தென்றல் சிவக்குமார்
மருத்துவமனைக்கு வெளியில் சுமார் ஐநூறு பேர் நின்றிருந்தார்கள். சாலையின் மறுபுறத்துக் கடைகளின் காம்பவுண்டு சுவர்கள் மீதெல்லாம் கேமராக்கள் நெருக்கியடித்து நின்றிருந்தன. வாரம் ஒருமுறை பயணிக்கும் அதே சாலை; இந்தச் செய்தியும் தொடர்ந்து கவனிக்கும் ஒன்றுதான்; ஆனால், இரண்டையும் இதுவரை இணைத்துப் பார்த்ததே இல்லை. கண்களைத் திருப்பு, ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு என்ற அறிவின் கட்டளையை மீறி, மற்ற கண்களுக்குத் தென்படாமல் தப்பிப் பறக்கும் அந்த ஆன்மா என் கண்களைத் தழுவுமோ என்று பரிதவித்தபோது, பாலத்தின் பக்கவாட்டுத் தொங்கல் சுவர் தென்பட்டது.
பாலத்தில் ஏறிப் போகவேண்டுமே? இப்படிப் போனால் எவ்வளவு தூரம் சுற்றவேண்டுமோ? எப்படித் தவறியது? யாரையாவது வழி கேட்கலம் என்று நினைத்தபடி, பக்கவாட்டில் தென்பட்ட சிறிய தெருவுக்குள் வண்டியைத் திருப்பினேன். ‘நிர்மலா ட்ரெஸ்ஸஸ்’ என்ற போர்டு தென்பட்டது. சட்டென்று ஒரு ஆசுவாசம் பரவியது. வழி தவறிவிடவில்லை. இந்தக் கடைக்கு ஒருமுறை பிந்துவுடன் அவள் வழி சொல்லச் சொல்ல இதே வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
வண்டியைச் சாய்த்து நிறுத்திவிட்டு, இறங்கி நெல்சன் மாணிக்கம் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவ்வளவு பெரிய சாலை மக்கள் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. டபுள் மாஸ்க் அணிந்த போக்குவரத்துக் காவல் குழுவினர் மிடுக்காக, அதட்டி, மிரட்டி, நல்லதனமாக, மன்றாடி, கடைசியில் தாங்களும் கண்ணீரைத் துடைத்தபடி மெல்ல மெல்ல கூட்டத்தைக் கலைத்துக்கொண்டிருந்தனர். மருத்துவமனையைச் சுற்றிய கூட்டம் சிந்திச் சிதறி இந்தச் சந்துக்குள்ளும் கொஞ்சம் பேர் நின்றிருந்தார்கள். நிர்மலா கடையில் வேலை செய்யும் பெண்கள் நான்கு பேரும் வாசலில் மௌனமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தவள் நீலச் சேலை உடுத்தியவள் மேல் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். எதற்காக நடக்கிறேன் என்று எனக்குத் தெரியாததைப் போலவே எதற்காக நிற்கிறோம் என்று இந்தப் பிள்ளைகளுக்கும் தெரியாதுதானே. அத்தைக்கும் செய்தி தெரிந்திருக்கும். அவ்வளவு ரசித்துக் கொண்டாடிய குரல்.. சீக்கிரம் அவ்விடம் போய்ச் சந்திக்கலாம் என்று நினைத்துக்கொள்வாரோ என்னவோ.. ‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும்… அணையா விளக்கே…’ கடவுளே!
அனிச்சையாகக் கன்னத்தைத் துடைத்தபோதுதான் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பது உறைத்தது. இப்படித் தருணங்களில் உடனே பரவும் கூச்சத்தை இப்போது காணவில்லை. சாலை வரை நடக்கும் எண்ணம் அப்படியே வடிந்தது. திரும்பி நடந்து, வண்டியைக் கிளப்பிக்கொண்டு சாலைக்குள் திரும்பியபின், அனிச்சையாக ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தேன். ஓர் இளைஞன் கண்ணீர் பொங்கப் பொங்க நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தான். அவன் தலையைக் கோதி, விசிறிவிட வேண்டும் போலிருந்தது. இப்படி எத்தனை போலிருந்ததுகளை எத்தனை எளிதாக வண்டியை நகர்த்திக் கடந்துவிடுகிறோம்.
