வெயில் பழுத்து முதிர்ந்திருந்த ஒரு சோம்பல் மிகுந்த மதிய வேளையில் வீட்டு வாயிற்படியில் வெறுமனே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூக்கத்தின் பாரம் கண்ணிமைகளை அழுத்த அதனுடன் போராடியபடியே அமர்ந்திருந்தேன். மதியத்தின் இந்த நேரத்தில் தெருவில் எந்த ஆரவாரமும் இருக்காது. அதுவரையிலான இயக்கங்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து, மனிதர்களற்ற தெரு, விநோதமானதொரு மௌனத்தில் புதைந்து விடும். இவ்வேளையில், தெருநாய்கள் கூட அமைதியாக வீட்டு வாசல்படிகளுக்கு அருகே படுத்துக்கொண்டு இளைப்பாறும். எங்கேயோ ஒலிக்கும் ரேடியோப் பாடலை காற்று மெல்ல சுமந்து கொண்டு வரும். தள்ளுவண்டியில் காய்கறிகள் அல்லது கொய்யாப்பழங்கள் விற்க வரும் சிறுவணிகர்களின் நம்பிக்கையற்ற விளிகள் தேய்ந்தபடியே வரும். தொலைவில் உள்ள ஏதோவொரு வீட்டில் பாத்திரம் புரளும் ஒலி கேட்கும்.
மயங்கிக் கிடக்கும் தெருவை எழுப்புவது போன்றதொரு இரைச்சலுடன் தூரத்தில் ஒரு பழைய டி.வி.எஸ் 50 வண்டி வருவதைப் பார்த்தேன். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் ஒரு நொடி தயங்கியபடியே வந்து மிகச்சரியாக எங்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் என் அப்பாவின் நண்பரான பெருமாள் ஐயா. ஆனால், அவருக்குப் பின் அமர்ந்துகொண்டு வந்தவன் ஒரு இளைஞன். அதிகம் போனால் இருபத்து ஐந்து வயதுக்குள் இருக்கலாம்.
அவனைப் பார்த்து, “இந்த வீடு தான்”, என்றார் பெருமாள் ஐயா.
வாசலில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்த பெருமாள் ஐயா, “நம்ம வீடு தேடித்தான் வந்திருக்காரு. சாவடியில தெகைச்சு வழிகேட்டுத்திருந்தாரு. அதான் நானே என் வண்டியில கூட்டிட்டு வந்தேன்”, என்றார்.
“இனி நீ பாத்துக்கப்பா”, என்றபடி பெருமாள் ஐயா தனது வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்.
நட்பார்ந்த புன்னகையுடன் அந்த இளைஞன் என் கைகளைக் குலுக்கி, “என் பெயர் வசந்தன். மதுரையில இருந்து வர்றேன். நான் ரெங்கசாமி அய்யாவைப் பார்க்கலாமா, அவரு நண்பரோட பையன் நான்” என்றான்.
“அவரு பையந்தான் நான். அவருக்கு இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியல, ஆனாலும் பரவாயில்லை” என்றபடி, அவனை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்றேன்.
உள்ளறையின் சன்னலுக்கு அருகில் உள்ள கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்தார் அப்பா. மதிய வேளையில் அவர் உறங்குவதில்லை. கண்களை மூடியபடியே பல்வேறு நினைவுகளில் ஆழ்ந்திருப்பார். வழக்கமாக, இந்த நேரத்தில்தான் அவர் அன்றைய செய்தித்தாளை கருத்தூன்றிப் படிப்பார். காலையில், மேலோட்டமாக வாசித்தவற்றை ஆழ்ந்து வாசிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், இப்போது கடுமையான மூட்டு வலியால், அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால், பெரும்பாலும் கட்டிலில்தான் கிடக்கை.
அறைக்குள் நாங்கள் வந்ததுமே ஓசை கேட்டு எழுந்துகொண்டார் அப்பா, அந்த இளைஞனின் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார், நான் அறிமுகப்படுத்துவதற்குள்ளாகவே, வசந்தனே அப்பாவிடம் பேசத் துவங்கினான். “ஐயா, என் பெயர் வசந்தன், நான் மதுரையிலே இருந்து வர்றேன். மனோகரனோட பையன் நான்” என்றான்.
