மறைப்பு

தொ. பத்தினாதன்

சென்னையில் பழமையான, ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலில் 2001ல் பணிக்குச் சேர்ந்திருந்தேன். இதற்கு முன் இரண்டாண்டுகளுக்கு மேல் ஓட்லில் வேலை செய்த அனுபவம் இருந்தது. இது அந்தத்துறை சார்ந்த படிப்பினால் இல்லாமல் அனுபவத்தில் கிடைத்த வேலை. ஆரம்பத்தில் அப்படி இப்படி இழுபட்டாலும் சில மாதங்களில் வேலையில் சற்று ஆர்வமிருந்தது என்னவோ உண்மைதான். என் இயல்பிற்கு சற்று விலகியதாக இருந்தாலும் தின்பதற்கு சோறு வேண்டும் என்பதால்தான் இந்தத் துறைக்குள் வந்தேன். அது விருப்பத்தால் ஆனது இல்லை. 

அன்று எங்கள் பேங்குவட் பிரிவில் அதிகமான நிகழ்வுகள் இருக்கவில்லை. சில பணியாளர்கள் விடுமுறையில் இருந்தார்கள். ஆறாவது மாடியில் உள்ள ரீஜென்சி ஹாலில் நடந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கான கான்பிரன்ஸ்க்குப் பொறுப்பாக நான் இருந்தேன். எண்ணிக்கையும் அதிகமில்லை, 20 முதல் 25 பேர்தான். சக பணியாளர் கிச்சா நீலகிரி ஹாலில் நடந்த சிறிய கெட்டுகெதர் பார்ட்டியில் இருந்தான். காலை ஏழு மணிக்குக்கு எனக்கு டூட்டி போடப்பட்டிருந்தது. டூட்டிக்கு போனதும் செக்கியூரிட்டி ஆபீஸில் சாவியை வாங்கி வந்து ஹாலைத் திறந்து லைட்டு போட்டுவிட்டு, முதல் வேலையாக இன்டர்காமில் ஹவுஸ்கீப்பிங்கை கூப்பிட்டு கிளீன் பண்ணச் சொன்னேன். இரவு பணியில் இருந்தவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும். ஏனோ விடுபட்டிருக்கிறது. அதே இன்டர்காமில் மெயின்டனன்ஸை அழைத்து ஏசி போடச் சொன்னேன். இதெல்லாம் அவர்கள் சொல்லாமலே செய்யும் வேலைதான். யு சேப்பில் கிளாஸ் வைக்கப்பட்டிருந்தது. ரீ கவுண்டரில் கப்பு சாசர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுகர் கியூப் இல்லை. பொபே கவுண்டரில் பியூல் இல்ல. எதுவெல்லாம் இல்லை என்று பார்த்துக் கொண்டிருந்தேன். மேலோட்டமான பார்வையிலயே என்னவெல்லாம் தேவை, செய்யவேண்டும் என்பது தெரிந்துவிடும் அளவுக்கு எனக்கு அனுபவம் ஏற்பட்டிருந்தது.

ஹவுஸ்கீப்பிங்கில் இருந்து ஒரு பொடியன் வேக்கம் கிளீனருடன் பதற்றமாக ஓடி வந்தான். பின்னாடி மகா பட்டுச் சேலையில் தளதளவென்று வந்தாள். அவளுக்கும் காலை டூட்டி என்பதால் பளிச்சென்று இருந்தாள். காலையியே அவளைப் பார்ப்பது இன்றைய பொழுது உட்சாகமாக அமையும் என்று எண்ணினான். 

“ஏன் இரவு டூட்டிக்காரர்கள் சுத்தம் செய்யவில்லை” என்று கேட்க நினைத்தது, ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசர் மகாவைப் பார்த்ததும் அடங்கிபோயிருந்தது. கமுக்கமாக சிரித்தேன். மகா மலையாளப் பெண். 

“ராத்திரி இருபத்தாறு ரூம் செக்கவுட் இருந்தது. ஆனதால கிளீன் செய்ய நேரம் கிட்டில்லா. செக்கின் வேற இருந்ததாக இரவு சிஃப்டு சூப்பர்வைசர் லாக் நோட்ல எழுதியிருக்கு…” 

என்று இரவு சுத்தம் செய்யாததற்கான காரணத்தை சீரியசாக சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு கொள்ளை அழகு. நான் அதை ரசித்துக் கொண்டிருந்தேனே தவிர அவள் சொன்ன விளக்கம் என் கவனத்திற்கு வரவில்லை. அவள் சொன்ன காரணங்களுக்கு பதிலும் சொல்லவில்லை. ஹாலுக்குள் சுத்தம் செய்யும் பொடியன் இருக்கிறான் என்பதும், நாங்கள் பணியில் இருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஹவுஸ்கீப்பிங் போய் கார்பெட்டுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான். இது சிறிய ஹால் என்பதால் இதனைச் சுத்தம் செய்வதற்கு அதிக நேரமெடுக்காது. 

