Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்குரங்கின் பாதம்

குரங்கின் பாதம்

டபிள்யு. டபிள்யு. ஜேக்கப்ஸ்

தமிழில்: சுபஶ்ரீ முரளிதரன்

பாகம் 1

வெளியில் இரவு நேரம் குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. ’லபர்னம் வில்லா’ வின் வரவேற்பறையில் திரைச்சீலைகள் இறக்கிவிடப்பட்டு, கணப்புத் தீ பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தந்தையும் மகனும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் முதலாமவருக்கு, ஆட்டத்தைப் பற்றிய அடிப்படையான யோசனைகள் இருந்தும், தனது ராஜாவை தேவையற்ற அபாயத்திற்கு நகர்த்தியதில், கணப்பு நெருப்பின் பக்கமாக அமர்ந்து பின்னிக்கொண்டிருந்த நரைத்த தலைமுடியுடைய அந்த முதியவளுமேகூட அவரை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது. 

தான் செய்த அபாயகரமான தவறைத் தாமதமாக உணர்ந்த அவர், தன்னுடைய மகனை அதை கவனிக்கவிடாமல் செய்வதற்காக,”காற்றின் சத்தத்தைக் கவனி” என்று திரு.ஒயிட் கூறினார். 

”நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்றபடி சதுரங்கப் பலகையைப் கூர்ந்து நோக்கியவனாக, தன்னுடைய கையை நகர்த்திக்கொண்டே,”செக்” என்றான்.

”அவர் இன்றிரவு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை” சதுரங்கப் பலகையின்மீது அவருடைய கையை நிலைநிறுத்தியவராகக் கூறினார்.

”மேட்” என்றான் மகன்.

”இப்படி வெளியில் தொலைதூரமான இடத்தில் வாழ்வதில் இருக்கும் மோசமான நிலை இதுதான்” என்று திடீரென சத்தமாகக் கூறினார் திரு.ஒயிட்.”வாழத்தகுதியில்லாத, சேறும் சகதியுமாக இருக்கும் இடங்களிலேயே மோசமானதாக இதுதான் இருக்கும். வழியெங்கும் சேறாகவும், தெருவெல்லாம் வெள்ளப்பெருக்காகவும் இருக்கின்றது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தத் தெருவில் இரண்டு வீடுகளில் மட்டுமே குடித்தனங்கள் இருப்பதால், அதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள் போலும்” 

”கவலைப்படாதீர்கள் செல்லம்” என்று அவர் மனைவி ஆறுதலாகக் கூறினார்.”அடுத்த ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”

திரு. ஒயிட் திடீரென ஒரு கணம், தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வுடனான பார்வைப் பரிமாற்றத்தில் தன் கவனத்தை செலுத்தினார். வார்த்தைகள் அவருடைய உதடுகளிலேயே மறைந்துபோக, அவருடைய சாம்பல்நிற தாடிக்குள், மெலிதாக அரும்பிய குற்றவுணர்வுடன் கூடிய ஒரு அசட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டார். 

வாசற்கதவு சத்தமாக அறைபட்டதையும், காலடித்தடங்கள் கதவை நெருங்கி வருவதையும் கவனித்தவராக”அவர்தான் வந்துவிட்டார்” என்றார் திரு. ஒயிட்.

வரவேற்கும் விதமான பதற்றத்தில் எழுந்துகொண்ட அந்த முதியவர், கதவைத் திறந்தபடி புதிதாக வந்தவரிடம் முகமன் தெரிவித்ததை கேட்க முடிந்தது. வந்திருந்த புதியவரும் முகமன் தெரிவித்ததைத் தொடர்ந்து, தன் கணவர் உயரமும் திடகாதிரமுமான, சிவப்பான முகத்தில் கூர்மையான கண்களைக் கொண்ட மனிதருடன் அறைக்குள் நுழைவதைக்கண்ட திருமதி வொயிட்,”லொக் லொக்” என்று இருமினார். 

”சார்ஜண்ட் மேஜர் மோரிஸ்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 

சார்ஜண்ட் மேஜர் கைகளை விலக்கிக்கொண்டு, கணப்பு தீயருகே தனக்கு வழங்கப்பட்ட இருக்கையை ஏற்றபடி, தன்னுடைய வரவேற்பாளர், விஸ்கியையும் டம்ளரையும் எடுத்து வருவதையும், செம்பு கெட்டிலை நெருப்பின்மீது வைப்பதையும் நிறைவுடன் கவனித்தார். 

மூன்றாவது கோப்பையின் முடிவில் அவருடைய கண்கள் பிரகாசிக்க, பேசத்துவங்கினார். அந்த சிறிய குடும்பம், பல்வேறு நாடுகளில் பயணப்பட்டு வந்திருக்கும் அந்த விருந்தினர், தன் அகன்ற தோள்களை நாற்காலியில் சாய்த்துக்கொண்டு, பயங்கரமான காட்சிகள், வீரதீர செயல்கள், போர்கள், ப்ளேக் தொற்று போன்றவற்றைக் குறித்தும், விசித்திரமான மனிதர்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்ததை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். 

”இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று திரு. ஒயிட், தலையை ஆட்டியபடி தன் மனைவி மற்றும் மகனிடம் சொன்னார்.”அவர் அங்கிருந்து வெளியேறியபோது, கிட்டங்கியில் வேலைப் பார்க்கும் இளைஞனைப் போல இருந்தார். இப்பொழுது இவரைப் பார்” 

பெரிதாக அவருக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என்று திருமதி. ஒயிட் பணிவுடன் கூறினார்.

”நானும் இந்தியாவிற்குப் போக விரும்புகிறேன்” என்றார் அந்த முதியவர்.”வெறுமனே சற்று சுற்றிப்பார்க்கலாம் என்பதற்காகத்தான்” 

”நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது” என்று தன் தலையை ஆட்டியபடி சார்ஜண்ட் மேஜர் கூறினார். அவர் காலிக்கோப்பையை கீழே வைத்தார். மெல்லிய பெருமூச்சுடன் அதை எடுத்து மறுபடியும் கவிழ்த்தார்.