அப்பா முகம் மலர்ந்து, “நெனச்சேன், முகச்சாடையப் பாக்கும்போதே தெரிஞ்ச முகமா இருந்தது.” என்னைப் பார்த்து, “மனோகரன் எங்கூட வேல பார்த்தவரு. அவரு பையன் இவரு.” என்று உவகை பொங்கச் சொன்னார். பின் வசந்தனைப் பார்த்து, “கிட்டத்தட்ட இருவத்தஞ்சு வருசமா நானும் உங்க அப்பாவும் ஒண்ணாத்தான் பி.எஸ்.என்.எல்-ல வேலபார்த்தோம். பொங்கல் பொங்கறது மாதிரி அந்த கம்பெனி பொங்கறதையும் பார்த்தோம், மெல்ல மெல்ல மங்குறதையும் பார்த்தோம். நான் தான் முதல்ல ரிட்டயர் ஆனேன். அதுக்கப்புறம் நாலஞ்சு வருசத்துக்கு அப்புறமா உங்க அப்பா ரிட்டயர் ஆனார்னு கேள்விப்பட்டேன். இப்பல்லாம் அரசாங்க அலுவலகத்துல யாருப்பா கடைசி வரை வேல பாக்குறா? எல்லோருமே வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு கிளம்பிடுறாங்க. இல்லன்னா, நிர்வாகமே கிளப்பிவிட்டிருது. அப்பா சவுரியமா? ரொம்ப வருசம் ஆச்சு, பேசி” என்றார்.
வசந்தன் தயங்கியபடியே, “அப்பா இறந்து போய் ரெண்டு மாசம் ஆச்சுங்கய்யா” என்றான்.
“ஏ, என்னப்பா சொல்ற” என்றபடியே அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க முயற்சி செய்தார் அப்பா. நானும் வசந்தனும் அவரை மீண்டும் கட்டிலில் அமரச் செய்தோம்.
“ஒரு வருசமாவே படுத்த படுக்கையாத்தான் இருந்தாருங்க. உங்களுக்கே தெரிஞ்சதுதான், அவர் நிறைய ஸ்மோக் பண்ணுவாரு. ஆனாலும், ரிட்டயர் ஆனதுக்கு அப்புறமா நிறுத்திட்டாரு. நிறுத்தினாலும், அந்தப் புகையே பகையா வந்து உயிரப் பறிச்சுருச்சு. நுரையீரல் புற்றுநோய். நாங்க டாக்டர்ட்ட போகும்போதே நோயோட கடைசி கட்டத்துலதான் இருந்திருக்காரு. ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியல” என்றான் வசந்தன்.
நான் வசந்தனின் தோளின் மீது ஆதரவாகக் கைவைத்தேன். அவனிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பேசிப் பேசி, உணர்ச்சி கலவாமல் ஒரு சோகச் செய்தியை அவனால் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்ல முடிகிறது. அவனது துக்கம் அவனது முதுகுக்குப் பின்னால் போய்விட்டிருக்கிறது. ஆனால், அது எங்கள் முகத்திற்கு முன்னே இப்போது நின்று கொண்டிருக்கிறது.
அப்பாவும் அதிர்ச்சியை ஓரளவு உள்வாங்கிக்கொண்டிருந்தார். இயல்பு நிலைக்கு வந்து விட்டார். “ஆமாயா, உங்க அப்பாகிட்ட சொல்லிக்கிட்டே இருப்போம். அந்தக் கொள்ளிக்கட்டைய தூக்கி எறிஞ்சுருய்யான்னு. அந்தக் காலத்திலேயே ஒரு நாளைக்கு கொறைஞ்சது ரெண்டு பாக்கெட்ட காலி பண்ணிருவாப்ல. அவரு புகைய இழுக்குற இழுப்பப் பார்த்தா, அவரு அதக் குடிக்குறது மாதிரி இருக்காது, அந்தக் கருமம்தான் அவரக் குடிக்குறது மாதிரி இருக்கும்” என்றார்.
அதற்கு மேல் என்ன பேசுவது? சட்டென்று எங்கள் மூவரைச் சுற்றியும் ஒரு சிறிய மௌனம் படர்ந்தது. மின்விசிறியின் சத்தமும், மின்விசிறியின் காற்றுக்கு ஆடும் செய்தித்தாளின் படபடப்பும் மட்டுமே அந்த அறையில் கேட்டுக்கொண்டிருந்தது.
வசந்தனைப் பார்த்து, “ மோர் குடிக்கிறீங்களா?” என்றேன்.
அப்பா என்னிடம், “என்னப்பா, இதக் கேக்கணுமா, போய் கொண்டுகிட்டு வாய்யா” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மதியச் சாப்பாடு சாப்பிட்டேன்” என்றபடி, தன்னுடைய கைப்பைக்குள் இருந்து ஒரு கனமான மஞ்சள் நிற பிளாஸ்டிக் பையை எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.
“என்னய்யா இது?” என்றபடி அப்பா அந்தப் பையைத் திறந்து பார்த்தார். அதற்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. எல்லாம் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள். அதிர்ச்சியுடன் அவர் வசந்தனைப் பார்த்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
“உங்க அப்பா இறந்து போன செய்தியே எனக்குப் பெரிய அதிர்ச்சி, இப்ப என்னய்யா இன்னொரு அதிர்ச்சியக் குடுக்குற, எதுக்கு இவ்வளவு பணத்த எங்கிட்ட குடுக்குற, எனக்கொண்ணும் விவரம் புரியலயே” என்றார் அப்பா.
