Homeஇதழ்கள்2026 இதழ்கள்நிறைவேறாத காதல் அனுபவம்

நிறைவேறாத காதல் அனுபவம்

ம.சோனியா

நவீன சிறுகதைகளின் மிக முக்கியமானப் புலப்பாட்டுத் தன்மைகளுள் ஒன்று அவை மனிதனின் அகஉலகைப் பிரதிபலித்து நிற்பன. மரபு வழிக் கதைகள் முதலியன வெளிப்புறச் செயல்களை மையப்படுத்தி நிற்கும் தன்மையில், நவீன சிறுகதைகள் தாம் மனிதனின் நினைவு, ஆசை, குற்றவுணர்வு, பயம், தனிமை, ஏமாற்றம், ஒரு தலைக் காதல், தற்கொலையுணர்வு முதலிய உள்மனச் சிக்கல்களைப் பிராதானமானப் பாடுபொருளாகக் கொண்டுப் படைக்கப்படுகின்றன. அந்த வகையில் உளவியல் கோணத்தில் பாத்திரங்களின் அகஉலகை ஆராய்ந்திருக்கக்கூடிய கதைத்தொகுப்பு தான் எழுத்தாளர் சார்மினோ டாலியின் ‘பட்சாத்தா -ஒரு நாடோடிப் பாணனின் இசைக்குறிப்புகள்’. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் வழியாகப் புலப்படும் நுட்பான உளவியல் கூறுகளின் தன்மைகளைப் பாத்திரங்களின் மொழியாடல் வழியே நேரடித்தன்மையில் புனைவாசிரியர் புலப்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர் சார்பினோ டாலி தமிழில் எழுதி வருகின்ற சமகால புலம்பெயர் எழுத்தாளர். அந்நிலத்தின் சொல்லாடல்களுடன் புதுமையான கண்ணோட்டத்துடன் கதையை அணுகக்கூடியவர். இத்தாக்கத்தை ‘பட்சாத்தா-ஒரு நாடோடிப் பாணனின் இசைக்குறிப்புகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளின் வழியாகவும் யூகித்துக் கொள்ள முடிகிறது. மேலும் இலக்கியச் சிற்றிதழ்களிலும் பல்வேறு சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். இவருடைய முதல் சிறுகதையான ‘அந்துப்பூச்சி’ 2022 -இல் சொல்வனம் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இக்கதைதான் இத்தொகுப்பிலும் முதல் சிறுகதையாக அமைந்திருக்கிறது.

இச்சிறுகதைத் தொகுப்பானது ஏழு சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. கதையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் தாத்தாவின் நினைவலைகளைக் கொண்டுப் பின்னப்பட்டிருக்கும் கதை‘அந்துப்பூச்சி’. இது தவிர ‘அனந்தபத்மன்’, தொடர்பிற்கு வெளியே’, ‘ஜூலி’, ‘கப்பை’ முதலிய கதைகளும் முக்கியமானவையாக இடம்பெற்றிருக்கின்றன. ‘பட்சாத்தா- ஒரு நாடோடிப் பாணனின் இசைக்குறிப்புகள்’ மாறுபட்ட கோணத்தில் அணுகப்பட்டிருக்கும் கதையாகும். ஒரு குறுநாவல் தன்மையில் இக்கதையை பிரதியாசிரியர் படைத்திருக்கிறார். 

மனிதனின் அகஉலகைக் கட்டமைப்பதில் நினைவலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய கடந்த காலத்து நிகழ்வுகள், உறவுகள், இன்பம், துன்பம், இழப்பு, அவமானம், வெற்றி, தோல்வி முதலிய அனுபவங்களின் நினைவுகள் மனித மனத்தில் சேகரமாகின்றன. இருப்பினும் அவை கடந்தகாலப் பதிவுகளாய் மட்டும் நில்லாமல், நிகழ்கால வாழ்வியலிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. இவ்வாறு அந்துப்பூச்சியாய் சுற்றியலையும் தாத்தாவின் நினைவலைகளுக்குள் ஊடாடுகின்ற அருணின் மனமாறாட்டங்களை எடுத்துக் காட்டக்கூடியக் கதைதான் ‘அந்துப்பூச்சி’. இக்கதையில் காட்டப்பட்டிருக்கும் நினைவுச்சரடானது முடிவு வரையிலும் நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கிறது. இடையில் காட்டப்பட்டிருக்கும் ஊழியர்களின் வேலை நிறுத்தம், கையற்று நிற்கும் சூழல், மனவுணர்வுகளைக் கட்டுபடுத்த முடியாமல் தத்தளிக்கும் பதைபதைப்பு, சாமர்த்தியமாக கடந்து போதல் என வெவ்வேறு மனவுணர்வுள்ள மனிதர்களை உலவவிட்டுள்ளார். மேலும் அந்துப்பூச்சியாக அலையும் தாத்தாவை வழிபடுகின்ற அருண் அம்மாவின் மனஉலகை விசித்திரமான முறையில் காட்சிப்படுத்துகிறார். இதனூடே வைத்து வாசிக்கப்பட வேண்டிய கதையாக ‘தொடர்பிற்கு வெளியே’ என்னும் கதை அமைந்திருக்கிறது. இக்கதையில் மாமாவின் நினைவலைகளின் தோற்றுவாயாக முகிழும் கனவைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. தொடக்கத்தில் காட்டப்பட்டுள்ள மாமா குறித்த நினைவானது முடிவில் அம்மா வழியே வந்து ஒன்றிப்போதலின் மூலம் கதையானது ஓர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இதற்கிடையே காட்டப்பட்டுள்ள மாமாவின் நினைவுகள் குறித்த பதிவுகள், சாதியத் திருமணத்தால் உண்டாகின்ற மனக்கசப்புகள், அத்தையின் தற்கொலையுணர்வு, தூரமாகிப் போகும் உறவுகள் முதலிய சூழல்களையும் வலியுடன் கடத்திச் செல்கிறார் புனைவாசிரியர்.