***
பிருந்தா அத்தையை பேலியேட்டிவ் கேர் சென்டரில் சென்று முதல் முறை பார்த்தபோது வாடி என்று சொல்லாமல் வாம்மா என்றார். கையை வயிற்றின் மீது கட்டிக்கொண்டு பேசினார். முகத்தில் புன்னகை இல்லாதது பரவாயில்லை, அதை நான் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஆனால் கண்களில் இருந்த அந்நியமும், எச்சரிக்கை உணர்வும் என்னைச் சீண்டின. மறுமுறை போகக் கூடாது என்ற முடிவு தன்னால் ஐந்தாம் நாள் தளர்ந்து, ஆறாம் நாள் காணாமல் போய், ஞாயிற்றுக்கிழமை மறந்தே போய்விட்டது.
மூன்றாம் வாரம் போனபோது உம்மென்று உட்கார்ந்துகொண்டு ஐந்து நிமிடங்கள் நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருந்தார். பிறகு, “ஏண்டி, க்ரௌண்ட் ஃப்ளோர்ல இருக்கற நிர்மலாவ அவங்க பசங்களே கொண்டாந்து விட்டாங்களாமே, சொந்தப் பசங்களும் இப்படிப் பண்ணுவாங்களா?” என்றார். கண்ணில் அந்நியத்தன்மைக்கு பதில் வியப்பும் தீவிரமும். நான் உடைந்து அழுதேன். அத்தையை அவருடைய மூத்த தாரத்துப் பிள்ளைகள் அங்கே அனுப்பியிருந்தார்கள். அழுது முடிக்கும்வரை அப்படியே இருந்தார். நான் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவர் கட்டிலின் பக்கத்திலிருந்த மேஜையிலிருந்து தண்ணீர் சொம்பை எடுத்தேன். அத்தையால் அவ்வளவு விரைவாக எழுந்து வந்து அத்தனை வலுவாக என் கையிலிருந்து தண்ணீரைப் பிடுங்க முடியும் என்று நான் துளியும் எண்ணவில்லை. இப்போது யோசித்தாலும் அதை நம்பமுடியவில்லை. ஒரு கணத்தின் முடிவில் தண்ணீர் அவர் கையில் இருந்தது. “எரும மாடே இவ்ளோ தூரம் வரியே, தண்ணி பாட்டில் கொண்டுவர மாட்டியா? நாப்பத்து மூணு வயசாச்சுல்ல?” அத்தை குரல் அழுகையை நோக்கி நகர, அப்போதும் அவர் என் வயதைத் துல்லியமாகச் சொன்னதை உணர்ந்ததும் நான் வெடித்துச் சிரித்தேன். கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தேன்.
“பைத்தியம், அழுத ஒடனே சிரிக்கறத பாரு, வயச சொல்லிட்டேன், அதான?” நான் தண்ணீரை விழுங்க முடியாமல், வாயைக் கையால் மூடிக்கொண்டு மேலும் சிரித்தேன். “துப்பித் தொலைக்காத… பொற ஏறப்போவுது…” என் பிருந்தா அத்தை! எனக்கு மேலும் மேலும் முகம் மலர்ந்தது, அத்தைக்கும். அதன் பிறகு, எத்தனாவது வாரமாக வருகிறேன் என்று எண்ணுவதை வலுக்கட்டாயமாகத் தவிர்த்து, பயிற்சி செய்து மறந்தேன்.
***
அத்தை கொஞ்சம் பேசியதுமே மூச்சு வாங்கியது. பக்கவாட்டு மேசை மேலிருந்த அவருடைய தண்ணீர் சொம்பை எடுத்துக் கொடுத்தேன். வேண்டாம் என்று மறுத்துத் தலையசைத்தார். ஆனால் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டார். தண்ணீரைப் பார்க்கப் பிடிக்காததைப் போல முகத்தைச் சுளித்தார்.
