பாரதிராஜா
அதிகாரத்தைக் கேள்வி கேட்ட நாகரிகம், காட்சியாக மாறிவிட்ட அரசியலை இன்று எப்படி எதிர்கொள்கிறது?
முன்னுரை: ஒரு நாகரிகத்தின் நினைவிழப்பு பற்றிய கதை
ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றி சில அடிப்படை நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. சில சமூகங்கள் தங்களைப் போர்வீரர்களின் சந்ததியென நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை வணிக நாகரிகம் என நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை அறிவியல், காரண-ஏரணத்தின் (logic) வாரிசுகள் எனக் கருதுகின்றன. அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தை எந்த அடிப்படைப் பண்பால் அடையாளம் காண்பது?
இக்கேள்விக்கான பதிலை வரலாற்றின் நீண்ட நதிக்குள் தேடிச் சென்றால், ஒரு தனித்துவமான உண்மை நமக்குத் தென்படும். தமிழர்கள் வெறும் அரசுகளை உருவாக்கியவர்கள் அல்லர். வெறும் பேரரசுகளை நிறுவியவர்கள் அல்லர். வெறும் மன்னர்களின் வரலாற்றை எழுதியவர்களும் அல்லர்.
தமிழர்கள், வரலாற்றின் மிக நீண்ட மரபுகளில் ஒன்றாக அதிகாரத்தை எப்போதும் கேள்விக்குட்படுத்தியவர்கள். அதிகாரத்தைப் புனிதப்படுத்தாமல், அதை அறத்தின் அளவுகோலில் அளந்து பார்த்தவர்கள். இதுவே தமிழ் நாகரிகத்தின் மிக ஆழமான பண்புகளில் ஒன்று.
திருவள்ளுவர் முதல் சங்கப் புலவர்கள் வரை, சோழர் கால உள்ளாட்சி அமைப்புகள் முதல் பெரியாரின் பகுத்தறிவுப் புரட்சி வரை, தமிழ்ச் சமூகம் ஒரு விந்தையான தொடர்ச்சியை நமக்குக் காட்டுகிறது: எந்த அதிகாரமும் நிலையானதல்ல. எந்த அதிகாரமும் திறனாய்வுக்கு அப்பாற்பட்டதல்ல.
தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பேசும்போது நாம் வழக்கமாக அதன் மொழி, இலக்கியம், கலை, ஆன்மீகம், வீர வரலாறு போன்றவற்றையே முன்னிறுத்துகிறோம். ஆனால் உலக நாகரிக வரலாற்றில் தமிழ்ச் சமூகத்திற்குத் தனியே ஓர் அரிய அடையாளம் உண்டு. அது வெறும் ஆட்சியை ஏற்றுக்கொண்டு வாழும் சமூகம் அல்ல. மாறாக, அதிகாரத்தைக் கேள்விக்கேட்கும் சமூகம்.
தமிழர் வரலாற்றைப் படிக்கையில் ஒரு வியப்பூட்டும் உண்மை தெரிகிறது. உலகின் பல சமூகங்கள் அரசர்களைக் கடவுளாக்கிக் கொண்ட காலத்தில், தமிழ்ச் சமூகம் அரசனை நெறிக்குள் வைத்துப் பார்த்தது. அதிகாரத்தை அறமாக மதிப்பிட்டது. அரசியல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. சமூக நியாயத்தின் கருவி என்று புரிந்துகொண்டது.
ஆனால் இங்கேதான் வரலாற்றின் மிகக் கடுமையான முரண்பாடு உருவாகிறது. இதே தமிழ்ச் சமூகம்தான் இன்று இந்தியாவில் மிகவும் அரசியல் ஆர்வம் கொண்ட சமூகங்களில் ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும், அதன் அரசியல் ஈடுபாடு பல நேரங்களில் அறிவுசார் மதிப்பீடாக இருப்பதில்லை. அது ஓர் உணர்ச்சி நாடகமாகத் தெரிகிறது. அரசர்களைக் கடுமையான விதிகளின் படி மதிப்பிட்ட நாம் அரசியல்வாதிகளை வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியிருக்கிறோம். ஒருகாலத்தில் அரசியல் அறத்தின் கேள்வியாக இருந்தது. இன்று அது உணர்ச்சியின் கேளிக்கையாக மாறிவிட்டது.
இந்த முரண்பாடு எங்கே ஆரம்பித்தது? அதைப் புரிந்துகொள்ள தமிழர் அரசியற் திறனாய்வு மரபின் நீண்ட வரலாற்றைப் பார்க்க வேண்டும். இது வெறும் அரசியல் பற்றிய கட்டுரை அல்ல. ஒரு நாகரிகத்தின் நினைவிழப்பு பற்றிய கதை.
தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைப் பண்பு: அதிகாரத்தைப் புனிதமாக்க மறுத்த பண்பாடு
ஒவ்வொரு நாகரிகத்திற்கும் ஓர் உளவியல் அடிப்படை இருக்கும். ரோமானிய நாகரிகத்தின் அடிப்படை கட்டுப்பாடு. சீன நாகரிகத்தின் அடிப்படை படிநிலை. மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படை காரண-ஏரணம். தமிழ் நாகரிகத்தின் அடிப்படை என்ன?
தமிழ்ப் பண்பாட்டின் மையப் பண்பு கீழ்ப்படிதல் அல்ல. மறுவினை. தமிழ்ச் சமூகத்தில் அதிகாரம் என்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரலாற்றில் வலுவாக இருந்ததில்லை. மாறாக அரசனைக் கேள்வி கேட்கலாம். சமயத்தை எதிர்க்கலாம். சமூக மரபுகளை உடைக்கலாம். அதிகார அமைப்பை மறுக்கலாம்.
இது வெறும் அரசியல் நடத்தை அல்ல. இது ஒரு நாகரிகப் பண்பு.
தமிழர்கள் அரசியலைத் திறனாய்வு செய்தவர்கள் மட்டுமல்லர். அதிகாரத்தை எப்போதும் தனியாராக்க விடாதவர்கள். இந்த ஒரு வரியில்தான் தமிழ் அரசியற் திறனாய்வு மரபின் சாரம் இருக்கிறது.
திருக்குறள் — தமிழின் முதல் அரசியற் திறனாய்வு நூல்
திருக்குறள் பெரும்பாலும் ஒழுக்க நூலாகப் படிக்கப்படுகிறது. ஆனால் அது உலகின் தொன்மையான அரசியல் நெறிமுறை நூல்களில் ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. வள்ளுவர் அரசனின் அதிகாரத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட அரசனையும் புகழ்ந்து பாடும் வழக்கம் அப்போது இருக்கவில்லை என்பதையும் திருக்குறள் நமக்குச் சொல்கிறது.
அவர் அரசனைத் தாண்டி ஒரு நெறி அமைப்பை உருவாக்குகிறார். அரசன் யார்? அவன் எப்படிப் பேச வேண்டும்? எப்படி வரி விதிக்க வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும்? இவற்றை வள்ளுவர் நேரடியாக மதிப்பிடுகிறார்.
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.” (குறள் 550)
கொடுங்கோலனை அழிப்பது பயிரில் களை எடுப்பதற்கு ஒப்பானது என்று சொல்கிறார். இது அரச அதிகாரத்திற்கு நேரடியான சவால்.
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.” (குறள் 552)
ஆட்சியாளன் அறநெறி தவறி வரி கேட்பதை வழிப்பறிக் கொள்ளையோடு ஒப்பிடுகிறார். இதில் மிகப் பெரிய வேறுபாடு என்னவென்றால், இது அரசனைப் புகழும் இலக்கியம் அல்ல. அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் இலக்கியம்.
ஒருவேளை, வள்ளுவரே அரசகுடியில் பிறந்திருந்திருக்கலாம். இளங்கோவடிகள் போல். அதனாலேயே அவருக்கு அரச புகழ் பாடும் தேவையில்லாமல் போயிருந்திருக்கலாம். அவருடைய அரசியல் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளுக்கும் அதுவே காரணமாகவும் இருக்கலாம். இதுவரை அப்படி எதுவும் நிறுவப்படவில்லை. எனவே வள்ளுவர் வெளியிலிருந்து வினா எழுப்பிய நம்மைப் போன்ற எளிய மனிதர் என்றே வைத்துக்கொண்டு தொடர்வோம்.
அதாவது, தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான நூல்களிலேயே அரசியற் பொறுப்புணர்வு பற்றி இருக்கிறது. தமிழ் அரசியற் திறனாய்வு மரபின் முதற் பண்பு இதுதான்: அதிகாரத்திற்கு வெளியே நின்று பேசுவது.
சங்க காலம் — மன்னருக்கு எதிரே நின்ற புலவர்
புறநானூறு படிக்கும்போது நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சங்கப் புலவர்கள் அரசவைப் பொழுதுபோக்காளர்கள் அல்லர். அவர்கள் அரசியற் கருத்தாளர்கள்; அறவியற் தணிக்கையாளர்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் சொல்வது அரசியல் எல்லைகளைக் கேள்விக்குட்படுத்துவது. ஒரு புலவன், “எல்லா ஊரும் என் ஊரே, எல்லோரும் என் உறவே” என்று சொல்வது அன்றைய காலத்தில் அரசியற் துணிச்சல். இனம், இடம், அரசு என்ற எல்லைகளை மறுப்பது. போர் வழி எல்லைகளை விரிவாக்க விரும்பும் அரசன் வரைந்து வைத்திருக்கும் எல்லைகளை ஏற்க மறுக்கும் குரல்.
