Homeஇதழ்கள்2026 இதழ்கள்போர்க்களம் போன பூக்கள்

போர்க்களம் போன பூக்கள்

(கிறிஸ்டின் ஹனாவின் ‘பெண்கள்’ (The Women): நூலுரையாடல்)

பாரதிராஜா

கடந்த அறுபதாண்டுகளில் அமெரிக்காவில் வியட்நாம் போரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே அது எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. எடுத்துக்காட்டாக நம் ஊரில் எவ்வளவு பேசியிருக்கிறோம்? வியட்நாம் போர் பற்றிய எந்த முன் அறிவும் இல்லாதவர்களுக்கு இப்புதினம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். வியட்நாம் போர் பற்றி ஏற்கனவே நிறையப் படித்திருப்பவர்களுக்கும் இப்புதினம் புதியதொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்றுப் புனைவு எனும் வகைப்பாட்டில் கிறிஸ்டின் ஹனாவின் ‘தி விமன்’ (‘The Women’) தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. வரலாற்றுப் புதினம் என்றாலே சோழர் காலத்துக்குச் செல்லும் மொத்தமே 250 ஆண்டு கால வரலாறு கொண்டிருக்கும் அமெரிக்காவின் வகைப்பாடு இடிக்கத்தான் செய்யும். அதே வேளையில், வரலாறு என்றாலே அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருக்க வேண்டும் என்பதும் வீண் வழக்காடல்தானே! வியட்நாம் போரில் ஈடுபட்டு, ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனவர்கள் எனப்படும் ஒரு குழுவின் கண்களின் வழியே அந்தப் போரை நெருக்கமாக நமக்குக் கண் முன் கொண்டுவந்து கொடுக்கிறார் ஹனா. இன்றுவரை வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்கப் பெண்கள் பற்றிப் பெரிதும் பேசப்படுவதில்லை. 2024-இல் வெளியிடப்பட்ட இந்தப் புதினம், பெண்பாற் படைவீரர்களின் பங்களிப்புகளுக்கு உரிய ஓர் ஏற்பைப் பெற்றுத்தர முயல்கிறது. இதற்கு முன்பு, “தி நைட்டிங்கேல்” (‘The Nightingale’), “தி ஃபோர் விண்ட்ஸ்” (‘The Four Winds’) போன்ற உணர்ச்சிகரமான வரலாற்றுப் புதினங்களின் மூலம் புகழ்பெற்ற ஹனா, இப்போது ஆழமான தனிவாழ்வையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கலந்து பரிமாறும் இந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புதினம் “ஃபிராங்கி” என்று அழைக்கப்படும் பிரான்சிஸ் மெக்ராத் என்ற இளம் பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது. தென் கலிபோர்னியாவில் வாழ்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண், அமெரிக்கப் படையில் செவிலியராகச் சேர்ந்து வியட்நாமில் பணியாற்ற முடிவு செய்கிறாள். நாட்டுக்காகப் போரிடச் சென்று மாண்ட – மீண்ட ஆண்களின் படங்களைப் பெருமையாக மாட்டிவைத்துப் பெருமை கொள்ளும் தந்தைதான் எனினும், பெண்கள் போருக்குச் செல்லும் வழக்கம் இல்லாத அந்தக் காலத்தில் அப்படியொரு முடிவை அவள் எடுத்ததும், அவருக்கும் குடும்பத்துக்கும் அது ஒரு பேரிடியாக இறங்குகிறது. 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் தொடக்கத்திலும் அமைக்கப்பட்ட கதை, ஃபிராங்கியை அவளது வசதியான, பாதுகாப்பான வாழ்க்கையிலிருந்து பிடுங்கி, அவளை முற்றிலும் வேறொருத்தியாக மாற்றிப்போடும் – அதிர்ச்சிகரமான பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. இறுதியாக, நாடு திரும்பல், வீடு திரும்பல், உள – ஆன்மக்காயங்களிலிருந்து ஆறுதல் என்று பல்லாண்டு காலம் நீடிக்கும் போராட்டங்களோடு முடிகிறது. ஃபிராங்கியுடைய பயணத்தின் வழியாக, ஹனா போரைப் பற்றி மட்டுமல்ல, அதில் பணியாற்றிய பெண்கள் மீது அப்போர் ஏற்படுத்திய ஆழமான – கொடூரமான தாக்கத்தையும், திரும்பி வந்தபோது தாய்நாட்டில் அவர்கள் எதிர்கொண்ட இழிவையும் புறக்கணிப்பையும் விளக்குகிறார்.

