Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்குவைத்து அப்புலு

குவைத்து அப்புலு

நாகேந்திர காசி

தமிழில் : ஸ்ரீநிவாஸ் தெப்பல

கணபதி நவராத்திரி மூன்றாவது நாள் இரவு.கோதாவரி நதியின் வசிஷ்டா கிளையாற்று பகுதிக்கு அடிவாரத்தில் இருக்கும் மணல் திட்டு. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை குதூகலத்துடன் சாக்குப் பைகளையும், முக்காலிகளையும் எடுத்துக்கொண்டு ‘காக்கிநாடா கங்காதர் மியூசிக்கல் நைட்டை பார்ப்பதற்கு  நீர்த்துறைக்கு அருகிலுள்ள சென்டருக்கு வந்தனர். வேலைகளுக்குச் சென்ற சில ஆண்கள் சாராயக்கடையில் ஒரு மூன்று அவுன்ஸ்களை குடித்துவிட்டு, பெட்டிக் கடையில் முறுக்கை வாங்கிச் சாப்பிட்டு கொண்டு, சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு அதன் மீது அமர்ந்தனர். தாவணி அணிந்த இளம் பெண்களை, கைலிகள் அணிந்த இளசுகள் பின் தொடர்கையில், ஊராட்சித் தலைவரின் வீட்டில் விருந்தை முடித்துவிட்டு ஆர்கெஸ்ட்ராகாரர்கள் மேடைக்கு வந்தனர்.

ஆர்கெஸ்ட்ரா கண்டசாலாவின் பாட்டுடன் தொடங்கியது. அனைவரின் மத்தியிலும் கட்டுக்கடங்காத உற்சாகம் பொங்கி வழிந்தது, பாட்டுகளுக்கு விசில்கள், கூச்சல்கள் இணைந்ததால் நீர்த்துறை முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

சௌதாமினி முக்காலியைக் கொண்டு வந்து ஜெயாவின் அருகில் அமர்ந்தாள்.

“என்னடீ சௌதா, அந்தக் கனகரத்தினம் இருக்கா பாரு, மருமகள குவைத்து அனுப்புறாளாம்” என்றாள் காதில் ஜெயா.

“என்னது, உண்மையா?” ஆச்சரியமாகப் பார்த்தாள் சௌதாமினி.

“உண்மை தாண்டீ, காலையில களைப் பறிக்கப் போகையில, வயல்ல பொம்பளைங்க கூட்டம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.”

“மருமகள கண்ணுக்குள்ள வச்சி பாத்துபான்னு எல்லாரும் சொல்லிப்பாங்க இல்ல. போதாதக்கு களைப் பறிக்கக் கூட அனுப்ப மாட்டா, அப்படிப்பட்டவ குவைத்து அனுப்புறாளா! பணம் நிறையக் கிடைக்கும் போலடீ. நம்ம கூடப் போகலாம்டீ, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே? ஒரு வாரம் கூலி செஞ்சா திங்கட்கிழமை சந்தைக்கே சரியா இருக்கு.”

“என்னது, குழந்தைகளையும், புருசனையும் விட்டுபுட்டு, ஊர் பெயர் தெரியாத, மொழி தெரியாத நாட்டுல இருக்கணும்னா என்னால முடியாதுடி சௌதா. ஆனாலும் உங்க அண்ணன பிரிஞ்சு என்னால தனியா இருக்க முடியாதுடி” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே ஜெயா.

“அய்யே! பாருடா இதோட வெட்கத்த, சப்பிப் போட்ட மாங்கொட்டையாட்டம் மூஞ்சிய வச்சிக்கிட்டு.”

“ஆனாலும் போகல! சேட்டுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிங்க, ஒரு பத்து பிள்ளைங்க இருப்பாங்களாம். அவங்களுக்கு எல்லா வெட்டி வேலையும் செய்யணுமாம், நம்ப வேலை பிடிக்கலைன்னா பாலைவனத்துல ஒட்டக சாணம் அள்ளவுடுவாங்கலாம், தெரியுமா ஒனக்கு?” என்றாள் ஜெயா.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்டீ?”

“எங்க ஊர்ல ஒருத்தி அப்படித்தான் போயிட்டு வந்தா. கொஞ்ச நாளைக்கி நோய் வாய்ப்பட்டு இறந்து போயிட்டா” என்றாள் ஜெயா. 