“சொர்க்கத்துல கச்சேரி ஆரம்பிச்சிருக்கும்… செல்வி சந்தோஷமா கேட்டிட்டிருப்பா… இல்ல?”
“ஃபோன்ல எதாச்சும் பாட்டு போடவா அத்த?”
“இன்னிக்கு வேணாம்… அடுத்த வாரத்துலேருந்து…” தான் சொன்னதைக் கேட்டு தானே திகைத்ததைப் போல பேச்சை நிறுத்தி, தண்ணீர் குடித்தார்.
“நாளைக்கும் வரவா?”
“ச்ச… அதெல்லாம் வேணாம்… அடுத்த வாரத்துலேருந்து கேக்கறதுக்கு திராணி இருக்கற வரைக்கும் நீ வரப்பலாம் பாட்டு கேப்போம், என்ன…?”
“ம்ம்… சௌம்யா ஃபோன் பண்ணா அத்த… இன்னிக்குப் போறியான்னு என்னைக் கேட்டா… ஃபோன்ல நீங்க பேசறது அவளுக்கு சரியா கேக்கறதில்லையாம்… அதான் பாத்துட்டு வந்து சொல்லுப்பா… நான் புதன் வியாழன்ல போய் நேர்ல பாக்கறேன்னு…”
“உஷா… அவ இதை எப்படி சொல்லிருப்பான்னு எனக்குத் தெரியும். எவ்ளோ வாட்டமா எனக்குன்னு வளச்சு சொல்றே? நல்லவேளை உங்கம்மா உன்னை வக்கீலுக்குப் படிக்க வெக்க மாட்டேன்னு பிடிவாதமா சொன்னது நல்லதாச்சு…” சொல்லும்போதே சிரித்தபடி மேலும் மூச்சு வாங்கினார். நான் அத்தைக்குப் பழிப்புக் காட்டினேன். அத்தையின் படுக்கைக்கு வலப்புறம் இருந்த மங்கிய ஜன்னல் கண்ணாடியில் சின்னச் சின்னச் சதுரங்களாலான பழிப்புக் காட்டும் என் முகம் தெரிந்தது. நானும் சிரித்துக்கொண்டேன்.
அத்தைக்கு காபி கொண்டுவந்த சிந்து சிஸ்டர், “என்ன, யாரோட மாமியாரைப் பத்திப் பேசறீங்க?” என்று கேட்டுப் புன்னகைத்துவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் திரும்பிச் சென்றார். “அத்த… அடுத்த வாரம் ரெண்டு நாள் வொர்க் ஃப்ரம் ஹோம் இருக்கும். இங்கே வந்து வேலை பாத்துக்கவா? மத்த நேரம் பேசிட்டு இருக்கலாம்ல?”
அத்தை உடனடியாகத் தலையை ஆட்டினார். ஓரளவுக்கு சீராகவே வளர்ந்து ‘பொம்’மென்றிருந்த அவரது தலைமுடி எழுந்து அமைந்தது. “சிலசமயம், யாராச்சும்… நான் இல்லடி… மத்தவங்க யாராச்சும் வலியில அனத்துறது உன்னை வேலை பாக்க விடாது. இப்படி வாரம் ஒருமுறை வரது நல்லாருக்குடி.” எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் பெருமூச்சு வந்து தொலைக்கிறது.
அத்தையிடம் சொல்லிக்கொண்டு, கீழே வந்து லெட்ஜரில் கையெழுத்துப் போடும்போது, “இன்னும் எத்தன?” என்று ஒரு சத்தம் கேட்டது. விதிர்விதிர்த்து நிமிர்ந்து பார்த்தேன். சிந்து சிஸ்டர் என் தோளைத் தட்டி, “நிர்மலாம்மா மாத்திரை முழுங்க ரொம்ப சிரமப்படறாங்க.. அவங்கதான்..” என்றார். மனத்துக்குள் ஒரு வண்டு குடையத் தொடங்கியது. மறுபடியும் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தபிறகுதான் உடல் உதறல் நின்று சமன் பெற்றது. வண்டி ஓடவேண்டுமே.
