நேர்காணல்: ஹேமி கிருஷ்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின் அலைக்கழித்தல்களை வேறு வேறு பருவங்களில் இட்டு அதன் வெளிப்பாடுகளை கதைகளில் தெளிவுற எழுதுபவர். நெட்டுயிர்ப்பு, மழை மற்றும் களித்தான் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இந்த நேர்காணல் அவருடைய கதைகளை இன்னமும் சற்று அருகில் சென்று அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.
1. கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?
நான் மூன்றாவது படிக்கும்போது முதன் முதலில் என் அப்பா புத்தகம் பரிசளித்தார். ரஷ்ய எழுத்தாளர் யூரி அலேஷா எழுதிய மூன்று தடியர்கள் ( The Three Fat Men) எனும் குழந்தைகளுக்கான மொழிப்பெயர்ப்பு நாவல். சுமார் 200 பக்கங்கள் இருக்கும். ஆனால் அந்த நாவல் எத்தனை முறை படித்தும் அந்த வயதில் எனக்கு புரியவில்லை. எப்படியாவது படித்துவிட வெண்டும் என நினைத்து பத்திரமாய் பாதுகாத்தேன். பல வீடுகள், ஊர்கள், நாடு மாறியும் இன்றும் 38 வருடங்களாக என்னுடன் அது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. என அப்பாவின் தீவிர வாசிப்பு எல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்டதாகவே இருந்ததால் அவரிடமிருந்தே என் வாசிப்பும், கதைகளும் என்னை வந்தடைந்திருக்கின்றன.
2. முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?
சிறு வயதிலிருந்தே கதை, கவிதை டைரி எழுதுவது என கிறுக்கிக்கொண்டே இருப்பேன். அவற்றை கதை என்றோ கவிதைகள் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. விகடன். காம் என்னும் மின்னிதழில் வந்த தாத்தா வீடு என்னும் சிறுகதைதான் எனது முதல் கதை. முதல் கதை என்பதால், அதற்கு வந்த பாராட்டுகளை இன்றும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்
3. அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?
ஒரு சிறுகதை எழுத நிச்சயம் நல்ல அறிவும் அதனை இயக்கும் கருவியாக பிரத்யேக மொழியும் அவசியம். என்னைப் பொறுத்தவரை அறிவும் அனுபவமும் ஒன்றுதான். அனுபவத்தின் வழியாகத்தான் அறிவை காண முடியும். அப்படி எழுதப்படும் ஒரு கதைக்கு தீட்டப்பட்டும் அழகான வண்ண அலங்காரம்தான் நாம் கையாளும் மொழியாக பார்க்கிறேன். ஆனால் ஒரு நல்ல கதை உள்ளார்ந்த திருப்தி அடைவதற்கு இவை மூன்றும் போதாது மனதினில் ஒரு பேருணர்ச்சி உருவாதல் வேண்டும். ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கும்போதே மெல்ல அதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு உணர்ச்சி அலையே பிராதனம். அக்கதை எழுதி முடித்தபின்பு அவ்வுணர்விலிருந்து விடுபடும் அனுபவத்தை நாம் பெற்றால், கதை நம் வசப்பட்டிருக்கிறது. இல்லையெனில் அக்கதை கைவிடப்பட்டிருக்கிறது.
4. ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?
இருக்கிறது. எங்கு தொடங்குகிறோமோ அதன் வேரிலிருந்துதானே தர்க்கங்கள் உருவாகிறது. என்னுடைய பல கதைகளின் உருவாக்கம் அங்கிருந்தே தொடங்கியிருக்கிறது. குறிப்பாக குற்றம், கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும், போன்ற கதைகளில் அதன் தாக்கத்தை என்னிடம் நெருக்கமானவர்கள் உணர்ந்தார்கள். நாம் எதையெல்லாம் சரி தவறு என நினைத்தோமோ அதன் பிம்பங்கள் பின்னாளில் சரிவதை கண்கூடாக்க காணும்போது அவற்றை கதைகளாக முன்னிலைப்படுத்த மனம் தயங்குவதில்லை.
5. உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?
பல மகத்தான படைப்புகளைப் படிக்கும்போது வியந்திருக்கிறேன். கோபல்லபுரத்து மக்கள், பொன்னியின் செல்வன், கரைந்த நிழல்கள், ஏழாம் உலகம், துயில், பாகிரதியின் மதியம், வெக்கை, சாயாவனம், என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அவற்றை உந்துகோலாக நான் நினைத்ததில்லை . படைப்பு தன்னியல்பில்தான் வெளிவரவேண்டும்.
6. எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?
ஆதர்சம் என்று எவருமில்லை. ஆனால் இமையம் மற்றும் வண்ணதாசனுடைய எழுத்துக்கள் மிக பிடிக்கும். இருவரும் வெவ்வேறு போக்கு கொண்ட எழுத்தாளர்கள். ஒருவரது கதைகள் வாழ்க்கையின் தீவிரத்தன்மையை எடுத்துச் சொல்லும், மற்றொருவரின் கதைகள் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் ஓசையை போல் ஆசுவாசத்தை தரும்.
7. சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
நிஜங்கள் கற்பனையை விட மிகையானது, இரக்கமில்லாதது, பாராபட்சமற்றது. நான் பார்த்த, கேட்ட மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ மட்டுமே கதைக்கான கரு உருவாகியிருக்கின்றன. ஏதோ ஒன்று மனதின் அடியில் படிமம் போல தங்கிவிடும். அவற்றை செதுக்கி கூர்தீட்டினால் நல்ல படைப்பாக்க வெளிக்கொணர முடியும்.
8. சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இவை வெளிப்படவில்லை எனினும் அவை குறித்த உங்களின் பார்வை என்ன ?
