சுதர்சன் ஹரிபாஸ்கர்
“ந்தா பாருடி புள்ள. பொண்ணு வூட்டுக்காரவ்வொ அப்டித்தான் என்னம்மாச்சும் சொல்லுவாவ்வொ. நீ இதயெல்லா மனசுல ஏத்திக்காம கொஞ்ச நாளக்கி ஃபிரியா இரு”
சலனமே இல்லாமல் அமர்ந்திருந்த எனக்கு சித்தி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, சித்தப்பா இடைமறித்தார்.
“நீ செத்த செவனேன்னு இரு. யப்பாடி ஒனக்கு தோணுறத பண்ணுப்பாடி. நெதானிச்சு யோசி. அப்புறமா ஒனக்கு சரியா வர்றத்த பண்ணு”
”சரி சித்தப்பா. இப்ப வெளில கெளம்புறேன். ரெண்டு நாள் கழிச்சு வந்து எல்லாத்தையும் பேசிப்போம்”
அப்பாவும் அம்மாவும் ஏதும் சொல்லாமல் குற்ற உணர்வுடன் இருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது
“யப்பா பெரியபுள்ள இவனுவளுக்காவ உன்ன டூர் போக வேணாம்னு சொல்லிட்டமேன்னு இருக்கு. அடுத்த வாரம் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி அனுப்பிருக்கனும். இப்ப அவதி அவதியா வந்து கும்ப கூடி இஷ்டத்துக்குப் பேசிட்டு பதிலும் ஒன்னும் ஒழுங்கா சொல்லாம போவானுவோன்னு யாரு கண்டா. நீ வேற எங்கேயாச்சும் கெளம்பி பெய்ட்டு வா”
“இல்லம்மா. அவங்க சைட்ல இருந்து பாத்தா அவங்க கேட்டதெல்லாம் நியாயமா தான் தோணுது. நம்ம சைடுல நெறையா வீக் பாயிண்ட் இருக்கு. சொந்த வீடு இல்ல. சொந்த ஊருல பெருசா நமக்குன்னு ஒன்னுமில்ல. வேலைல ஓரளவு நல்ல சம்பாதிச்சாலும் அவங்க கேக்குறாப்ல பெரிய காலேஜுல ஆஹா ஓஹோன்னெல்லாம் ஒன்னும் படிக்கலதான.”
பெண் வீட்டார் கேட்ட கேள்விகளால் உள்ளுக்குள் அகங்காரம் கொஞ்சமாய் சுரண்டப்பட்டிருந்தாலும் உதட்டளவில் அம்மாவுக்காக சால்ஜாப்பு சொன்னேன். அப்பா எதுவும் சொல்லாமல் மூக்குநுணி கண்ணாடி வழி அலைபேசியைப் பார்த்தபடி சோபாவில் சாய்ந்திருந்தார்.
“உங்கம்மா சொல்றத்த கேளுப்பா. நீ எங்க போறியோ போயிட்டுவா. வண்டில போறதா இருந்தா ஜாக்கிரதையா போ. அப்பப்ப போன் பண்ணு”
“ஓக்கேப்பா. நான் உலகா மாமாட்ட பேசிருக்கேன். அவரப் போய் பாத்துட்டு அவரோட அப்டியே ரெண்டு நாள் சுத்திட்டு வரேன். பைக்லதான் போறேன்”
ஆமோதித்து தலையசைத்தார். நான் மாற்றுத்துணிகளை அள்ளி ஒரு நீளமான பயணப்பையின் உள்ளே திணித்துக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே போவதென்றால் இதை அப்படியே பின் சீட்டில் வைத்து கட்டிக் கொள்வது போதுமானது.
“இப்பவே மணி மூனாவுது. இப்ப கெளம்புனாலும் நடுராத்திரிக்கு மேல ஆயிடுமேப்பா பரவால்லயா ? போன்ல சொல்லிட்டியா ? அவரு எங்க சீவில்லிப்புத்தூர் தான ?”
”பேசிருக்கேன்பா; அவரு வாசுதேவநல்லூர்னு நெனைக்கிறேன். மொதல்ல நான் கெளம்புறேன். போற வழில உங்களுக்கு அவருக்கு எல்லாருக்கும் போன் பண்றேன். சரியா ? வாடகைச் சேருக்கு ஆள் வருவான். செட்டில் பண்ணிருங்க. அம்மாட்ட காசு குடுத்துட்டுப் போறேன்”
நண்பர்களுடன் வெளியூர் செல்வதாகத் திட்டம் இருந்தது. திடீரென பெண் வீட்டிலிருந்து பத்து பேர் வருவதாக அம்மாவுக்கு ஃபோன் வர, நண்பர்களிடம் நான் வரவியலாத காரணத்தைச் சொல்லிவிட்டு வீட்டில் ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டு அம்மாவுக்கு உதவியபடி இருந்தேன்.