இந்தப் புதினத்தின் சிறப்புகளில் ஒன்றாகப் படுவது, ஹனா கதையை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்க முடிவு செய்தது. அது நமக்குப் போரை மட்டுமல்ல, அதன் நீண்ட நிழலையும் காண வழி வகுக்கிறது. புதினம் 1966-இல் தொடங்குகிறது. ஃபிராங்கி தனது வழக்கமான வாழ்க்கையில் அதன் பொருளையும் நோக்கத்தையும் கண்டுபிடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய அண்ணன் ஃபின்லி வியட்நாமுக்கு அனுப்பப்பட்டு, அவன் கொல்லப்பட்ட செய்திதான் வருகிறது. உடல் கூடக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதன் பின்பு கடமையும் சாகச உணர்வும் ஃபிராங்கியையும் இழுக்கிறது. பெற்றோரின் பேரச்சத்தையும் சமூகத்தின் மறுப்பையும் மீறி, அவள் படைச் செவிலியர் பிரிவில் சேருகிறாள். கொள்கைவாதத்தாலும் தன் நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசையாலும் ஈர்க்கப்படுகிறாள். இப்படியாக, புதினத்தின் தொடக்கப் பகுதி ஃபிராங்கியை ஓரளவுக்கு உறுதியுடன் கூடிய கதாபாத்திரமாக நிறுவுகிறது. அதே நேரத்தில் அவளுக்காக அவளது வாழ்வில் நிகழக் காத்திருக்கும் கொடூரங்கள் பற்றிய அறிவில்லாத அவளது அப்பாவித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பிஞ்சு போருக்குப் போய் எப்படிப் பிய்ந்து வரப்போகிறதோ எனும் பதற்றம் நம்மை வதைத்துக்கொண்டேதான் இருக்கிறது.

புதினத்தின் முக்கியப் பகுதி வியட்நாமில் நடைபெறுகிறது. அங்கிருந்த போர் மருத்துவமனைதான் கதையின் முக்கியக் களம். ஹனாவின் நுணுக்கமான ஆய்வும் வலுவான நடையும் அந்த மருத்துவமனையின் குழப்பம் நிறைந்த சூழல், திகில், தீவிரம் ஆகியவற்றுக்கு உயிர் கொடுக்கின்றன. ஃபிராங்கி ஓர் அறுவை சிகிச்சைப் பிரிவில் அமர்த்தப்படுகிறாள். அங்கு காயமடைந்த வீரர்கள் அலை அலையாகக் கொண்டுவந்து குவிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் போர்க்களத்திலிருந்து நேரடியாகக் கொண்டுவந்து கொட்டப்படுகிற அவ்வீரர்களின் காயங்கள் சாவுக்காயங்கள். அல்லது, நடைபிணமாக்குபவை. குடிமை மருத்துவம் என்பது வேறு, போர் மருத்துவம் என்பது வேறு. இந்தப் புதினம் போர் மருத்துவத்தின் கொடூரமான உண்மைகளை நமக்குப் படம் போட்டுக் காட்டுகிறது. காயங்கள், குண்டுகள், கூர் துண்டுகளால் கிழிக்கப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற நடத்தப்படும் நம்பிக்கையற்ற முயற்சிகள், வாய்ப்பே இல்லாத மருத்துவ முன்னுரிமை முடிவுகள் (triage), செவிலியர்களின் உணர்ச்சிகளை உருக்குலைக்கும் வாழ்நாட் பாதிப்பு ஆகியவை பற்றிய ஹனாவின் விளக்கங்கள் உள்ளுளத் தீவிரத்துடன் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கிடையிலும் அங்கு நடைபெறும் நகைச்சுவை (அவல நகை), நட்பின் கடுமையான பிணைப்புகள், கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டிருந்த இப்பெண்களின் வாழ்வில் நிகழும் எதிர்பாராத அழகுப் பொழுதுகள் ஆகியவற்றையும் படம்பிடிக்கிறார்.

