்டதாகவும், அதனைக் கடைபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பதில்கள் வந்தன. ஆனால் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதித்த அதே இடத்தில் தன்னை செதுக்கிக் கொள்ளும் மனிதனின் சிலையும், அதன் அருகில் கற்பனை வறட்சியில் புத்தகத்தின் மீது பேனா முனை, மருத்துவரின் ஸ்டெத்தஸ்கோப் போன்ற குறியீட்டு சிலைகள் வந்து விட்டது. பொது சாலைகளில் சிலைகள் வைக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பேத்கர் சிலை வரும் போதுதான் எழும் என்பது பிறகுதான் தெரிந்தது.
அம்பேத்கர் சாதிகள் அற்ற ஒரு சமூகத்தை நிறுவ விரும்பினார். சாதிய அநீதியை அம்பலப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் கல்வி, வேலைவாய்ப்புகளில் பங்கேற்பதில் இருந்த தடையை இட ஒதுக்கீடு வழியாக நீக்கினார். மனிதர்களின் சுயமரியாதை, கண்ணிய உணர்வை உறுதி செய்ய வேண்டினார். இவை பிற்போக்காளர்களால் ஏற்க இயலவில்லை. நாட்டின் அரசமைப்பு சட்டம் இவற்றை உறுதி செய்த போதும், நடைமுறையில் இவற்றை மறுப்பது நிறுவனமயமாகி உள்ளது. எனவே அம்பேத்கரின் அடையாளத்தை மறுப்பது ஒரு வகையில் சமூகத்தில் இயக்கமாகவே உள்ளது. ஆதிக்க சாதியினர், அதிகாரவர்க்கம் என இந்த கருத்தோட்டம் நீடித்து வருகின்றது. உத்திரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு என நாட்டின் பல இடங்களில் அம்பேத்கர் சிலையாக நின்ற போதும் அவமதிக்கப்படுகின்றார். உத்திரபிரதேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் லக்னோ, மீரத், கோண்டா, பாலியா என 13 வெவ்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலை உடைக்கப்படும் போது ஒரே வகையான தாக்குதல் நிகழ்வதாக குறிப்பிடுகின்றனர். குறிப்பாக உயர்ந்திருக்கும் அம்பேத்கரின் கரம் அல்லது அவரின் தலை தாக்குதலுக்கான இலக்காக உள்ளது. அந்த சிலையின் கரங்கள் சமத்துவத்தை மறுப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக காட்சியளிக்கலாம்.
திருப்பூர் மாவட்டம் , குண்டடம் ஒன்றியம் குங்காருபாளையத்தில் இருக்கும் ஆரம்ப்ப பள்ளி சுற்று சுவற்றில் கடந்த பிப்ரவரியில் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு காமராஜர், விவேகானந்தர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் படம் வரையப்பட்டிருந்தது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் படம் வரையப்படவில்லை. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, அம்பேத்கர் படம் வைக்கும் நிலை ஏற்பட்டால் தான் மருத்துவ விடுப்பு போட்டு சென்றுவிடுவேன், பிறகு விழா நடக்காது என்று பதிலளித்துள்ளார். அம்பேத்கர் படம் வைக்க அரசாணை உள்ளதை சமூக ஆர்வலர்கள் தெரிவித்த பிறகும் அதனைத் தலைமை ஆசிரியர் ஏற்கவில்லை. அதன் பிறகு பா.ஜ.க நிர்வாகிகள் அந்த ஊரில் ஊர் கட்டுப்பாடு உள்ளதாகவும், அம்பேத்கர் படம் பள்ளி சுவற்றில் வரைவது தங்களுக்கு கௌரவக் குறைச்சல் என மறுத்துள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் அம்பேத்கர் படம் வரைவதை தவிர்க்க ஊரின் ஆதிக்க சாதியினருடன் சேர்ந்து நின்றுள்ளார். அதன் பிறகு அனைத்து அரசியல் மற்றும் சனநாயக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நின்றதால் அந்த சுவரில் அம்பேத்கர் படம் வரையப்பட்டது. சுவற்றில் உள்ள அமபேத்கர் சாதிய கட்டுப்பாட்டை மீறி எப்போது வேண்டுமானாலும் இழிவுபடுத்தப்படும் நிலையில் சாதிய ஆதிக்கத்தை கேள்வி எழுப்பி வருகின்றார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள வீரணகுப்பம் கிராமத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வின் ஒரு வாரத்திற்கு முன்பு சுடுகாட்டில் புதைப்பது தொடர்பாக ஒரு பிரச்சனை இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் இழிவு படுத்தப்பட்டுள்ளார். மனிதனின் துவக்க கால கண்டுபிடிப்புக்களில் சிறந்த ,எளிய கண்டுபிடிப்புக்களில் ஒன்று செருப்பு. அது இழிவின் குறியீடாய் மாறிப்போனதன் சமூகவியல் ஆய்வு இங்கு விரிவாக நடத்தப்படவேண்டும்.
