தூயன்
பதினொராவது பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பெரு மந்தத்தில் நானும் என் கணவரும் மறுபடியும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஆனோம். புதிய வீடு வாங்குவதற்கான எங்களுடைய சேமிப்பு நின்று போனது. அலுவலகம் போகும் வழிகளில் கண்ட அழகிய வீடுகளின் காட்சிகள் சட்டென நின்றுவிட்டன (தினமும் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் நான் பறந்து செல்வது வழக்கம்). வெறுமையை அசைபோட முடியாமல் மனப்பசு அப்படியே நின்று கொண்டிருந்தது. சிலந்தி வட்டத்தையும் குழவியின் குன்றையும் கண்டு மனம் ஆளாய் பறக்கும். மாபெரும் மௌனவெளியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினேன். திசைத்தப்பிய தும்பியாட்டம் கண்ணாடிச் சன்னல்களில் மோதி மோதிச் சாய்ந்து ஒருகட்டத்தில் படுக்கையிலிருந்தே எழ முடியாமல் ஆகிற்று. உறங்குவதற்குப் பழகிக்கொண்டேன். அவ்வளவுதான் வீடு கனவு என்னை ”வா” என்று அணைத்துக்கொண்டது. இரவானால் நான் உறங்குவதற்கு என் கனவு வீட்டிற்கே தினமும் போய் வந்தேன். காலையில் என்னுடைப் படுக்கைக் களையாமல் அப்படியே இருக்கும். ஆனால் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்படுவேன். அதாவது, சமீப காலமாக விடிவதுகூட தெரியாமல் நான் உறங்கிக்கொண்டே இருப்பதாக என் கணவர் வருத்தப்பட்டார். நாளாக ஆக உறக்கம் களைவது நண்பகலைத் தாண்டிகூடச் செல்கிறது. ஒருபக்கம் என்னை எழுப்புவதை அவரே தவிர்த்தாலும் (என் வேலைப் பளுவால்) ஒரு நாளில் முக்கால் பங்குப் பொழுதை நான் யாருக்கோ தருவதாக அவர் குழந்தைபோல வருத்தப்பட ஆரம்பித்தார். உண்மையில் எனக்கு உறங்குது பிடித்திருந்தது. நான் உறங்குவது ஒரு வீட்டிலும் எழுவது இன்னொரு வீட்டிலுமாக உணர்வதை அவரிடம் சொன்னபோது முதலில் அவருக்குத் திடுக்கெனத்தான் இருந்தது. இதிலிருந்து என்னை மீட்க எத்தனையோ பிரயத்தனங்கள் செய்து பார்த்து, கடைசியாக உறக்க நல மருத்துவரிடம் போவதுதான் சரியென முடிவெடுத்தார்.
ஆலோசனைச் செயலி எங்கள் வசிப்பிடத்திற்கருகேயே ஆலோசனை மையம் இருப்பதைக் காட்டியது. காலையிலேயே நானும் கணவரும் சென்றுவிட்டோம். காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறவர்கள் எல்லோரும் சாய்விருக்கையிலேயே தலை தொங்கும்படியும் சாய்ந்தபடியும் (ஒரு இளைஞன் அவனது மடியில் அவனது தலையை வைத்து தூங்குகிறான்) வெகுநேரமாக உறங்குவதாகத் தெரிந்தது. அவர்களது உறங்கங்களைக் கண்டு எனக்குப் பொறாமையாக இருந்தது உண்மையில். அவரவர்கள் விரும்புகிற உலகத்தில் நட்சத்திரங்களுக்குள் அண்டவெளிகளுக்குள் தூக்கனாக்குருவிக் கூட்டிற்குள் ஏன் பழைய காலத்தின் குடிசைகளுக்குள்கூட உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். நான் ரசித்துக்கொண்டிருந்தேன் அப்போது சாம்பல் நிறப் பூனையொன்று மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தது.
