Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்காந்தியின் பயணத்தடம்

காந்தியின் பயணத்தடம்

சித்ரா பாலசுப்ரமணியன்

காத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான யாத்திரையை 1933 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி வார்தாவில் தொடங்கி 1934 ஆம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி வாரணாசியில் நிறைவு செய்தார். இந்த நீண்ட பயணம் குறித்த உடனுக்குடனான அறிக்கைகளை, அப்போது காந்தியின் செயலரைப் போலப் பயணித்த சந்திர சங்கர சுக்லா எழுத அவை ஹரிஜன் இதழில் வெளியாகின. (காந்தியின் அணுக்கச் செயலர் மகாதேவ் தேசாய் அப்போது சிறையில் இருந்தார்)

காந்தியின் தீண்டாமை யாத்திரையில் அவருடன் பலர் பயணித்தனர், குறிப்பாகச் சிலர் அவரது பயணம் குறித்த விவரங்களைத் தொகுப்பதற்காகவே உடன் சென்றனர் .எனினும் பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் அவரவர் செலவுகளை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும். காந்தி, காந்தி குழுவினருக்கான செலவினங்களில் அவை அடங்காது. எவரேனும் அதற்குப் பொருளுதவி செய்தாலொழிய இத்தகைய நீண்ட பயணத்தில் உடன் செல்வது இயலாத காரியமாகவே இருந்திருக்கும். பத்திரிக்கையாளரான எஸ்.மகாதேவனின் பயணத்திற்கு நாகேஸ்வர்ராவ் பந்துலு பொருளுதவி செய்திருக்கிறார். காந்தியுடன் பயணித்த மகாதேவன் தன்னுடைய அனுபவங்களையும் தான் கண்டவற்றையும் மக்கள் மகாத்மாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றையும் உடனுக்குடன் பதிவு செய்ய அவை ‘ஆந்திர பத்திரிக்கா’ இதழில் வெளியாகின. எனினும் ஒன்பது மாதங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நீடித்த இந்த நீண்ட பயணத்தில் மகாதேவன், மத்திய மாகாணங்கள், ஆந்திரா, மலபார் பகுதிகள், தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே உடன் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சுவைபடவும் நிரல்படவும் தொகுத்து Mahatma Gandhi warnings and flashes on Harijan tour என்ற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார். 1936 இல் The Journalist Publishing House என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்று அதன் விலை ஒரு ரூபாய் நான்கு அணா.

தீண்டாமை யாத்திரை குறித்த தொடர் பதிவுகளை எழுதுகையில் நல்லூழாக இந்தப் புத்தகத்தைக் கண்டறிந்தேன். 192 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் எட்டு தலைப்புகளைக் கொண்டது. கூடவே, இருபத்தோரு அருமையான, இந்த யாத்திரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. எளிய இனிய நடையில் வாசிப்போர் மனம் கவரும் படி மகாதேவன் பதிவு செய்துள்ளார். புத்தகத்தை வாசித்து முடிக்கையில் காந்தி, நம் முன் இன்னும் பேருரு கொண்டிருப்பார். மிகக் கடுமையான இந்த நீண்ட பயணத்தைக் காந்தி, மக்கள் மேல் கொண்டிருந்த அன்பினாலும் தீண்டாமையை வேரோடு நீக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டோடும் பற்பல சிரமங்களையும் அயர்ச்சியையும் மீறி நடத்திய விதத்தை, மகாதேவன் எடுத்துக் காட்டும் பலவேறு நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.

காந்தியின் நாள் அதிகாலைக்கும் முன்னதாகவே தொடங்கிவிடுவது. இரவு படுக்கப் போகும் நேரமும் ஒரே நிலையானது அன்று. ஒரு நாளின் நீண்ட மணி நேரங்கள் காந்தி எந்த சுணக்கமும் இன்றி பணி செய்ததைக் காண முடிகிறது. தூக்கம் மிகக் குறைவு. நீண்ட பயணங்களிலும் இடையிடையே, பயணிக்கும் வாகனத்தை நிறுத்தி வழியில் எதிர்ப்படும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் மிகக் குறைந்த நேரமே தூக்கத்திற்கு என்றானது. சங்கரன் நாயர் என்பவர் இந்தக் காலக் கட்டத்தில் தட்டச்சு உதவியாளராக இருந்திருக்கிறார். (பெரும்பாலும் தென்னிந்தியர்களே காந்தியின் தட்டச்சு உதவியாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.) ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்குத் தம்மை எழுப்பும்படி சொல்லிவிட்டு காந்தி உறங்கச் செல்கிறார். இரண்டு ஐம்பதுக்கு எழுந்து பார்க்கும் சங்கரன், காந்தி எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். தட்டச்சு செய்யத் தயாராகும் அவரிடம் காந்தி, உங்கள் பணி நேரம் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே என்கிறார். காந்தியிடம் பணியாற்றுவது சாமானியப் பணி அன்று.

