Sunday, August 9, 2026

டோடோ

ரம்யா அருண் ராயன்

ப்பா சங்கடப்பட்டிருப்பாரோ…?

இருக்கலாம்… 

பொதுவாக மாலை நேரம் ஒரு ஆசுவாச நடைக்காக வெளியில் சென்றால், இரவு எட்டுமணிக்கு வீடு திரும்புவதுதான் அப்பாவின் வழக்கம். நேற்றிரவு அவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில்தான் கட்டுமானப் பொறியாளரை வரவழைத்தோம், அப்பாவை யார் நேற்று மட்டும் அவ்வளவு விரைவில் வீடு திரும்பச்சொன்னது?

          அப்பாவின் காலத்திற்குப்பிறகு இந்த வீட்டை இடித்துவிட்டு, நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கட்டி வாடகைக்கு விடுவதற்கான வரைவுத்திட்டத்தை இப்போதே உறுதிசெய்து வைத்துக்கொள்ளலாம் என்பது என் முடிவு. நாங்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து விடுப்பில் வந்திருக்கிற இது போன்ற வாய்ப்பு இனி மூன்று ஆண்டுகள் கழித்துதான் எங்களுக்குக் கிடைக்கும். இப்போதே திட்டமிட்டால்தானே நிதி ஒதுக்கீட்டிலிருந்து சகலத்தையும் குழப்பமின்றி செய்ய இயலும்?

           அப்பா என்னை நிச்சயம் தவறாகத்தான் நினைத்திருப்பார். அவரை அருகில்தான் நிற்கிறார் என்றறியாமலே பொறியாளரிடம்,

 “அப்பா சாகுறதுக்கு எப்படியும் இன்னும் நாலு வருசமாட்டு ஆயிரும், அதுக்கேத்தாப்ல வீட்டோட ரெனோவேஷன ப்ளான் பண்ணுங்க என்ஜினியர் சார்!” என்றல்லவா கூறிக்கொண்டிருந்தேன் நான்…? 

பொறியாளர், அப்பா நிற்பதை முகக்குறிப்பால் உணர்த்தியபோதுதான் எனது முட்டாள்தனம் எனக்குப் புரிந்தது, 

  நான், 

“டடா…! அதுவந்து…” 

என்று தயக்கத்துடன் பேசுவதற்குள், இறுக்கமான பாறையில் பூத்த ஒற்றைப்பூ போன்ற அவரது வழக்கமான இளமுறுவலுடன் தனது அறைக்கு விரைந்துவிட்டார் அப்பா. 

            எங்களுடையது பதினான்கு சென்ட் அளவுடைய வீடு, அப்பா ஒருவர் மட்டிலுமாக தனியாய் வசிக்க இது மிகப்பெரியதுதான். ஆனாலும் அப்பா இந்த வீட்டையும், இதிலிருக்கிற ஒவ்வொரு கதவையும், சுவரையும், தரையையும், அவற்றிலிருக்கிற நினைவுகளையும் மிக நேசிக்கிறார் என்பதால், வீட்டை புனரமைத்துக் கட்ட அவரிடம் நானோ என் மனைவியோ இதுநாள் வரையில் வலியுறுத்தியதே இல்லை. ஆஸ்திரேலியா வந்து எங்களோடு தங்கிக்கொள்ளவும் அப்பாவுக்கு சம்மதமில்லை.

            பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எங்கள் மூத்த மகள் வெலன்டினா பிறந்த சமயத்தில் அப்பா எங்களுடன் சிறிதுகாலம் ஆஸ்திரேலியா வந்து தங்கினார். அந்த காலகட்டத்தில், அப்பா தொடங்கிவைத்த ஒரு விவாதம்தான் அதன்பிறகு அவரையும் என்னையும் ஒருவொருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாதவர்களாய் ஆக்கிவைத்தது. அம்மா எனது பத்து வயதிலேயே மரித்துவிட்டபிறகு அப்பா, என் வீட்டில் வேலையாளாக இருந்த ரஞ்சம்மாவின் துணையோடேயே என்னை வளர்த்தார். நாளாக நாளாக ஊரே அவர்கள் இருவரையும் இணைத்துவைத்து கதை பேசியபோதும் நான் ரஞ்சம்மாவின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். நானும் வளர்ந்து வெளிநாட்டு வேலை, திருமணம், குடும்பவாழ்க்கை என்றெல்லாம் ஆகிவிட்ட அத்தனை வருடம் கழித்து, அந்த வயதில், அப்பா அப்படி ரஞ்சம்மாவை இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்து என்னிடம் சம்மதம் கேட்பார் என நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. 

           அன்று ஆத்திரத்தில் அவரிடம் கத்தியது மட்டுமல்லாமல், தொலைபேசியில் ரஞ்சம்மாவிடமும் அவ்வளவு கோபத்தையும் இரைந்து தள்ளினேன். அத்தோடு ரஞ்சம்மா எங்கள் வாழ்விலிருந்து விலகிக்கொண்டாள். 

