நேர்காணல்: கணேஷ் பாபு
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு புதிய அர்த்தங்களை வழங்குகின்றன. தொன்மக் கதைகளைக் கையாளும் போதும் சமகால யதார்த்த வாழ்வை பரிசீலிக்கும் கருவியாக அவை பயன்படுத்தப்படுகின்றன. “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது. கவிதை சார்ந்து ரசனைக் கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இந்த நேர்காணல் அவருடைய புனைவு நுட்பங்கள் இன்னமும் சற்று அருகில் சென்று அறிய உதவியாய் அமையும்.
கேள்வி: கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?
பதில்: கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு, நாங்கள் வசிக்கும் தெருவில் இருந்தே முடிவற்ற கதைகள் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தெருவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைசொல்லி. நாங்கள் வசித்தது ஒரு காம்பவுண்ட் வீடு. பல்வேறு பொருளாதார படிநிலைகளிலும் உள்ள மனிதர்கள் அங்கே வசித்தார்கள். மாலை வேளைகளில் திண்ணைகளிலும் முற்றத்திலும் பெண்கள் ஒன்று கூடுவார்கள். அது மெகா சீரியல்கள் முளைத்திராத காலகட்டம் என்பதால் தெருப் பெண்கள் யாவரும் அவரவர் குடும்பக் கதைகளையும் அடுத்தவர் கதைகளையும் பேசத் துவங்குவார்கள். பேச்சின் சுவாரஸ்யத்தில் அருகில் குழந்தைகளும் சிறுவர்களும் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள். நல்லதும் கெட்டதும் அந்த உரையாடல்களில் பொங்கி வரும். அவற்றில் வெளியே சொல்ல முடிந்த மற்றும் சொல்ல முடியாத கதைகள் யாவும் காற்றில் குதித்து ஆகாசத்தின் மீதேறி வானை இருள வைக்கும். அக்கதைகளின் சுவையறிந்த நிலவு புன்னகைத்தபடியே சஞ்சரித்துச் செல்லும். இரவு வளர வளர, கண் இமைகளைத் தூக்கம் கனக்க வைக்கும், கற்பனையைக் கதைகள் கனக்க வைக்கும். எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க முடியாமல் மூன்றாம் வருடத்திலேயே வெளியேறிவிட்ட ஒரு டாக்டர் இருந்தார். தெரு மனிதர்களுக்கெல்லாம் அவர்தான் ஆஸ்தான வைத்தியர். ஒரு சிறிய பெட்டியில் ஊசி மருந்து மாத்திரைகள் வைத்திருப்பார். சும்மா சொல்லக்கூடாது, சட்டத்தின் பார்வையில் அவர் போலி மருத்துவராக இருந்தாலும், அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளும், ஊசியும் வேலை செய்தன. கைராசியான மருத்துவர் என்று பெயரெடுத்தார். விடுமுறைக் காலங்களில் அவர், அருகில் உள்ள சிறுவர்களை அழைத்துப் பேச்சுக் கொடுப்பார். பல கதைகளைச் சொல்வார். இன்று நினைத்துப் பார்க்கையில், அவரது பெட்டிக்குள் மாத்திரைகளைக் காட்டிலும் கதைகளே அதிகம் இருந்ததாகத் தோன்றுகிறது. மற்றபடி, அம்மா, பாட்டி போன்றவர்கள் எல்லாம் நீண்ட கதைகள் சொல்வார்கள். தொலைக்காட்சி இல்லாத காலங்களின் மாலை வேளைகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. கதைகளைச் சுமந்துவந்த சுபமுகூர்த்த வேளைகள் அவை. மீண்டும் ஒருபோதும் தோன்ற முடியாதவையும்கூட. இப்படித்தான் கதைகள் எனக்கு அறிமுகமாயின. அதன்பின், வாசிப்புப் பழக்கம் ஏற்பட்ட பின்னர், அருகில் உள்ள கிளை நூலகத்தில் சென்று கதைகள் படிக்கத் துவங்கினேன். சிறுவர் மலர், அம்புலி மாமா போன்ற இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. சிறுவர் மலரில் எல்லாச் சிறுவர்களையும் போல படக்கதைகளே முதலில் என்னைக் கவர்ந்தன. பலமுக மன்னன் ஜோ, பேய்ப்பள்ளி, எக்ஸ்ரே கண் சிறுவன் போன்ற படக்கதைகளை ஆர்வமாக வாசிப்பேன். அதன்பின், சிறுவர் மலரில் வரும் இரண்டு பக்கக் கதைகளையும் வாசிப்பேன். கதை முடிந்ததும், கடைசிப் பத்தியில் கதையின் நீதியை உணர்த்தும் வகையில், “சிறுவர்களே…” என்று துவங்கி நீதி போதனை செய்வார்கள். அந்தப் பத்தியை மட்டும் வாசிக்காமல் கடந்து விடுவேன்.