பல பாடல்களில் மன்னர்களின் முடிவுகள் நேரடியாகச் சாடப்படுகின்றன. புலவர் மன்னனைப் பார்த்து “இது தவறு” என்று சொல்லும் உரிமை பெற்றிருந்தார். சில இடங்களில் குரலில் இருக்கும் அச்சத்தை உணர முடிந்தாலும் அதை மீறிய துணிவையும் உணர முடிகிறது. கோவூர் கிழார், சோழன் கிள்ளிவளவனின் கொடூரத்தை முகத்திற்கு நேரே தடுத்து நிறுத்தினார். வெள்ளைக்குடி நாகனார் வரியைக் குறைக்கக் கோரி மன்னனின் குடை நிழல் உழவனின் கலப்பையில் தங்கியுள்ளது என்பதை நினைவூட்டினார்.
இதுவே தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை அமைப்பு: அதிகாரம் பேசலாம். ஆனால் அதிகாரம் பதில் சொல்லவும் வேண்டும். அதிகாரம் என்பது இறைமை அல்ல. புலவர்களுக்கு அரசர்களை மதிப்பிடும் சமூக உரிமை இருந்தது. இந்த நிறுவனமயமான திறனாய்வு இடம் உலகின் பிற தொன்மையான நாகரிகங்களில் இணையான வடிவத்தில் இருக்கவில்லை.
புலவன் அரசனின் ஊழியன் அல்லன். அவன் அறத்தின் தூதன். இங்கே பா ஒரு கவசமாகச் செயல்பட்டது. வெளிப்படையான திறனாய்வை அழகிய வடிவில் சொல்வது புலவர்களின் உத்தி. அரசன் சினங்கொள்வான் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் செய்யுளை முழுதாக மறுத்தால் அரசனே காட்டுமிராண்டி என்று ஆகிவிடும். அதனால் அதிகாரம் பாடலின் முன்னால் பணிந்தது.
சோழர் காலம் — அதிகாரத்தைப் பகிர்ந்த சமூக அறிவு
இராஜராஜ சோழன் காலம் பெரும்பாலும் படை வெற்றியாகப் பேசப்படுகிறது. ஆனால் சோழ அரசியலின் உண்மையான புரட்சி வேறோர் இடத்தில் இருந்தது. அது உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருந்தது. உள்ளாட்சித் தேர்தல் (குடவோலை முறை), நிர்வாகப் பொறுப்பு, கணக்குத் தணிக்கை, பொதுக் கண்காணிப்பு, தவறு செய்தவர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் பொறுப்புத் தடை போன்றவை மனிதகுல வரலாற்றில் முன்னோடி வழக்கங்கள். நிர்வாக முடிவுகள் பொது இடங்களில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. கோவிற் சுவர்கள் அரசாங்க ஆவணங்களாக மாறின.
இது தற்கால வெளிப்படைத்தன்மையின் முன்னோடி. இதன் பொருள் தெளிவானது. தமிழ்ச் சமூகம், அரசியல் என்பது ஒரே தலைவனைச் சுற்றிய அமைப்பு அல்ல என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புரிந்துகொண்டிருந்தது. அதிகாரம் பகிர்வான பொறுப்பாகவே பார்க்கப்பட்டது. இது மேற்கத்திய மக்களாட்சிக்கு முற்பட்ட தமிழ் மக்களாட்சி மரபு.
இந்திய அரசியல் மரபோடு ஒப்பீடு
அர்த்தசாத்திரம் இந்திய அரசியல் எண்ணப்பாட்டின் மிகப் பெரிய நூல். ஆனால் அது முக்கியமாக அரசன் எப்படி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைப் பேசுகிறது. “எப்படி வெற்றி பெறுவது?”, “எப்படி எதிரிகளை அழிப்பது?”, “எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது?” என்பவைதான் சாணக்கியரின் கேள்விகள். இது அரசனை வலிமைப்படுத்தும் வகைகளைச் சொல்வது.
தமிழ் மரபில் கேட்கப்பட்ட கேள்வி முற்றிலும் வேறானது: “அரசன் அறமற்றவனாக இருந்தால் என்ன செய்வது?”, “அவன் மக்களுக்காக இல்லாவிட்டால் அவன் அதிகாரத்தின் பொருள் என்ன?”, “அரசன் ஏன் அவனைவிடவும் மக்களை மையப்படுத்த வேண்டும்?”
