Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்பயிர் நிலங்களை விழுங்கிய தார்ப்பாம்புகள்

பயிர் நிலங்களை விழுங்கிய தார்ப்பாம்புகள்

ரமேஷ் கல்யாண்

நாவல்கள் எப்போதும் கடந்தகாலத்தில்தான் நிகழ்கின்றன. நல்ல நாவல்கள், ஏதோ ஒருவிதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நிகழ்காலத்தைத் தீண்டவோ சீண்டவோ செய்கின்றன. ஆகவே மனித வாழ்வுக்கும், மனிதத்துக்கும் தொடர்பிருக்கும் வரை இவ்வித நாவல்கள் இருக்கும். அப்படியான ஒரு களத்தில் எழுந்திருக்கிறது இந்நாவல். 

சுமார் அறுபதாண்டுகால வேளாண்வாழ்வை 43 அத்தியாயங்களில் தொய்வோ, அவசரமோ இன்றி, கூர்மையான அவதானிப்புகளுடன், சற்றே அடங்கிய மொழியில் சொல்லிச் செல்கிறது. ஜவ்வாது மலைத்தொடர்கள், தோல்தொழிற்சாலை போன்ற சொற்கள் தவிர, பூகோளரீதியான அடையாளத்தைத்தரும் வழமையான உந்துதலை தவிர்த்திருக்கிறது நாவல். அவ்வகையில் இது எந்நிலத்துக்கும் உரியதாகிறது. 

நாவலின் மையக்கதாபாத்திரம் சுந்தரம் என்றாலும், மையப்பாத்திரம் விவசாயம்தான். கதைநாயகனின் தோற்றம், வளர்ச்சி, கொண்டாட்டம், சவால்கள், சிக்கல்கள், கையறுநிலையில் நிற்றல் என்ற கதை வளர்ச்சியை, அப்படியே விவசாய நிலம் என்பதற்குப் பொருத்தலாம். பொருந்தும். 

இந்நாவலைப் பொறுத்தவரை, சாலை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்கள் பிடுங்கப்பட்டு, எளிய மக்கள் நாடோடியாக துரத்தப்படும் அவலம், அதிகாரத்தின் பேயாட்டம் என்றெல்லாம் நாவல் களத்தை திரித்தெடுப்பதற்கெல்லாம் அவகாசமில்லாமல், நிதர்சனத்தின் சுயமிழக்காமல் தனித்துவத்துடன் நாவல் பயணிக்கிறது. சொல்லப்போனால், விரல்நீட்டாமல் சமூகம் நோக்கி ஒருவிதக் கண்டிப்புடன் பேசுகிறது. 

சாலை விரிவாக்கத்துக்கு சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல, இறுதியில் விளைநிலம் வாங்கிய பெரும் பணக்காரனின் வீடுமே அதே நிலைக்கு உள்ளாவதாக நாவல் முடியும்போது, நாவலின் பேசுபொருளுக்கு ஒற்றைப்படைத் தன்மை இல்லை என்பதை உணரமுடியும். 

ஆரம்ப அத்தியாயத்தின் தலைப்பு ‘ஆழ நட்ட கல்’. அது சாலை விரிவாக்கத்துக்காக விவசாயி சுந்தரத்தின் நிலத்தில் நடப்பட்ட கல். கடைசி அத்தியாயத்தின் தலைப்பு ‘கடைசியில் நட்ட கல்’. அது அதே விளைநிலத்தை வாங்கி மாளிகை கட்டிய சேகரின் வீட்டுக்குள் நீண்டு, விரிவாக்கத்துக்காக நடப்படும் கல். இந்த இரண்டு கற்களுக்கு ஊடேதான் நாவல் விரிந்தெழுகிறது. 

நாலு ஆறாகி, எட்டாகி, பத்தாகி, நூறாகும். அப்போது வழிமட்டும்தான் தனியாகப் போகும். ஊரெல்லாம் காணாமலாகும் என்ற பேச்சிக் கிழவியின் வார்த்தை நிஜமாகிறது. கற்கள் நகர்ந்து நகர்ந்து மண்ணைக் கவ்விச்சென்று கொண்டே இருக்கின்றன. 

நட் ஹாம்ஸனின் ‘நிலவளம்’ என்ற நார்வே நாவலில், ஒருவன் அடர்காட்டின் ஒரு பகுதியை தனியாகவே உழைத்து, திருத்தி, வளமான நிலமாக மாற்றும் சவால்மிகு வாழ்க்கை பேசப்படும். அப்படியான நாவலின் எதிர்ப்பயணமாக, வளமான பூமி எப்படி போக்குவரத்துக் காடாக இழிகிறது என்பதை இந்நாவல் பேசுகிறது. நிலம் கைவிடப்படும்போது, மனிதன் கைவிடப்படுகிறான். 

விவசாயிகளுக்கு சொந்தமாயிருக்கும்வரைதான் நிலம் நிரந்தரமானது’ என்று நாவலின் அடிநாதமாக ஒரு வரி நாவலில் ஒலிக்கிறது. ஏன் அவனால் விவசாயியாக தொடர முடிவதில்லை என்ற அவலச்சிடுக்கை, தலைமுறை மாற்றத்தின் சுரணையின்மையை, வணிகத் தந்திரத்தின் நித்தியத்தை, முன்னேற்றம் எனும் ராட்சத டைனோசாரின் பாத நகத்தில் நசுங்கும் விவசாயப் பச்சையை, நாவல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது, அதீதமின்றி.