எல்சிடி புராஜக்டருடன் வந்த மெயின்டனன்ஸ் பொடியன் அதனை செட் பண்ண ஆரம்பித்தான். 

“சுரேஸ் முதல்ல ஏசிய போட்டுட்டு வந்து அத செட் பண்ணுங்க அப்பதான் கெஸ்ட் வர்றப்ப நல்ல கூலிங்கா இருக்கும். காலையிலயே அவன் வர்றப்ப ஏசி சரியா இல்லன்னா இன்னைக்கு பூரா அவன் மூஞ்சிய காமிப்பான்”. 

மகா விமானப் பணிப் பெண்கள் போல பட்டுச்சேலையில சுத்தி சுத்தி வந்தாள். எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் காலையில் உள்ள வேலைப் பரபரப்பு இருந்தது. கெஸ்ட் வர்றதுக்குள்ள எல்லாம் பெர்பக்டாக இருக்க வேண்டும். எனக்கு முதல்ல யு சேப்பில் தண்ணீர் வைக்க வேண்டும், ரீ கவுண்டரில் சுகர் கியூப், சுகர்பிரி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு பொபே கவுண்டரில் உள்ள பெண்டிங் வேலைகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் ஒன்பது மணிக்கு கெஸ்ட் வந்தப்பிறகு செய்ய முடியாது. மீட்டிங் ஆரம்பமானால் ஹாலிற்குள் எதுவும் செய்ய முடியாது. அது அவர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும். உடனடியாக கீழ்த் தளத்தில் உள்ள எங்கட ஸ்டோர் ரூம் போய் விடுபட்ட மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பேக் ஏரியாவில நிற்கிற ட்ராலியில் ஒரே தடவையில எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்திவிடலாம். எதையாவது மறந்து போனால்தான் பிரச்சனை. மகா ஹாலுக்குள் ரூம் ஸபிரே அடித்துக் கொண்டிருந்தாள். ஏசி போடப்பட்டிருந்தது. குளுகுளு என்று வந்த ஏசிக் காற்றுடன் ரூம்ஸ்பிரே வாசனையும் கலந்து வந்து கொண்டிருந்தது மகாவைப் போலவே. 

பேக் ஏரியா வந்து எங்களுக்கான சர்வீஸ் லிஃப்டுக்காக காத்திருந்தேன். காலை என்பதால் அது மேலும் கீழுமாக தாவிக் கொண்டிருநதது. லிஃப்ட் பட்டணை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் கீழ்த்தளத்திலிருந்து லிஃப்ட் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் கிருத்திகா வந்தாள். திருச்சியில் உள்ள ஜென்னீஸ் கேட்ரிங் கல்லூரியில் படிக்கும் அவள் மூன்றுமாத பயிற்சிக்காக வந்திருக்கிறாள். சிரித்த முகத்துடன், 

“குட் மோணிங்”

 என்றாள். லிஃப்ட் கீழே போய்விடாமல் ஒரு கையால் கதவைப் பிடித்துக் கொண்டே, 


“கிருத்தி ஒனக்கு கிச்சா கூடத்தானே டூட்டி போட்டிருக்கு பின்ன எதுக்கு இங்க வந்திட்ட”

“உங்ககூட வேல பாக்கிறேன் என்று நா அவரிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்”. 

“அவன் என்ன சொன்னான்” 

“சரி ண்ணுட்டார்” 

“சரி நீ ஹாலுக்குள்ள பொபே கவுண்டர்ல இருக்கிற கிளாத் நாப்கின்ன மடிச்சு வை நா ஸ்டோர் போயிட்டு வாறன்”. அவள் ஹாலுக்குள் போனாள். நான் லிஃப்டில் கீழே இறங்கினேன்.


வைற் போடு மார்க்கர் எல்லாம் ரெடியாக இருந்தது. கெஸ்ட் வந்தார்கள். கேப்டன் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். கெஸ்ட்டிடம் எத்தனை மணிக்கு ரீ பிரேக், எப்போது லஞ்ச் என்பதைக் கேட்டார். 