“அப்படி எதுக்கு நினைக்கணும். ஒரு வேலை நம்மளுக்கு எல்லாம் நல்லபடியா நடந்து, பணத்தை நல்லா சம்பாதிக்கலாமோ, என்னமோ”

“அடி சக்காளத்திங்களா! பாட்டக் கேட்க விடுங்கடி” எனப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவி இருவரையும் நோக்கி, வாயில் சுருட்டை பற்ற வைத்தவாறு, மறுபடியும் அந்தப் பக்கம் திரும்பினாள்.

“அடியாத்தி, இந்தக் கிழவி ஆரம்பிச்சுட்டாடி சௌதா, நம்ம நாளைக்கி பேசிக்கிலாம்டீ” என்றாள் ஜெயா சிரித்தபடி.

சௌதாமினிக்கு மூளையில் குலவை குடையத் தொடங்கியது.

சிரஞ்சீவி பாட்டிற்கு யாரோ பத்து ரூபாய் மொய் கொடுத்தனர். ஒரு ஜோடியின் நிழல் படகுகளின் துறைமுகத்து அருகிலுள்ள ஒரு குடிசைக்குள் நுழைந்தது.

அன்றிரவு வீட்டுக்குச் சென்றபின், அப்புலு மடக்குக் கட்டிலில் படுக்கையில், பிள்ளைகள் தூங்கி விட்டார்களா, இல்லையாயெனப் பார்த்துவிட்டு, மண்ணெண்ணெய் விளக்குத் திரியைக் குறைத்து, படுக்கையில் அப்புலுவின் பக்கத்தில் வந்து சேர்ந்தாள் சௌதாமினி. கோழிக்குஞ்சை பாம்பு கவ்வுவது போல் இறுக்கமாகக் கட்டி அணைத்தான் அப்புலு.

“பொறு முதல்ல, அதுக்காக வரல. உன் கூட ஒரு விஷயத்த சொல்லனும்” என்றாள் மோவாய் அருகில் தலையை வைத்தவாறு.

“என்ன?” என்றான் தோளின் மீது ரவிக்கையை வருடியவாறு.

“அது வந்து, சொன்னதுக்கு அப்புறம் திட்டக் கூடாது” என முணுமுணுத்தாள்.

“அடை காக்குற கோழியைப் போல என்னடி அந்தக் கூவல் சத்தம்? விஷயம் என்னனு சொல்லு?” என்றான் கழுத்தில் தடவியவாறு.

“குவைத்துப் போனா எப்படி இருக்குமானு. பிள்ளைகள நல்லபடியா படிக்க வைக்கலாம், ஒரு அஞ்சு குழி இடத்தை வாங்கி வீடு கட்டிக்கலாம்…”

“நிப்பாற்றியா, உன் நச்சரிப்பே! இந்த யோசனைய ஒனக்கு யாருடி ஏத்தி விட்டா? எட்டி ஒதச்சனா குப்பையில போய் விழுவ. வாய மூடிக்கிட்டு தூங்கு” எனத் திரும்பிப் படுத்தான்.

“ஆ…தூங்கலெனா கோதாவரி ஆத்துல குதிப்பேன்னு நெனக்கிறியா? கொஞ்சம் மூளையோட யோசிச்சுப் பாரு, ஒரு ரெண்டு வருஷம் எப்படியாச்சும் பொறுத்துக்கிட்டோம்னா வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்கச் சொல்லுறேன். ஏன் நான் ஒருத்தி மட்டுமா நல்லா இருப்பேன்? நம்ம பிள்ளைகளுக்காகத் தான இந்த ஏக்கம் எல்லாம்” எனச் சௌதாமினி கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.

அப்புலு எதுவும் பேசவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே சௌதா எப்போதும் திருப்பிப் பேசமாட்டாள்.

சௌதாமினிக்கு வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். மாநிறம், வட்டமான முகம். வெளிர் மஞ்சள் நிறp புடவையைக் கட்டி, கண்ணுக்கு மைத்தீட்டி, தலையில் கனகாம்பரத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தால், அப்புலுவுடன் சேர்ந்து, பல இளவட்டத்திற்கு அன்னிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஊரில் பல பேர் கண்கள் சௌதாவின் மீது விழுகுதெனக் கல்யாணமான ஆரம்பத்திலேயே அப்புலுவுக்குப் புரிந்து விட்டது. அதனால் தான் ரசிக்கும் சீமான்களின் வீட்டிற்கும், பெரிய மைனர்களின் வயல்களுக்கும் எப்போதும் வேலைக்கு அனுப்பியதில்லை. அதற்கான காரணம் என்னவென்று சௌதாவிற்கும் தெரியும், அந்த ஊர்காரர்களுக்கும் தெரியும்.

