லட்சுமிஹர்
படைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டியது அதனினும் அவசியம். வாசகரின் கற்பனைப் போக்கு படைப்பை மீறாது இருத்தலே அதில் முதன்மையான பங்காற்றுகிறது. எழுத்தாளரின் நோக்கை மீறிய புரிதல் அப்படைப்பை சிதைப்பதற்கு சமம் ( பி.கு.1 ). அங்கு தான் விமர்சனம் தேவைப்படுகிறது.
தமிழில் விமர்சனம் சார்ந்த வெளிகளை நாம் அணுகும் போது அவை புதினத்திற்கு எவ்வளவு வழிவகை செய்திருக்கிறது என்கிற ரீதியில் அணுகினால் படைப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ள இடைவெளியை நாம் கண்டுபிடித்துவிடலாம்.
விமர்சனம் என்பதை வரையறுத்து கூறும் போது அங்கு கருத்துருக்கள் தேங்கி விடுவதாக மாறுகிறது. அவை எப்போதும் தொடர்நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அவை வெவ்வேறு படிநிலைகளை தளர்த்தியும், ஏற்றும் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடங்கி விமர்சனம் விமர்சகரை நோக்கி நகர்கிறது. படைப்பாளியின் நோக்கம் குறித்து பேசும் போது விமர்சகரின் நோக்கம் குறித்தும் விவாதிப்பது குறுகியவெளியை நமக்கு வெளிப்படுத்தும். விமர்சகர் மேலெழும்பி வரும் பின்புலங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக தற்சமயம் மாறியிருக்கிறது.
படைப்புகள் காலகட்டத்தின் வெளிப்பாடு என்பதை மீறி அவை கருவாக தன்னை எங்ஙனம் நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதனை அறிய முற்படும் போது, தற்கால படைப்புகள் முன்பிருந்த உணர்வுகளைத் தாண்டி எவ்விதமான சூழ்நிலைகளைத் தங்களின் படைப்புகளில் கொண்டிருக்கிறது என்பதை ஆராயவேண்டும். இங்கு உணர்வுகள் கூட உணர்வுகளின் சாட்சியாக மாறி மட்டுமே நிற்கிறது. ஏனென்றால் அதன் நித்யத்தன்மையில் வாசகர்கள் உணர்ந்த பருவங்களே மீண்டும் மீண்டும் சுற்றுகிறது. அவை ஒரு சுழற்சியாக தமிழ் புதினங்களில் மீண்டும் மீண்டும் வரையறுக்கப்படுகிறது (பி.கு.2). தமிழ் நாவல்கள் பெருமளவு உலக அரங்கில் சோபிக்காததற்கு காரணம் (பி.கு.3) நம் படைப்புகள் ஒரு வித சுழற்சி ஆட்டத்தினைக் கைகொண்டிருக்கிறது. அதனை துண்டிக்க முயலும் புதினம் இங்கு முக்கியம். சுழற்சியைத் துண்டிக்க கால அவகாசம் என்பது தேவையான ஒன்று. ஆனால் அதில் பரிமாணம் அடைவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழ் புனைவு வெளியில் விமர்சனங்களின் பங்கு இப்பரிமாணங்கள் குறித்து நகர வேண்டிய சூழலில் இருக்கிறது. இவை எதை வழங்கும் என்கிற கேள்விக்கு அது நகர்வை நோக்கியப் பாதையை அளிக்கும். சில ஒப்பீடுகளை வழங்கலாம். தேக்க நிலையைக் குறித்து நிதர்சனத் தன்மையோடு அணுகுதல் முக்கியம். இங்கு நிதர்சனத்தில் முதல் முறை எழுத்தாளர்கள், சமூகம், குழுக்கள், அரசியல் பிரதி என்று கொடுக்கப்படும் சலுகைகளைப் புறம் தள்ளலாம். முக்கியமாக நமது எல்லை எது என்பதை அறுதியிட்டு கூறுவதற்கான காலமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய விமர்சன மரபோ (அது இலக்கியத்தில் மட்டுமில்லை, பன்முகத் துறைகளில்) ஏற்றலையும், மறுப்பையும் வழங்குகிறது. அங்கு விமர்சகர்கள் சுழற்சியினை சரியான நேரத்தில் சுட்டிக் காண்பிப்பது வழக்கமாகவே நிகழ்ந்தேறி வந்திருக்கிறது. அதிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேச இது பொருத்தமான இடமில்லை. சுழற்சி முறையை நிறுத்துவது ஒரு ஒப்பீடு அவ்வளவே. இங்கு செய்யுள் மரபையும், கவிதை காலத்திற்கு ஏற்ப தன் போக்கையும் கைவிட்டதையும் சுழற்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவை வடிவத்தில் நடந்தது, கருத்தாக்கம் என்னவாக இருக்கிறது என்பதே இதன் மையம். எடுத்துக்காட்டாக தமிழில் எழுதப்படும் அயல் நாட்டு கதைகள் கூட பெரும்பாலும் அந்நிலத்தினை அடையாளப்படுத்தாமல் இதில் வந்து மாட்டிக்கொள்வதைக் கவனிக்க வேண்டும். களத்தை புதியதாக எடுத்துக்கொண்டு மற்றவை எல்லாம் முன்பு எழுதிய பிரதிகளை ஒத்திருக்கிறது. தமிழ் புதினங்களை விமர்சகர்கள் அடையாளப்படுத்தினால் ஒருவித தமிழ் புனைவு தளம் கடந்து வந்த பாதையை கண்டுவிடலாம். இதை ஒருபோதும் எழுத்தாளர்கள், அவர்கள் எழுதும் விமர்சனங்கள் கூறவே முடியாது. இதுவரை அது நிகழ்ந்தது இல்லை. அவை எழவே இல்லையா? என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக விமர்சனக் குரல்களின் தாக்கம் பெருமளவு படைப்பாக மாறவில்லை என்பதை அடிக்கோடிடலாம்.
