கணேஷ் பாபு
சிங்கப்பூரின் முதல் பின்நவீனத்துவ நாவல் என சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய “விளம்பர நீளத்தில் ஒரு மரணம்” நாவலைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவக் கூறுகளான மையமற்ற தன்மை, விளிம்பைக் கவனப்படுத்துதல், நேர்க்கோடற்ற வடிவம், மரபை உடைத்துப் பார்த்தல், எல்லாவற்றுக்கும் மேலாக சுவாரஸ்யமான கதை சொல்லல் என உள்ளும் புறமும் பின்நவீனத்துவத் தன்மைகளை முழுக்க உள்வாங்கி எழுதப்பட்ட நாவல். பின்நவீனத்துவ சிந்தனையாளரான ஜாக் டெரிடாவின் மேற்கோள்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பாக அமைந்திருப்பது நாவலுக்கு மேலும் ஒளிகூட்டியிருக்கிறது.
முன்னுரையிலேயே தனது விளையாட்டைத் துவக்கி விடுகிறார் ஆசிரியர். தான் எழுதியிருக்கும் இந்த நூலைப் பற்றி முன்னுரையில் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து வாசித்தால், ஏமாற்றமே மிஞ்சும். அவர் சீன நாவலான “நீரின் கரை” யைக் குறித்தே முன்னுரையில் பேசுகிறார். அதற்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகத்தைப் பின்நவீனத்துவத்தை அறிந்த வாசகர்கள் எழுப்ப மாட்டார்கள் என்ற அவரது நம்பிக்கை இதில் புலப்படுகிறது. ஆம், மேலோட்டமாகப் பார்த்தால் தனது நாவலைக் குறித்து அவர் முன்னுரையில் எதுவும் சொல்லவில்லைதான். ஆனால், உண்மையில் தனது நாவலைக் குறித்துத்தான் அவர் முன்னுரையில் பேசியிருக்கிறார் என்று ஒருமுறை இந்த நாவலை முழுமையாக வாசித்த வாசகருக்குத் தெரிந்துவிடும்.
டெரிடா, சுசீலா இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். டெரிடா சீன இனத்தவன், சுசீலா இந்திய வம்சாவளிப் பெண், இருவரின் வீட்டிலும் இத்திருமணத்தில் பெரிதாக விருப்பமில்லை. திருமண வாழ்வும் இவர்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. சுசீலாவும் அவளுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஜப்பானியப் பேராசிரியர் வாட்டாதாவும் காதலிக்கின்றனர். திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அதனால் மன உளைச்சலுக்குள்ளாகும் டெரிடா, வாட்டாதாவின் செய்கைகளால் மன உளைச்சலுக்குள்ளாகும் அவனது மனைவி யூரிகோ, இவர்கள் நால்வருமே பிரதான கதாபாத்திரங்கள். நாவல் இவர்களை மையமிட்டே நகர்கிறது. இவர்களைத் தவிர வாசுதேவன் என்ற துணைக் கதாபாத்திரமும் உண்டு.
நாவலின் முதல் அத்தியாயத்திலேயே வாட்டாதா மரணமடைகிறார். அதனூடாகக் கிளைபிரியும் கதைப்போக்கு, அவரோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பார்வையிலும் நீள்கிறது. பெரும்பாலான அத்தியாயங்கள் டெரிடாவின் பார்வையிலும், சில அத்தியாயங்கள் சுசீலாவின் பார்வையிலும், வாசுதேவனின் பார்வையிலும், பிற அத்தியாயங்கள் ஆசிரியரின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. சில அத்தியாயங்களில் பின்நவீனத்துவ நாவலுக்கேயுரிய சுதந்திரத்தோடு, மரணப் படிவம், செய்தித்தாள் விளம்பர விலைகளின் பட்டியல், கடிதப் பரிமாற்றங்கள், கல்யாண நாள் பார்த்துச் சொல்லலாமா என்ற தமிழ்த் திரைப்பாடலின் வரிகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
வாட்டாதாவின் மரணத்துக்குக் காரணமென்ன என்று போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். வாட்டாதாவின் மரணத்தோடு துவங்கும் நாவல், அவருக்கும் சுசீலாவுக்கும் இடையேயுள்ள உறவையும், பிணக்கையும் ஆராய்கிறது. அதன்பின், சுசீலாவின் கணவனான டெரிடாவின் உணர்வுகள், அவனுக்கும் சுசீலாவுக்கும் இடையே நடந்த திருமணச் சடங்குகள், அதைத் தொடர்ந்த கோமாளித்தனங்கள், இருவருக்கும் இடையே மெல்ல மெல்ல உருவாகும் கசப்புகள், மறுபக்கம் வாட்டாதாவுக்கும் அவரது மனைவி யூரிகோவிற்கும் இடையேயான மனக்கசப்புகளும் குடும்ப வன்முறைகளும் காட்டப்படுகின்றன. இந்த இரு கதைகளுக்கும் நடுவே, பேராசிரியர் வாசுதேவனின் கதையும் சொல்லப்படுகிறது. தன் வாழ்வில் நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால் பெண்கள் குறித்த பிறழ்வான புரிதலை தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவனுக்கு ஒருகட்டத்தில் வாழ்வு குறித்த கண்ணோட்டமும் பிழையானதாக மாறிவிடுகிறது. கையளவு சவப்பெட்டி தயாரிப்பதே அவனது பொழுதுபோக்காக மாறிவிடுகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும் சவப்பெட்டிக்குள் அனுப்பிவிடுகிறான் இவன். ஒருவகையில், டெரிடா சுசீலாவின் வாழ்க்கை நரகமாவதற்கும், வாட்டாதாவின் மரணத்திற்கும் கூட இவனே காரணமெனலாம். இவன் டெரிடாவுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக கொடுக்கும் அழுத்தங்களே அவனது வாழ்வைக் கெடுக்கின்றன.
