சி. சரவணகார்த்திகேயன்
காந்தி ஓர் இந்துதானே! அதிலென்ன குழப்பம்? இதென்ன கேள்வி எனத் தோன்றலாம்.
காந்தியின் மதம் பற்றிய குழப்பம் விளைவிப்பதல்ல நம் இலக்கு. ஒரு மனிதனின் மதம் என்ன என்ற கேள்விக்கு மூன்று அடிப்படைகளில் பதிலுரைக்க இயலும். ஒன்று அவன் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் வழியே அவனுக்கு வந்து சேருகிற மத அடையாளம். அடுத்து தான் என்ன மதத்தவன் என அவன் நம்புவதும், தொடர்ந்து பொதுவெளியில் முன்வைப்பதுமான ஓர் அடையாளம், கடைசியாக அவன் வாழ்நாள் முழுக்க ஈடுபடும் செயல்களின் வழி, பேசும் சொற்களின் வழி, சிந்தனைகளின் வழி எந்த மதத்தினனாக வெளிப்படுகிறான் என்பது. காந்தி மோத் பனியா என்ற வாணிப வகுப்பைச் சேர்ந்தவர். பனியாக்கள் பொதுவாக சமண மதத்தையோ இந்து மதத்தையோ பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். பனியாக்கள் முற்காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றொரு கருதுகோளும் உண்டு. காந்தியின் குடும்பம் இந்துக்கள். காந்தி தன்னை எப்போதும் ஓர் இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக வைணவராக, ராமன் மீது பிரியம் கொண்டவராக. எனவே மேற்சொன்ன மூன்றில் முதலிரண்டின் அடிப்படையில் காந்தி நிச்சயம் இந்துதான். ஆனால் மூன்றாவது விஷயம்? காந்தியின் சிந்தை, சொல், செயல் மூன்றிலும் வெளிப்பட்ட மதம் என்ன, அந்த அடிப்படைகளில் அவர் ஓர் இந்துவா என்பதையே விசாரணைக்கு உட்படுத்துகிறோம். இஃது ஒரு தத்துவ விசாரம் மட்டுமே.
காந்தியின் ஆரம்ப காலம் மூன்று நிலவெளிகளில் கழிந்தது – குஜராத், லண்டன் மற்றும் தென்னாப்ரிக்கா. அந்த அனுபவங்கள் காரணமாக அவர் மீது தொடர்ந்து பல மதங்கள், தத்துவங்களின் மோதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அவர் அவற்றிலிருந்து தனக்கு உகந்தவற்றை எடுத்துக் கொண்டார். முதன்மையாக இந்து மதம், அதிலும் அத்வைத தத்துவம். அப்புறம் சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம். மத நூல்களில் பகவத் கீதையும், பைபிளில் வரும் இயேசுவின் மலைப் பிரசங்கமும் அவரைப் பாதித்துள்ளன. லியோ டால்ஸ்டாயின் The Kingdom of God Is Within You மற்றும் A Letter to a Hindu, ஹென்றி தோரோவின் On the Duty of Civil Disobedience, ஜான் ரஸ்கினின் Unto This Last, வில்லியம் சால்டரின் Ethical Religion ஆகிய நூல்களிலிருந்து காந்தி தனது மத மற்றும் அரசியல் கொள்கைகளைத் தகவமைத்துக் கொண்டார். இவை போக, சகஜானந்த சுவாமியின் சுவாமிநாராயணன் சம்பிரதாயத்திலும், சமணக் கவிஞரான ஸ்ரீமத் ராஜ்சந்திராவின் ஆன்மீகத்திலும், இஸ்லாமிய சூஃபியிஸத்தின் சிஷ்டி வரிசையிலும் தாக்கம் பெற்றார்.