வியட்நாமில், ஃபிராங்கி மற்ற செவிலியர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்குகிறாள். குறிப்பாக பார்ப், ஈதெல் எனும் இரு பெண்களுடன் அவள் கொள்ளும் நட்பு அழகாக இருக்கிறது. ஆண்களின் நட்பு நமக்கு அடிக்கடி காட்டப்படுவதே. இது போன்ற சூழலில் இருக்கும் பெண்களின் நட்பு பற்றிப் படிப்பது வேறுபட்ட உணர்வு. பெண் வாசகர்களுக்கு இது மேலும் அழகாகவும் உணர்வுகரமாகவும் இருக்கும். கொடுமையான இப்போரின் நடுவில் அவர்கள் இருவரும் ஃபிராங்கியின் குடும்பமாகவே மாறிவிடுகிறார்கள். அமையும் குடும்பம் என்று ஒன்றென்றால் அமைத்துக்கொள்ளும் குடும்பம் என்றும் ஒன்று வைத்துக்கொள்ளலாந்தானே! இந்த உறவுகள் புதினத்தின் மிக உருக்கமான சில பொழுதுகளை நமக்கு வழங்குகின்றன. இப்பெண்கள் உடற் சோர்வு, உணர்வதிர்ச்சி, அறக்காயம் ஆகியவற்றின் போது ஒருவரையொருவர் தாங்கி நிற்கிறார்கள். ஹனா பெண்களுக்கு இடையிலான இந்நட்பைக் காட்சிப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார். இந்தப் பிணைப்புகள் அப்பெண்கள் தொடர்ந்து வாழ்வின் மீது பிடிப்பு கொண்டு தாக்குப்பிடிக்க எவ்வாறு உதவின என்பதைக் காட்டுகிறார். பெண்கள் ஒன்றாகக் குடிக்கிறார்கள், ஒன்றாக அழுகிறார்கள், அவர்களின் இழப்புகள் தனியாக நின்று தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும்போது ஒருவரையொருவர் பற்றிப் பிடித்துக்கொள்கிறார்கள். தாங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கே உரிய ஒருவித அவல நகையையும் சமாளிப்பு வழிமுறைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆண் வீரர்கள் இவர்கள் மீது வெறுப்பைக் கொட்டுகிறார்கள், இவர்களைச் உடனொத்த தொண்டூழியர்களாகப் பார்க்காமல் பாலியற் பொருள்களாகப் பார்க்கிறார்கள். இப்படி ஆண் படைவீரர்களால் அடிக்கடி இழிக்கப்படும் போதும் துன்புறுத்தப்படும் போதும் இவர்கள் ஒருவரையொருவர் அரணாக நின்று பாதுகாக்கிறார்கள்.

போர்க் களத்தின் சிக்கலான காதலையும் பாலியல் இயங்கியலையும் ஹனா விட்டுவிடவில்லை. ஃபிராங்கி ஓர் அறுவை சிகிச்சை வல்லுநரைக் காதலிக்கிறாள். அவர்களின் உறவே தொடர்ச்சியான சாவுகளுக்கு நடுவிலும் நிச்சயமற்ற தன்மையின் பின்னணியிலும் வளர்கிறது. இக்காதற் காட்சிகள் தேவையற்றவையாகவோ கதையிலிருந்து விலகிச் செல்பவையாகவோ இல்லை. மாறாக, கோரத்தின் பிடியிலும் மனிதர்கள், சமூக விலங்குகள்,  எவ்வாறு தொடர்பையும் ஆறுதலையும் தேடினார்கள் என்பதைக் காட்டுகின்றன. போர்க்கால உறவுகள் இப்படி நிகழும் அந்த வேளையில் முழுமையாக ஆட்கொண்ட போதும் பிற்காலத்தில் தொடர முடியாதவை ஆகிவிடுகின்றன என்பதையும் காட்டுகின்றன.

