அசாதாரணத்திலிருந்து
சாதாரணத்துக்கு
எறிகுண்டுகளிடமிருந்து
மூன்று முறை தப்பித்தவனை
கைவிட்டுத் தீர்கிறது
சொந்த வாகனத்தின் பெட்ரோல்.
கத்திகளோடு நெருங்குபவர்களை
உற்றுப்பார்க்கும் மேம்பால விளக்குகள்
மறுநாள் காலையில்
அணைந்துவிடும் சாட்சிகள்.
மிக அருகில்தான் இருக்கிறது
அவனது வீடு.
அவ்விடத்தில் மட்டும் கேட்காதவாறு
வளர்சுவரெழுப்பி
மூடிக் கொள்கிறது பாலம்.
அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது
நூற்றைம்பது பெட்டிகள் கொண்ட
கூட்ஸ் ரயில்.
அசாதாரணத்திலிருந்து
சாதாரணத்திற்குத் திரும்ப
பாலத்துக்குத் தெரிந்திருக்கிறது.
மகளும் நானும்
அதே பாலத்தின் நடுவேதான்
கூச்சலிட்டபடியே
ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருக்கிறோம்
மீன் வாங்கச் செல்லும்
ஞாயிறு காலையில்.
கூச்சல்கள் எதிரொலித்து
மீன்களைப் போல வளைந்தோடும்
மேம்பாலத்தில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
இருபது வயதில் இறந்துவிட்டவனின்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.
அவசரம் இல்லாத நாள்
கழற்றி வைக்கப்பட்டிருக்கிறது கொண்டை
விசிலடித்துக் கொண்டு ஆடும் ஆட்டம் இல்லை.
தலைக்கு மேலே உடலைப் பரப்பி
இஷ்டத்துக்கு தூங்குகிறது குக்கர்.
வயிற்றுப் பகுதியின் கூர் பிளேடுகள்
அனுபவித்திராத சொகுசுடன்
மூடியற்று
வான் பார்த்திருக்கிறது மிக்ஸி ஜார்.
கேஸ் அடுப்புக்கு
சொல்லவியலா ஆனந்தம்
திருகியார்கள் இன்னும்
வரவில்லையென்று.
ஒல்லிக்குச்சி லைட்டரைப் பார்த்து
எகத்தாளம் வேறு.
சம்பிரதாயமாகி அனிச்சையாய்த்
தொட்டெடுக்கும்
தேயிலைத்தூள் டப்பாவுக்கு
அவ்வளவு குஷி
தன் மணத்தில்
தான் மட்டும்
குளித்துக் கொண்டிருக்கிறது.
தட்டி அடிப்பவர்கள் இல்லை
கட்டிக் கொண்டு
களிக்கூத்தாடுகின்றன
லஞ்ச் பாக்ஸ்கள்.
எங்கெங்கு காணினும்
விடுதலையின் பரிசுகந்தம் .
காலை உணவு சமைக்க
அவசரமில்லாத நாள்
வாரி மடியிலமர்த்திக் கொள்ள
வெகுநேரமாக அமர்ந்திருந்தோம்.
புதிதினும் புதிது
பறக்க விரும்புகின்றன
உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகள்
கை கால்களை விரித்து
பழைய உடல்களிடமிருந்து
விடுதலையாகி
புதிய சமவெளிகளுக்குப் பயணிக்கவும்
மழைச்சேற்றில் அழுக்காகி
நாய்கள் கடித்து விளையாடவும்
அடையாளம் மங்கி
பூர்வநாளில் அணிந்தவர்களால்
கைவிடப்படுவதற்காகவும்
பைத்தியங்களின் கூடாரத்துக்குள்
அந்த நாளின் வண்ணமாக
சூடிக்கொள்ளப் படுவதற்காகவும்.
ஒரு ஸ்க்ரோல்
ஒரு ரீல்
மரணத்தைக் கடந்து செல்கிறது
ஒரு ஸ்டேட்டஸ்
பிரிவை அழுகையில்லாமலாக்குகிறது
ஒரு ஸ்டோரி
துரோகங்களை மழுங்கடிக்கிறது
ஒரு ஷாட்ஸ்
பலவீனங்களை
ருசியான பண்டமாக்குகிறது
ஒரு ஸ்க்ரோல்
மொத்த பிரபஞ்சத்தையும்
காணாமல் போகச் சொல்கிறது
நாளாம் நாளாம்
குலவையொலி கேட்கிறது
எங்கேயோ ஒரு ஊரில்
கோவில் திருவிழா.
வைத்தியக் குறிப்பின் அடிவருடுகிறது
நம்பிக்கை வாசகம்.
பலன்களில் அபாயமேதுமில்லை
எங்களின் ராசிகளுக்கு.
இன்னாரின் பிறந்தநாளோ
இன்னாரின் இறந்தநாளோ
ஒவ்வொரு நாளிலும் தோன்றும்.
நல்ல நேரம் எமகண்டம் ராகுகாலம்
ஒன்றுகூடிக் கலந்திருக்கிறது
அகாலத்தில்.
எவ்வளவு சுலபமாகக்
கிழித்து விடுகிறேன்
ஒரு நாளை
அது கூட்டும் எடையைத்
தாங்க முடியாமல்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
உள்ளங்கை.
வாசனை முகூர்த்தம்
தலைகள் மென்மையாக திருகப்பட
திறக்கப்பட்ட உடல்களிலிருந்து
கசிகிறது வாசனை.
துருப்பிடித்த தோல்செதில்கள்
ஆரவாரித்து உதிர்கின்றன
சாலைகளெங்கும்.
புதிதாகத் திருமணமாகியிருக்கும்
கன்னிகையொருத்தி
கூட்டத்தின் நடுவே
கசிய விட்டிருக்கிறாள் பரிமளத்தை
ஏற்கனவே திறக்கப்பட்ட உடலிலிருந்து.
கால்களின் மருதாணிச் சிவப்பும்
மஞ்சள் கயிற்றின் பொன்முறுக்கலும்
நடப்பவர்களை கூட்டிச் செல்கிறது
திருமணக் காலங்களுக்கு.
முதன்முதலாக
உடல்திறக்கப்பட்ட நாளில்
வெட்கிப் பார்த்த கண்ணாடி
பளிச்சென்று சிரிக்கிறது.
சிணுங்கியபடி
குலுக்கிக் கொள்கிறார்கள்
பெருகுகிறது
யௌவனத்தின் நுரை.
வீடுகள் வந்தபின்னும்
தெருவாசலிலேயே
நின்றுகொண்டிருக்கின்றன
மூடியைத் தொலைத்துவிட்ட
வாசனை திரவியக் குப்பிகள்.
***
இரா.கவியரசு – திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் வசிக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார். ‘நாளை காணாமல் போகிறவர்’, ‘நறுமணப் புகையின் தனிமை’ என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மாய சன்னதம் – 20 நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்த கட்டுரைகள் மற்றும் 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகளைத் தொகுத்து ‘இறகிசைப் பிரவாகம் ‘ என்ற தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளது. கவிதைகளும் கவிதைகள் குறித்த கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். மின்னஞ்சல் : rajkaviyarasu@gmail.com