சொந்தமாக நிலம் வைத்திருந்து, தனது அம்மாவின், பாட்டியின் நகைகளை விற்று விவசாயத்தில் போட்டு அனைத்தையும் இழந்த குடும்பப் பின்னணி உள்ளவர்கள், இந்த நாவலை உலர்ந்த கண்களால் படித்துவிட முடியாது. அது மிகையுணர்ச்சி நாடகமாக இல்லாமல், வலியை வெளியே சொல்ல விரும்பாமல் அடி உதடு கடித்து நிற்கும்போது, கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் இயல்பான வெளிப்பாடாக அமைந்திருப்பது நாவலின் வெற்றியாகவே கொள்ள வேண்டும். 

எங்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதை எழுதிக் காட்டிவிடும் அவகாசங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அப்படிச் செய்யாமல் கவனமாக எழுதிச் சென்றிருப்பது, நாவலின் தொனிக்கு அடியுரமாகி இருக்கிறது.

வாய்க்காலின் ஒருபக்க வரப்பில் எழுத்தாளரும், மறுவரப்பில் வாசகனும் நடக்க, வயலுக்குள் புகுந்துவிடாமல் வயலைப்பற்றி பேசுக்கொள்ளும் விலக்கத்துடன் நாவல் செல்வதில் கலையம்சம் நேர்ந்திருக்கிறது. 

சாலை விரிவாக்கத்துக்காக இயந்திரக்கைகள் நிலங்களையும், கோயில்களையும், வீடுகளையும் நிதானமாக இடித்துச் சமப்படுத்தும் சம்பவங்களில் துவங்கும் நாவல், கொல்லைக்குச் சொந்தக்காரரான சுந்தரத்தின் வாழ்வைச் சொல்லிக்கொண்டே போகையில், நிலங்கள் பறிபோகயில் வேளாண் வாழ்வும் வலியும் சொல்லப்பட்டுவிடுகின்றன.

புல்டோசரின் எல்லாம் வல்ல இயந்திரக் கை கட்டிடங்கள் உள்ளே சென்று மையப்பகுதியை அசைக்கும். அவை நொறுங்கி விழுந்தவுடன் தனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாதமாதிரி கையை உருவிக்கொள்ளும் என்ற வரி சாமானிய வாழ்வுக்குள் தொழில்நுட்பம் புகுவதன் குறியீடாக உள்ளது. 

வெள்ளைக்கதர் உடையில், கம்பீரமாக, தீர்மானமான, தெளிவான நோக்குடன் இருக்கும் சுந்தரம் ஒரு விவசாயியாக வளர்ந்து, பலமிழந்து, இறுதியில் முதுமையால் நடமாட்டம் நொடித்த நிலையில் தொய்ந்துபோன கட்டிலில் உயிரை விடும்போது, அவர் கடைவாயில் வழிந்த பால் கோடுகள், வாரிசுகளின் கையாலாகாத்தனத்தின் கையெழுத்துகள். 

விவசாயக் குடும்பத்துப் பெண்களான கொல்லைக்காவல் காக்கும் பெரியமுருகனின் மனைவி ராஜி (எப்போதும் கீற்று பின்னிக்கொண்டே இருப்பவள்), சுந்தரத்தின் மனைவி பொன்னம்மா, பேச்சிக்கிழவி என எல்லாப்பெண்களும் எல்லாத் துன்பங்களுக்கும் இடையிலும் வீட்டுக்கு பெரும் ஆதாரமாகி நிற்கின்றனர். எழும்போதும், விழும்போதும் சேர்ந்தே உள்ளனர். விவசாயக் குடும்பங்களில் தனிநபர்கள் இல்லை. அவ்வாறான தனி நபர்களாக உருக்கொள்ளும்போது, அனைத்தும் நொடித்து விழுகின்றன.

அக்காலத்து ஆண்களின் பெரும்பாடுகளும், இறுகிய, சுயநல முகமும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. சுந்தரமே – ஒரு ஆசிரியராக இருந்தவர் – தான் மட்டும் தனியாக அறையில் பொட்டலங்கள் தின்பவராகவும், மனைவியின் அனைத்து நகைகளையும் விற்பவர், சாலை விரிவாக்கத்துக்காக தரப்பட்ட பணத்தை தனது பெட்டியிலேயே வைத்து மூடி அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொள்பவராகவும் இருக்கிறார். சுமதியின் கணவன் கொல்லையே வாழ்க்கை என்றிருக்கிறான்; விஜயாவின் கணவன் அரசியல் தொண்டன் குடித்துவிட்டு விபத்தில் ஒருவனை சாகடித்துவிட்டு நிற்கிறான். 

நலிந்த விலங்கு வேட்டையாடப்படும்போது, சிதிலச் சதைகளை தின்னவரும் காட்டுநாய்களைப்போல, விவசாயநிலத்தை, சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தும்போது, ரியல் எஸ்டேட் தரகர்கள் வருகின்றனர். கிடைத்தவரை லாபம் என்பதே வணிக விழுமியமாக இருக்கும் அவர்கள், மோகனிடம் பேரம் பேசி, காக்கா சுபையருக்கு விற்க ஒத்துக்கொள்ள வைத்து, முன் பணம் கொடுத்த பின்பு, சேகரை அழைத்துவந்து அவருக்கு மாற்றி விற்கச்சொல்லும் ‘வணிக தர்மத்தை’ காணமுடிகிறது. 