அப்புலு செய்யாத வேலை இல்லை. தேங்காய் இறக்கவும், உரிக்கவும், வயல் வேலைகளுக்கும் செல்வான். அப்பா காலமானார். அப்புலுவின் அம்மாவும், தங்கையும் இரண்டு தெரு தள்ளி இருக்கிற வீட்டில் வசிக்கிறார்கள். புது குடியிருப்பில் இடத்தை எழுதிக் கொடுத்ததில் அப்புலு, செங்கல் வீடு கட்டிக்கொண்டு அதில் குடியேறி குடித்தனம் நடத்துகிறான்.

அன்று வாரச் சந்தை, இருவரின் மத்தியிலும் ஒரு வாரமாகப் பேச்சுவார்த்தைக் கிடையாது என்பதை நினைவு படுத்தினாள்.

இரண்டு மடவை மீன்களும், குழந்தைகளுக்கு மிக்சர் பொட்டலங்களும், சௌதாவிற்கு பிடிக்குமென இஞ்சி பக்கோடாவையும் கட்டிக்கொண்டு சாயங்காலத்திற்கு வீட்டுக்கு வந்தான் அப்புலு. சௌதா அடுப்பு அருகில் வடித்த சாதத்தை எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் மண்ணெண்ணெய் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பேப்பரில் சினிமா படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மிக்சர் பொட்டலங்களைக் கொடுத்தான்.

சௌதாவை நோக்கிப் பார்த்தான். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு இருந்தாள். தனது அரை டவுசரிலிருந்து இஞ்சி பக்கோடா பொட்டலத்தை வெளியே எடுத்து, அடுப்பு அருகில் அமர்ந்திருந்த சௌதாவை நோக்கி வீசினான். சௌதா எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அப்படியே வாசலில் உட்கார்ந்தான். ஆனாலும் அவள் பேசவில்லை. வெறுப்பு அடைந்து சாராயக் கடைக்குச் சென்றான்.

வீட்டுக்குத் திரும்பி வருகையில், பிள்ளைகள் சாப்பிட்டுத் தூங்கியிருந்தார்கள். சௌதா ஒருத்தி மட்டும் வீட்டு அருகிலுள்ள கொய்யா மரத்தின் அருகில் அமர்ந்தாள்.

“சோறு சாப்டியா?” எனக் கேட்டான். சௌதாமினி எதுவும் பேசவில்லை.

“ஒன்னத்தான், இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அலட்டிக்கிற. சரி எப்படியோ நீ நினைச்சதே செய். ஆனா ஒன்னு என்கூட பேசாம மட்டும் இருந்திடாத. உயிர் துடி துடிச்சு போயிடும்.”

சௌதா அந்த வார்த்தைக்கு நெருங்கி வந்தாள். அப்புலு தோளில் இருந்த துண்டை எடுத்து “கால கழுவிக்கோ, சாப்பாடு சாப்பிடலாம்” என்றாள். இருவரும் அன்று மீன் குழம்பை மிச்சம் வைக்காமல் காலி செய்துவிட்டு, அன்றிரவு முழுக்க கண்விழித்து இருந்தனர். விடிவதற்குள் சௌதாமினி நினைத்ததை சாதித்து விட்டாள்.

“முதல்ல பாஸ்போர்ட் ரெடி செய்யணும். மெடிக்கல் டெஸ்ட் செய்றதுக்கு பம்பாய்க்கு அழைச்சுட்டு போகனும். அதுக்கப்புறம் விசா. எல்லாம் சேத்து ஒரு பதினஞ்சு ஆயிரம் வரை செலவாகும் சரியா?” என்றான் ராஜோலுவிலிருந்து வந்த ஏஜென்ட் தாத்தாராவ்.

அப்புலு பதினைந்து ஆயிரம் கிட்டயே நின்று விட்டான்.

“சம்பளம் எவ்வளவு வருங்க?” எனக் கேட்டான் அப்புலு.

“அது இப்போ தெரியாது அப்புலு, போற வீட்டைப் பொறுத்து, எஜமானப் பொறுத்து இருக்கும். ஒங்க பொண்டாட்டியோட வேலையைப் பொறுத்தும் இருக்கும்” என்றான் சௌதாமினியை ஒரு மாதிரியாகப் பார்த்து.

சட்டெனச் சௌதாமினி தோளில் முந்தானையை சரி செய்து கொண்டாள்.

அன்று பணத்தைப் பற்றி ரொம்பவே யோசித்தார்கள் இரண்டு பேரும்.

“சரி விடு, மைனர் கிட்ட வாங்கிக்கிறேன். உன்னோட தாலிய அடகு வைக்கலாம், என்ன சொல்ற?” 