கே: முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?
ப: கல்லூரி பருவத்தில் இருந்தே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைத் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன். விகடனில் வெளியான அவரது “துணையெழுத்து” என்னைக் கிறங்கடித்தது. ஒன்றுக்குப் பலமுறை அந்தக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்தபடியிருப்பேன். அவரைச் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கம் உண்டானது. சிங்கப்பூருக்கு பணி புரிய வந்தபிறகும் அந்த ஏக்கம் தொடர்ந்தது. நாம் ஒன்றை மெய்யாகவும் தீவிரமாகவும் எண்ணத் தொடங்கினால், பிரபஞ்சம் அதற்கு பதிலளிக்கும் என்பார்கள். 2012 ஆம் ஆண்டில் எஸ்.ரா சிங்கப்பூருக்கு வருகை தந்தார். சிங்கப்பூரில் அவர் இரண்டு நாட்கள் சிறுகதைப் பயிலரங்கை நடத்தினார். அந்த இரண்டு நாட்களும் அவர் பல்வேறு சிறுகதைகளை அறிமுகப்படுத்தினார். சிறுகதைகளை எழுதும் முறைகள், வெவ்வேறு கதை சொல்லல் முறைகள், வடிவங்கள் என சிறுகதைகளின் நுட்பங்களையும், இலக்கிய வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தினார். ஒரு கனவு நனவானதைப் போல நான் விரும்பிய ஆசிரியருடன் நேரடியாகப் பொழுதைக் கழிக்கவும், கதைகளைக் கேட்கவும் வாய்த்த அந்த இரண்டு நாட்கள் என் வாழ்வில் முக்கியமான நாட்கள். அதுவரை வாசகனாக இருந்த என்னை எழுத்தாளனாக மாற்றிய நாட்கள் அவை. அந்தப் பயிலரங்கின் முடிவில் நான் ஒருபக்கச் சிறுகதை ஒன்றை எழுதினேன். சிறந்த கதைகளில் ஒன்றாக அக்கதையை அவர் தேர்வு செய்தார். அதன்பின் இன்று வரை தொடர்ந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். முதல் சிறுகதை மட்டுமல்ல, இன்று வரை எழுதும் கதைகளும் உணர்த்துவது ஒன்றுதான், படைப்பு என்பது எதிர்பாராமையோடு விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் போன்றது. துவக்குவது மட்டும்தான் நம்மைச் சார்ந்தது. ஆனால், அது எங்கே செல்லும், எப்படி முடியும் என்பது நம் கைகளில் இல்லை. பறவையின் காலைப் பிடித்துக் கொண்டு பறப்பதைப் போலத்தான். ஆகாயம் அளாவும் அதன் சிறகுகள் வழியாக படைப்பாளி தனக்கேயுரிய பிரத்யேகமான சில காட்சிகளைத் தரிசிக்கிறான். நல்லூழாக, அதை வாசகனிடம் பகிர்ந்து கொள்ள அவனால் இயல்கிறது. ஒவ்வொரு கதையை எழுத அமரும்போதும் இனம்புரியாத பயமும், எழுதி முடித்த பின்னர் மாபெரும் மனநிறைவும் ஏற்படுகிறது. கதையின் வெற்றி, தோல்வி, வாசிக்கிறார்கள், வாசிக்கவில்லை என்பதையெல்லாம் தாண்டி, படைப்பின் இந்த இனிய அவஸ்தைகள்தான் தொடர்ந்து எழுத வைக்கின்றன.