அதன் நீட்சியாக வடிவங்களுக்கும் விமர்சனத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. உலக அரங்கில் வடிவம் எப்போதும் மாறக்கூடியது. அவை நம் தமிழ் புனைவு தளத்திற்கு வந்தடையும் முன் அதில் வெவ்வேறு சாத்தியங்களை முயன்ற பிரதிகளும் அதன் விமர்சனங்களும் சாலவடிவத்துடன் சேர்ந்தே நமக்கு கிடைக்கிறது.
அப்படியாக ஒர் வடிவத்தினை கைகொள்ளும் போது தமிழ் எழுத்தாளர்கள் தடுமாறியதாகவே தெரிகிறது. தற்கால இலக்கியத்தில் வடிவம் என்கிற போக்கிலிருந்து நீளம் (பக்க அளவில் இல்லை) குறித்தானப் பார்வைகளில் தனி கவனம் செலுத்துகிறது. அதில் குறிப்பாக வடிவத்தினை கைவிட்டுவிட்டு கதையாடலினுடைய எழுத்து நுட்பத்தின் செயலாக்கம் எப்படி வெளிப்படுகிறது என்பதாக மாறியிருக்கிறது.
தமிழ் மொழியில் களத்தைத் தாண்டி மொழியில் அது எங்ஙனம் உதவுகிறது என்பதே முக்கியம். ஒரு பத்தி எப்படிப் பிரிகிறது என்பதை பேசத் தொடங்கவேண்டும். இங்கு முதல் பிரதி பிம்ப எழுத்துமுறையும் அதை அணுகும் போக்கும் உடைகிறது. துண்டுகளாக அவை மாறிநிற்கும் போது எழுத்தாளின் நகர்வுகளை இயல்பாகவே கணித்திட வழிவகை செய்கிறது. பல நேர்த்திகளைக் கையாளவும், அதை ஒன்றிலிருந்து ஒன்றாக உருமாற வழிவகைப் புரிகிறது. விமர்சகன் எழுத்துப் பிரதி கருவின் தன்மையை உடைத்தெறிந்து அவை பத்திகளாக (பி.கு) அவற்றை உருமாற்றுகிறான். நீளம் குறித்தான பார்வை ஏன் என்று புரிகிறது. காட்சி விவரணைகள், உரையாடல்கள் எனப் பிரித்துப் பார்த்துக்கொண்டிராமலும், தொகைநிலையான போக்கினையும் உடைதெரிந்தால் எழுத்தாளனை சவாலிற்கு அழைப்பது போன்ற ஒர் களம் உருவாகிறது. விமர்சகன் கோட்பாடுகளுக்குள் மட்டும் பிரதியை அளக்காது விமர்சனப் பார்வையை விரிவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.