வட இந்திய மரபு அதிகாரத்தைத் தக்க வைப்பதைப் பேசுகிறது. தமிழ் மரபு அதிகாரத்தை அறமாக மதிப்பிடுவதைப் பேசுகிறது. சாணக்கியர் அதிகாரத்தைக் காக்கும் கலையை கற்றுக்கொடுத்தார். வள்ளுவர் அதிகாரத்திற்கு எல்லை விதித்தார். சாணக்கியர் அரசனுக்கு வெற்றியைக் கற்பிக்கிறார். வள்ளுவர் அரசனுக்கு நீதியைக் கற்பிக்கிறார். ஒருவருக்கு அரசியல் என்பது சூழ்ச்சி. மற்றவருக்கு அரசியல் என்பது அறம். இவை இரண்டும் வெவ்வேறு அரசியல் உலகங்கள்.
உலக மரபோடு ஒப்பீடு — கிரேக்கம் முதல் சீனம் வரை
மேற்கத்திய அரசியற் திறனாய்வு சாக்ரடீஸிலிருந்து (கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு) தொடங்குகிறது. அவர் அதிகாரத்தையும் சமூக நெறிகளையும் தெருவில் நின்று கேள்வி கேட்டார். அவரது முறை எதிர்கேள்வி முறை. அதிகாரிகளின் வாதங்களை அவர்களே பொய்யாக்கிக் கொள்ளும்படி செய்வது சாக்ரடீஸின் உத்தி. அரிஸ்டாட்டில் 158 நகர அரசுகளின் அமைப்பை ஆய்வு செய்தார். ஒப்பீட்டு அரசியற் திறனாய்வு அவரிடமிருந்து தொடங்குகிறது. ஆனால் கிரேக்க அரசியற் திறனாய்வு பெரும்பாலும் கல்வியறிவு கொண்ட சிறு வட்டத்துக்குள் இருந்தது.
தமிழில் அது மக்கள் வாழ்வுக்குள் இருந்தது. ஒரு புலவன் அரசனை எதிர்கொள்கிறான். ஒரு விவசாயி வரி பற்றிக் கருத்து சொல்கிறான். ஓர் இலக்கியம் அரசனின் அறத்தை அளக்கிறது. இது அரிய நாகரிகப் பண்பு.
கிரேக்கர்கள் காரண-ஏரணம் (logos) வழியாக மதிப்பிட்டனர். தமிழர்கள் அறம் வழி மதிப்பிட்டனர். ரோமானிய சிசரோ தன் உயிரைப் பணயம் வைத்துப் பேச்சு வழியாகச் சாடினார். தமிழ்ப் புலவர்கள் செய்யுள் என்ற கவசத்தில் சாடினர். சீன மெய்யியல் மேதை கன்பூசியஸோடு தமிழ் மரபிற்கு ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஆட்சியாளனின் தனிப்பட்ட பண்பை அரசியலின் வேரடியாகப் பார்க்கின்றனர். நிறுவனங்கள் அல்ல, மனிதர்களே முதன்மை என்பது கிழக்கின் பொதுவான அரசியற் கொள்கை.
மாக்கியவெல்லியின் “இளவரசன்” (“The Prince”) மேற்கத்திய இயல்புநெறியின் உச்சம். “அதிகாரம் தக்க வைக்க அரசன் எதுவும் செய்யலாம்” என்பது மாக்கியவல்லியின் கோட்பாடு. சாணக்கியரைப் பிடிப்பவர்களுக்குப் பிடிக்கும் கோட்பாடு. தமிழ் மரபு இதற்கு நேர் எதிர். சாணக்கியரைப் போலவே மாக்கியவெல்லியும் அரசனுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுத்தார். தமிழ் மரபோ அரசனுக்கு நீதியைக் கற்றுக்கொடுத்தது. வள்ளுவர் “அதிகாரம் தக்க வைக்க” என்று எழுதவில்லை. “அதிகாரம் நீதியாக இருக்க” என்று எழுதினார். கன்பூசியஸைப் பிடிப்பவர்களுக்குப் பிடிக்கும் எழுத்து.