‘அனந்த பத்மன்’ என்னும் கதையானது பாம்புச் சுழல்களுக்குள் புனையப்பட்டுள்ள சுவாரசியமான கதையாகும். இருவேறுப்பட்ட குடும்பங்களின் மாறுபட்ட மனநிலைப் பதிவாக இக்கதை அமைந்திருக்கிறது. பாம்பை கொல்வதிலிருந்து நகர்ந்திருக்கும் கதை பல குழப்பங்களுடன் ஒரு முடிவை அடைந்திருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மைக் கதைகளின் தொடக்கமும் முடிவும் ஓர் ஒருமைப்பாட்டுத் தன்மையைப் பெற்று நகர்ந்திருக்கின்றன. மனிதனின் உளவியல் இயக்கத்தைப் புரிந்துகொள்ளலில் கனவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. தூக்கத்தின் போது தோன்றும் காட்சிகள், நிகழ்வுகள், மனிதர்களின் உரையாடல்கள், அச்சங்கள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றின் தொகுப்பாக கனவு அமைகின்றது. உளவியல் அடிப்படையில் கனவு என்பது கற்பனைக் காட்சியல்ல. மாறாக நனவு, நனவிலி விருப்பங்கள், நினைவுகள், உள் முரண்பாடுகளுடன் தொடர்புடையது. இக்கருத்துநிலையை இக்கதையில் காட்டப்பட்டுள்ள அனு பாத்திரத்தின் வழியே நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். 

உயிர்க்கருணையைக் காட்டக்கூடியக் கதையாக ‘ஜூலி’ என்னும் கதை அமைந்திருக்கிறது. சக மனிதனாக உலவும் பெண் நாயான ஜூலியின் வலியுணர்வை புடம்போடுகிறது இக்கதை. “அவ்வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் நுண்நடத்தைகளும் ஜூலிக்கு அத்துப்படி. ஒவ்வொருவரையும் ஜூலிதான் அகத்தால் உணர்ந்து பரிபூரணமாக நேசித்தாள். அவர்கள் மனித நிலையில் நின்று கொண்டு செய்யும் சில செயல்கள் தனக்குச் சில நேரங்களில் துன்பம் அளித்திருந்தாலும் அவர்கள் மீதிருந்த அன்பை இன்பக் கனவுகளின் நினைவுகளில் மீட்டெடுத்துப் புதுப்பித்தப்படியே இருந்தாள்”.இவ்வாறு புனைவாசிரியர் எடுத்துக்காட்டுவதிலிருந்து ஜூலியின் இறுதிவரை மாறாப் பாச உணர்வின் வெளிப்பாட்டுத் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. குரூரம் கொண்ட மனித எண்ணத் திரைகளை எஜமான் பாத்திரத்தின் ஊடே விலக்கிக் காட்டியிருக்கிறார். இக்கதையில் நுட்பமாக கடத்தப்பட்டுள்ள ஜூலியின் வலி மிகுந்த காட்சிகள் மனதை அழுந்தச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன. 