”அங்குள்ள பழமையான கோயில்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார் அந்த வயோதிகர்.”நீங்கள் அன்றைக்கு குரங்கின் பாதம் என்று எதைப்பற்றியோ சொல்லவந்தீர்களே மோரிஸ், அது என்ன?”

”ஒன்றுமில்லை” என பதற்றத்துடன் சொன்னார் அந்தப் படைவீரர்.”அப்படி கேட்பதற்கு அது ஒன்றும் அவ்வளவு மதிப்பானதல்ல” 

”குரங்கின் பாதமா?” என்று திருமதி ஒயிட் ஆர்வமாகக் கேட்டார்.

”அது மாயாஜாலம் என்று சொல்வீர்களே அதுபோலான ஒன்றுதான்” என்று சார்ஜண்ட் மேஜர் வெடுக்கென உரைத்தார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேருமே ஆர்வமாக முன்னால் வந்தனர். வந்திருந்த விருந்தினர் கவனமின்றி காலியான கோப்பையை உதட்டருகே கொண்டு சென்றுவிட்டு, அதை மறுபடியும் கீழே வைத்தார். அவருக்கு விருந்தளிப்பவர் அந்தக் கோப்பையை மீண்டும் நிரப்பினார்.

”பார்ப்பதற்கு” கையை பாக்கெட்டில்விட்டு துழாவியபடியே,”இது ஒரு விலங்கின் சாதாரணமான உலர்ந்துபோன சிறிய பாதம்”

தன்னுடைய பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்துக் கொடுத்தார். திருமதி. ஒயிட் முகச்சுளிப்புடன் பின்வாங்கினார், ஆனால் அதை வாங்கிய அவர் மகன் ஆர்வத்துடன் ஆராய்ந்தான்.

”இதில் என்ன சிறப்பு இருக்கிறது?” என்று கேட்டவராக, தன் மகனிடமிருந்து வாங்கி, அதனை ஆய்வு செய்தபின் மேசைமேல் வைத்தார்.

”அது ஒரு வயதான துறவி மந்திரம் செய்திருப்பது” என்றார் சார்ஜண்ட் மேஜர்.”அவரை மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவர். விதிதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆள்கிறது, எவர் அதன் குறுக்கே வருகிறார்களோ அவர்கள் துயரத்தை அடைகிறார்கள்” என்பதை நிரூபிக்க விரும்பினார். அவர், மூன்று வெவ்வேறு நபர்கள் அதிலிருந்து மூன்று வரங்களை பெறமுடியும் வகையில் இதனை மந்திரித்து வைத்திருக்கிறார்” என்றார்.

 அவர் சொன்னவிதம் கேட்டுக்கொண்டிருந்தவர்களை மிகவும் ஈர்க்கச் செய்வதாய் இருந்ததில், அதுவரையிலும் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது லேசாக புன்னகைப்பதுகூட பொருத்தமற்றது என்பதாக கருதினர். 

“நீங்கள் ஏன் உங்களுக்காக மூன்று வரங்களை கேட்கக்கூடாது?” என ஹெர்பர்ட் ஒயிட் சாதுர்யமாகக் கேட்டான்.

அந்த வீரர், நடுத்தர வயதினர் துடுக்குத்தனமான இளைஞர்களை எப்படியான பார்வைப் பார்ப்பார்களோ, அப்படிப் பார்த்தவராக,”நான் பயன்படுத்திவிட்டேன்” என்றபோது அவருடைய சிவந்த முகம் வெளிறிப்போயிருந்தது.

“உங்களுடைய அந்த மூன்று வரங்களும் பலித்ததா?” என திருமதி. ஒயிட் வினவினார்.

“நிறைவேறியது” என்றார் சார்ஜண்ட். அதை சொன்னபோது அவர் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பை அவருடைய வலுவான பற்களில் மோதிக்கொண்டிருந்தது.

“வேறு யாராவது முயன்றார்களா?”, அந்த மூதாட்டி தொடர்ந்து கேட்டாள்.

“ஆம். முதலாமவனுக்கு மூன்று வரங்களும் நிறைவேறியது” என்பதே பதிலாக வந்தது.”அவன் கேட்ட முதல் இரண்டு வரங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது, ஆனால், மூன்றாவது வரம் மரணத்துக்கானது. அப்படித்தான் இந்த பாதம் என்னிடம் வந்து சேர்ந்தது” என்றார்.

அவருடைய குரலில் தெரிந்த அதிகப்படியான கவலை, அவர்களிடையே அமைதியை ஏற்படுத்தியது. 

“உங்களுடைய மூன்று வரங்களும் கிடைத்து விட்டதால் இனிமேல் இது உங்களுக்கு பயனில்லாதுதானே மோரிஸ்” என அந்த முதியவர் கேட்டார்.”இதை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?” 

அவர் தலையை ஆட்டினார்.”பகட்டிற்குத்தான் என்று நினைக்கிறேன்” என மெதுவாகக் கூறினார்.”எனக்கு இதை விற்றுவிடும் எண்ணம்தான் இருந்தது. ஆனால், நான் அதை விற்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே இது எனக்கு போதுமான அளவிற்கு துன்பத்தைத் தந்துவிட்டது. மேலும் இதை மக்கள் யாரும் வாங்க மாட்டார்கள். இதை ஒரு மாயாஜாலக் கதை என்றுதான் சிலர் கருதுகிறார்கள்; வாங்க நினைக்கும் வேறுசிலர், முதலில் இதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிறகுதான் பணம் தருவோம் என்கிறார்கள்”. 

”உங்களுக்கு மேலும் மூன்று வரங்கள் கிடைக்குமென்றால்” என்று அந்த முதியவர் கூர்ந்து சார்ஜன்ட் மேஜரை நோக்கியவராக”நீங்கள் அதைப் பயன்படுத்துவீர்களா?” எனக் கேட்டார்.

