Homeஇதழ்கள்2026 இதழ்கள்கட்டற்ற சுதந்திரமும் அர்த்தமற்ற வெறுமையும்

கட்டற்ற சுதந்திரமும் அர்த்தமற்ற வெறுமையும்

ஆதவன் சரவணபவன்

நாவல்: இடபம் 

நூலாசிரியர்: பா கண்மணி 

பெயர் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கதை. இன்னொருவரின் தங்கியிராமல் சுதந்திரமாக வாழத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு முன்னகருகிறாள். தனித்து வாழும் அவளுக்கு பொழுது போக்கக் கைகொடுக்கும் பங்குச் சந்தை வியாபாரம். மேலதிக சேமிப்பை முதலிட்டு இலாபம் பார்க்க முனைகிறாள். டெக்கினிக்கல் (Technical) பண்டமென்டல் (Fundamental) பகுப்பாய்வுகள் வழி நிறுவனங்களுடைய பங்குகளின் விலைத் தளம்பலை விபரிக்கும் இடங்களில் அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தத் துறை சார்ந்த அனுபவமற்ற வாசகர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கலாம்.     நட்டமும் இலாபமும் மாறி மாறி தாண்டவமாடும் மாய உலகில் மன உளைச்சல் முற்றிக் கொண்டிருக்கிறது. ஆசுவாசமடைய சில ஆண்களுடன் உறவிலும் மதுவிலும் தன்னைத் தொலைத்துக் கொள்கிறாள். தேடிக்கொள்ளும் உறவுகளால் ஏற்படும் சந்தோசம் – துக்கம் என்ற இருமை நிலைகளை ஆராய்ந்தாலும் அதற்கு அப்பாற்பட்ட, சாமானியனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கையை மீறிய நிலையில் தொழிற்படும் பங்குச் சந்தை போல அவள் தேடிக்கொள்ளும் உறவுகளும் இருக்கின்றன. இங்கே பங்குச்சந்தையென்பது ஒரு குறியீடு. மனிதன் மேல் திணிக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகள் ஒழுக்கமான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே என்று சொல்லப்படும் வியாக்கியானங்கள் ஒழுக்கம் என்பதை வரையறுப்பதில் பாரபட்சம் காட்டுகின்றன. 

பிரசித்தமான ப்னோப்டிகான் மாடல் (Panopticon model by Jeremy Bentham in 1787) சிறைச்சாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் உருவாக்கப்பட்டது. அரை வட்ட வடிவமான அல்லது “ப” வடிவில் அறைகள் வரிசையாக அமைக்கப்பட்டு மையத்தில் கண்காணிப்பு கோபுரம் வைக்கப்பட்டிருக்கும். கைதிகளையும் மாணவர்களையும் உத்தியோகத்தர்களும் கண்காணிக்கும் அமைப்பு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. உதாரணத்துக்கு இந்த அமைப்பில் சிக்குப்படும் மனிதனின் நான் என்ற அடையாளம் அழிக்கப்படுகிறது. நான் சுதந்திரமாக எனது தனித்துவத்தை காப்பாற்ற முடியாமல் கண்காணிக்கப்படுகிறேன். இந்த இரண்டையும் செய்யும் சிறைச்சாலை தண்டனை பெற்ற கைதிகளுக்கு இருப்பது போல மிஷேல் பூக்கோ (Michel Foucault) எழுதிய ஒழுக்கமும் தண்டனையும் ஒப்பிடக் கூடியது. ஒழுக்கம் என்பது அதிகாரத்தின் கைகளால் சமூகத்தில் மறைமுகமாக கொண்டுவரப்பட்டிருக்கும் மதிப்பீடு. குடும்பம் ஒழுக்கத்தை எதிர் பார்க்கிறது. ஆணாதிக்கமோ குடும்பத்துடைய தலைவர்களின் ஆதிக்கமோ சாதீய ஆதிக்கமோ சமய ஆதிக்கமோ அவள் மீது திணிக்கப்படுவதை எதிர்க்கும் கலகக் குரலாக கட்டற்ற சுதந்திரத்தை யாசித்து அதை மெய்ப்பிக்க நடந்து கொள்ளும் அதீதமான பெண்ணாக அவளை உருவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர். 

நவநாகரீக உலகின் கட்டமைப்பும் முதலாளித்துவத்தின் எழிச்சியும் குடும்ப அமைப்பினை தேவையற்ற ஒன்றாக ஆக்கியிருப்பதன் ஒரு துளி அவள். உறவுகளும் குடும்ப அமைப்பும் சுமையாகத் தெரிகிறது. வேலை, நண்பர்களுடன் இரவுக் கொண்டாட்டம், வீடு, தூக்கம் மறுபடியும் காலையில் வேலை என்ற சுற்றோட்டம் வரையறுக்கப்பட்ட வாழ்வியல் முறையை உண்டாக்கி வைத்திருக்கிறது. அந்தச் சுற்றோட்டத்தைக் குழப்பும் பிரதானமான கூறு உறவுகள். உறவுகளால் கட்டமைக்கப்படும் குடும்பம் என்ற தொகுப்பு. குடும்பம் என்ற தொகுப்பில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பழமைவாதம் அந்தக் கட்டுப்பாடுகளை அதிகமாக பெண்கள் மேல் திணித்து வைத்திருக்கிறது. பெண்ணியம் சார்ந்த முன்னெடுப்புகள் இந்தக் கட்டுப்பாடுகளை உடைப்பது மட்டுமல்ல அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்த முயல்கிறது.  