“சுதாகர் சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும். பத்தரைக்கு டேபிள்ல ரீ சர்வீஸ் பண்ண வேண்டும். ரீ பிறேக் இல்லை. லஞ்ச் ஒண்டரைக்கு ரெடியா இருந்தால போதும்”

என்று கேப்டன் சொல்லிட்டு போய்விட்டார். மீட்டிங் ஆரம்பமானதும் பேக் ஏரியாவில பேசும் சத்தம் உள்ள கேட்காத அளவில் தணிந்த குரலில் கிருத்திகாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ள டார்க்கெட் அச்சீவ் பண்ணாதவர்களைப் பார்த்து ஏரியா மேனேசர் ஆங்கிலத்தில் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டுவது கேட்டுக் கொண்டே இருந்தது. 


லிஃப்ட் மேலே வந்துகொண்டிருந்தது. மேனேசர் வரலாம். செக்யூரிட்டி வரலாம். கேப்டன் வரலாம். அதனால் நாங்கள் பேசாமல் இருந்தோம். ஆனால் கிச்சா சாவகாசமாக மேல வந்தான். 


“அடே வாட்டர் ஜக்கெல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிருக்க”. 

“மெதுவா பேசு உள்ள மீட்டிங் நடக்குது. நா ரெண்டுதா கொண்டு வந்தேன் டைனஸ்ரி ஹால்ல பாரு”.

“அதுசரி கிருத்திகா உங்கூடத்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்குது”. 

சொல்லிக்கொண்டே அவளைப்பார்த்து சிரித்தான். நான் கிருத்திகாவ பார்த்தேன். நீள்வட்டமான முகம். மாநிறத்தில் இருந்தாள். பயந்த பெண் மாதிரித் தெரியவில்லை. 

“சார் நேத்து அவருக்கூடத்தானே டூட்டி பார்த்தேன்…” அவள் சொல்லி முடிக்கும் முன் கிச்சா குறுக்கிட்டான் 

“அதனால” 

“நீ அந்தப் பொண்ண மெரட்டியிருப்ப அதனால இங்க ஓடி வந்திருக்கும்” கிருத்திகாவைக் காப்பாற்ற நான் குறுக்கிட்டேன். 

“என்னமோ பண்ணித் தொலைங்க”. உரையாடல் நீடிக்கவில்லை கெஸ்ட் கண்ணாடி டோர் வழியாகக் கூப்பிட்டான் நான் உள்ள போனேன். கிச்சா வந்த லிஃப்டிலயே இறங்கிவிட்டான்.


மதியம் லஞ்சு முடிஞ்சதும் கேப்டன் சொன்னார், 

“அவங்க இரவு காக்டைல் டின்னர் கேக்கிறாங்க. நீ டூட்டிய கண்டினியூ பண்ணு நாளைக்கு லீவு எடுத்துக்க”

“அட பாடையில போவாங்களே முன்னாடியே சொல்லித் தொலச்சிருக்கலாமே” 

உடனே வாயில் அப்படித்தான் வந்தது. ஏனெனில் எனக்கு மட்டுமல்ல மகாவுக்கும் அது ஏமாற்றமாக இருக்கும். ஆனால் கேப்டனிடம் சொல்லவில்லை. எங்களுக்கு இது புதுதில்லை. டூட்டிக்கு போற நேரம்தான் எங்களுடையது. டூட்டி முடிச்சு வெளியே வருவதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தப் பேங்குவட் பிரிவின் வேலையே அப்படித்தான். மறுக்கவா முடியும். ஓவர் டைம் வேலை செய்தால் அதற்கான விடுமுறை எடுக்கலாம்தான். கிச்சா அவனுடைய நிகழ்வு முடிந்ததும் மேலே டின்னருக்காக வந்தான். கிருத்திகா நான்கு மணிக்கு டூட்டி முடித்துவிட்டு போய்விட்டாள். எதிர்பாராத நிகழ்ச்சி என்பதால் கேப்டனும் இருந்தார். ஏசியில உக்கார வைத்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி திட்டிட்டு, ஆட்டு இறைச்சி பிரியாணியும், கூடவே சாராயமும் கொடுத்து அனுப்பும் இந்த மாதிரி மருந்துக் கம்பனிகள். 


ஹாலின் பின் பகுதியில் டின்னருக்காக எல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆறு மணிக்கு மீட்டிங் முடிந்தது. ஏழு மணிக்கு லிக்கர் சர்வீஸ் பண்ண ஆரம்பித்தோம். எட்டு மணிக்கு கிச்சா கிச்சனில் இருந்து புஃட்டு பிக்கப் பண்ணி ரெடியாக வைத்திருந்தான்.