காந்தி தன் ஆசிரமவாசிகளுக்காக பதினோரு உறுதிமொழிகளைப் பட்டியலிட்டார். ஒரு நல்ல தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு அவசியப்படும் பண்புகள் என அவற்றைப் பார்க்கலாம்: 1) அஹிம்சை 2) சத்தியம் 3) திருடாமை 4) பிரம்மச்சரியம் 5) பொருட்களின் மீது பற்றின்மை 6) உடல் உழைப்பு 7) உணவு ருசி மீது ஆசையின்மை 8) தன்னை அறிதல் 9) மதங்களைச் சமமாகப் பாவித்தல் 10) அச்சமின்மை 11) தீண்டாமை தவிர்த்தல். காந்தியின் மொத்த வாழ்வின் சாராம்சமாக இவற்றைக் கருத இடமுண்டு.
பதஞ்சலி யோக சூத்திரத்தின் ஆஷ்டாங்க யோகம் என்ற பகுதி ஐந்து யாமங்கள் பற்றிப் பேசுகிறது. அதாவது தூய்மை அல்லது ஒழுக்கத்தின் குணங்களைப் பட்டியலிடுகிறது: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருட்களின் மீது பற்றின்மை. ஆக, காந்தி நேரடியாக இங்கிருந்தே தன் முதல் ஐந்து உறுதிமொழிகளை எடுத்திருக்கிறார் என்பது தெளிவு. யோக சூத்திரம் சாங்கியத்தில் இருந்தும், பௌத்தத்தில் இருந்தும் உந்துதல் பெற்று எழுதப்பட்ட நூல். இதில் சாங்கியம் என்பது பண்டைய இந்து மதத்தின் ஆறு ஆத்திகத் தத்துவப் பள்ளிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் இன்று பரவலாக அறியப்படுகிற நடைமுறை இந்து மதத்துடன் அதை இணைத்துப் பார்க்க முடியாது.
காந்தி சுயராஜ்யத்தை அடைய அஹிம்சையையே முன்வைத்தார். வன்முறையை அவர் போராட்ட முறையாக நம்பவில்லை. கண்ணுக்குக் கண் என்ற வழிமுறை உலகையே குருடாக்கும் என்றார். சொல்லப் போனால் அஹிம்சை என்பதை பலவீனமான தரப்பின் தவிர்க்க முடியாத உத்தியாக (அதாவது வேறு வழியற்ற சந்தர்ப்பவாதமாக) அல்லாமல் பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டியங்கும் மனோபலம் மிக்க போராளிகளின் வலுவான ஆயுதமாகக் கருதினார். வன்முறை செலுத்தி வெல்லும் பலம் இருந்தாலுமே கூட ஒருவர் ப்ரக்ஞைப்பூர்வமாக அஹிம்சைப் பாதையையே போராட்ட வடிவமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர் நிலைப்பாடு. அதுவே பாதிப்பு குறைந்த வழி, அதுவே நிரந்தரத் தீர்வு என நம்பினார். எதிர்தரப்பின் மனமாற்றம் என்பற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அதுவே நீண்ட கால அடிப்படையில் நிலைத்த அமைதிக்கு வழிகோலும் என நினைத்தார். போர் அல்ல, போராட்டமே இரு தரப்புக்கு இடையிலான பிரச்சனைக்குத் தீர்வு என்றார். இந்தச் சிந்தனையை காந்தியின் தனித்துவம் எனலாம்.
இவ்விஷயத்தில் இந்து மதத்தின் நிலைப்பாடு என்ன? உலகின் எந்த மதத்தையும் போல் இந்து மதத்திலும் அன்பே பிரதானமாகப் போதிக்கப்பட்டாலும் அதன் புராணங்கள் நெடுக தீமையை அழிக்க வன்முறையே பிரயோகிக்கப்பட்டது. எந்தத் தெய்வத்தின் அவதாரம் என்றாலும் உலகிற்குத் தொந்தரவு தரும் அசுரர்களை வதம் செய்தே தீர்வு கண்டார்கள். காக்கும் தெய்வமான மஹாவிஷ்ணு தீமையை அழிக்க புதிய அவதாரம் எடுத்த போதெல்லாம் குருதி வழிந்தோடியது (மச்சம், கூர்மம், வராஹம் தவிர). எனவே அஹிம்சை இந்து மதத்தின் பிரதானக் கூறு அல்ல. அதை அது போதிப்பதும் இல்லை.