“எங்க அண்ணன் கிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறன். அப்புறம் கொடுத்துக்கலாம்” என்றாள்.

“இந்தக் குழந்தைகள என்ன செய்ய? துடி துடுச்சுப் போயிடு வாங்க போல” என்றான்.

“நீ அப்படி முன்னாடியே பதட்டப்படாத. பெரியவனுக்குப் பத்து வயசு ஆகுது. அவன் ஏங்கமாட்டான். ஒங்க அம்மா கிட்ட அவனக்கு நல்லாவே பழக்கம். லோவதல்லிய மட்டும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும். அது வயசுக்குவர இன்னொரு நாலு வருஷம் ஆகும். உங்க தங்கச்சி இருக்கா இல்ல, அவ ஒத்தாசைக்கு இருப்பா. கண்ண மூடித் திறக்கறதுக்குள்ள நாலு வருஷம் கடந்துடும். ஏக்கம் எல்லாம் ஒங்களுக்கு மட்டும் தானா? எனக்கு இருக்காதா பின்ன? நான் என்ன பொறந்ததுலிருந்து ஊர் ஊரா திரிஞ்சவளா? நீங்க இங்க எப்படி இருக்கீங்களோன்னு எனக்கு மட்டும் இருக்காதா?” எனப் புடவைத் தலைப்பை வாய்க்குக் குறுக்காக வைத்துக் கொண்டு அழுதாள்.

ஏஜென்ட் தாத்தாராவ் வாரத்துக்கு ஒரு முறை வந்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு போகிறான். கடனை வாங்கி,  பணத்தைக் கட்டி, ஆகமொத்தம் எப்படியோ சௌதாமினி குவைத்துக்குக் கிளம்பும் நாள் வந்தது.

“அப்புலு, முதல்ல பம்பாய்க்குப் போயி மெடிக்கல் டெஸ்ட் செய்யணும். ஒரு ரெண்டு நாள் கழிச்சு விமானத்த ஏத்திட்டு நான் திரும்பி வருவேன். ஒங்க முதலாளி வீட்டு நம்பர் கொடுத்திருக்கெல்ல, அதுக்கு போன் செய்றேன். நீ பதட்டப்படத் தேவையில்லை. இந்தக் கையால எத்தனை பேர் அனுப்பி இருப்பேன். யம்மா சௌதாமினி, சீக்கிரம் கிளம்பு” என்றான் டீ அருந்தியவாறு. 

சௌதாமினி அழுதவாறே கிளம்பினாள். பிள்ளைகள் இருவரும் தாயைக் கட்டி அணைத்து அழுகையில் அங்கு இருக்கும் அனைவரின் கண்களும் கசிந்தன. 

“ஒங்க அம்மா உங்களுக்கு நிறைய துணிமணிங்க, பொம்மைங்க வாங்கிட்டு வருவா, அழுவாதீங்க” என அவர்களின் பாட்டி, அத்தை, சுற்றி இருக்கும் சொந்தக்காரர்களென அனைவரும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். நல்லது கெட்டது பகிர்ந்து கொள்ளும் தோழி ஜெயா வாசலில் நின்று கண்ணீர் மல்க அழுதாள்.

அப்புலு மட்டும் தென்னை மரத்தில் சாய்ந்து மும்மிடிவரத்து பாலயோகியைப் போல் அமைதியாக வெறித்தபடி சௌதாமினியை நோக்கினான்.

ஊர் சென்டருக்கு அருகில் ஒரு பத்து பேர் கூட்டம் கூடினர். பேருந்து வந்தது. பிள்ளைகளின் கதறல் சத்தம் மேலும் கூடியது. அப்புலு வேறேதும் பேசவில்லை. சௌதாமினி பேருந்தில் ஏறிக் கிளம்பினாள். அன்று முதல் அப்புலு அந்த மணல் திட்டுப் பகுதியில் ‘குவைத்து அப்புலு’ ஆகிவிட்டான். 

சௌதா சென்றபிறகு, அப்புலுக்கு காலையில் அடுப்பங்கரையில் காணும் சௌதா இனி இல்லை. பண்டிகைக்கு வீட்டைச் சாணி பூசூம் சௌதா இனி இல்லை. ராமலா மீன் (ஆந்திராவில், ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் கிடைக்கும் அரியவகை மீன்)  குழம்பு சமைக்கும் சௌதா இனி இல்லை. இருட்டியதும், இதயத்துடிப்பைப் பகிர்ந்து கொள்ளும் சௌதா இனி இல்லை. பித்து பிடித்துப் போனான். ஆனால், பிள்ளைகளைக் கண்டு ஆறுதல் கொள்வான்.