நாவலின் அடிநாதமாக நான் காண்பது, மையம் என்பதன் அர்த்தமின்மையும் அதைத் தொடர்ந்து மையத்தைச் சிதறடிப்பதுமே. திருமணம் என்ற மையம், திருமண வாழ்கையின் ஆதாரமான பரஸ்பர நம்பிக்கை என்ற மையம், குடும்பம் என்ற மையம், ஆண்பெண் உறவில் இணக்கம் என்ற மையம், இப்படி நம் வாழ்வில் எத்தனையோ மையங்கள் இருக்கின்றன. அந்த மையங்களின் பலத்தால்தான் வாழ்க்கை உறுதியாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த மையங்கள் என்பவை நிலையானதல்ல, அவை அழிந்தால் வாழ்வு என்னாகும் என்ற கேள்வியைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் ஆசிரியர். பின்நவீனத்துவம் சொல்வதும் இந்த மையமழிப்புதானே. கிட்டத்தட்ட பின்நவீனக் கோட்பாடுகளை உரசிப்பார்த்துக் கொள்ள ஒரு நிகர் வாழ்க்கையையும் கதாபாத்திரங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சித்துராஜ். அது வெற்றிகரமாகவும் அமைந்திருக்கிறது.
இடையிடையே, சிங்கை வாழ்வின் சில பண்பாட்டுத் தகவல்களையும், குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையைக் குறித்த நுண்தகவல்களையும் ஆசிரியர் அளித்திருக்கிறார். டெரிடா-சுசீலா திருமணத்தின் வாயிலாக சீனத் திருமண முறைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல, சீன சந்திராயன வருடக் கணக்குகள், நீர் எலியின் வருடத்தில் பிறந்த டெரிடாவுக்கு எலியின் குணம் விரவியிருப்பதையும், கடல்நாகத்தின் வருடத்தில் பிறந்த சுசீலாவுக்கு அதன் குணங்களும் உள்ளோடியிருப்பதையும் சொல்வதன் மூலம், நுட்பமான உளவியல் பார்வைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல, அகலிகை கதையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தியாயத்தின் தலைப்புகள் ஜாக் டெரிடாவின் பின் கட்டமைப்பு வாதம் குறித்த கட்டுரைகளில் இருந்தும் நேர்காணல்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டிருப்பதும், ஒவ்வொரு அத்தியாயமும் அந்தத் தலைப்பின் சாரத்துக்குப் பொருந்திப் போவதும் நன்றாக இருக்கின்றன. எனினும், இந்த நாவல் ஒரு பின்நவீனத்துவ நாவல்தான் என்று இத்தனை வலிந்து புறவயமாகக் காட்டிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தத் தலைப்புகளைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நாவலை ஆழ்ந்து வாசிக்கும் வாசகருக்கு இது ஒரு பின்நவீனத்துவ நாவல்தான் என்பது கட்டாயம் தெரிந்துவிடும். அதுபோலவே, முக்கியக் கதாபாத்திரத்துக்கு டெரிடாவின் பெயர் வைத்திருப்பது, பிரதான கதாபாத்திரங்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவது (பெரும்பாலான பின்நவீனத்துவ அறிஞர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களே) போன்றவற்றையும் சொல்லலாம். சிறியதொரு தகவல் பிழையையும் பார்க்க முடிந்தது. நாவலின் ஓர் இடத்தில் (பக்:55) சுசீலாவின் தந்தை துவாஸ் அருகே இருக்கும் இரும்புப் பட்டறையில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிவதாகவும், வேறொரு அத்தியாயத்தில் (பக்:110) அவர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
யூரிகோ உண்மையில் தற்கொலை செய்துகொள்ளவில்லை, வாட்டாதாதான் அவளை மாடியில் இருந்து தள்ளிவிட்டிருக்கிறான் என்ற கோணமும் நாவலில் இடம்பெறுகிறது. அதுபோலவே, வாட்டாதாவின் மரணமும் கொலைதான் என்ற சந்தேகத்தையும் காவல் அதிகாரி ஜெ, முன்வைக்கிறாள். ஆனால், இவை நிரூபணமாகவில்லை. ஆக, ஒன்றன் பின் ஒன்றாய் மோதி நகரும் கதைப்போக்கின் முடிவில் வாட்டாதாவின் மரணத்திற்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்று முடிவாகிறது. விளம்பர நீளம் கூட அதற்கு இருப்பதில்லை. மரணம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது நாவல். இப்படி ஒரேயடியாகத் தொகுத்துப் பார்க்கவும் தேவையில்லை என்றும் தோன்றுகிறது. ஏனெனில், எந்தவொரு நீதியையும் அர்த்தத்தையும் நிலைநாட்டுவதற்காக இந்த நாவல் எழுதப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது, இதை, இதன் இறுதி அத்தியாயத்தில் ஜெ சொல்லும் கதையிலிருந்து ஊகிக்கலாம். ஆதலால், இதை வாசிப்பவர்களும் வாசிப்புச் சுவாரஸ்யத்துக்காகவே இதை வாசிக்கலாம். ஆனால், அதையும் தாண்டி மனதில் சில அடுக்குகளை அசைத்துப் பார்க்க முயல்வதால் இது வலுவான படைப்பாகவும் நிலைகொள்கிறது.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