இஸ்லாம் யுத்தச் சூழலில் உருவான மதம் என்பதால் அதில் ஒருவித வன்முறைச் சாயை படர்ந்திருக்கிறது. அப்படியான பின்புலம் கொண்டிராத இந்து மதமுமே பல இடங்களில் போரை ஆதரிக்கும் முகமாகவே கருத்துக் கொண்டிருக்கிறது. காந்தி இந்த விஷயத்தில் இந்து மதத்துக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் அவர் கிறிஸ்துவத்துக்கு அருகே நிற்கிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.” (பரிசுத்த வேதாகமம், புதிய ஏற்பாடு, மத்தேயு 5:39) என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் சொல்கிறார். அதுவே காந்தி வந்து நிற்கும் புள்ளியும். சமணமும், பௌத்தமும் கூட இதே திசையில்தான் சிந்திக்கின்றன.
அடுத்து சத்தியம். எங்கும் எதிலும் சமரசமில்லாத உண்மையைப் பேசுவது என்பது காந்தியின் மிக அடிப்படைக் குணம். மறைக்கவோ மழுப்பவோ ஏதும் இல்லை என நம்பியவர். தன் பிம்பத்துக்குக் கடும் களங்கம் உண்டாக்கும் எனத் தெரிந்திருந்தும் மிகச் சங்கடமான விஷயமான தன் பிரம்மச்சரியப் பரிசோதனைகளைப் பற்றிக் கூட தயங்காமல் பதிவு செய்தவர், அதில் ஈடுபட்ட பெண்களையும் அதே போல் பதிவு செய்யத் தூண்டியவர். திறந்த புத்தகம் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் அவர்தான். மிகச் சிறுவயது முதலே தனக்கு இழப்பு உண்டாக்கும் எனத் தெரிந்தாலும் கூட பொய்யுரைக்கப் பிடிவாதமாக மறுத்தவர் (புகழ் பெற்ற Kettle உதாரணம்).
இந்து மதம் அறத்தைத் தீவிரமாகப் போதித்தாலும் அவ்வளவு இறுக்கமாகத் தன்னை வைத்துக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். இந்து மதத்தின் பிரதான தெய்வங்கள் யாரும் சத்தியத்தை முக்கிய விஷயமாகப் பேசியதாகத் தெரியவில்லை. “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த / நன்மை பயக்கும் எனின்” என வள்ளுவர் கண்ட சமரசம் இந்து புராணங்கள் வைக்கும் உதாரணங்களுடன் ஒத்துப் போகிறது. மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அவ்வாறு பல சூதுக்கள் செய்தே பாண்டவர்களை வெல்ல வைக்கிறார். காந்தியின் ஆதர்சமான இராம பிரானே மறைந்திருந்து அம்பெய்துதான் வாலியைக் கொல்கிறார். அதில் அறம் வலுவாக அடிபடுகிறது. வறட்டுப் பிடிவாதம் என்று இந்து மதம் காந்தியின் மெய் மீதான பிரேமையைக் காணும். அங்கே இந்து மதத்திலிருந்து காந்தி சற்று விலகி நிற்கிறார். மோசஸுக்குக் கடவுள் சொன்ன பத்து கட்டளைகளில் பொய் சொல்லக் கூடாது என்பதும் வருகிறது: “பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.” (பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, யாத்திராகமம் 20:16).