படித்த, உலகம் தெரிந்த வேலை செய்யும் பெண் இவள். குடும்ப வாழ்க்கை தனக்கான சுயத்தைத் தொலைக்கும் கட்டமைப்பு என்ற புரிதலில் தனியாக வாழப் பழகிவிடுகிறாள். அந்தக் கட்டமைப்புக்குள் உழலும் பெண்களை கையாலாகாதவர்களாக பார்க்கிறாள். சம்பிரதாயங்களும் கலாச்சார நிகழ்வுகளும் பண்பாட்டு ஆடையான சேலையும் தொந்தரவாக தெரிகின்றன. சீனி மிதமிஞ்சிய பொங்கல் வியாதியைக் கொண்டுவரும் என்ற தெளிவுள்ளவள். யோகாவும் உடற்பயிற்சியும் செய்பவள். மதுவைச் சுவைப்பதையும் புகைப்பதையும் மன அழுத்தத்தைப் போக்க என்று கற்பிதம் செய்பவள். முரண்களின் தொகுப்பு அவள். பெண்ணுக்கும் கட்டற்ற சுதந்திரம் வேண்டும். சிறுவர்களின் கூச்சல் கூட அவளின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது. தெரிவுகள் அவளுடையதாக வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையில் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறாள். உடம்புக்கான தேவை உணவும் காமமும். விரும்பியபோது கிடைப்பதை நியாயப்படுத்தும் போது கலாச்சாரம் போலியான துதிபாடலாகத் தோன்றுகிறது. பங்குச்சந்தையில் கிடைக்கும் பெரு வெற்றியில் தனது வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்த களிப்பில் இன்னும் வீறாப்பாக தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தப் பெரு வெற்றியும் நிதிநிலையில் மேன்மையும் திடமான தனது தனித்த வாழ்வின் வெற்றியாக மாற்றிப் பார்க்கும்போது எங்கிருந்தோ வரும் வெறுமை ஆட்கொள்கிறது. இவையெல்லாம் வெளிப்படுத்த முடியாத வெறுமையில் வெறுப்பைக் கொட்டும் நிலைக்கு அவளையறியாமல் வந்துசேருவதை இந்தப் புதினம் கேள்விகளுடன் எம்முன் வைக்கிறது. தனது தேவைகள் எல்லாம் நிறைவேற்றும் அனைத்தும் இருந்தும் வெறுமை ஆட்க்கொள்கிறது. அன்பும் பாசமும் தன்னைச் சுற்றி இல்லாமையை உணரும் போதும் விட்டுக்கொடுப்புகளை மதிக்காமல் அதை இயலாமையின் வெளிப்பாடாக நினைத்தவளுக்கு இறுதியில் அதுவரை சாதித்துப் பெற்ற சுதந்திரம் பொருளற்றதாக ஆகிவிடுகிறது. பிறழ்வு நிலைக்கு தன்னை அறியாமலே வந்திருக்கும் பெண் இனி வரப்போகும் தலைமுறைக்கான எச்சரிக்கை.  

மேலைத்தேச வளர்ந்த நாடுகளில் இருக்கும் தனித்து வாழ்வது என்ற முறைமை இன்னும் பெருமளவில் கீழைத்தேசங்களில் உள்வாங்கப்படவில்லை. முதலாளித்துவம் காட்டும் வசதிகள், வாய்ப்புக்கள் நம்பிக்கையைக் கொடுக்கின்றன. குடும்பம் சம்பாத்தியத்தை உறிஞ்சும் இயந்திரம். தனி மனிதனாக வாழும்போது மிதமிஞ்சிய செலவுகளுக்கும் செழிப்பான வாழ்க்கை முறைக்கும் அவன் நகர்கிறான். வளர்ந்த நாகரீகம் என்பது மேலைத்தேசத்து வாழ்க்கைமுறையைக் கைக்கொள்வது என்ற சிந்தனை பரவலாக இருக்கின்றது. அதை நோக்கிய ஓட்டம் மெதுவடைவதற்கு கீழைத்தேசங்களின் பண்பாட்டுக் கூறுகள் வேகத்தடைகளாக இருக்கின்றன. ஆசிரியர் சில இடங்களில் இந்த விடயத்தைத் தொட்டுக் காட்டுகிறார். அதிலிருந்து திமிறி எழுவதால் அவள் அதீதமான பெண்ணாக இருக்கிறாள். இருக்கும் காலத்தில் இன்னொருவரின் தங்கியிராமல் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று வெளிப்படுத்தும் ஆசிரியர் அதன் போக்கு அர்த்தமற்றதாகவும் மனதளவில் தனித்து நிற்கையில் துயர் நிறைந்ததாகவும் காட்டுகிறார். தனித்திருத்தல் சுதந்திரம். கட்டற்ற சுதந்திரம் மனதுக்கு சுகமளிக்கிறது. தனித்திருத்தல் வெறுமையைக் கொடுக்கிறது. வெறுமை துயர் நிறைந்தது. எதைத் தெரிவு செய்வது என்பதில் முடிவெடுக்க வேண்டிய கடைப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு. 

***

ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here