          அதற்குப்பின் நான்கு வருடங்கள் கழித்து கிறிஸ்டினா பிறந்தபோது, அப்பா ஆஸ்திரேலியா வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவுமில்லை, நான் அவரை அதற்காக வலியுறுத்தி அழைக்கவுமில்லை. தனியாளாய் இந்த வீட்டில் அவர் வசிக்கிறதற்கு, பகலுக்கு ஒருவரும் இரவுக்கு ஒருவருமென இரண்டு ஆண் பணியாட்களை நியமித்திருக்கிறார். அவரது வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே தோப்பு வருமானத்தின் பணம் நிறைந்திருக்கிறது.  

             நேற்றிரவு நான் பேசிய வார்த்தையின் பொருட்டு அப்பாவின் மனநிலை என்னவாக இருக்குமென சிந்தித்து உறக்கம் வராத பொழுதில், அப்பாவிடம்  மது உள்ளதா எனத் தேடினேன். மதுப்புட்டிகளை உட்கூடத்தின்  அலங்காரப்பலகையில் அப்பா அடுக்கி வைக்கிற அழகே அலாதியானது. ஆஸ்திரேலியாவிலிருந்து எப்போதும் நாங்கள் வரும்போது என்ன வாங்கிவரவேண்டும் எனக்கேட்டால், “வைய்ன் ஹோல்டர் மட்டும் போதும்” என்பார் அப்பா. எத்தனையோ விலையுயர்ந்த நவீனமான மதுப்புட்டித்தாங்கிகள் வழக்கத்திலிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் மலிவாகக் கிடைக்கிற ஒரு வகை மரக்கட்டையாலான மதுப்புட்டித்தாங்கி மீது மட்டும் அவருக்கு தணியாத மோகம். முக்கால் முழ நீளத்துக்கு, கரும்புத்துண்டம் போன்ற தடிமனுடன் இருக்கிற அந்த மரக்கட்டையின் அடிப்பகுதி சாய்தளமாய் செதுக்கப்பட்டிருக்கும், சாதாரணமாகவெனில் அதை நேராய் நிறுத்த இயலாது, ஆனால் அந்தக்கட்டையின் துளையில் மதுப்புட்டியின் கழுத்துவரை கிடைமட்டமாய் நுழைத்தால், சமநிலையில் நிறுத்தலாம். அந்த சமநிலையின்மீது ஏனோ அப்பாவுக்கு பெருவிருப்பம். முப்பதுக்கும் மேற்பட்ட ‘வைன் ஹோல்டர்’களை மதுப்புட்டிகளுடன் நேர்த்தியாக நிறுத்தியிருந்தார் அப்பா. ஆனால் அதில் எந்த மதுப்புட்டியும் திறக்கப்படவே இல்லை. அவருக்கென்று பார்த்துப்பார்த்து பரோஸா பள்ளத்தாக்கின் ஷிராஸ் திராட்சை ரசத்தை நான் வாங்கி வந்தாலும் அவர் அதனைச் சுவைப்பதே இல்லை என இப்போதுதான் புரிந்தது எனக்கு,  இவ்வளவு வயதேறிய திராட்சைரசம் அதன் அசல் விலையைவிட எவ்வளவு மடங்கு அதிகமென கணக்கிட்டுப் பார்த்தது என் மனது. கடைசியில், சமீபமாய் தேதியிடப்பட்ட திராட்சை ரசம் ஒன்றைப் பருகிவிட்டு, தாங்கியின் சமநிலைக்காக புட்டியில் நீர் நிறைத்து வைத்துவிட்டு உறங்கினேன்.

        இன்று காலையிலிருந்து அப்பாவின் அறைக்குள் வெலன்டினாவும், கிறிஸ்டினாவும் புத்தக அலமாரியை அடுக்குவதற்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்பாவின் அறை, பேத்திகளின் சிரிப்பாலும், ஆங்கிலச்சாயலடிக்கிற தமிழாலும் நிறைந்திருக்கிற இதுதான் சரியான சந்தர்ப்பம். அப்பா இப்போது மிகவும் நெகிழ்ந்த நிலையில் இருப்பார். இன்று அப்பாவிடம் எனது நேற்றைய வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்துவிடவேண்டும், சொத்து கனிந்துவருகிற சமயத்தில் அதுவே சரியாய் இருக்கும்.  