காந்தி தன் பதின்ம வயதில் வேலையாளிடம் செப்புக் காசு திருடி சிகரெட் வாங்கிப் பிடித்ததைக் குற்றவுணர்வுடன் சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார். பிற்பாடு தன் தவறை உணர்ந்து புகை, திருட்டு இரண்டையுமே விட்டு விட்டதாகச் சொல்லும் போது புகையை விட திருட்டு செய்ததற்கு ஒரு படி மேலாகக் குற்றவுணர்வு கொள்கிறார். காந்தியின் திருட்டு மீதான விலக்கம் என்பது உண்மை மீதான அவரது பிடிப்பிலிருந்தே வருகிறது. திருட்டு ஒருவருக்கு நேரடி பாதிப்பை உண்டாக்குகிறது என்பது அவருக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் இந்து மதம் திருட்டை அவ்வளவு கறாராகக் கண்டிக்கவில்லை. பகவான் கிருஷ்ணன் அறியா வயதில் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டதையும், குளிக்கும் கோபியரின் ஆடைகளைக் களவாடியதையும் சுவாரஸ்யத் திருவிளையாடலாகவே புராணங்கள் முன்வைக்கின்றன. மாறாக, அபிரஹாமிய மதங்கள் பொதுவாகவே திருட்டைப் பெருங்குற்றம் என்கின்றன. கிறிஸ்துவம் பத்து கட்டளைகளில் திருட்டைக் கண்டிக்கிறது: “களவு செய்யாதிருப்பாயாக.” (பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, யாத்திராகமம் 20:15). முகமது நபியின் ஹாடித்களில் இஸ்லாமின் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொய்யும் பட்டியலிடப்படுகிறது.
காந்தி இள வயதில் தன் சகோதரனின் நண்பனின் பேச்சைக் கேட்டு புலால் உண்டால் ஆங்கிலேயரைப் போல் பலவானாக ஆகி விடலாம் என நம்பி ஆட்டுக்கறி உண்கிறார். அதன் விளைவாகக் கொடுங்கனவுகள் காண்கிறார். அதிலிருந்து அசைவ உணவுகளைப் பகிஷ்கரிக்கிறார். அதையே தன் பின் திரண்டு வந்தோருக்கும் சிபாரிசு செய்கிறார்.
பிரம்மச்சரியம், பொருட்களின் மீது பற்றின்மை, உணவு ருசி மீது ஆசையின்மை என இம்மூன்றும் லௌகீக ஆசைகளை நிராகரித்தல் என்ற ஒரு குடையின் கீழ் வருபவை, துறவறம் சார்ந்தவை. இவை பற்றி இந்து மதம் நிறையவே பேசி இருக்கிறது. போலவே சமணத்திலும், பௌத்தத்திலும் துறவு உண்டு. கிறிஸ்துவத்திலும் கூட இருக்கிறது. மிக முக்கிய வித்தியாசம் இந்து மதத்திலும் கிறிஸ்துவத்திலும் குடும்பஸ்தர்களுக்கு இத்தகு பற்றறுத்தல் வலியுறுத்தப்படவில்லை. இது உலக வாழ்வை மறுதலித்த துறவிகளுக்கான கட்டுப்பாடுகள். மாறாக, சமணத்திலும், பௌத்தத்திலும் சாதாரணக் குடிகளுக்கே ஓர் எல்லை வரை புறத் துய்த்தலுக்குக் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. பூண்டையும் வெங்காயத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற சமண உணவு முறையை உதாரணம் சொல்லலாம். காந்தியின் ஆசிரமவாசிகள் துறவிகள் அல்ல, அவர்கள் தேச சேவைக்கு அவர் பின்னால் திரண்டவர்கள் மட்டுமே. அவர்களில் இல்வாழ்வில் ஈடுப்பட்டிருந்த தம்பதிகள் உண்டு, உலகை துய்க்க ஆரம்பித்திருந்த மிக இளம் வயதினரும் உண்டு. அவர்களுக்கு இம்மாதிரி தடைகள் அதீதமானவை. ஆனாலும் காந்தி அவை அவசியம் என்றே நம்பினார். அவர் மதுவை மட்டுமல்ல, மாமிசத்தையுமே பாவம் எனக் கருதினார். அது அவரது அஹிம்சையிலிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
உடல் உழைப்பு, அச்சமின்மை இரண்டும் பொதுவாக தேச விடுதலை, தேச முன்னேற்றம் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் காந்தி உறுதிமொழிகளில் சேர்த்தவை. அவை நவீனச் சிந்தைகள். எனவே மதங்கள் அவற்றை விதந்தோதவில்லை. அதே சமயம் இவற்றுக்குப் பொதுவாக எந்த மதமும் எதிராக இருக்கவும் வாய்ப்பில்லை.
