நேர்காணல் : ப்ரிம்யா கிராஸ்வின்
நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ப்ரிம்யா கிராஸ்வினுடனான உரையாடல் அவருடைய கதைகளை அருகில் சென்று பார்க்க வழிவகுக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். தப்பரும்பு எனும் கவிதைத் தொகுப்பும், ‘கெத்சமனி’, ‘திருப்பண்டம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கதைகள் மென்னுணர்வின் சாயலை பிரதிபலிப்பதாக இருப்பினும் அதன் மரபார்ந்த தடத்தையும், நிகழ்கால சிக்கல்களையும் ஒரே தட்டில் வைத்து புனைவில் ஆராய்பவர். சரளமான மொழி நடையில் எளிமையான கதை வடிவில் ஆழமான கேள்விகளை எழுப்புபவர். இந்த நேர்காணல் புனைவுலகத்துடனான அவருடைய அன்றாடத்தையும் அதன் வழி அவருடைய கதைகளுக்கான மற்றொரு திறப்பையும் அறிய உதவுகிறது.
- கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?
கவிதைகளில் உணர்வைச் சொல்ல வார்த்தைகளில் போதாமை ஏற்பட்டபோது, நான் கதைகளுக்கு நகர்ந்தேன். கதைகள் தரும் கருத்துச் சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயல்பில் அகமுகச்சிந்தனையாளியாக இருக்கிற எனக்கு ஒரு நுரைப்பஞ்சுபோல என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மௌனமாக விழுங்கிக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. பிறகு, ஒரு சாதகமான தருணத்தில் இந்த சம்பவங்கள் தம்மை கதையாக சிருஷ்டித்துக் கொள்கின்றன.
- முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?
எனது முதல் சிறுகதை ‘பிடாரி’, வாசகசாலை இணைய இதழில் டிசம்பர் ,2023இல் வெளியானது.உண்மையில் அக்கதைக்கான கரு பின்வரும் கவிதையை எழுதும்போதுதான் பிறந்தது.
“சீக்கு வந்த பண்ணைச்சேவலை
தூரவா எறிந்து விட முடியும்…
அம்மா உப்பு காரம் தூக்கலாக வைத்த குழம்பும் பொறியலும் அப்பாவுக்கு
அத்தனை உவப்பாய் இல்லை… பிள்ளையைப்போல
வளர்ந்த பிரிய சேவலை விழுங்கவும் முடியாமல்
இலையை மூடவும் முடியாமல்
அப்பா பரிதவிப்பதை ,
அம்மா ஏன் குரூர இளிப்புடன் லயித்துப் பார்க்கிறாள்?
நேற்றுவரை தெருவில்
சிறுமியாய் ஆடி ஓடி
விளையாடிக்கொண்டிருந்த பெண்ணை,
அத்தான்உறவு
விட்டுவிடக்கூடாதென்று
கல்யாணம் கட்டி
கூட்டி வந்த போது
அவளுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்!”
வழக்கமாக ஆறேழு வரிகளுக்குள் கவிதைகளை எழுத முடிகிற எனக்கு வழக்கத்துக்கு மாறாக வார்த்தைகள் அதிகம் கோருகிற இவ்வரிகளை கவிதை என்றே ஒப்புக் கொள்ள முடியவில்லை. எழுதும்போதே எனக்குள் இது கதையாக விரியும் என்ற ஒரு அகக்காட்சி தோன்றி விட்டது.
முதல் கதையை எழுதும்போது, உண்மையில் வார்த்தைகளுக்குத் தடுமாறினேன் என்றுதான் சொல்லவேண்டும். சுருங்கச் சொல்லி பழகியிருந்த கவிமனது திடுமென கிடைத்த இந்த தாராளத்தில் சற்று திகைத்து நின்றதே உண்மை. ஆயிரத்து இருநூறு வார்த்தைகள் என்பதெல்லாம், அப்போது எனக்கு மலைப்பாயிருந்தது. எழுத ஆரம்பித்தபின், நிகழ்ந்ததெல்லாம் மாயம். கதைகள் என் விரல் பிடித்து, தனக்கான ஒப்பனைகளைத் தானே செய்துகொள்வதை ஒரு பிள்ளையின் ஆச்சர்யத்துடன் இன்றைக்கும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
கவிதை
- அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?
முதல் தலைமுறை எழுத்தாளர்களிடம் இருந்து சமகால எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காண்பிக்கும் வகையில், இம்மூன்றில் அனுபவம் தான் முதலாய் வருகிறது. அவர்களுக்கிருந்த விஷய ஞானம் நேரிடையான அனுபவங்களின் அடிப்படையில் இருந்தது. இன்றைக்கு ஒரு விரல் சொடுக்கில் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை அறிவதற்கு, அந்நாள்களில் எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது. அறிவு இருந்தால் யார் வேண்டுமானாலும் இன்றைக்கு கதை எழுதிவிட முடிகிறது. ஆனால், மொழியில் அவர்களின் சாயம் வெளுத்துப் போகும். தனக்கென்று ஒரு மொழிநடை இல்லாவிட்டால் pied piper ஐப் போல பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு மலைக்கு அப்புறமாக கொண்டு செல்வது எப்படியாம்!
- ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?
சொந்தஊரிலே ஆயுள்பரியந்தம் வாழுகிற வரம் எனக்கு கிடைத்துள்ளது. சிறுவயதில் நாங்கள் வசித்த வீடு இருக்கிற தெருவில் நடந்து செல்கின்றபோது, நான் ஒரு பாவாடைச் சிறுமியாக மாறி விடுகிறேன். ஒரு குழந்தையாக நான் நின்று அழுத இடங்களில், இன்றும் என் கால்கள் தயங்க நின்று நின்றுதான் போகிறேன். என் கதைகளில் ஒரு சிறுவனோ சிறுமியோ வந்துகொண்டே இருப்பார்கள். அது நான் தான்…என் பால்யமும், என் ஊரும் என் கதைகளில் இருந்து பிரிக்க முடியாதவை. எங்கள் ஊரில் விரிந்த கடல் ஒன்று இருக்கிறது.வீரபாண்டியன் பட்டணத்துக் கடல்… அதனை எழுதி மாயவே இந்த ஜீவன் இருப்பதாய் கருதுகிறேன். என் மக்களின் பாடுகளை, அவர்கள் சுமக்கும் ஒரு உப்புச் சிலுவையை, அத்தனை கண்ணீர் துளிகளையும் ஆவேசமாக வந்து அழிக்கும் இந்த அலைகளை எழுத்தில் வார்க்க முடியாவிட்டால் நான் எழுதிதான் என்ன பயன்?
- உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?
கன்னி போல ஒரு படைப்பை ஆழ வாசித்தவர்கள் கடல் சார்ந்து எழுத அமர்ந்தாலே, கிருபாவின் கைநடுக்கம் வராமல் இருக்க முடியாது. கடலைத் தொட்டால் கன்னியைத் தொட்டது போல இருக்கிறதோ என்று மென்பதட்டம் வந்து திரும்பத் திரும்ப வாசித்து இல்லை என்பதை உறுதி செய்துகொள்வேன். ஏனென்றால், நான் பார்க்கிற கடல், கிருபாவின் கடலுக்கு மிக நெருக்கமானது. ஆனால், அது ஆண்கடல். அதனால் பிழைக்கிறேன்.
- எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?
அது ஒரு நெடும்பட்டியல் இருக்கிறதே. குபரா, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், கு.அழகிரிசாமி, சுஜாதா, எஸ் ரா, வண்ணநிலவன், ஜி.நாகராஜன், ஆதவன், அம்பை இப்படி நீளும் பட்டியலில் ஒருவரைத்தான் சொல்ல வேண்டுமென்றால் வண்ணதாசனைச் சொல்வேன். அவர் சிறிய விஷயங்களின் கடவுள். சாமி உண்டியலில் சேரும் செல்லச் சிறுவாடு. எனது முதல் கவிதைத் தொகுப்புக்கான விருதினை அவரது கையாலே பெற்றேன். அவரிலிருந்தே அனைத்தும் துவங்கியது. கவிதைகளில் என்றால் நேசமித்ரன் மற்றும் முகுந்த் நாகராஜனைச் சொல்லலாம்.
சிறுகதைத் தொகுப்புகள்
- சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
வாழ்வியல் அனுபவங்கள் மட்டும் கதையாக மாறாது. சில நேரங்களில் வாசிப்பும் கூட கதைகளுக்கு இட்டுச்செல்வதைக் கண்டுள்ளேன். நான் எழுதிய கதைகளிலே, ஒரு கதையின் துணைக்கதாப்பாத்திரம் மற்றொரு கதை எழுதும்போது முதன்மைப் பாத்திரமாக தன்னை வரித்துக் கொண்டுள்ளதை கண்டதுண்டு. சிலநேரம் கவிதைகள்கூட கதைகளை நோக்கி என்னை அழைத்துச் செல்லும். கதைக்கான திறப்பு இங்கிருந்து தான் வருமென்று இல்லை. கூம்பும் பருவத்து கொக்கொக்க நிற்பதே எழுத்துலட்சணம்.
- சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா ?
விருப்பப்புணர்வுக்கும், பலாத்காரத்துக்கும் இடையில் இருக்கிற வித்தியாசம்தான் தற்செயலுக்கும் காரணார்த்தத்துக்குமான வேறுபாடும். நான் எதையும் கதைகளின் மீது திணிப்பதில்லை. அவை தன்னியல்பில் தனக்கு தேவையான விஷயங்களை தேர்ந்துகொள்கின்றன. திணிப்பு கதைகளின் குரல்வளையை நெறிக்கும். அடுத்த கதை நீங்கள் இதை வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் ,அதை வைத்து எழுதினால் அதகளமாக இருக்கும் போன்ற பரிந்துரைகளை இங்கே காணமுடிகிறது. இப்போது ஒரு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதுபோல எவ்வளவு எளிதாக சொல்லி விடுகிறார்கள் பாருங்களேன். என்னைக் கேட்டால், எழுத்தாளன் என்பவன் தனக்குத் தோன்றினால் மட்டுமே எழுதவேண்டும் அல்லது பனிக்கரடி போல தனக்குள்ளே குகையமைத்து குளிர்உறக்கத்துக்குச் சென்றால் கொழுப்பாவது கரையும்.
- சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து
என்னோடு எழுத வந்தவர்களை கூர்ந்து அவதானிக்கிறேன். எதைச் செய்ய வேண்டும் என்பதைவிட எதைச் செய்யக்கூடாதென்று பாடம் கற்க வேண்டியுள்ளது இவ்விடத்தில் முக்கியமாக இருக்கிறது. புதியவர்கள் நிறைய எழுதுகிறார்கள். அவர்களின் நண்பர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நண்பர்களின் நண்பர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்கிறார்கள். வாங்கியவரெல்லாம் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு புத்தகம் ஐந்நூறு ரூபாய், எழுநூறு ரூபாய் என்கிறார்கள். அபிமானத்தின் பேரில் அத்தனை தொகை கொடுத்து புத்தகம் வாங்கி கையைச்சுட்டுக்கொண்ட அனுபவங்கள் எனக்கே ஏராளம் உண்டு. இப்போதெல்லாம் திருந்தி விட்டேன். இரண்டு மூன்று தாள்களை படித்துப் பார்த்த பின்னரே புத்தகத்தை வாங்குகிறேன்.
“நண்பர்களுக்கு எனது வரவேற்பறையில்
இடம் கொடுப்பேன்…
புத்தக அலமாரியில் அல்ல. “
கவனம் பெறாத புதிய எழுத்தாளர்கள் இங்கே எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, நல்ல படைப்பு அடைய வேண்டிய இடத்தை அடைந்தே தீரும்.
“மலையை விழுங்குகிறவர்களை விழி விரிய பார்த்துக்கொண்டு நிற்கிறவர்களே!
உங்கள் பசிக்கு ஒருமீன் போதாதா….
தூண்டிலை மட்டும் துருப்பிடிக்காமல்
பார்த்துக் கொள்ளுங்கள்!”
சமகாலபடைப்புகளைச் சொல்வதை விட படைப்பாளர்களை சொல்கிறேன். என்.ஶ்ரீராம், கார்த்திக் புகழேந்தி, செந்தில் ஜெகன்னாதன், அமுதா ஆர்த்தி, ரம்யா அருண் ராயன், இத்ரீஸ் யாக்கூப், ஐ.கிருத்திகா, கண்மணிராசா, தமிழக்குமரன், செஞ்சி தமிழினியன் இன்னும் ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.
- உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?
இருபது வருடங்களாக அரசுப்பள்ளி ஆசியராக பணியாற்றி வருகிறேன். பள்ளிநேரங்களில் அலைபேசியை என் உபயோகத்துக்கு பயன்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். எழுதுவதற்கென்று பிரத்யேக நேரம் என்ற ஒன்று எனக்கு இல்லை. கதைகளை அலைபேசியின் notepad இல் தட்டச்சு செய்துகொள்கிறேன். அதுவே மற்ற எல்லா முறைமைகளையும்விட சுலபமாயிருக்கிறது. எனது பெரும்பாலான கதைகள் பேருந்தில் எழுதப்பட்டவையே. இருக்கை கிடைக்காத நாள்களில், பிறகு எழுதலாம் என்று நினைத்து கோட்டைவிட்ட கதைகளும் உண்டு. தனிப்பெண்ணாகிய எனக்கு அர்த்தநாரியின் பாத்திரமும் வீட்டில் உண்டு.
அன்றாட வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, இரவில் எழுதலாம் என்றால்,‘உனக்கு இருக்கிற உடல் உபாதைகளுக்கு ஆறுமணி நேர தூக்கமாவது அவசியம் ’,என்று இடித்துரைக்கிறார் எனது மருத்துவர். ‘Miles to go before you sleep ’,என்கிறார் Frost. அன்றாடம் என் தலைக்குள் இவர்கள் இருவருக்கும் தான் போட்டியே!
- உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து
தற்சமயம் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுதியிருக்கும் கவிதைகளைத் தொகுக்க வேண்டும். நாவல் எழுதும் உத்வேகம் இருக்கிறது. அதற்கான மெனக்கெடல்களை மேற்கொள்வதற்கான சூழல்கள் தற்போது இல்லையென்பதால், காலதாமதம் ஆகிறது. கதைகளை எழுதுவேன் என்று ஒருகாலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை.இன்று இரண்டு தொகுப்புக்களை வெளியிட்டாகிறதல்லவா… காலம் எனக்கு இன்னும் என்ன வைத்திருக்கிறது என்று பார்க்கலாமே!
***
நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.




உங்களின் பேட்டியை படித்தபின் உங்கள் மேலுள்ள மதிப்பு கூடியுள்ளது.
மிகத் தெளிவான பார்வை உங்களுக்கு. கண்ணாடி அணிந்து இவ்வுலகை முழித்து விழித்து பார்த்தும் பின்னரும் மங்கலாகவே பார்வை உள்ள எங்களுக்கு வெளிச்சம் தர உங்கள் எழுத்து உதவும் என நம்புகிறேன்.