| பண்பு | தமிழ் மரபு | கிரேக்க மரபு | இந்திய மரபு |
| அடிப்படை | அறம் | காரண – ஏரணம் | அதிகாரம் |
| வடிவம் | செய்யுள், நாட்டார் | உரை, நாடகம் | நூல், சாத்திரம் |
| நிலை | வெளியிலிருந்து | வெளியிலிருந்து | உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் |
| இலக்கு | அறவியல் நியாயம் | உண்மை | வெற்றி, பாதுகாப்பு |
காலனித்துவத்திற்குப் பிறகு — இதழியலும் புதிய விழிப்பும்
19-ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் அரசியற் திறனாய்வு புதிய வடிவம் எடுத்தது. இதழ்கள் வந்தன. பொது உரையாடல் உருவானது. சுப்பிரமணிய பாரதி அரசியற் பாக்களைப் புரட்சியாக மாற்றினார். அரசியலைத் திறனாய்வது மக்கள் கடமை என்ற எண்ணம் சமூகத்தில் வளர்ந்தது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் அரசியற் திறனாய்வு இரண்டு மேடைகளில் ஒரே நேரத்தில் நடந்தது. முதலாவது, காலனிய அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். இரண்டாவது, சாதி அமைப்பு என்ற உள்நாட்டு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். இரண்டையும் ஒரே மூச்சில் செய்தவர்கள் தமிழகத்தில் இருந்தனர். எடுத்துக்காட்டு: அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன். இது தமிழ் மரபின் தனித்துவமான வலிமை.
திராவிட இயக்கம் – திறனாய்வை மக்களிடம் கொணர்ந்தது
தமிழ் அரசியற் திறனாய்வு தொடக்கத்தில் அறிவுசார் இடத்தில் இருந்தது.
வள்ளுவர். சங்கப் புலவர்கள். பண்டிதர்கள்.
20-ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய மாற்றம் நடந்தது.
பெரியார் அரசியற் திறனாய்வை உயர்குடி உரையாடலிலிருந்து மக்கள் உரையாடலுக்குக் கொண்டு வந்தார்.
தெருக் கூட்டங்கள். மேடைப் பேச்சுகள். சுவர் எழுத்துகள். இதழ்கள்.
முதன்முறையாக எளிய குடிமகன் அரசியற் திறனாய்வாளராக மாறினார். இது திறனாய்வின் மக்கள்மயப்படுத்தல்.
தமிழகத்தின் பெரிய தனித்துவம் ஒன்று உண்டு. இங்கே எல்லா அரசியல் மாற்றங்களும் தேர்தல் அரசியலிலிருந்து வரவில்லை. அரசியலுக்கு வெளியில் நின்று பேசுவது ஒன்று. அரசியலுக்குள்ளேயே இருந்துகொண்டு, அதன் பரவலான வடிவத்தை – அதிகாரத்தை மறுத்து அந்த உள்வட்டத்துக்கு வெளியே நின்று பேசுவதும் திறனாய்வதும் ஒன்று. இந்திய அளவில் காந்தி செய்ததோடும் இதை ஒப்பிடலாம். ஆனால் காந்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய இயக்கத்துக்குள் இருந்துகொண்டு அதிகாரத்தை மறுத்தார். பெரியார் தான் மட்டுமின்றி தன் இயக்கமே அதிகாரத்தை விட்டு விலகி நிற்கும் – திறனாய்வு மட்டுமே செய்யும் என்ற நிலை எடுத்தார். இந்திய அரசியலில் இது மிகவும் அரிதான நிகழ்வு.
“கடவுள் இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” — இவற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் ஆழமானது. இந்தச் சொற்றொடர்கள் சமயத்தை மட்டுமல்ல, சமயத்தின் மூலம் நிலைநிறுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தையும் தாக்குகின்றன. சாதி என்ற அமைப்பு அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துகிறது. அதைக் கேள்விக்குட்படுத்தாமல் அரசியற் திறனாய்வு முழுமையாகாது என்பது பெரியாரின் நிலை. பெரியார் திருக்குறள் மரபை அவர் காலத்தில் தொடர்ந்தார். அதிகாரத்திற்கு வெளியே நின்று பேசும் அதே மரபு.
வேறுபாடு என்னவென்றால் — வள்ளுவர் அரசனை நோக்கிப் பேசினார்; பெரியார் மக்களை நோக்கிப் பேசினார். மக்களுக்குள் இருந்துகொண்டு அரசனைவிட அதிகாரம் கொண்டிருப்பவர்கள் என்று அவர் நம்பியவர்களுக்கு எதிராகப் பேசினார். இலக்கு மாறியது, ஆனால் சாடலின் நிலை மாறவில்லை.
அரசியலை நாடகமாகப் பார்த்தல்
இங்கேதான் நாம் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக அரசியலை ஆழமாக மதிப்பீடு செய்த சமூகம் இன்று ஏன் அரசியலை வேறு விதமாகத் துய்க்கிறது? மறைந்த தமிழ் அரசியற் திறனாய்வாளர் ஞாநி ஒரு முறை மிகக் கூர்மையான பார்வை ஒன்றைச் சொன்னார். “தமிழர்கள் அரசியலையும் ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் பார்க்கிறார்கள்.” இந்த ஒரு வரியில் சமகாலத் தமிழ் அரசியல் உளவியல் முழுவதும் அடங்கியிருக்கிறது. அவர்களுக்கு அரசியலில் கொள்கை பற்றிய ஆர்வத்தை விடக் கூடுதலாக தலைவர்களுள் நடக்கும் மோதல் பற்றிய ஆர்வம் இருக்கிறது.