சௌதா, கிழிந்த ரவிக்கைகளைத் துணி கொடியிலிருந்து அகற்றினான். வீட்டில் கட்டில் அருகில் இருந்த இரண்டு வாயில் புடவைகளை எடுத்து ட்ரங்க் பெட்டியில் வைத்தான். அடுப்பின் அருகில் சௌதா காட்டன் சேலை துண்டு அழுக்குத் துணியாக இருந்ததை எடுத்துத் தோட்டத்தில் தூக்கி எறிந்தான். சௌதாவிற்கு சம்பந்தப்பட்ட பொருட்களை அனைத்தும் கண்ணில் படாமல் செய்தாலுமே, கூரை விளிம்பில் ரயில் வண்டு பூச்சியைப் போல் துயரம் வட்டமாகச் சுழற்றிக்கொண்டு மேலும் இறுக்கமானது.

சில நாட்களிலேயே சாதத்தை வடிப்பதில் தேர்ச்சி பெற்றான். குழம்புகளைப் பதமாகக் கொதிக்க வைக்கிறான். குழந்தைகள் துயரப்பட்டு சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அது இதுயென கதைகள் சொல்லி அவர்களைக் கொஞ்சிக் குலவுகிறான். அப்புலுவின் அம்மா,  தங்கச்சி, எல்லாரும் வீட்டுலயே இருந்து நல்லது கெட்டது பார்த்துக் கொண்டனர். இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் போன் வரவில்லை. இருட்டும் வரை எஜமானின் வீட்டிலேயே இருந்து விட்டு வருகிறான். ‘போன் வந்தா உனக்குத் தாக்கல் சொல்லுறன்’ என்றாலும் காதில் வாங்காமல் அங்கேயே காவல் காக்கிறான்.

ஒரு வாரம் கழிந்தது. போன் வரவில்லை. ஊரில் எல்லோரும் என்ன ஆனதெனக் குவைத்து அப்புலுவைக் கேட்கத் தொடங்கினர்.

ஒரு வாரம் ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை.

அப்புலு குட்டிப் போட்ட பூனையைப் போல்  திரிந்தான். மனம் ஏனோ  துடிடித்துப் போனது.

எப்படியோ ஏஜென்ட் தாத்தாராவ் முகவரியைக் கண்டுபிடித்து ராஜோலு சென்று விசாரித்தால்  ‘பம்பாய் போயிருக்கான், இன்னும் வரல’ எனச் சொன்னார்கள்.

சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பினான்.

பிள்ளைகள் கேட்டால் ‘உங்க அம்மா நல்லாதான் இருக்காளாம். உங்கள விசாரிச்சாளாம். உங்கள நல்லா சாப்புட்டு, நல்லபடியா பள்ளிக்கூடத்துக்குப் போயி படிக்கச் சொல்லி இருக்காம்’ எனச் சொல்லிக்கொண்டு கண் கலங்கினான். அதைக் கண்டு பிள்ளைகளும் அழுதார்கள். அப்புலுவின் தாய் வந்து “டேய், அப்புலு அப்படி அழுகாதடா. பிள்ளைங்கள பாரு எப்படி இருக்காங்கன்னு, இப்ப என்னாச்சு, போன் பண்ணுவா விடு. பாவம் புள்ள அங்க என்னென்ன பாடு படுதோ என்னவோ?” என்று அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ஒரு வருடம் ஆனது, ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை. எல்லோரும் குவைத்து அப்புலுவைப் பார்த்து இரக்கப்பட்டனர்.

இறந்துவிட்டதாகச் சில பேர், அந்தத் தாத்தாராவுடன் ஓடி விட்டதாகப் பலரும் கிசுகிசுத்தனர். அந்தப் பேச்சுகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, குவைத்து அப்புலுவின் காதில் ஒலித்தன. குவைத்து அப்புலு அன்று முதல் குடிக்கு ஆளானான்.

***

ஒருநாள் அப்புலு மகள் லோவதல்லிக்கு பெரும் காய்ச்சல் வந்தது. அப்புலு வேலைக்குச் சென்றான். மகன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் எல்லோரும் அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.

லோவதல்லி கட்டிலில் படுத்துக்கொண்டு, துணிக் கொடியில் இருந்த இரண்டு துண்டுகளை இழுத்துக் கொண்டு கால்களின் இடுக்கில் வைத்துக்கொண்டு அழுகிறாள். இருட்டுகையில் வீடு திரும்பினான் அப்புலு.