தன்னை அறிதல் என்பதை இந்து மதம் எல்லோருக்குமே அவசியமாக்குகிறது. “தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை” என்கிறார் திருமூலர் (திருமந்திரம், 2355). ‘நான் யார்?’ என்ற பெயரிலேயே ரமண மஹரிஷியின் நூல் ஒன்று இருக்கிறது. பௌத்தம், சமணம் ஆகியன அறுதி உண்மையை அறிதல் என்கிற ஞானோதயம் நோக்கியே மனிதனைத் தள்ளுகின்றன என்றாலும் அதில் நேரடியாகத் ‘தன்னை அறிதல்’ என்கிற விஷயம் வரவில்லை. அது இந்து மதத்திலிருந்து காந்தி நேரடியாகப் பெற்றுக் கொண்டதுதான்.
அடுத்து மதங்களைச் சமமாகப் பாவித்தல் என்பது பூரணமாக எம்மதத்திலுமே இல்லை என்பதுதான் உண்மை. அல்லாவுக்கு இணையாக வேறு கடவுள்களைப் பாவிப்பதை ஏழு பெரும்பாவங்களில் ஒன்றாக ஷிர்க் என்ற பெயரில் குறிப்பிடுகிறது இஸ்லாம். கடவுளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றாகக் கிறிஸ்துவம் சொல்வது”என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.” (பைபிள், பழைய ஏற்பாடு, யாத்திராகமம் 20:3). சமணமும், பௌத்தமும் அவ்வளவு பதற்றத்துடன் மற்ற மதங்களை மறுதலிக்கவில்லை.
இந்து மதம் இவ்விஷயத்தில் ஓரளவு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது. அது மற்ற மதங்களை நிராகரிக்கவில்லை, அதனோடு உரையாடி நல்லனவற்றைத் தனதாக்கிக் கொள்ளவே பார்க்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போல் இந்து மதத்தில் மத மாற்றம் செய்யும் எத்தனங்கள் இல்லை. காந்தியே கிறிஸ்துவத்தையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். தனி மனிதர்கள் ஒரு மதம் பற்றி உணர்ந்து அதைப் பின்பற்றுவதன் மூலம் தானாவே பரவ வேண்டுமே ஒழிய பிரச்சாரம் செய்து மனிதர்களை மதம் மாற்றுவதால் அல்ல என்றார். அந்த வகையில் இருப்பனவற்றில் இந்து மதமே மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டது என்றார். (இன்று நிலவும் இந்துத்துவக் கொள்கைகள் அவ்வகையில் இந்து மதத்தின் அடிப்படைக்கே எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். காந்தி பின்பற்றியது இந்துத்துவம் அல்ல.)