பெண்ணின் தாய் மாமன்கள் மூவர், அவர்களின் மனைவியர், பெண்ணைப் பெற்றோர், பெரியவர்கள் என ஒரு பெரும் கூட்டமே வந்திருந்தது. வந்தவர்களுக்கு காஃபி டிபன் தந்து சம்பிரதாய உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கையில், பெண்ணின் தாய்மாமன்களுள் ஒருவர் என்னைத் தனியே அழைத்துப் போய் வேலை, சம்பளம், படிப்பு, கடன்கள், சொந்த ஊர் சொத்து விவரம், எதிர்காலத்திட்டம் என கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
வீட்டிற்கு சென்றதும் சிறிது நேரம் பேச்சும் சலசலப்புமாக வந்திருந்த அனைவரும் சிறு குழுக்களாக அமர்ந்து பேசிகொண்டிருந்துவிட்டு, சீக்கிரமே நல்ல செய்தி சொல்கிறோம் என்றுவிட்டு புறப்பட்டனர்
அதன்பின் என்னுடைய மனநிலையைப் பார்த்துவிட்டே வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் வந்து ஆறுதல் சொல்லத்துவங்கினர். எனக்குமே ஒரு தற்காலிக தப்பித்தல் தேவையாக இருந்தது. இப்போதைக்கு சுற்றி நடக்கிற அனைத்தையும் மறந்துவிட்டு எங்காவது சென்று வரலாம் என்பது மட்டுமே மனதில் ஒடிக்கொண்டிருந்தது.
தெருமுனையின் மெக்கானிக் ஷாப்பில் வண்டியை நிறுத்தினேன். “தம்பி டேய்.. செய்ன் கொஞ்சம் லூசா இருக்கு டைட்டு வை. அப்டியே ஏர் செக் பண்ணிட்டு க்ளட்ச்சு கேபிள், ஆக்ஸிலேட்டர் கேபிளை பாத்துரு.”
“ண்ணா.. போன ட்ரிப்பு முடிச்சு வந்து இன்னும் சர்வீஸ் பண்ணல…வரேன் வரேன்னு தட்டிக் கழிச்சுட்டே இருக்கீங்க. வண்டிய விட்டுட்டு என் வண்டிய எடுத்துட்டுப் போங்கண்ணா. பொறுமையா பாத்து வெக்கிறேன்”
“ஏய்… அதுகெல்லாம் டைம் இல்லப்பா. இப்போதைக்கு இருக்குறதப் பாத்து சரி பண்ணிவிடு. இந்த ட்ரிப்புக்கு தாங்கும்ல ? முடிச்சுட்டு வந்து பாத்துக்குறேன்.”
“இல்லண்ணா. பேக்வீல் அல்ரெடி நெறைய பஞ்சர் போட்டாச்சு. க்ளட்ச் ப்ளேட்டும் நெறையா தேச்சாச்சு, அதுவும் மாத்தனும். இப்போ டைம் குடுத்தா புது ட்யூப மட்டுமாவது மாத்திடுறேன்”
“இல்லப்பா. டைம் இல்ல. வந்து பாத்துக்குறேன். நீ மத்தத பாத்துட்டு ரெடி பண்ணு”
“இந்தவாட்டி எங்கண்ணா ட்ரிப்பு”
“தெர்லப்பா குற்றாலம் கிட்ட போறேன். அங்கருந்து ஃப்ரண்டு எங்க கூப்டுப் போறாரோ அங்க…”
“எங்கெங்கியோ போறீங்க வரீங்க. ஒன்னியும் வாங்கியாரதில்ல. சொம்மா வெறுங்கைய வீசிட்டு வரீங்க”
இவனுடைய சீண்டலையெல்லாம் பொருட்படுத்தி பதில் சொல்லுமளவு பொறுமையில்லாததால் முகம் பாராமல் தவிர்த்து நகர்ந்தேன்.
அடுத்த அரை மணிநேரத்தில் வண்டியிலிருந்த சின்னச் சின்ன பிரச்சனைகளை மட்டும் சரிபார்த்துவிட்டு வீடு திரும்பினேன். எல்லோரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புகையில் மதிய வெய்யில் குறையத்துவங்கியிருந்தது.
”வெளிச்சம் கொறையுறதுக்கு முன்னாடியே எவ்ளோ தூரம் முடியுமோ போயிரனும் ”
மாலை சூரியன் மங்கி இருள் மெல்ல மெல்ல விரிய, மனம் முழுக்க பரவிக்கிடந்த ஆற்றாமையும், கையறு நிலையும் மூளைக்கு கோபத்தின் அறிவிப்பை அனுப்ப, வலது மணிக்கட்டு ஆக்ஸிலேட்டரை இன்னும் வலுவாக முறுக்க, நெடுஞ்சாலை எதிர்காற்றின் சீற்றமும் எஞ்சின் உறுமலும் ஹெல்மெட்டைத் தாண்டி காதுக்குள் ஊடுருவின. இரவு விராலிமலை தாண்டும் போது, ஒரு சாலையோரக் கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு, அருகே முகம் கை கால் கழுவிவந்து சாப்பிட அமர்கையில் உலகா மாமாவை அழைத்தேன்.
உலகா மாமா நீண்ட நாட்களாக ஊருக்கு வரச்சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் அவர் உறவெல்லாம் இல்லை; எங்கோ ஒரு ஊரில் ஒரு கல்லூரிக்கால நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது அவனுடைய தூரத்து உறவினராக எங்களுக்கு அறிமுகமாகி பின் தொலைபேசியிலும் வாட்சப்பிலும் வாரம் தவறாது அழைத்துப் பேசுமளவு நெருக்கமாகிப் போனார்.
“சொல்றா தம்பு.. எங்க இருக்க ?”
“இந்தா விராலிமலைகிட்ட சாப்புட நிறுத்துனேன் மாமா. நடுராத்திரிக்கு மேல ஆயிரும்; நீங்க தூங்கிருங்க. நான் வந்துட்டு கூப்புடுறேன்”
“சரி சரி. பாத்து வா”
“ஆமா எங்க போறோம் ? எங்க தங்குறது ?எடம் நல்லாருக்குமா? “
“லேய்.. கேள்வி மசுறெல்லம் கேக்காம கம்முன்னு கெளம்பி வா. மத்த கதைய அப்புறம் பாத்துப்பம்”
“சரி ரைட்டு”
முதுகு வலித்தது; தோள்பட்டையிலிருந்து பின்னங்கழுத்து வரையிலும் இரும்புக்கம்பியால் இணைத்து கட்டியதுபோல உணர்ந்தேன்.