இதைவிடுத்து குறிப்பாக முன்பு சொன்னது போல விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் நாவல் என்னும் வடிவத்தில் தமிழ் புனைவுப் பிரதிகள் உருவாகியிருக்கிறது என்பதை வாதத்தால் முரண்பட்டு அடம்பிடிக்கலாம் ‘இல்லை’ என்று. ஆனால் அதுவே உண்மை. முக்கியமாக இதற்கு காரணமாக அமைந்தது வகைமை கதைகளை இலக்கியம் இல்லை (பின்.கு4.) எனும் கூற்றை ஏனோ பரவலாக தமிழ் சூழலில் அப்படியே மேலை யுத்தியை எடுத்து பயணித்தது ஒரு காரணம். தமிழ் நிலப்பரப்பில் மட்டுமில்லை, இந்திய நிலப்பரப்பிலும் வகைமைக் கதைகளே பிரதானப் பங்காக இருந்திருக்க வேண்டும். நம் இந்தியக் கூட்டினுடைய நிலப்பரப்பு அதற்கு ஏற்றார் போன்ற மானுடவியல் தன்மை கொண்டது. ஆனால் அவை இலக்கியம் இல்லை என்று கூறி மேற்கத்திய படிநிலை உணர்வு கூறுகளையும், வரலாற்றுப் புதினங்களை மறுசீர் செய்வது (இங்கு அவர்களுக்கு யுத்தம் என்கிற பெரும் நிகழ்வு இருந்தது என்பதை மறந்திடக் கூடாது) எனப் பல அடுக்குகளில் அதனுடைய நீட்சியாகவே அவர்களின் வேலைகளை இங்கு நடத்திக்கொண்டிருந்தனர். இருக்கின்றனர். தொழில்முறை எழுத்து என சுருக்கி விடுவது வாடிக்கை. இங்கு இயல்பு வாதம், மாற்று முயற்சி என்று அடங்கிவிடாமல் பிரதியின் ஆற்றல் தன்மையில் இன்று வரை எழுத்தாளன் தடுமாறுவது தொடர்கிறது என்பது அசாத்தியமான நிலை. அதை விமர்சகர் சுட்டிக்காட்டலாம். இதைத் தொடும் போதே நாம் மொழியைத் தொடுகிறோம்.
தமிழில் எழுதப்பட்ட வகையறை கதைகளின் மொழியில் இருக்கும் குறைபாட்டினாலேயே அதை இலக்கியம் இல்லை என்கிறோம். அதன் நிகழ்வுகள் முக்கியத்தன்மை உடையது என்பதை மறந்துவிடுகிறோம். இங்கு நிகழ்வுகள் என்று குறிப்பிடும் போது மொழி தன் இருப்பை தக்க வைப்பது முக்கியம். மொழியை வைத்து நாவல் எழுதும் தமிழ் புலம் மாறவேண்டிய காலகட்டம். நிகழ்வுகள் வீரிய மொழியில் இருத்தல் அவசியமாகிறது. தமிழ் இலக்கியத்தில் நிகழ்வுகள் குறித்தான பார்வை எழுத்தாளர்களுக்கு விமர்சன வெளி விஸ்தாரமாக அறிமுகப்படுத்த வேண்டியதாகவும் மாறுகிறது. ஏனென்றால் தமிழ் வடிவத்தில் அதிக சிபாரிசுகளையும், சலுகைகளையும் பெற்றது நாவல்களே. இங்கு விடுபட்ட விமர்சனக் கோர்வைகளையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். வெளியான தமிழின் (தமிழின்) சிறந்த நாவல்கள் இதில் விதிவிலக்கு. எவ்வளவு முன்னோக்கி நமது இலக்கியமும் விமர்சனமும் இருக்கிறது என்பதை பேசும் போது எங்கே நாம் பின் தங்கி இருக்கிறோம் என்பதைக் கூறாமல் இருப்பது சரியாகாது.
மேற்கூறியவற்றில் எழுத்தாளன் இதை செய்ய வேண்டும் என்கிற எந்த நிர்பந்தமும் இல்லை. அவன் போக்கில் எழுதலாம். அப்படியானால் எழுத்தாளன்- விமர்சகன் எனும் போக்கை எவ்வாறு கையாள்வது எனக் கூறவேண்டிய நிலைக்கு வாசிப்பை மட்டுப்படுத்தியிருக்கிறோம். படைப்பின் பிரதி பிரித்தாளப்படும் நோக்கின் நிலைத்தன்மை விரிவாக்கப்பட வேண்டும். பிரதியின் நுண்பொருள் சாத்தியங்களும், அவற்றின் மீது எழும்பும் மனித சிந்தனையே பிரதான விமர்சகன் வாசகனுக்கு கடத்த நினைக்கும் அடிப்படை. அது தன்னிலையை உதற எப்போதும் தயார் நிலையில் இருத்தல் அவசியம். ஒப்பீட்டுத் தன்மை படைப்பிலிருந்து படைப்பிற்கு மாறுவதில்லை அது நிகர்பலன் உடையது. ஒன்றை நிலைநாட்டுவது விமர்சனத்தின் நோக்கமுமில்லை.
அதன் சாரமாக துறைசார் நூல்களின் தன்மையை மேற்கோள் காட்டுவது சிறந்த ஒன்றாக இருக்க முடியும். அவை வெறும் தகவல்களாக மட்டும் இல்லாமல் எப்படி புனைவு வெளிக்குள் மாறுகிறதென்பது ஒரு சுவாரஸ்யமான பகுப்பாய்வு. திறன், நடைமுறையில் அத்துறைக்கு உதவும். ஆனால் அவை பிரதியின் தன்மையை ஏற்கும் போது மனிதன் ஏற்கும் குறி மற்றும் குறிப்பானை எப்படி உளம் ஏற்கிறது என்பது காலம் நகர்த்தி வந்த பார்வை. அதிலிருந்து குறிப்பான் எப்படி குறியாளுகையாக மாறுகிறது என்பது முக்கியம்.