பெரும்பாலும் ஒரு கையில் தன் உணவுக் கோப்பையை வைத்துக் கொண்டு எழுத முயல்வதும் உண்டு. இரயில் ஏறியதும் அடுத்த நிறுத்ததிற்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து உடனே எழுத்துப் பணியில் இறங்கி விடுவார். எழுத வேண்டிய கடிதங்கள், பதிலுரைக்க வேண்டியவை, ஹரிஜன் இதழுக்கு எழுத வேண்டிய பத்திகள், பத்திரிக்கைகளுக்கான அறிக்கைகள் என அனைத்தும் இரயில் பயணங்களில் எழுதப்பட்டுவிடும். ஓடும் இரயிலில் அனாயாசமாக எழுதும் கலையைக் காந்தி கற்றிருந்தார்.

பேரார் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளுக்குக் காந்தி சென்றார். அதில் ஒரு குடியிருப்புக்கு சொன்ன நேரத்தை விடச் சற்று முன்னதாகவே சென்று விட்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் தயாராகவில்லை. வேப்ப மரத்தடியில் இரண்டு ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. காத்திருந்து நேரத்தை வீண்டிப்பானேன், காந்தி நேரே சென்று ஜமக்காளத்தில் அமர்ந்து பேசத் தொடங்கி விடுகிறார். சுற்றியிருந்த மக்களுக்கு ஒரே வியப்பு. சில நிமிடங்கள் உரையாற்றியபின் அவர்கள் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்கின்றனர். மலர்ந்த புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த இடத்திற்குக் கிளம்புகிறார். பொருட்களாக ஏதேனும் கையளிக்கப்பட்டிருந்தால், அதனை, அடுத்து வரும் பொதுக்கூட்டத்தில் காந்தி ஏலம் விடும் அழகையும் மகாதேவன் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய ஒரு காட்சியை விரிவாகப் பதிவும் செய்துள்ளார். முந்தையக் கூட்டம் ஒன்றில் குழந்தைகள் இணைந்து ஒரு சிறிய பெட்டியை அன்பளிப்பாக தந்திருந்தனர். அடுத்தக் கூட்டத்தில் காந்தி அதை ஏலம் விட்டார். வாய் நிறைய புன்னகையுடன், அதிக விலைக்குக் கேளுங்கள், இந்த நிதி ஹரிஜன சேவைக்கானது என நினைவில் கொள்ளுங்கள் என்றபடியே, தொழில்முறை ஏலம் நடத்துபவரைப் போல, தொகையைச் சொல்லி ஒரு தரம் இரண்டு தரம் எனச் சொல்லுவார். வேறு எவராவது இன்னும் சற்றுக் கூடுதல் தொகை கேட்டு விட்டால் அவரது புன்னகை இன்னும் விரியும். ஒரு ஐரோப்பியர் இரண்டு முறை ஏலம் எடுக்க முனைந்தும் இயலவில்லை. வேறு வழியின்றி காந்தியின் கையெழுத்தையாவது பெற வேண்டும் எனக் கோரி நிற்கும் போது, மகாதேவன் தன் நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுத்து, காந்தியிடமிருந்து கையெழுத்தையும் பெற்றுத் தருகிறார். அந்த ஐரோப்பியர் இருபத்தைந்து ரூபாய் நன்கொடை அளிக்கிறார். Volkart Bros என்ற புகழ்பெற்ற வணிக நிறுவனத்தைச் சேர்ந்த பெர்க்டன் தான் அவர் என மகாதேவன் குறிப்பிடுகிறார்.