           அப்பா ஒரு புத்தகப்பிரியர். அவரது அறையின் ஒருபுறச்சுவர் முழுவதும், புத்தகங்கள் வைக்கிற சட்டகங்களைப் பொருத்தியுள்ளார், அதில் விநோதம் என்னவெனில், புத்தகங்களுக்கு அவர் இட்டிருக்கிற உறைதான். புதுப்புத்தகம் வாங்கியவுடனேயே முதலில் வெண்தாள் கொண்டு அட்டையிடுவார், அதன் முதுகுப்பகுதியில் கறுப்பு மை கொண்டு நூல் மற்றும் நூலாசிரியர் பெயர் எழுதி, மீண்டும் ஒரு கண்ணாடிக்காகிதத்தால் அட்டையிடுவார். கறுப்பு-வெள்ளை சீருடையில், உயரவாரியாய் அமர்ந்திருக்கிற பள்ளிப்பிள்ளைகள் போன்ற ஒழுங்குடன் அவரது சட்டகங்களில் புத்தகங்கள் இருக்கும். வாரம் ஒருமுறை நிச்சயமாக அவற்றிற்கு தூசு தட்டுவதும், மாதம் ஒருமுறை புத்தகங்களை அதன் இடத்திலிருந்து கலைத்து அடுக்குவதும் அவரது வாடிக்கை. 

        சற்று தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்துகொண்டே, “உள்ளே வரலாமா டடா…?” என்றேன். அவரது பதிலுக்கு முன்பே, இழுப்பறை மேசையின் முன்னிருந்த மரநாற்காலியை இழுத்து அமர்ந்துகொண்டேன். பிள்ளைகள் நிமிர்ந்து புன்னகைத்துவிட்டு, மீண்டும் வேலையில் இறங்கினர். நான் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்தேன், அவரது முகத்தில் நேற்றைய நிகழ்வின் சுவடு இருந்தாற்போன்றே இல்லை. அவர் என் இருப்பைப் பெரிதாய் கண்டுகொள்ளாததுபோல், “இன்னுமா கிடைக்கல?” என்றார் பேத்திகளிடம். 

வெலன்டினா, “நோ தாத்தா! அந்த புக்கோட பார்ட்-ட்டூ கிடைக்கவே இல்ல” என்றாள்

          கிறிஸ்டினா, “தாத்தா… யாருக்காச்சும் வாசிக்க குடுத்துட்டு திருப்பி வாங்க மறந்துட்டீங்களோ?” எனக் கேட்டாள். 

வெலன்டினா, “ஆஹாஹா… தாத்தாதான…? அவராச்சு… அப்டி குடுக்குறதாச்சு… சான்ஸ்லெஸ்… அதுவும் அவரே இன்னும் வாசிக்காத புத்தகத்த அப்டி குடுப்பாரா?” என்றுவிட்டு, “தாத்தா…! அந்த பார்ட்-ட்டூ நானே ஆன்லைன் ஷாப்பிங் பண்ணிக்கலாம்ட்டு இண்டர்நெட்ல தேடுனா, அவுட் ஆஃப் ஸ்டாக்னு வருது… ஏர்லி செவன்ட்டீஸ்ல எழுதப்பட்ட புக் போலருக்கு, அவ்ளோ பழைய புத்தகத்த ஏன் தாத்தா படிக்காம வச்சீங்க?” என்றாள்

“என்னவோ விட்டுப்போச்சு…” உதட்டைப் பிதுக்கியபடி சொன்னார் அப்பா

“பார்ட்-ஒன் என்ன கதை?”, கேட்டாள் கிறிஸ்டினா

“அதுவா… அது ஒரு தீவோட கதைடா… சுருக்கமா சொல்லட்டா? ‘கர்னி’ன்னு ஒரு முத்து வளம் நெறஞ்ச தீவுநாடு… அங்க ஐரோப்பிய நாடுகள் போட்டிபோட்டுக்கிட்டு பலவருசமா ஆதிக்கம் செலுத்துறாங்க… அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சிய, அங்க ‘சிபு’ன்னு ஒரு இளைஞன் ஆரம்பிச்சு வைக்கிறான்… அவன்பின்னால் இளைஞர்கள் ஒன்னுசேருறாங்க. எரியுறத பிடுங்கிட்டா கொதிக்கிறது அடங்கிரும்ல்ல..? அதான்…. சிபுவ நாடுகடத்திட்டா சரியாகிரும்னு ஆட்சியாளர்கள் நெனச்சாங்க. மரக்கலன்ல ஏத்திட்டுவந்து இன்னோரு குட்டித்தீவுல விடுறாங்க… அவன் அங்க அலைஞ்சு திரியுறான்… அப்ப அங்க அவன் அந்த பெரிய பறவைய பார்க்குறான்… கிட்டத்தட்ட சிபுவோட இடுப்பு உயரத்துக்கு இருந்துச்சு அந்தப் பறவை… அதோட இனமே அழிஞ்சு போச்சுனு உலகமே நினைச்ச பறவை அது…” என்று நிறுத்திய அப்பாவிடம்,

“அது என்ன பறவை?” ஆவலாய்க் கேட்டாள் கிறிஸ்டினா.