சுந்தரம் சுயநினைவற்றுப் போயிருக்கையில் நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்துகொண்டு, பணத்துடன் வரும்போது சுந்தரம் மூச்சுக்குப் போராடிக்கொண்டு, பணத்தைக் கையில் கொடுக்கையில் பற்றிக்கொண்டு இறுதி மூச்சை விடுகிறார். தீட்டுச்சடங்குகள் முடியும் முன்பே, பத்திரப்பதிவுக்கு அலுவலகம் வர அழுத்தம்கொடுக்கும் தரகர் கண்ணனும் அவனது அலட்சிய மொழியும்; சாவு நடந்த வீட்டில் படையல் செய்ய இயலாமல் பாகப்பிரச்சனை; தமக்கான பங்கு சதவீதத்தை உறுதி செய்தால்தான் கையெழுத்து போட வருவோம் என்று சொல்லும் பரிவான தமக்கைகள்; கிடைத்த வாய்ப்பில் சற்று பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் சகோதரியின் கணவன் முத்து. இப்படியான வெட்கக்கேடான நிலைமைக்கு வர சுந்தரம் என்ற விவசாயி ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்பதை வாசகன் மிக கனத்த இதயத்துடன் உணர்வான். 

விவசாயி காலமெல்லாம் எதையாவது விதைத்துக் கொண்டே இருக்கவேண்டும். விளைச்சலைப் பற்றிக் கவலைப் படக்கூடாது என்றொரு வரி நாவலில் இருக்கிறது. ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் அல்ல. வாழ்க்கைமுறை. அவனுக்கு இவ்வித ஆன்மீகமான மனநிலை ஒரு வாழ்வாகவே பரிணமித்திருப்பதை நாவல் முழுதும் காணலாம். சுந்தரத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘நெற்கள் வேறு என்றும் விதைகள் வேறு என்றும் நினைப்பார்’ என்பதை கவனிக்கலாம். பெரியமுருகன் தண்ணீர் வாய்க்கால்களிடம் பேசுகிறார். சுந்தரம் கரும்புப் பயிர்களிடம் உரையாடுகிறார். எங்கிருந்தோ வரும் ராமனுக்கு அடைக்கலம் தந்து கரும்பு காய்ச்சுமிடத்தில் வேலையும் இடமும் கொடுத்து ஆதரிக்கிறார். அவன் ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடுகிறான். அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்வதுமில்லை. 

பொன்னம்மாளின் அத்தனை நகைகளும் விவசாயத்துக்காக, வீட்டை ஜப்தியிலிருந்து காக்க ஒவ்வொருமுறையும் மீட்டுவிடலாம் என்றே சுந்தரம் விற்கிறார். பொன்னம்மாவுக்கு தாய்வீட்டு நகை விரயமாவதில் கடும்கோபம் இருக்கிறது. சண்டை வருகிறது. ஆனால் விளைநிலத்தில், குடும்ப அமைப்பில் அனைத்தும் சமரசமாகிறது. தனது இறுகிக்காலங்களில் நிலம் விற்கப்படும்போது அவளுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று ஒரு வரிவருகிறது. அது வாழ்வுச் சோர்வல்ல. கனிதல். 

நிலம் விற்கப்பட்டுவிட்டபின், அதைத் தெரிவிக்க மோகன் வரும்போது, மூன்று தலைமுறையாக ‘கொல்லைக்காவலை’ மட்டுமே செய்யத்தெரிந்த பெரியமுருகன் பொறுப்பாக வாய்க்காலில் நீர் விட்டுக்கொண்டிருக்கிறான். நிலம் விற்றாயிற்று. இனி காவல் வேலை செய்யவேண்டாம் என்று தெரிவிக்கும்போது, அவன் ஒரு நில உரிமையாளனைப்போல தவிக்கிறான். கண்ணீர் விடுகிறான். நிலத்துக்கு அவன் உரிமையாளனாக இருக்காவிட்டாலும், ‘சொந்தக்காரன்’ என்பதை அவன் அதே கொல்லையில் தொடர்ந்து சேகரிடம் (புது உரிமையாளன்) வேலை செய்து, இறுதியில் வரப்பின் மேல் கைகால்கள் விரித்து படுத்துக் கிடந்தவாறே தன் இறுதி மூச்சை விட்டிருக்கிறான் என்பதை அறியும்போது,நிலமே வாழ்வு என்ற அவனது ஆத்மார்த்த உறவை நாம் உணரமுடியும். 

சுந்தரம், ஆசாரியின் நிலத்தை குத்தகைக்கு பயிர் செய்து, நல்ல நிலைக்கு வரும்போது விற்பதற்காக அது பறிபோகிறது. சகோதரன் சந்திரசேகரின் வறண்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து, செப்பனிட்டு, முன்செலவு செய்து அது பசுமையேற்று, அறுவடை நெருங்கும்போது அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு, இப்போது விற்றால் நல்ல விலைபோகும் என்று அண்ணன் சுந்தரத்தை ‘பயிரிட்டது போதும்’ என்று ஒரே நாளில் விலக்கும்போது சுந்தரம் வளரும் குழந்தையை விட்டுவிட்டுப் போவது போல தவிக்கிறார். ஆனால் அப்படி உருப்பெற அவர் செய்த முன்செலவுகள் எவ்வளவு! அவற்றை திருப்பித் தந்தால் அந்த உறவின் மதிப்பை, வளர்வித்த உயிர்ப்பச்சையை ஈடு செய்துவிட முடியுமா! என்ற கேள்வியை வெளிப்படையாக கேட்காகமல், வாசகனின் கவனத்தை நாவல் ஈர்க்கிறது. 

