கந்தசாமி சித்தையன்
மூங்கிலால் செய்யப்பட்ட பெரிய ஏணியில் முக்கால் உயரத்தில் லுங்கியும் பனியனும் அணிந்துகொண்டு மொரமொரவென இருந்த புதிய கட்டிடத்தின் வெளி சுவற்றினை உப்பு காகிதத்தால் வரக் வரக் என நாசியில் கான்கிரீட் துகள் ஏற தேய்த்து கொண்டிருந்தான் முத்துசாமி. உள் சுவரில் லேசான மணலும் வெளிச்சுவற்றில் அதை விட கொஞ்சம் தடிமனான மணலும் பூசப்பட்டு இருந்ததால் வண்ணம் பூசுவதற்கு வசதியாக சுவற்றினை அழுத்தித் தேய்த்தான்.
ஏணியை அடியில் பிடித்துக்கொண்டிருந்த காளியப்பன் “யன்னா முத்துசாமி கௌருமெண்டு வேலைக்கு போவியா இல்ல இப்படியே எங்க கூட வேலைக்கு வந்து காலத்த ஓட்டிடுவியா” என்று கொஞ்சம் நக்கலாக கூறினான்.
காளியப்பன்தான் அவனை வண்ணம்பூசும் வேலைக்கு அழைத்துவந்தவன். இருவருக்கும் சமவயதுதான், இருபத்தி ஐந்து இருக்கும். முத்துசாமி இரண்டு மாதம் பெரியவன் என்று காளியப்பனின் அம்மா அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பார்.
முத்துசாமி, முதுநிலை இயற்பியலும் இளங்கலை கல்வியியலும் முடித்தவன். ஊரில் அவனை பெரும்பாலும் “வாத்தியாருன்னுதான் கூப்பிடுவாங்க”, அதை கேட்கும் போதுதான் அவன் ஆசிரியருக்கு படித்ததையே உணர்வான். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் ஐந்து மதிப்பெண் எடுத்த மாணவர்களில் அவனும் ஒருவன். சேலம் அரசு கலைக்கல்லூரியில் அவனுக்கு இலவசமாக இயற்பியல் துறையில் இடம் கிடைத்தது. அரசு மாணவர்விடுதியில் சேர்ந்து படித்தான். அங்கேயே முதுநிலைப் படிப்பிற்கும் இடம் கிடைத்தது. அதே கல்லூரி அதே விடுதி என ஐந்து ஆண்டுகள் அங்கேயே இருந்து முதுநிலை முடித்தான்.
அவன் ஊர் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் இளங்கலை சேர்ந்தான். அவன் தாய் ஐம்பதாயிரமும் தந்தை ஐம்பதாயிரமும் என தங்கள் வாழ்நாளில் சேர்த்த மொத்தப் பணத்தையும் தந்து சேர்க்கைக்கு உதவினார்கள்.
“எங்ககிட்ட இருக்கிறது அவ்வளவு தான் உசரா பொழச்சிக்க” என்றார்கள்.
ஐந்தாண்டுகாலம் சேலத்தில் திருமண மண்டபம், உணவங்களில் உணவு பரிமாறும் வேலை செய்து படித்ததால் வீட்டில் அவன் பணம் பெற்றதேயில்லை. இலவச மாணவர்விடுதி, அரசு கல்லூரி என்பதால் சிறிய சிறிய செலவினங்களை அவனே பார்த்துகொள்வான். பெருந்தொகை என்பதால்தான் பெற்றோரிடம் கையை நீட்டும் நிலை அவனுக்கு. பணம் வாங்கும்போதே அவர்களின் சேமிப்பை அவர்களுக்குத் தெரியாமல் திருடுவதுபோல் அவனுக்கு இருந்தது.
கல்வியியல் படிப்பின் இடையில் அரசு பள்ளிக்கு பயிற்சிக்குச் செல்லும்போது “வாத்தியார் வேல கிடைச்சிடுச்சின்னு” ஊரில் பேசினார்கள். அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் கடினமான ஒரு பகுதியை இயற்பியல் பாடத்தில் முடித்ததுபோல் முத்துசாமிக்கு இருந்தது.