காந்தி, அகோலா என்ற இடத்தைச் சென்றடைந்த போது, அம்பேத்கரின் ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்தனர். சில கேள்விகள் கேட்க வேண்டும், வருத்தமோ கோபமோ படக்கூடாது என்ற முன்னறிவிப்புடன் தொடங்கினர். காந்தி புன்னகைத்தபடியே எதுவேண்டுமாயினும் தயங்காமல் கேளுங்கள் என்றார். ‘வட்டமேஜை மாநாட்டில் உங்களை எதிர்த்ததன் மூலம், அம்பேத்கர் நாட்டிற்கு நியாயம் செய்தாரா, இல்லையா?’ எனக் கேட்டதற்குக், காந்தி நியாயம் செய்ததாக அவர் கருதுகிறார், ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் மிக தைரியமானவர். தைரியமானவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பதில்லையே என்றார் காந்தி.

ஏன் திடீரென்று தீண்டாமை ஒழிப்பில் இறங்கிவிட்டீர்கள் என்ற வினாவிற்கு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போதே தான் இப்பணியில் இறங்கிவிட்டதாகவும் காங்கிரஸின் செயல்திட்டங்களில் தீண்டாரமை ஒழிப்பைக் கொண்டு வந்ததையும் சுட்டிக்காட்டினார். ‘இதுவரை, இப்போது வசூலிக்கும் தொகையில்லாமல் முன்பு ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக நீங்கள் செலவழித்ததுண்டா?’ என்ற வினாவிற்கு, இதுவரை இருபது லட்ச ரூபாய் செலவழித்ததில் ஐந்து லட்சம் தம் சொந்தப் பணம் எனக் காந்தி கூறினார். அம்பேத்கரை நான்கு கைகள் கொண்டவராகச் சித்திரித்து தாங்கள் வழிபடுவதாகவும் அது குறித்து காந்திக்கு ஆட்சேபணை உண்டா என வந்தவர் வினவியபோது, காந்தி நிச்சயம் இல்லை என்றவர், சிறையில் தானும் வல்லப்பாயும் பேசும் போதெல்லாம் அம்பேத்கர் குறித்து உயர்வாக வியந்து பேசியதைச் சுட்டிக்காட்டி அவரை மகிழ்ச்சிப்படுத்தவே தாம் விரும்புவதாகவும் கூறினார். வந்தவர், ஹரிஜன் சேவக் சங் அமைப்பினைப் பற்றி குறை கூறியபோது, இதையல்லவா நீங்கள் என்னிடம் விவரமாகப் பேசவேண்டும் என ஊக்கப்படுத்தினார். தனக்கு இது குறித்து விரிவாகத் தொடர்ந்து கடிதங்கள் எழுதுமாறும், தபால் செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் காந்தி உறுதியளித்தார். வந்தவர்கள் காந்திக்கு மாலையணிவித்து விடைபெற்றுக் கொண்டனர். இந்த யாத்திரை முழுக்க பல்வேறு சமயங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், இவ்வாறு பல்வேறு வினாக்களைத் தொடுத்ததை மகாதேவன் பதிவு செய்துள்ளார்.

காசியின் மடம் ஒன்றைச் சேர்ந்த பண்டிட் லால்நாத் என்ற சனாதனியும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து வந்து காந்தியின் கூட்டங்களிலும் அவர் தங்குமிடங்களிலும் பிரச்சினை புரிந்தவாறே இருந்தனர். தாம் உரையாற்றும் மேடைகளிலேயே காந்தி, பண்டிட் லால்நாத்திற்கும் வாய்ப்பளித்தார். மக்கள் கேரோ செய்தபோது, அவர் பேசுவதையும் கேட்போம் என மக்களை அமைதிப்படுத்தினார். ஆனால், பண்டிட் லால்நாத் பேசி முடித்ததும் மக்கள் மகாத்மா காந்திக்கு ஜே என உரக்கக் குரலெழுப்பியதை மகாதேவன் உற்சாகத்தோடு குறிப்பிடுகிறார்.