செவிலி எங்களது முன்பதிவு எண்ணை அழைத்தார். எனது பிரச்சினைகளை மருத்துவர் கேட்டுவிட்டு, ”சமீபமாக இதுபோல மணிக்கணக்காக உறங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதெல்லாம் நம் லட்சியங்கள்மீது நாம் ஏற்படுத்திய அதீத கற்பனையின் விளைவு. இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வியாதியே இதுதான். மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரென்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதால், இயற்கையான செய்முறை தீர்வுக்குச் செல்லலாம்” மறுபடியும் அந்தப் பூனை அறைக்குள் நுழைந்தது.
”போய்டலாம் இரு” என்றார் அந்தப் பூனையிடம். ”எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?”
”எப்படி இருக்கும் இயற்கையான செய்முறை வழி?”
”ஆழ்மன ஆசையை நிறைவேற்றுவதுதான் வேறு என்ன. மாற்று மருத்துவத்தில் அதுதான் வழி”
மருத்துவர் செவிலியரிடம் திரும்பி ”என்னமோ கோபமா இருக்கிறான்” என்றார் பூனையைத் தடவியபடி.
”எங்களால் இப்போதிருக்கும் பொருளாதாரச் சூழலில் அதுவும் என் கனவு வீடு மாதிரி ஒன்றை கற்பனைகூட செய்ய முடியாதே”
”வேறு வழி இல்லை. அப்படி செய்யவில்லையென்றால் நாளாக ஆக, உங்களுடைய உறக்கம் அதிகரித்து பிறகு அங்கேயே நீங்கள் தங்கி விடுவீர்கள். உங்கள் கனவு வீட்டிலிருந்து சாமான்யமாக உங்களை எழுப்ப முடியாமல் போய்விடும். அதாவது அந்த வீடுதான் உங்களுக்குப் பிடிக்கத் தொடங்கிவிடும். இப்போது இருக்கிற வீடு நரகம் மாதிரி ஆகும்”, எச்சரிக்கை மாதிரி இருந்தது .
ஆலோசனைக்குச் சென்று திரும்பியதிலிருந்து மருத்துவர் சொன்னபடி என்னுடைய உறக்கம் அதிகரிக்கத் துவங்கியிருப்பதாகக் கணவர் கூறினார். முதல்நாள் நான் விழிக்கையில் மதியம் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், மறுநாள் விழிக்கையில் இரவு உணவு தயாரிப்பதை நானே கவனித்தேன். மூன்றாம் நாள் அவரும் நானும் அவருடைய அடுத்தநாள் காலையிலும் என்னுடைய முதல்நாள் காலையிலுமாக கண் விழித்தோம். தேதியும் மணியையும் அவர் சொன்னபோது (அந்த முகத்தின் அப்பியிருந்த சோகம் என்னை உலுக்கியது) நான் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டேன்.