முனியன் நிலத்தை பெரிய முருகன் தனது உழைப்பை மூலதனமாக்கி, பணம் செலவழித்து கொல்லையைத் திருத்தி, வளமாக்கி பயிர்செய்கிறார். சுந்தரம் தனது கொல்லைக் காவலன், விவசாயக் கூலியாக இருந்த பெரிய முருகன், விவசாயியாக மாறுவதை ஏற்று அனுப்பி வைக்கிறார். தனக்கு கீழ் வேலைசெய்பவனை ஒரு வணிகர் வேறு கடை வைத்து முன்னேற அனுமதித்து விடுவாரா என்று கேட்டுக்கொண்டால் விவசாயியை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அங்கேயும், நன்றாக வளர்ந்து அறுவடை நெருங்கும் சமயம், முனியன் வந்து பயிரிட்டது போதும் என்று அவனை கத்தரித்துவிடும்போது, கொல்லையிலிருந்த மாட்டை அவிழ்த்து, கயிற்றை அதன் முதுகின் மேல் போட்டுவிட்டு, லாந்தரை எடுத்துக்கொண்டு, துண்டை உதறிக்கொண்டு மாட்டுடன் வெளியேறிக்கொண்டே ‘போகம் முடிந்தபிறகு திருப்பிக் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொல்கிறான். துணுக்குறும் முனியன் ‘இப்போதே போகவேண்டாம்’ என்று சொல்லும்போது ‘உரிய ஆள் வாய்விட்டுக் கேட்டபின் திருப்பித் தருவதுதான் ஞாயம்’ என்று விட்டுப் போகிறான். எத்தனை பெரிய முருகன் அவர்! பண்பாட்டு ஞாயத்துக்கு கல்வி பொருட்டே இல்லை. மீண்டும் சென்று சுந்தரத்திடம் கொல்லைக்காவலுக்கு கேட்கும்போது, அவர் சேர்ந்துகொள்ளச் சொல்கிறார். எவ்வளவு விசாலமான சுந்தரம் அவர் !

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள், சாலை விரிவாக்கத்துக்காக, நிலத்தை கையகப்படுத்தும் காட்சிகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டு, அந்த விவசாய நிலத்தின் துவக்க காலத்திலிருந்து, பயிரிடல்களை, வேளாண்பாடுகளை, மனிதர்களை, குடும்பத்தை, போராட்டங்களை, சமரசங்களை, இழப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறது இவ் விவசாய நாவல். 

ஒரு காலத்தில் கால்நடை மேய்ப்பவர்களிடமிருந்து சுந்தரத்தின் மூதாதைகள் அந்நிலத்தை வாங்குகிறார்கள். சுந்தரத்தை படிக்க வைக்கிறார்கள். மக்களைப் பற்றி சிந்திக்கும் முதல்வர் ‘படித்தவர்களின் வேலை கற்பிப்பது’ என்ற வேண்டுகோளுக்கு இணங்கி ஆசிரியராகி, பிறகு அம்மாவின் வற்புறுத்தலால் விவசாயத்துக்கு திரும்பும் சுந்தரம், பாடுபட்டு, அதன் அருமை தெரியாத அடுத்த தலைமுறையாலும், முன்னேற்றம் என்ற பெயரில் பாழாய்ப்போவதை சகிக்கமுடியாமல் பேசவும் முடியாத நிலையில் தன்னை உதிர்த்துக் கொள்கிறார். சுயநினைவிருக்கும் வரை நில விற்பனையை அவர் ஏற்பதில்லை. 

விளைநிலத்தில் போட்ட பணத்தால் லாபம் வருவதில்லை. சேமிப்புகள், நகைகள் கரைகின்றன. நிலத்தின் பகுதிகள் சூதாட்ட விடுதி, உணவு விடுதி, பஞ்சர் கடை போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்பட்டு, விளை நிலத்துக்கு வணிகப்புற்றுநோய் பீடிக்கிறது. விவசாயத்தை லாபமாக்கவும் முடியாமல், கைவிடவும் முடியாமல், இழுபறியில் இருக்கும் சாமானிய விவசாயிக்கு, சேற்றில் புதைபட்ட காட்டெருமை, கழுகுகளுக்கு தன்னைத் தின்னக்கொடுக்கும் நிலைதான். 

விவசாயக் கூலி, விவசாயி, சிறுவிவசாயி, பெருவிவசாயி என்ற பிரிவுகளில், கூலிகள் எங்கிருந்தாலும் கூலியாக மாறிக் கொண்டுவிடுகிறார்கள். காக்கா முருகனும், பெரிய முருகனும், சின்ன முருகனும், சுப்ரமணியும் கூலிகளாக, உணவுவிடுதிகளில் மேசை துடைப்பவராக, உணவுக்கு வாகனங்களை கொடியசைத்து அழைக்கும் வேலைக்காரராக மாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். சிறுவிவசாயி மாற்றுப் பயிர் முறைகளை முயலுகிறான். பெருவிவசாயிக்கு விவசாயம் ஒரு தொழில் உபாயம். இதில் சாதாரண விவசாயி மட்டுமே, தோற்றுக் கொண்டே இருப்பவன். நிலவளம் புத்தாக்கம் பெறுவதற்கு, அரசுகளும் கூட்டுறவு அமைப்புகளும் தீவிரமாக முன்வந்தால், அறிவியல் பூர்வமான தாக்கத்தை நிகழ்த்தினால் விவசாயம் பிழைக்கும். அப்படியானவை நாவலில் எதுவும் இல்லை; ஏனென்றால் அப்படியொன்று வேளாண் சமூகத்துக்கு கிடைப்பதில்லை என்ற நிதர்சனம்தான். 

அடுத்த தலைமுறைப் படிப்பு அவர்களை சிப்பந்திகளாகவும், அலுவலர்களாகவும் கழித்துப் போடுகிறது. அந்த தலைமுறை, விவசாயத்தை மேம்படுத்தவும் தெரியாமல், வேலைகளில் உச்சமும் பெறமுடியாமல் இரண்டும்கெட்டானாக மிஞ்சுகிறார்கள். முன் தலைமுறைச் சொத்தை விற்றுப் பிழைத்துக் கொள்வதில் கூச்சமற்றுப் போய்விடுகிறார்கள். 