சத்தீஷ்கரில், பிலாஸ்பூர் செல்லும் வழியில் சிவ்நாத் ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள், காந்தி அந்த வழியாக வருவார் என்ற செய்தி தெரிந்து முந்தைய நாள் மாலையே அங்கு வந்து தங்கி சமைத்து உண்டனர். ஒவ்வொரு இடத்திலும் இதுபோல் ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடுத்து ஒரு நொடியாவது அவரைப் பார்க்க வேண்டும் எனத் தொலைதூரத்திலிருந்தெல்லாம் பயணித்து வந்தனர். இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் சொல்லி மாளாதது. ஒரு சில நிமிடங்களே காண முடியும் என்றாலும் நீண்ட தூர கிராமங்களிலிருந்தெல்லாம் பயணித்து, நெடுநேரம் காத்திருக்க அவர்கள் தயங்கவில்லை. காந்தி பயணித்த இரயில், நடைமேடையை நெருங்கும் முன்பே மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷம் வானை முட்டியது. பிலாஸ்பூரில் காந்தி தங்கியிருந்த வீட்டின் வாயிலிலும் மக்கள் திரண்டபடியே இருந்தனர். காந்தி, வீட்டின் பலகணிக்கு அடிக்கடி வந்து நின்று கையசைத்துவிட்டுச் செல்லும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருந்தது என நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் மகாதேவன்.

கட்னி(katni) என்ற இடத்தில் இன்னுமொரு நெகிழ்வான நிகழ்ச்சி. அங்கு ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பை ஒட்டியிருந்த திலகர் வித்யாலாயா என்ற இடத்தில் காந்தி குழுவினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தன் காலை நடையினை, காந்தி ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பிலேயே மேற்கொண்டார். அந்த வீதி சுத்தமாக வைக்கப்படிருந்ததைக் குறிப்பிட்டு பாராட்டினார். குடியிருப்பின் எல்லையில் வேப்ப மரத்தடியில் காந்தியின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதை ஒட்டியிருந்த மேடையில் அவர் அமர்ந்து கொண்டார். சிறு பெண் குழந்தை மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவரை வாழ்த்தியது. காந்தி, அக்குழந்தையின் தலையை வருடி, அருகிலிருந்த அதன் தந்தையிடம் ஏன் தலையில் எண்ணெய் வைத்து வாராமல் இப்படிச் சிடுக்காக வைத்திருக்கிறாய் என்றதோடு அக்குழந்தையின் பிஞ்சு விரல்களை நீவியபடி, நகங்களில் அழுக்கு படிய விடாதே என்றும் அறிவுறுத்தினார். கூடவே, பெரியவர்களுக்கும் இறந்த மாட்டு இறைச்சியை உண்ணாதீர்கள்; குடிப்பழக்கத்தைக் கைவிடுங்கள்; சூதாட்டம் போன்றவற்றிலிருந்து விலகியிருங்கள் எனப் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஏறக்குறைய பலப்பல ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மோர்ஸி என்ற இடத்தில் மக்களிடையே பிராமணர், பிராமணர் அல்லாதார் இடையே இருந்த பிரிவினை உணர்வினைக் கேட்டுத் தெரிந்து கொண்ட காந்தி, எந்த வகையிலும் எவருக்கும் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை; நம் சாத்திரங்கள் அந்த வேறுபாட்டைச் சொல்லவில்லை என வலியுறுத்திக் கூறினார்.

ராஜ்குமார் கல்லூரி அவருக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பி வரவேற்றிருந்தது. பெயருக்கு ஏற்றாற்போல், மேல்தட்டு செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே அங்கு கல்வி பயின்றனர். அவர்களிடையே காந்தி நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். இங்கு பயில்வதாலேயே எந்தவகையிலும் நீங்கள் மற்றவர்களை விட உயர்வானர்கள் எனப் பொருள் அன்று; வாய்ப்பு வழங்கப்பட்டால் எவரும் உயர்நிலையை அடைய முடியும் ; நாளை சமூகத்தில் பணி செய்யும் போது அத்தகைய வாய்ப்பை அனைவருக்கும் வழங்க வேண்டும்; அதுவே உண்மையான கல்வியின் அடையாளம் என உரைத்தார்.