புதினத்தின் மிகப்பெரிய வலிமைகளில் ஒன்று போரின் அறச்சிக்கலை விளக்குவது. ஃபிராங்கியும் அவளது உடனொத்த செவிலியர்களும் தாம் ஓர் உன்னத நோக்கத்திற்காகத் தொண்டாற்றுகிறோம், உயிர்களைக் காக்கிறோம், தம் நாட்டைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று நம்புகிறார்கள். ஆனால் போர் இழுத்துக்கொண்டே போகும் போது – உயிரிழப்புகள் கூடும் போது, இதற்கு முன்பும் அடிபட்டு ஆறியும் ஆறாமலும் போருக்குத் திரும்பிய அதே இளைஞர்கள் அவர்களின் இரண்டாவது – மூன்றாவது சுற்றுகளில் மீண்டும் காயங்களுடன் திரும்புவதைப் பார்க்கும்போது, நாட்டில் எதிர்ப்புகள் கூடும் போது, போருக்கான அரசியல் நியாயங்கள் சரியும்போது, அவர்களின் உள உறுதியும் சரிகிறது. ஹனா பணியாற்றியவர்களின் உண்மையான தைரியத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தாமலே இந்தப் படிப்படியான ஏமாற்றத்தைப் படம்பிடிக்கிறார். எதற்காக அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை தடுமாறினாலும் செவிலியர்கள் தங்கள் வேலைகளை அர்ப்பணிப்போடும் இரக்கத்துடனும் தொடர்கின்றனர். ஏனென்றால், அவர்கள் முன்பு காயப்பட்டுக் கிடக்கும் ஆண்கள் அனைவருமே அவர்களை அங்கு அனுப்பிய அரசியலைப் பொருட்படுத்தாமல் தம்மை அர்ப்பணித்திருப்பவர்கள். ஆகவே, தம் முழு ஈடுபாட்டோடு கூடிய முயற்சிகளுக்குத் தகுதியானவர்கள் அவர்கள் என்று நம்புகிறார்கள்.

போர் என்று வந்துவிட்டால் அதில் ஈடுபடும் எல்லா நாடுகளுமே தேசியவாதத்தால் பீடிக்கப்படும் என்பதே நாம் அறிந்தது. அமெரிக்காவில் அப்படி இருக்கவில்லை என்பது, பலர் அடிக்கடிச் சொல்வது போல அமெரிக்கா எனும் நாட்டின் அரசு அதன் மக்களை அப்படியே நிகரளிப்பதல்ல என்பதை நம்பவைக்கிறது. மக்கள் பக்கமிருந்து வியட்நாமை நசுக்கி அழிக்க வேண்டும் என்ற குரல் வருவதைக் கேட்கவே முடிவதில்லை. வியட்நாமில் போய் இப்படிக் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கிறார்களே என்ற சினந்தான் வெளிப்படுகிறது. இது ஒருவகையில் முதிர்ந்த மக்களாட்சியின் அடையாளம் என்றுதான் படுகிறது. ஈடுபட்ட இரு நாடுகளுமே தன்னைப் பாதிக்கப்பட்டவர்களாக நம்பும் போதோ உணரும் போதோ நம்பவைக்கப் படும் போதோ தோன்றுவது வேறு. ஒரு நாடு தாம் செய்வது தவறு என்று முழுமையாக நம்பும் போது தோன்றுவது வேறு. அமெரிக்கர்கள் தவறு தம்முடையதே என்று நம்புகிறார்கள். அந்த வரலாற்று நேர்மையையும் இந்தப் புதினம் பதிந்து வைத்திருக்கிறது.   

புதினத்தின் மூன்றாம் பகுதி அதன் மிக வலுவான பகுதி என்பது மட்டுமில்லை. பெரிதும் இன்றியமையாததாகவும் இருக்கிறது. ஃபிராங்கி 1970-இல் தாய்நாடு திரும்பும்போது, தன் மக்களிடமிருந்து நன்றியையும் ஈர்ப்பையும் – குறைந்தது புரிதலையேனும் – எதிர்பார்க்கிறாள். மாறாக, காரித் துப்பி “குழந்தைக் கொல்லி” என்று அழைக்கும் போர் எதிர்ப்பாளர்களின் பகையையும், போரை மறக்க விரும்பும் சமூகத்தின் அக்கறையின்மையையும், போர்க்களத்தில் பெண்கள் பணியாற்றினார்கள் என்பதையே ஒப்புக்கொள்ளாத முன்னாள் படைவீரர் அமைப்பின் பாராமுகத்தையும் சந்திக்கிறாள். வியட்நாம் படைவீரர்கள் அனைவருமே ஆண்கள் என்ற கருதல், ஃபிராங்கியின் தொண்டைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறது – தடம் தெரியாமல் அழிக்கப் பார்க்கிறது. “படைவீரர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தாயா?” என்று கேட்கிறார்கள். படைவீரர்களுக்கான உதவிகளை அணுக முயலும்போது, அவள் திருப்பி அனுப்பப்படுகிறாள். அவள் பட்ட பாட்டையும் கண்ட காட்சிகளையும் புரிந்துகொள்ளும் எவரையும் காண முடியாமல் தவிப்பாள்.