“சொல்றேன்யா” என்றபடி தான் அமர்ந்திருந்த சேரை அப்பாவின் கட்டிலுக்கு அருகில் நகர்த்தினான் வசந்தன். “அய்யா, இதுல ரெண்டு லட்ச ரூவா இருக்கு. இது நீங்க அப்பாவுக்கு கொடுத்த கடன். அவரால கடைசி வரைக்கும் அதத் திருப்பிக் கொடுக்க முடியல. அந்தப் பணம்தான்யா இது,” என்றான்.
அப்பா வியப்படைவதும் அதன்பின் வியப்படங்கி நெகிழ்வதைப் பார்ப்பதும் எனக்கு புதியதொரு அனுபவம். இதைப் பற்றி வீட்டில் ஒருவருக்கும் இதுவரைத் தெரியாது. அப்பா தனது முதுகுக்குப் பின்னிருந்த தலையணையைச் சுவற்றில் நட்டமாய் நிறுத்தி அதன்மேல் சாய்ந்தார். அவரது பார்வை எதிரிலிருந்த சுவற்றில் நிலைத்தது. ஆனால், அவர் மனது தூர தூரங்களைக் கடந்து எங்கெங்கோ புரண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. “உங்கப்பா அவரு தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கினப் பணம்ப்பா அது. கம்பெனில லோன் போட்டாரு. அவங்களும் குடுத்தாங்க. ஆனாலும், அவருக்கு அது போதல. கூட வேல செஞ்சவங்க கொஞ்சம் உதவினோம். கடைசி நேரத்துல அவருக்கு ரெண்டு லட்சம் தேவைப்பட்டுச்சு. அவரால அத மட்டும் புரட்டவே முடியல. இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் ஓடறாரு. ஒண்ணும் நடக்கல. கடைசில அவரோட நிலைமையப் பார்த்து நானாத்தான் அவருக்கிட்ட இந்தப் பணத்தக் குடுத்தேன். கண் கலங்கி நின்னுட்டாரு. இந்த உதவிய வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா குடுத்துடுறேன்னாரு. நீ குடுக்கும்போது குடுய்யா, கல்யாணத்த நல்லபடியா நடத்துய்யான்னேன். அதுக்கப்புறமும் ஒரு பத்து பதினைஞ்சு வருசம் ஒண்ணாத்தான் வேலை பார்த்தோம். என்னப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிட்டே இருப்பாரு, எப்படியும் குடுத்துருவேன்யான்னு. எனக்கும் பெரிய தேவை எதுவும் ஏற்பட்டதில்ல. நல்ல மனுசன், அவரா குடுக்கும்போது வாங்கிக்கலாம், அவரப் போட்டு நச்சரிக்கவேண்டாம்னு நானும் பணத்தப் பத்தி அவருகிட்ட அதிகம் பேசிக்கிறதில்ல. வாழ்க்கைல மனுசனுக்கு எதிரா எத்தனையோ விஷயங்கள் நடந்து போயிருது. காட்டாத்து வெள்ளத்துல இழுத்துக்குட்டுப் போறமாதிரி வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் எங்கெங்கயோ இழுத்துட்டுப் போய்ப் போடுது. அதுல சில விஷயங்கள செய்ய முடியுது. பல விஷயங்கள செய்ய முடிய மாட்டெங்குது. ஒரு கட்டத்துல அவருகிட்ட பணம் கொடுத்ததையே நானும் மறந்துட்டேன். இப்ப நீ வந்து பணத்தக் காட்டினதுக்குப் பிறகுதான் எனக்கே இதெல்லாம் ஞாபகம் வருது.” என்றார்.
வசந்தன் சிறிய புன்னகையுடன் சொன்னான், “நீங்க மறந்திருக்கலாம்யா. அது உங்க பெருந்தன்ம. நாங்க மறக்கக் கூடாதுல்ல. அதுவும் அப்பா படுத்த படுக்கையா இருந்த காலத்துல தினமும் இதப் பத்திதான் பேசுவாரு. ஒரு கட்டத்துல, என்னாலதான் அவருக்குப் பணம் குடுக்க முடியல. என் சார்பா, நீ அவருக்குப் பணம் கொடுக்கணும். அப்பத்தான் என் ஆவி ஆறும்னாரு. சரிப்பான்னு அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். அப்போ நான் படிச்சிட்டு இருந்தேன். வேலைக்குப் போகல. அப்பா புண்ணியத்துல போன வருசம்தான் எனக்கு சென்னையில ஒரு ஐ.டி கம்பெனில வேலை கிடைச்சுச்சு. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு ரெண்டு லட்சம் தேறுனதும் எடுத்துட்டு வந்துட்டேன்யா.” என்றான்.