          என் மகள்களுக்கு விதவிதமான பறவைகளின் மீது ஆர்வமுண்டு. செப்டம்பர் மாதம் ஆனதுமே, ஆஸ்திரேலியாவில் அவரவரது பைனாக்குலர்களை ஆயத்தம் செய்து வைத்துக்கொள்வோம், பறவை பார்த்தலுக்காக ககாடு தேசிய பூங்காவுக்கு நிச்சயமாய் வசந்தகாலத்தில் ஒருமுறையாகிலும் சென்றுவருவோம். மாக்பி வாத்துகள், ப்ரோல்காஸ், எக்ரெட்ஸ், கூகபுராஸ் என்று ஏராளம் பறவைகளால் எங்கள் புகைப்படத்தொகுப்பு நிறைந்திருக்கிறது. 

           அழிந்த இனப் பறவை என்னவாக இருக்கும் என அறிந்துகொள்கிற ஆர்வம் மின்னுகிற முகத்தோடு தாத்தாவைப் பார்த்துக்கொண்டிருந்த பேத்திகளிடம், 

  “அந்த பறவையோட பேர் சொல்லாமதான் அந்த முதல் பாகம் முடிஞ்சு போச்சே…” என்றார் அப்பா குழந்தைத்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு. 

 “ஒருவேளை கவாய்ஓஓ பறவையா இருக்குமோ? அது அழிஞ்சுபோன இனம்தான்” என கிறிஸ்டினா கேட்டதற்கு வெலன்டினா, “வாய்ப்பில்ல… கவாய்ஓஓ சின்னதால்ல இருக்கும்…?!! இது பெருசா சிபுவோட இடுப்பு உயரத்துக்கு இருக்கும்ன்றாங்கல்ல… அதுமட்டுமில்லாம, கவாய்ஓஓ ட்வென்ட்டியத் செஞ்சுரியோட எய்ட்டீஸ் வரைக்கும் இருந்த பறவை… ஆனா இந்த கதை செவன்ட்டீஸ்ல எழுதிருக்காங்க… தவிர, போர்ச்சுக்கீஸ் காலனி ஆதிக்கம் கதையோட பின்னணினு தாத்தா சொல்றாங்கல்ல… இந்தியாவுல போர்ச்சுக்கீஸ் ஆதிக்கம் செலுத்துன பதினஞ்சாவது நூற்றாண்டு மாதிரியான காலகட்டத்துல நடக்குறது மாதிரிதான் இந்த கதையை எழுதிருப்பாங்களா இருக்கும்” என்றாள். அப்பா பெருமித புன்சிரிப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

“அப்டின்னா அது என்ன பறவையா இருக்கும்? கரோலினா கிளி… மோவா… குர்லூ… டோடோ…” என்று கிறிஸ்டினா அடுக்கிக்கொண்டே போக, வெலன்டினா சட்டென்று, 

“டோடோ…?….!!! தாத்தா… டோடோவா இருக்குமோ? அது பெரிய பறவைதான்… மொரீஷியஸ் தீவுல இருந்த பறவை” என ஆவலுடன் கேட்ட கேள்விக்கு அப்பா, “அப்டியே வச்சுக்கலாமா…?” என்றார் குதூகலமாய்.

          மகள்கள் என் அப்பாவின் அறையில், பேச்சாலும் கதையாலும் பாய்ச்சியிருக்கிற புத்தொளியில், நான் ஏந்திவந்த மன்னிப்புக்கோரல் என்கிற மெழுகுவர்த்தியின் சுடரொளி எனக்கே மங்கலாகித் தெரிந்தது. 

“தாத்தா… நான் பார்ட்-ட்டூ கதைய என் கற்பனைல சும்மா யோசிச்சு சொல்லட்டா? நான் எங்க விடுறேனோ அங்க கிறிஸ்டினா… அவ விடுற இடத்துலருந்து நீங்க ஆரம்பிச்சு கதைய முடிச்சு வைக்கனும்… சரியா?” என்ற வெலன்டினாவும், “இது நல்லாருக்கு…” என்று குதித்த கிறிஸ்டினாவும், அவர்களது மகிழ்வான உலகத்தில் என் அப்பாவுக்கு இடம் தந்திருக்கிற அளவுக்கு எனக்கு இடம் தரவில்லை என்பது புரிந்ததும் அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிடலாமா எனத் தோன்றியது எனக்கு. அதற்குள், வெலன்டினா கதையை ஆரம்பித்தாள். 

          சிபு, அந்த பெயரற்ற குறுந்தீவுக்கு மிக அருகில், மரக்கலனிலிருந்து கடலில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்பட்டான். அவனது கைகால்களைக் கட்டாமல் கடலில் தள்ளுமளவு அந்த கப்பலின் மாலுமி கருணையோடிருந்தார். நீந்திக் கரையேறினான் சிபு. அவனது ஆடைகளிலும் தலையிலும் வழிந்தோடிய உப்புநீர் கனமாய் இருந்தது. அவ்வளவு கனமான நீராலும் அணைக்க முடியாத புரட்சித்தீ அவனது மனதில் பற்றியெரிந்து கொண்டிருந்தது. தீவிற்குள் நடந்தவனுக்கு அந்த சுதந்திரக்காற்று பிடித்திருந்தது. ஆனமட்டும் அலைந்துபார்த்தான், பெருங்குரலில் கத்திப்பார்த்தான், மனித சஞ்சாரமே இல்லை. மரங்களும், சிறு குன்றுகளும், புதர்களுமென நிறைந்திருந்தது தீவு. கடற்கரைப்பகுதியில் மட்டுமே பாறைகளுக்கிடையில் ஆங்காங்கு திட்டுத்திட்டாய் மணற்பரப்பு இருந்தது. 