புதினத்தின் இந்தப் பகுதி ஃபிராங்கியின் பேரதிர்ச்சிக்குப் பிந்தைய உள உளைச்சல் (PTSD) நோய், போதைப் பழக்கம், பரிதவிப்பு ஆகியவற்றில் அவள் சுழலுவதைக் காட்டி நம் உளத்தை நொறுக்கிறது. உள அதிர்ச்சி கண்டுகொள்ளப்படாமல் – ஆற்றப்படாமல் விடப்படும் போது எப்படிப் பன்மடங்காகிறது, கண்டுகொள்ளாமை எப்படி அதற்கே உரிய ஒரு காயத்தின் வடிவமாக மாறுகிறது என்பதை ஹனா காட்டுகிறார். ஃபிராங்கி வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள, உறவுகளைப் பேண, குடிமை வாழ்வில் செயல்பட என்று ஒவ்வொன்றுக்கும் போராடுகிறாள். அவளுக்கு இரவெல்லாம் கொடுங்கனவுகளும் பகலில் கொடும் நினைவுகளும் வந்துகொண்டே இருக்கின்றன. மதுவாலும் போதை மருந்துகளாலும் தன்னை மரத்துப்போகச் செய்கிறாள். அவளுக்கு உதவ முயற்சிப்பவர்களை அவர்களால் தன்னைப் புரிந்துகொள்ள முடியாது என்றெண்ணி நெருங்க விடாமல் தள்ளிவிடுகிறாள். அவள் வியட்நாமிலிருந்து திரும்பியதற்குப் பிந்தைய பல பத்தாண்டுகள் வீடின்மை, உடைந்த உறவுகள், ஆழமான தனிமை ஆகியவற்றாலேயே நிறைந்திருக்கின்றன.

அவளைப் போன்ற மற்ற பெண் படைவீரர்களுடன் மீண்டும் இணைவதே ஃபிராங்கியை இறுதியில் காப்பாற்றுகிறது. புதினத்தின் மிக உருக்கமான காட்சிகளில் ஒன்றில், வியட்நாமில் பணியாற்றிய பெண்களின் கூட்டத்தில் அவள் கலந்துகொள்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக, அவள் தன் வாழ்வைப் புரிந்துகொள்ளும் மனிதர்களுடன் இருப்பதாக உணர்கிறாள். அவர்களுக்கு எதையுமே அவள் விளக்க வேண்டியதில்லை. கவனிக்கப்படாமல், மறுதலிக்கப்பட்டு, மறக்கப்பட்ட தங்களின் கதைகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒன்றிணைந்து, அவர்கள் தங்கள் வரலாற்றை மீட்டெடுக்கவும் ஏற்பு கோரவும் தொடங்குகிறார்கள். ஹனா இந்தப் பகுதியை உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். வியட்நாம் படைவீரர்கள் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டு, கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, பெண் படைவீரர்களின் பல்லாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, 1993-இல் நிகழ்ந்த வியட்நாம் பெண்கள் நினைவுச்சின்னத் திறப்பு நிகழ்ச்சி அப்படியான ஒரு நிகழ்வு.