குறியாளுகை அனுபவமும், பாதிப்பும் என்கிற காலவெளியில் அலைவதை கணிக்கமுடியும். வழக்காறு மொழிக் கதைகள் குறித்த பார்வை இங்கு பேசப்படுவது முக்கியம். ஒரு பக்கம் துறையையும், இன்னொரு பக்கம் வழக்காறு வெளிப்படுத்தும் பண்பாட்டையும் வெளிக்கொணரும் படைப்புகள் ஒரே மாதிரியான சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தகவல்கள், இன்னொரு பக்கம் தொன்மம் இரண்டும் வெற்றியின் சூட்சமமாக புனைவில் தப்பித்துக்கொள்வதை பற்றிய விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டியவை. இங்கு தான் மொழிக்கும், அர்த்தத்திற்கும் இடையே இருக்கும் படிநிலைகள் ஏற்றிருக்கும் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
இங்கு வாசகனுக்கான பிரதியைப் படைப்பாளன் உருவாக்க முயல்வது, படைப்பாளனின் சுதந்திரம் என்றில்லாமல் படைப்புவெளி என்பதே குறியாளுகையின் போக்காக வரையறுக்கலாம். ஆனால் உடன்பட வேண்டிய அவசியமில்லை. படைப்பாளிக்கும் படைப்பாளிக்கும் உள்ள வேறுபாட்டை அறுதியிட்டு கூறும் போது படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பையும் தனித்து அடையாளப்படுத்துவது முக்கியம். எழுத்தாளனின் படைப்புலகை அல்லது வெளிப்பாட்டை ஒர் புள்ளியில் நிறுத்த முயல்வது அவசியமற்றது.
அந்நிலையில் தான் வாசிப்பின் போக்கை ஒரு விமர்சகனால் மேலெழுப்ப முடியும் என்கிற தன்மை மீளுகிறது. எதை, ஏன், எப்படி வாசிக்க வேண்டும் என்கிற அட்டவணையை விமர்சகன் கொடுப்பது அவசியமற்றது. வார்த்தைகள் சிதறுண்டு கிடக்கும் பிரதிக்குள் இவை மூலக்கருக்தை நோக்கியும், அருவ குரல்களுக்கும் வாசகனை இழுத்து வருவதே முதன்மையான ஒன்று. அதிலும் பாலின முரண் பற்றி படைப்பாளிகளிடமே இதுகாலம் வரை உரையாடி வந்திருக்கிறோம். அது உண்மையில் பேச வேண்டிய இடமாக விமர்சனத் தளத்தில் இருந்திருக்க வேண்டும். பாலின கூறுகளின் விமர்சன அர்த்தத்தின் முதல் படியில் கூட ஒரு பாலரின் கருத்தை மட்டும் முன்னகர்த்தாத குரல் எழும்ப வேண்டும். ஆண், பெண் என்கிற விமர்சன முரண் இல்லை பாலின முரணை இங்கு பேசுகிறோம். இன்பநெறி உடல்சார்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருப்பதும், புரிந்துவைத்திருப்பதும் எவ்வளவு பெரிய பிழை. அவை தேவைகளாக உருமாறி நிறைவேறிய பின் கைவிடபட்டுக் கொண்டிருப்பதன் மீது விமர்சகனின் பார்வை இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
இப்படியான நிலையிலேயே விமர்சனத்திற்கு கையாளும் வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ என்று தோன்றுகிறது (பி.கு.5). கோட்பாடுகளின் நிலைத்தன்மை எங்கிருந்து தொடங்குகிறது – அவை காலங்களும், அதன் சாட்சிகளுமாக மனிதனின் எண்ணப்பூர்வ வடிவமாக இருக்கிறது. அவை அவ்விலக்கியம் எழுதப்படும் வரலாறு, நோக்கம் அதன் காலம் என தன்னை உருவாக்கிக் கொள்வது அவசியம். ஒன்றை ஒன்றின் ஏற்ப வகைமைக்குள் அடக்காது அதன் சார்பு நிலைக்குள் பொருத்திப்பார்ப்பது என்பது சரிவராத காரியம். அப்படியிருக்க முன்பு செய்த தவறான ஒன்று வாசகனும், விமர்சகனும் தன் நிலைக்கு ஒரு படைப்பை இழுப்பது. படைப்பை நோக்கி முன்நகர