தனது விளைநிலத்தில் கட்டப்பட்ட ஆடம்பர சாலையோர உணவு விடுதியில் கால் வைக்கும்போது சுந்தரத்தின் மகன் மோகனுக்கு அந்தக் கூச்சம் இருக்கிறது – பரிமாறிய உணவைச் சாப்பிடும்வரை. உணவகத்தின் ஒரு மூலை, முன்பு வாய்க்கால் நீர் கூடித் தேங்கிய இடம் என்ற குறிப்பு, எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. நாவலாசிரியர் இப்படியான பல இடங்களைத் தொட்டு, சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.

நிலத்தை பயிர் பூமியாக பார்த்த தலைமுறையின் எச்சமாக நின்றவர்களுக்கு அதன் மதிப்பு என்பது வெறும் விலையாகத்தான் தெரிகிறது. அதுவும் முழுமையாகத் தெரியவில்லை. சுந்தரம் தனது இறுதிப் படுக்கையில் இருக்கையில், டவுனில் கம்ப்யூட்டர் செண்டர் வைத்துக்கொண்டு சொற்ப சம்பாத்தியத்தில் இருக்கும் மகன் மோகனிடம் சென்று நிலத்தை விலைபேசும்போது, நிலத்தின் மதிப்பாக எவ்வளவு உயர்த்திக் கேட்கவேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. போட்டிவிலைகளைப் பற்றிய அறிதல் கூட இல்லை. மற்றொரு மகன் கார்த்திக்கிடம் தொலைபேசியில் கேட்கும்போது, அது என்ன கோவண நிலம்.. ஏதோ பேசி வர்ற விலைக்கு நீயே வித்துடு’ என்று பழைய பேப்பரை விற்கும் தொனியில் சொல்கிறான். ஆனால் அப்படியொரு கோவண நீள நிலத்தை இன்று அவனால் வாங்கமுடியாது என்பது அவனுக்கு உரைப்பதே இல்லை. வாங்குபவர்கள் சார்பில் இஸ்மாயில் முடிவாகச் சொல்லும்போது, ‘ஏதோ நல்ல விலை போட்டுக்கொடுங்கள்’ என்று தீர்மானமின்றிக் கேட்கிறான். அவர்கள் விலையை மாற்றாமல் முன்பணத்தை கையில் திணிக்கும்போது, மறுப்பின்றி வாங்கி வைத்துக்கொள்கிறான். வாங்குபவனுக்கு தெரிந்திருக்கும் நிலத்தின் மதிப்பு விற்பவனுக்கு தெரிந்திருப்பதில்லை. ஏனென்றால் அவன் விவசாயியும் அல்ல. வணிகனும் அல்ல.

நாவல் துவக்கத்தில் பூக்கள் முளைத்த எள்ளுச் செடிகள் தம்மை நசுக்க வரும் இயந்திர உருளைகளுக்கு முன் எதிர்ப்பைக் காட்டுவதுபோல எதிர்த்து நிற்கும் என்ற காட்சி, விவசாயியின் நிலைமை. ஆனால் அந்தப் புற்கள் காட்டும் எதிர்ப்பைக்கூடக் காட்டாமல், கொடுப்பதை வாங்கிக்கொண்டு, விளைநிலத்தை விற்றுத் தின்பவர்களாக பின் தலைமுறை இழிகிறது. 

முன்பொருமுறை தரகர்கள் சுந்தரத்திடம் வீட்டுக்குச் சென்று வற்புறுத்தி விலை கேட்கும்போது, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே முகத்தை கூடத் திருப்பாமல் ஒரு விரலை உயர்த்தி ‘ஒரு கோடி’ ரூபாய் என்று சொல்லி தரகர்களை விரட்டிய கம்பீரம், மகனிடம் இல்லை. ஏனென்றால் அவன் விவசாயியும் அல்ல. வணிகனும் அல்ல.

சுந்தரத்தின் விளைநிலத்தின் பகுதி சாலை விரிவாக்கத்துக்கான கையகப்படுத்தலால் பறிபோகிறது. ஆனால் மிச்சமிருக்கும் நிலத்தையும் காப்பாற்றிக்கொள்ளாத நிலைக்கு குடும்பம் செல்கிறது. இந்நிலம் தனக்குப்பின்னால் இருக்காது என்பதை அவர் யூகித்தாலும், தானிருக்கும்வரை விற்பதில்லை என்பது விவசாயப் பிடிமானமும் பிடிவாதமும் ஆகும். மணல் கொள்ளையை பார்க்க நேரும்போது பள்ளத்தில் விழுந்து கையொடிகிறது. பிறகு கொல்லைக்குச் செல்லும்போது விழுந்து காலொடிகையில், கொல்லை அவருக்கு என்றென்றைக்கும் தூரமானதாகிவிடுகிறது. 

தன்னை இதே கொல்லையில், பிற மூதாதைகளைப் புதைத்த மாதிரியேதான் புதைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாலும், தலைச்சன் மகன் என்பதால் எரியூட்டப்படுதலால், அவருடைய சிறிய கோரிக்கையும் நிறைவேறுவதில்லை. ஆனால் பின்னால் மாளிகையைக் காவல் காக்கும் சுப்பிரமணி பேய்கள் நடமாடுவதாகவும், அங்கே புதைக்கப்பட்ட சுந்தரத்தின் பேய் அது என்று சொல்கிறான். இந்த வரி கேள்விப்படலாக சொல்லப்பட்டாலும், எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டதற்கு முரணாக அமைந்திருக்கிறது.

சாலை விரிவாக்கத்துக்காக போயிருக்காவிட்டாலும் அந்த நிலம் நீண்டநாளைக்குகாப்பற்றப் பட்டிருக்காது என்பதுதான் நிதர்சனம். 