“தி விமன்” எனும் புதினத்தின் தலைப்பு எளிமையானது, ஆழமானது. இந்நூல் வரலாற்றில் வியட்நாம் போரில் பணியாற்றிய சுமார் 2,65,000 பெண்களுக்கான இடத்தை மீட்டெடுக்கிறது. இதில் வியட்நாமிலேயே சென்று பணியாற்றியவர்கள் சுமார் 11,000 பேர். அவர்களில் பெரும்பாலோர் செவிலியர்கள். நீண்ட காலமாக, அமெரிக்கர்களுக்கு வியட்நாம் படைவீரர் என்றாலே நினைவில் வரும் படம் ஓர் ஆணின் படமாக இருந்தது. போரின் கதைகள் அனைத்துமே ஆண்பாற் கதைகளை மையமாகக் கொண்டு இருந்தன. ஹனாவின் இந்தப் புதினம், இப்பெண்களின் கதைகள் முக்கியம், அவர்களின் தொண்டு உண்மையானது, அவர்கள் அடைந்த வாழ்நாள் அதிர்ச்சியும் உள அழுத்தமும் உண்மையானவை, போரின் கூட்டு நினைவகத்திலிருந்து அவர்களை விலக்குவது ஒரு பெரும் அநீதியை நிகரளிக்கிறது என்று வலியுறுத்துகிறது.

நூல் முழுவதும் ஹனாவின் உரைநடை வலுவானதாகவும் எளிதில் வாசிக்கக்கூடியதாகவும் உள்ளது. நெருக்கமான உணர்ச்சிகரமான தனிமனிதப் பொழுதுகள், பரந்த வரலாற்று நிகழ்வுகள் இரண்டையும் பின்னி வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. வியட்நாம் போர்ச் செவிலியர்களின் வாய்வழி வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், போர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தெளிவான – விரிவான ஆய்வு செய்துள்ளார். மருத்துவ நடைமுறைகள் முதல் பின்னணியில் ஒலிக்கும் இசை, நாட்டைப் பிரிக்கும் அரசியற் சொற்போர்கள் வரை குறிப்புகள் அனைத்தும் உண்மையானவையாகவே படுகின்றன. ஆனாலும் ஆய்வு கதையை விழுங்கும் வேலையைச் செய்யவில்லை; ஹனா தனது அறிவை மூக்கணாங்கயிறு கட்டியே காட்டிக்கொள்கிறார். ஃபிராங்கியின் கதையில் அதைத் துருத்தாமல் ஒருங்கிணைப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஃபிராங்கி என்ற கதாபாத்திரமே சிக்கலானது. ஃபிராங்கி அத்தனை சிக்கல்களோடும் அப்படியே முழுமையாக நமக்குக் காட்டப்பட்டுள்ளாள். அவள் எப்போதும் விரும்பத்தக்க விதத்தில் நடந்து கொள்பவள் அல்லள். குறிப்பாக புதினத்தின் பிற்பகுதியில் உள அதிர்ச்சி அவளைக் கடுமையாக்கி தன்னழிவுப் பாதைகளில் தள்ளும். ஆனால் அவள் எப்போதும் புரிந்துகொள்ளத்தக்கவள். எப்போதும் மனிதியாகத்தான் இருக்கிறாள். ஹனா அவளின் பரிணாமத்தை அப்பாவி இளம் பெண்ணிலிருந்து தொடங்கி, பின்னர் கடுமைப்பட்ட படைப்பெண்ணாகவும், இறுதியாக வாழ்ந்து காட்டிவிட்ட ஒரு பெண்ணாகவும் போராளியாகவும் கண்டு காட்டியிருக்கிறார். ஃபிராங்கி தவறுகள் செய்கிறாள், மனிதர்களைக் காயப்படுத்துகிறாள், மீண்டெழப் போராடுகிறாள், ஆனால் அவளுடைய பயணம் மிகத் தூய்மையானதாகவோ மிகைப்படுத்தப்பட்ட மீட்சிக் கதையாகவோ இல்லாமல் உண்மையானதாகப் படுகிறது. எளிய விடைகள் கொடுத்தல், சட்டென மீண்டெழுதல் போன்ற பொறிகளில் விழவில்லை ஹனா.

