சுகுமாரன்
பிழைப்பு நிமித்தம் ஊரை விட்டுப் போய்ப் பெரு நகரத்தில் குப்பை கொட்டத் தொடங்கி இருபது ஆண்டுகள் கழித்து, எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சமயத்தில் பங்காருவைச் சந்தித்தேன். உத்தியோகபூர்வமான உடையில் காலில் ஷூவும் கழுத்தில் மாட்டிய அடையாள வில்லையுமாக முன்னால் விசுக்கென்று கடந்து போன நபரைப் பார்த்ததும் முதலில் சந்தேகமாகத்தான் இருந்தது. நிறுத்திவைத்துக் கேட்கத் தயக்கமாக இருந்தது. பங்காருவை அப்படி சர்வாலங்காரத் தோற்றத்தில் முன்பு ஒருபோதும் பார்த்ததில்லை. இது அவனாக இருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றினாலும் முகத்தில் இடது கண்ணுக்கும் இடது காதுக்கும் மேலே நெற்றிப் பொட்டில் தெரிந்த காய வடுவும் ஓட்ட நடையும் அது பங்காருதான் என்று நம்ப வற்புறுத்தின.
எங்கள் நிறுவனம் ஊழியர்களின் மன மகிழ்ச்சிக்காக இரண்டு நாள் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் புத்துணர்ச்சி முகாம். அதன் பொருட்டு நாங்கள் எல்லாரும் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் ஹைதராபாத்திலிருந்தும் மசினகுடிக்கு வந்திருந்தோம். யானைகளின் சுகவாச கேந்திரத்துக்கு எங்களை அழைத்து வந்தது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.
எங்கள் நிறுவனத்துக்கு, இல்லை இல்லை, நிர்வாக இயக்குநருக்குச் சொந்தமான பண்ணை இல்லம் மசினகுடியில் இருந்தது. அடர்ந்த வனத்துக்குள்ளே பத்துச் சொச்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய மாளிகை. நிறுவனம் தொலைக் காட்சி ஒளிபரப்பில் முன்னணியில் இருந்தது. எனவே நிகழ்ச்சித் தயாரிப்பை முன்னிட்டும் வியாபார பேரங்களை வெளியே தெரியாமல் விவாதிக்க உதவும் வகையிலும் மாளிகை கட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்த்தால் கருங்கல் கட்டுமானமாகத் தென்பட்ட அதற்குள் சகல வசதிகளும் இருந்தன. எல்லா அறைகளிலும் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது வினோதமாக இருந்தது. காசிருந்தால் துருவப் பிரதேசத்திலும் ஏசி வைத்துக் கொள்ளலாம்தானே? ஒரு நட்சத்திர ஓட்டலை ஏளனம் செய்து பின்னுக்குத் தள்ளி விடும் ஆடம்பரத்துடனும் இருந்தது அந்த இல்லம்.
பண்ணை இல்லத்தைப் பராமரிக்க ஏராளமான பணியாட்கள் இருந்தார்கள். செய்யும் வேலைக்குத் தகுந்ததுபோலத் தனித் தனிக் குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். வரவேற்புக்கும் அறைகளை ஒதுக்குவதற்கும் தண்ணீரை விநியோகிக்கவும் மின்சாரத்தை விநியோகிக்கவும் ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம். கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய இன்னொரு கூட்டம். அவர்கள் எல்லாரும் நிரந்தரப் பணியாளர்கள். அதைத் தவிர குற்றேவல்கள் செய்வதற்காக உள்ளூர்வாசிகளான சில பழங்குடிகள். ஆனால் அவர்கள்தாம் அதிகமாக வேலை செய்தார்கள் என்பதை ஒரு நாள் தங்கலிலேயே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த நிலத்தின் நரம்புகளையும் நாளங்களையும் கைவசப்படுத்திருந்தவர்கள் அவர்கள்தான். அந்த மண்ணின் திடத்தையும் மூச்சையும் தெரிந்து வைத்திருந்தவர்கள். வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கற்றிருந்தவர்களும் அவர்கள்தான். அவர்களை அதற்காகத்தான் அங்கே வேலையில் வைத்திருப்பதாக பண்ணை வீட்டின் தலைமைப் பராமரிப்பாளரான தன்றாஜ் வைஸ்யா நாங்கள் பண்ணை இல்லத்துக்கு வந்து சேர்ந்ததும் நிகழ்த்திய வரவேற்புரையில் விவரமாகச் சொன்னார்.