கூடுமான முகாந்திரத்தை உருவாக்குவது என்பதிலும், எண்ணம் வீறுகொண்ட கோட்பாடு ஆகியவை பிரதிக்கு பிரதி மாறுதல் உடையது என்பதை ஏற்றுக்கொண்டு பயணிக்க முயல வேண்டும். அங்குதான் சொல் கொண்ட பொருளும், பொருள் கொண்ட சொல்லும் தங்களை எங்ஙனம் பக்கங்களில் வகுத்து கொண்டு கதையாடலை வெளிப்படுத்துகிறது என்பதைப் பின்தொடர இயலும். தன்னை வரித்து கொள்ள முனையும் விமர்சனப் பக்கங்கள் ஒன்றின் பிடியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இலக்கண மரபுகள் என்பது உரைநடையில் இருந்து தொடங்கவில்லை என்பதை இங்கு பல வாசகர்களுக்கும், புதியதை விரும்பாத பழைமைவாத எழுத்தாளர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். இலக்கணம் என்பது உரைநடையின் போக்கிற்கு மாறுதல்களை கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும். அதன் பணிகள் நமது மொழியில் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது எப்போதும் மறைபொருள். கதையும், இலக்கணமும், மொழியும் என மூன்று வெவ்வேறு உலகம் ஒன்றிசைவதை பற்றியான கோட்பாடுகள் மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும். அவை படைப்பிலிருந்தும் தொடங்கலாம், பாடத்திட்டத்திலும் தொடங்கலாம், விமர்சனத்திலிருந்தும் தொடங்கலாம். அப்படி ஒன்றை மறந்து பக்கங்களில் நாம் பயின்ற ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பது நேர விரயம். புனைவுகள் மொழியை உடைத்துக் கொண்டே இருக்கும் என்பதை விமர்சகன் உணர்த்தி கொண்டே இருக்கிறான்.
பிரதிகளுக்கு இதுவரை கொடுத்திருக்கும் சலுகைகளைப் பற்றி ஒர் விமர்சகன் கவனத்தைக் குவிக்க பழக்குதல் என்பது அவனுடைய பார்வையின் கூர்மையைக் குறைக்கும் இடங்களைக் கண்டுகொள்ளல் எனலாம். மேலும் அது தன் திசையிலிருந்து பிறழாமல் இருக்க வழிவகைசெய்யும். குறிப்பாக விமர்சகர்களாக அறியப்படுபவர்களை எவ்வித கட்டுக்குள்ளும் கொண்டுவந்து விடாமல் தங்களைப் பாதுகாப்பது முக்கியமான ஒன்று. பல விமர்சகர்கள் தடுமாறிய இடம் இது. விமர்சகன் மற்றவர்களுக்கு அளிக்கும் பயத்தை( எதிர் விமர்சனத்தை மட்டும் கையாளுதல்), கேலியை, நக்கலை, தன் ஈர்ப்பு போன்ற விடயத்திற்குள் மாட்டிகொண்டால் பெரும் சிக்கல். வாசகனை உள்ளிழுத்துக் கொள்ள எதனை எழுத்தாளர் வலியுருத்தியிருக்கிறார், ஏற்கவில்லை, மறைபொருளாக தாவுகிறார், கடந்திருக்கிறார் எனலாம். ஆனால் இதைச் செய்திருக்கலாம் என்பது அவசியமற்றது. புரிதல் என்கிற விதியிலிருந்து எதிர்பார்ப்பு என்னும் விதிக்கு விமர்சகன் வரும் இடம். எதிர்பார்ப்பின் வினையை ஆதரிப்பது விமர்சகனின் நோக்காக இராது. படைப்பை அணுகும் தன்மை இருக்கும் பட்சத்தில் பல்வேறு சாத்தியக்கூறுகளை படைப்பாளனுக்கு காட்டும் விதத்தில் நகர்வது ஒரு பண்பாட்டின் ஒத்திசைவுக்கு வழிவகுக்கும். அடிமனம். அறிமனம் என பிரிக்கும் தொனிக்கு தனி வகைமை கற்பிக்காமல் இங்கு பல்வேறு சாத்தியங்களை ஒன்றிணைக்கும் விரிவாக்கம் அவசியமாகப்படுகிறது. ஒன்றிசைவு என்பது அனைத்தையும் தனியாகப் பார்க்கும் திறன் உடைய பல்வேறு அறிவுசார் வெளிகளைக் கையாளுவது. தனித்தன்மையை அழிப்பது இல்லை.