‘கப்பை’ என்னும் கதையானது விட்டேற்றியாகத் திரியும் ஒருவனின் மனவலிகளை கடத்துவனவாய் அமைந்திருக்கிறது. வேலையின்மையால் மாறும் அப்பாவின் மனநிலை, அம்மாவின் ஆறுதல் மொழிகள், நண்பர்களின் முன் கையற்று நிற்கும்நிலை குலைவான சூழல்களை ”யாரையும் வீட்டில் அழைப்பதோ அவர்கள் வீட்டிற்குச் செல்வதோ எனக்கு அறவே பிடிக்காத செயல்.பழக்கத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவாறு எடைப்போட்டுத் தொடர்வது, பிறகு அதே நபரின் பின்புலம் வசதி குறித்தறிந்து பின் நடத்தையில் ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துபவர்களின் ஆபாசத்தில் அறுவறுப்படைந்து, சிலரை விட்டு விலகியுமிருக்கிறேன்”, என்ற வரிகளினூடே யூகித்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு வாழ்வின் சரிவுகளையும் பின் அவை அனைத்திற்கும் காரணமான பசியினால் மனிதமனம் படுகின்ற அல்லற்பாடுகளையும் பதிவுசெய்துள்ளார். 

இத்தொகுப்பின் மிக சுவாரசியமான வலியுணர்வுடன் புனையப்பட்டுள்ள காதல் கதைதான் பட்சாத்தா- ஒரு நாடோடிப் பாணனின் இசைக்குறிப்புகள் என்னும் நீள்கதை. இக்கதையை வாசிக்கும்போது ஒரு மேலைநாட்டுப் பாணியிலமைந்த கதைகளை வாசிக்கும் உணர்வை அளிப்பனவாய் இருக்கின்றன. தெரிபா சந்தனின் உணர்வுப்பூர்வமான காதல் உடல்மொழிகளால் இக்கதையானது செய்நேர்த்தியைப் பெற்று நகர்ந்திருக்கிறது. இடையிடையே அம்மொழியாடலில் அமைந்துள்ள வலி நிறைந்த பாடல் வரிகள் கதைக்கு மேலும் ஊட்டம் அளித்திருக்கின்றன. பழைய காதலின் நினைவுகளின் பாதையில் புதிய காதலைப் பயணப்படச் செய்யும் இரு உயிர்களின் ஓவியங்களையும் வரைபடமாகப் புனைவாசிரியர் தீட்டியுள்ளார். பிரிவில் ஏற்பட்ட மனவேதனையை மறந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து, உடல் ரீதியான நெருக்கத்தின் ஊடே அந்தத் தவிப்பைத் தகித்துக்கொள்ளும் உணர்வு நிலையை படம்பிடித்துக்காட்டியுள்ளார். மேலும் உளவியலில் சுட்டப்படும் ‘மாற்றீடு’ என்பது தனிமனிதனால் நேரடியாக வெளிப்படுத்த முடியாத ஆசை, உணர்வு, உந்துதல் ஆகியவை அதற்கு பதிலான வேறொரு பொருள்,நபர் அல்லது செயல்பாட்டின் மீது திருப்பப்பட்டு வெளிப்படும் செயல்முறையாகும் .இம்முறையை தெரிபா,சந்தன் இருவரின் மனமாறுதல்களின் மூலம் நுண்ணிதின் வெளிப்படுத்துகிறார். இறுதியில் ஓர் நிறைவேறாத காதல் அனுபவத்தைப் பேசி நிற்பதாகவே இக்கதை முடிந்திருக்கிறது. தெரிபாவுடைய முன்னோர்களின் வரலாறு, இந்தியனான சந்தனின் மனவுணர்வு, தெரிபாவின் குடும்பப் பின்னணி, முறியும் உறவின் நிலைப்பாடுகள் என நகரும் சூழல்களைக் கச்சிதமாக வடித்து தந்துள்ளதன் மூலம் ஒரு குறுநாவல் போன்ற உணர்வினையும் கடத்திச்செல்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு கதைகளும் நினைவலைகளின் மீட்டெடுப்பிலிருந்து அணுகியிருக்கும் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றன. கதைகளில் காணப்படும் அந்நிலத்திற்குரிய மொழியாடல்கள் தனித்துவம் கொண்டவையாக விளங்குகின்றன. ஒவ்வொரு கதைகளிலும் வெளிப்படும் பாத்திரங்களின் உளவியல் கூறுகள் நுண்ணிதின் ஆராயப்பட்டுள்ளன. சில கதைகள் தீவிரமான ஒர் உணர்வுநிலையையும் கடத்தி நிற்பனவாயும் அமைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பட்சாத்தா – ஒரு நாடோடிப் பாணனின் இசைக்குறிப்புகள் கதைத் தொகுப்பானது வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிப்பனவாய் இருக்கக்கூடும். 

***

ம.சோனியா: சென்னை மாநிலக்கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக பயின்று வருகிறார்.‘சு.வேணுகோபால் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்’ என்னும் பொருண்மையின் கீழ் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இந்து – தமிழ் திசை, காலச்சுவடு, உங்கள் நூலகம் முதலிய இதழ்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியும் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: msoniya118@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here