“எனக்குத் தெரியாது” என்றார் அந்த சார்ஜண்ட்.”எனக்குத் தெரியாது”

அந்தப் பாதத்தை எடுத்து, அதை தன் ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் நடுவில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தவர், அதைத் திடீரென நெருப்பில் தூக்கிப் போட்டார். ஒரு சிறிய சத்தம் எழுப்பியவராக, வொயிட் குனிந்து அதைப் பறித்தார். 

“அது எரிந்துபோகட்டும் விடுங்கள். அதுதான் நல்லது” என்று தீவிரத்துடன் சொன்னார்.

“உங்களுக்குத் தேவையில்லையென்றால் மோரிஸ்” என்ற திரு ஒயிட், “அதை எனக்குத் தாருங்கள்” எனக் கேட்டார்.

“நான் தரமாட்டேன்” என்று அவரின் நண்பர் சிடுசிடுப்புடன் பதிலளித்தார். “நான் அதை நெருப்பில் போட்டுவிட்டேன். நீங்கள் அதை எடுத்து வைத்துக்கொண்டால் அதற்குப் பிறகு நடப்பவற்றுக்கு என்மேல் பழிபோடாதீர்கள். விவேகமுள்ளவராக நடந்துகொண்டு, அதை மீண்டும் நெருப்பிலேயே போட்டுவிடுங்கள்” 

“ஒயிட் தன் தலையை அசைத்தவராக, அவர் கையிலிருந்ததை நெருக்கமாக வைத்து சோதித்தார். “இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?” என்று விசாரித்தார்.

“உங்கள் வலதுகையில் இதைப் பிடித்துக்கொண்டு, சத்தமாக நீங்கள் வேண்டுவதைக் கேளுங்கள்” என்றார் சார்ஜண்ட் மேஜர். “ஆனால், நான் அதன் விளைவுகள் குறித்து உங்களை எச்சரிக்கிறேன்”

“அரேபிய இரவுகள் கதைகள் போல இருக்கிறது” இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டே சொன்னார் திருமதி ஒயிட்.”எனக்கு நான்கு ஜோடிக் கைகள் வேண்டும் என்று கேட்டுவிட நினைப்பீர்கள்தானே?”

அவரது கணவர் அந்த தாயத்தை தன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவுடன், அந்த மூவரும் வெடித்து சிரிக்கையில், சார்ஜண்ட் மேஜர், முகத்தில் எச்சரிக்கை மின்னும் பார்வையுடன் அவரது கையைப் பற்றினார்.

”எதையாவது கேட்க விரும்பினால்” எனக் கடுமையான தொனியில், “விவேகத்துடன் கேளுங்கள்” என்றார்.

திரு ஒயிட், அதைத் தன் பாக்கெட்டில் போட்டபடியே, அமர்வதற்கான இருக்கைகளை போட்டவராக, தன் நண்பரை சாப்பாட்டு மேசைக்கு உண்பதற்கு வருமாறு அழைத்தார். இரவு உணவின் பரபரப்பில், அந்த தாயத்து சற்று மறக்கப்பட்டது என்பதுடன், அந்த மூவரும் வந்திருந்த ராணுவ வீரரின் இந்திய பயணத்தின் சாகசங்களை ஆர்வத்துடன் இரண்டாம் கட்டமாகக் கேட்கத்துவங்கினர்.

“அவர் நமக்கு சொன்ன கதைகளைவிட, இந்த குரங்கின் பாதம் பற்றியதில் அதிக உண்மை இல்லையென்றால்” விருந்தினர் கடைசி ரயிலைப் பிடிக்க வேண்டி கிளம்பவும், அவரை அனுப்பிவிட்டு கதவை சாத்தும்போது ஹெர்பர்ட், “அதனால் நமக்கு பெரிய லாபமில்லை” என்றான்.

“நீங்கள் இதற்காக அவருக்கு ஏதாவது கொடுத்தீர்களா?” என திருமதி ஒயிட் தன் கணவரிடம் நெருங்கி வந்து விசாரித்தார்.

“கொஞ்சமாக” என்று மெல்லிய வெட்கத்துடன் பதிலளித்தார். “அவர் அதை எதிர்பார்க்கவில்லை, நான்தான் அவரை வாங்கிக்கொள்ள வைத்தேன். அவர் அதை தூக்கியெறிந்துவிடும்படி மீண்டும் வற்புறுத்தினார்”. 

“ஒருவேளை” என ஹெர்பெர்ட் பயந்தவனைப்போல நடித்தவனாக சொன்னான். “ஏன் நாம் ஒருவேளை பணக்காரர்களாகவும், புகழும் மகிழ்ச்சியும் உடையவர்களாகவும் ஆகிவிடலாம். முதலில் நீங்கள் பேரரசனாக ஆகிவிட வேண்டும் என்று கேளுங்கள், பிறகு அம்மாவால் உங்களை ஆட்டிப் படைக்க முடியாது”

அவன் மேசையைச் சுற்றி ஓடினான். திருமதி. ஒயிட் நாற்காலியின் உறையை கையில் எடுத்துக்கொண்டு அவனை தூற்றியபடியே துரத்தினார்.

திரு. ஒயிட் தன் பாக்கெட்டிலிருந்து அந்த குரங்கின் பாதத்தை வெளியில் எடுத்து, சந்தேகத்துடன் அதனைப் பார்த்தார். “எனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை என்பதுதான் நிஜம்” என்று மெதுவாகக் கூறினார். “எனக்கு வேண்டிய எல்லாமே என்னிடம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது”

“இந்த வீட்டின் கடன் மட்டும் முடிந்துவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்தானே?” என அவரின் தோள்மீது கையைப்போட்டிருந்தபடி கேட்டான் ஹெர்பர்ட். “அப்படியானால் இருநூறு பவுண்டுகள் கேளுங்கள். அது போதும்”

 அவனுடைய தந்தை, தன் பேதமையை நினைத்து வெட்கியவராக, அந்த தாயத்தைக் கையிலெடுத்தார். அவருடைய மகன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, தன் தாயாரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, பியானோவில் சில பிரமாதமான இசைக்குறிப்புகளை வாசித்தான்.