கே: அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?
ப: என்னுடைய நோக்கில் இந்த வரிசையைத் தலைகீழாக்கிப் பார்க்கவே விரும்புவேன். மொழி-அனுபவம், கடைசியாகத்தான் அறிவு. மொழியும் அனுபவமும் சரிவிகிதத்தில் கலந்தாலே நல்ல படைப்பினை உருவாக்க இயலும். எழுத்தாளன் என்பவன் மொழியில் புழங்குபவன். ஆகையால், சொல்ல வேண்டியதைச் சிறப்பாகவும் அழகாகவும் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். சொற்களைத் தேர்வு செய்தல் என்பது எழுத்தாளனின் முதற்பெரும் கடமை. வெறுமனே ஒன்றைத் தட்டையாக யதார்த்தவாத முறையில் சொல்வது என்பது எனக்கு உவப்பில்லாதது. யதார்த்த மொழியில் எழுதப்படும் செய்தித்தாள் கட்டுரைகள், பத்திரிகை கட்டுரைகள் இவையாவற்றையும் வாசித்துவிட்டே ஒரு இலக்கிய வாசகன் இலக்கியக் கதைகளை வாசிக்க வருகிறான். அங்கும் அவனுக்கு அதே முறையிலான கதைகளைச் சொல்வது என்பது அவனைச் சலிப்படைய வைக்கும். கூடவே, எழுத்தாளனுக்கும் ஒரு சவால் வேண்டுமல்லவா? எத்தனை காலம்தான் பழகிப்போன மொழியில், சளசள என எழுதிக்கொண்டிருப்பது. கவித்துவமாக, மொழியின் பல்வேறு அடுக்குகளினூடாக கதைசொல்லலை நகர்த்திச் செல்ல வேண்டியது எழுத்தாளனின் சவால். வாசிப்புக்கு இடையூறின்றி அதை நிகழ்த்தத் தெரிந்தால் எழுத்து முதல் கட்டத்தைக் கடந்து விடுகிறது. அதற்காக, வெறுமனே மேலோட்டமான மொழி அலங்காரங்களுடன் நின்று விடலாகாது. அதையும் நல்ல வாசகன் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவான். வாழ்க்கையின் ஆழத்தையும் தீவிரத்தையும் சொல்வதற்கு அந்த மொழி பயன்படவேண்டும். எவ்வளவு அழகாகவும் கவித்துவமாகவும் சொல்லப்பட்டாலும் கதையில் ஆன்மா என்பது இல்லையானால் அது வெறும் மொழிவிளையாட்டாக நின்றுவிடும். சாமியாடி வேடமிட்டவன் மேல் தெய்வம் இறங்கிவர வேண்டும். இல்லையெனில் வெறும் கேலிக்கூத்தாக முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அழகும் ஆழமும் இணைந்தே பயணிக்கவேண்டும்.. இப்படிப்பட்டதொரு கதை சொல்லல் முறையைத்தான் நான் பயன்படுத்த முயல்கிறேன். அனுபவங்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கக்கூடும். ஆனால், பிரத்யேகமாக நாம் மட்டுமே அடையும் சில அனுபவங்கள் இருக்கும். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர நினைவுகள்” நூலை இங்கே நினைவுகூரலாம். அவையாவும் ஒரு கவிஞனுக்கு நேர்ந்த பிறிதொன்றில்லாத அனுபவங்கள். அத்தகைய அனுபவங்களையே மொழியின் வாயிலாக அள்ளியெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதையே என் படைப்புச் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்க முயல்கிறேன்.
கே: ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?