“யார் யாருடன் சண்டை போட்டார்கள்?”, “யாரை யார் ஏமாற்றினார்கள்?”, “யார் துரோகம் செய்தார்?”, “யார் பாதிக்கப்பட்டார்?”, “யார் இழிக்கப்பட்டார்?” — இந்த நன்மை-தீமை நாடகந்தான் அவர்களை அரசியலுக்குள் இழுக்கிறது. நாடகம் பார்க்கும்போது நாம் என்ன செய்கிறோம்? கதாபாத்திரங்களோடு உணர்ச்சிப்பூர்வமாக இணைகிறோம். தலைவன் யார், வில்லன் யார் என்று தீர்மானிக்கிறோம். தலைவனுக்குத் துன்பம் நேர்ந்தால் சினங்கொள்கிறோம். ஆனால் நடக்கும் நாடகம் நம் வாழ்க்கையை எந்த விதத்தில் பாதிக்கும் என்கின்ற எண்ணம் வருவதில்லை. ஏனெனில் அது நாடகந்தானே. தமிழ் அரசியலில் இதே உளவியல் செயல்படுகிறது என்பது ஞாநியின் கருத்து.
ஒரு குடிமகன் அரசியலைக் கொள்கைகளின் வழியே பார்க்கிறான். ஒரு பார்வையாளன் அரசியலைக் கதாபாத்திரங்களின் வழியே பார்க்கிறான். ஒரு குடிமகன் கேட்கும் கேள்வி: “இந்தக் கொள்கை என் சமூகத்தை எப்படி மாற்றும்?” ஒரு பார்வையாளன் கேட்கும் கேள்வி: “யார் வென்றார்? யார் தோற்றார்? யார் யாரை இழித்தார்?”
மக்கள் எப்போதும் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது நாடகப் பார்வையாளனின் கேள்வி. அவர்கள் என்ன கொள்கை கொண்டிருக்கிறார்கள், அந்தக் கொள்கை எனக்கு என்ன செய்கிறது என்று கேட்பது அரசியற் குடிமகனின் கேள்வி. தமிழகத்தின் சமகால அரசியற் பண்பாட்டில் எந்தக் கேள்வி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே ஞாநியின் கவலை. இந்த வேறுபாட்டில்தான் எல்லாமே இருக்கிறது. அவர் காலத்திலேயே அப்படியென்றால், அதற்குப் பின் எவ்வளவோ நடந்துவிட்ட இப்போது எப்படி என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழர்கள் ஒருவர்மீது அன்பு செலுத்துவதை தனிப்பட்ட விதத்தில் மட்டும் செய்துவிட்டு விடுவதில்லை. ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பதற்கு எளிதானது அதிகாரம். “இவர் எங்களுடையவர்” என்ற உணர்வு வந்துவிட்டால் அடுத்த நகர்வு இதுதான்: “அவர்தான் எங்களை ஆள வேண்டும்.”
இதனால் தேர்தல் என்பது இங்கு ஆட்சித் திறன் பற்றிய தேர்வு அல்ல. அது ஒரு கூட்டு உணர்ச்சி அறிவிப்பாக மாறுகிறது. அன்பு, நம்பிக்கை, வழிபாடு, அடையாளம், பழிவாங்குதல் — இவை கொள்கையை விட முக்கியமாகின்றன. இந்த உளவியலின் வேர்கள் ஆழமானவை.
அரசியலே நாடகம் கலந்த – நாடகத்தின் தேவை இருக்கிற துறைதான் எனினும் திரைத்துறையினர் அரசியலுக்குள் வரத் தொடங்கியதும் அது பன்மடங்கு கூடியது. மக்களைப் பார்வையாளர்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு – அவர்களின் நுகர்வுக்குப் பிடித்த விதத்தில் படைத்தளிக்கத் தெரிந்தவர்களுக்கு – அவர்களின் தேவையறிந்து தீனி போடுவது எளிதானது. இயல்பாகவே அதுதான் அவர்களுக்கு வந்தது. கவர்ச்சியான கருத்துகளை மட்டும் பேசினால் போதாது. கவர்ச்சியான சொற்களையும் பயன்படுத்த வேண்டும். கவர்ச்சியான முகங்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று இறங்கினார்கள். தம்மைவிடத் தம்மோடு அழைத்துச் சென்ற முகங்களை நம்பிய மூளைகளுக்குத் தெரியவில்லை – மக்களும் கூடிய விரைவில் தம்மைவிட அந்த முகங்களையே கூடுதலாக நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்று.