”நான் இருநூறு பவுண்டுகளை வரமாக வேண்டுகிறேன்” என்று அந்த முதியவர் தெளிவாகக் கேட்டார்.

அவரது வார்த்தைகளைத் தொடர்ந்து பியானோவிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த சத்தத்தை, முதியவரிடமிருந்து வந்த விம்மல் சத்தம் இடைமறித்தது. அவருடைய மனைவியும் மகனும் அவரை நோக்கி ஓடினர். 

“அது அசைந்தது” கீழே கிடந்த அந்தப் பொருளை சற்று அருவருப்புடன் நோக்கியவராக கத்தினார். “நான் வரத்தை கேட்கவும், அது என்னுடைய கைகளில் பாம்பைப்போல முறுக்கிக்கொண்டது”

“அப்படியா, பணம் எதையும் காணோமே” என்றபடி அதைக் கையிலெடுத்து மேசைமீது வைத்தபடி, “அதை ஒருபோதும் நான் பார்க்கப் போவதில்லை என்று பந்தயம் கட்டுகிறேன்” என்றான்.

“அது உங்களுடைய கற்பனையாக இருக்கும்” என்று அவர் மனைவி பதற்றமாக சொன்னார். 

அவர் தன் தலையை குலுக்கினார். “போகட்டும் விடு. எந்தக் கெடுதலும் நடக்கவில்லை, ஆனால் இது எனக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது”

இரண்டு ஆண்களும் புகைப்பிடித்து முடித்திருக்க, அவர்கள் அனைவரும் மீண்டும் நெருப்பருகே சென்று அமர்ந்தனர். வெளியில் எப்பொழுதையும்விட பலமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, மாடியில் கதவுகள் அடித்துக் கொண்டதில் ஏற்பட்ட சத்தம் அந்த முதியவரை பதற்றமுற வைத்தது. வழக்கத்திற்கு மாறாக, மூவருக்குள்ளும் மனச்சோர்வுடன் கூடிய அமைதி நிலவியது. அது அந்த முதிய தம்பதியர் அன்றைய இரவுத் தூக்கத்திற்காக தங்கள் படுக்கைக்கு செல்ல எழுந்து கொள்ளும்வரை நீடித்தது.

“உங்கள் படுக்கையின் நடுவில், பணம் ஒரு பெரிய மூட்டையில் கட்டப்பட்டு கிடக்கப்போகிறது என்று நினைக்கிறேன்” என இரவு வணக்கம் தெரிவிக்க வந்த ஹெர்பர்ட் கூறியதோடு, “உங்கள் அலமாரியின் மீதிருந்து ஒரு பயங்கரமான உருவம் உங்களுடைய அந்த சட்டவிரோதமான பணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்” எனக் கிண்டலாகச் சொன்னான். 

அவன் தனியனாக இருளில் அமர்ந்தபடி, அணைந்து கொண்டிருந்த நெருப்பையும் அதில் தோன்றிய முகங்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கடைசியில் ஒரு மனிதக்குரங்கின் முகம் பயங்கரமாகத் தெரிவதை வியப்புடன் பார்த்தான். அது மிகவும் தெளிவாகத் தெரியத் துவங்கியதும், சற்றே அசௌகரியமான சிரிப்புடன், அதன்மீது தண்ணீர் ஊற்றிட நினைத்து, மேசையை நோக்கி தண்ணீர் நிரம்பியக் கோப்பையை எடுக்க வேண்டி, கையை நீட்டினான். அவனது கரங்கள் அந்த குரங்கின் பாதத்தைப் பற்றிக்கொண்டது. ஒரு சிறிய நடுக்கத்துடன் அவன் தன் கோட்டில் கையைத் துடைத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றான்.

பாகம் 2

அடுத்தநாள் காலை, கூதற்கால சூரியனின் கிரணங்கள் சாப்பாட்டு மேசையின்மீது படர்ந்தபோது, அவர் தான் பயந்ததை நினைத்து சிரித்துக்கொண்டார். அந்த அறையில் முந்தைய நாளில் இல்லாதவிதமாக இதமான காற்றும், சூழலும் நிலவியது. அந்த அழுக்கடைந்து சுருங்கிப்போன குரங்கின் பாதம், அதன் மகிமைகளின்மேல் எந்தவிதமான நம்பிக்கையின் அறிகுறியும் இல்லாததாய் அலட்சியமாக ஓரத்தில் கிடந்தது. 

”எல்லா வயதான ராணுவத்தினரும் இதே மாதிரிதான் இருப்பார்கள்போல” என்றார் திருமதி. ஒயிட்.”நாமும் இப்படி அவர் அபத்தமானவைகளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோமே! இந்தக் காலத்தில் எப்படி வரங்களை பெறமுடியும்? அப்படியே இருந்தாலும், இருநூறு பவுண்டுகள் உங்களுக்கு என்ன கெடுதலை ஏற்படுத்திவிட முடியும்?”

”வானத்திலிருந்து அவர் தலைமீது விழுந்தால் கெடுதல் ஏற்படக்கூடும்” என்றான் ஹெர்பர்ட் விளையாட்டுத்தனமாக.

”மோரிஸ் எல்லாம் இயல்பாகத்தான் நடக்கும் என்று சொன்னார்” என்றார் அவனது தந்தை. “விரும்பினால் அதை நீங்கள் எதேச்சையாக நடந்தவற்றோடு பொருத்திக் கொள்ளலாம்” என்றும் கூறினார். 

”சரி. நான் வருவதற்குள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்” என சொல்லியவாறே மேசையிலிருந்து எழுந்தான். “அது உங்களை பேராசைகொண்ட அற்பனாக மாற்றிவிடக்கூடுமோ என பயமாக இருக்கிறது. பிறகு நாங்கள் உங்களை கைவிடவேண்டியிருக்கும்”

அவனது தாயார் சிரித்தபடியே அவனைk கதவுவரைக்கும் தொடர்ந்தவர், அவன் தெருவின் கோடிக்கு செல்லும்வரை கவனித்துக் கொண்டிருந்தார். பின்பு சாப்பாட்டுமேசைக்கு வந்தவர் தன் கணவரின் பேதமையை நினைத்து சிரித்தபடி இருந்தார். என்றாலும் தபால்காரர் வந்து கதவைத் தட்டியதும் விரைந்து கதவுப்பக்கம் போகத்தான் செய்தார். அவர் கொண்டு வந்தது ஒரு தையற்கடையின் கட்டண ரசீது என்பதைப் பார்த்துவிட்டு, ஓய்வுபெற்ற எல்லா சார்ஜண்ட் மேஜர்களையும் கடுமையான சொற்களால் குறிப்பிட்டார்.