ப: தாய் தந்தையரின் சாடைகளை ஏந்தித்தான் நாம் பிறக்கிறோம். அது நம் பரம்பரைக் கண்ணியின் புறவயமான தடயங்கள். அதுபோலவே நம் அகத்தை உருவாக்கும் முதன்மையான அம்சங்களாக சொந்த ஊரும் அந்த ஊரில் நாம் கழிக்கும் பால்யமும் திகழ்கின்றன. அவை நம் படைப்புலகில் நம்மையறியாமலே பாதிப்பைச் செலுத்தக்கூடிய அகவயமான கண்ணிகள். ஒவ்வொரு கதையை எழுதும்போதும் மனம் தானே காலத்தின் பின்னால் போய் ஒருபோதும் புறவயமாகச் சென்றடைய முடியாத அந்த பொன்னான பால்ய காலத்தில் தகைவு கொள்கிறது. அதிலிருந்து சில விஷயங்களையாவது நினைவு கூராமல் மேலும் எழுத முடிவதில்லை. ‘வெயிலின் கூட்டாளிகள்’ என்ற கதையில் என் பால்யத்தின் சில துளிகள் விழுந்திருக்கின்றன. சிங்கப்பூருக்கு வந்தபின்னர் எழுதத் துவங்கியதால், சிங்கப்பூர் சூழல் சார்ந்த கதைகளையே அதிகம் எழுதியிருக்கிறேன். ஆனாலும், பால்யம் ஒரு ஒளிமிக்கத் தீவாக, தொலைதூர வெயிலில் எனக்காக மின்னிக்கொண்டிருப்பதை உணர்ந்தபடிதான் இருக்கிறேன். சொந்த ஊரையும் அதில் கழித்த இனிமையான பால்யத்தையும் ஒவ்வொரு எழுத்தாளரும் எழுத வேண்டும் என்கிறார் கவிஞர் ரில்கே. ஒரு நாவலாகவே அவையாவற்றையும் எழுதிவிடும் திட்டம் இருக்கிறது. விரைவில் அம்முயற்சியைத் தொடர்வேன்.
கே: உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?
ப: முன்னரே சொன்னதுபோல எஸ்.ராமகிருஷ்ணனைப் படித்து வளர்ந்தவன் நான். அதற்கு முன்னரே வாசிக்க ஆரம்பித்தாலும் தீவிர இலக்கிய வாசிப்பு எஸ்.ராவில் இருந்தே துவங்கியது. அதன்பின் ஜெயமோகனின் கதைகள். இரண்டும் வெவ்வேறு வகையிலானவை. வெவ்வேறு அழகியல் அம்சங்கள் உடையவை. எஸ்.ராவின் “பால்ய நதி”, “வெளியில் ஒருவன்”, “வெயிலைக் கொண்டு வாருங்கள்” போன்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு இணையாகவே ஜெயமோகனின் “திசைகளின் நடுவே”, “மண்”, “ஆயிரங்கால் மண்டபம்” போன்ற தொகுதிகள் என்னை ஈர்த்தன. இன்றளவும் இவர்கள் இருவரின் தாக்கம் என் கதைகளில் ஆழமாக இருக்கிறது. இவர்களின் படைப்புகளே என்னை எழுதத் தூண்டின. மேலதிகமாக, கோணங்கியின், “மதினிமார் கதை”, “உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை”, “பொம்மைகள் உடைபடும் நகரம்”, “கொல்லனின் ஆறு பெண்மக்கள்” போன்ற தொகுப்புகள் என் மொழியில் கவித்துவம் கூடுவதற்கு ஆதர்சமாக இருந்தன.
கே: எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?
ப: முந்தைய பதிலில் சொன்னதுபோல, எஸ்.ராமகிருஷ்ணன். அதன்பின் ஜெயமோகன் மற்றும் கோணங்கி. இவர்கள் எழுதிய பெரும்பாலான புனைவுகள் என் நூலகத்தில் எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும். மனம் சோர்வுற்றாலோ, எழுத்தில் ஏதேனும் சந்தேகம் தோன்றினாலோ, இன்றளவும் இவர்களின் கதைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்துக் கொள்வேன். வாசிப்பிலும் எழுத்திலும் எனக்கான வாழ்நாள் கையேடுகளாக இவர்களின் படைப்புகளே உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று சிகரங்களே என்னுடைய பார்வைவெளியை நிறைத்து நின்றிருக்கின்றன.