அதிலும் இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக விமர்சன அரங்கில் நடப்பது என்பது ஒன்றின் அளவை கொண்டு அனைத்து விதமான பிரதிகளை அணுகுவது. இங்கு குறிப்பிடும் ஒன்றின் அளவு என்பது விமர்சகனின், வாசகனின் அனுபவமும், அவன் துறை சார்ந்த அறிவை மேலும் விரிவாக்கிக் கொள்ளாமல் கூட்டுக் கதிராக சில வாதங்களை (இதில் கோட்பாடுகள் அடங்காது. ஏனெனில் அதில் இருந்தும் இவற்றில் பொதுவாக இடம் பெறுகிறது) மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பல காலங்களின் இலக்கியத்தை அணுகியிருக்கிறோம் என்பதைக் கூறியாக வேண்டும். இது பிரதியை ஒரு எல்லைக்குள் அடுக்குவது என்பது அப்பட்டம். மீறல் பிரதியில் இலக்கணம் தேடுவது, இயல்புவாதத்தில் புதுமையைத் தேடுவது என்று இவை சம்பந்தம் இல்லாத விமர்சனங்களாக முன்னகர்வதை அகற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது ஒரு விதமான மனநிலையினை புதிய வாசகர்களுக்கு அளித்து அவை அவர்களின் தேடலை மட்டுப்படுத்துவதோடு நில்லாமல் அவர்களின் காலத்தையும் முழுங்குகிறது. ஏனோ மாஸ்டர்ஸின் புகழ் பாடாது அவர்களின் சமீபத்திய பிரதியை அணுகும் போது அவர்கள் பிம்பம் சுக்குநூறாகும். ஒரு விமர்சகனாக அவர்கள் நல்ல பிரதியை எழுதியிருக்கலாம் என்கிற காலத்தைக் கடந்து தற்போதைய நிலையில் அவர்களின் இலக்கிய தரத்தை அணுகுவது அவசியம். விமர்சன தவறு தொடங்குவதே புதிய வாசகர்களுக்கு மாஸ்டர்ஸ் என்று அறிமுகப்படுதுவதிலிருந்து ஆரம்பமாகிறது. விமர்சனம் என்பது அறிமுகப்படுத்துவதோ, துதிபாடுவதோ, என்ன எழுதினாலும் ஒரு மனக்கோட்டையாய் கட்டி வைப்பதோ இல்லை. விமர்சனம் படைப்பின் நிழலாக இருத்தல் அவசியமாகிறது. (இங்கு மதிப்புரை, துணுக்கு பார்வை, வாசகப் பார்வை, முன்னுரை எல்லாம் தனி மனித விருப்பத்திற்குள் அடங்குபவை அது விமர்சனம் இல்லை, திறனாய்வு மற்றொரு எல்லை கொண்டது )
விமர்சனம் எழுதுவதை பற்றிப் பேசும் போது அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது ‘விமர்சன அணுகுமுறை’. விமர்சகன் படைப்பை அணுகுவது ஒரு புறம் இருக்க, விமர்சனத்தை அணுகும் படைபாளியிடமும், வாசகனிடமும் அது நேரடியாக கைமாற்றப்படுகிறது என்பது ஒரு விதம். இதில் படைப்பாளியும், வாசகனும் ஒரு திசையில் பயணிக்க முடியுமா என்றால் சந்தேகமே. சில அடிப்படையானக் கூறுகளை இருவருக்கும் பொருந்தும்மட்டில் அவற்றைக் கூற விழையலாம். விமர்சகனுகென தேர்ந்த பகுதி ஒன்று இருக்கும். அதை ஒட்டிய அணுகுமுறையாக அது இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம். உதாரணத்திற்கு சரித்திரம், தத்துவம், கோட்பாடு, அரசியல் என பல்வேறு விதங்களில் பிரியும். இவை அனைத்திலும் தேர்ந்த ஒருவர் இருப்பது சிரமம். ஆனால் ஒர் அடிப்படை புரிதல் அவசியம். இதில் தனித்துவ துறையில் ஒரு படைப்பை கையாளும் போது அது மதிப்புரை, வாசக உரை என்றிலிருந்து திறனாய்வு என்று தாவுகிறது. இதற்குள்ளான விடயத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். இல்லையென்றால் ஏதோ ஒரு பரிந்துரைகள், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்பதற்குள் சிக்கி, விமர்சனம் என்கிற பெயரில் திராபைகளை வாசித்துக்கொண்டு இருப்போம். எழுத்தாளனுக்கு இவ்வணுகுமுறை எழுத்திலும், வாசிப்பவனுக்கு புதிய வாசிப்பின்பத்தை அளிப்பதாகவே அவை மாறவேண்டும். விமர்சனம் என்பதை நம் சமூக சூழல் இதுவரை எப்படி எதிர் கொள்ள கற்றுக் கொடுத்திருக்கிறது என்பது மிக முக்கியமான விடயம். அவை எதிர்ப்பு மனநிலையிலிருந்து தொடங்கி எதிர்ப்பு அணுகுமுறைக்கு மாறுவதையே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். அதனின் திசையை மாற்றுவதிலும் கவனம் தேவைப்படுகிறது. சமூக அமைப்பியலுக்கும் விமர்சனத்திற்கும் தொடுதூர உறவு மட்டுமே இருக்கிறது என்பதே உண்மை. அதனால் என்னவோ நிதர்சனத்தை எதிர் கொள்ள முடியாத, கையாலாகாத தனத்தை அது மனிதனின் செயலுக்கு பதிலாக அளிக்கிறது. அது ஒரு மனோபாவம். விமர்சனம் தன்னளவில் உருவாகும் புனைவு தளம் அன்றி நேர்கோட்டில் அடுக்கும் திறன் உடையது.