”ஹெர்பர்ட் கலாய்த்து பேசுவதற்கு, அவன் வீடு வந்ததும் இன்னும் நிறைய இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்” என்று இரவு உணவிற்காக அவர்கள் இருவரும் அமர்ந்தபோது குறிப்பிட்டார்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றார் கோப்பையில் தனக்காக பியரை ஊற்றிக்கொண்டே, திரு ஒயிட். “ஆனால் அது என் கையில் அசைந்தது என்பது சத்தியமானது”

“அப்படி உங்களுக்குத் தோன்றுகிறது” என்றாள் அந்த மூதாட்டி ஆறுதலாக.

“நான் அது அசைந்தது என்கிறேன்” என்றார். “தோன்றவெல்லாம் இல்லை. நான் அதை… என்ன விஷயம்?”

அவர் மனைவி பதிலெதுவும் சொல்லவில்லை. அவர் வெளியில் ஒரு மர்மமான மனிதனின் நடமாட்டத்தையும், அவன் உள்ளே நுழைய தயக்கம் காட்டுவதாகத் தோன்றியதையும் கவனித்தவராக இருந்தார். அந்த இருநூறு பவுண்டுகள் பற்றிய நினைவுகள் மனதில் நின்றதில், அந்த அந்நியன் நன்றாக உடுத்தியிருப்பதையும், பளபளப்பான புதிய பட்டுத் தொப்பி அணிந்திருந்ததையும் கவனித்தார். அந்த மனிதர் மூன்றுமுறை கதவருகே சென்று ஒருகணம் நின்றுவிட்டு மீண்டும் வந்தார். நான்காவதுமுறை அதன்மீது கையை வைத்து, சடாரெனெ அதைத் திறந்துகொண்டு, பாதையில் நடக்கத் தொடங்கினார். அதேவேளை திருமதி. ஒயிட், தன் கைகளை பின்னால் கொண்டு சென்று, தான் அணிந்திருந்த ஏப்ரனின் கயிறுகளைத் தளர்த்திக்கொண்டு, அந்த முக்கியமான வஸ்துவை நாற்காலியின் மெத்தைகளுக்கு அடியில் தள்ளினார்.

சங்கடமாகத் தெரிந்த அந்த அந்நியனை அறைக்குள் அழைத்து வந்தார். அந்த அறையின் நிலைமைக்காகவும், தன் கணவர் தோட்டவேலைக்காக பயன்படுத்தும் அங்கிக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர் அந்த மூதாட்டியை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டிருந்தார். அவர், தான் வந்த விஷயத்தை சொல்வதற்காக ஒரு பெண் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமையோடு இருந்தார். வந்தவர் ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்தார்.
“என்னை அழைத்து பேசச் சொன்னார்கள்” என்று கடைசியாக சொல்லியபடி தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு பருத்தித் துண்டை எடுத்தார். “நான் மா அண்ட் மெகின்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்றார்.

அந்த மூதாட்டி திடுக்கிட்டவராக, “என்னவாயிற்று?” என மூச்சுத்திணறியபடி கேட்டார். “ஹெர்பர்டுக்கு ஏதாவது நடந்துவிட்டதா? என்னது அது? என்னவாயிற்று?” 

அவருடைய கணவர் இடைமறித்தார். “இரு இரு அம்மாவே” என்றார் அவர் பதற்றத்துடன். “உட்கார்ந்துகொள், மோசமாக எதையும் நினைக்காதே. நீங்கள் ஏதும் மோசமான செய்தியைக் கொண்டுவரவில்லைதானே, நான் சரியாகத்தான் நினைக்கிறேன்” என்றபடி அவரை ஏக்கத்துடன் பார்த்தார்.

“என்னை மன்னிக்கவும் —-” என்று தொடங்கினார் வந்திருந்தவர்.

“அவனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா” எனத் தாயார் பதற்றமாக கேட்டார்.

“மிகவும் மோசமாக” என்று ஆமோதிப்பதாக தலை குனிந்தார். “ஆனால், அவருக்கு எந்த வலியும் இல்லை” என அமைதியாக சொன்னார்.

“ஓ, கடவுளுக்கு நன்றி” என்று தன் கைகளைக் கோர்த்தபடி, “அதற்காக கடவுளுக்கு நன்றி! நன்றி —–”

அந்த வார்த்தைகளில் இருந்த பயங்கரத்தின் அர்த்தம் அவரை மெல்லத் தாக்கியதில் அவர் உடைந்துபோனார். அதோடு, வந்திருந்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டதில் அவருடைய பயம் உறுதிப்பட்டது. அவர் தன்னுடைய மூச்சைப் பிடித்துக்கொண்டு, மெதுவாகப் புரிந்துகொள்ளும் அவருடைய கணவரின் கரங்களில் தனது நடுங்கும் கரங்களை வைத்தார். அங்கு நீண்டதொரு அமைதி நிலவியது.

“அவர் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்” எனக் கடைசியில் அந்த நபர் மெதுவாகக் கூறினார்.

 அவர் ஜன்னல் வழியாக வெறித்துப்பார்த்தபடி, தன் மனைவியின் கரங்களை, தனது கரங்களுக்குள் அழுத்திக்கொண்டு நாற்பது ஆண்டுகளுக்குமுன், அவர் காதலித்தபோது செய்ததைப்போலவே அழுத்தமாக பற்றிக்கொண்டிருந்தார். 

“எங்களுக்கென இருந்தது அவன் மட்டும்தான்” என்று மெதுவாக வந்திருந்தவரைப் பார்த்து திரும்பியபடி சொன்னார்.