கலையையும் கலைஞர்களையும் போற்றும் தமிழகத்தில் இப்படியே பல பத்தாண்டுகளாக அரசியல் நாடக வடிவம் ஏற்று மென்மேலும் வளர்ந்தது. எப்போதும் இரு மையப் பாத்திரங்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் தமிழக மக்கள் பொருளியற் கொள்கை, கல்விக் கொள்கை, நீர் மேலாண்மை போன்ற உரையாடல்களால் அரசியலில் ஈடுபடவில்லை. அவர்கள் பார்க்க விரும்பியது வேறு. இன்று யார் வென்றார்? யார் இழிவுபடுத்தப்பட்டார்? யார் பழி வாங்கப்பட்டார்? யார் மீண்டும் எழுந்தார்? இது ஒரு ஷேக்ஸ்பியர் நாடகம் போல் விரிந்தது. அல்லது ஒரு மாபெரும் தமிழ்த் திரைப்படம் போல் இயங்கியது. ஒரு தலைவன் அல்லது தலைவி. ஒரு வில்லன் அல்லது வில்லி. ஒரு துரோகம். ஒரு மீட்சி. அரசியல் என்பது, கொள்கை உரையாடலிலிருந்து உணர்ச்சி மேடையாக மாறியது.
இவர்களின் பகை தனிப்பட்ட பகை மட்டும் என்றில்லாமல், ஒரு நாடகக் கட்டமைப்பு போல் ஆனது. ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பார். ஒருவர் நடந்துகொள்வதற்கு நேர் எதிர் பாணியில் இன்னொருவர் நடந்துகொள்வார். இப்படியாகத் தனிமனிதத் திறமைகளையும் கோளாறுகளையும் வியக்கும் – சாடும் வேலையை மட்டுமே விரும்பிச் செய்பவர்களாக மக்கள் ஆனார்கள். அதில் வியப்பில்லை. அப்படித் தடம் மாறிப் போகும் மக்களை மாற்றி வழிக்குக் கொண்டுவரும் பணியைச் செய்ய வேண்டிய திறனாய்வாளர்களும் மக்களுக்குப் பிடித்த விதமான வேடிக்கைகளையே படைத்துப் படையலிட்டார்கள். இப்படித்தான் மின்னல் வேகத்தில் ஓர் இனத்தின் அரசியற் திறனாய்வு வீழ்ச்சி நிகழ்ந்தது. அது அவ்வினத்தின் அரசியல் மரபின் வீழ்ச்சியா இனத்தின் வீழ்ச்சியேவா அல்லது அரசியற் திறனாய்வு மரபின் வீழ்ச்சி மட்டுந்தானா என்பது உங்கள் சிந்தனைக்கு.
டிஜிட்டல் ஊழியின் தாக்கம் — சிதறிய கவனம்
இன்று இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடைந்திருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சி காலத்தில் அரசியல் நாடகமாக இருந்தது. சமூக ஊடகக் காலத்தில் அரசியல் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. ஒருகாலத்தில் நீண்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இன்று பதினைந்து நொடிக் காணொளிகள் பார்க்கப்படுகின்றன. ஒருகாலத்தில் கருத்து முக்கியம். இன்று உணர்ச்சியும் எதிர்வினையும் (reaction) முக்கியம். ஒருகாலத்தில் எண்ணம் முக்கியம். இன்று கவனம் (attention) முக்கியம். ஒருகாலத்தில் அரசியற் திறனாய்வு திருக்குறளின் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லப்பட்டது. இன்று அது ஒரு நகைச்சுவை மீம் ஆகச் சுருங்கிவிட்டது. அரசியலைப் புரிந்துகொள்ளவெல்லாம் யாருக்கு நேரமிருக்கிறது! அதை விரல் உருட்டிக் (scroll) கடக்கிறோம்.
இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் அல்ல. மக்களாட்சியின் கவனச் சிதைவு.
தமிழர் அரசியல் உளவியலின் மிகப்பெரிய முரண்பாடு
இன்று நாம் ஒரு முரணைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் வள்ளுவர் அரசனை மதிப்பிட்டார். சங்கப் புலவர்கள் மன்னர்களை எதிர்த்தனர். பெரியார் சமூக அமைப்பை உடைக்க முயன்றார். ஊர் மன்றங்கள் அதிகாரிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கின. இன்று: மக்கள் தம் தலைவர்களை ரசிகர் நிலையில் நின்று பார்க்கிறார்கள்; அரசியல் உரையாடல்களில் கொள்கைகளைவிட ஆளுமைகள் அதிகம் பேசப்படுகின்றன.