சோஹாஹ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த நெகிழ்வான நிகழ்வுகள் சிலவற்றை மகாதேவன் குறிப்பிட்டு எழுதியுள்ளார். கூட்டத்தின் மேடையருகே ஒரு பார்வையற்றவர், காந்தியைப் பார்க்க வேண்டும் என நின்றிருந்தார்.அருகே அழைத்து வரப்பட்டவுடன் காந்தியிடம் தங்களது பாதங்களைத் தொட வேண்டும் என வேண்டினார். காந்தி, தன் கையை நீட்டினார். பார்வையற்றவர் இல்லையில்லை உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்கவே நான் விரும்புகிறேன் என்றதும் தட்ட வழியின்றி காந்தி அனுமதித்தார். எண்பது வயதுள்ள மூதாட்டி, காந்தியின் அருகில் வந்து அவரது முகத்தையே பார்த்தபடி இருந்தார். காந்தி அவரிடம், என்னை உங்கள் மகனாகத் தத்தெடுத்துக் கொள்கிறீர்களா எனப் பரிகாசத்தோடு கேட்டார். கூடவே, நிதி தாருங்கள் என உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு இருந்தன. எதைச் சொல்வது எதை விடுவது என்று மகாதேவனுக்கு இனிய குழப்பம் இருந்திருக்கும்.

குவாலியர் இரயில் நிலையத்திற்குக் காந்தி பயணித்த இரயில் நடுஇரவில் வந்தது. அந்த நடுங்கும் குளிரிலும் கம்பளியைப் போர்த்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் நடைமேடையில் காத்திருந்தது ஆச்சரியமளித்தது. டெல்லியில் ஹரிஜன சேவக் சங் அமைப்பின் உறுப்பினர்கள், சேவகர்கள் கூட்டம் நடைபெற்றது. இப்பணியில் தாங்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை அவர்கள் எடுத்துரைத்தனர். அதற்குப் பதிலுரைத்த காந்தி, எல்லா இடங்களிலும் இதுபோன்ற நிலையே நிலவுவதை எடுத்துக் காட்டி அவர்களுக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

போபாலில் வரவேற்புப் பாடலைப் பாடிய பெண் குழந்தைத் தன் மோதிரத்தைத் தர விரும்பியது. கழற்றிப் பார்த்தும் எடுக்க முடியவில்லை. சரி பரவாயில்லை, உன்னிடமே இருக்கட்டும் எனக் காந்தி கூறிவிட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகம் வாடி விட்டது. பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அதில் கையை வைத்து, மோதிரத்தை எடுத்தவுடன் அந்தப் பெண் குழந்தை மகிழ்வோடு அதைக் காந்தியிடம் தந்தது.

மலபாரிலும் இதையொத்த நிகழ்வு நடந்ததைக் கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். கௌமுதி என்ற இளம்பெண், தன் நகைகள் அத்தனையையும் காந்தியிடம் வழங்க முன்வந்தாள். காந்தி, இதற்குப் பதிலாக வேறு நகையை மீண்டும் அணியக் கூடாது என்ற நிபந்தனை தெரியுமா எனக் கேட்டார். அதற்கு அப்பெண் தெரியும், இனி நகைகளே அணியமாட்டேன் என்றாள். நீ இளம் பெண், நாளை திருமணமாகும் போது உன் கணவன் அவற்றை அணியச் சொன்னால் எனக் கேட்டதற்கு,அப்படி கேட்காத ஒருவனையே தான் மணம் செய்து கொள்ளப் போவதாக அந்தப் பெண் கூறியதைக் கேட்டு காந்தி மகிழ்ந்தார்.

ஆந்திராவில்:

ஆந்திரா மிகச் சிறப்பான வரவேற்பைக் காந்திக்கு அளித்தது. இங்கு குக்கிராமங்களிலெல்லாம் காந்தி பயணித்தார்.

காந்திக்கு தங்க மோதிரம் ஓரிடத்தில் நிதியாக வழங்கப்பட்டது. காந்தி, இதை நான் அணிய முடியாது; அணிந்தால் மறுபடியும் திருமணம் செய்ய வேண்டும். எரவாடா ஜெயிலில் இருக்கும் அந்தக் கிழவி என்ன நினைப்பாள் எனக் கூறி, அதை ஏலத்தில் விட்டு நிதியைச் சேர்த்துக்கொண்டார். காந்தியின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. பல இடங்களில் வெடிச் சிரிப்புடன் அவர் சொல்லும் வார்த்தைகள் சுற்றியிருப்பவர்களை வாய்விட்டு மகிழ்வோடு சிரிக்க வைக்கும். அயர்ச்சி அளிக்கக் கூடிய இந்த நீண்ட பயணத்திலும் காந்தி தன் நகைச்சுவையோடு மிளிர்ந்ததை மகாதேவன் எடுத்துக்காட்ட தவறவில்லை.