         பழங்களும், கிழங்குகளும், கடலருகில் ஊற்று தோண்டினால் நன்னீருமென அவன் உயிர் வாழ்வதற்கு எந்த இடைஞ்சலும் இல்லை, ஆனால் தாய்மொழியை வாய்விட்டுப்பேச யாருமற்ற நிலை மட்டும் பெரிய தண்டனையாய் தோன்றியது அவனுக்கு. சூரிய உதயப்பொழுதில் தீவின் ஓரிடத்திலிருந்து கடற்கரையோரமாக பாறைகளின் மேலேறுவதும் கீழிறங்குவதுமாக நடக்க ஆரம்பித்தால், தீவினை முழுசுற்று சுற்றி அதே இடத்திற்கு, சூரியன் உச்சிவானுக்கு வரும்நேரத்தில் வந்துவிட முடிந்தது. அவ்வளவுதான் அந்தத்தீவின் மொத்த பரப்பளவு. 

        பத்து நாட்கள் கழிந்தபிறகும் எந்த விலங்குகளையும், ஊர்வனவற்றையும்கூட அவனால் காண இயலவில்லை. இந்தியக்கடலின் மத்தியில் இருக்கிற அந்தத் தீவுக்கு, அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பைத் தாண்டி விலங்குகள் குடியேற வேண்டுமெனில் அவனைப்போல் அவற்றையும் யாராவது நாடு கடத்திதான் கொண்டுவர வேண்டும் என்பது சிபுவுக்குப் புரிந்தது. ஆனால் வலசைப் பறவைகளும், தாவரங்களும், பூச்சியினங்களும் ஏராளமாய் இருந்தன, அவை பறவை எச்சங்களின் மூலமாக இங்கு பரவியிருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.   

            சிபு பன்னிரெண்டாவது நாளில் நெருப்பை உருவாக்கினான். அதுவரை பழங்களை உண்டவன், கடற்கரை மணலில் அலை இழுக்கும்போது புதைகிற மட்டிக் கிளிஞ்சல்களைச் சேகரித்து அன்றுதான் உண்ணத்தொடங்கினான். வேகவைத்ததும் தானாகவே திறந்துகொள்கிற மட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு தன் நாட்டு மக்களின் நினைவு வரும். ஆட்சிபுரிவோரின் சூழ்ச்சியால் செயற்கையாய் உருவாக்கப்பட்ட பஞ்சத்தில், இலவசமாய் கிடைக்கிற கஞ்சிக்கும் ரொட்டிக்கும், தம்  வாயைப்பிளந்துகொண்டு அவர்கள் தம்மைக் கையளிப்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் சத்தமாக தாங்கள் உருவாக்கிய புரட்சிப்பாடலைப் பாடுவான். காற்றின் ஏதோ ஒரு மூலக்கூறு இந்த புரட்சியுணர்வை தன் மக்களிடம் சுமந்துசெல்லும் என அவன் நம்பினான். 

              அன்று, மட்டிக்கிளிஞ்சல்களுக்கு மாற்றாக மீன்கள் ஏதாவது பிடிக்க முடியுமா என கடலுக்குள் இறங்கியவன் மடிநிறைய பாறைக்கிளிஞ்சல்களை எடுத்துவந்தான். அன்றுதான் அவன் குன்றின் சரிவிலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து வந்த ஒலியை கவனித்தான்…. “டோ… டோ… ” என புறா குனுவதுபோல், ஆனால் அதைவிட கனமான ஒலி. 

‘என்ன ஓசை அது…?’ செவிப்புலனைக் கூர்மையாக்கினான். 

‘டோ…டோ….’ மீண்டும் கேட்டது அதே ஒலி

‘டோடோ பறவையின் ஒலி… எனில்… டோடோ பறவைகள் இந்தத்தீவில் இருக்கின்றனவா? நான் சிறுவனாய் மொரீஷியஸ் தீவில் சில ஆண்டுகள் வசித்தபோது இந்த ஓசையை கேட்டிருக்கிறேன்’ சிந்தித்தபடியே சிபு டோடோ பறவையைத் தேடினான்.

          சொல்லிக்கொண்டிருந்த வெலன்டினாவை என் அப்பா இடைமறித்தார் “கதையோட காலகட்டத்த வச்சு யோசிச்சோம்ன்னா, மொரீஷியஸ் தீவோட அப்போதைய பேர் செர்னே தீவுடா பாப்பா” என்றார். 