டிஎன்பிஸ்சி நடத்திய குரூப் ஒன்று முதல் நிலை நான்கு வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகள், மத்திய அரசின் ரயில்வே தேர்வுகள் என முத்துசாமி எழுதாத தேர்வு கிடையாது. கடைசியாக அரசாங்கத்தின் அலுவலக உதவியாளர் பணி கிடைத்தால் கூட செல்லத் தயாராகத்தான் இருந்தான். அவன் அனைத்துத் தேர்வுகளிலும் தோல்வி அடைவதை சகிக்க முடியாமல் ஒருநாள் தந்தை சின்னக்கண்ணு அவனிடம் பொருமினார்.
“இருபத்தி அஞ்சு ஆகப்போவுது இன்னும் ஊட்டிலேயே இப்படியே குந்திக்கிட்டு இருந்தா வெளங்கிடுமா, இவன்சோடு ஆளுதான் காளியப்பன் ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பனாகிட்டான், மரம் வெட்டி சேத்து வச்சி இருந்த மொத்த பணத்தையும் முடிச்சிட்டான், கண்டாரஓலி பையன்”
தாய் அப்படி பேசாதே என்று தடுத்தால் தகப்பன் ஒருநாள் அமைதியாக இருப்பார், மறுநாள் முகத்தைக் காட்டுவார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முத்துசாமி அப்பனின் ஐம்பதாயிரத்தை முதலில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, காளியப்பனிடம் வண்ணம் பூசும் வேலைக்கு வந்து விட்டான். வேலைக்குப் புதுசு, அதனால் சுவற்றினை சுத்தம் செய்யும் பணியினைக் கொடுத்தான் காளியப்பன்.
முத்துசாமி வேலையில் கெட்டிக்காரன்தான் ஒரே மாதத்தில் வண்ணம்பூசும் வேலையைக் கற்றுக்கொண்டான் பிசிறு தட்டாமல் சுவற்றில் பலநாட்கள் பணி செய்தவன் போல வண்ணம் தீட்டுவான்.
நகரத்தில் காளியப்பன் பெரிய இரண்டு அடுக்கு மாடிவீட்டினை வண்ணம்பூசும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தான். அந்த வீடு ஆசிரியரின் வீடு. அதற்குப் பணி செய்ய ஐந்து ஆட்களை அழைத்து வந்திருந்தான் அதில் முத்துசாமியும் ஒருவன்.
கருங்கல்லை அரைத்து வண்ணம் பூசியதுபோல் இருந்த வீட்டைப் பார்த்து காளியப்பன் “யன்னா முத்து வூட்டுக்கு நல்லா தண்ணீ வுட்டுருப்பாங்க போல நல்லா கருகருன்னு இருக்குது” என்றான்.
“அவ்வளவு வேல வாங்கி இருக்காரு வீட்டுக்காரரு. வாத்தியாரு வூடு அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது. எத்தன பசங்கள மேய்க்கிறாரு!” நாற்பது நாள் பள்ளியில் பயிற்சிக்கு சென்று ஆசிரியர்களின் மனநிலையை நன்றாக அறிந்த முத்துசாமி கூறினான்.
தண்ணீரை சுவற்றில் நன்றாகப் பீய்ச்சி அடித்து ஈரம் காய்ந்தவுடன் வெள்ளைச் சுண்ணாம்பினை அடித்தார்கள், சனி ஞாயிறுகளில் ஆசிரியரைப் பார்க்கலாம், வண்ணப்பூச்சுகள் வழிந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர் காளியப்பனிடம் “பாத்து காளியப்பா இத்தன நாள் வேலையில் இருந்ததுக்கு இந்த வீடுதான் மிச்சம்”என்பார்.
வீட்டுகாரர்களிடம் பெரிதாக செலவு வைக்காத காளியப்பன், “சார் மத்த ஆளுங்க மாதிரி வூட்டுக்காரங்க டவுசர உருவுர ஆள் நான் கிடையாது” என்பான்.
அந்த ஆசிரியர்தான் முத்துசாமியை விசாரிக்கும்போது அவனுடைய கல்வி நிலையை அறிந்து, இன்னும் இரண்டு மாதத்தில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வர இருப்பதையும் இப்படியே வேலை செய்துகொண்டு இருந்தால் படிக்க முடியாது என்றும், வேலையை விட்டுவிட்டு ஏதாவது பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தால்தான் போட்டித் தேர்வினை வெல்ல முடியும் என்று துறையில் மூத்தவர் என்ற முறையில் அவனுக்கு அறிவுரை புகட்டினார்.