கடைசியாகத் தீண்டாமை தவிர்த்தல் என்ற கொள்கை. மேற்கே தோன்றிய கிறிஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களில் சாதியம், தீண்டாமை பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நேரடியாக எதுவும் இல்லை. வெள்ளை கருப்பின வேறுபாட்டால் நிலவும் தீண்டாமையை அம்மதங்கள் ஆதரிக்கவில்லை. காந்தி குறிப்பிடும் தீண்டாமை இந்தியாவில் நிலவுவது. சாதி வேற்றுமை அடிப்படையில் தோன்றுவது, இந்து மதத்தோடு பின்னிப் பிணைந்தது. கிருஷ்ணன் பகவத் கீதையில் போதித்த நால் வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் ஆனதல்ல எனினும் இன்று இந்து மதம் வர்ணங்களைப் பிறந்த சாதி அடிப்படையிலேயே பாவிக்கிறது. அவதார புருஷனான ராமன் பிராமணர்களுக்கு மட்டுமான வேதத்தைப் பஞ்சமனான சம்புகன் படித்ததற்காக அவனைக் கொன்றான். ஆக, கடவுளே சாதி ஏற்றத் தாழ்வுக்கும், தீண்டாமைக்கும் அறங்காவலராக நிற்பதை இந்து மதத்தின் புராணங்கள் அங்கீகரிக்கின்றன. சாதியை ஒழிக்க ஒரே வழி இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே என்றார் அம்பேத்கர். அதன் மாற்றாகச் சமத்துவம் கொண்ட பௌத்தத்தைக் குறித்தார். இஸ்லாம் மதத்தில் சாதி வெறி இல்லை என்று பெரியார் கருதினார். எனவே காந்தியின் தீண்டாமை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாக்குதானே ஒழிய இந்து மதத்தின் சாரம் அல்ல. ஆனால் காந்தி இதற்கு முரணாக சாதியம் என்பது இந்து மதத்தின் இயல்பல்ல என்றே நம்பினார். அதைக் கை விட்டு இந்து மதம் தன்னைச் சரி செய்து கொள்ள முடியும் எனக் கருதினார். நிராகரிப்பல்ல, சீர்திருத்தம் போதும் என்றார்.
காந்தி இறுதி வரை தன்னை இந்துவாகவே கருதினார். சுடப்பட்டுச் சாகும் தறுவாயில் அவர் “ஹே ராம்!” என்று சொன்னதாக நிலவும் பிரபலத் தொன்மமும் அதை ஒட்டியதே!
ஆனால் கறாராக மதிப்பிட்டால் காந்தியை ஓர் இந்து என்று மட்டும் சுருக்கிட முடியாது. அவர் இந்துவாகச் சில விஷயங்களில் வாழ்ந்தார்தான். அதே போல் கிறிஸ்துவராகவும், இஸ்லாமியராகவும், சமணராகவும், பௌத்தராகவும் கூட சில சமயங்களில் வாழ்ந்தவர்.
அவரை ஒரே மதத்துக்குள் அடைக்க வேண்டும் என்றால் அது காந்தியம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவரே அதை நிராகரிக்கிறார்: “காந்தியம் என்ற ஒன்று கிடையாது. எனக்குப் பின் அத்தகைய ஒரு பிரிவை விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் புதிதாக எந்தக் கொள்கையோ கோட்பாட்டையோ உருவாக்கியதாகச் சொல்ல மாட்டேன். நான் தினசரி வாழ்க்கைக்கும், சிக்கல்களுக்கும் நித்யமான உண்மைகளை என் வழியில் பயன்படுத்திப் பார்த்தேன், அவ்வளவுதான். நான் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களும், வந்தடைந்த முடிவுகளும் இறுதியானவை அல்ல. நான் அதை நாளை மாற்றக்கூடும். நான் இந்த உலகிற்குப் புதிதாகப் போதிக்க ஒன்றும் இல்லை. சத்தியமும் அஹிம்சையும் மலைகளைப் போல் மிகப் பழையவை.” இது நிச்சயம் ஒரு சனாதனியின் குரல் இல்லை!
***
சி. சரவணகார்த்திகேயன் – கோவையை சேர்ந்தவர். பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். அனைத்து இலக்கிய வடிவங்களிலும் 36 நூல்கள் எழுதியுள்ளார். சுஜாதா விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலிற்கான விருதுகளை பெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக படைப்பு செயல்பாட்டில் ஈடுபட்டு வருபவர். மின்னஞ்சல்: c.saravanakarthikeyan@gmail.com