மேனேசருக்குப் பயத்தில் பட்டும் படாமலும் பெரும்பாலான பையகள் இரவு ஒன்பது மணிக்கே சாப்பிட்டு புறப்பட்டார்கள். பத்து மணிக்கு மருந்துக் கம்பனி மேனேசர் அங்கேயே ரூமில் தங்கியிருப்பதால் பில்லில் கை எழுத்துப் போட்டு ரூம் பில்லுடன் சேர்க்கச் சொல்லிட்டு போய்விட்டார். அவர் காலை பிளைட்டில் ஐதராபாத் போகவேண்டுமாம். டார்க்கட் அச்சீவ் பண்ணிய சீனியர் நான்கு பேரும் உட்கார்ந்துவிட்டார்கள். அதுவரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தவர்கள் நாக்கில் சொட்டு சாராயம் பட்டதும் தமிழில் பேச ஆரம்பித்தார்கள். நாங்க எப்படா போய்த் தொலைவாங்க என்று காத்துக் கிடக்கிறோம். காலை ஏழு மணிக்கு பணிக்கு வந்ததில் இருந்து இதே முகங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஹாலுக்குள் நிண்டால் முகத்தில் லேசான புன்னகை போன்ற தோற்றம் இருக்கும். கொடுக்கப்பட்ட பயிற்சிகள் அப்படி. வெளிய வந்தால் முகம் கடுகடுன்னு இருக்கும். நல்ல போதையில் சலம்பிக்கொண்டு இருக்கிற இந்த நான்கு பேரைக் கிளப்புவது எப்படி. பில்லில் சைன் வாங்கினதும் கேப்டன் ஆபீஸில் போய் உட்கார்ந்துகொண்டார். கெஸ்ட் போனால்தான் அவரும் வீட்டுக்குப் போக முடியும். நானும் கிச்சாவும் உச்சபட்ச கடுப்பில் உள்ளுக்குள் புகைந்துகொண்டு நின்றோம். 


“எக்ஸ்கியூஸ் மீ எனக்கு ரூத் பிக் வேணு” என்று ஒருத்தன் ரூத்பிக் கேட்டான். எங்களுடைய கெட்ட நேரம், அதுவும் நிகழ்வு முடியும் நேரத்தில் ஆரம்பமானது. லஞ்சுக்கு மட்டும் கொண்டு வந்த ரூத்பிக் காலியாகியிருந்ததால், கிச்சா ஸ்டோருக்கு ஓடினான் ரூத் பிக் எடுக்க. இருவர் எழுந்துபோவதற்கு தயாரானார்கள். ஒருத்தன் அடுத்தவர்களை பேசவிடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நல்ல போதையில் இருந்தார்கள். ரூத்பிக்கை மறந்து விடுவான் என்று நினைத்தேன். கிச்சா போன பின் இரண்டு தடவை கேட்டுவிட்டான். நிகழ்வு ஆறாவது மாடியில் நடக்கிறது. கிச்சா கீழ் தளத்துக்கு சர்வீஸ் லிஃப்டில் போய் எங்கட ஸடோர் ரூமில் இருந்து எடுத்து வரவேண்டும். ரூத்பிக் இல்லையென்றால் உயிர் போய்விடும் போலத் திரும்பத் திரும்ப கேட்கிறான். நானும்,

“கெட்டிங் சார், கெட்டிங் சார்” . என்கிறேன்.


எனக்கு வதக்வதக் என்றிருந்தது. ரூத்பிக்தானே காலையிலயே ட்ராலியில ஒரு டப்பாவைத் தூக்கிப்போட்டுட்டு வந்திருக்கலாம். லஞ்சு மட்டும்தானே என்று நினைத்து கொண்டு வந்த ரூத் பிக் முடிந்துவிட்டது. அதனால் பல்லுக்கிடையில சிக்கிய இறைச்சி மாதிரி ஆகியிருக்கிறது எங்கள் நிலைமை. தொடர்ந்து பிஸ்னஸ் தரும் பெரிய கம்பனி அது. ஏதாவது சிறிய கம்ப்ளைண்டும் பெரிய இச்யூவாக மாறிவிடும். இது இங்கு குடித்துவிட்டு இருக்கும் சீனியர்களுக்கும் தெரியும். கிச்சா எப்போது வந்து தொலைவான் என்றிருக்க, 


“பிளடி பக்கர் எங்கடா ரூத்பிக்” 


என்று கத்த ஆரம்பித்தான். அவனுடைய மேனேசர்மேல் உள்ள கடுப்பில் என்னைத் திட்டுகிறானோ தெரியவில்லை. அவனுக்கு சார்பாக மற்றவனும் சரளமான கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பித்தான். மற்ற இருவர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச்செல்ல முயன்றார்கள். நான் சிலையாக அசையாமல், பேசாமல் நின்றேன். முகத்தில் வெளிப்படையாக எந்த மாற்றங்களும் இல்லை. பிக்கோஸ் “கெஸ்ட் இஸ் ஆல்வைஸ் ரைட்” என்று எங்கள் பேக் ஏரியாவில் ஒரு பிறேம் பண்ணிய படம் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்தது. 

