தி.கு. இரவிச்சந்திரன்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்
-தொல்காப்பியர்
ஓர் இனத்தின் ‘சிந்தனை மரபு’ என்பது அந்த இனம் வாழும் சூழலைப் பொருத்தது. இதில், இயற்கை முதல் சமூகம், அறிவியல், வரலாறு வரையிலான பரிமாணங்கள் அடங்கியுள்ளன. இவற்றின் பின்னணியில்தான் அந்த இனத்தின் சிந்தனையோட்டம் இருக்கும். இதற்கேற்பத் தனியர் முதல் சமூக வாழ்க்கைமுறை அமையப்பெறும். பிறப்பிலிருந்து உணவு, உடை, திருமணம், இறப்புச் சடங்கு வரையிலான அனைத்தும் இனத்துவமாக இருப்பது கண்கூடு. இதற்கு மருத்துவம் சிறந்த சான்று. ஓர் இனம் தாம் வாழ்கின்ற இயற்கைப் பின்னணிக்கு ஏற்ற மருந்துகளே அந்த இனத்துள் புழக்கத்தில் இருக்கும். அடுத்து, மொழி. மொழிதான் மனிதனின் முதல் சமூக அடையாளம். இயற்கை உலகில் விலங்கினத்திடமிருந்து வேறுபடுத்தி மனிதனைச் சிந்திக்க வைப்பது மொழி. இனத்துக்கு இனம் மொழி அமைந்ததுபோல் சிந்தனை மரபும் அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரே மொழியாக இருந்தாலும் இடத்துகேற்ற சமூக விழுமியங்கள் இருக்கும். சான்றாக, நெய்தல் வாழ்க்கையும் குறிஞ்சி வாழ்க்கையும் ஒன்றல்ல. இருப்பினும், தமிழ் என்கிற மொழித் தளத்தில் இவற்றுக்கு இடையே பொதுமைக் கூறுகள் பல இருக்கும். அதுதான், சிந்தனை மரபு. சங்க காலச் சமூகத்தில் நிலவி வந்த சிந்தனையோட்டக் கருத்துகளைக் கவனித்த புலவர்கள், அவற்றைத் தமது படைப்பில் கவித்துவமாகப் பதிவு செய்துள்ளனர். அதனால், சங்க இலக்கியங்கள் வெறும் புனைவுகளாக அல்லாமல், வரலாற்றுப் பெட்டகமாகவும் மானிடவியல் ஆவணங்களாகவும் அறிவுக் களஞ்சியமாகவும் விளக்குகின்றன.
I
சங்க காலத்து வாழ்வியல் பதிவுகளான சங்க இலக்கியங்களில் அன்றைய தமிழரின் சிந்தனை மரபுகளைக் காணலாம். இந்தப் பதிவுகளைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக்கினார். தொல்காப்பியம் என்பது மொழி மற்றும் இலக்கியங்களுக்கான இலக்கணம் மட்டுமின்றி, வாழ்க்கைக்கான இலக்கணமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாகச் சமூக வாழ்வுக்கான சொல்லாடலாகவும் விளங்குகின்றது. எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியங்களில் இருந்து இலக்கணச் சொல்லாடலைக் கண்டவர் தொல்காப்பியர். இதனுள் சிந்தனை மரபுச் சொல்லாடல்கள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. அதனால், தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் அன்றைய தமிழரின் சிந்தனை மரபுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனுள் பொதிந்துள்ள பல்துறை அறிவை அடையாளம் காணக்கூடும்.