பொன்னம்மாளின் நகைகள் பயிரிடலுக்காக விற்பனைக்குப் போகும் அருமையான அத்தியாயம் சத்தியமானது. ஒரு திருமணத்துக்காக தயாராகும்போது பெட்டியைத் திறக்கையில் நகை காணாமல் போயிருப்பதும், அது விற்கப்பட்டிருப்பதையும் யூகிக்கிறாள். கடும் கோபமுறுகிறாள். ஆனாலும் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பி, தனது பெட்டியைப் பூட்டிவைக்கிறாள். அதை அறியும் சுந்தரத்தின் குற்ற மௌனம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. 

பின்னொரு சமயம், மகனுடைய காதல் விஷயத்தால் சுந்தரம் போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரும்போது, கடனை அடைக்க‘அம்மாவின் தலை ஜடை பில்லையை விற்றுவிடலாம்’ என்றும் மகன் சொல்லும் அளவுக்கு அவளது நகைகளை யார் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்பதே குடும்பத்தில் அவளுடைய இடம். 

சுந்தரம் பூஜை செய்யும் படத்தில் இருக்கும் தங்கத்தாலான பொட்டுக்கள் காணாமல் போயிருக்க, மனைவி பொன்னம்மாளை சந்தேகித்தில திட்டித் தீர்க்கும்போது, அவை உதிர்ந்திருக்கும் என்றும், தான் எடுக்கவில்லை என்றும் சொல்பவள் ‘என்னுடையது எவ்வளவோ போச்சு’ என்று ஒரு வார்த்தை சொல்கிறாள். ஆழமான இடம் அது. தனது உடம்பிலிருந்த அத்தனை நகைகளையும் நிலத்துக்காக இழந்தவளின் பெயர் ‘பொன்னம்மாள்’ என்பது ‘நகை’ முரண்.

நாவலில் ஆரம்பநிலைக் காதல்கள் உருவாகி, அவை முதிருமுன்பே உலகியல் சிக்கல்களால் உதிர்கின்றன. கோவிலில் பூஜை செய்யும் இளைஞன் பரஞ்சோதி காரணமின்றி ஒலிக்கும் கோவில்மணி, தன்னை அவன் அழைப்பதாக நினைக்கும் சுமதியின் சொல்லப்படாத காதல். ரேஷன்கடையில் காதல் கடிதங்கள் தரும் நாகேந்திராவுடன் விஜயாவின் காதலும் அவற்றைப் பின்னாளில் தேடித்தேடி எடுத்து அடுப்பில் போடும் அவலமும். விருந்தினராக ஊருக்கு வந்த கண்மணிக்கு கடிதங்கள் எழுதிக் காதலிக்க முயன்ற கார்த்தி. சுந்தரம் குடும்பத்தின் எந்த காதலும் திருமணத்தில் முடியும்படியான நாடகீயத்தன்மையற்ற காதல்கள். ஆனால், இப்படி காதல்வசப்பட்டவர்கள் அனைவருமே தொடர்கதை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது சுவாரசியமான குறிப்பு. 

நாவலின் ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே விரிவான காட்சியில்தான் துவங்குகின்றன. காட்சிகளும், காட்சி மூலம் இடங்களும் பிரதேசங்களும், இடங்கள் மூலம் சம்பவங்களும், சம்பவங்கள் மூலம் தனி மனித மற்றும் குடும்ப அனுபவங்களும், அனுபவங்களின் கோர்வை மூலமாக ஒரு வேளாண் வாழ்க்கையும் பின்னி நாவலாக விரிக்கப்பட்டுள்ளன.

மரக்கலன்களைச் செய்யும்போது இணைப்பு இடங்களில் சிறு மரஆணியை அறைந்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகு ஆணி அந்த மரப்பொருளின் அங்கமாகவே மாறும். அதைப்போல சிற்சில வரிகளின் மூலம் அறைந்து இணைக்கப்பட்டு, நாவலை கட்டுக்கோப்பாக வைக்கும் வரிகள் பல உள்ளன. அவை வாக்கியச் சுருக்கங்களாக இல்லாமல், ஒரு பார்வையை, ஒரு உணர்வெழுச்சியை குறிப்பாகச் சொல்லுவதாக அமைந்திருப்பவை நாவலுக்கு அணிசேர்ப்பவை. 

பெட்டிச்சாவி குறித்த காட்சியில் பொன்னம்மாவின் மோதிரமும் அப்பாவின் கதையும்; கடிதங்கள் குறித்த காட்சிகளில் துவங்கி ஒரு காதல்கதையும் தோல்வியும்; நெற்குவியல் முளைநெல் குறித்த காட்சிகளில் துவங்கி சுந்தரத்தின் முன்கதை; மாடு விற்கபட்டபின் அந்த இடத்தை பற்றிய காட்சியில் துவங்கி பெரியமுருகனின் விவசாய முயற்சிகள்; – இவ்வாறாக பலவற்றைச் சொல்லலாம். 

நாவலில் அமானுஷ்யத்தை எழுதி இருந்தாலும், அவற்றைத் தர்க்கரீதியாக யோசிக்க இடமின்றி, நாவலின் மையக் கூறுகளுக்கு உபகருவியாகியிருக்கிறது. பெரியமுருகன் கொல்லையில் படுத்திருக்கையில் வயலில் களை எடுக்கும் பேய், சோளத்தை அறுவடை செய்திருக்கும் பேய், மாளிகைக் கட்டப்பட்டபோது விழுந்து இறந்தாக சொல்லப்பட்ட பெண் சித்தாளின் ஆவி, பெரிய முருகனின் ஆவி, சுந்தரத்தின் ஆவியெனும் பிரமை போன்றவை. எந்தப்பேயும் பயமுறுத்தவோ, தீமையோ செய்வதில்லை. சொல்லப்போனால் சுப்பிரமணி அந்தப் பெண் பேயை கொஞ்சமாவது அணைத்துக்கொள்ள வேண்டும் என்று முயல்கிறான். பெரியமுருகன் திண்ணையில் வந்து உட்கார்ந்து பேய் அவனோடு பேசுகிறது. சுந்தரம் கொல்லையில் ஒரே இரவில் திருடப்பட்ட தென்னங்கன்றுகளை அறிந்து, காக்கா முருகனை சுந்தரம் சந்தேகமுறுகையில், அவன் வருந்துகிறான். அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, மறுநாள் காலையில் பார்க்கும்போது, அனைத்தும் மீண்டும் நடப்பட்டிருக்கின்றன. 