காந்தி அபாரமான நகைச்சுவை உணர்வு உடையவர். அந்த உணர்வு தான் தன்னைப் பல நேரங்களில் காப்பாற்றியது எனக் காந்தியே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாக்பூரிலிருந்து பெஸவாடாவிற்கான இரயில் ஏறும் முன், காந்தியுடன் பயணித்த அபயங்கர் என்பவர், இரண்டு ஆங்கிலேயர்களைக் காந்திக்கு அறிமுகம் செய்கிறார். முதலில் ஒருவரைக் காட்டி, இவர் தான் முன்பு நம்மைச் சிறையில் அடைத்தவர், அடுத்தவர் கிரிக்ஸன், இணை ஆணையர் அடுத்தமுறை நம்மைச் சிறையிலிடப் போகிறவர் என அறிமுகப்படுத்த, சிரித்துக் கொண்டே அவர்களிடம் அளவளாவிய காந்தி, இங்கு சி.ஐ.டி எவரும் இல்லையே எனக் கூறிச் சிரிக்கிறார்.

இது போன்ற ஏராளமான சம்பவங்களை மகாதேவன் போகிறபோக்கில் குறிப்பிட்டபடியே செல்கிறார்.

ஆந்திராவில் காந்தியின் பயணத்தை ஒருங்கு செய்தவர் சிறந்த காந்தியத் தொண்டரான புலுசு சாம்பமூர்த்தி. அவருடனான அழகான உரையாடல்களையும் மகாதேவன் குறிப்பிடத் தவறவில்லை. ஆந்திராவில், கோதாவரி நதியில் பிரபாகரம் என்ற படகில் காந்தி பயணித்தார். இந்தப் படகு, காந்தியின் வருகையைக் கொண்டாடும் விதமாக மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்படகு கரையை நெருங்க நெருங்க, ஆற்றின் கரையில் கூடியிருந்த மக்கள் திரளின் மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷம் அளவின்றி எழுந்தது. காந்தியின் பயணம் முழுக்க இத்தகைய காட்சிகள் பலநூறு காணக் கிடைக்கின்றன. மலபாரிலும் இதே போன்றதொரு படகுக் காட்சியை மகாதேவன் பதிவு செய்துள்ளார். ஆலப்புழாவிலிருந்து கோட்டயத்துக்குக் காந்தி, ஸ்டீமரில் பயணித்தார். அவரது படகை ஒட்டி சிறு சிறு படகுகளில் மக்கள் அவரை வாழ்த்தியபடியே பயணித்து வந்தனர்.

இன்னொரு பாம்பு வடிவிலான நீண்ட படகில் ஓடப்பாடல்களை இசைத்தவண்ணம் மற்றொரு குழுவினர் ஏறக்குறைய படகுப் போட்டி போல துடுப்பு போட்டவாறு வந்தனர். இவற்றைக் காந்தி மகிழ்வுடன் கவனித்து மகிழ்ந்தார்.

ஆந்திராவிலும் தீண்டாமை யாத்திரையின், பல அம்சங்களான ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் செல்லுதல், பொதுக்கூட்டம், பெண்களுக்கான பிரத்யேகக் கூட்டங்கள், நிதி வசூல், தீண்டாமையைத் தவிர்க்குமாறு வலியுறுத்தும் காந்தியின் உரை என அனைத்து அம்சங்களும் இருந்தன.

அடுத்து பயணித்த மைசூர், காந்தியை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. செல்லுமிடமெங்கும் பெருந்திரளான மக்கள் காந்தியை வரவேற்கத் தவறவில்லை.

காந்திக்கான எதிர்ப்புகளையும் மகாதேவன் பதிவு செய்துள்ளார். மசூலிப்பட்டின சாலைகளில் காந்தியின் கார் இடையூறின்றி பயணித்தது எனக் குறிப்பட்டதன் மூலம், காந்தியின் வரவை அவ்வூர் பெரிதாகக் கொண்டாடவில்லை எனத் தெரிகிறது.