இந்தக் கூட்டத்தைத் தவிர இன்னொரு கூட்டமும் அங்கே இருந்தது. அது ஓட்டுநர்கள். ஒன்றிரண்டு உள்ளூர் வாசிகளைத் தவிர மற்ற எல்லாரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். பண்ணை உபயோகத்துக்காக நான்கு ஜீப்புகளும், இரண்டு வேன்களும், தயாரிப்புக் குழுவுக்காக ஒரு குளிர் பேருந்தும் விஐபிகள் பயன்படுத்துவதற்காக இரண்டு விலையுர்ந்த உள்ளூர் தயாரிப்புக் கார்களும் எம்டியின் போக்குவரத்துக்காக வெளி நாட்டு இறக்குமதிக் காரும் இருந்தன. வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள் மலைக் குளிரையும் காட்டு வாசத்தையும் சகிக்க முடியாமல் வந்த சில நாட்களிலேயே ஓடி விடுகிறார்கள். இந்தத் தகவல்களையும் வைஸ்யாதான் சொன்னார்.
பெயர்தான் அழுத்தமான வடக்கத்தி உச்சரிப்பில் இருக்கிறதே தவிர ஆசாமி சுந்தரத் தெலுங்கர். எங்கள் நிறுவனத்தின் தெலுங்கு அலைவரிசையின் பொது மேலாளர். இதற்கு முன்பு தெலுங்கு சினிமா உலகத்தில் இருந்தவர். பிரபலமான ஸ்டூடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தவரை எங்கள் நிர்வாக இயக்குநர் வலை வீசிப் பிடித்து வந்து பதவி கொடுத்திருந்தார். வைஸ்யாவின் சினிமாத் தொடர்புகள்தான் அப்படி வலையெறியச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் எங்கள் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பிலும் கால் வைக்கத் திட்டமிட்டிருந்தது. அதற்குத் தோதான நபர் அவர்தான். அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் தவிர இந்தித் திரையுலகிலும் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவரை அலுவலகத்தில் பார்க்கும் நாட்கள் சொற்பம். பெரும்பாலும் மசினகுடியில்தான் வாசம். வாரத்துக்கு ஒருமுறையோ பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோதான் பார்க்க முடிந்திருக்கிறது. மசினகுடியிலோ சென்னை அலுவலகத்திலோ இல்லாத நாட்களில் வெவ்வேறு நகரங்களுக்கு விமானத்தில் பறந்து கொண்டிருப்பார்.
சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில். அங்கிருந்து மசினகுடிக்கு வேன். இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக நின்று நின்று நீண்ட பயணம் செய்து வந்து சேர்ந்தபோது பகலுணவு நேரமாகி இருந்தது. எல்லாரையும் களைப்பைச் சீக்கிரம் போக்கி விட்டு உடனடியாக உணவுக் கூடத்துக்கு வரும்படி சொல்லியிருந்தார் வைஸ்யா. அதைச் சொல்ல எல்லாரையும் திரட்டியபோதுதான் பண்ணை இல்ல மகாத்மியத்தையும் விலாவரியாகச் சொன்னார். ‘புத்துணர்வு தரும் இரண்டு நாட்களில் அரை நாள் போய் விட்டது. மீதியிருக்கும் ஒன்றரை நாளில் நம்மை உற்சாகப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டாமா?’ என்று கேட்டார். அலுவலகக் கசடு இல்லாத நாட்களுக்காக எல்லாரும் ஏங்கி இருக்கிறோம் என்பது எங்கள் பிந்தைய பரபரப்பில் அப்பட்டமானது.
புத்துணர்வின் பொருள் அன்று பகலுணவுக்குப் பிறகு விளங்க ஆரம்பித்தது. முதலில் வெவ்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்கள் பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பிறகு வெற்று இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அலுவலக விவகாரங்களைப் பேச்சில் இழுத்து வரக் கூடாது என்று எல்லாரும் நினைத்திருந்தபோதும் அதைச் சுற்றிய புறணிகளும் கிசுகிசுப்புகளும் துப்புத் துலக்கல்களும்தான் பேச்சில் அதிகமாக இருந்தன. சற்று நேரத்தில் அவை சலிப்பூட்டத் தொடங்கின.
சங்கிலிப் புகைஞரான எங்கள் நிர்வாக மேலாளர் ஒரு நாள் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டார். அதன் பிறகு அவரைப் பார்க்கச் செல்லும் எல்லா ஊழியர்களிடமும் புகை பிடிப்பதன் தீமையைப் பற்றி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அறிவுரை பலனளிக்காத கட்டத்தில் தடைச் சட்டம் கொண்டு வந்தார். அலுவலக வளாகத்தில் புகைப் பிடித்தால் சம்பளத்தில் வெட்டு என்று அறிவித்தார். அது ஓரளவு பயன் அளித்தது. ராஜாவை விட ராஜ விசுவாசம் மிகுந்தவர்களான ஊழியர்களில் கணிசமான பேர்வழிகள் சிகரெட்டைக் கைவிட்டார்கள். அதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். குறிப்பாக அதன் மூலம் மிச்சமாகும் காசைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள். தடையையும் செலவையும் பற்றிக் கவலைப்படாத புகைஞர்களாக நானும் இன்னும் சிலரும் இருந்தோம். யாரும் பார்க்காமல் ரகசியமாகப் புகைத்து வந்தோம்.