நாவலில் பல இடங்கள் துல்லியமான விஷயங்கள் கவனப்பட்டிருக்கின்றன. நாம் விரும்பினால் அவற்றின் உபரிவிவரங்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, பேச வரும் முஸ்லீம் ஆள் ஒருவருக்கு சொம்பில் தண்ணீர் கொடுக்கும்போது ‘வாய்வைத்து’ குடித்தார் என்று ஒரு வரி. விருந்தினர் வீட்டிலோ, தம் வீட்டிலோ விவசாயிகள் குடிக்கும் கலத்தில் வாய்வைத்து எச்சிற்படுத்திக்கொண்டு குடிக்கும் வழக்கம் இருப்பதில்லை. 

மற்றொரு இடத்தில், நிலத்தை விற்பனைக்காக பார்வையிடச் செல்லும் சேகர் காலில் செருப்பு அணிவதை தவிர்க்க முனைந்தாலும், கரடான நிலத்தால் செருப்பு போட்டுக்கொண்டு செல்கிறான். விவசாயிகள் நிலத்தில் செருப்புக்காலுடன் நடப்பதில்லை. அங்கே சேகர் விளைநிலத்தை விற்பனை மனையாக பார்க்கத்தொடங்கிவிடுகிறான். 

 வெளியிலிருந்து ஒரு சிறு கல்லைக் கூட கிணற்றுக்குள் போடுவதை, ஒரு சிறுவனாக இருந்தாலும் சரி, விவசாயி அனுமதிக்க மாட்டான். விவசாயம் பொய்த்துப் போனபோதும் கூட, கிணற்று நீரின் ஆழமறிய ஒரு கல்லைப் போடுபவனை, பெரிய முருகன் மென்மையாக கண்டிக்கிறான். கிணறு தோண்டுகையில் அடியாழத்தில் வெட்டப்பட்டு கற்களை மேலே கொண்டுவர ஆகும் கடின உழைப்பை மதிக்கும் மனம் அது. 

அம்மாவின் புடவையைக் கிழித்து சிறுமி தாவணியாக அணிந்து கொள்கிறாள். அதனால் அவளுக்கு முழு பெரிய ஆள் கூலி கிடைக்கும் என்ற கூலியாட்களின் சமயோஜிதம் மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. 

சுந்தரம் ‘பாப்லின்’ சட்டை போட்டிருப்பது, சிறு கிராமங்களில் பள்ளிகள் திறக்க முனையும் முதல்வர், எவர்சில்வர் பாத்திரங்கள் வரத் தொடங்கியுள்ளன என்ற குறிப்புகள், நாவலின் காலத்தை உத்தேசமாக யூகிக்க வைத்துள்ளன. அதுவே பாத்திரங்களின் இயக்கங்கள் மற்றும் குணாதிசயங்களுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருவன.

சம்பவங்களை, பாத்திரங்களை நாவல் நெடுக அவ்வப்போது தொடர்புறுத்தியும், சங்கேதமாகவும் உடனழைத்துச் சென்றிருக்கிறார் நாவலாசிரியர். இரவல் நகையை அணிந்து கொண்டிருக்கும் சுமதியை பெண்பாக்க வருவதும், அமையாமல் போவதும் வழக்கம். ஒருமுறை விருப்பமின்மையால் அவள் குளியலறைக்குள் கதவை தாழிட்டுக்கொண்டு, யார் அழைத்தாலும் வெளியே வருவதில்லை. ஆனாலும் சுமதியை நிச்சயம் செய்துகொண்டு விடுகிறார்கள். திருமணம் ஆனபின், கரட்டு பிரதேசத்தில் இருக்கும் கணவன் வீட்டுக்குச் செல்லும்போது அங்கே பின்கட்டில் குளியலறைக்கு கதவே இருப்பதில்லை. அவளுக்கு அதிகபட்ச சுதந்திரமென்பது குளியலறையில் உடைகளைந்து குளிப்பது. அதுவும் இனி வாய்க்காது. 

ஆரம்ப அத்தியாயத்தில், தென்னைமரத்திருட்டு தொழிலை கலையாக செய்யும் காக்கா முருகன் பிடிபட்டு, பஞ்சாயத்தில் தண்டனையாக கட்டைவிரல் நசுக்கப்படுகிறது. அதன் பிறகு நாவலில் தென்படாத அவன், இறுதி அத்தியாயத்தில் உணவகத்துக்கு வாகனங்களை கொடியசைத்து அழைக்கும் வேலையைச் செய்வதைச் சொல்ல்லும்போது, கட்டைவிரல் பிடிமானம் இல்லாததால் கொடியசைப்பதற்கு கஷ்டப்படுவது குறிப்பிடப்படுகிறது. 