வந்திருந்தவர் இருமியபடி எழுந்து மெல்ல ஜன்னலருகே சென்றார். “உங்களது இந்த பெரிய இழப்பிற்கு நிறுவனம் வருத்தம் தெரிவிக்க சொல்லியிருக்கிறது” என்று பார்வையை எந்த பக்கமும் திருப்பாமல் தெரிவித்தார். “நான் நிறுவனத்தாரின் கட்டளைகளுக்கு அடிபணியும் பணியாளன் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” 

எந்த பதிலும் வரவில்லை; அந்த மூதாட்டியின் முகம் வெளிறிப்போயிருந்தது, கண்கள் வெறித்தபடியிருக்க, அவரது மூச்சு சத்தமின்றி வந்துகொண்டிருந்தது: அவரது கணவரின் முகத்தில், அவர் சார்ஜண்ட் மேஜராக இருந்து, முதல்முறை போரை சந்தித்தபோது தோன்றிய அதே அதிர்ச்சி தெரிந்தது. 

“மா அண்ட் மெக்கின்ஸ் எல்லாப் பொறுப்புகளையும் மறுத்திருக்கிறது” என்று தொடர்ந்தார் வந்திருந்தவர். “அவர்கள் எந்தவித பொறுப்பையும் ஏற்கவில்லை என்றாலும் உங்களுடைய மகனின் சேவையை மனதில் கொண்டு, உங்களுக்கு ஒரு தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்திருக்கிறது”

திரு ஒயிட் தன் மனைவியின் கைகளை விட்டுவிட்டு, எழுந்து நின்று பயம் கலந்த பார்வையுடன் வந்திருந்தவரைப் பார்த்தார். அவரது உலர்ந்த உதடுகள் வார்த்தைகளை கோர்த்தது. “எவ்வளவு?”

“இருநூறு பவுண்டுகள்” என்பதே பதிலாக வந்தது.

அவருடைய மனைவியின் அலறலைக்கூட அறியாதவராக, மயக்கத்துடன் புன்முறுவல் செய்தபடி, பார்வையற்றவரைப்போல கைகளை நீட்டிக்கொண்டு தரையில் நிலைகுலைந்து விழுந்தார்.

பாகம் 3

இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த புதிய கல்லறைத் தோட்டத்தில், அந்த முதிய தம்பதியர் தங்கள் மகனை அடக்கம் செய்துவிட்டு, நிழலும் அமைதியும் படர்ந்த தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். எல்லாம் விரைவாகவே முடிந்துவிட்டது. முதலில் அவர்களால் அதை உணர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை. ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்தனர். ஏதோ ஒன்று, அந்த முதியவர்களின் இதயங்களால் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பாரத்தை லேசாக்கும் வகையில் நடக்கப் போகிறதென்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். 

ஆனால், நாள்கள் கடக்க ஆரம்பித்தன, எதிர்பார்ப்புகள் குறையத்தொடங்கி, நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வழிவகுத்தது. அந்த முதிய தம்பதியர் நம்பிக்கை இழந்துபோய் அதை ஏற்றுக்கொண்ட மனோபாவம், சிலசமயம் அது உணர்ச்சியற்ற மனநிலை எனத் தவறாக கருதப்பட்டது. இப்பொழுதெல்லாம் அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவுமே இல்லையென்பதால் அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை. அவர்களுடைய நாள்கள் நீண்டு சலிப்பானதாய் மாறிப்போயிருந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு தூக்கத்திலிருந்து திடீரென விழித்த அந்த முதியவர், கையை நீட்டியபோது, படுக்கையில் தான் மட்டும் தனியாகப் படுத்திருந்ததை கண்டார். அந்த அறை இருட்டாக இருந்தது, ஜன்னல் பக்கத்திலிருந்து மெலிதாக அழுகை சத்தம் கேட்டது. அவர் படுக்கையைவிட்டு எழுந்து அதனை செவிமடுத்தார்.

“திரும்பி வா” மென்மையாக அழைத்தார். “உனக்கு குளிராக இருக்கும்”

“என் மகனுக்கு இன்னும் அதிகமாக குளிரும்” என்ற அந்த மூதாட்டி மீண்டும் அழத்தொடங்கினாள்.

அந்த அழுகை அவருடைய காதுகளை எட்டாமல் போனது. அவருடைய படுக்கை வெம்மையாகவும், அவரது கண்களில் தூக்கம் அழுத்தவும் செய்தது. அவர் அவ்வப்போது விழித்தபடி தூங்கிக் கொண்டிருந்தவர், அவரது மனைவியின் பெரிய அழுகை சத்தத்தில் முற்றிலுமாக விழித்துக்கொண்டார். 

“பாதம்” என்றபடி பெரிதாக அழத்தொடங்கினார் அந்த அம்மையார். “அந்த குரங்கின் பாதம்!”

அவர் பதற்றமாக எழுந்தார். “எங்கே? எங்கே அது? என்னவாயிற்று?”

அவருடைய மனைவி அறையில் அவரை நோக்கி தட்டுத்தடுமாறியபடி வந்தார். “எனக்கு அது வேண்டும்” அமைதியாக கேட்டார். “நீங்கள் அதை அழித்துவிடவில்லையே?”

“அது வரவேற்பரையில், மேல் பலகையில் இருக்கிறது” என்று வியப்பு மேலிட பதிலளித்தார். “ஏன்?”

அவர் அழுவதையும் சிரிப்பதையும் ஒன்றாகச் செய்தார், குனிந்து அவர் கன்னங்களில் முத்தமிட்டார்.

“அதைப் பற்றிய நினைவு வந்தது. எனக்கு ஏன் முன்பே நினைவுக்கு வரவில்லை? நான் ஏன் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை?” என்று வெறிகொண்டவராகப் பேசினார்.

“எதைப் பற்றி நினைக்கவில்லை?” என திரு. ஒயிட் வினவினார்.