அலுப்பேற்படுத்திய கூட்டு அரட்டையிலிருந்து விலகி எனக்கு ஒதுக்கப் பட்ட அறைக்கு வந்தேன். என்னுடைய பயணப் பையில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் பெட்டியையும் கொளுத்தியையும் எடுத்துக் கொண்டு மாளிகையின் பக்கவாட்டில் மறைவான இடம் தேடி நடந்தேன். யார் கண்ணிலும் படாத இடத்தில் நின்று பாக்கெட்டை எடுத்தவுடன் எங்கிருந்தோ அந்நிய மொழி அசரீரி கேட்டது. ‘சர்ஜி, இதர் தூம்ராபான் ந கரேங்க்’. ஒலியைத் திரும்பிப் பார்த்தபோது சீருடை அணிந்த கூர்க்கா நின்றிருந்தான். இன்னும் நடந்து கட்டடத்தின் பின் பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.
பணியாட்களின் குடியிருப்பு. அதற்கும் அப்பால் வகைவகையான மரங்கள் ஆகாயம் முட்ட நின்றிருந்தன. பிரம்மாண்டமான தாவரச் சுவர்போல அடர்ந்திருந்த மரங்கள். அதைத் தாண்டிச் சென்றதும் காட்டுத்தனமாக வளர்ந்திருந்த மூங்கில் கூட்டம். காட்டு அணில்களும் முயல்களும் நடைச் சலசலப்பில் வெருண்டு ஓடின.
பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டருகே கொண்டு போனபோது நெருக்கத்தில் காலடியோசை கேட்டது. சிகரெட்டை முதுகுப் பக்கம் மறைத்துக் கொண்டு திரும்பினேன். சந்தேக பங்காரு நின்றிருந்தான். தயக்கத்துடனும் பணிவுடனும் ஆனால் கறாராகவும் ‘’ சார், இங்க சிகரெட்டுப் புடிக்கக் கூடாதுங்’’ என்றான்.
‘’இன்னும் புடிக்கலீங்களே’’ என்று வழிந்துகொண்டே அவன் முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் என்னுடையதை விட வழிசலான சிரிப்பு இருந்தது. பெரிய மனிதர்களைக் குற்றம் சாட்ட நேரும்போது ஏற்படும் தயக்கச் சிரிப்பு. அந்தச் சிரிப்பால்தான் முகத்தை உன்னிப்பாகப் பார்க்க நேர்ந்தது. அவனுடைய இடது கண்ணுக்கும் காதுக்கும் மேலே நெற்றிப் பொட்டில் பூரான் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற வடு .இவன் பங்காருதான் சந்தேகமே இல்லை.
எங்கள் பகுதியில் அந்த நாட்களில் வீட்டுக்கு வீடு கழிப்பறைகள் கிடையாது. தெருவில் பாதி வீடுகளில்தான் அவை இருந்தன. அவையும் உலர் கழிப்பறைகள். முனிசிபாலிட்டி ஊழியர்கள்தான் காலையில் வந்து அதைச் சுத்தம் செய்வார்கள். எங்கள் தெருவுக்கும் பக்கத்திலுல்ள மூன்று தெருக்களுக்கும் ஒரே துப்புரவுப் பணியாளர்தான். மந்திரி. நாங்கள் குடிவந்த காலம் முதல் பொருள் வயின் நான் பிரியும் நாள்வரைக்கும் மந்திரிதான் எங்கள் சுகாதார இருப்புக்கு உத்தரவாதமாக இருந்தான்.
மந்திரி என்ற பெயரில் யாரும் இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றும். ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி யாரும் அவனைக் கூப்பிட்டது இல்லை. சாதிப் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். அவனை மட்டுமல்ல. அவன் மனைவியையும் மகளையும் மகனையும் அப்படித்தான் அழைத்தார்கள். எங்கோ அத்துவானத்திலிருந்து வருவதுபோலத்தான் மந்திரி வருவான். அவனும் அவனுடைய மொத்தக் குடும்பமும் முனிசிபாலிட்டித் தொழிலாளர்கள். கருக்கலிலேயே அந்தக் குடும்பம் எங்கள் பகுதிக்கு வந்து விடும். இரண்டு சக்கரங்கள் வைத்த பெரிய துத்தநாகப் பீப்பாயை எங்கள் பகுதியிலிருந்த முனிசிபாலிட்டி பகுதி அலுவலகத்திலிருந்து உருட்டிக் கொண்டு யாராவது ஒருவர் முன்னால் வர மற்றவர்கள் கையில் துடைப்பத்தையும் வாளியையும் மலம் அள்ளும் தகர முறத்தையும் துக்கிக் கொண்டு பின்னால் வருவார்கள். அவரவர் உபகரணங்களுடன் வெவ்வேறு தெருக்களுக்குப் பிரிந்து போவார்கள். பகலில் வேலை முடிந்தாலும் பொழுது அடைகிறவரைக்கும் எங்கள் வட்டாரத்திலேயே இருப்பார்கள். அநேகமாக எங்கள் வீட்டையொட்டியிருந்த சந்தில். இருட்டிய பிறகு கடைசி பஸ்ஸில்தான் வீடு திரும்புவார்கள். மற்ற நேரங்களில் அவர்களைப் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது வெகுகாலம் புதிராகவே இருந்தது. தற்செயலாகத்தான் அன்று நகரத்தின் விளிம்பாக இருந்த பகுதியிலுள்ள காலனியிலிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டு பிடித்தேன்.