படைப்பு காலம் தாண்டி நிற்கும், படைப்பாளன் இறந்துவிட்டான் போன்ற பல பொதுச் சொல்லாடல்களை மறுபரிசீலனைக்கு கொண்டுவருவது முக்கியமாக தோன்றுகிறது. அதில் இலக்கியப் பொதுத்தன்மையிலிருந்து மட்டுமில்லாது சமூகம் கைக்கொண்டிருக்கும் சொல்லாடல்களை இலக்கியத்திற்கும், இலக்கியத்திலிருந்து சமூகத்திற்கும் என அவற்றை ஒரு மாற்றுத் திசை அல்லது மறுசீர் வாய்மொழியாக மாறவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அங்கு விமர்சகனின் பங்கு முக்கியமானது. நீண்டப் பாதையை உருவாக்குவதை விடுத்து ஒர் விமர்சகன் ஆழமான ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாக மாறுகிறது (பி.கு.6). இதன் வரையறை அற்றத் தன்மை விமர்சனத்தின் புதிய சாத்தியக் கூறுகளை ஏந்தி நிற்கும். எதையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மனதிசையில் பயணித்தல் ஆகச் சிறந்தது. ஒவ்வொரு விமர்சனமும் ஒரு புதிய வாசகனை உருவாக்கும் என்கிற பெரும் நம்பிக்கை எப்போதும் உண்டு.
***
(பி.கு.1): இங்கு வாசகர்களின் பரந்துபட்ட எண்ணச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நோக்கமல்ல. ஒர் வாசகன் பிரதியை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லலாம். ஆனால் நாம் குறிப்பிடுவது விமர்சகனின் பங்கு பிரதிக்கு எப்படி ஆட்கொள்ள வேண்டும் என்பதே. வாசகனின் அணுகுமுறையும், விமர்சகனின் அணுகுமுறையும் வேறானது.
(பி.கு.2): யதார்த்தவாத கதைகள் ஒரே உணர்வுகளைக் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டும், பின்நவீனத்துவம் மற்றும் பல உள்ளடக்கம் சாராத பிரதிகள் மொழியின் போக்கை மட்டும் கையாளுகிறது என்கிற எண்ணத்தை பரவலாகப் பார்க்கமுடியும். இதில் யதார்த்தவாதக் கதைகளை பிரித்துப் பார்த்த அளவு மீறல் கதைகளை இங்கு பொதுவெளி வாசகர்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் அவர்களின் உரையைப் போல மொழி இல்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது. (தமிழ் எழுத்தாளர்கள் சிலரின் உரையும், எழுத்தும் ஒன்றாக இருக்கிறது என்பது முக்கியம். அவர்களின் நாவல்களில் இருக்கும் உரையாடல் பகுதிகள் தமிழின் சாபக்கேடு. பக்க விரயம். மீதி வாசகன் கையில். 1990 முன் நாவல் எழுத்தாளர்களிடம் ஒரு பன்முக அணுகுமுறை இருந்தது. பின்னால் அது தேய்ந்து தேய்ந்து வருகிறது. நிறைய முயற்சி தென்பட்டது இப்போது அதில் ஓரளவு கூட இல்லை. சிலரை விதிவிலக்காக்கலாம்). இதன்போக்கு கதைகளின் களத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறது. மொத்தமாக இவர்களை மொழியின் மேல் கட்டமைக்கும் பார்வையை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மொழியின் தளத்திலேயே அவ்வளவு வித்தியாசங்களைக் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இவர்கள் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார்களா ? என்றால் இல்லை. யதார்த்தவாதக் கதைகளே (எழுத்தாளர்கள் இல்லை) சுழற்சியை கொண்டிருக்கிறது என்பது விளங்கும். விமர்சகர்களின் அலாதியான வரையறை இதை எல்லாம் அறுதியிட்டு கூற விழைவதே.
பி.கு. : பத்தி என்பது இங்கு கட்டுரையையோ அல்லது துனுக்கையோ குறிக்கும் பொருள் இல்லை.