அவனே என் கால மிதிச்சுட்டு என்னைய திட்டினாலும் அதே கெஸ்ட் இஸ் ஆல்வைஸ் ரைட்டுத்தான். அதுதான் விருந்தோம்பல் துறையின் தாரக மந்திரம்.

***

மாதம் ஒரு ரெயினிங் எங்களுக்கு நடக்கும். வெளிய இருந்து ரெயினரை அழைத்து ரூமில் தங்க வைத்து எங்களுக்கு வகுப்பெடுப்பார்கள். பாடி லாங்குவேஜ், குவாலிட்டி புஃட், குவாலிட்டி சர்வீஸ், ரெலிபோன் மேனஸ் போன்ற ஏதாவது ஒரு வகுப்பு இருக்கும். “ஓட்டலோட ஸ்டாண்டட் கீழ் நிலைப் பணியாளர்களிடமும் இருக்கணும்” என்று எங்கட பிரிவு மேனேசர் அடிக்கடி சொல்லுவார். நாங்கள்தானே வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருப்பவர்கள். அதுவும் டூட்டி முடிந்த பிறகுதான் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ நடக்கும். எங்களுக்கு கடுப்படிக்கிற காரியம் இது. ரெயினர் வாங்கிற காசுக்கு பிரமாதமாக ஆங்கிலத்தில் வகுப்பெடுப்பார். புரிகிறதோ இல்லையோ, புரிந்த மாதிரியான பாவனையில் கூட்டத்தோடு உட்கார்ந்திருப்பேன். நான் அனுபவத்தில் வேலைக்குச் சேர்ந்தவன் என்பதால் எவ்வளவு வேலை செய் என்றாலும் செய்வோம். இதுபோல படி, எழுது என்றால் தொடை நடுங்கும். வாய் திறக்காது. ரெயினர் எழுப்பி கேள்வி வேறு கேட்பான். இது ஒரு அவஸ்த்தை. வகுப்பிற்கு போகாமல் தவிர்க்கவும் முடியாது. 


குவாலிட்டி சர்வீஸ் ரெயினிங் முடித்து அவசரமாக வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் எச்சார் ஆபீசர் கூப்பிட்டு கவரைக் கையில் கொடுத்தார். நான் இங்கு பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் எனது ரெயினிங் பீரியட்டை மீண்டும் ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்வதாக கவரில் இருந்த கடிதத்தில் நாகரீகமாக, அலங்காரமான வார்தைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இரவு தூக்கமே வரவில்லை. என்னால் அதனை ஏற்கவே முடியவில்லை. எனக்கு பிறகு வந்தவர்கள் பணி நிரந்தரம் ஆக்கப்பட்டிருந்தார்கள். வேலைண்ணா சுதாகர கூப்பிடு என்று சொல்லும் மேனேசரா இப்படி செய்தார்? உண்மையில் அவர் நல்ல மனிதர்தான். வேலை செய்பவர்கள் யார். வேலை செய்யாதவர்கள் யார் என்றும் அவருக்குத் தெரியும். கீழ் நிலைப் பணியாளர்களை சமநிலையாக கையாள்வதில் கைதேர்ந்தவர்தான். எப்படி இவர் எனது அப்பிரிசியல் லெட்டர ஹெச் ஆருக்கு அனுப்பினார். வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தது. வேலைக்கு வரவே பிடிக்கவில்லை. மனநிலை சோர்ந்திருந்தது. தாங்க முடியாத வருத்நம் மேலிட்டது. மற்றவர்கள் மாதிரி வேற ஓட்டலில் வேலைக்குப் என்னால் போக முடியாது என்பது தனிக் கதை.. சமநிலை தவறியிருந்தேன். 


மகா சொன்னாள் 

“நீ வேற ஓட்டல்ல வேலைக்கு ட்ரை பண்ணு” 

என்று. நான் மகாவிடமாவது உண்மையச் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு என்னதான் பிரச்சனை?. என்னை வெளிப்படுத்துவதில் அப்படி என்ன தயக்கம். இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டிருந்தது என்பதை விட குழம்பிப் போயிருந்தேன்.