”தம்பி.. சாப்புட என்னா வேணும் ? “
“தெரியலண்ணே. எது ஒடனே கெடைக்குமோ குடுங்க”
“சூடா இட்லி இருக்கு. கொண்டாறேன்”
சாப்பிட்டு முடித்து கொஞ்சநேரம் அங்கிருந்த பலகையில் மல்லாந்து படுத்திருந்தேன். மனதுக்குள் கேள்விகளின் கூப்பாடு மெல்ல மெல்ல சத்தத்தைக் கூட்ட, மூடிய கண்களை எரிச்சலுடன் திறந்து உடலை நெளித்து, ஹெல்மெட்டை மாட்டி மீண்டும் கிளம்பினேன். வேகம்… வேகம்… இன்னும் வேகம். முன்னே நகர்ந்து கொண்டே இருப்போம். இருளினூடே வெளிச்சப்புள்ளிகளும் ஒளிக்கீற்றுகளுமாய் நாலா புறமும் கடந்தபடியே இருக்க, இதர வாகனங்களின் இரைச்சலைப் பொருட்படுத்தாது சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளை மட்டும் கண்களால் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறியபடி இருந்தேன்.
எங்காவது செல்லவேண்டுமென யோசித்தவன் எங்கேயென யோசிக்கவில்லை. மனம் அதனை நினைக்கவுமில்லை. வெளியே போனால் போதும். இப்போதைக்கு கண்களின் முன்னே வேறெந்த பிரச்சனைகளும் வந்து நிற்கப்போவதில்லை. காதுகளில் யாருடைய குரலும் வந்து விழப்போவதில்லை. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் இடத்தில் நான் இல்லை.
வாசுதேவநல்லூருக்குள் நுழைகையில் மணி நள்ளிரவு இரண்டரைக்கும் மேல். உலகா மாமா அனுப்பிவைத்திருந்த முகவரியையும், இருப்பிடத்தையும் வைத்துக் அவர் வசித்த தெருமுனை வரையிலும் சென்றுவிட்டு அவரை அலைப்பேசியில் அழைத்தேன்.
“மாமா, நீங்க அனுப்புன லொக்கேசன வெச்சு தெரு வரைக்கும் வந்துட்டேன். வீடு தெரியல வெளில வாங்க “
“இர்ரா இர்ரா. ந்தா வரேன்”
தெருமுனையிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளி ஒரு பெரிய மூன்று மாடி வீட்டின் கேட்டைத் திறந்து, காதில் அலைப்பேசியை வைத்து தலைசாய்த்தபடி இடுப்பில் வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வெளியில் வந்தார். என்னைப் பார்த்துக் கையசைக்கவும், அழைப்பைத் துண்டித்துவிட்டு வண்டியை அவரருகில் சென்று நிறுத்தினேன்.
”என்ன கெளம்பாம இருக்கீங்க. சட்டுன்னு ரெடியாயி வாங்க அப்டியே போவோம்”
“எலேய் மணி என்னாகுது. நீ வேற. வந்து கம்முன்னு படுத்து தூங்கு. காலைல எழுப்புறேன்”
“இதுவேறையா..சரி. உங்க ப்ளான் தான. நீங்க சொல்றபடி தான்”
வீட்டின் முன்னறையில் பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் ஒரு கனமான போர்வை விரித்து தலையணை வைக்கப்படிருந்தது. அறையின் ஓரத்தில் பாதி தீர்ந்த்து போன ஸ்காட்ச் பாட்டில் ஒன்றும், ஒரு கண்ணாடிக் குவளையும், தண்ணீர் போத்தலும் இருந்ததைக் கண்டவுடன் அவர் இப்போது பயணப்படவேண்டாம் என்றதற்கான காரணம் புரிந்தது. குடும்பத்தினர் அனைவரும் எங்கோ வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார். என் காதில் எதுவும் விழவில்லை. கவனித்து பதில் சொல்கிற மனநிலையும் இல்லை.
பல வருடங்கள் ஆஃப்ரிக்காவில் கப்பல் உடைக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்து பின்பு சவுதியில் எரிஎண்ணெய்க் கிணறுகளிலும், எரிவாயு நிறுவனங்களிலும் வேலை செய்து சம்பாதித்து ஆயிரங்களில் தொடங்கிய வாழ்க்கையை கோடிகளில் சேர்த்து வைத்துவிட்டு இப்போது பெயருக்கேற்றார் போல உலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். டெரிலின் வேஷ்டியும் கசங்கல் காட்டன் சட்டையுமாக, ஆளைப் பார்த்தால் வெகு சாதாரணமாகத் தான் தோன்றும். மற்றபடி அவருடைய குடும்பம் குழந்தைகள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பேசிக்கொண்டதில்லை.
உடைமாற்றி, துணிப்பையினை தலையணை அருகே வைத்து விட்டு முகம் கழுவி வந்து பாயில் சரிந்தேன். முதுகிலும் நெஞ்சிலுமாய் பாறாங்கற்களை சுமந்து கொண்டிருந்தாற்போல் வலித்தது.