இந்தத் தொல்காப்பியத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்புள்ளது. அதாவது, ‘என்ப’, ‘மொழிப’ முதலிய சொற்கள் இடம்பெற்றுள்ளதால், இந்தச் சிந்தனை மரபுகள் தொல்காப்பியருக்கு முன்பே இலக்கணமாக்கப் பட்டிருப்பதை ஊகிக்கலாம். தொல்காப்பியம் மட்டுமின்றித் திருக்குறள் முதலிய நீதி நூல்களிலும் பண்டையத் தமிழ்ச் சமூகத்துச் சிந்தனை மரபுகள் பொதிந்திருப்பதைக் காணலாம். ஆனால், இவை வாழ்வியல் பின்னிணியில் மட்டுமின்றித் தத்துவப் பின்னணியிலும் உள்ளன. குறிப்பாக, சமண, பௌத்தத்தின் தாக்கங்களை இவற்றில் காணலாம். இந்தத் தமிழ்சார் சமணத்தை ஆசீவகம் என்போரும் உண்டு. இந்த ஆசீவகமே தமிழரின் ஆதிச் சமயம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றில் ஆசீவகக் கூறுகள் உள்ளன. ஆசீவகத்தின் அடிப்படையான விதிக் கோட்பாடு இதற்குச் சான்று. இந்த விதியைத் தொல்காப்பியர் ‘பால்’ என்கிறார். கணியன் பூங்குன்றன் செய்யுளில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என விதியை வலியுறுத்துகிறது. திருக்குறளில் ‘ஊழ்’ அதிகாரமே உள்ளது. இவற்றை ஆய்வதன் மூலம் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த விதத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியில் உளவியல் சிந்தனைப் போக்குகளை அடையாளம் காண வழிகள் உள்ளன. உள்ளம் குறித்துத் தொல்காப்பியர் ஒரு நூற்பாவில் கூறும்போது, ‘ஆறாம் அறிவே மனம்’ என்கிறார்:
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல். பொருள்.583)
இந்த நூற்பாவில் டார்வினின் பரிணாமச் சிந்தனை இருப்பதை அறிய முடிகின்றது. அதுமட்டுமின்றி, உள்ளம் குறித்த நுட்பம் இதில் உள்ளது.
மனம் பற்றித் தொல்காப்பியர் பல இடங்களில் கூறியிருந்தாலும், மேற்கண்ட நூற்பா கவனிக்கத்தக்கது. இது, உளவியல் சார்ந்த ஆறாம் அறிவு பற்றிப் பேசுகிறது. மனிதன் ஆறறிவு கொண்டவன். பொதுப்புத்தியில் இந்த ஆறாம் அறிவைப் பகுத்தறிவு என்கிறோம். உண்மையில் எல்லா உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உள்ளது. சிறு எறும்பிலிருந்து யானை வரை அனைத்துக்கும் அதனதன் இயல்புக்கும் வாழ்வியலுக்கும் ஏற்பப் பகுத்தறிவு இருக்கவே செய்கிறது. இது அந்தந்த இனத்தின் இருத்தலுக்கான இயற்கை ஏற்பாடு. பகுத்தறிவின்றி எந்த உயிரும் இந்த உலகில் வாழவோ இருப்புக் கொள்ளவோ முடியாது. தாவரங்களுக்கும் பகுத்தறிவுண்டு என்கிறது இன்றைய அறிவியல். அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றங்களும் நடக்கின்றன. எனவே, பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் உரியதல்ல. இது அடிப்படை விதி. இந்தக் கருத்தைத்தான் தொல்காப்பியர் சுட்டுகிறார். மேற்கண்ட நூற்பாவில் பகுத்தறிவே ஆறாம் அறிவு என்று தொல்காப்பியர் சொல்லவில்லை. உள்ளமே ஆறாம் அறிவு என்கிறார். எனில், மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் எங்கே வேறுபடுகின்றான் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு அறிவியல் சரியாக இன்றளவும் விடை கூறவில்லை. ஆனால், தொல்காப்பியர் அன்றே கணித்து விட்டார். ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ என்றார். அதாவது, மனநிலையே ஆறாம் அறிவு. வேறுவிதமாகக் கூறின், உள வாழ்வே ஆறாம் அறிவு.