இரண்டு விதமான அழைப்புகளால் மந்திரியின் வருகை தெரியும். காலையில் மலம் அள்ளும் வாளியுடன் வந்து பொடக்காலிக் கதவைத் தட்டி ‘’ கக்கூசுக்குத் தண்ணியூத்துங்க சாமீ’’ என்பான். நண்பகல் வாக்கில் அலுமினியப் போசியுடன் ‘’சாமி பளயது கீது இருந்தாப் போடுங்’’ என்று வந்து நிற்பான். சில நேரங்களில் மனைவியோ மகளோ மகனோ வருவார்கள். அப்படி ஒரு நாள் வந்தபோதுதான் மந்திரியின் மகன் பெயர் பங்காரு என்று தெரிய வந்தது. அவனைச் சாதிப் பெயர் சொல்லி அழைக்கவோ மந்திரி பயா’’ என்று கூப்பிடவோ மனது ஒப்பவில்லை. அவன் பெயரைக் கேட்டேன்.
‘’என்ற பேர எதுக்குக் கேக்கறிங்’’.
‘’பேரெதுக்குக் கேப்பாங்க, கூப்புடத்தான். ஆமா, ஒனக்குப் பேரிருக்கில்ல?’’
‘’ஆமா, பெத்த பேரு, நீங்க சும்மா மந்திரி பையான்னே கூப்புடுங்க சாமி ’’ என்றான்.
‘’அப்புடிக் கூப்புடாம இருக்கறதுக்காட்டித்தா பேரக் கேக்குறன்’’
உடம்பை எட்டுக் கோணலாக்கிக் கொண்டு சொன்னான். ‘’ பங்காரு… பங்கார் சாமி’’
அம்மாவைக் கூப்பிட்டு அவன் வருகையைச் சொன்னேன். சில நொடிகளில் பழைய மீன் குழம்பின் வாடையுடன் அம்மா வாசலுக்குச் சென்று திரும்புவதையும் பங்காரு போசியை மூடியால் அடைத்தபடி நகர்வதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு நடக்கவே தெரியாது என்று தோன்றியது. முன்பே பலமுறை பார்த்திருந்தாலும் அவன் நடையைக் கவனித்தது அப்போதுதான். மெதுவாக நடக்கும்போது லேசான நொண்டல் இருந்தது. அதனால்தான் நடையை ஓட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்,
எங்கள் தெருவிலிருந்து வடக்காக இரண்டு தெருக்கள் தள்ளி சதுரமான கல்லுக்குழி இருந்தது. பாறைகளை வெட்டி எடுத்த பிறகு மிஞ்சிய பெரும் பள்ளம். இரண்டு ஆள் ஆழத்திலும் மண்ணைப் போட்டு மூடி நிரவினால் நாலு பெரிய வீடுகள் கட்டுமளவுக்கான விஸ்தீரணத்திலும் இருந்தது. பூமியின் சொந்தக்காரரான மருதாசலம் அதை மூடாமல் விட்டிருந்தார். கல்லுக் குழியைச் சுற்றிலும் வேலி அடைத்து ஒரு பக்கத்தில் இரும்பு கேட்டையும் போட்டுப் பூட்டி வைத்திருந்தார். குழியில் நல்ல வெயில் காலத்திலும் கண்ணாடிபோலத் தன்ணீர் மினுங்கும். உள்ளே ஊற்று இருப்பதாவும் சொன்னார்கள். மழைக் காலத்தில் ஒரு ஆள் நின்றால் தோளைத் தொடும் மட்டத்துக்கு இருக்கும். காவல் போட்ட இடம் . அதனால் டிச்சுத் தண்ணீரோ மற்ற கழிவு நீரோ கலக்காமல் சுத்தமாக இருந்தது. அதனால் கொஞ்ச தூரத்திலிருந்த ஜெயம் சோப்புக் கம்பெனிக்கார்கள் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கினார்கள்.
விடுமுறை நாட்களில் கல்லுக்குழியில் கும்மாளம் போடுவது எங்கள் விளையாட்டுகளில் ஒன்று. இருந்தது. எங்களுக்காகவே வேலியின் ஒரு மூலை சரியாக அடைபடாமல் திறந்திருந்தது. ஒரு ஆள் நுழையும் அளவுக்கான வழி. அதன் வழியாகப் புகுந்து கொட்டமடிப்போம். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தியும். தெரியாதவர்கள் ஓரத்தில் நின்று முக்குளித்தும். மருதாசலமோ அவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ பார்த்தால் அதட்டுவார்கள். ஆனால் ஒரு தடவை கூட விரட்டியது இல்லை.