இந்தச் சிக்கலை உடனே சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். கனவு வீட்டை வாங்குவது அவ்வளவு லேசனாதல்ல என்று தெரியும். பதிலாக, ஏதாவது ஒரு பழைய வீடு வந்தால் வாங்கும் முடிவுக்கு வந்தோம். என் கனவு வீட்டின் வரைபடத்தையும் எங்களுடைய அதிகபட்ச விலை மதிப்பையும் வைத்து, வீடுகள் செயலிக்குள் தேடத் தொடங்கினோம். புதியப் புதிய செயலிகளை அது எங்கள் முன் இறைத்தது. நிறைய அழைப்புகள். சோர்ந்துபோகாமல் ஒவ்வொன்றையும் பொறுமையோடு தேடியதில், நீங்கள் நம்ப மாட்டீர்கள், அச்சு அசலான என் கனவு வீட்டை ஒரு செயலி காட்டியது. எங்கு தினமும் நான் உறங்கப் போகிறேனோ, எங்கிருந்து என்னை எழுப்ப என் கணவர் படாதுபாடுகிறாரோ, எங்கு அற்புதமான இரவையும் நட்சத்திரம் போன்று பரந்துவரும் தும்பிகளையும் சில்லிடும் பனிப் பொழிவையும் வெட்கத்தோடு உறங்கச் செல்லும் அந்திச் சூரியனையும் நான் காண்கிறேனோ அதே வீடுதான். ஆனால் அந்த வீட்டிற்கு வெளியே நாகலிங்க மரத்தையொட்டி என் கற்பைனையில் இல்லாத, சுருள் மாடிப் படிக்கட்டுகளும் தொங்கும் மழைநீர் தொட்டிகளும் (மழைக்காலத்தில் மாடியில் சேகரமாகும் நீர் அதன் வழியாக அருவியாகக் கொட்டும் என்று நினைக்கிறேன்) வீட்டைச் சுற்றி அழகழகான சிமெண்ட் சாய்விருக்கைகள் என அது, ”என்னை வா” என்றுதான் வாய்விட்டு அழைக்கவில்லை. அன்றைக்கே அந்த வீட்டை வாங்குகிற முடிவை எடுத்துவிட்டேன்.
அலுவலகத்திலிருந்து எழுபது மைல் தொலைவு. வீட்டின் உரிமையாளர் ஒருவர்தான். அறுபது வயதுக்கு மேல் இருக்கலாம். மிக அழகான வெள்ளைத் தாடியும் கச்சிதமான காலைநடைக்கான திருத்தமான ஆடையுடன் அந்த அழகிய வீட்டின் முகப்பிலிருந்த சிமெண்ட் கட்டையில் காபியோடு எங்களை வரவேற்றார். “டாக்டர் திரவியம்” என்று கைக் குலுக்கினார். அழகானக் கட்டுமானத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, இதை விற்கிற யோசனையே தனக்கு இல்லையென்றும், மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதாகவும் வெளிநாடு செல்வதற்கான அவசரம் ஏற்பட்டதால் மட்டுமே இப்படியொரு கசப்பான முடிவுக்கு வந்திருப்பதாக அழகான ஆங்கிலத்தில் முடித்தார். நான், ”முகப்பில் மட்டும் இந்த வீட்டிற்கான ஒரு பெயர் வளைவு மட்டும் இருந்திருந்தால். நீங்களும் என் கனவுக்குள் வந்துவிட்டீர்களோ என்று திடுக்கிட்டுப் போயிருப்பேன்” என்றேன். நான் அப்படிச் சொன்னது அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை ஆனால், கொஞ்சமும் சலனமில்லாமல் கார் நிறுத்தும் நிழற்தாங்கலுக்குள் சாய்வாக வைத்திருந்த ”புதிய தம்பதிகளுக்கான அழகிய கனவுச் சொர்க்கம்” என்கிற வளைவு பதாகையைக் காட்டினார். எனக்கு மயக்கம்தான் வரவில்லை. கனவுச் சொர்க்கம் என்கிற பெயரை நான் என் கனவு வீட்டின் முகப்பில் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் “புதிய தம்பதிகள்“ என்கிற முன்னொட்டு மட்டும் அதில் கிடையாது.
”இது ஏன் மாட்டாமல் இங்கே இருக்கிறது?”