என்ன நடந்தது? மக்கள் அரசியலைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்தவில்லை. ஆனால் அரசியலை நிறுவனமாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். பாத்திரங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் சில நேரங்களில் கொள்கை அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சில தேர்தல்களின் போது கொள்கை அடிப்படையிலான உரையாடல்கள் மேலோங்கி நின்று திறனாயும் போக்கு இருந்ததும் உண்மைதான். ஆனால் அரசியற் திறனாய்வுக்கும் அரசியற் கண்டுகளிப்புக்கும் இடையே தமிழ்ப் பொதுவெளியில் போதுமான வேறுபாடு இல்லை. ஒரே உரையாடல் இரண்டையும் கலைத்துப் போடுகிறது. இது தமிழ் மண்ணில் மட்டும் அல்ல. உலகெங்கும் தற்கால மக்களாட்சியில் இந்த நோய் பரவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த மாற்றம் வேகமாகவும் ஆழமாகவும் நடந்தது என்பது கவலைக்குரியது.
முடிவாக…
தமிழர் வரலாறு நமக்குப் பெருமையளிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரத்தை அறத்தால் அளந்த சமூகமாக நாம் இருந்தோம் என்பதில் பெருமைதான். ஆனால் சமகாலம் நமக்கு ஓர் அச்சத்தையும் தருகிறது. இன்று நாம் அதிகாரத்தைத் திறனாய்கிறோமா? அல்லது அதிகாரம் உருவாக்கும் காட்சிகளை மட்டுமே நுகர்வோராக இருந்து கண்டுகளிக்கிறோமா? வள்ளுவர் அரசனுக்கு எல்லை விதித்தார். சங்கப் புலவர்கள் மன்னர்களைத் திருத்தினார்கள். பெரியார் சமூக அமைப்பையே கேள்விக்குட்படுத்தினார். ஞாநி அரசியலை நாடகமாகப் பார்க்கும் மனநிலையை எச்சரித்தார்.
இப்போது நம்முன் நிற்கிற கேள்வி இதுதான்: அடுத்த தலைமுறை குடிமக்களாக உருவாகப் போகிறதா? அல்லது ரசிகர்களாகத் தொடரப் போகிறதா? ரசிகப் பண்பாடு என்பது ஏதோ திடீரென்று சென்ற சில ஆண்டுகளில் வந்த அலை அல்ல. இது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக மெதுமெதுவாக நீரூற்றி வளர்க்கப்பட்டிருப்பது. தமக்கு நன்மை பயக்கும் என்று நம்பி நீர் ஊற்றி ஏமாந்தவர்களுக்கு இது நல்ல தண்டனை என்று வைத்துக்கொண்டாலும், எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் போகிற போக்கில் ‘பார்க்க நன்றாகத்தானே இருக்கிறது!’ என்று நீர் ஊற்றிவிட்டுப் போவோர்தான் தம் அடுத்த தலைமுறைக்குப் பெரும் பாவத்தைச் செய்பவர்கள்.
தமிழ் மரபின் உண்மையான வலிமை அதிகாரத்தையும் அதன் திருவிளையாடல்களையும் கண்டு களிப்பதில் இல்லை. அதைக் கேள்வி கேட்பதில் இருக்கிறது. அதிகாரத்திற்குக் கைதட்டுவது எளிது. காலில் விழுவது எளிது. காசு வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக ஆதரவுக் கட்டுரைகள் எழுதுவதும் எளிது. மேல்-கீழ் என்று பேசும் எல்லாமும் பார்ப்பனியமே என்று சொல்வது போல், கண்மூடித்தனமான வழிபாடு எல்லாமே மூடத்தனமே! அது திரைக்கவர்ச்சியின் பால் ஏற்படும் வழிபாடு என்று மட்டும் சுருக்குவதும் மூடத்தனமே!
அதிகாரத்தைக் கேள்வி கேட்பதுதான் நாகரிகத்தின் உயர்ந்த வடிவம். ஒருகாலத்தில் அதைத்தான் தமிழர் நாகரிகம் உலகுக்குக் கற்றுக்கொடுத்தது (பிற்காலத்தில் திரைக்கவர்ச்சியை அரசியலுக்குள் கொண்டு வரும் பண்பாட்டையும் தமிழர் நாகரிகந்தான் பக்கத்து நிலங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை).
கேள்வி ஒன்றுதான்.
அந்த மரபு இன்னும் நமக்குள் உயிரோடு இருக்கிறதா?
***
பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