***


டைனஸ்டி ஹாலில் எனக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. கிச்சா கையாமுய்யா என்று வந்தான். இவன் என்னைவிட சீனியர். 

“இங்கபாரு கிச்சா சும்மா கத்தாம போய் கேப்டனிட்ட சொல்லு”. 


கேப்டன் வந்தார். மேனேசர் காதுக்குத் தகவல் போனது. ஒரு வாரமாக எந்த நடவடிக்கையும் இல்லை. குறுக்க மறுக்க போகும்போது மேனேசர் கவனிப்பது தெரிந்தது. சூடு தணியட்டும் என்று நினைக்கிறாரா அல்லது வேலை செய்ய மறுக்கிறான் என்றது உண்மையா என்று செக் பண்ணுகிறாரா என்றும் தெரியவில்லை. நடக்கிறது நடக்கட்டும் வேலை செய்வதில்லை என்று பிடிவாதமாக இருந்தேன். இது வேலை செய்யாமைப் போராட்டம். இப்படிச் செய்வது எனது சக்திக்கு மீறிய செயல். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சில விடயங்களில் ஒரு விதமான குருட்டுத்தைரியம் வந்து ஏறி நிற்கும். அது விளைவுகளை அந்த நேரத்தில் ஆராயாது. ஹாலிற்குள் சும்மா நிற்பேன். முற்றிலுமாக ஒரு வாரம் எந்த வேலையும் செய்யவில்லை. டூட்டிக்குப் போவது, கேன்டீனில் சாப்பிடுவது, டூட்டி முடியும் வரை ஹாலுக்குள் நிற்பது, எங்கட ஸ்டோர் ரூம்லயோ, லாக்கர்லயோ உட்காருவது. இப்படியே ஒரு வாரம் ஓடியது.


“அடே உன்னை எஃப் அன்டு பி (food and beverage manager) மேனேசர் ஆபீஸ் வரட்டாம்” 

லாக்கர் ரூம்ல தம்மடிச்சிட்டு இருந்த என்னிடம் கிச்சா வந்து சொன்னான். உள்ளுக்குள் ஏற்பட்ட பதற்றத்துடன் அலுவலகம் போனேன். கோட்டு சூட்டில் அவர்கள் உட்காந்திருக்கும் தோரணையே மிரட்டுவதாக இருந்தது.

அலுவலகத்தில் எங்கள் பிரிவு மேனேசரும் இருந்தார். கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தேன். ஏசியிலும் எனக்கு வியர்த்திருந்தது. அதிகபட்சமாக வேலையிலிருந்து நீக்குவார்கள். எனக்கு இந்த மடம் இல்லை என்றால் என்ன ஒரு சந்தை மடம் இல்லாமலா போய்விடும் என்று மனதை தேற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் மேனேசர் தன்மையாகப் பேசினார். அது அட்வைஸ் பண்ணுவதாகவே இருந்தது. பேசாமல் நின்றேன். எங்கள் பிரிவு மேனேசர் தமிழில் நேரடியாகவே ஆரம்பித்தார். 


“இங்க பாரு சுதாகர் உன்னை வேலைய விட்டுத் தூக்கிட்டு பத்திரிக்கையில ஒரு விளம்பரம் கொடுத்தால் அந்த வேலைக்கு நூறுபேர் கேற்றடியில வரிசையில் நிப்பான்…” 


என்று ஆரம்பித்தார். அவர் குரல் வழமைக்கு மாறாக தடித்திருந்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையாகவும் இருந்தது. 


“நீ வேலை செய்யாதது மத்த பணியாளரையும் பாதிக்கும்” 


என்றவரிடம், ஒரு கோரிக்கை மட்டும் வைத்தேன். எனது ரெயினிங் பீரியட் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டதற்கு ஒரு வலுவான காரணம் அவர்களிடத்தில் இருந்தது. அவர்கள் முன் இருந்த மேசை மேல் இருந்த என்னுடைய பைலில் முறையாக படித்ததற்கான பள்ளிச் சான்றிதழ்கூட இருக்கவில்லை. படிக்கிற பதினாறாவது வயதிலதான் இந்த நாட்டிற்கு உயிர் வாழ வந்தேன். கொஞ்சமாவது படித்திருக்கலாம்தான். சில மாதங்களில் ஊருக்கு போய் படிக்கலாம் என்ற எண்ணம் அப்போது தடுத்திருக்கலாம். அல்லது படிப்பபதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். (எப்படி எந்த முறையான படிப்பு சான்றிதழ் இல்லாமல் இங்கு பணியில் சேர்ந்தேன் என்பது தனிக்கதை). ஆனாலும் அவர்கள் என்னை வேலையை விட்டுத் தூக்கவில்லை. காரணம் என்னுடைய வேலை அவர்களுக்குப் பிடித்திருந்தது. என்னுடைய உழைப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் என் கோரிக்கையை ஏற்று ரூம் சர்வீஸ் டிப்பாட்மென்டுக்கு மாத்தினார்கள்.