“நீ இங்க தூங்குடா. நான் பக்கத்து ரூம்ல தான் இருப்பேன். காலைல எழுப்புறேன். குட்நைட்”
ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு அறைக்கு வெளியே சென்று கதவை சாத்திவிட்டுச் சென்றார். அரையிருளில் அமைதியடைந்து உறங்கவேண்டிய மனம் சஞ்சலப்பட்டு சத்தமிட்டு அலைபாய்ந்தபடியே இருந்தது. உண்மையில் எனக்கு என்னதான் வேண்டும் ? இந்தக் கேள்வி உள்ளுக்குள் எதிரொலித்தபடியே இருக்க, அதற்கான பதிலைத் தேடும் முயற்சி பலனற்றுப் போனது. அந்தந்த நேரத்தில் அதனை முடிவு செய்துகொண்டால் போதாதா ? எல்லாவற்றையும் எல்லாருக்காகவும் முன்கூட்டியே யோசிக்க வேண்டுமா ? நான் எதற்கு பிறருக்காகவும் பிறரைப்பற்றியும் யோசிக்க வேண்டும். உடல் களைத்திருக்க உள்ளமும் ஓடியலைந்து ஓய்ந்துவிட மெல்ல மெல்ல இரைச்சல்கள் மறைந்து கண்ணயர்ந்தேன்
“தம்பு… எந்திரி. குளிச்சுட்டு சட்டுன்னு கெளம்பு. நான் ரெடி. போவோம்”
மாமாவின் குரல் கேட்டு அரைவிழிப்பு நிலையில் எழுந்தமர்ந்து அருகிலிருந்த அலைப்பேசியில் நேரம் பார்த்தேன். ஏழேகால். சோம்பல் முறித்து எழுந்து குளித்துக் கிளம்பி வீட்டிற்கு வெளியே வருகையில் இன்னும் முழுதாக விடியாதது போன்ற மந்தமான வானிலை காணப்பட்டது. அவர் கொணர்ந்து நீட்டிய டீயைக் குடித்தபடி கேட்டேன்.
”இப்பவாச்சும் சொல்லுங்க. எங்க போறோம். எந்த ரூட்டு”
“அதெல்லாம் போவும்போது நீயே பாத்துக்க.”
வீட்டைப் பூட்டிவிட்டு அவரவர் மோட்டார் சைக்கிளில் இருவரும் கிளம்ப, அடுத்த நாற்பது நிமிடங்களில் கடையநல்லூரைத் தாண்டி, பின்பு செங்கோட்டையை நெருங்குகையில் குற்றாலத்திற்கு தான் போகப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மாமா வண்டியைத் திருப்பாமல் தென்மலை நோக்கிச் செல்ல எனக்கு எங்கு செல்கிறோம் என்பது கொஞ்சம் புலப்பட்டது. முன்னால் கொஞ்சம் நிதானமாக சென்றுகொண்டிருந்த மாமாவின் வண்டியை வேகமாகத் தாண்டி சென்று, அவரது வண்டியின் வேகத்தை அதிகரிக்கும்படி சைகை செய்ய அவரை புத்தரைப் போல் கையுயர்த்தி தலைக்கவசத்தையும் இஞ்சின் உறுமலையும் தாண்டி கேட்கும்படி உரக்கச் சொன்னார்
“டேய் தம்பீ… பொறும”
எனக்கு எரிச்சலாக இருந்தது.
“நான் முன்னாடி போறேன் நீங்க வாங்க” என்றுவிட்டு வண்டியை முறுக்க, அவருடைய வேகத்திலேயே பின்தொடர்ந்தார்.
வர்க்கலா ஊர்ச்சாலையில் நுழையும்போது மதியத்திற்குமேல் ஆகியிருந்தது. சாலையின் ஒரு பக்கம் சீரான ஓட்டத்தில் காயலும் மறுபக்கம் ஆர்ப்பரிக்கும் அலைகடலுமாக இருக்க, மதிய வெய்யிலைப் பொருட்படுத்தாது மனம் கொக்கரித்தது. வண்டியை ஓரம் நிறுத்தி கொஞ்சம் இளைப்பாற, பின்னே வந்த மாமாவும் சேர்ந்து கொண்டார்.
”எங்க தங்குறோம் “
“ஏதாவது பொம்பளப் புள்ளைய கூட்டிட்டு வந்திருந்தேன்னா நல்ல ஸ்டார் ஹோட்டல்ல தங்கிருப்பேன். நீதான. அதான் பீச்சுக்கு பக்கமா ஒரு பழைய ஷேக்ல சொல்லி வெச்சுருகேன். அது போதும்”
“ச்சைக். கஞ்சப்பய மாமா “
சிரித்துக் கொண்டோம். அடுத்த பதினைந்து நிமிடங்களில் அறைக்கு வந்து ஆளுக்கொரு பக்கம் விழுந்து உறங்கி, பின்பு மாலை எழுந்து கிளம்பி கடல்பார்க்க அமைந்திருந்த ஓர் உணவகம் சென்று அமர்ந்தோம். அவர் தனக்கு இரண்டு போத்தல் பியர் சொல்லி கொண்டார். எனக்கு வழக்கம் போல் தொடுகறி மட்டும் சொல்லிகொண்டேன். அரபிக் கடல் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. அலைகளும் காற்றும் உரசும் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருக்க, அது விடுமுறைக் காலம் இல்லையென்பதால் பெரிதாக ஆட்கள் நடமாட்டமின்றி கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது.