பி.கு 3 : தமிழ் நாவல்கள் குறித்தான காத்திரமான வெளிப்பாடுதான் இவை. என்ன வாசித்திருக்கிறான்? சிறுவன்? காலம் கடக்க புரியும்? இந்த ஸ்கூல் ஆப் தாட்? போன்ற பேச்சுக்களைக் கடந்தும், தெரிந்தும் தான் முன் நகர்கிறோம். வாசகனாக நாவல்கள் தமிழில் அவ்வளவு திருப்தித் தந்தது இல்லை. தங்களுக்குள்ளேயே சுற்றி அலைந்து கொண்டிருக்கும் போக்காக தான் பார்க்கிறேன். அவை தமிழ் சமுகத்தில் நிகழ்த்திய மாற்றங்களை மறக்கவில்லை. ஆனால் உலக இலக்கியத்தில் யாது? என்கிற கேள்வியே எழுகிறது. உலக நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர்களாக இவை பெரும் அயர்ச்சியை கொடுக்கிறது. நூற்றாண்டிற்கு ஒரு படைப்பு ஒரு எழுத்தாளன் அதை நோக்கி நகர்ந்தால் ஆச்சர்யம். தமிழ் சூழல் அதை அனுமதிக்காது. ஏனென்றால் தங்களுக்கு எது வருகிறதோ அதுவே இலக்கியம் என தம்பட்டம் அடிப்பவர்களின் குரல் மேலோங்கியிருக்கிறது. அதிக பக்கங்கள் எழுதுவது (இங்கு maximal writing in minimal asethetics, grand narrative) பற்றி பேசவில்லை இங்கு பக்கம், எழுத்து, எழுதவரும் திறைமையை மட்டும் வைத்துக்கொண்டு எழுதுபவர்களை பேசுகிறோம்) இங்கு ஏன் நாவல்கள் மட்டும் வருகிறது மற்ற வடிவங்களை குறித்து ? என்கிற கேள்விக்கு உங்களின் வாசிப்பு வழிகாட்டும்.
பி.கு.4 :இது இலக்கியம். இது இலக்கியம் இல்லை என்று கூறுபவர்கள் பெரும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களை நம்ப வேண்டியத் தேவை இல்லை. அப்போது எதையோ எழுதி, குப்பையாக ஒன்றைத் தமிழில் முன்னிறுத்த முடியுமா என்றால்? கண்டிப்பாக இல்லை. அங்கு தான் எழுத்தாளனுக்கு தன்னுடைய பிரதியை வெளிப்படுத்துவதோடு நின்று கொள்வது முக்கியம். மற்றதை விமர்சனம் பார்த்துக்கொள்ளும். ஒரு எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளனுக்கு கொடுக்கும் விமர்சனமும், அங்கீகாரமும் மனரீதியில் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். அதை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அது தேவையுமில்லை. விமர்சகர்களின் குரல் ஓங்கும் போது இப்படிப்பட்ட குரல்கள் தானாக உடையும்.
பி.கு.5 : இங்கு விமர்சகர் இருவகையாகப் பிரிகிறார்கள். மேலை விமர்சன இயலை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாதவர்கள். ஒரு தரப்பினர் பிரதியிலிருந்து ஒன்றை உருவாக்க முயன்று கொண்டிருந்தனர். விமர்சன கலை என்றே முன்னிலைபடுத்தினர். மற்றொரு தரப்பில் வரக்கூடியவர்கள் தத்துவங்களின் வழியே, கோட்பாடுகளின் வழியே விமர்சன மரபை முன்னகர்த்தினர். இரண்டும் தாங்கள் எடுத்துக் கொண்டதிலிருந்து எவ்வித சமரசமும் செய்யாது நேர்கோட்டில் பயணித்தனர். ஆனால் இருவருக்கும் வாசகர் பரப்பில் அதை நிகழ்த்திக் காட்டிட முடியவே இல்லை. அவர்கள் எழுத்தாளர்கள் உடனேயே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் தங்களின் விமர்சனப் போக்கில் முன் நகராது எழுத்தாளர்கள் கவனமாக பார்த்துக்கொண்டனர். எதையும் எழுதினால் தான் விமர்சனம் செய்ய முடியும் என ஒரு தரப்பு சொல்லி அதைக் கடந்தது. இன்னொரு தரப்பு இன்றுவரை கோட்பாடுகளின் விளக்கத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
பி.கு.6 : பண்பட்ட ஒர் மனிதனால் விமர்சனத்தை உருவாக்கவும் முடியும், அதை எதிர்கொள்ளவும் முடியும்.
***
லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணிபுரிந்து வருகிறார். இதுவரை யாவரும் வெளியீடாக ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சிந்தாந்தம், கிளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கூத்தொன்று கூடிற்று நூலுக்கு சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மின்னஞ்சல்: latshmihar.malai@gmail.com