 “இருட்டுடிச்சு, இன்னும் விளக்கேத்தி வெக்காம என்னமா இன்னும் படுத்துகிட்டு இருக்க, தம்பி எங்க?” என்று லோவதல்லி பக்கம் வந்து பார்த்தான். பிள்ளை முனகலிட்டபடி இருந்தாள். தலையில் கையை வைத்து பார்த்தான், உடல் தீயாகக் கொதித்தது.

“ஜுரமா? பாட்டி இன்னும் வீட்டுக்கு வரலயா? இரு, ஆர்.எம்.பி. டாக்டரை அழைச்சிட்டு வரேன்” என விளக்கு புட்டியை ஏற்றினான். 

வெளிச்சத்தில் மகளின் கால் அருகில் துணி துண்டுகள் நனைந்தபடி அகப்பட்டன.

அப்புலுவின் மகன் வந்தான்.

“டேய், நீ போய்ப் பாட்டிய அழைச்சுட்டு வா” என்றான் பதற்றத்துடன். 

அக்காவின் அருகில், குருதி கசிந்த துணிகளைக் கண்டு,

“பாட்டி” என அழுது கொண்டே ஓடினான். அப்புலுவின் அம்மா வந்தாள். 

“புள்ளையோட தாய்மாமனுக்கு தாக்கல் சொல்லு. புள்ள சமஞ்சிருக்கா. தடுக்கு பாயி பேணினா, அதுல உட்கார வைக்கலாம்.” 

“லோவதல்லி வயசுக்குவர நாலு வருஷம் ஆகும்” எனச் சொன்ன சௌதாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன அப்புலுக்கு.

அத்தை வந்து “இரு நான் புட்டு சமைச்சு எடுத்துட்டு வரேன்” எனக் கிளம்பினாள்.

சௌதாவின் தோழி ஜெயா வந்து துணிகளை மாற்றி, அடுப்பைப் பற்ற வைத்து, சோறு சமைத்து வடித்தாள்.

அப்புலு, ஊருக்குள் சென்று எள்ளு பொடி, மரச்செக்கு எண்ணெய் எடுத்து வந்து வீட்டில் வைத்தான். மகள் ஒருத்தியே பாயில் உட்காருகையில், தடுக்குகளின் இடுக்குகளிலிருந்து பார்த்து மகிழ்வான்.

இருட்டியபின் அப்புலு வாசலில் தண்ணீர் தெளித்து, கோலமில்லாத வாசலில், தென்னை மரத்தில் சாய்ந்து, யார் கண்ணிலும் படாமல் கதறிக் கதறி அழுவான்.

ஏழாவது நாள் அன்று, ஊரில் மணல் திட்டுப் பகுதியில் வசிக்கின்ற எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தான்.

அன்று முதல் குடிப்பதை நிறுத்திக் கொண்டான். ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டான். தனக்காகத் தான் வாழ்வதையும் நிறுத்திக் கொண்டான்.

சௌதாமினி என்ன ஆனாளோ யாருக்கும் தெரியவில்லை.

அந்தத் தாத்தாராவையும் அந்த ராஜோலில் மறுபடியும் பார்க்கவில்லை.

சௌதாமினியின் அண்ணனும், சில ஊர்ப் பெரியவர்களும், போலீஸ் கேசைப் பதிவு செய்தனர். ஆனாலும், எந்தப் பலனும் இல்லை. அப்புலு முழுமையாக மாறிவிட்டான். எவ்வளவோ உஷாராக நாள் முழுக்க வேலை செய்து, பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மா இல்லாத குறையை இல்லாமல் வளர்ப்பதைக் கண்டு அந்தத் தீடையில் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் கூட குவைத்து அப்புலுவின் பெயர் சனங்களுக்குத் தெரிந்து விட்டது.

அதன்பின் பிள்ளைகளுக்கு, அவர்களின் அம்மா நினைவுக்கு வருவில்லை. அப்புலு மகனுக்கும், மகளுக்கும் ‘அம்மா இனி வராது, நம்ம தான் இருக்கணும்’ என அவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தினமும் கூறுவான். வந்தால் நமது அதிர்ஷ்டம் என நினைப்பான் மனதில். சுற்று வட்டாரத்து ஊர்களில் யாராவது குவைத்து சென்று வந்தால் விசாரிப்பான். இரண்டு மூன்று முறை யாருக்கும் தெரியாமல் ராஜோலு சென்று வந்தான். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை, இருவரும் என்ன ஆனார்களென நினைக்கையில், சிலமுறை பித்துப் பிடிப்பது போல் இருக்கும். ஓடிவிட்டாளென நினைக்காமல் இறந்து விட்டாளெனச் சமாதானப்படுத்திக் கொள்வதில் தான் சற்று மனதுக்கு லேசாகவும், இதமாகவும் இருக்கும்.