மற்ற கதாபாத்திரங்களும் நன்றாகவே அமைக்கப்பட்டுள்ளன. வியட்நாமில் ஃபிராங்கியின் மிக நெருங்கிய தோழியாக மாறும் பார்ப், கடுமையானவளாகவும் அனுபவமுள்ள செவிலியாகவும் இருக்கிறாள். அவள் வேறொரு வகையான வலிமையையும் வாழ்நாள் அதிர்ச்சியை எப்படிக் கையாள்வது என்பதில் வேறொரு விதமான அணுகுமுறையையும் அடையாளப்படுத்துகிறாள். ஈதெல், தனது அமைதியான இறை நம்பிக்கையோடும் நிலையான தன்மையோடும், வேறொரு விதத்தில் தன் அதிர்ச்சியைக் கையாள்கிறாள். தன் மகளின் முடிவுகளையோ துன்பத்தையோ புரிந்து கொள்ள முடியாத ஃபிராங்கியின் குடும்பம், அடிபட்டு வீடு திரும்பும் படைவீரர்களின் வாழ்வைப் பெரிதும் கடினமாக்கிய தலைமுறையையும் பண்பாட்டுப் பிளவுகளையும் அடையாளப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரங்கள் கூட தெளிவான காரணத்துக்காகப் படைக்கப்பட்டவையாகவும் உண்மையானவையாகவும் படுகின்றன. வெறுமனே வந்து செல்பவையாக இல்லாமல்.

புதினத்தில் பேரதிர்ச்சிக்குப் பிந்தைய உள உளைச்சல் (PTSD) நோய், வாழ்நாள் அதிர்ச்சி (trauma) ஆகியவை பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஹனா போர் அதிர்ச்சியின் நீண்ட கால விளைவுகளை உணர்திறனுடனும் துல்லியத்துடனும் விவரிக்கிறார். இவற்றைக் கிளறிய நிகழ்வுகள் நடந்து பல ஆண்டுகள் கழித்தும் அந்த அதிர்ச்சி எவ்வாறு வெளிப்படும், அது உறவுகளையும் அன்றாடச் செயல்பாட்டையும் எவ்வாறு பாதிக்கும், குறிப்பாகச் சரியான ஆதரவும் ஏற்பும் இல்லாவிட்டால் பண்டுவம் செய்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பனவற்றை நன்றாகக் காட்டியுள்ளார். பெண் படைவீரர்களின் உள அழுத்தமும் மீட்பு அனுபவங்களும் எப்படி ஆண் படைவீரர்களின் அழுத்தத்தையும் மீட்பு அனுபவங்களையும் விட வேறுபட்டவை என்பதை நன்றாகக் காட்டுகிறார். பெண் படைவீரர்களுக்கு போர் தொடர்பான உள அழுத்தம் மட்டுமின்றி, போர் பற்றிய கதைகளில் தம் பங்களிப்பே அழிக்கப்பட்டுவிடும் எனும் அழுத்தமும் சேர்ந்து வதைத்தது. 

“தி விமன்”, அமெரிக்கக் கருத்தாடல்களில், போரில் பெண்களை ஈடுபடுத்துவது, படைகளில் இருக்கும் பாலியற் தொல்லை, முன்னாள் வீரர்களின் மருத்துவம் போன்றவை பற்றிய உரையாடல்கள் முக்கிய இடம் பெற்றிருக்கும் ஒரு பொழுதில் வருகிறது. புதினம் சரியான நேரத்தில் வந்திருக்கிறது. காலத்தால் அழியாததாகவும் படுகிறது. தற்போதைய விவாதங்களுக்குத் தீனி போடும் அதே வேளையில் ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. வியட்நாம் பெண்கள் நினைவுச்சின்னத்தைப் பற்றி அறிந்த போது, அந்தப் போரில் பெண்களின் தொண்டைப் பற்றி எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்த போது, இந்த நூலை எழுத வேண்டும் என்று உந்துதல் பெற்றதாக ஹனா நேர்காணல்களில் கூறியுள்ளார். அவரின் அன்பாலும் இந்தப் பெண்களின் கதைகள் மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நியாய உணர்வாலும் தூண்டப்பட்டுப் போட்ட உழைப்பின் குழந்தையே இப்புதினம் எனலாம். 