***
சிவப்பைப் பூசிக்கொண்டு ‘நீ எடுத்துப் பேச வேண்டியதில்லை’ என்ற தோரணையிலேயே ஒலிக்கும் விளம்பர அழைப்பால் தூக்கம் கலைந்தது. கால்களைக்கூடச் சரியாக நீட்டாமல் அப்படியே உறங்கியிருக்கிறேன். சாப்பிட்ட ஞாபகமும் இல்லை. உடை மட்டும் மாற்றிவிட்டேன் போல. கட்டிலின் மூலையிலேயே அத்தை ‘நல்ல கலர் காம்பினேஷன்’ என்று சொன்ன லேவண்டர் சுடிதார் சுருண்டு கிடந்தது. அதை எக்கி எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். இதை மட்டும் தனியாக அலசிவிடலாம், மிஷினில் போடவேண்டாம் என்று தோன்றியது. வாளியில் போட்டுவிட்டு, பால் பாக்கெட்டை எடுத்துக் காய்ச்சப் போனபோதுதான் மணி பார்த்தேன். மதியம் மூன்று. சமையலறையில் ஃபில்டரில் காப்பிப்பொடியை நிரப்பி, அப்படியே விட்டிருந்தேன். நல்லவேளை, அடுப்பில் எதுவும் இல்லை.
மீண்டும் அலைபேசி ஒலித்தது. சிவப்பு நிறம் இல்லை. பால் பாக்கெட்டிலிருந்து பாதியைப் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துவிட்டு, அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். பிந்து என்று நான் அழைக்கும் பிருந்தா. அத்தையின் பெயரோடு வந்தடைந்த, அல்லது நான் கண்டடைந்த தோழி. எடுத்து, “என்னய்யா, வீட்ல யாரும் இல்லையா? ஞாயித்துக் கெழமையும் அதுவுமா ஃபோன் பண்றே?” என்றபடியே ஃபில்டரில் வெந்நீரை ஊற்றினேன். பிருந்தா, “உஷா, எனக்கு உடனே ஒரு கைனிக் டாக்டரை பாக்கணும், ப்ளீடிங் ரொம்ப அதிகமா இருக்கு. கேஎஸ் ஹெல்த் சென்டருக்கே போகலாம், ஆனா நீ வந்து கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும். என்னால வண்டி ஓட்டவோ, வண்டியில உக்காந்து வரவோ நிச்சயமா முடியாது,” என்றதும் மனத்துக்குள் மறுபடியும் அதுவே குடையத் தொடங்கியது.
எப்படியோ பிந்துவால் ஏற்ற இறக்கம் அற்ற குரலில் இப்படியானதைக்கூட சொல்ல முடிகிறது. எனக்குத் தொண்டை அடைத்தது. செருமிக்கொண்டு, “எனக்கும் ஆட்டோதான் பெட்டர். ஒரு காபி மட்டும் குடிச்சுட்டு வந்துடறேன். ஆட்டோ ஏறிட்டு சொல்றேன். ரெடியா இரு…” என்றேன்.
ஆட்டோவில் ஏறியும் மனம் பொங்கியபடியே இருந்தது. பதட்டம் இல்லாமல்தான் பேசினாள் என்றாலும் பிந்துவைப் பற்றிய கவலையும் அழுத்தியது. “இன்னும் எத்தன?” குடையும் வண்டின் சத்தம். தலையைத் திருப்பிக்கொண்டபோதுதான் இவ்வளவு நேரம் சாலையைப் பார்த்தபடி வந்தது புரிந்தது. ஆட்டோவைச் செலுத்திய பெண், சுடிதார் மேல் காக்கி சட்டை அணிந்து, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள். பத்து அல்லது பதினைந்து நிமிடப் பயணம். அவளிடம் பேசலாமா என்று யோசித்தேன். அதற்குள் அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. நானும் பிந்துவை அழைத்துப் புறப்பட்டுவிட்டதைச் சொன்னேன். நான் பேசிவிட்டு வைத்ததும், ஓட்டுனர், “பாட்டு போடலாமா மேம்?” என்றாள்.