”இப்ப சொல்றா. என்னா உன் பிரச்சனை “
“வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு தேட்றாங்க மாமா. மேட்ரிமோனில பாத்த ஒரு பொண்ணு; எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு. பேசிப்பாத்து செட் ஆகும்னு தோணுச்சு. அவளுக்கும் அப்டித்தான்னு நெனச்சேன். நாங்க அவங்க வீட்டுக்கு போனப்பவும் பாஸிட்டிவ்வா தான் பேசுனாங்க. ஆனா அவங்க நம்ம விட்டுக்கு வந்தப்ப. ஆ ஊன்னு ஆயிரத்தெட்டு கேள்வி. இது இருக்கா, அது இருக்கா. எவ்ளோ சம்பளம், எவ்ளோ கடன், ஃப்யூச்சர் ப்ளான் என்ன, ஏன் மேல படிக்கல, ஏன் இன்னும் வீடு வாங்கலன்னு அடுக்கிட்டே போனாங்க. அவ்வளவு கோவம் வந்துச்சு. ஆனா எதுவும் காட்டிக்காம அமைதியா பதில் சொல்லிட்டேன். ஏன் இவனுவள்லாம் இப்டி இருக்கானுவொ ? பொண்ணப் பெத்தா என்னா வேணா பேசலாமா ?”
“..ம்ம்ம் சரி. இதானா ? நாங்கூட என்னவோன்னு நெனச்சேன்.”
“என்ன இப்டி சொல்றீங்க. பொண்ணுக்கும் எனக்கும் டேஸ்ட் ஒத்துப்போனா போதாதா ? இவங்க கேக்குறதெல்லாம் போகப்போக அப்டியே வாழ்க்கைல ஒன்னொன்னா வரத்தானே போகுது. எல்லாம் வாங்கத்தானே போறேன்”
”சரிடா பொண்ணப் பெத்தவங்க இதெல்லாம் கேக்க தான் செய்வாங்க. நானா இருந்தாலும் இதெல்லாம் கேப்பேன் தான். அதுல உனக்கு கோவம் வந்துருச்சா ? இதுல என்ன ஈகோ உனக்கு ?“
எனக்கு அழுகை வருவது போலிருந்தது. இவருக்கு நம்மைப் பற்றி என்ன தெரியும். நான் எவ்வளவு உழைத்து, எங்கிருந்து இங்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
“ஈகோல்லாம் இல்ல. ரொம்ப கேள்வி கேட்டதும் நம்ம மேல நம்பிக்கை இல்லையோன்னு கோவம் வந்துருச்சு. இவங்கன்னு இல்ல, ஊருக்குள்ள எல்லா பேரும் நம்மள கேள்வி கேட்டுகிட்டே இருக்கானுங்க. நான் ஒன்னுந்தெரியாதவனா ? இல்ல பொறுப்பில்லாதவனா ? வாழ்க்கைல எல்லாத்தையும் முன்கூட்டியே யோசிச்சு வெச்சு, இவனுங்க கேக்குற கேள்விக்கெல்லாம் கையில பதில ரெடியா வெச்சுருக்கனுமா என்ன ? நான் பாட்டுக்கு சுதந்திரமா என் விருப்பத்துக்கு வாழ்க்கைய வாழ்ந்துட்டுப் போறனே என்ன இப்ப”
படபடவென சொல்லி முடித்ததும் கொஞ்சம் இலகுவாக இருந்தது. ஆனால் மெல்ல எழுந்த கோபத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமலிருக்க முடியவில்லை.
“சரி டென்ஷனாகாத விடு. வேற ஏதும் சாப்புட்றியா? இந்த விஷயத்த பேசப் புடிக்கலைன்னா வேற ஏதாவது பேசுவோம். கடசியா ஒன்னு மட்டும் சொல்றேன். உண்மையிலேயே சொல்லனும்னா உனக்கு எப்ப என்ன வேணும்னே உனக்குத் தெரியல. அதுதான் உன்ன சுத்தி இருக்கவங்கள ஒரு சந்தேகத்துலேயே வெச்சிருக்கு. நீயும் எல்லாத்தையும் போட்டு கொழப்பியடிச்சுட்டு சுத்திட்டு இருக்க“
இயலாமையும் அவமானமும் என்னை திணறடித்தன. உலகா மாமாவை எரித்து விடவேண்டும்போலக் கோபம் வந்தது.
“எனக்கு டயர்டா இருக்கு. நான் ரூமுக்குப் போறேன்”
அவருடைய பதிலுக்குக் காத்திராமல் அறைக்கு வந்து சுருண்டு படுத்தேன். அறைக்கு வெளியே கடலலைகளின் ஓயாத சீற்றமும் இரைச்சலும் என் தலைக்குள் கேட்கத்துவங்கின. யாராரோ கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் பேரலையாய் உருமாறி என்னை இழுத்துச் செல்ல முயன்றபடி இருக்க ஒவ்வொரு முறையும் நிலைதடுமாறி நீருக்குள் மூழ்கி மூச்சடைத்து தத்தளித்து மேலே வரும்போதும் வேறொரு பேரலை என்னைத் துரத்திவந்தது. கால்களுக்கு கீழே மண்ணும் தரையும் மொத்தமாக நழுவிப்போக பிடிமானம் ஏதுமற்று அலைகளையே பற்றிக்கொண்டு மேலெழ முயல்கையில் நிலைகுலைந்து கிட்டத்தட்ட மூச்சு நின்றுவிட்டபோது நான் அதிர்ந்து கண்விழித்தேன். அறையின் மறுமூலையில் மாமா குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். கைக்கடிகாரத்தில் பார்த்தால் மணி அதிகாலை மூன்றே முக்கால். வியர்வையில் நனைந்த பனியனை மாற்றி, தண்ணீரைக் குடித்துவிட்டு திரும்ப வந்து படுத்தேன்.