தமிழகம் காந்தியின் மனதுக்குகந்த இடம். தமிழகமும் அவ்வாறே அவரைக் கொண்டாடியது. எனினும், சுயமரியாதைக் கட்சியினரும் கம்யூனிஸ்டுகளும் சனாதனிகளும் ஆங்காங்கே தங்களது எதிர்ப்பைச் சிறிய அளவில் காட்டினர். கும்பகோணத்தில், பத்திருபது இளைஞர்கள் கறுப்புக் கொடி காட்டியபடி காந்தியே திரும்பிப் போ எனச் சில நிமிடங்கள் கோஷம் எழுப்பினர். ஆயினும் சச்ச்ரவுகள் ஏதும் இல்லை. ஶ்ரீரங்கத்திலும் கறுப்பு கொடியுடன் கடவுளை நம்பாதே என்ற போஸ்டரும் இருந்தது. காந்திக்காக வந்தவர்கள், கடவுளை நம்புங்கள் காந்தியுடன் நில்லுங்கள் (Believe in God; Stand with Gandhi) என்ற பதாகைகளைச் சுமந்து வந்தனர். கறுப்புக் கொடி காட்டிய இளைஞர்கள், காந்தி வரவேற்புக் குழுவினரோடு சிரித்துப் பேசியபடி வந்ததைக் காந்தி மகிழ்வுடன் தன் உரையில் குறிப்பிட மறக்கவில்லை.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் பிரிவு, சனாதனிகள், சுயமரியாதைக் குழுவினர் அனைவருடனும் காந்தி பேச்சுகள் நடத்தியதைச் சுருக்கமாக மகாதேவன் பதிவு செய்துள்ளார்.
அந்தந்த வாரப் பத்திரிக்கைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்பதால் வாசக நோக்கில் சுவாரஸ்யமானவற்றையே மகாதேவன் பதிவு செய்துள்ளார். காந்தி நடத்திய விரிவான உரைகளையும் பேச்சுவார்த்தைகளையும் பதிவதற்கான இடம் அதில் இல்லை. அதைச் சந்திர சங்கர சுக்லா, ஹரிஜன் இதழில் செய்திருக்கிறார்.

புதுவருடப் பிறப்பை ஒட்டி(1934) இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலுமிருந்து புத்தாண்டு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஜெனோவாலிருந்து ஒருவர் தன் புகைப்படத்தை அனுப்பி, தான் காந்தி போலவே இருப்பதைச் சுட்டிக் காட்டி தன் வாழ்வையும் காந்தியக் கொள்கைகளோடே நடத்தப்போவதாக உறுதியளித்திருந்தார்.

லண்டன், கிங்ஸ்லி ஹாலைச் சேர்ந்த முரியல் லிஸ்டர் (காந்தி இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்றபோது இவரது எளிய குடியிருப்பில் தான் தங்கியிருந்தார்)அவரதுஉறவினர் பெண் திருமதி.ஹாஹ் என்பவரோடு காந்தியின் இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் கலந்து கொண்டார். தான் சென்ற பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அம்மக்கள் தம்மிடம் குறிப்பாகச் சொல்லியனுப்பியதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். மகாதேவன் அவரோடு இந்த இயக்கம் குறித்து நேர்காணல் நடத்தி பதிவு செய்து கொண்டார்.இந்த இயக்கம் மகத்தானது எனக் குறிப்பிட்ட முரியல், காந்தி இதில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டினார். கூடவே, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலெல்லாம் தாம் நிகழ்த்திய உரைகளின் நிறைவில் மக்கள், காந்தியைப் பற்றிக் கூறுங்கள் எனத் தன்னைத் துளைத்தெடுத்ததை மகிழ்வோடு குறிப்பிட்டார்.

காந்தியின தீண்டாமை யாத்திரை குறித்துத் தனியே குறிப்பிட்டு எழுதிய புத்தகங்கள் அதிகம் இல்லை. இப்பயணம் தனியே தொகுக்கப்பட வேண்டியது. அந்த வரிசையில் இப்புத்தகம் முக்கிய இடம் பெறுகிறது.

***

சித்ரா பாலசுப்ரமணியன் – சென்னையில் வசிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளராகவும் பணி செய்துள்ளார். காந்தி 150 இற்காக காந்தியர்களை நேர்காணல் செய்திருந்தது அவருடைய அரும்பணி. தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். மண்ணில் உப்பானவர்கள், செயலறம் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். தன்னார்வமாக சங்க இலக்கிய வகுப்புகளையும் எடுத்துவருகிறார். மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here