“உங்களைப் போல ஒரு தம்பதிதான் இந்தப் பெயரை வைத்தார்கள்” என்று எங்களைப் பார்த்து திரவியம் குறும்பாகச் சிரித்தார். ”அதாவது, கொஞ்ச வருஷத்துக்கு முன்பு இது புதிய தம்பதிகள் மட்டும் வாடகைக்கு எடுக்கும் வீடாக இருந்தது. எனக்குப் பெரியப் பெரியக் குடும்பம், குழுந்தைகள் வருவது பிடிக்காது. வீட்டை பாழாக்கிடுவாங்க. என்னையும் வீட்டையும் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் புதுமணத் தம்பதிகளுக்கு விட்டால் வீடு அப்படியே இருக்கும் இல்லையா?. முதல் முறையா இங்க வந்தவங்க, இரண்டே மாசத்துல பெரிய வேலை கிடைத்து மாற்றலாகிட்டாங்க, அடுத்து வந்தவங்க ஒரு வருசம் இருந்தாங்க பிறகு குழந்தைகள் பிறந்து பெரிய குடும்ப ஆனதும், நானே காலி பண்ணச் சொல்லிட்டேன். அடுத்து, இன்னொரு அழகான ஜோடி, என்ஆர்ஐ. கொஞ்ச நாள்தான் பிறகு இந்தியக் குடியுரிமைக் கிடைத்து வேற இடம் மாறிட்டாங்க. இப்படி வர அத்தனைபேருக்கும் இந்த வீடு சுபிக்ஷ்த்தைக் கொடுக்கிறது வெளியே பார்க்கிறவங்க ஒவ்வொருத்தரிடமும் சொல்வது வழக்கம் (இந்த இடத்தில் அவர் முகம் அவ்வளவு பூரிப்பில் மிதப்பதைக் கவனித்தேன்). பெங்களூர் ஜோடி ஒன்னு இங்க வந்தாங்க ஒன்னறை வருஷம் இருந்தாங்க அவங்கதான் இதுக்கு ஹவுஸா ஆஃப் பாரடைஸ் னு பெயர் கொடுத்தது”
என் கணவர் இதைத் துளியும் நம்பவில்லை. தொழில்முறையில் இப்படியெல்லாம் வீட்டை விற்பதற்கு சில நம்பிக்கைகளை பரப்புவது மூன்றாம் தரமான உத்தி என்று காதருகே முணுமுணுத்தார். திரவியம் அதைக் கவனிக்காமலில்லை. முகம் கோணியது. எழுந்து சென்று வீட்டின் சாவியுடன் திரும்பியவர் எங்களை உள்ளே அழைத்தார். வீடு வட்ட வடிவமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். நிலைவாசல் நுழைந்ததும் கண்களுக்கு முன்னால் நான்கு பெரிய அறைகள் ஹாலிலிருந்து நீண்டிருந்தன. நடுவில் அழகிய ஊஞ்சல், கிழக்கில் சுவருக்குப் பதிலாக முழுவதும் ஜன்னல்கள். நான் உறங்குகிறேனா? இது எல்லாம் என் கனவுதானா? முதல்முறையாக என் கனவுக்குள் என்னைத் தவிர இருவர் நுழைந்திருக்கிறார்களா என்றெல்லாம் எனக்குக் குழப்பமாக எண்ணங்கள் ஓடின. நான் உண்மையில் பேச்சற்றுத்தான் இருந்தேன். அவரிடம் என் கணவர் எதையதையோ கேட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு உடனே ஓடிச் சொன்று தினமும் நான் உறங்கும் படுக்கையைப் பார்க்க வேண்டும், பொத்தென அதில் விழ வேண்டும் போல் இருந்தது.
திரவியத்திடம் கணவர் என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவர் என் பக்கம் திரும்பி, ”பணம் தருவதற்கு முன்னால் நீங்க வேணா அதைக் கேட்டு முடிவு பண்ணுங்க மேடம்” என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உறக்கம் என்னை மெல்ல அழைத்துக்கொண்டிருந்தது. நான் ”என்ன” என்று கணவரிடம் திரும்பினேன். ”இதற்கு முன்பு இங்கு இருந்தவர்கள் வீட்டைப் பற்றிப் பேசிய ஆடியோ இருக்காம்.” நான், ”நீ என்ன கேட்ட? இதுதான் இனி நம்ம வீடு. என்ன சரியா?” என்று கணவரை அமர்த்தினேன். “மிஸ்டர் திரவியம் அவர் சொல்வதைப் பெரிசா எடுக்க வேண்டாம். எனக்குப் பிடித்திருக்கு. எவ்ளோ என்ன என்பதைச் சொல்லுங்க? எப்போ கையெழுத்து போடனும்?” என்று விசயத்தை முடித்துவிட்டேன்.