இதுவரை சாம்பாதித்திருந்த முப்பதாயிரத்தில் பத்தாயிரத்தை தந்தையிடம் கொடுத்து சில மாதங்கள் வாயடைக்க வைத்தான். சேலத்தில் ஒரு போட்டித்தேர்வு மையத்தில் சேர்ந்து அங்கேயே படிப்பவர்கள் ஐவர் சேர்ந்து அறை எடுத்துத் தங்கி தவம் போல படித்துத் தேர்வானார்கள்.
முத்துசாமி அவன் ஊர் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் முதுநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தான். அவன் உடையில் வறுமை தெரிந்தது. அணிந்திருந்த வலது காலணியில் பெண்ணின் நெற்றியில் இடப்பட்டு இருக்கும் குங்குமப் போட்டு போல சுவற்றில் அடித்த சிகப்பு வண்ணம் ஒட்டி இருந்தது. பணியேற்பின் முதலாம் நாளில் அவனுடைய உடையைக் கண்டு சக ஆசிரியகள் பரிதாபப்பட்டார்கள்.
அனைத்து ஆசிரியை ஆசிரியர்களுக்கும் தவறாமல் வணக்கம் வைத்து விடுவான். ஒரு வருட காலம் அவனிடம் மற்றவர்களை மதிக்கும் போக்கு இருந்தது. அதன் பிறகு அவனிடம் நடை உடை பாவனை அனைத்தும் மாறியது. யாராவது எப்ப கல்யாணம் பெண் பார்த்துவிடலாமா? என்றால்
“பொண்ணு பீஜீ ஆசிஸ்டண்ட்டா இருக்கணும்”, அதுவும் நேரடி நியமனம் என்றால் பரவாயில்லை என்பான்.
முதுநிலை ஆசிரியை கிடைக்காதபோது அதேநிலையில் கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருக்கும் பெண்ணை திருமணம் முடித்தான். அவனின் கர்வம் மூளையை மட்டுமல்ல உடல் முழுமையையும் போர்த்தியது.
அந்தப் பள்ளியிலேயே அவன் தான் பெரியவன் என்று நினைத்தான். அவன் எடுக்கும் பாடம்தான் உயர்ந்தது என்பான். அப்படித்தான் ஒருநாள் அரையாண்டு விடைத்தாளைத் திருத்திக்கொண்டிருந்த முதுநிலை தமிழ் ஆசிரியரிடம் “என்னங்க ஆக்கா ஈக்கீதான சொல்லி கொடுக்கிறீங்க, அதத்தானே அவனுங்களும் எழுதி இருப்பானுங்க அந்த பேப்பர போயி இவ்வளவு மெனக்கெட்டு திருத்துறீங்க”என்றான்.
“உங்க இயற்பியலும் ஆக்கா ஈக்கீயால எழுதினதுதான் மறந்துடாதீங்க சார்” என்று வாயடைத்தார் தமிழ் ஆசிரியர்.
இடைநிலை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த வேதியியல் ஆசிரியரை ஓர் நாள் அழைத்து “அவனுங்க செகன்டரி கிரேடு சார், ஆறாவது ஏழாவது பசங்களுக்கு பாடம் நடத்துற ஆளுங்க, அவனுங்க கிட்ட நாம சரிசமமாக நின்னு பேசலாமா, நம்ப கேடர புரிஞ்சிசிக்கவே மாட்டேன்கிறீங்களே” என்பான்.
அப்பள்ளியில் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஓய்வறை ஒன்றுதான், அந்த அறையில் திருப்புத்தேர்வு ஆங்கில வினாத்தாளை கொண்டு வந்து சந்தேகம் கேட்ட மாணவனிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியரிடம் நமட்டுச் சிரிப்போடு “உங்களுக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா” என்பான்.
பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடக்கும் போது அனைத்து ஆசிரியர்களுக்கும் உணவு கொடுத்து வந்ததை “நம்ப எக்ஸாம் நம்ப பிராக்டீக்கல் எதுக்கு மத்த வாத்தியாருங்களுக்கு சோத்தபோடனும்” என்று பேசி அந்த முறையை முழுமையாக மாற்றினான்.