நவீன உளவியல்படி, psyche என்ற சொல்லுக்கு உடற்செயல்களுக்கு அப்பாலான செயல்பாடுகளின் தொகுதியைக் குறிக்கும். எண்ணுதல், சிந்தித்தல், தர்க்கித்தல், காரணித்தல், உள்ளுணர்தல் முதலிய செயல்பாடுகள் உடலுக்கு அப்பால் நடப்பவையாகும். இவை உள்ளடங்கிய நுண்பொறி (சூக்குமம்) உள்ளமாகும். இந்தியத் தத்துவம் கூறுகின்ற சூக்கும உடலல்ல. அதற்கு இணையான இருக்கும் ஓர் இருண்மை நிலையே உள்ளம் என்கிறது. உளவியல்துறை முன் வைக்கின்ற இந்த வரையறை ஓரளவுக்குச் சரியே. ஆனால், தொல்காப்பியர் கூறும் ‘மனம்’ என்கிற சொல் ‘சைக்கி’ எனும் சொல்லைவிடக் கனமானது; ஆழமானதும்கூட.
இந்திய மரபில் ‘மனம்’ எனும் சொல் பௌத்த வழியாகப் புழக்கத்தில் வந்த ஒன்று. இது பாலி மொழிச் சொல். இதன் வேர்ச் சொல் : மானஸ். இதன் நீட்சிதான் ‘மனிதன்’. மனத்தால் வாழ்பவன் என்பதால் ‘மனிதன்’ என்கிற பெயர் வந்தது. மானஸ்- மனஸ் – மனுஷ் – மனுஷன்-மனிதன். இதுதான் சொல் வரலாறு. மனித வாழ்வு என்பது மனத் தேவைகளுக்கான வாழ்வாகும். பிற உயிரினங்கள் உடலாதாரத்தில் வாழ்ந்து வர, மனிதன் மட்டும் உளமாதாரத்தில் வாழ்ந்து வருகிறான். இந்த உலகில் தோன்றிய காலத்திலிருந்து பிற உயிரினங்கள் இன்றளவும் அப்படியேதான் வாழ்ந்து வருகின்றன. மனிதன் மட்டும் காலத்துக்கேற்ப வளர்ந்து வருகிறான். இந்தியத் தத்துவம்படி, முக்தி வரையில் செல்கிறான். அதனால், இவன் உயர்திணை. இது, வினையெச்சம். உயர்ந்த, உயர்கின்ற, உயரப்போகின்ற உயிரினம் மனிதன். பிற உயிரினங்கள் யாவும் ஆதி முதல் இன்று வரை எவ்வித மாற்றமுமின்றி ஒருபடித்தான வாழ்வை இருப்புக்கொண்டு வருகின்றன. எனவே, இவை உயர்நிலையற்ற அஃறிணை. இந்த நுட்பத்தைத் தொல்காப்பியர் அறிந்துள்ளார் என்பதைத் திணைச் சொற்களிலேயே காணலாம். இங்கே, திணை என்றால் வாழ்வொழுங்கு.
இந்தியவியல் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதரிடமும் உடல்நிலை, மனநிலை, ஆன்மநிலை ஆகியவை உள்ளன. உடல்நிலை என்பது விலங்குத்தனமானது. அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. அடுத்தது, மனநிலை. இதுதான் மனிதத்தனமானது. காரணம், மனத்தால் வாழ்பவனே மனிதன். இவ்விரண்டு நிலைகளும் மனிதரிடம் வெளிப்படையாகக் காணலாம். மூன்றாவது நிலையான ஆன்மநிலை மனிதரில் ஒரு சிலருக்கே மிக அரிதாக வாய்க்கும். ஆன்மீக ஈடுபாட்டில் அகப்பயணம் செய்து மூலாதாரத்தை அடைந்து மேல் நோக்கிப் பயணம் செய்வோரே ஆன்மநிலை இருப்புக் கொள்வர். உடல் கடந்து மனம் கடந்து ‘நான்’ சென்றால் ஆன்மநிலை எய்தலாம் என்கிறது ஆன்மிகம். (மதமும் ஆன்மீகமும் ஒன்றல்ல. மதத்துக்கு மனம் ஆதாரம். ஆன்மீகத்துக்கு ஆன்மா ஆதாரம். மதத்துக்குக் கடவுள் கட்டாயம். ஆன்மீகத்துக்குக் கடவுள் கட்டாயமில்லை). ஆன்ம இருப்பை அறிவியலால் நிருபிக்க முடியாது என்றாலும் இதில் உண்மை உள்ளது. அதைப் பட்டறிவு வழியில்தான் அறியமுடியும். அப்படிப் பட்டறிவு மூலம் உண்மையை அறிவதைப் பட்டறிவு அறிவியல் (empirical science) என்பர். சித்தர்கள் இவ்வகைப் பட்டவர்கள்.
உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றும் மனித இருப்புக்கான நிலைகள் என்று இந்தியவியல் கூறுகிறது. இவற்றில் ஒருவரின் ‘நான் அல்லது ஈகோ’ எங்கே உள்ளதோ அதன் இயல்பில்தான் ‘இருத்தல்’ அமையும். மேலும், இந்த மூன்று நிலைகளிடையே இழையோடுகின்ற பொது ஆற்றல் ‘அறிவு’ ஆகும். அதாவது, இந்த மூன்றிலும் அறிவு இருக்கும். இதன்படி, உடலில் இருக்கின்ற அறிவு புலனறிவு. உள்ளத்தில் செயல்படுகின்ற அறிவு கருத்தறிவு. ஆன்மாவில் இயங்குகின்ற அறிவு ஆன்மறிவு. வேறுவிதமாகக் கூறின், புலனறிவு (உடல்) கருத்தறிவு (மனம்) ஆன்ம அறிவு (ஞானம்) ஆகிய மூன்றும் கலந்த கலவையே மனிதன். இவற்றைச் சிற்றறிவு, அறிவு, பேரறிவு எனக் கூறப் பொருந்தும். இவற்றில் அதிப்பெரும்பாலும் மனம் சார்ந்த நிலையில்தான் மனித இனம் வாழ்ந்து வருகின்றது. அதனால் உள வாழ்வே முதன்மை. இதைத்தான் இன்றைய நவீன உளவியல் துறை ஆராய்ந்து வருகின்றது. இதைத் தொல்காப்பியர் அன்றே அடையாளம் கண்டுவிட்டார்.
தொல்காப்பிய வரையரைப்படி, மனமே ஆறாம் அறிவு; ஆறாம் அறிவே மனம். இது உலகின் மிகச் சுருக்கமான வரையறை மட்டிமின்றி, மிகவும் சிந்திக்கத்தக்க ஒன்று. மனிதன் ஏன் மனத்தால் வாழ்கின்றான்? அப்படி வாழவேண்டிய நிலை அவனுக்கு எப்படி ஏற்பட்டது? இவற்றுக்குத் தகுந்த விடை காண்பது கடினம். பிரபஞ்ச விதிப்படி, இது நடக்கின்றது எனச் சொல்லி நாம் சமாதானமடையலாம். இது உண்மையாகவும் இருக்கக்கூடும். இருப்பினும், அறிவியல் முறைப்படி மனிதன் ஏன் மனத்தால் வாழ்ந்து வருகின்றான் என்பதற்கான விடை காண வேண்டியுள்ளது. மனிதப் பரிணாமத்தின் ஒரு கட்டமாக அகப் பயணம் உள்ளது. புறநிலை உடல் வளர்ச்சி கண்ட மனிதனின் பரிணாமம், அகநிலை வளர்ச்சிக்கு வந்து விடுகின்றது. இந்தியவியல் கூற்றுப்படி, மனமும் ஆன்மாவும் அகநிலை அம்சங்கள் ஆகும். மாறாக, உடலும் சமூகமும் புறநிலை அம்சங்கள் ஆகும்.