நல்ல நாளாகப் பார்த்து நாங்கள் என் கனவு வீட்டிற்குக் குடி வந்தோம். உண்மையில் நாங்கள் எந்தப் பொருளையும் எடுத்து வரவில்லை. எங்களுக்குத் தேவையானவை எல்லாம் அது அது அதனதன் இடத்தில் அங்கு இருந்தன. மருத்தவர் கூறியபடி நான் என் நீண்ட உறக்கத்திலிருந்து விடுபட்டுக் கணவரோடு பொழுதைக் கழிக்கப்போகும் சந்தோஷம் எனக்கு. ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக கனவு வீட்டிற்கு வந்ததிலிருந்து கணவர் என்னிடம் கோபமாகவே இருந்தார். அவரை நான் மீறியதாக வருத்தம். அவர் மனதில் வைத்திருந்தத் தொகைக்கும், திரவியத்திடம் வாங்கியதுக்கும் இரண்டு மடங்கு வித்யாசம். ”என் உறக்க வியாதிக்கு ஆங்கில மருத்துவம் எடுத்திருந்தால் இதுக்கும் அதுவும் சமமாகத்தான் வந்திருக்கு” என்று ஒருவழியாக சமாதானம் பண்ணினேன். ”சரி அதுக்காக வீட்டை விற்க யாரோ பேசினதெல்லாம் விளம்பரமா பயன்படுத்துவது என்னமாதிரி ஆள் அவர்?” என்றார். நான் உடனே ”அதைத் தொழில் புத்தி என்று நினைக்க வேண்டும்? இந்த வீட்டைப் பற்றின ஆவணக் காப்பகமாக ஏன் இருக்கக் கூடாது?” கணவரிடம் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. ”சரி கேட்டா போகிறது” என்று முணுமுணுத்தவாறே ஹாலில் இருந்த சிறிய பெட்டியின் சாவியைத் திறந்து, கணினி போன்ற அதன் திரையை உயிர்பித்தேன். கணவரிடம் திரும்பி, ”கடவுச் சொல் என்னக் கொடுத்தார்?”
“பாரடைஸ்” . கணினித் திரை எங்களுடைய வீட்டின் மாதிரி படத்தைக் காட்டிற்று. ”வேறு என்ன சொல்லனும்” என்பதுபோல பார்த்தேன். அவர் “வீடு” என்றார். நானும் “வீடு” என்றேன். திரை, தேதி வாரியாக அங்கு குடியிருந்தவர்களின் பெயர்களோடு அருகே அவர்கள் பேசிய ஆடியோக்களை ஓடவிட்டது. தோராயமாக ஒன்றை நிறுத்தினேன். ”இந்த வீடு எவ்ளோ அழகு. நமக்கு இங்க வந்தபிறகு ஒரு சண்டகூட வரலையே!” ”எனக்கு கார்டன்தான் பிடிச்சிருக்கு. அங்கு போய் உட்கார்ந்தா மனசு அவ்ளோ லேசா ஆகுது” இப்படி தம்பதிகள் பேசுவது ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு தேதியாக பின்னோக்கிச் சென்று யார் யார் என்னவெல்லாம் வீடு பற்றிப் பேசியிருக்கிறார்கள் என்று தேடித் தேடிப் பார்தேன். ஒவ்வொரு ஆடியோ திறக்கும் முன் அவர்களுடைய பெயர் அறிமுகத்தைத் திரை முதலில் அறிவித்துவிடும் பிறகு சம்பாஷனை ஒலிக்கும். சில இடங்களில் ஒலிவாங்கி சரியாகப் பதிவு செய்யவில்லை, சிலது செவி அருகே பேசுவது மாதிரி அவ்வளவு துல்லியம். என் கணவர் இதில் இரண்டை மட்டும் அன்று திரவியத்தின் முன்பு போட்டுக் கேட்டிருக்கிறார். அந்தச் சமயத்தில்தான் நான் எதுவும் பேசாமல் வீட்டைப் பார்த்தப் பிரமிப்பில் கனவு வீட்டை அனுபவிக்கும் ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்துள்ளேன். இப்போது மறுபடியும் இந்த ஒலிக்கோப்புகளைக் கேட்கையில் யாரோ என்னை கனவுலகத்திற்குள் அழைப்பதாட்டம் தோன்றிற்று.