“மற்ற இரண்டு வரங்களை” என்று உடனேயே பதிலளித்தார் அவர் மனைவி. “நாம் ஒன்றைத்தான் பயன்படுத்தினோம்”

“அது போதாதா?” அவர் கடுமையாகக் கேட்டார்.

“இல்லை” அவர் ஒருவிதமான களிப்புடன் கத்தினார். “நமக்கு இன்னும் ஒரு வரம் மிச்சமிருக்கிறது. சீக்கிரம் கீழே சென்று அதை எடுத்து வந்து நம் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும் என்ற வரத்தை கேளுங்கள்”

அந்த மனிதர் கட்டிலில் அமர்ந்து, நடுங்கும் தன் கால்களிலிருந்து போர்வையை விலக்கினார். “கடவுளே! நீ பைத்தியமாகிவிட்டாய்” எனத் திகிலடைந்தவராய் கத்தினார். 

“அதைக் கொண்டு வாருங்கள்” அவருக்கு இரைத்தது. “அதை சீக்கிரமாக எடுத்து வாருங்கள், வரத்தை கேளுங்கள் ——- என் மகன், என் மகன்”

அவருடைய கணவர் தீக்குச்சியை உரசி மெழுகுவர்த்தியை ஏற்றினார். “படுக்கைக்கு திரும்பி வா” தளர்ந்துபோனவராக அழைத்தார். “நீ சொல்வது என்னவென்று உனக்குத் தெரியவில்லை”

“நாம் கேட்ட முதல் வரம் கிடைத்ததுதானே” என அவசர அவசரமாகக் கேட்டார். அந்த மூதாட்டி. “அப்படியானால் ஏன் இரண்டாவது கூடாது?”

“அது எதேச்சையாக நடந்தது” அந்த முதியவர் திணறினார்.

“போய் எடுத்து வாருங்கள், வந்து வரத்தைக் கேளுங்கள்” அவர் மனைவி உற்சாகத்தில் நடுங்கியபடி கத்தினார்.

அந்த முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார், அவர் குரல் நடுங்கியது. “அவன் இறந்து பத்து நாள்கள் ஆகிவிட்டது, மேலும் — இதை நான் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, அவனை அவனுடைய உடையைக் கொண்டுதான் அடையாளம் காணமுடிந்தது. அப்போதே உன்னால் அவனைப் பார்க்க முடியவில்லை எனும்போது இப்பொழுது எப்படி?”

“அவனைத் திரும்பக் கொண்டுவாருங்கள்” அந்த மூதாட்டி கரைந்தபடி அவரைக் கதவுப்புறமாக இழுத்துச் சென்றார். “நான் பாலூட்டி வளர்த்த என் மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா?” 

அவர் இருட்டில் கீழிறங்கி வரவேற்பறைக்குச் சென்றார். அங்கிருந்த கணப்பு அடுப்பின் மேல்பக்கமிருந்த அலமாரியை அடைந்தார். அந்த தாயத்து அதன் இடத்திலேயே இருந்தது. அவர் கேட்பதற்குள்ளாகவே, அது சிதைந்துபோன அவரின் மகனை அவர் அறையைவிட்டு வெளியேறுவதற்குள்ளாகவே கொண்டுவந்து நிறுத்திவிடுமோ என்ற பயங்கரமான அச்சம் அவருக்கு ஏற்பட்டதில், அவருக்கு மூச்சடைத்து விட்டது. அறையைவிட்டு வெளியேறும் வழிகூட தெரியாமல் போனது. நெற்றி, வியர்வையில் குளிர்ந்திருக்க, மேசையை சுற்றிக்கொண்டு, சுவரைப் பிடித்தபடியே குறுகலான நடைபாதையில் அந்த அருவருப்பான பொருளைப் பிடித்தபடி நின்றார். 

அவர் அறைக்குள் நுழைந்தபோது, அவருடைய மனைவியின் முகமுமே மாறிவிட்டிருந்ததாகத் தோன்றியது. அது வெளிறிப்போய் எதிர்பார்ப்பு நிரம்பியதாய் காணப்பட்டது. அச்சத்தில் இருந்த அவருடைய கண்களுக்கு அது இயற்கைக்கு மாறாக இருப்பதாகத் தெரிந்தது. அவர் தன் மனைவியைப் பார்த்து பயந்தார்.

“வரத்தை கேளுங்கள்” அவருடைய மனைவியின் குரல் அழுத்தமாக வந்தது.

“இது முட்டாள்தனமும், மோசமானதும்” என்று கூறிய அவர் தளர்ச்சியடைந்தார்.

“கேளுங்கள்” அவருடைய மனைவி மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் தன் கையை உயர்த்தி, “என் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும்” என்றார்.

அந்த தாயத்து தரையில் விழுந்தது, அவர் அதை அச்சத்துடன் பார்த்தார். பிறகு நடுங்கியபடி நாற்காலியில் புதைந்து கொண்டார். அந்த மூதாட்டி எரிச்சலெடுக்கும் கண்களுடன், ஜன்னலை நோக்கி நடந்து சென்று அதன் திரையை விலக்கினார். 

அந்த முதியவள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது கவனித்தபடி, அவர் உடல் குளிர்ந்துபோகும்வரை அங்கேயே அமர்ந்திருந்தார். சீன மெழுகுவர்த்தித்தாங்கியின் விளிம்புவரை எரிந்து முடிந்திருந்த மெழுகுவர்த்தியிலிருந்து எழுந்த ஜுவாலை, அது முற்றிலும் அணைந்து போவதற்குமுன் சுவரிலும் விட்டத்திலும் அசையும் நிழல் பிம்பங்களை பிரதிபலித்தது. அந்த முதியவர், அந்த தாயத்து தன் வேலையை செய்யவில்லை என்பதில் ஏற்பட்ட சொல்லமுடியாத ஒருவித நிம்மதி உணர்வுடன், தன் படுக்கையை நோக்கி நகர்ந்தார். ஒரு நிமிடம் கழித்து, அந்த மூதாட்டி மௌனமாகவும் உணர்ச்சியற்றவளாகவும் படுக்கைக்குத் திரும்பி வந்தார்.

 இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல், கடிகாரம் துடிப்பதைக் கேட்டபடி அமர்ந்திருந்தனர். படிக்கட்டில் ஏதோ சத்தம் கேட்டது. கீச்சென ஒலியெழுப்பியபடி சுவர் பக்கமாக ஒரு எலி ஓடியது. அங்கு நிலவிய இருள் கொடுமையானதாகத் தோன்றியது. சற்றுநேரம் படுத்தபடி கிடந்தவர், தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பற்ற வைத்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெழுகுவர்த்தியை எடுத்துவர கீழே சென்றார். 

அவர் கடைசி படிக்கட்டை அடைந்தபோது தீக்குச்சி அணைந்துபோய்விட்டது. மற்றொன்றை பற்றவைக்க நிதானித்தார். அதேநேரம் மிகவும் மென்மையாக, கிட்டத்தட்ட கேட்கமுடியாத அளவிற்கான ஒலியில் முன்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

அவர் கையிலிருந்து தீக்குச்சிகள் நடைபாதையெங்கும் விழுந்து சிதறின. அவர் அசைவற்று நின்றார், அடுத்த சத்தம் கேட்கும்வரை அவருடைய மூச்சே நின்றுபோனதுபோல் இருந்தது. அவர் திரும்பி சட்டென தன்னுடைய அறைக்குள் நுழைந்து, தன் பின்னாலிருந்த கதவை சாத்திவிட்டார். மூன்றாவது முறையாக வந்த சத்தம் வீடு முழுவதிலும் கேட்டது. 

“என்னதது?” என அந்த மூதாட்டி கேட்கத் தொடங்கினாள்.

“ஒரு எலி” குரல் நடுக்கமெடுக்க அந்த முதியவர் பதிலளித்தார். “ஒரு எலி படிக்கட்டில் என்னைக் கடந்து சென்றது”

அவரது மனைவி அதைக் கேட்டுக்கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ஒரு பலமான சத்தம் வீடெங்கிலும் எதிரொலித்தது. 

“அது ஹெர்பர்ட்” 

அவர் மனைவி கதவை நோக்கி ஓடினார். ஆனால் அவருடைய கணவர் அவருக்கு முன்னால் தன் மனைவியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார்.

“நீ என்ன செய்யப் போகிறாய்?” கரகரப்பான குரலில் கிசுகிசுத்தார்.

“அது என் மகன், அது ஹெர்பர்ட்!” இயந்திரத்தனமாக தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபடி கத்திக்கொண்டிருந்தார். “அவன் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டேன். நீங்கள் எதற்காக என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் போகவிடுங்கள் நான் கதவைத் திறக்க வேண்டும்”

“ஐயோ கடவுளே, அதை உள்ளே விடாதே” அந்த முதியவர் நடுங்கியபடி கரைந்தார். 

“உங்கள் சொந்த மகனைப் பார்த்து பயப்படுகிறீர்கள்” சிரமத்துடன் கத்திக்கொண்டே, “என்னைப் போகவிடுங்கள். நான் வருகிறேன் ஹெர்பர்ட், நான் வந்துகொண்டிருக்கிறேன்”

இன்னொருமுறை கதவுத் தட்டப்பட்டது, மற்றுமொருமுறை. அந்த மூதாட்டி சடாரென தன்னை விடுவித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார். அவருடைய கணவர் அவரைப் பின்தொடர்ந்து, மாடிப்படி சந்திப்பில் நின்றபடி, கீழே இறங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவியிடம் மன்றாடினார். அவருக்கு சங்கிலி அசைந்தாடும் சத்தமும் அதைத் தொடர்ந்து தாழ்ப்பாள் நிதானமாகவும் உறுதியுடனும் விலக்கப்படும் சத்தமும் கேட்டது. பின்னர் அந்த மூதாட்டியின் குரல் மூச்சுத் திணறலுடன் வெளிப்பட்டது. 

“இந்த தாழ்ப்பாள்” சத்தமாக அழைத்தார். “எனக்கு எட்டவில்லை. கீழே வாருங்கள்”

ஆனால், அவருடைய கணவர் தரையில் முழங்காலிட்டு ஆவேசமாக அந்த பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். வெளியிலிருக்கும் அது உள்ளே வருவதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும். வீடெங்கும் துல்லியமான தட்டல் சத்தம் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி நாற்காலியை கதவுப் பக்கமாக இருந்த நடைபாதையில் இழுத்துச் செல்லும் சத்தம் கேட்டது. அதே சமயம் தாழ்ப்பாள் மெதுவாக இறங்கும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்த அதே கணத்தில் அவர் அந்தக் குரங்கின் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டார் என்றதோடு, மூச்சிரைக்க பதட்டமாக மூன்றாவது வரத்தையும் கேட்டே விட்டார். 

 சடாரென தட்டல் சத்தம் நின்று போனது. அதன் எதிரொலி வீட்டிற்குள் இன்னமும் இருந்துகொண்டிருந்தது. அவருக்கு நாற்காலி பின்னால் இழுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது. வெளியிலிருந்து குளிர்ந்த காற்று படிக்கட்டுகளில் மோதி மேலெழுந்தது. ஏமாற்றமும் துயரமும் கலந்த அவருடைய மனைவியின் ஓலம் அவரைத் தன் மனைவியை நெருங்கவும், அவரைக் கடந்து கதவுவரை செல்வதற்குமான தைரியத்தையும் கொடுத்தது. எதிரில் மினுங்கிக் கொண்டிருந்த தெருவிளக்கு அமைதியாக வெறிச்சோடிக்கிடந்த தெருவின்மீது ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது. 

டபிள்யு. டபிள்யு. ஜேக்கப்ஸ் (1863-1943)- இங்கிலாந்தை சேர்ந்த சிறுகதையாசிரியர் மற்றும் நாடகாசிரியர். நகைமுரண்களான விஷயங்களையும் பகடிகளையும் திறம்பட கதைகளில் கையாள்பபவர். இவருடைய ஆகச் சிறந்த சிறுகதை “Monkey’s  Paw” அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here