ஜன்னல் வழி வெய்யில் கீற்று முகத்திலறைய, கண்விழித்தால் மாமா அறையிலிருந்து கிளம்பிவிட்டிருந்தார். அவருடைய எண்ணுக்கு அழைத்தேன்.
“ குட்மார்னிங் மாமா. எங்க இருக்கீங்க? பீச்லயா ?
“குட்மார்னிங்டா. நேத்து சாயங்காலம் உக்காந்துருந்தோம்ல அந்த பாருக்கு பக்கத்துக் கடை, இங்க இங்க்லீஷ் ப்ரேக்ஃபாஸ்ட் நல்லாருக்கும். கெளம்பி வா”
“தோ ப்ரஷ் பண்ணிட்டு வரேன்”
நான் கிளம்பி அங்கு சென்று சேர்கையில் சாப்பிட்டு முடித்து ஒரு போத்தலுடன் கடைக்கு எதிரே கடல்பார்த்தபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கையசைத்தார்.
“நீ சாப்ட்டு எறங்கி இங்க வா”
பரபரப்பாக உண்டு முடித்து கடற்கரையில் இறங்கினேன். கடுமையான வெயிலில்லைதான். ஆனாலும் கடல்காற்றைத் தாண்டிய கசகசப்பு. அருகில் ஒரு மணல் திட்டில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்து கடலை வெறித்தபடி இருக்க, அவரே மீண்டும் பேசினார்.
“என்னடா நேத்து சொன்னதுக்கு ஏதும் அஃபெண்ட் ஆயிட்டியா ?”
“இல்ல மாமா. சுத்தி எல்லாரும் காயப்படுத்துறாங்கன்னுதான் உங்க கிட்ட புலம்புனேன். நீங்களும் அதே மாதிரி பேசவும் கொஞ்சம் கோபம் வந்துருச்சு”
“சரி அதவுடு. டாபிக்க மாத்துவோம். இந்த ஆம்பளப் பயலுகள்ட்ட என்னத்த சுவாரஸ்யமா பேசுறது. எல்லாம் என் நேரப்பூனா“
“மாமா, ப்ளீஸ் ! “
“சரிடா. வாழ்க்கைல ஒனக்கு நடந்த சுவாரஸ்யமான விஷயம் எதாச்சும் இருந்தா சொல்லு ? “
“பெரிய சுவாரஸ்யம்லா இல்ல. ஒன்னு ரெண்டு இண்ட்ரஸ்டிங் கேரக்டர்கள வெவ்வேற காலகட்டத்துல சந்திச்சு பழகிருக்கேன். அவ்ளோ”
“இண்ட்ரஸ்டிங் கேரக்டர்னா ? பொண்ணுங்க தானே”
”யோவ் மாமா. ஆமாம் பொண்ணுங்க தான்”
“அவங்க யாரோடயாவது இப்ப காண்டாக்ட்ல இருக்கியா ?”
“இருந்தா நான் ஏன் அரேஞ்ச்ட் மேரேஜுக்கு ஓக்கே சொல்லி தேடப்போறேன்”
“அப்போ லவ் ஏதும் பண்ணதே இல்லையா நீ ? “
“லவ்வுங்குற கான்செப்ட் மேல எல்லாம் நம்பிக்கையே போயிருச்சு. காலேஜ் படிக்கும்போது இருந்த ரிலேஷன்ஷிப். ரொம்ப இழுத்துப் புடிச்சுப் பாத்தேன். ஒரு கட்டத்துக்கு மேல அவங்க ஃபேமிலி ஒத்துக்கவே மாட்டேன்னு ரொம்ப தகராறு பண்ணவும் இதுக்கு மேல முடியாதுன்னு உட்டுட்டேன்”
“ஹ்ம்ம்.. அப்போ படிச்சு முடிச்சு இத்தன வருஷமா வேல பாக்குறியே அங்க யாரும் செட்டாவலையா ?”
“என்னத்த செட்டாவுறது. நாந்தான் ஒன்றரை வருஷத்துக்கு ஒருவாட்டி கம்பெனி மாறிடுவனே. அப்புறம் எங்கிருந்து பாத்துப் பழக”
அவர் அடுத்த போத்தல் பியரைத் திறந்து கோப்பையை நிரப்பியபடி தொடர்ந்தார்
“பேஷனேட்டா உன் வாழ்க்கைல என்னதாண்டா பண்ணிருக்க ?”
“ட்ராவல் பண்ண ரொம்ப புடிக்கும். தோ உங்களப் பாக்க கெளம்பி வந்தேன்ல இந்த மாதிரி அடிக்கடி எங்கேயாச்சும் கெளம்பிப் போயிருவேன். கொஞ்சங் கொஞ்சமா பனி விலகுனாப்ல மனசு ஃப்ரீயாகி எல்லா பிரச்சனையும் தீந்துடும்”
“மயிர்ல ஃப்ரீயாவும். நீ கோச்சுக்கிட்டாலும் பரவால்ல நாஞ்சொல்றத குறுக்கப் பேசாம கேட்டுக்க. ஒன்னோட பிரச்சன என்னான்னே தெரியாம சுத்திட்டு இருக்க. வாழ்க்கைல எது மேலயாவது பிடிப்பு வேணும்டா. கஷ்டப்பட்டு மேல வந்தேன்னு சொல்ற. ஆனா எதுலயுமே கமிட்மெண்ட் இல்லாம இருக்க. உண்மைக்கு ட்ராவல்னு நீ சொல்லிக்கிறதெல்லாம் பச்சையான எஸ்கேப்பிஸம். உனக்கு முன்னாடி இருக்க பிரச்சனைகள்ல இருந்து தற்காலிகமா தப்பிச்சு ஓடிக்கிட்டே இருக்க. தூரமா வந்துட்டா பிரச்சனையெல்லாம் தீந்துடாது. திரும்பப்போகும்போது எல்லாம் அப்டியேதா இருக்கும். நீ ஓடுறது எனக்கெப்புடி தெரியும்னு கேட்டீன்னா, அதெல்லாம் தெரியும்டா. ஏன்னா நானும் உன்ன மாதிரியே ஒரு காலத்துல அங்க இங்கன்னு ஓடிட்டு இருந்தவன் தான். நின்னு நிதானிச்சு திரும்பிப் பாக்கும்போது காலம் ஓடிப்போச்சு. ஆனா என்ன ஒன்னு கைநெறைய காசு இருந்துச்சு. அதனா கால ஊணி நின்னுட்டேன்.”