அப்பா அவனைக் கருணையுடன் பார்த்தார், “யப்பா, நீயும் என் மகன் மாதிரிதான். இப்பத்தான் வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்க. அப்பாவும் தவறிட்டாரு. உங்க குடும்பத்த நீதான் கொண்டு செலுத்தணும். இந்த நேரத்துல போய் இந்தப் பணத்த எனக்குக் கொடுக்க வந்திருக்கியே. வேணாம்யா. இந்த பணம் எனக்கு வேணாம். ஆண்டவன் புண்ணியத்துல, நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீ இத எடுத்துக்கிட்டுப் போய் நல்லா இருய்யா” என்றார் உணர்ச்சி பொங்க. இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் நெஞ்சுக்குள் இன்னதென்று சொல்ல முடியாததொரு உணர்ச்சி அலை புரண்டது.
வசந்தன் உடனே அதை மறுத்துப் பேசினான், “எங்க அப்பாவுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் வாய்ச்சுருக்காங்கன்னு நெனச்சா எனக்கே பொறாமையா இருக்குய்யா, இந்தப் பணத்த நீங்க வாங்குனாத்தான், என் அப்பாவுக்கு நான் குடுத்த வாக்கு நிஜமாகும். என் அப்பாவோட கடன், என் கடன்தான். அவரே வந்து இந்தப் பணத்த உங்க கையில் குடுக்குற மாதிரு நினைச்சு நீங்க இத வாங்கிக்கணும்” என்றான்.
அப்பா உணர்ச்சி ததும்ப எழுந்து கொண்டார், “உங்க அப்பா ஆகப்பெரிய சொத்த சம்பாரிச்சிருக்காருய்யா, நீதான் அந்தச் சொத்து. அப்பாதான் செத்துட்டாருல்ல, கடன் குடுத்தவனும் அத மறந்துட்டான், நாம எதுக்கு எடுத்தேறி இந்தப் பணத்தக் குடுக்கணும்னு நீ நெனக்கலயில்ல. இவ்வளவு தூரம் தேடிவந்து பணத்தக் குடுக்க வந்திருக்கியே. இன்னிக்குச் சொல்றேன்யா, இந்த நல்ல மனசுதான்யா உன் மூலதனம். அத வச்சு முன்னேறி போய்க்கிட்டேயிருய்யா, உனக்கு நடக்குறதெல்லாம் நல்லதாத்தான் நடக்கும், பணத்தக் குடுய்யா, உங்கப்பாவுக்காக இல்ல, உனக்காக இந்தப் பணத்த வாங்கிக்கிறேன்”, என்றார்.
வசந்தனும் சந்தோசமாகப் பணத்தைக் கொடுக்க அப்பாவும் சந்தோசமாக அதைப் பெற்றுக்கொண்டார். எப்பேற்ப்பட்ட மனிதர்கள்! எப்பேற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல்!
காலத்தின் இலை
ஒரு இலை விழுவதைப்பார்த்து
ஒவ்வொரு இலையும்
விழுகிறது
காணக் காண
எல்லாம் ஓர் இலை
எப்போதும்
முப்போதும்
விழாத இலை
அது ஆதியுமின்றி அந்தமுமின்றி அந்தரத்திலேயே
நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு தொடக்கமும் இல்லை
ஒரு முடிவும் இல்லை என்பதான ஒரு விளையாட்டை.
–அர்ஜுன்ராஜ்
அர்ஜுன் ராஜின் இந்தக் கவிதையை வாசிக்கையில், எனக்கு வசந்தன் என் அப்பாவிடம் பணம் கொடுத்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, வசந்தன் அல்ல, மனோகரன் அய்யாவேதான் என் தந்தைக்குப் பணம் கொடுத்து கணக்கை நேர் செய்துகொண்டிருக்கிறார் என்று தோன்றியது. ஒவ்வொரு தந்தையும் மகன் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மகனும் தந்தையின் நீட்சியாகவே வந்தமைகிறான். ஒவ்வொரு இலையும் தனித்தனியானதுதான். ஆனாலும், எல்லாமே ஒர் இலைதான் அல்லவா! தந்தையரும் தனயர்களும் பிறந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இலை உதிர்வது போல உதிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த மாபெரும் இலைக் கூட்டத்தில், வசந்தன் என்ற ஒளிமிக்க ஓர் இலையை என்னால் இந்த வாழ்க்கையில் பார்க்க முடிந்திருக்கிறது என்பதையே பெருமிதமாக எண்ணிக்கொள்கிறேன்.
***