கே: சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
ப: என் வாழ்விலிருந்தும் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்துமே பெரும்பாலான கதைகளைப் பெறுகிறேன். முற்றிலும் கற்பனையிலேயே பெற்ற கதைகளும் உண்டு. ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் “அம்மா, சிரிங்க” என்று சொல்வதைக் கேட்டேன். ஏனோ எனக்கு அது சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றவில்லை. அதை வைத்தே ஒரு கதை எழுதினேன். வெயிலில் நடந்து கொண்டிருந்தபோது என் முன்னே என் நீண்ட நிழலுருவம் சாலையில் தோன்றியது. அந்த நிழல் ஒரு கதையைக் கொடுத்தது. அலுவலகமும் நண்பர்களுடனான உரையாடல்களும் சில கதைகளைக் கொடுத்திருக்கின்றன. முற்றிலும் கனவில் ஒரு கதை தோன்றியிருக்கிறது. முழுக் கதையும் கனவில் தோன்றியது. விழித்தப்பின் அதை நினைவில் வைத்து எழுதியது மட்டுமே நான் செய்தது. எழுதுபவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் அதிசயங்கள் அல்ல. படைப்பாளியின் மனம் சூல் கொள்ளத் தயாராக இருக்கும் தருணங்களில் கதை எப்படியாவது அவனுக்குள் நுழைந்து விடும். கதைகளைத் தேட வேண்டியதில்லை. அவை நம்மைச் சுற்றியிருக்கின்றன. உண்மையில், இதுவரை எழுதியதைக் காட்டிலும் அதிக கதைகளுக்கான கருக்கள் அன்றாடம் தோன்றியபடியே இருக்கின்றன. அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவதும் உண்டு. எஸ்.ரா தனது எழுதும் அறையில் ஒரு வெள்ளைப் போர்டு வைத்திருப்பார். அதில் அவர், தான் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலும், எழுத வேண்டிய கதைகளையும் பட்டியலிட்டு வைத்திருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கவிஞர் சாம்ராஜ் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது அறையிலும் அது போன்ற வெண்பலகை இருந்ததையும் அதில் அவரது வாசிப்பு மற்றும் எழுத்துத் திட்டங்களைக் குறித்து வைத்திருப்பதையும் பார்த்தேன். நானும் என் எழுதும் அறையில் அது போன்ற ஒரு வெண்பலகையை வைத்திருக்கிறேன். வாசிக்க வேண்டிய நூல்களையும், எழுத வேண்டிய கதைகளின் கருக்களையும் அதில் குறித்து வைத்திருக்கிறேன். அன்றாடம் கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பதால் அதைச் செய்யாமலிருக்க முடியாது. அசுர வேகத்தில் எந்திரம் போன்று நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்வில் என் வாசிப்பையும் எழுத்தையும் தக்கவைத்துக் கொள்தற்கு, இந்த வெண்பலகை உதவிபுரிகிறது.
கே: சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா ?