கனவு வீட்டிற்கு வந்த பிறகு என் நீளுறக்கம் மெல்ல மெல்ல தன்னைச் சுருட்டிக்கொண்டிருப்பதை நானே உணர்ந்தேன். காலைப் பொழுதுகள் அழகான மலர்களுடனும் குயில்கள் பேசும் கதைகளுடனும் தொடங்கிற்று. வீட்டைச் சுற்றி நிற்கும் மரங்கள், நெருக்கிக்கொண்டு சரிந்திருக்கும் அதன் நிழல்கள் என ஒவ்வொன்றையும் ரசிக்கத்தான் பொழுது போதவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தச் சம்பாஷனைப் பெட்டியைத் திறந்து வேறு என்னலாம் என் கனவு வீட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்களென்று ஆராய்வேன். உண்மையில், வீட்டின் வரைபடத்தையே அவர்கள் பேசியதுபடிதான் சுற்றிப் பார்த்தேன். வீட்டில் நான்கு படுக்கையறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்துக்குமாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காதவொன்றாக அந்தப் படுக்கையறைகள் எங்களுக்குள் செயல்பட்டன. விலகிக் கிடந்த எங்களது அன்யோன்யம் ஒன்றையொன்று ஈர்க்கத் துவங்கியது. எப்படியென்றால், ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப அந்தந்த அறைகளுக்கு வெளியே நிற்கிற மரங்களும் அதன் பூக்களும் அப்பருவத்தை எங்களுக்கு மாற்றிக்கொடுத்தன. வெயில் காலம் என்றால் முதல் படுக்கையறை. ஜன்னலுக்கு வெளியே புங்கை மரங்களும் வாகை மரங்களும் நின்று அழகைக் காட்டும். மழை காலத்தில் இரண்டாவது படுக்கையறை ஜன்னலில் கடம்ப மரங்கள் தெரியும். குளிர்காலத்தில் மூன்றாவது படுக்கையறையின் கொல்லையில் நாகலிங்க மரத்தில் பாம்புகள் பிணைந்து கொண்டிருப்பதாட்டம் நாகலிங்கப் பூக்கள் படம் எடுத்து ஆடும். இலையுதிர்காலத்தில் செண்பக மரங்களும் பன்னீர் பூக்களும் எங்களுக்குக் கிறக்கமூட்டும்.
ஒரு வருடம் பூர்த்தியாவதற்குள் சல்லாபத்தின் அத்தனை வகைகளையும் நாங்கள் உறங்கிய அறைகள் ஒவ்வொன்றும் போட்டிப் போட்டுக்கொண்டு சொல்வதுபோல நாங்கள் முடித்திருந்தோம். அதிகாலையும் அந்திவேளையும் சல்லாபத்தைத் தீண்டாமல் எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை. ஆனால் ஒருநாள்கூட சலிக்கபே பண்ணாத முறைமைகள் எங்களுக்கு எப்படித்தான் இத்தனைநாள் மறைத்து வைத்திருக்க முடிந்ததோ என்று எங்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் என் வாழ்க்கையில் கலங்கலில்லாமல் விடிந்தப் பொழுதுகள் அத்தனையும் இந்த ஒரு வருடத்தில் மட்டும்தான்.
சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எனக்கு அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். கணவரின் அலுவலகம் இன்னும் திறக்கவில்லை. என் வீட்டைவிட்டுச் செல்ல எனக்கு மனமே இல்லை. கனவு களைந்துவிடுமோவென்கிற நடுக்கம். நான் அலுவலகம் முடிந்து வருவதற்குள் இந்த வீடும் அதன் தோற்றமும் கானல் சாலையில் மிதக்கும் வாகனங்கள்போல ஆகிவிடுமெனப் பயந்தேன். இரவு எப்போதுவரும் வீட்டை எவ்வளவு சீக்கிரம் அடைய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டேன். அலுவலகத்தில் என் சக ஊழியர்கள் நான் மிகவும் இளமையாகத் தெரிவதாகக் கூறினார்கள். நோய்காலமும் பொருளாதார நெருக்கடியும் அத்தனை பேரையும் இரண்டு தலைமுறைத் தாண்டிய இறுக்கத்தையும் பயத்தையும் வழங்கிவிட்டிருந்தது. வீடு வாங்கியதற்கான விருந்தை அன்றைக்குச் சாய்ந்தரம் அவசராவசரமாக கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.
என் குழந்தையைப் போன்று எனக்காக அது காத்திருக்குமென்று தெரியும். தூரத்திலிருந்து கார் திரும்பும் திருப்பத்திலேயே அது என்னை நோக்கிக் குதிப்பதாக அவசரப்பட்டேன். தொலைவில் விட்டைக் கண்டதும் என் மார்புகள் விம்மியடங்கின. வீட்டுக்குள் நுழைந்ததும் கணவர் பேயறைந்ததுபோல ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். அது என்னுடையது, அவர் அதில் ஒருநாள்கூட அமரக்கூடாது (ஒரேயொருமுறை மழைக்காலத்தில் என் சம்மதத்தோடு அதன் மேல் புணர்ந்ததைத் தவிர). கோபமாக ”என்ன?” என்றேன். அவர் சம்பாஷனைப் பெட்டி இடத்தைக் காட்டினார். அது பாதி உடைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சுவர் ஓரங்கள் கடப்பாறையால் குத்தப்பட்டிருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த வீட்டிற்குச் சிறு கீறல் பட்டால்கூட என்னால் தாங்க முடியாதென்று அவருக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உண்மையில் அப்போது கணவர் மேல் வந்த கோபத்திற்கு, ஆத்திரத்தில் பலாரென்று விடலாமெனத் தோன்றிற்று.
”என்ன இதெல்லாம்”
என்னை உட்கார்த்தி, கடைசியாக ஓடி நின்ற, ஆடியோவை முழுமையாகச் கேட்கச் சொன்னார். என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அவரை நோக்கி அன்னார்ந்தேன். ” முழுசா கேளு” என்று அதட்டினார். முப்பது நொடிகள்தான் நம்மால் எதையும் கவனிக்க முடியும். கொஞ்ச தூரம் தள்ளிவிட்டேன். அது மறுபடியும் வீட்டைப் பற்றிய சம்பாஷனையைத்தான் கொடுத்தது. “சரி என்ன?” என்றேன். “இது எல்லாம் குடியிருந்தவங்க வீட்டைப் பத்தி சொன்ன பரிந்துரை நேர்காணல் இல்ல” சற்று நிதானமில்லாமல் தொடர்ந்தார் ”அவங்களுக்குத் தெரியாம ரகசியமா பதிவு செய்த ஆடியோ” என்றார். அவர் முகம் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் இருந்தது. ”ஆனால் அதுவொன்றும் மறைக்கப்பட்ட தவறான எதையும் வீட்டைப்பற்றி கூறவில்லையே. எல்லோரும் நல்லவிதமாக, ஆரோக்கியமான நிலையில்தான் வீட்டை விதந்தோதுகிறார்கள். இதுவொன்றும் பெரிய குற்றம் இல்லையே” என்றேன்.