ஒரு கோடை விடுமுறை நாள். நாங்கள் எல்லாரும் வழக்கம்போலக் கல்லுக் குழியைக் கலக்கிக் கொண்டிருந்தோம். மருதாசலத்தின் பையன் தங்கான் என்ற தங்கவேலுவும் எங்களுடன் கூத்தடித்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு நல்ல வெயில். மண்டை மயிர் பொசுங்கிப் போகிற வெயில். அதனால் யாருக்கும் தண்ணீரை விட்டு வெளியே வர விருப்பமில்லாமலிருந்தது. நீர் விளையாட்டு முடியாமல் நீண்ட போது உயிரைப் பிடுங்குகிற அலறல் கேட்டது. கல்லுக்குழியின் தென்புறத்திலிருந்து தங்கான் கத்திக் கொண்டிருந்தான். எல்லாரும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு நீர்ச் சளசளப்புடன் அவன் பக்கமாகப் போனோம். அவன் நின்றிருந்த இடத்தில் பாறைகள் இருந்தன. வழக்கமாக அந்தப் பக்கம் போகாமல்தான் விளையாடுவோம். தங்கான் அந்தப் பக்கமாகப் போய்ப் பாறை இடுக்கில் காலைச் சிக்கவைத்துக் கொண்டிருந்தான். தன்னிச்சையாகக் காலை எடுக்கமுடியாமல் போனதும் அழுது கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். தத்தளிப்புடன் நின்றிருந்த நாங்கள் நாலு பேரும் அவனைப் பிடித்து இழுக்கப் பார்த்தோம் ,முடியவில்லை. அவனால் காலைக் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. அதற்குள் எங்கள் கூப்பாட்டைக் கேட்டு வேலிக்கு அந்தப் பக்கமிருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன. கேட் பூட்டிக் கிடந்தது. எப்படி உள்ளே நுழைவது என்று முன்னும் பின்னுமாகப் பரபரத்தார்கள். தங்கான் மரணக் கூச்சல் போட்டான். நாங்களும் எதுவும் செய்ய முடியாமல் பயத்திலும் கலவரத்திலும் அழுது ஓலமிட்டோம்.
அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காக்கிச் சட்டையும் அரை டிரவுசரும் போட்ட உருவம் வேலியின் அடைபடாத வழியாக உள்ளே வந்து நீரில் குதித்தது. தங்கவேலுவின் மரணக் கூச்சல் ஒரு நொடி எழுந்து அடங்கியது. எங்களைப் பீதி சூழ்ந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கானைத் தோளில் போட்டுக் கொண்டு நீருக்குள்ளிருந்து நிமிர்ந்தான் பங்காரு. அதற்குள் மருதாசலமும் தங்கானின் அம்மாவும் மற்றவர்களும் கேட்டைத் திறந்து உள்ளே வந்திருந்தார்கள். திறந்த கதவு வழியாக பங்காரு தங்கானைத் தூக்கிக் கொண்டு அவன் வீட்டை நோக்கி ஓடினான். ஈரம் சொட்டச் சொட்ட நாங்களும் பின்னால் ஓடினோம். எங்களுக்குப் பின்னால் மருதாசலமும் இன்னும் ஆட்களும் ஓடி வந்தார்கள்.
வீட்டுத் திண்ணையில் தங்கானைப் படுக்க வைத்தான் பங்காரு. அதே சுருக்கில் வாசல் படலருகில் போய் நின்றான். கொளுத்துகிற வெயிலிலும் அவன் உடம்பு நடுங்குவதையும் பற்கள் கிடுகிடுப்பதையும் பார்க்க முடிந்தது. தங்கானின் வலது கெண்டைக் காலிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் வாயைப் பிளந்து கத்திக் கொண்டிருந்தான்.
‘’எனுங்க் பையன ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டு போலாங்க்’’ என்றாள் தங்கவேலு அம்மா.
அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த மருதாசலம்’’ பெரிசா ஒன்னுமில்ல செராச்சிருக்கு. மஞ்சத் தூள அப்பி வுடு. சரியாப் போய்டும்’’ என்றார்.
அவர் பார்வை எங்கள் மீது திரும்பியது. தோளில் போட்டிருந்த துண்டை உதறி கயிறுபோல ஆக்கிக் கொண்டு எங்களை நோக்கி வேகமாக வந்தார். அதை விசிறி எங்கள் நால்வரையும் அடித்தார். ஆவேசத்துடன் ‘’ கண்டாரோளி புள்ளைங்களா, போனாப் போச்சாதுன்னு வுட்டா, என்ற பயனையவே கொன்னு போடப் பாக்குறீங்களா, தாயோளிகளா’’ என்று கூச்சல் போட்டார்.