பதினொன்று பன்னிரெண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அவனுக்கு வணக்கம் வைத்தால் கூட ஏளனப் பார்வையோடு கடப்பான், மேல்நிலை மாணவர்கள் இருக்கும் கட்டிடத்தில் மற்ற கீழ்நிலை மாணவர்களைப் பார்த்தால் “உங்களுக்கு இங்க என்னடா வேல” என்று கடிந்து கொள்வான்.
இந்த பள்ளியில் உயர்ந்த நிலையில் இருக்கும் பணிநிலை முதுநிலை ஆசிரியர் நிலைதான். எனவே மற்ற ஆசிரியர்களும் நாமும் ஒன்று கிடையாது அவர்களும் நாமும் ஒரே அறையில் அமர்ந்து இருப்பது நம் பதவிக்கு இழுக்கு என்று அடிக்கடி சக முதுநிலை ஆசிரியர்களிடம் கூறி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு தனி அறையினை அவர்களுக்கு மட்டும் பெற்று, மற்ற ஆசிரியர்களிடம் இருந்து முதுநிலை ஆசிரியர்களை முழுவதுமாகப் பிரித்தான்.
“இந்தப் பள்ளியோட போர்ட பாத்தீங்களா மேல்நிலையின்னுதான் எழுதி இருக்கும். அந்த மேல் நிலைக்கு பாடம் எடுக்கிற ஆசிரியர்கள் நாமதான் எப்பவும் மேல. இனிமேல் எந்த வாத்தியாருங்களுக்கும் வணக்கம் வைக்காதீங்க” என்று சக முதுநிலை ஆசிரியர்களின் மனதில் பிரிவினையை உண்டாக்குவான். மற்ற ஆசிரியர்களிடம் வணக்கம் வைத்து பேசிக்கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர்களை தனிமைப்படுத்துவான். எதற்கு வம்பு எனறு அவன் போக்கிலேயே அவர்கள் போக ஆரம்பித்தனர். சக மனிர்களைவிட பதவிதான் அனைத்து நிலைகளிலும் மேலானது என்று நினைத்தான்.
முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் பள்ளி வந்து முதுநிலை ஆசிரியர் ஓய்வு அறையில் சந்திப்பு நடத்தியபோது முத்துசாமி அவரிடம்
“முதுநிலை ஆசிரியர்களுக்கு நீங்க என்ன செஞ்சிங்க? இந்த பள்ளியில்தான் நான் அவர்களுக்குத் தனி அறை வாங்கிக் கொடுத்திருக்கேன்” என்றான்.
தலைவர் “இங்க பாருங்க முத்துசாமி எத்தனையோ பிரச்சன ஆசிரியர்களுக்கு இருக்கு, அதை எல்லாம் இந்த தலைமை ஆசிரியருங்க செய்து கொடுக்க மாட்டாங்க, வாத்தியாருங்க நாம ஒன்னா இருந்தா அவர்களுக்குப் பிடிக்காது அதனால தான் நீங்க கேட்டவுடன் அவரு உங்களுக்கு தனி அறை கொடுத்துட்டார்.
உங்களுக்கு தனிக் கழிப்பிடம் கொடுப்பாரா? அதுக்கு செலவாகும் கொடுக்க மாட்டார், உங்க எல்லாத்துக்கும் தனி தனியாக சேர் டேபிள் கொடுப்பாரா? உங்க அறைக்கு மின் விசிறி வசதி பண்ணித் தருவாரா? அதை எல்லாம் தர மாட்டார், நாம பிரிஞ்சி இருந்தா அதிகாரத்துக்கு கொண்டாட்டம், நாம்ப நமக்குள்ளயே நீ பெரியவன் நான் பெரியவன்னு இருக்கிறதுனாலதான் அவரு அங்க ஆபீசுல ஜாலியா இருக்காரு. வர்ற பண்ட் எல்லாம் எப்படி வாய்க்குள்ள போட முடியுமோ அப்படி போட்டுக்கிறாரு நம்மைப் போன்ற தொழிலாளர்களுக்கு எதிரி அதிகாரம் தான், சக ஆசிரியர்கள் கிடையாது முத்துசாமி” என்றார்.
சந்திப்பு முடிந்து சங்க தலைவர் சென்றவுடன் சக ஆசிரியர்களிடம் “இந்த சங்கத்துக்காரனுங்க எப்பவுமே இப்படிதான், நாம்ப மட்டும் ஏதாவது தனியாக செஞ்சா பிடிக்காது” என்றான்.