அவர் என் கையைப் பிடித்திழுத்து, அந்தக் கருவியின் ஒலிவாங்கி முன்பாக “சண்டை” என்று சேர்ந்து அழுத்தி உச்சரிப்போம்” என்றார். இரண்டு பேரும் சேர்ந்து ”சண்டை” என்றோம். ” சண்டை போடுறதுக்கு ஒரு அளவே இல்லையா? இன்னொரு முறை நமக்குள்ள சண்டை வந்தா டைவர்ஸ் பண்றதைத் தவிர வேற வழி இல்லை,”. கணவர் இன்னொரு ஆடியோவைப் போட்டார். ”சண்டையில உன்ன கொல்லாம்னு தோணுது. சண்டை வந்தா ஏன் பிசாசா மாறிடுற” ”சண்டைக்கு என்ன காரணமும் நீ கண்டு பிடிக்கலையா இன்னைக்கு?” இப்படி நிறைய தம்பதியினரின் சண்டைகள் பதிவான ஒலிப்பதிவுகளை திரைக் காட்டிற்று, நிஜத்தில் அப்போது எனக்கு உள்ளூர அவை ஆர்வத்தைத்தான் மூட்டின. என் கணவர் ”சாப்பாடு” என்று அழுத்திக் கூறினார். சாப்பாடு பற்றின நிறைய ஒலிப்பதிவுகள் வந்தன. ஒன்றை மட்டும் ஓட விட்டேன். சமையலறையில் மிக்ஸியும் ஓவன் மூடியும் பாத்திரங்களின்மேல் நீர் கொட்டுவதும் எண்ணெயில் கடுகு வெடிப்பதும் என அத்தனையும் துல்லியமாகக் கேட்டன. அந்தத் துல்லியம் உண்மையில் அப்போது எனக்குப் பசியைத்தான் தூண்டிற்று. கணவர் பல் துலக்கும் பிரஷ் எடுத்துவந்து ஒலிவாங்கி முன்பாக பலமாகத் தேய்த்தார். குளியலறைக்குள் பிரஷ் தேய்க்கிற சத்தமும் பல் துலக்கியபடி பேசுகிற சம்பாஷனைகளும் குழித்துக்கொண்டே பாடும் பாடல்களும் ஒலித்தன. எனக்குப் பிடித்தமான பாடல்கள் என்னையறியாமல் முணுமுணுக்க நா எழுந்து பின் அடங்கிற்று. நான் கணவரைப் பார்த்தேன். அவர் முகம் வியர்த்துவிட்டிருந்தது. அடுத்து என்ன என்று எனக்குப் பரிந்துவிட்டது, நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர் விடவில்லை, “தயவு செய்து” என்று கண்கள் சிவக்க நின்றுகொண்டிருந்தார். அவர் முகம் கோணிவிட்டது. நான் இப்படி அவரைப் பார்த்ததே இல்லை. மிகுந்த சங்கடத்துடன் ஒலிவாங்கியின் முன் சென்று மறுபடியும் மறுத்து தலையாட்டினேன். அவர் வேறு வழியில்லையென்பதுபோல பார்த்தார். நான் மெல்லமாய் “ம்” என்று அழுத்தமாகச் சொல்லி ஆலாபனையைப் போல இழுத்தேன்(அப்போது உண்மையில் என்னையறியாமல்தான் செய்தேன்). மறுகணம் அது தேதிவாரியாக நிறைய பதிவுகளைக் காட்டியது. அதில் கடைசியாக இருந்தது எங்களுடைய சல்லாப பருவங்கள். நான் கணவரிடம் திரும்பினேன். அவர் கையிலிருந்த கடப்பாறையால் வீட்டின் சுவரை ஓங்கி குத்தப் பாய்ந்தார். அவரைப் பிடித்து என் கனவு வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டேன். எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தவரை நோக்கி ”என் வீட்டுக்கு காது இருக்கு” என்றேன்.
***
தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