நாலு பேரும் வலி பொறுக்காமல் கத்தினோம். துள்ளினோம். ஈர உடம்பில் விழுந்த அடியில் உயிர் போய் விடும்போல இருந்தது. வாசல் பக்கமாக ஓடினோம். மருதாசலம் துண்டைச் சுழற்றிக் கொண்டே பின்னால் ஓடி வந்தார். வாசலைத் தாண்டி தெருவுக்குள் வந்து நின்றோம். துரத்திக் கொண்டு வந்தவரும் நின்றார். தெருவில் நிறுத்தி அடிப்பது விவகாரமாகி விடும் என்று தயங்கியிருக்கலாம். ஆனால் அவர் கோபம் அங்கே நின்றிருந்த பங்காரு மீது திரும்பியது.
‘’ஏண்டா எச்சக்கல நாயி, ஒனக்கு என்னா தெகிரியம், எங்க வூட்டுப் பயனத் தொட்டுத் தூக்கி வாசலத் தாண்டி வந்திருக்கே. பலபட்டற சாதிக் கொளுப்பு. இல்ல’’ என்று பாய்ந்து அவனைத் தள்ளி விட்டார். பங்காரு நிலை குலைந்து படலின் மீது விழுந்தான். அவன் முகம் ஒருக்களித்த வாக்கில் படலின் தப்பைமீது பதிந்து இறங்கியது. இடது நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியது. நாங்கள் நாலுபேரும் ஒருவரை ஒருவர் கிலியுடன் பார்த்துக் கொண்டோம். பிறகு அங்க்கிருந்து ஈரம் சொட்டச் சொட்ட ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடினோம். அன்று மாலைவரை எங்களில் ஒருவனும் தெருப்பக்கம் தலைகாட்டவில்லை.
பங்காருவை எங்கள் வட்டாரத்தில் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான்.
சம்பவம் நடந்து முடிந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடியும் பங்காருவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கல்லூரி நண்பர்களுடன் பெரிய கடைத் தெரு ஆனந்த விலாசத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். கடை முன்னால் முனிசிபாலிட்டியின் குப்பை வண்டி நின்றிருந்தது. மாடு பூட்டிய வண்டி. அதற்குள் ஓட்டல் எச்சில் இலைகளும் உணவுக் கழிவுகளும் நிரம்பிய பெரிய டிரம்மைக் கவிழ்த்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டை கொட்டி முடித்துத் திரும்பியது. பங்காருதான். நாங்கள் நின்றிருந்த வாசலையொட்டி ஓட்டலின் பின் பகுதிக்குப் போகும் சந்து இருந்தது. சந்தை நோக்கி வந்த பங்காருவை கைகாட்டி மறித்து ‘’ நல்லா இருக்கியா பங்காரு?’’ என்று கேட்டேன்.
சில நொடிகளின் தயக்கத்துக்கு அப்புறம் அடையாளம் தெரிந்து சிரித்தான். ‘’சாமி, நீங்களா? நல்லா இருக்கீங்ளா?’’ என்றான்.
‘’ நல்ல இருக்கேன் பங்காரு. நீ எப்புடியிருக்கே?’’
‘’ அதான் பாக்குறீங்களே, அப்டியேதான் குப்ப கொட்டிட்டு இருக்கறனுங்க்’’
அதற்குள்ளே சந்துக்குள்ளிருந்து ஒரு குரல் அவனை அழைத்தது. அவசரமாக ‘’வர்றனுங்க் சாமி’’ என்று டிரம்மை உருட்டிக் கொண்டு நகர்ந்தான். சற்று முன்னால் போய்த் திரும்பிப் பார்த்து விட்டுப் போனான். அவன் முகத்தில் இடது கண்ணுக்கும் காதுக்கும் மேல் இருந்த கறுத்த தழும்பு அனிச்சையாகக் கண்ணில் பட்டது.
பாக்கெட்டிலிருந்து உருவிய சிகரெட்டை மறுபடியும் உள்ளே சொருகி வைத்துக் கொண்டே முன்னால் நின்றவனிடம் கேட்டேன்.
‘’ஒங்க பேரு பங்காருதான?’’
அவன் முகம் விரிந்தது. சந்தேகமும் அடையாளக் குழப்பமும் அதில் இருந்தன.
‘’ ஆமாங்க், ஒங்களுக்கு எப்டி என்ற பேரு தெரியும்?’’ என்றான்.
சிரித்துக் கொண்டே ‘’உங்க பேரு மட்டுமில்ல, உங்களையும் உங்க அப்பாவையும் தெரியும். அம்மாவையும் தெரியும். தங்கச்சியையும் தெரியும்’’ என்றேன்.
குழப்பத்துடன் பார்த்தான். ‘’ எனக்குத் தெரீலீங்க யாருன்னு’’ என்றான்.