தன் மகனின் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு காளியப்பன் பள்ளிக்கு வந்தபோது, அவன் யார் என்று தெரியாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டான் முத்துசாமி.
“பணம் பதவி வந்த உடனே கூட வேல செஞ்சது எல்லாம் மறந்து போச்சு பாரு அவனுக்கு, என்ன இருந்தாலும் படிச்சவன் அவன் பாதையில போயிட்டான், படிக்காத நானுதான் கடைசி வரைக்கும் இந்த பெயிண்ட் டப்பாவையே தூக்கிக்கிட்டு சுத்தனும் நீ இத பாத்தாவது புத்தியா இருந்துக்கோ” அவனுக்கும் தனக்கும் இருந்த அறிமுகத்தினை தன் மகனிடம் வீட்டிற்கு வரும்போது காளியப்பன் கூறினான்.
பட்டதாரி நிலையில் இருந்து முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களை தனக்கு நிகராக அவன் பார்க்கவில்லை, மாறாக, அவர்களிடம் கொஞ்சம் விலகி இருந்தான் “அவுங்கயெல்லாம் நம்பள மாதிரி நேரடியாகவா வந்தாங்க பின் வாசல் வழியாக வந்தவங்கப்பா” என்பான்.
முத்துசாமிக்கு இது போதவில்லை, இருக்கும் முதுநிலை ஆசிரியர்களை விட நான் திறமையானவன், அதை நிரூபிக்க ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பான். அரசு பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கான தேர்வினை எழுதித் தேர்வானான், அந்தத் தேர்விற்குப் பிறகு அவன் அறையில் இருந்த முதுநிலை ஆசிரியர்களை அவன் பார்க்கும் பார்வை வேறாக இருந்தது. அந்தப் பார்வையில் உங்களை விட நான் பெரிய ஆசிரியர் என்ற கர்வம் இருந்தது.
தடையின்மை சான்று பெற்றுக்கொண்டு அன்று நடந்த பிரிவு உபசாரவிழாவில் முத்துசாமி முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் அவன் ஒரே மாதிரிதான் பார்த்தான். ஏன், தலைமை ஆசிரியரையும் சேர்த்துத்தான். புது உடையில் டக் செய்துகொண்டு மிக நேர்த்தியாக இருந்தான். அனைவரிடமும் புன்னகை மட்டுமே செய்தான். அப்புன்னகையில் நீர் கலந்த மோர் போல கலப்படம் தெரிந்தது.
பொறியில் கல்லூரியின் அலுவலகத்தில் பணி ஏற்பு செய்துவிட்டு, பேராசிரியர்களின் ஓய்வறைக்கு வந்தான். இரண்டு பேராசிரியர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் டேபிளின் மேல் அவர்களின் பெயரோடு சேர்த்து M. E., P.hD., என்ற பட்டம் கொண்டு நீலநிற பெயர் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதி கண் திருஷ்டி பொம்மைபோல் வலது மூலையில் இருந்தது.
ஒரு பேராசிரியர் “ஓ நியூ அப்பாயின்மெண்ட்டா! ஃபர்ஸ்ட் இயர் அசிஸ்டண்ட் புரபொசர் தான? அங்க உட்காருங்க”, ஒரு மூலையில் இருந்த சேர் டேபிளை காட்டினார். அந்த இடம் அந்த அறையில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல இருந்தது.
பொறியியல் கல்லூரியில் பொறியியலில் முதுநிலை முடித்தவர்கள் மட்டும்தான் கடைசி மூன்றாண்டுகளுக்கும் பாடம் எடுப்பவர்கள். சொல்லப் போனால் மூத்த பேராசிரியர்கள். அறிவியல் கணிதம் போன்றவற்றில் முதுநிலை பட்டம் பெற்று வந்தவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் பாடம் எடுக்க முடியும். அவர்கள் சின்ன பேராசிரியர்கள்.