பழமைவாதம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒரு இடைவிடாத இறுக்கத்தை சமூகத்தில் நிறுவ தொடர்ந்து முயல்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு எனப் பிற்படுத்தப்பட்டவர்கள் நகரங்களில் வாழ்கின்றனர். தீண்டாமை பார்க்கக்கூடாது, அது குற்றம் எனப் புரிதல் உள்ளது. ஆனால் சக மனிதனின் சாதிகளைத் தெரிந்து கொள்வதில் காட்டப்படும் ஆர்வம் இன்னமும் குறையவில்லை. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ளவர்கள் தங்களின் சாதிய அடையாளங்களை குடும்ப பெயர் என சுமந்து திரிகின்றனர். எனவே சாதியை இனம் காணுதல் எளிது. பெரு நகரங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் அத்தகைய சாதிய பாகுபாட்டை இன்னமும் பாதுகாக்கும் இடமாக உள்ளது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வெளிப்படையான பாகுபாடு நடந்தவாறு உள்ளது. ஹைதராபாத் பலகலைகழகத்தில் ரோஹித் வெமுலா இந்த ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த 2019 ஆண்டு மகாராஷ்டிராவில் மும்பையில் டொபிவாலா மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி மருத்துவம் படித்து வந்த பயல் சலீம் தத்வி என்ற பழங்குடி மாணவி தொடர்ந்து சாதிய பாகுபாடு காரணமாக தனது சீனியர் மாணவர்களால் துன்புறுத்தப்பட்டாள். அவளின் புகார் எதையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எடுத்துக் கொள்ளவில்லை. அம் மாணவி 22.5.2019 தற்கொலை புரிந்து கொண்டார். அதன் பிறகு ரோகித் வெமுலாவின் தாயும், பயல் சலீம் தத்வி தாயாரும் இணைந்து, கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட தங்கள் குழந்தைகளின் நிலை மற்ற மாணவர்களுக்கு நிகழாமல் தடுக்க, உச்சநீதிமன்றத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு தடுக்க தனிச் சட்டம் கோரி வழக்கு தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றம் அதற்காக ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்தது.
கடந்த 2023 நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமர்ப்பித்த புள்ளி விபரக் கணக்கின் படி இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 2018 முதல் 2023 வரை மட்டும் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக ஐ.ஐ.டி என்ற உயர் கல்வி நிறுவனத்தில் மட்டும் 39 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. என்.ஐ.டி நிறுவனத்தில் 25 மாணவர்கள் மற்றும் மத்திய பலகலைக் கழகங்களில் 25 மாணவர்களும் , ஐ. ஐ. எம் நிறுவனதில் 3 பேர் , ஐ,ஐ,எஸ்.ஆர் நிறுவனத்தில் மூவர், எனப் பட்டியல் நீள்கிறது. கடந்த 2021 ஆண்டு மட்டும் 13000 மாணவர்கள் தற்கொலை புரிந்துள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2022 ஆண்டு விபத்து மற்றும் தற்கொலை சாவுகள் பட்டியல் 7.6 சதவிகிதம் மாணவர்கள். கடந்த 2025 மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் டெல்லி ஐ.ஐ.டி யில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் அனில் குமார் என்பவரின் மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடு முழுதும் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு நிலவுவதை ஆராய்ந்தது உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பத்ரிவாலா ,மகாதேவன் ஆகியோர் தேசிய அளவில் கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட்டனர். அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர் போல (loco parentis) இருந்து பாதுகாக்க வேண்டும் என்றது.
2019 ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளை கலையும் விதிகள் இந்த ஆண்டு நடைமுறைக்கு வர இருந்தது, ஆனால் இந்த தடுப்பு நடவடிக்கை உயர்சாதி மாணவர்களை பாதிப்பதாக நடத்திய போராட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அந்த நடைமுறையை தடை செய்தார்.
சாதிய ஆதிக்கவாதிகள் அவர்களின் சாதிய மேட்டிமைக்கு அச்ச்சுறுத்தலாக இருக்கும் எல்லா அடையாளங்களையும் வீழ்த்த முயல்கின்றனர். அம்பேத்கர் அவர்களுக்கு அச்சுறுத்தலான ஒரு குறியீடு. அரசியலமைப்பு சட்டமாகட்டும், அவரின் கருத்துக்களாகட்டும் , எல்லாவற்றிலும் மனித சமத்துவம் இன்னமும் பெரும் போராட்டங்களாக மாறியுள்ளது. சாதியம் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் பாதுகாக்கப்படுகின்றது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் அது அணி சேர்க்க முயல்கின்றது. சம வாய்ப்புகளை மறுத்து தகுதி, திறமை என அது வெட்க்மின்றி பேச வைக்கின்றது. சமத்துவத்தையும் , மனித கண்ணியத்தையும் மறுக்கும் சமூகத்தில் அம்பேத்கரின் அடையாளம் ஒரு போராட்டத்தின் குறியீடு. அதனைக் காட்சிப் படுத்த தொடர் போராட்டம் தேவை.
அது விளம்பரமல்ல. அடையாளம்!
***
ச.பாலமுருகன் –பவானியை சேர்ந்தவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். பி.யூ.சி.எல் என்ற அமைப்பில் இணைந்து செயல்படுபவர். “சோளகர் தொட்டி”, “டைகரிஸ்” ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: balamuruganpucl@gmail.com