           சம்மதமாய் தலையசைத்தபடி வெலன்டினா மீண்டும் கதையைத்தொடர்ந்தாள்.

          நாவின் சுவையரும்புகளின் மீது டோடோ இறைச்சியின் சுவையை ஈரமாய் சிபுவின் மூளை கிளர்த்தினாலும், அவனது பகுத்தறிவு டோடோ இருப்பை நம்ப மறுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 ‘செர்னே தீவில் முன்பெல்லாம் எவ்வளவு டோடோக்கள் இருக்கும்…? அதன் இறைச்சி எவ்வளவு சுவை…? அதைப்பிடிப்பதுவும் மிக எளிது. மூன்றுமாத கன்றுக்குட்டி ஒன்றை வெட்டினால் எவ்வளவு இறைச்சி கிடைக்குமோ அவ்வளவு இறைச்சி ஒரே டோடோ பறவையில் கிடைக்கும், அதுவும் எளிதில் வேகிற மென்மையான பறவை இறைச்சி’

  ‘ஆனால் இப்போது செர்னே தீவிலேயே அந்த பறவையினம் அழிந்துவிட்டது எனக் கேள்விப்பட்டேனே?’ 

  ‘கண்டத்திட்டுகள் கடலிலிருந்து மேலெழுந்து செர்னே தீவு தோன்றி, அங்கு தாவர வளர்ச்சிகள் ஏற்பட்ட காலத்தில், அதில் தரையிறங்கிய புறாக்கள் அங்கிருந்து செல்ல மனமில்லாதபடிக்கு தாவர உணவு செழித்த நிலமாய் செர்னே இருந்திருக்கிறது. விலங்குகளாலோ மனிதர்களாலோ ஆபத்துகள் ஏதுமற்ற காரணத்தால் அவை அங்கேயே தங்கியும்விட்டன. அவற்றிற்கு இரைதேடவோ… வேட்டைக்கு பயந்தோ… பறக்கும்தேவை இருக்கவில்லை… அவ்வளவு ஏன்…? விரைந்து ஓடுகிற அவசியம்கூட இல்லாதிருந்திருக்கிறது. உண்டு கொழுத்த உடலைத் தூக்கிப் பறக்கவும் அந்த இனத்திற்கு சோம்பலாக இருந்திருக்கிறது. பற்பல நூறாண்டு பரிணாம வளர்ச்சி, அவற்றை கொழுத்த உடலும் குறுகிய இறக்கையும் கொண்ட டோடோ இனமாக மாற்றியிருக்கிறது. அதன் அலகுகள் மட்டும் விதைகளை உடைத்து உடைத்து உண்டதால் மிக வலிமையுடைய வளைந்த அலகாக பரிமாண வளர்ச்சியடைந்திருக்கிறது. உணவை வயிற்றில் அரைக்க உதவியாய் சிறு சிறு கூழாங்கற்களையும் உணவோடு விழுங்கி கழிவோடு வெளியேற்றுமே தவிர, செரிமானச்சூட்டுக்காகக்கூட அவை விரைந்து நடக்காது. எதிலிருந்தும் தப்பிக்கப்பழகாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததால் செர்னே தீவில் ஐரோப்பிய தேசத்தினர் குடியேற்றத்திற்குப் பிறகு, அந்த இனமே வேகமாய் வேட்டையாடப்பட்டு அழிந்துபோனது’ 

‘அந்தப்பறவை இங்கு எப்படி?’ 

‘ஒருவேளை இந்தத் தீவில் தரையிறங்கிய புறாக்களுக்கும், அதே பரிணாம மாற்றம் ஏற்பட்டிருக்குமோ?’ 

‘எனில் எவ்வளவு டோடோக்கள் இங்குள்ளன?’ 

‘நிச்சயமாக நிறைய இல்லை, இருந்தால் கண்ணில் பட்டிருக்குமே இத்தனை நாளுக்குள்…’ 

   கிளிஞ்சல்கள் சிலவற்றை டோடோவின் சத்தம் எழுந்த மரத்தின் முன், பாறைமீது எறிந்தான். ஆவலோடு மரத்தின் பின்னிருந்து இரண்டு டோடோக்கள் முன்வந்து அவற்றை அலகால் எடுத்து பாறையில் மோதியுடைத்து சதையை உண்டன. உண்டுவிட்டு அவனைப் பார்த்தன. அவை இன்னும் முழு பிராயத்தை எட்டாத பருவத்திலிருந்தன என சிபு கணித்தான். 