காலம் குவைத்து அப்புலு சந்தோஷமாக இருந்த நொடிகளின் மத்தியில் நிற்கவில்லை, அப்படியென நெஞ்சை நொறுக்கிய கணங்களிலும் நிற்கவில்லை.

குவைத்து அப்புலுவை மறுபடியும் திருமணம் செய்யச் சொல்லிப் பலரும் ஆலோசனை கூறினார்கள். தீடையிலிருந்து இரண்டு மூணு சம்பந்தம் கூட வந்தது. ஆனால், நங்கூரம் போட்ட கப்பலைப் போலப் பிள்ளைகளுக்காகத் துடிப்பாக இருந்து விட்டான்.

“அப்புலு! மவ வளர்ந்துட்டாடா. இனி மாப்புளய பார்க்க தொடங்கிடு சரியா?” என்றால் வரன் பார்க்கத் திரிகிறான். மகன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின், பாலிடெக்னிக் பரீட்சையை எழுத வைத்து, காக்கிநாடா அரசு கல்லூரியில் சேர்த்தான். லோவதல்லிக்கு எந்த வேலையும் சொல்லாமல் அனைத்துமே அப்புலுவே பார்த்துக் கொள்கிறான். குவைத்துப் போகச் செய்த கடன்கள் எல்லாவற்றையும் தீர்த்தான்.

கொஞ்ச நாளைக்கு அப்புலுவின் அம்மாவும் இறந்து விட்டாள். தங்கைக்கு அருகிலுள்ள தீடையில் மாப்பிளை கொண்டு வந்து கல்யாணம் கட்டியபின் அவளும் சென்று விட்டாள்.

தினமும் மகளுக்குத் துறைமுகத்திலிருந்து சிற்றுண்டிகள் பொட்டலங்களைக் கொண்டு வந்து, குழம்பை சமைத்து மகளுக்கு ஊட்டி, அவனும் சாப்பிட்டுப் படுப்பான். தினமும் படுத்தபின் ஒரு மணி நேரம் சௌதாவைப் பற்றிச் சிந்திப்பான்.

தூக்கத்திலேயே அழுவான்.

தூக்கத்திலேயே துயரப்படுவான்.

அதே தூக்கத்தில் மறந்து, மல்லி பூபோல் காலையில் சிரித்து வேலைக்குச் செல்வான்.

அப்படியொரு பத்து வருடங்கள் கழிந்த பின், ஒரு அடை மழையின் பொழுது, எந்த வித ஆள் அரவமும் இல்லை. வீடுகளிலிருந்து எழுந்து வரும் மூடு பனியில் எதுவும் தெரியவில்லை. கோதாவரி கொந்தளித்தபடி இருந்தது. கோதாவரி பாலத்தில் எந்தவித ஆள் அரவமும் இல்லை. துறைமுகத்தில் மட்டும் இரண்டு மூன்று மீனவர்கள் வலையை விரிக்கின்றனர்.

“ஆத்தா! அப்படி சென்டர் வரைக்கும் போயிட்டு வரேன்” என மகளிடம் சொல்லி அப்புலு வெளியே வந்தான். சென்டரில் சோடா கடை அருகில் உட்கார்ந்து, கடைக்காரனிடம் பேசுகையில் யாரோ வந்து  “டேய்! குவைத்து அப்புலு! சௌதாமினி வந்திருக்காடா” என்றார்கள்.

அப்புலு பதறி, கோதாவரியை காட்டிலும் கொந்தளித்தான். ஒரு நிமிஷம். துண்டைத் தலையிலிருந்து எடுத்து, கழுத்தில் போட்டுக்கொண்டு அதுவரைக்கும் குடிக்கத் தவறிய புகையிலை சுருட்டை பற்றவைத்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வீட்டுக்கு நகர்ந்தான். வீடு உடனே வந்து விடும் என்ற பயம் மேலும் அதிகரித்தது. முதல்முறையாக வீடு இன்னும் கொஞ்ச தூரம் இருந்தா நல்லா இருக்கும் என நினைத்தான். என்னையும், என் பிள்ளைகளையும் விட்டு எங்கேயோ போயிட்டா. இறந்து போயிட்டா என்ற யோசனையோடு சமாதானப்படுத்திக் கொண்டு, அதை நம்பி அந்தக் கற்பனையிலேயே இத்தனை நாளும் வாழ்ந்ததினால், அந்தச் சிந்தனை கொடுத்த ஆனந்தம் சௌதாமினியைப் பார்க்க வேண்டுமென்ற வேட்கையைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டது. அதனால் தான் வீடு தூரமாக இருந்தால் நல்லா இருக்குமென நினைத்தான். பலமாகக் குணமடைந்த சிராய்ப்புகளின் மீது, புதிதாக அமைத்துக்                    கொண்ட வாழ்க்கையின் வேட்கைகளின் மீதும் இப்படி சில பலவீனமான நொடிகள் மீண்டும் காயம் செய்வதை அப்புலுவினால் தாள முடியவில்லை.