புதுமைப்பித்தனில் தொடங்கி இன்று ஜெயமோகன், பா வெங்கடேசன் வரை வரை இவற்றை கையாள்வதை பார்த்து வியந்திருக்கிறேன். தொன்மம் அல்லது வரலாற்றுக் குறியீடுகளைக் கொண்டு ஒரு நவீன வாழ்வியலை படைப்பாக கொண்டு வருவது நம்மை நாமே இன்னும் பரிசோத்தித்துக்கொள்வது போன்று. இன்னும் அது போன்ற படைப்புகளை நான் எழுதவில்லை. அதற்கு என செயல்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அந்த விருப்பமிருக்கிறது.
9. சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து
நிறைய இளம் எழுத்தாளர்களின் வருகை மிக அவசியமானது. எதிர்காலத்தில் இலக்கியம் என்று ஒன்றில்லாமல் போய்விடுமோ என்ற கவலை உண்டாகிறது. தமிழின் வளம் பிரமாண்டமானது. வற்றாத ஆறு போல்லல்லவா ஓடிக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் நீர் வற்றிய நிலத்தில் ஆங்காங்கே தென்படும் நீரூற்று போல் தமிழ் இலக்கியம் இருக்கிறது. ஆங்காங்கே உருவாகியிருக்கும் சிறு குழுக்கள்தான் இன்றைய இலக்கியம். ஒரு சாரார் தங்களுக்குள்ளே இலக்கியம் பேசி தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். ஒரு சாரார் ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்துகொள்கிறார்கள். இன்னொரு கூட்டத்தில் புலம்பல்களாக ஓங்கியிருக்கின்றன. இன்னொரு கூட்டம் அனைத்தையும் செவிமடுத்து தங்கள் பணியை செய்துகொண்டிருக்கின்றன. இங்கு தான்தான் இலக்கியம் என்று ஒரே ஓருவர் தனித்து நின்று மார்தட்டுவது, கொச்சையாக சொல்லவேண்டுமெனில் ஆளில்லால டீக்கடையில் டீ ஆற்றுவது போல. சுயநலமற்ற பரந்துபட்ட செயல்பாடுகள் அடுத்த தலைமுறையை வழிவகுக்கச் செய்யும். அதை மூத்த எழுத்தாளர்கள் இளையோர்களிடம் சமரசம் செய்துகொள்ளாமல் கண்டிப்புடன் படைப்புகளை சீராய வேண்டும். படைப்பாய்வுகளை தீவிரப்படுத்தப்ப வேண்டும். இது நடக்குமா என தெரியாது. நடந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவேன். சமீபமாக குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் வருகை மகிழ்வாக இருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸ் போன்ற பெண்ணிய தளங்கள் முக்கியமானது கூட. பெண்களின் இலக்கிய பங்களிப்பு எப்போதும் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருக்கும். அவ்வகையில் பெண்களால் பெண்களுக்காக ஒரு இலக்கிய அமைப்பு உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது புத்துணர்வை தருகிறது. சமகால படைப்புகளில் என்.ஸ்ரீராமின் படைப்புகள் என்னை கவர்ந்திருக்கின்றன. கொங்கு மக்களின் அடையாளங்களையும், தொன்மங்களையும் நிலத்தின் தன்மை மாறாத அம்மக்களின் வாழ்வியலையும் அவரின் கதைகளில் காணலாம். ஜா தீபா, பொன் முகலி, சுஜாதா செல்வராஜ் என எல்லாருடைய படைப்புகளையும் அவ்வப்போது வாசிக்கிறேன்.
10. உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?
பெண்ணெழுத்து சற்று சவால்கள் நிறைந்தது. அன்றாடம் எனக்கு அமைந்திருக்கவில்லை. அலுவலகத்தில் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வீடு வரும்போது எழுத மனம் பரபரக்கும். ஆனால் வீடு நுழைந்ததும் வீட்டு வேலைகள் வரிசையில் நிற்கும். இது வீட்டில் நாள் முழுக்க வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். வேலைகளை முடித்தபின் சோர்வையும் மீறி எழுத உந்தும்போது ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது இடையூறுகள் வரும். எனக்கு காலநிலை, மனநிலை இரண்டும் ஒத்துப்போகும் சமயம் எழுதுவதற்கான சிறந்த சமயமாக கருதுகிறேன். இப்போது வேலைக்கு செல்லாததால், வீட்டில் யாருமற்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கிறேன். அதனால் இரு தொகுப்புகளையும் வெளியிட்டேன். தனிப்பட்ட செயல்பாடுகளென்று எதையும் நிர்ணயிப்பதில்லை. ஒரு கதை எழுதத்தொடங்குகையில் நல்ல இசையையும், ஒரு கோப்பை காபியும் எப்போது என் வசம் வைத்திருப்பேன்.
11. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து?
கடந்த ஒரு வருடமாக ஒரு சிறுகதைக் கூட எழுதவில்லை. அதற்கான சூழ்நிலையை நான உருவாக்கிக் கொள்ளவில்லை. பல வருடங்கள் கழித்து இந்தியா வந்ததால் எதையும் எண்ணாத , சமூக வலைதளங்களிலும் ஈடுபடாத எனக்கென்ற பிரத்யோக தருணங்களாக சென்ற வருடம் அமைந்தது. நிறைவாக இருந்தது. கதைகள் அதன் போக்கில் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். இருப்பினும் சிறுகதைதான் எழுதவில்லையே தவிர, வேறு சிலவற்றை எழுதிக்கொண்டுதானிருந்தேன். எழுதுவதை விட இயலாது..அடுத்த படைப்பை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.
***
நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