 ‘ஒருவேளை இவை முட்டைக்குள்ளிருந்து வெளிவருவதற்கு முன்பு, இந்தத் தீவிற்கு வலசை வந்த ஏதேனும் ஒரு பறவையினம் பரப்பிய, ஏதேனும் ஒரு நோய்த்தொற்றால் மற்ற டோடோக்கள் அழிந்திருக்குமோ?’ என எண்ணியபடியே கையில் வைத்திருந்த மீதி கிளிஞ்சல்களையும் எறிந்தான் சிபு. அவை ‘ட்டுர்ர்… ட்டுர்ர்…’ என உற்சாக ஒலியெழுப்பிக்கொண்டே கிளிஞ்சல்களை ஒவ்வொன்றாய் தின்று முடித்தன. ஆனால் சிபு அவற்றின் அருகில் நெருங்கவே இல்லை.

           மறுநாளும் கடலில் நீந்திச்சென்று, பாறைக்கிளிஞ்சல்களை எடுத்துவந்தான். இம்முறை அவன் கடலிலிருந்து வெளிவருவதற்கு முன்பே டோடோக்கள் குன்றின் சரிவிற்கு வந்துவிட்டன. ‘இன்றும் இரண்டு டோடோக்கள் மட்டுமே வந்துள்ளன எனில், மொத்தமே இந்தத்தீவில் இரண்டுதான் எஞ்சியிருக்கின்றனவா? இந்த டோடோக்களுக்கு நான் ஒரு காலத்தில் டோடோ இறைச்சியை விரும்பி உண்டவன் என்பது தெரியுமா? ஒருவேளை என்றாகிலும் ஒருநாள், என் பசி என்னையும் ஒரு வேட்டை விலங்காக்கி இவற்றைக் கொல்லுமோ…?’ என்று எண்ணியபடியே கடற்கரையிலிருந்து டோடோக்களின் அருகில் வந்தான். பாறைக்கிளிஞ்சல்களை இம்முறை அவன் பாறைமீது எறியவில்லை, மாறாக பாறைமீது வைத்தான். அவையும் அவனுக்கு அவ்வளவு அருகில் நெருங்கி வந்தன. 

“மனிதர்களை இவ்வளவு நம்பாதே டோடோ!” என்று சத்தமாகக் கத்தினான் சிபு. அவை திடுக்கிட்டு நிமிர்ந்தன, ஆனால் பயப்பட்டு ஓடவில்லை. அந்த பறவைகளின் அசட்டுத்தனம், அவனது நினைவில் தாய்நாட்டையும், அதன் மக்களையும் ஒரு மங்கலான சித்திரம்போல் விரித்தது. 

‘இந்த டோடோக்களைப்போலவே என் இனமும் என் கர்னி தீவில் தப்பிக்கவோ, எதிர்க்கவோ முயலாமல் இருக்கிற இனமாக இருக்கிறதே…? செர்னே தீவில் டோடோக்கள் அழிந்ததைப்போன்று என் இனமும் எனது கர்னி தீவில் அழிந்துவிடுமா…?’

 ‘நான் என் தாய்நாட்டிற்கு மீள்வேனா… அல்லது இப்படியே மடிவேனா…? என் உடலாகிலும் கர்னி தீவில் கரையொதுங்குமா? நான் நலிவுற்றுக் கொண்டிருக்கிறேன்… இத்தீவில் நான் அழிகிற இனம். இந்த டோடோக்கள் ஆணும் பெண்ணுமாய் இருக்கின்றன… இவைதான் இங்கு நிலைக்கப்போகிற இனம்…’

  ‘இப்பறவைகளுக்குத் தேவையான நல்ல புரதத்தை நான் வழங்குகிறேன்… கடற்சிப்பிகளைக் கொணர்ந்து இவற்றை இரையூட்டுவேன்… என்னால் இயன்றது இதுதான்… இவற்றின் இனப்பெருக்க காலம் வருவதற்காக காத்திருப்பேன் நான்… இவை எழுப்பப்போகிற வேட்கையொலியால் இத்தீவின் வசந்தம் செழிக்கட்டும்… வலசைப்பறவைகள் இங்கு விருந்தாளிகள்தான்… டோடோக்களே இத்தீவின் அடையாளம்… பூர்வகுடிகள்…’ என்றெல்லாம் ஏதேதோ சிந்திக்துக் கடந்தன சிபுவின் நாட்கள். 

         அப்படியும் இப்படியுமாய் அத்தீவிற்கு அவன் வந்து அறுபது நாட்கள் ஓடியிருந்தன. இதற்குள் நான்கு மழைநாட்களில் ஏற்பட்ட நடுக்கம், அவனை ஒரு பாறைப் பிளவைத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுக்க வைத்திருந்தது. கடல்நீரினாலும் சூரிய வெப்பத்தினாலும் அவனது ஆடைகள் இற்றுப்போய் ஏறத்தாழ நிர்வாண கோலமாகியிருந்தான். அவன் அமர்ந்திருக்கும்போது அவனது கையிலிருந்து கிளிஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு டோடோக்கள் பழகியிருந்தன.