ப: வரலாறும் தொன்மங்களும் எழுத்தாளனுக்கு முடிவற்ற கதைக் கருக்களை அளிப்பவை. ஆகையால், எழுதுபவர்களுக்கு இவற்றின் மேல் தீராத மயக்கம் இருப்பது இயல்புதான். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. புத்த ஜாதகக் கதைகளில் எனக்கு ஈர்ப்பு அதிகம். அதில் ஒன்றை “பிடிகடுகு” என்ற கதையாக எழுதினேன். “இட்டசித்தி” போன்ற வேறு சில கதைகளிலும் தொன்மங்களை விரிவாக்கி எழுதியிருக்கிறேன். நவீன வாழ்வை இன்றளவும் நம் இந்தியக் காவியங்களையும் தொன்மங்களையும் அறிந்து கொள்வதற்கு நம் பண்டை இலக்கியங்கள் துணைபுரிகின்றன. ஆகவே மீண்டும் மீண்டும் அவற்றை வாசிக்கிறேன். புறவயமாகப் பார்க்கையில் வரலாறும் தொன்மங்களும் இறுக்கமான தோற்றத்தை அளிப்பவை. ஆனால் அவை கதைக்குள் வரும்போது, நெகிழ்ந்து கொடுப்பவை. அவற்றை வைத்து ஒரு படைப்பாளி எந்த திசைக்கும் ஆழமாகப் பயணிக்க முடியும். நம்முடைய நவீன மனதையும், வாழ்க்கையையும் மேலும் துலக்கமாக அறிந்து கொள்வதற்கு வரலாறு தொன்மங்கள் போன்றவை உதவி செய்கின்றன. நமக்கே நம்மைக் காட்டும் கண்ணாடிகள் அவை. ஆகவே அவற்றின் வாலைப் பிடித்து கூடவே பறந்து கொண்டிருக்கிறேன்.
கே: சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து
ப: இது மூத்த எழுத்தாளர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி அல்லவா. பரவாயில்லை, இவான் கார்த்திக்கின் “பவதுக்கம்” சமீபத்தில் என்னைக் கவர்ந்த படைப்பு. பா. திருச்செந்தாழையின் கதைகளை விரும்பி வாசிக்கிறேன். ஜே.பி. சாணக்யாவின் கதைகள் மீது எப்போதும் மாறாத ஈர்ப்பு உண்டு. சாம்ராஜ், சுனில் கிருஷ்ணன், வே.நி.சூர்யா ஆகியோரின் படைப்புகளை விரும்பி வாசிக்கிறேன். மலேசியாவில் கே. பாலமுருகன், ம. நவீன், சிங்கப்பூரில் கனகலதா, சித்துராஜ் பொன்ராஜ், உமா கதிர், ரியாஸ் ஆகியோரின் கதைகள். நாவல்களில் சித்துராஜ், ரமா சுரேஷ் ஆகியோரின் படைப்புகள் ஈர்க்கின்றன.
முந்தைய தலைமுறைப் படைபாளிகளுக்கு உலக இலக்கிய நூல்கள் மற்றும் தமிழின் தலைசிறந்த படைப்புகள் கிடைப்பது அரிதாக இருந்தது. க.நா.சுவின் பட்டியலை வைத்துக்கொண்டு நூல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய படைப்பாளிகளுக்கு உலக இலக்கியச் சிகரங்களும், தமிழ் கிளாசிக் படைப்புகளும் விரல் நுனியில் கிடைக்கின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சி, கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சி, பிற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள், இவை தவிர பல்வேறுபட்ட மின் நூலகங்கள் வாயிலாக முக்கியமான நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க முடிகிறது, கிண்டிலிலும் தற்போது முக்கியமான இலக்கியப் படைப்புகள் கிடைக்கின்றன. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் தற்போது அதிகமாக வாசிப்பதற்கும், பயணம் செய்வதற்குமான வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. ஒத்த மனமுடைய நண்பர்களைக் குழுவாக சேர்த்துக் கொண்டு வாசிக்கவும் விவாதிக்கவும் பயணம் செய்யவும் முடிகிறது. கூகிள் மீட், ஜூம், கிளப்ஹவுஸ் செயலிகளின் வழியாகவும் வாசிப்பு, விவாதம் ஆகியவற்றைத் தொடர முடிகிறது. தூரமும், பிரிவும் தங்கள் அர்த்தத்தை மெல்ல இழந்துகொண்டிருக்கின்றன. படைப்பாளிகள் நிறைய எழுத முடிகிறது. படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிட ஏராளமான இணைய இதழ்கள் பெருகிவிட்டன. சுயமாகவும் வலைப்பூக்களைத் தொடங்கி எழுத முடிகிறது. முன்போல நூல்களைப் பிரசுரிப்பதும் சவாலானதாக இல்லை. ஆனால், இதன் மறுபக்கம், சமூக ஊடகங்களும், காணொளிகளும், கட்டற்ற தகவல் பெருக்கமும், படைப்பாளிக்கு சவாலாக இருக்கின்றன. அவனது நேரத்தை அவனையுமறியாமல் திருடிக் கொள்கின்றன. வேறு எக்காலத்தை விடவும் தற்காலத்தில்தான் படைப்பாளி புலனடக்கம் மிகுந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது. எல்லாத் திசையிலும் விசையுடன் தன்னை இழுக்கும் இந்த மேனகைகளிடமிருந்து தனக்குள் இருக்கும் விஸ்வாமித்ரனைக் காக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளிக்கு இருக்கிறது.