முதலாமாண்டு வரும் மாணவர்கள் வந்த புதிதில் கல்லூரியின் கட்டமைப்பு பற்றித் தெரியாமல் முதலாமாண்டில் பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கு பெரும் மரியாதை கொடுப்பார்கள், முதலாமாண்டின் இரண்டாம் செமெஸ்டர் வந்தால் முத்துசாமிக்கு கல்லூரியில் நடப்பது கொதிக்கும் பாறையில் நடப்பதுபோல் இருக்கும். வர வர மாமியா கழுதைப்போல் ஆனாள் என்கிற கணக்காய் வகுப்பறையில் மாணவர்கள் கூட அவன் உள் நுழையும் போது எழ மாட்டார்கள். முதலாமாண்டு வரைக்கும் தானே அவர்கள் அதனால், மாணவர்களே அவர்களைப் பெரிதாக மதிப்பதில்லை. தொடர் தேவை இருந்தால் தானே மதிப்பு மரியாதை எல்லாம். மற்ற பேராசிரியர் முதலாமாண்டு பேராசிரியர்களைக் கண்டால் ஏதோ மலத்தைப் பார்ப்பதுபோல முகத்தைத் திருப்பி கொள்வார்கள். இவன் தான் முதல் வணக்கம் சொல்வான். தன்னை எந்த மூத்த ஆசிரியராக நினைத்துக்கொண்டு அனைவரையும் புறக்கணித்தானோ அந்தப் புறக்கணிப்பு முத்துசாமிக்கு நடந்தது.
அன்று இயற்பியல் துறையில் இருக்கும் கட்டிடங்களுக்கு வண்ணம்பூசும் பணி நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு அறையிலும் வாசற்படியின் மேல் சுவற்றில் இயற்பியல் அறிஞர்களின் வாசகங்களை எழுதிக்கொண்டு இருந்தார்கள். ஓய்வறையின் வெளியே இருந்த புங்கன் மரத்தடி நிழலில் நின்று கொண்டு விழுந்திருந்த பூக்களை வேடிக்கை பார்த்துகொண்டு சிறு நடை நடந்து கொண்டிருந்தான். முத்துசாமியின் அந்த நடையில் சோம்பல் இருந்தது, இவரோடு பள்ளியில் முதுநிலை வேதியல் ஆசிரியராகப் பணி புரிந்தவர், மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வாங்க வந்தவர், முத்துசாமியைப் பார்க்க இரண்டு மாணவர்களோடு அங்கு வந்தார்.
“எப்படி இருக்கீங்க பேராசிரியர் சார்?”
“ஏதோ இருங்கங்க சார்” பள்ளியில் இருந்த சத்தம் முத்துசாமியின் பேச்சில் இல்லை.
“நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன் சார்”
“அப்புறம் ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?”
“பேனல் கேட்டு இருக்காங்க சார், வர்ற ஜூன்ல ஹெச்சம் வந்திடும், அப்புறம் என்ன முப்பது வாத்தியாருங்க தினமும் கூப்பிட்டு வணக்கம் வைப்பார்கள். ஆபீஸ் வேல, பிடீஏ எஸ்ம்சின்னு அப்படியே ஓட்ட வேண்டியது தான், நீங்களும் நம்ப பேட்ச் தானே!
ரேங்க்ல முன்னாடி வேற போன வருஷமே உங்களுக்கு ஹெச்சம் கிடைச்சிருக்கும், என்ன இருந்தாலும் நீங்க காலேஜ் வாத்தியாருங்க சார்!
இங்க எப்படி சார் போகுது?”
நமட்டு சிரிப்பு சிரித்த முத்துசாமி வேதியியல் ஆசிரியரையும் மாணவர்களையும் பார்த்துவிட்டு ஓய்வறையின் சுவற்றைப் பார்த்தான் ‘எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு’-நியூட்டன். என்று வெள்ளை நிறத்தில் புதிதாக எழுதப்பட்டு இருந்தது.
***
கந்தசாமி சித்தையன் – சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி இவரின் பூர்வீக கிராமம். அரசுபள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் படைப்பு சேலம் மேற்கு பகுதியில் குலதெய்வ விழாவாக கொண்டாடப்படும் தெவவிழாவினை தெவம் என்ற பெயரில் நாவலாக எழுதியுள்ளார்.அந்நாவல் யாவரும் வெளியீடாக கடந்த 2025ம் ஆண்டு வெளிவந்தது.இப்பொழுது சிறுகதைமீது நாட்டம் கொண்டு கதைகளை எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ksamyslm1992@gmail.com