***


ஓட்டல் நிர்வாகத்துடன் விமான நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் போட்டிருந்தது. அதனால் எப்போதுமே பிளைட் பைலட்டுடன் சேர்த்து பத்துப் பன்னிரெண்டு ஏர் ஹோஸ்டஸ் ரூமில் ஓய்வில் இருப்பார்கள். ஒரு பேச் டூட்டிக்குப் போனால் அடுத்த பேச் வந்திறங்கும். வாழ்க்கை நிச்சயமில்லை என்பதாலோ என்னவோ, இவர்களுக்கு தனித்தனியான ரூம் இருந்தாலும் பெரும்பாலும் அவர்களின் வயதுக்கு ஏற்ப ஆண் பெண் என சோடியாக சேர்ந்து இருப்பார்கள். இவர்கள் காட் லிக்கர், புஃட்டு எல்லாம் ரூமுக்கே ஆடர் பண்ணுவார்கள். பன்னிரெண்டு ரூமில் இருந்தும் ஆர்டர் வரும். சில வேளைகளில் இரண்டு பேச் தங்கியிருக்கும்போது ஆர்டர்கள் அதிகமாகவே வரும். இந்த ரூம் ஆர்டர்களுக்கு போவதற்கு நாங்கள் விரும்புவதற்கு காரணம் அவர்கள் டிப்ஸ் தருவார்கள். அவர்கள் விமானத்திற்குள் என்ன செய்வார்களோ அதைத்தான் நாங்கள் இங்கு செய்யிறம். சில நாட்களாக நான் ஒரு கொள்கை முடிவில் இருந்தேன். எனக்கு ஏன் இப்படியான யோசனைகள் வருகிறது என்பதற்கான சரியான காரணங்களை எனக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு வேளை பிறவிப் புத்தியோ என்னவோ. வேறு ஏதாவது காரணங்கள்கூட இருக்கலாம். பெரும்பாலும் இரண்டு ரூமில் இருந்து வரும் ஆர்டர்களை ஒரு ரூமிற்கு கொண்டுவரச் சொல்வார்கள். ஆண்மட்டும் ரூம் வாசலியே ஆர்டரை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வந்து பில்லில் கையெழுத்திடுவார்கள். இந்த மாதிரியான ரூமிற்குள் பக்கத்து அறை பெண் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் வரச் சொன்னால் அன்றி நாங்களாக ரூமிற்குள் செல்லமாட்டோம். இப்படியான ஒரு லஞ்ச் ஆர்டருடன் 103 ம் இலக்க ரூமிற்குச் சென்றேன். அவர் உள்ளே அழைத்து டீப்பாயில் புஃட் ட்ரேயை வைக்கச் சொன்னார். கட்டிலில் போர்வையால் உடல் முழுவதும் போர்த்தியபடி படுத்திருந்தபடியே தலையை மட்டும வெளியே நீட்டி ஒரு பொண்ணு தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தது. சாருக்கான், கஜோல் தொலைக்காட்சி திரையில் தெரிந்தார்கள். டீப்பாயில் புஃட்டை வைத்ததும் பில்லை போள்டருடன் கொடுத்தேன். பில்லை சரி பார்க்காமலே பில்லில் கை எழுத்துப் போட்டதும் நூறு ரூபாயை பில் போல்டருக்குள் வைத்தார். 


“நான் டிப்ஸ் வாங்குவதில்ல எனக்கு வேண்டாம்” என்றேன்.

அவர் முப்பது வயது மதிக்கத்தக் நார்த் இந்தியன் மாதிரித்தான் இருந்தார். 


“பிளடி பெக்கர் கெட்டவுட் ஃபறம் த ரூம்” என்றார். 

தலையை தொங்கப் போட்டபடி வெளியே வந்தேன். அவருடைய அணுகுமுறை சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் டிப்ஸ் வாங்காதது அவருக்கு அவமரியாதையாக இருந்திருக்கலாம். எனக்கு இது சுயமரியாதையாக இருக்கக்கூடாதா? நான் நிர்வாகம் தரும் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். அது போதுமே எனக்கு. பின் எதற்கு டிப்ஸ்? சில கெஸ்ட் பாராட்டினார்கள். சிலர் முகம் சுழித்தார்கள். இவனைப்போல் சிலர் பிச்சகார நாயே வெளியே போ என்றார்கள். எனக்கு இது ஒரு விளையாட்டு மாதிரி இருந்தது. 