நானே வெகுகாலம் மறந்து போய் சற்று நேரத்துக்கு முன்பு திரும்பக் கொண்டு வந்திருந்த ஞாபகங்களைக் கொட்டினேன். அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.
இருட்டு சட்டென்று பரவியது. வனப் பகுதி. எனவே இருட்டு அடல் அடலாகத் தெரிந்தது. சுவர்க்கோழிகளும் பூச்சிகளும் வண்டுகளும் பறவைகளும் சிலம்பின. மாளிகைக்குள்ளிருந்து ஆர்ப்பாட்டச் சிரிப்புகளும் அதிரடிக் கூச்சலும் இசை முழக்கமும் கேட்டன. மெய்யான புத்துணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டதன் அறிகுறி. அதற்கிடையில் பங்காருவின் குரல் கேட்டது.
‘’பாத்து வெகு காலமிருக்குமில்லிங்க? ‘’
‘’இருவது வருசமோ அதுக்கு ஜாஸ்தியாவோ இருக்கும் ‘’
இருபது வருடங்களுக்குள் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது. எதுவெல்லாமோ புரண்டிருக்கிறது. யாரெல்லாமோ கண் காணாமற் போயிருக்கிறார்கள். சிலரெல்லாம் உலகத்தை விட்டே மறைந்திருக்கிறார்கள். தங்கவேலு விபத்தில் சிக்கி முதலிலும் பிறகு மாரடைப்புக்கு மருதாசலமும் பலியாகியிருந்தார்கள். அந்த அதிர்ச்சியில் தங்கானின் அம்மாவுக்குப் பித்துப் பிடித்திருந்தது. கல்லுக்குழி மூடப்பட்டு அங்கே கட்டடம் வந்து விட்டிருந்தது. இவையெல்லாம் ஊருக்குப் போகும் போது காதில் விழுந்த செய்திகள்.
அம்மா சொல்லித் தெரிந்து கொண்டது மந்திரியும் பங்காருவைத் தவிர்த்த அவன் குடும்பமும் ஆஸ்துமா முற்றி ஒருவர் பின் ஒருவராக இறந்து போய் விட்டார்கள். திக்குத் திசை தெரியாமல் நின்ற பங்காருவை சொந்தக்காரர்கள் பார்த்துக் கொண்டார்கள். அவனும் முனிசிபாலிடி சுகாதார இலாக்காவில் நிரந்தர ஊழியனாகியிருக்கிறான். கல்யாணம் கட்டிக் கொண்டிருக்கிறான்.
‘’பிட்டாதாங்க, அதாம், பொஞ்சாதி தாங்க, முனுசுபாலிட்டி வேலய வுட்டுறச் சொல்லிச்சு. எல்லா வூட்டுலயும் தண்ணி வுடற கக்கூஸு, ப்ளசவுட்டு வந்துருச்சு. அழுக்கை வுடறதுக்கு பூமிக்கு அடியில் பெரிய கொளாயெல்லாம் போட்டாச்சு. இனி நம்மள மாரி ஆளுங்களுக்கு பொழப்பு கஷ்டந்தான்னுச்சு. ஆனா நான் எந்த வேலக்குப் போறதுங்க்? நாலு எளுத்துப் படிச்சிருந்தா ஊர வுட்டுப் போயாச்சும் வேற பொழப்பப் பாத்திருக்கலாம்’’ என்றான்.
‘’ஆனா முந்தி பாத்த மாரி நீ இப்ப இல்லயேப்பா. நல்லாப் படிச்சவனாட்டந்தான் பேசற’’ என்றேன். அதைச் சொல்லும்போதே அவனுடன் பழைய நெருக்கத்தில் நீ என்று கூப்பிட்டதையும் உணர்ந்தேன்.
‘’ அதுங்கூட பிட்டாவால தாங்க். அதுதான் நைட் ஸ்கூல்ல சேந்து படிக்கச் சொல்லிச்சு. இப்பா எங்காளுங்கள்ளயும் நெறயப் பேரு பள்ளிக் கூடம் போயிப் படிக்குறாங்களே. அவங்கதான் ராத்திரிப் பள்ளிக்கூடம் நடத்துனாங்க. அப்புடி நாலு எளுத்துத் தெரிஞ்சதுனாலத்தான் இந்த வேலயும் கெடச்சுது’’
மாளிகைக்குள்ளிருந்து இசை முழக்கமும் ஆரவாரமும் உரத்துக் கேட்டன. சிரிப்புகள் வெடித்தன. நான் இங்கே நிற்கத் தொடங்கி அதிக நேரமாகி விட்டதையும் பேச்சு மும்முரத்தில் தன் மறதியாக மூன்று சிகரெட்டுகளைப் புகைத்துத் தள்ளியிருந்ததையும் அசௌகரியத்துடன் உணர்ந்தேன்.