கே: உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?
ப: தினமும் எழுதுவதற்கு முயற்சிப்பேன். குறைந்தது ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்பதே லட்சியம். ஆனாலும், சிங்கப்பூரின் அவசர வாழ்க்கையில் பெரும்பாலும் அது இயல்வதாக இல்லை. அது சவாலானதாகவே இருக்கிறது. ஆனாலும், கூடுமானவரை முயல்கிறேன். வாசிக்காத நாள் என்பது இல்லவே இல்லை. எல்லா நாளும் குறைந்தது ஒரு மணி நேரம் வரை வாசிக்க இயல்கிறது. வாசிப்பும் படைப்புக்கு இன்றியமையாதது என்பதால், அதையும் படைப்புச் செயல்பாட்டின் ஒரு கண்ணியாகவே நான் கருதுகிறேன். வார இறுதிகளில் நிறைய எழுத முடிகிறது. கதையின் சுருதி ஏறிவிட்டால், வார நாட்கள் வார இறுதி என்றெல்லாம் பேதம் இல்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டும் எழுதுவதுண்டு. எல்லா நாளும் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்பார் ஜெயமோகன். வாசிப்போ, எழுத்தோ, இலக்கியத்தில் அன்றாடம் இருந்து கொண்டிருக்கிறேன். எழுதும்போது புனைவு அபுனைவு என்றெல்லாம் நேரம் வகுத்துக்கொள்வதில்லை. நான் அபுனைவும் அதிகம் எழுதுபவன். அந்தந்த வேளையில் என்ன தோன்றுகிறதோ, அது கோரும் வடிவத்தில் எழுதத் தொடங்கி விடுவதுண்டு. மற்றபடி, எழுதுவதையெல்லாம் புத்தகமாக பிரசுரம் செய்வதில் ஆர்வமாக ஈடுபடுவதில்லை. இன்னும் மூன்று புத்தகங்கள் போடுமளவிற்கான கதைகளும் கட்டுரைகளும் கைவசம் இருக்கின்றன. திடீரென்று ஞானம் பெற்றுப் பிரசுரித்தால்தான் உண்டு.
கே: உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து
ப: அடுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடும் திட்டம் இருக்கிறது. நவீன கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்க வேண்டும். இந்த இரண்டு புத்தகங்களையும் இந்த ஆண்டு வெளியிட வேண்டும். ஒரு நாவலுக்கான கருவையும் மனதுக்குள் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். அதையும் எழுதத் தொடங்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் திட்டம்.
இது தவிர சிங்கப்பூரில் வெளியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் குறித்த ஒரு நூலும், ‘சிங்கப்பூரில் பெண்ணெழுத்து’ என்ற கருவில் ஒரு நூலும், சிங்கப்பூர் ஆங்கில இலக்கியம் குறித்த ஒரு நூலையும் எழுதும் திட்டம் உண்டு. ‘எழுது, அதுவே அதன் ரகசியம் ‘என்பார் சுந்தர ராமசாமி. எழுத எழுத எண்ணித் தீராத ரகசியங்கள் காணக் கிடைக்கின்றன.
***
நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.