இப்போதெல்லாம் நான் டிப்ஸ் தரும் ரூம்களுக்கு ஆர்டர் கொண்டு போவதில்லை. எங்களுக்கு பெரும்பாலும் தெரியும் எந்த ரூமிலிருந்து டிப்ஸ் வரும் என்று. என் உடன் வேலை செய்யும் சக பணியாளருக்கு சந்தோசம். எனது டிப்ஸ் தரும் ரூம் ஆர்டர்களுக்கெல்லாம் அவனே போவான். அவனுக்கு இரட்டிப்பு வருமானம். அதனால் நான் உள்ளுக்குள் இருக்கும் மேனேசர் அலுவலகம், என்ஜினியர் அலுவலகம், ஆடிட்டிங் அலுவலகம், எச்சார் ஆபீஸ், ஜெனரல் மேனேசர் அலுவலகம் அவர் தங்கியிருக்கும் பிளாட்டுக்கெல்லாம் உணவு, பானம் காவிக் கொண்டு திரிந்தேன். இந்த வேலையை சக பணியாளர்கள் விரும்புவதில்லை. ஒரு தடவை சர்வீஸ் பண்ணவும், மறுதரம் அதனைக் கிளியர் பண்ணவுமாக இரண்டு தடவைகள் செல்ல வேண்டும். எந்த விதமான கூடுதல் வருமானமும் வராது. இது ஒரு அடிசனல் வருமானம் இல்லாத வேலை. ஒரு பைத்தியகாரனாக பலரும், விதிவிலக்கானவனாக சிலரும் ஓட்டலில் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜிஎம் பிளாட்டுக்கு தொடர்ந்து வருவதை கவனித்த அவர் அலுவலகத்தில் எதுவும் பேசமாட்டார். இரவு உணவுக்கு முன் இரண்டாவது லார்ஜ் விஸ்கியோடு அவர் பிளாட்டுக்கு போகும்போது, அல்லது கடைசியாக கிளியரன்சுக்கு போகும்போது சில வார்த்தைகள் அக்கறையாகப் பேசுவார். அவ்வாறான நேரங்களில் நான் அவரிடம் தமிழில் பேசுவேன். ஒரு நாள் 


“லண்டன்ல வேலை செய்திருக்கிறேன். அப்போ எங்கூட இலங்கைத் தமிழர்கள் சிலர் வேலை செய்தார்கள். சில நண்பர்கள்கூட இப்பவும் இருக்கிறார்கள். நீங்க பேசும் சில வார்த்தைகள் இலங்கைத் தமிழ்போல் இருக்கிறது” என்றார்.


அந்த கும்பகோணத்துக்காரர். சந்தேகத்தால் இல்லாமல் இயல்பானதாக அவர் உரையாடல் இருந்தாலும் எனக்கு பதற்றம் தலைக்கேறியிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல மறைத்து வைத்திருந்த இரகசியம். உண்மையைச் சொல்லியிருந்தால் வேலை கொடுத்திருப்பார்களா. 


நிதானமாக,

“சார் நான் நாகர்கோவிலில் கொஞ்ச நாள் இருந்தேன். அவங்க மலையாளம் கலந்த தமிழ் பேசுவார்கள் அது எனக்கும் வந்திருக்கலாம்”, 

என்றேனே தவிர நான் ஒரு இலங்கை அகதி என்பதை ஓட்டல் நிர்வாகத்துக்கு முற்றிலுமாக மறைத்திருந்தேன். 2005ம் ஆண்டு நடுப்பகுதியில் நானாக ராஜனாமா செய்து ஓட்டலைவிட்டு வெளியேறியபோது எனது பணி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மகா புரமோசனில் வேறு ஓட்டலுக்கு வேலைக்குச் சென்றிருந்தாள். 

***

தொ.பத்தினாதன்: இலங்கை மன்னார் மாவட்டம், வட்டக்கண்டல் என்ற ஊரில் பிறந்தவர். 1990களில் நிகழ்ந்த இரண்டாம் கட்ட போரில் அகதியாக தமிழகம் வந்தார். தமிழகம் வாழ் இலங்கை அகதிகள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். காலச்சுவடு பதிபகத்திலும் திரைத்துறையிலும் பணி செய்தார். தன்வரலாற்று நூலான போரின் மறுபக்கம் பரவலான கவனத்தை ஏற்படுத்திய நூல். சிறுகதைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: pathixyz@gmail.com.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here