பரிணாம வளர்ச்சிப்படி, மனித நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இது உடலியல் பரிணாமத்தைக் குறிக்கும். இதுவே ஒட்டுமொத்த பரிணாமத்தின் கடைசிக் கட்டம். இதனையடுத்து அறிவுப் பரிணாமம் நடந்ததென்று மேற்கண்ட நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். சித்தர்கள் கருத்துப்படி, ஆன்ம வளர்ச்சி ஒன்று மனிதனுக்கு உள்ளது. அதுதான் இறுதிப் பரிணாம வளர்ச்சி. இதை ‘அட்டாங்க யோகம்’ எனும் கோட்பாட்டின் கீழ் சித்தர்கள் விவரிக்கின்றனர். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரணம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ரநாமம் ஆகிய படிநிலைகளில் ஆன்மா வளர்ச்சியடையும். சித்தர்களுக்கு நடந்துள்ளது. இந்த ஆன்ம வளர்ச்சி அகத்துள் நடக்கின்ற சூக்குமப் பரிணாம வளர்ச்சி. இதற்குத் தன்னுள் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் (ஆன்ம பயணம்) மனிதனுக்கு ஏற்பட்டது. சுருங்கச் சொல்லின், ‘உடல்’ நானிலிருந்து ‘உள்ள’ நான் கடந்து ‘ஆன்ம’ நானாகி அது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கிப் பயணித்து, சூன்யம் ஆவதே முழுமையான பரிணாமமாகும். இவற்றில் அகப் பயணம் என்பது உளப் பயணத்தையும் ஆன்ம பயணம் என்பது அட்டாங்க யோகத்தையும் குறிக்கும். இரண்டையும் சேர்த்து ‘அகப் பயணம்’ எனக் கூறுவதில் தவறில்லை. இதை ‘அகத்தாய்வு’ எனவும் கூறுவர்.
நடப்பில் பயணம் செய்யும்போது அந்தப் பாதையை நாம் கவனிப்போம். அதுபோல், ஆன்மா நோக்கிய இந்த அகப்பயணத்தின்போது மனத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. ‘நானுக்கும்’ ஆன்மாவுக்கும் இடையே இருப்பது ஆன்மா. அதாவது, பாதையைக் கடப்பது போல் உள்ளத்தையும் கடந்து சென்று அடைவிடத்தை ‘நான்’ அடைய வேண்டியுள்ளது. இங்கே ‘அடைவிடம்’ என்பது ஆன்மா. அவ்வாறு அடைந்தவனே ‘கடவுள்’. அதாவது, ‘உள்ளத்தைக் கடந்தவன்’ என்றாகின்றான். ‘உள்’ என்றால் ‘உள்ளம்’ என்று பொருள். மனத்தால் வாழ்ந்து யோக முறைப்படிக் கடந்தால் இறைநிலை முடியும். இந்த மனத்தைக் கடந்த நிலையே புத்தர் சொன்ன ‘சூன்யம்’. இதுவே நிர்வாண நிலை. அதாவது, எண்ணமற்ற நிலை. எண்ணமே உள்ளம் என்பதால் உள்ளமற்ற நிலையே சூன்யம். இந்த நிலையை அடைந்தவனே புத்தன். இது ஆன்ம ஞானம். ஞானத்துக்கு இன்னொரு பெயர் புத்தி. இதை அடைந்தவன் புத்தன். இவனை ‘அறிவன்’ என்கிறது தொல்காப்பியம். அறிவன், புத்தன், ஞானி எல்லாம் ஒன்றே. இந்த ஞானத்தை மனிதனால் மட்டுமே அடையக்கூடும். இதுதான் பிரபஞ்ச விதி. அதனால்தான், ‘மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்கிறார் அவ்வையார். அகப்பயணம் என்கின்ற ‘மனத்தைக் கடத்தல்’ மனிதனால் மட்டும் நடக்கும். காரணம், மனிதனுக்கே ‘உள வாழ்வு’ உள்ளது. சமூக வாழ்வு என்பது உள வாழ்வின் அங்கமாகும். (சூபர் ஈகோ உள்ளத்தின் பகுதி). ஆன்மீகம் கூறும் ‘வாழ்க்கையைத் துறத்தல்’ என்பது ‘உள வாழ்வைத் துறத்தல்’ எனப் பொருள்படும். இந்த ஆன்ம பயணத்தைப் பல இந்தியத் தத்துவ மரபுகள் வலியுறுத்துகின்றன. சார்வாகம் மட்டும் ஆன்மாவை மறுக்கிறது.