        அன்று சிபுவிற்கு பலத்த காய்ச்சல் வந்தது. கடலுக்கோ கிழங்கெடுக்கவோ அவனால் செல்ல இயலவில்லை. பலவீனமான கரங்களால் அவ்வப்போது நெருப்பிற்கு மட்டும் விறகு தள்ளிக்கொண்டிருந்தான். பசியில் தன் விரல்களைத் தானே சுட்டுக் கடித்துவிடலாமா என்பது போன்று இருந்தது. கண்கள் திகுதிகுவென எரிந்தன.

        டோடோக்கள் பழக்கப்பட்ட நேரத்து கிளிஞ்சல் உணவுக்கான பசியில் ‘ட்ர்ர்… ட்ர்ர்…’ என ஒலியை எழுப்பியபடி அவனைச் சுற்றிச்சுற்றி வந்தன. அச்சத்தம் அவனது தலைக்குள் இரண்டு டோடோக்களை நான்கு எட்டு பதினாறு என குரல்களால் பெருக்கிக்கொண்டே போனது. மனது மனிதக் குரலுக்காக ஏங்கியது. இந்த டோடோக்கள் பறக்கமுடியாமல் ஆனதைப்போல் நானும் பேசமுடியாமல் ஆகிவிடுவேனா என மனது தவித்தது. சூட்டுக்காக நெருப்பருகில் கிடந்த கூழாங்கல்லை அவன் எடுத்து கைக்குள் பொத்தியபோது, கிளிஞ்சல் என எண்ணியதோ… என்னவோ… பெண் டோடோ வந்து அவனது கையைக்கொத்தி, நழுவி கீழே விழுந்த கல்லை விழுங்கியது. சிபுவின் ஆத்திரம் தலைக்கேறியது. அந்த பெண் டோடோவின் கழுத்தை வளைத்து முறுக்கி கொன்று தள்ளிவிட்டான். அதன் உடல் தரையிலும், கால்களிரண்டும் நெருப்பிலும் இருக்கும்படி விழுந்தது பெண் டோடோ. ஆண் டோடோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தது.

         பெண் டோடோவின் கால்கள் நெருப்பில் வேகிற மணமும், இறைச்சியிலிருந்து மெல்லியதாய் வழிகிற கொழுப்பும் அவனது பசியைப் பல மடங்கு கிளர்த்தியது. டோடோவை இழுத்து, வெந்த அதன் கால் இறைச்சிப் பகுதியை உண்டான். அவனது நாவு உயிர்பெற்றதைப் போன்று இருந்தது. மெதுவாய் எழுந்து நெருப்பின் இருபுறமும் மரக்கவைகளை நட்டு, டோடோ உடலை அதில் தொங்கவிட்டு நெருப்பில் வாட்டினான். காய்ச்சல் தீர்வதற்கும் இறைச்சி தீர்வதற்கும் சரியாய் இருந்தது. 

             அன்றிரவு கடைசி துண்டம் இறைச்சி அவனது வாயிலிருந்தது. அப்போது, அந்த ஒலியைக் கேட்டான், ஆண் டோடோ தனது இனப்பெருக்க காலத்திற்கான முதல் வேட்கையொலியை எழுப்பியது. 

           வெலன்டினா கதையை நிறுத்தினாள். ஒரு கனத்த மௌனம் நிலவியது. எனக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த இறுக்கவுணர்வு இன்னும் அதிகமாகியிருந்தது. அடுத்து கிறிஸ்டினா கதையைத் தொடர்வதற்காக யோசித்துக்கொண்டிருந்தாள். அந்த அறையின் மௌனம் எனக்கு காதை அடைத்தது. ஆனால், அந்த அறை இந்த மௌனத்திற்கு வருடமுச்சூடும் பழகியதுதான் என்கிற உண்மை, என் இதயத்தின் மீது ஏதோ ஒரு பலமான பளுவை ஏற்றி வைத்தது. செய்வதறியாது, மேசையின் இழுப்பறையை தற்செயலாய் திறந்தது எனது கை. தீவின் கதை இரண்டாம் பாகம் புத்தகம் இழுப்பறைக்குள் இருந்தது. 

  “டடா…” 

அவசரமாய் அழைத்தேன், இழுப்பறையை இன்னும் அதிகமாகத் திறந்தபடியே. 

  “டோடோன்னா கூப்ட்ட என்னை…?” 

என்றபடியே தலையை குறுக்குவாட்டில் அசைத்தபடி, அப்பா ஒரு திடமான புன்னகையுடன் இழுப்பறையை மூடினார்.

***

ரம்யா அருண் ராயன் – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ‘வீரபாண்டியன் பட்டணம்’ எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக கோவை மாவட்டத்திலுள்ள அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பணிபுரிகிறார். ‘செருந்தி’ எனும் கவிதைத்தொகுப்பு, ‘கழி ஓதம்’, ‘ட்ரெமோலோ’ எனும் இரு சிறுகதைத்தொகுப்புகள் ஆகியவை இவரது படைப்புகள் ஆகும். மின்னஞ்சல் முகவரி: rayenramya@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here