எதை நினைவில் வைத்திருக்க வேண்டும், எதை மறக்க வேண்டும் என்பதும் சரி; எவரைக் கொண்டாட வேண்டும், எவரைக் கண்டுகொள்ளாமல் விட வேண்டும் என்பதும் சரி; இவை இரண்டுமே ஒரு சமூகத்தின் மனச்சான்றின் முன் நிறுத்தப்பட்டுக் கேள்வி கேட்கப்பட வேண்டியவையே. அதை இந்த நூல் செய்கிறது. அதைச் செய்யாமல் விடும் போது, அதனால் அந்தச் சமூகத்துக்கு என்ன இழப்புகள் ஏற்படும் என்பதும் சிந்திக்கப்பட வேண்டியது – பேசப்பட வேண்டியது. புதினத்தில் வரும் பெண் படைவீரர்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய அரசின் நன்மைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் மட்டும் போராடவில்லை. அவையும் முக்கியந்தான். ஆனால் அதற்கும் மேலாக, அவர்கள் களத்தில் இருந்தார்கள், தொண்டாற்றினார்கள், அவர்கள் பட்டவை அனைத்தும் உண்மை, அவற்றை நினைவில் வைத்திருப்பது இன்றியமையாதது என்ற எளிய ஏற்புக்காகவும் போராடுகிறார்கள்.

நிறைவாக, “தி விமன்” பல தளங்களில் வெற்றி பெறுகிறது. இது ஒரு விறுவிறுப்பான, உணர்ச்சிகரமான, உள்ளத்தைத் தொடும் புதினம். வரலாற்றுப் புனைகதை வாசகர்களுக்குப் பெரிதும் பிடிக்கும். இது, ஒதுக்கித் தள்ளப்பட்ட – புறக்கணிக்கப்பட்ட கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வரலாற்று மீட்பின் ஒரு முக்கியப் பணியாகவும் உள்ளது. தனியாகவும் குழுவாகவும் அவர்கள் பட்ட வாழ்நாள் அதிர்ச்சி, மீள்திறன், ஆறி மீளத் தேவைப்படும் நீண்ட பொறுமை ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்கிறது.

போரின் வழியாக ஏற்படும் உளக் காயங்கள் ஒரு காலத்திலும் முழுமையாக ஆற்றப்பட முடியாது என்பதையும் இழைக்கப்பட்ட எந்த அநீதியையும் ஒரு காலத்திலும் முழுமையாகச் சரி செய்துவிட  முடியாது என்பதையும் ஹனா நமக்கு நேர்மையாகச் சொல்லிவிடுகிறார். அவ்வளவெல்லாம் வேண்டாம், குறைந்தது செய்த பணிக்கான ஏற்பும் சமூகத்தில் ஒன்று கலக்க உதவியும் அவ்வளவையும் பட்ட பின்பு வாழ்வதற்கு ஒரு நோக்கத்தையும் பெற்றுவிட்டால் போதும் என்கிறார்.

“தி விமன்” வியட்நாம் போரில் – பெண்களின் வரலாற்றிலும் அமெரிக்கப் படைவீரர்களின் தொடர்ச்சியான போராட்டங்களிலும் ஆர்வமுள்ள எவருக்கும் தேவையான வாசிப்பு. மறந்துபோன வரலாறுகளை மீட்டெடுக்கவும், தொண்டு செய்து ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவர்களை மதிக்கவும் – அவர்களுக்கான மதிப்பைப் பெற்றுத் தரவும் ஒரு புனைகதை என்ன செய்துவிட முடியும் என்ற வினாவுக்கு விடையும் கூட. கிறிஸ்டின் ஹனா, விறுவிறுப்பான, பொழுதுபோக்குக்கும் உகந்த, போராளிகளுக்காகப் போராடுகிற, தனிமனித – கூட்டு வரலாற்றை நினைவுக் குறிப்பாக்கும் ஒரு சிறந்த புதினத்தைப் படைத்து அளித்துள்ளார். திரைப்படமாகும் அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதையும் எதிர்பார்க்கலாம். இது, “போர் அது தொடும் அனைவரையும் பாதிக்கும்”, “வீரத்துக்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன”, “ஏற்பும் நினைவும் ஆடம்பரங்கள் அல்ல, அறத்தேவைகள்” போன்ற கருத்துக்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. வியட்நாமில் பணியாற்றிய அமெரிக்கப் பெண்களுக்குக் குரல் கொடுப்பதன் மூலம், அந்தப் போரையும் அதன் நீடித்த பாதிப்புகளையும் பற்றிய நம் புரிதலுக்கு ஹனா ஓர் அரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here