‘’ ஆமா, ஒன் பொஞ்சாதியும் இங்கதான் இருக்குதா?’’
‘’ இல்லீங்க், அதுக்கு இங்கத்திக் குளுரு ஒத்துக்கல. ஊர்லதான் உட்டுருக்கன். நாந்தா அப்பப்ப போயிட்டு வர்றன். ‘’
அவனிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும் முசுக்காரத்துடன் ‘’ சந்தோசம் பங்காரு, ஒன்ன இங்க பாத்தது. அதுவும் இப்புடிப் பாத்தது. நல்ல நெலமயில இருக்கேங்கறது எவ்வளவு சந்தோசம் தெரியுமா?’’ என்றேன். அவனுடைய சீருடையில் மார்புப் பகுதியில் சிவப்பு நிறத்தில் எம்பிராய்டர் செய்யப் பட்டிருந்த நிறுவன இலச்சினைக்குக் கீழ் கிளீனிங்க் சூப்பர்வைசர் என்றிருந்தது. என் ஆள்காட்டி விரலால் குத்தி ‘’ சூப்பர் வைசர் பங்காரு’’ என்றேன்.
அரண்ட வெளிச்சத்தில் பங்காருவின் முகத்தில் சிரிப்பல்லாத சிரிப்பொன்று தெரிந்தது. ‘’ எனக்கும் சந்தோசந்தாஞ் சாமி… சார். ஆனா என்ன… வேல பழசுதாங்க. பேருதான் புதுசு. சீமாத்துக் கட்டய்க்கு பட்டுக் குஞ்சலம்னு.’’ என்றான். அவன் அவ்வளவு வியாக்கியானமாகப் பேசக் கூடியவன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆச்சரியம். ஆனால் அடுத்து அவன் சொன்னது அதிர்ச்சியைக் கொடுத்தது.
‘’நீங்கள்ளாந்தான் சீமாத்துக் கட்ட சீமாத்துக் கட்டயாவே இருந்தாப் ’’ போதும்னு நெனக்கறீங்க’’
எனக்குச் சுருக்கென்றது. ‘’நா அப்படி நெனக்கற ஆளில்ல, பங்காரு’’ என்றேன்.
‘’ அய்யோ சாமீ… நீங்கன்னா நீங்க இல்ல. உங்கள மாரி மத்த ஆளுங்க’’ என்று அவன் குரல் தழைந்தது. இரண்டு பேரும் பேச்சு முட்டி நின்றிருந்தோம்.
ஒரு வெளிச்ச வட்டம் எங்களை நோக்கி வந்தது. வைஸ்யா கையில் டார்ச் லைட்டுடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் இருக்குமிடம் வந்ததும் முதலில் பங்காருவைப் பார்த்துத் தெலுங்கில் ‘’ உன்னை எங்கெல்லாம் தேடுவது ? ……. பயலே, இங்கே வந்து வாயாடிக் கொண்டிருக்கிறாயா? அதுவும் உன்னை விடப் பெரிய ஆளிடம். போ, அங்கே குடிக்கத் தெரியாதவனெல்லாம் குடித்து வாயால் கக்கி அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். போய் சுத்தம் பண்ணு. உன் ஆட்களையும் கூப்பிட்டுப் போடா, திருட்டுப் பயலே’’ என்று எரிந்து விழுந்தார். பங்காரு பண்ணை இல்லத்தைப் பார்த்து ஓடினான்.
என் பக்கமாகத் திரும்பியவர் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு ’’ நீங்க இங்கதான் இருப்பீங்கன்னு நெனச்சேன். ஸ்மோக் பண்ணாம இருக்க முடியாதுல்ல?. அது சரி, உங்களுக்கு அவனோட என்ன பேச்சு ?’’ என்று சிடுசிடுத்தார். சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினார்.
‘’ டோண்ட் யூ ஃபீல் அஷேம்ட் ஆஃப் டாக்கிங்க் டு எ ஸ்கேவெஞ்சர். எ லொஃபர். ஷிட். கம் லெட் அஸ் கோ’’ என்று முன்னால் நடந்தார். நான் அவரைப் பின் தொடராமல் ஒரு வினாடி உடல் குறுகி நின்றேன். அவமானமாகத்தான் இருந்தது. ஆனால் அது பங்காருவுடன் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட அவமானம் அல்ல.
(நூல்வனம் வெளியிட்டுள்ள “உஸ்தாத்” சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறோம் – யாவரும்)
***
சுகுமாரன் – கோவையில் பிறந்தார். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
மின்னஞ்சல்: nsukumaran@gmail.com


அருமை சார். தேவையான நேரத்தில் தேவையான சிறுகதை.
வடு கதையில் அந்தக் கடைசிவரி சுருக்கென்று தைத்தது. யதார்த்தமான கதை. பாசாங்கில்லாத மொழி. ரொம்பச் சரளம்.
மிக்க நன்றி🙏