”குடும்பத்துல இருக்கிறவனுகளே நம்ம முதுகுக்கு பின்னாடி வேற மாதிரி பேசுவானுங்க. எங்கெங்கேயோ என்னென்னமோ பண்ணும்போது என் கூட இருந்த ஃப்ரெண்டு கடைசில என்கிட்டயே லட்சக்கணக்குல ஏமாத்துனான். அவன்ட்டபோயி ஏண்டா இப்டி செஞ்சன்னு கேக்க எனக்கு மனசில்ல. மயிராப் போச்சு காசுதான சம்பாரிச்சுரலாம்னு ஒரு வைராக்கியம். காசு எல்லாப் பிரச்சனையையும் தீத்துருச்சான்னு எனக்குத் தெரியாது. ஆனா அப்போதைக்கு எனக்கு காசுதான் தேவைன்னு மட்டும் தெளிவா தெரியும்.”
என் மீதான பிறரின் எதிர்பார்ப்புகளையும், அழுத்தங்களையும், கேள்விகளையும் இவரிடம் எப்படி விளக்கிச் சொல்லி புரியவைப்பது? நினைக்கவே களைப்பாயிருந்தது.
இப்போது என்னிடம் ஏதும் பதிலில்லை. பேச நா எழவில்லை. கோபம் மொத்தமும் என்மீதே தோன்றியது. அந்த நொடியில் என்னை நான் அவ்வளவு வெறுத்தேன். கடலைப் பார்த்தபடி கண்கள் நிலைகுத்தியிருக்க மாமாவின் முகத்தை எதிர்கொள்ளத் துணிவின்றி உட்காந்திருந்தேன்.
“டேய். இங்க பாரு. கடல்ல எறங்குறியா”
”இல்ல, வேணாம்”
“சொல்றேன்ல சும்மா போ. எறங்கு”
உண்மையில் எதிரே இத்தனை ஆரவாரமான ஆழமான கடலிருந்தும் அதில் கால் நனைக்கும் எண்ணம் கூட எழவில்லை. இவர் சொன்னதற்காக எழுந்து கடல்நோக்கி நடந்தேன். கணுக்கால் வரையிலும் நீர் சூழ நின்றேன். அலைகள் மெல்ல மெல்ல என்னை அழைப்பதாகத் தோன்றியது.
“லேய். இன்னும் கொஞ்சம் உள்ள போ. இந்தக் கடலாயி சீறமாட்டா. தன்மையாதான் இருப்பா”
இப்போது இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றேன். நீரளவு முழங்காலுக்கு மேல் இருக்க, அலையடிக்கும் பொழுது இடுப்பளவு நீர் சூழ்ந்தது. கொஞ்சம் மனக்கலக்கத்துடன் தயங்கி நின்றேன்.
”மாமா. இது போதும். இதுக்கு மேல வேணாம். எனக்கு நீச்சல் தெரியாது”
“தம்பு.. நாந்தான் இருக்கேன்ல. ஒன்னுன் ஆகாது எறங்கு. பாத்துக்குறேன்”
இப்போது நான் இறங்குகிறேனா அல்லது கடல் இழுக்கிறதா எனத் தெரியாமல் இன்னும் உள்ளே சென்றேன். மார்பளவு நீர். அலையடிக்கையில் கழுத்தளவு தொட்டுச் சென்றது. கால்கள் புதைவது போலத் தோன்றியது, கடலின் பாரம் மொத்தமும் நெஞ்சில் இறங்கினாற்போல் கனக்க, வாழ்வில் முதன் முறையாக வாய்விட்டு வெடித்து அழுதேன். அடுத்த அலையொன்று முகத்தில் மோதியது; கண்ணீர் மொத்தமும் கடல்நீராய்க் கரைய, கடலிடம் என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தேன்.
இப்போது கண்களைத் திறந்து கடலுக்கு அப்பாலான தொடுவானத்தை ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடிக் கொள்ளவும் ஒரு பேரலை என் தலைக்கு மேல் உயர்ந்து வரவும் சரியாக இருந்தது. கால்கள் தரையில் பாவாமல் மிதக்க, எனக்கு ஒரு நொடி மொத்த வாழ்வும் கண்முன்னே வந்துபோக,என்னை முழுதாக மூழ்கடித்துப் புரட்டிப்போட்டு இழுத்தது அந்தப் பேரலை. கடல்நீரின் உப்பு, மூக்கிலும் வாயிலுமாக நெஞ்சுக்குள் நுழைய எரிச்சலில் கண்கள் திறக்க முடியாமல் என்னை கடலுக்குள் முழுதாக ஒப்புக்கொடுத்த வேளையில் யாரோ கொத்தாக என் தலைமயிரைப் பிடித்து இழுத்தாற் போல் தோன்ற அடுத்த நொடி எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு கடற் மணலில் விழுந்தேன்.