அதனால்தான் வீடு இன்னும் சற்றுத் தொலைவில் இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான். சௌதாமினி எப்படி வருவாளெனக் கற்பனை செய்ய முடிந்தது.  அந்தக் கற்பனையைத் தாங்கிக் கொள்ளும் துணிவு இல்லாததினால், இறந்து விட்டாள் என்ற பொய்யை அதிகமாக நேசிக்கிறான்.

உண்மையில், சௌதாமினி பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே மேலோட்டமாக அப்புலுவிற்குத் தெரியும்.  கணக்கிட்டுப் பார்க்கவும், வருத்தப்படவும் எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை, ஒரு நொடி முன்பு வரை.

காலடிகள் நின்று விட்டன.

அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் சௌதாமினியைக் காண கூட்டம் கூடினர். வீடு காலியாக இல்லை. அப்புலுவைக் கண்டு யாரும் பேசவில்லை. வெளியே நிற்கிறான். வாசலில் இரும்பு செயரின் மீது வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான்.

அப்புலுவிற்கு அந்த ஏஜென்ட் முகம் நன்றாகவே தெரியும். அவனைக் கண்டான். அவனும், இவனைக் கண்டான். அவ்வளவுதான், எந்தவித வார்த்தைகளும் இல்லை. உள்ளே சென்றான். சௌதாமினி மகளைப் பற்றிக்கொண்டாள். மிகவும் மெலிந்து இருந்தாள். நகங்களுக்கு வண்ணம் தீட்டினாள். கழுத்தில் இரண்டு வடம் சேயினை அணிந்திருந்தாள். ஜிகினா சேலையைக் கட்டி, முகத்திற்குப் பௌடரை அப்பியிருந்தாள். வீடு முழுக்க சென்ட்டின் வாசம்.

அப்புலுவைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அப்புலுவும் எதுவும் பேசவில்லை. 

வீட்டிலிருந்து வெளியேறி, அப்படியே கோதாவரி ஆற்றங்கரைக்குக் கிளம்பினான்.

சௌதாமினி மகளுக்குச் செயின் தந்து, பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வைத்து “ஜாக்கிரதை!” என முத்தமிட்டு அழுது கொண்டே கிளம்பினாள். அவளின் அம்மா திரும்பி வந்தாளென மகனுக்குத் தெரிந்தது. ஆனாலும் பொருட்படுத்தவில்லை.

இத்தனை வருடங்களாகச் சௌதாமினி என்ன ஆனாளெனத் தெரியாதவர்களுக்கு ஒரு விடை கிடைத்தது.

அவ்வப்போது வந்து பிள்ளைகளைப்  பார்த்துச் சென்று விடுவாள். பிள்ளைகளும் ஏதோ விருந்தாளியைப் போலப் பார்ப்பார்கள். ‘குவைத்’ என்ற ஊரின் பெயர், தனது பெயரின் முன்பு அடைமொழியாக வந்து சேர்ந்தது தவிர, குவைத்து அப்புலு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. சௌதாமினி ஏன் இப்படிச் செய்தாளென இன்றுவரை அவளைத் தவிர, மூன்றாவது நபருக்குத் தெரியாது.

நாகேந்திர காசி – 1983 இல், ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவில் பிறந்தார். விண்வெளி பொறியாளராகப் பணிபுரிந்து, தற்போது தெலுங்கு திரைத் துறையில் முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நல்ல வந்தெனா’ நான்கு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றது. இதுவரை புஷ்பா 2, ஹாய் நன்னா, கொட்டபொம்மலி (நாயட்டு ரீமேக்), ஸ்ரீதேவி சோடா சென்டர், பலாசா ஆகிய படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதியிருக்கிறார்.

ஸ்ரீநிவாஸ் தெப்பல – 1989 இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம்  மாநிலத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதுலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணி புரிந்து வருகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’ ‘கரடி’ என்னும் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார். Contact : 9363580434 Email : srinivasprasthanam@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here