இத்தனை வயதில் முதல் முறையாக, பாட்டு என்ற சொல் பனிக்கூர் போலச் சொரேரென்று ஒலித்தது. என் மௌனத்தை என்னவாகப் புரிந்துகொண்டாளோ, அவளாகவே, “ஆளு போயிட்டாலும் பாட்டு நம்மகூட இருக்குதானே மேம்?” என்றாள். பாட்டிலிலிருந்து ஒரு வாய் தண்ணீரை முழுங்கிவிட்டு, “ஆமாம்பா… பாட்டு போடுங்க…” என்றேன். அவளது சேமிப்பிலிருந்து மூன்று பாடல்கள், மூன்றாவது பாடல் முடிவதற்குள் பிந்து வீட்டை அடைந்துவிட்டோம். இறங்கிக்கொண்டு, “அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க…” என்றபோது சத்தமில்லாமல், ‘எந்த நாள் உந்தன் நாளோ?’ என்று முணுமுணுத்தபடி தலையசைத்தாள்.
ஹாலில் பிந்துவின் கணவர் மட்டும் அமர்ந்திருந்தார். சங்கடமான புன்னகையுடன், “வாங்க, ரெஸ்ட் ரூம்ல இருக்கா…” என்றார். அறைக்குள் போனேன், ஒரு நிமிடத்தில் குளியலறையிலிருந்து வெளியே வந்த பிந்து மிகவும் அயர்ந்து போயிருந்தாள். “போலாம்,” என்று மட்டும் சொன்னாள். ஹாலுக்கு வந்து, அவள் கணவரிடம் தலையசைத்துவிட்டு, பதிலுக்கு ஒரு தலையசைப்பைப் பெற்றுக்கொண்டு, வெளியேறினோம். ஆட்டோவில் ஏறுவதற்குள்ளாகவே வீட்டு டிவி உயிர் பெற்று, எதோ செய்திகள் உடைவது கேட்டது. நான் பிந்துவைப் பார்த்தேன். பல் தெரியும்படி சிரித்துக்கொண்டிருந்தாள்.
எங்களுக்குப் பிடித்த ஷோபா டாக்டர்தான் புறநோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். உடனடியாக டி அன்ட் சி, அனேகமாக எண்டோமெட்ரியல் பாலிப் இருக்கிறது, அதனை பயாப்ஸிக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லிவிட்டார். “வினீத் வரட்டும், அனஸ்தீஷியா கொடுக்கற வரைக்கும் நீயும் இரு. அப்பறம் வீட்டுக்குப் போ. நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. போனப்றம் ஃபோன் பண்றேன். இன்னிக்கு அத்தையை பாக்க வேற போயிருப்ப… அலைச்சல்தான்… ஆனா, ஐ டுக் திஸ் லிபர்ட்டி யா… எனக்கு வேற வழி இல்ல…” பிந்து இன்னதுதான் சிக்கல் என்று தெரிந்ததும், இன்னும் தெளிவடைந்து, தன் இயல்பான அழுத்தத்துடன் சொன்னாள்.
மறுநாள் அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு, பிந்து சொன்னதை மீறி கேஎஸ் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பில் பிருந்தா என்று பெயர் சொல்லி, அறை எண் விசாரித்தபோது துணுக்கென்றது. வண்டு விழித்துக்கொண்டது. வேறு யாரையும் கேட்கப் பிடிக்காமல், அம்புக்குறிகளையும் அறை எண்களையுமே பார்த்தபடி போனேன். பிந்து கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, கட்டிலின் மேல் ஃபைல்களுடன் ஒரு பையும், இன்னொரு சிறு பையும் இருந்தன. என்னைப் பார்த்ததில் அவளுக்கு வியப்பொன்றும் இல்லை. ஆனால் இப்படி அலையாதே என்று திட்டாமல் கண்கள் மின்ன என்னைப் பார்த்துப் புன்னகைத்தது எனக்கு வியப்பாக இருந்தது.