“போதும் வாடான்னு சொன்னனே. காதுல விழலயாடா”
பேசிபடியே மாமா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
கடலின் சத்தமோ, காற்றின் சத்தமோ கேட்காத, மரணம் போலொரு பேரமைதி. சொற்களோ, காரணங்களோ. விளக்கங்களோ, கேள்விகளோ அற்றுப் போனாற் போலிருந்தது. ஆனால் முன்பிருந்த வெறுமை மறைந்திருந்தது.
மதிய உணவை முடித்து அறைக்கு திரும்பும்வரையிலும் மாமாவும் நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் குளித்து முடித்து கிளம்பியபடி துணிகளை பையில் அடைக்கும்போது தான் மாமா கண்விழித்தார்.
“என்னப்பா ? இப்பவே கெளம்புறீங்களா ?”
“ஆமா மாமா. நாளைக்கு ஆஃபிஸ் இருக்கு”
”ரைட்டு.நான் இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு ஊருக்குப் போறேன். போகும்போது அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணுங்க. பத்திரமா போய்ட்டு வாங்க”
எழுந்து வந்து முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.
“ஓக்கே மாமா” அவருடன் கைகுலுக்கி விடைபெற்றேன்.
மீண்டுமொருமுறை அவரின் முகம்பார்த்து அவரது கையைப் பற்றிகொண்டேன். கண்கள் கலங்கினாற் போலிருந்தது
“அட நீ வேற” தோளோடு அணைத்துக் கொண்டார்
வர்க்கலாவை விட்டு வெளியே வருகையில் சாலையின் ஒரு பக்கம் காயலும் மறுபக்கம் கடலுமாய் இருக்கிற இடத்தில் ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி இருபக்கமும் பார்த்து தலைசாய்த்துவிட்டு புறப்பட்டேன். வரும்போது இருந்து கண்மூடித்தனமான வேகம் இப்போது தேவைப்படவில்லை. வழக்கத்தைவிட பொறுமையாகவே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். செங்கோட்டையில் வண்டியை நிறுத்தி நாட்டுக்கோழியும் பரோட்டாவும் சாப்பிட்டு மறுபடி இரவு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிறுத்தி சின்னச் சின்ன பொட்டலங்களாய் ஒன்றரை கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டு திருமங்கலத்தில் ஒரு ரோந்துக்காவலருடன் பேசியபடி தேநீர் குடித்து, திருச்சிக்கு வெளியே நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களுக்கான நிறுத்தகத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்து மறுபடி பயணத்தைத் தொடர்ந்து சென்னையின் எல்லைக்குள் நுழையும் முன்பே விடிந்துவிட்டிருந்தது. அதிகாலையும் ஊருக்குள் நுழைந்து பயணிகளை இறக்கிவிடும் பேருந்துகளின் அணிவகுப்பைக் கடந்து வீட்டின் அருகில் வருகையில், ஒர்ஷாப்பை திறந்து வண்டிகளை இறக்கி நிறுத்திக் கொண்டிருந்தவனின் அருகே வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன்.
“மார்னிங் ண்ணா.. அதுக்குள்ள ரிட்டன் வந்தாச்சா”
“ஆமா வேல இருக்கு. வண்டிய விட்டுட்டுப் போறேன். பொறுமையா பாத்து எல்லா வேலையும் முடிச்சுட்டு போன் பண்ணி சொல்லு. வந்து எடுத்துக்குறேன்”
பையை எடுத்து தோளில் மாட்டிக் கொள்ளும் முன்பு இரண்டு பால்கோவா பொட்டலங்களை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடந்தேன்.
”தாங்க்ஸ்ண்ணா ! ஒருவழியா மனசுவந்து வண்டிய வுட்டுட்டீங்க”
சிரித்தபடி அலைபேசியைத் திறந்து பல மாதங்களாக பதிலளிக்காத சில குறுந்தகவல்களைப் படித்து பதில் சொல்லிக் கொண்டே வீட்டையடைந்து அழைப்பு மணியை அழுத்த அப்பா வந்து கதவைத் திறந்தார்
“வாப்பா எப்பாடி. பைய இங்க குடு”
“அம்மா ஏந்திரிக்கலையாப்பா “
”எந்திரிச்சுட்டாங்க. மூஞ்சு கழுவிட்டு வர்ரேன்னு போயிருக்காங்க. சித்தி சித்தப்பால்லாம் நேத்தியே கெளம்பிட்டாங்க”
”சரிப்பா எனக்கு தூக்கம் வருது. போய் தூங்குறேன். அப்புறம் இந்தக் கல்யாண விஷயமா இப்போதைக்கு உடனே ஏதும் முடிவெடுக்க வேண்டாம்னு இருக்கேன்ப்பா. வந்தவங்கள்ட்டயும் நமக்கு விருப்பமில்லைன்னு தகவல் சொல்லிரலாம். ஒரு ஆறு மாசம் போகட்டும். புதுசா தேடவேண்டாம். நானே சொல்றேன்”
“நல்லதுப்பா. நீ யோசிச்சு முடிவெடுத்தா சரிதான்”
அறைக்குள் நுழைந்து கட்டிலில் சாய்கையில் சன்னலின் வழியே காலையின் வெளிச்சமும் வெம்மையும் நிறைந்திருந்தது.
***
சுதர்சன் ஹரிபாஸ்கர் – மின்னஞ்சல்: readridewrite@gmail.com