பௌத்தத்தையும் அனாத்மா வாதம் என்பர். அனாத்மா வாதம் என்பது ஆன்மாவை மறுக்கின்ற வாதமில்லை. மாறாக, ‘ஆன்மாவும் அழிவுக்கு உட்பட்டது’ என்பதை உணர்த்துகின்ற வாதமாகும். இதன்படி, நிரந்தர ஆன்மாவைப் பௌத்தம் மறுக்கிறது. ‘அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது’ என்கிற வட்டத்தில் ஆன்மாவும் உள்ளது. நிரந்தரம் என்பது சனாதனம். நிரந்தரமின்மை என்பது சனாதன மறுப்பு. ஆன்மா நிரந்தரமானது என்கிற கருத்துக்கு மாற்றாகச் சொன்னதே ‘அனாத்மா’. அதனால், பௌத்தம் தனது இயல்பில் சனாதனத்துக்கு எதிராக அமைந்து விடுகின்றது. இது பட்டறிவு வாதமாகும். புத்தர் காலத்தில் ‘ஆன்மா அழிவில்லாதது’ என்று வைதீகம் கூறி வந்த நிலையில், ஆன்மாவும் அழிவுக்கு உட்பட்டதே என்பதை வலியுறுத்தியவர் புத்தர். இவரிடம் கர்ம வினை, விதி, மறுபிறவி, நிர்வாண நிலை கோட்பாடுகள் அடிப்படையாக உள்ளன. தனது முற்பிறவிகள் சிலவற்றை புத்தர் அறிந்துள்ளார் என்கிற குறிப்பும் உள்ளது.
தொல்காப்பியரிடத்தில் விதிக் கோட்பாட்டின் தாக்கம் இருப்பதைக் காணலாம். இது ஆசீவகம், சமணம் அல்லது பௌத்தத்தின் வழியில் பெறப்பட்ட கருத்தியலாகும். சங்க காலத்தில் விதி நம்பிக்கை இருந்தது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. தொல்காப்பியத்தில் ‘பால்’ என்ற சொல் விதியைக் குறிக்கும். இதன்படி, காதலுக்கு அடிப்படையான உள்ளப் புணர்ச்சியின் பின்னணியில் விதி உள்ளது என்கிறார்:
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே (தொல். பொருள். 94)
இதன் பொருள்: ஆணும் பெண்ணுமாகிய இருவேறு பிரிவினர், வெவ்வேறு திசைகளிலோ அல்லது வெவ்வேறு குடும்பங்களிலோ வாழ்கின்றனர். முற்பிறவியில் அவர்கள் செய்த நல்வினையின் பயனாகவோ அல்லது ஊழின் (விதி) ஆணையாலோ அவர்களின் எண்ணங்கள் ஒன்றுபடுகின்றன. இதுவே ‘பாலதாணை’ எனப்படுகிறது. இது, பால்+ அது+ ஆணை. அதாவது, ‘விதியின் ஆணைப்படி காதல் புணர்ச்சி நடப்பது’ என்று பொருள். இந்த ஆணைப்படி ஒன்றிணைந்த உள்ளத்தைக் கொண்ட தலைவனும் (ஆண்) தலைவியும் (பெண்) ஒருவரையொருவர் சந்தித்துக் கண்டு மகிழ்வர். அவ்வாறு இணையும் போது தலைவன், தலைவியை விட வயது அல்லது குணத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் எந்தத் தடையுமில்லை. இதன்படி, காதல் என்பது குலம், குடி, செல்வம் இவற்றால் அமைவதன்று. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு மனங்கள் இணையக் காரணம் முற்பிறவித் தொடர்பும், ஊழின் செயலுமே ஆகும். இங்கே விதியை உணர்த்தவே ‘பாலதாணை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் தொல்காப்பியர். இவ்வாறு விதியை ஏற்கின்ற தொல்காப்பியர் ஆன்மாவைப் பற்றி விளக்கமாகக் கூறவில்லை. அவர் ஆறறிவுடன் நிறுத்தி விடுகின்றார். இருப்பினும், ஆன்ம அறிவை ‘அறிவன்’ சொல்லில் குறிப்பாக உணர்த்துகிறார். இதுதான் உடல் கடந்த உள்ளம் கடந்த ஆன்ம அறிவு அல்லது ஞானம். அறிவுதான் ஆதாரம். உடல் சார்ந்த அறிவு புலனறிவு. உளம் சார்ந்த அறிவு கருத்தறிவு. ஆன்மா சார்ந்த அறிவு பேரறிவு அல்லது ஞானம். சித்தரைப் பேரறிவாளர் என்றும் கூறுவர். சித்= ஆன்ம அறிவு. இதன்படி, அறிவனும் சித்தனும் ஒன்றே. தொல்காப்பியருக்கு ஆன்ம நம்பிக்கை இருந்துள்ளது என்பதை இவை உணர்த்தும். இதை இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.