சுந்தரம் இருக்கும்வரை அவர்தான் விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும். அவர் நினைவு பிறழ்ந்து மரணப்படுக்கையில் இருக்கும்போதே அவர் மகனிடம் தரகர் முன்பணம் தருவதன் நோக்கம், சுந்தரம் விரைவில் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புதான். நிலத்தை வாங்குபவனிடம் இருப்பது நரித்தனம் என்றால் அவரது மகன்களுக்கே அப்படி இருப்பது அற்பம். அவர் இறந்து தீட்டுநாட்கள் முடியும் முன்பே, படையலைக் கூட போட விடாமல் அலுவலகம் வந்து பதிவு செய்து கொடுக்க வீட்டுக்கு வந்து கண்ணன் நெருக்கடி தருவதற்கு காரணம், மோகன் வேறு ஒருவருக்கு மாற்றி எழுதி தந்துவிடமாட்டான் என்று என்ன நிச்சயம்? என்ற பதைப்புதான். ஏனென்றால் அப்படி அவனை வார்த்தை மாறவைத்து வாங்கியிருப்பவர்தான் இவர். மனிதக் குரூரம் வெளிப்படும் இந்த இடங்களை, மிக சன்னமாக சொல்லப்பட்டசம்பவங்களைக் கோர்வைப்படுத்தித்தான் நாம் உணர முடியும். 

ஒரு சில அத்தியாயங்களில் தேவைக்கு அதிகமான அளவு விவரணைகளுடன் விரிந்திருக்கின்றன. உதாரணமாக சோளக்கொல்லை பொம்மை, மணல்கொள்ளை குறித்த அத்தியாயங்கள் ஒன்றிரண்டைச் சொல்லலாம்.

நாவலாசிரியர், அடங்கிய தொனியில், மிகச்சிக்கனமானஆனால் அழுத்தமான வரிகளை அழகியலோடும் சாதித்திருக்கிறார். 

சுமதி எங்கோ தொலைவில் ஏரியைக் கடந்து இருக்கும் கிராமத்தை நோக்கி நடக்கும்பொது வறண்ட நீளமான ஒற்றையடிப் பாதையைப் பார்க்கும்போது ‘சுமதிக்கு தன் எதிர்காலம் முழுவதையும் பார்த்துவிட்டது போலிருந்தது’ என்ற வரி; 

பெண்பார்க்க வருபவர் முன் இரவல் நகையணிந்துகொண்டு இருப்பதை ‘இரவல் நகைகள் உடம்பில் ஒட்டாமல் தம்மைக் காட்டிக்கொள்ளும்’ என்ற வரி; 

குடும்ப சண்டையில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்லும் பொன்னம்மாவைப் பார்க்கையில் ‘தீய்ந்த குடும்ப வாடை வீசியது’ என்ற வரி; 

பட்டுப்புழு அரைக்கும் ஒலி மழை பெய்வதைப் போலிருந்தது. உயிர்வாழும் ஆவேச ஒலி உலுக்கியது’ என்ற வரி; 

‘நாட்டுக்குத் தேவையென்றால் குடிமகன் அனைத்தையும் இழக்கவேண்டும்’; 

‘எத்தனை முறை எண்ணினாலும் பணம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை. பணத்தின் பிரத்யேக மணம் வீசியது’; 

புதிய பள்ளிகளை உருவாக்கும் புத்திசாலியான, மக்கள் சேவையில் இயங்கும் முதல்வரின் பெயரைக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பெயர் சொல்லாமலே அவர் யார் என வாசகன் புரிந்துகொள்ளும்படி வைத்திருப்பது, இலட்சிய அரசியல் பார்வையை மென்மையாகச் சொல்கிறது. பெயரைக் குறிப்பிட்டிருந்தால் காலத்தகவலாகத்தான் இருந்திருக்கும்; சொல்லாமல் விடும்போது அடையாளமாக மாறியிருக்கிறது. 

நெல் கொட்டப்பட்ட வீடு மஞ்சள் கடலாக இருந்தது; தரையில் பரந்திருக்கும் நெல்களை அளையும் கால்களை ‘கால்கள் தேர்ச்சக்கரங்கள் போல நகரும் . நெல்லில் வெள்ளை மெட்டி மெல்ல மறைந்து தோன்றும்’; 

 ‘மழை பெய்த சற்று நேரத்தி வெள்ளம் பெருகும். பாம்புக் கூட்டங்கள் போல் ஓடிவரும்’ ;

‘பயிரிடுவதில் காலம் உறைந்துள்ளது. அதில் நிகழ்வது வெறும் பருவ மாற்றங்கள்தான்’; 

முகப்பு அட்டையில் தார்ச்சாலைக் கருப்பில் பசுவின் பின்பகுதி வரையப்பட்டு, புத்தகத்ததை அப்படியே பின் அட்டை நோக்கி 180 பாகை, திருப்பினால் பசுவின் முன்பகுதி வருமாரு அமைத்திருப்பது அருமை. சாலைக்கடியில் புதைந்திருக்கும் விளைச்சல் நிலத்தை மனதில் அசைபோட்டு, தார் ரோடில் படுத்திருக்கும் பசு. ஓவியரின்/ வரைகலையாளர் பெயர், புத்தக அறிமுகக் குறிப்பில் தந்திருக்கத் தகுதியானது. 

சாலைகளால் எங்கும் போகமுடியும் என்கிறாள் பேச்சி. தவிர்க்கவியலாத முன்னேற்றச் சாலைகளடியில் புதைபட்டிருக்கும் விளைநிலங்களின் ஆன்மா ஒரு பேயைப்போல நாவல் முழுதும் உலவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேயை நமக்குப் பிடித்திருக்கிறது. 

***

ரமேஷ் கல்யாண் – ஓசூரில் வசிக்கிறார். விளம்ப்ரத்துறையில் பெங்களூரில் பணிசெய்கிறார். தொடர்ந்து இலக்கிய பத்திரிக்கைகளில் வாசிப்பு அனுபவக் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிறுவாணி வெளியீட்டில் திசையறியாப் புள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மின்னஞ்சல் முகவரி : rkliterature2023@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here