“வினீத்துக்கு முன்னாடி நீ வந்துடுவேன்னு இப்பதான் நெனச்சேன்…”
“இதெல்லாம் பெருமையா? கடமை…”
“யாருக்கு?”
என்னிடம் பதிலில்லை.
“சரி, சரி, முழிக்காத… பாலிப் பயாப்ஸிக்கு அனுப்பிட்டாங்க… ரிசல்ட் வர ஏழிலிருந்து பத்து நாள் ஆகுமாம். வினீத் வந்து இன்ஷுரன்ஸ் க்ளியர் பண்ணதும் டிஸ்சார்ஜுன்னு சொன்னாங்க…”
“சரி… ரிசல்ட் வாங்க நானும் வரேன்…”
“ம்… சரி, அவரு வரதுக்குள்ள டக்குனு சொல்லு… இந்த சண்டே, ரெண்டு பேருமா போய் உங்க அத்தையைப் பாப்போமா?”
பிருந்தாவை நான் மறுத்துப் பேசிய மிக அரிய தருணம். அவளைத் தவிர்த்துவிட்டு நான் மட்டும்தான் அந்த ஞாயிறு அத்தையைப் பார்க்கப் போனேன். அத்தைக்கு மூச்சிரைப்பு அதிகரித்திருந்தது. கவனமாக, பிருந்தாவைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தேன். கீழே வந்து சிந்து சிஸ்டரிடம், “அத்தைக்கு இன்னிக்கு ரொம்ப மூச்சு வாங்குது…” என்றபோது, “ம்ம்… இந்த முறை ட்ரீட்மெண்ட் அவங்களால தாங்க முடியல… தளர்ந்திருக்காங்க…” என்றார். நான் கையெழுத்தைப் போட்டுவிட்டு, ‘ஆனால்…’ என்று தொடங்கி அவர் எதாவது நற்செய்தியைச் சொல்வார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் வழக்கமான புன்னகையுடன் தலையசைத்தார்.
***
பிந்துவின் பரிசோதனை முடிவுகளைப் பரபரவென்று புரட்டியபோது எங்கள் கண்ணில் பட்டவரை எதுவும் பயப்படும்படி இல்லை. டாக்டர் ஷோபா சொன்ன, “நத்திங் டு வொர்ரி…” அவ்வளவு ஆறுதலாக இருந்தது. அவர் பிந்துவிடம் மருத்துவ ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒலிநீக்கி வைத்திருந்த என் அலைபேசி அதிர்ந்தது. சௌம்யா. “எக்ஸ்கியூஸ் மீ,” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியில் வந்து அழைப்பை எடுத்தேன். எந்தச் சம்பிரதாயச் சொற்களுமின்றி, “இந்த வாரம் பிருந்தாம்மாவைப் பாக்க போறப்ப பச்சைக்கல் நெக்லஸ் எங்கே வச்சிருக்காங்கன்னு கேட்டுட்டு வாப்பா… சுபாவுக்குக் குடுத்துட்டாங்களான்னு தெரியல…” என்றபோது வண்டு காதுகளைத் துளைத்தது. மண்டை இங்கிலீஷில் பதில் சொல் என்றது.
அருகில் வந்த பிருந்தா நான் சொன்ன ஒற்றைச் சொல்லைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்து, பிறகு என் தோளைத் தட்டிப் புன்னகைத்தாள். வரிசையாக இணைந்திருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்து உட்கார்ந்தேன். பிருந்தா பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். மீண்டும் சௌம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. நான் துண்டித்தேன். ஒலியைக் கூட்டத் தொடங்கியபோது சிந்து சிஸ்டரிடமிருந்து அழைப்பு வந்தது.
***
தென்றல் சிவக்குமார் – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்’ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல் முகவரி : thendralsivakumar@gmail.com