II
ஆன்ம வாதத்துக்கு ஆன்மா, கர்மா, விதி, மறுபிறவி, முக்தி ஆகிய ஐந்தும் அடிப்படை. இவை அனைத்துக் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை இன்றைய அறிவியல் முறைப்படி நிரூபிக்க முடியாது. காரணம், ஆன்மீகத்தின் முன் அறிவியல் ஒரு குழந்தை, புத்தரையும் வள்ளலாரையும் அறிவியலாக்க முடியாது. தொல்காப்பியர் காலத்துச் சிந்தனை மரபுகளில் ஆன்மீகமும் இருந்தது என்பதற்குச் சில குறிப்புகள் உள்ளன. இதை உணர்த்தும் வகையில் ‘அறிவன்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் உள்ளது. இதைப் பின்வரும் நூற்பா பகரும்:
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம் (தொல். பொருள்: 77)
என்று தொல்காப்பியர் அறிவனைக் கூறுகிறார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘காமம், வெகுளி, மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கம்’ என்று கூறுகிறார். அதாவது, துறவியை அறிவன் எனச் சுட்டுகிறார். முன்பு சொன்னதுபோல் சித்தரை அறிவன் என்கிறார். வேறு சில உரையாசிரியர்கள் இந்த அறிவனை முக்காலத்தையும் கணிப்பவர் எனக் கருதுகின்றனர். இது பொருத்தமாக இல்லை. ‘கணித்தல்’ என்பது எதிர்காலத்தை மட்டும் குறிக்கும். எதிர்காலத்தை மட்டும் கணிப்பவர் ‘கணியன்’. மாறாக, ‘அறிவன்’ என்பது முக்காலத்தையும் ஞானத்தால் அறிபவர். அந்த ஞானியைத்தான் ‘அறிவன்’ என்கிறார் தொல்காப்பியர். இங்கும் அறிவே ஆதாரம். பௌத்தத்தில் புத்தன் என்பர். புத்தியில் இருந்து வந்தது புத்தன். அறிவிலிருந்து வந்தது அறிவன். இந்த அறிவன் புத்தனைக் குறிக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் பௌத்தத்தின் தாக்கம் இருந்ததை அறிய முடிகிறது. ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் (தொல்.பொருள்.649). இதில் வரும் ‘முனைவன்’ முற்றும் துறந்த பௌத்த அல்லது சமணத் துறவியைக் குறிக்கும். (இந்த ‘முனைவன்’ சுழுமுனையை அடைந்தவன் எனப் பொருள் கொள்ளலாம்). தொல்காப்பியத்தில் வரும் ‘காஞ்சித் திணை’ நிலையாமையைக் குறித்து நிற்கிறது. ‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’ என்கிறார் தொல்காப்பியர். அவர் காலத்தில் ஆன்மீகச் சிந்தனையும் வழக்கில் இருந்ததை உணரலாம். அசோகர் தாக்கமாகவும் இருக்கலாம்.
பௌத்த வழியில் தொல்காப்பியர் மனதை ஆறாம் அறிவெனக் கொண்டதில் அறிவியல் தர்க்கம் உள்ளது. மனிதன் இந்த ஆறாம் அறிவின் ஆதாரத்தில் (மனம்) வாழ்ந்து வருகிறான். பறவை விலங்குகள் யாவும் உடலியல் இருப்புக்காகத்தான் வாழ்கின்றன. மனித இருப்பு அப்படியல்ல. இந்த இயற்கை உலகில் செயற்கையாக ஓர் உலகை உருவாக்கி (சமூகம்) அதில் இருப்புக் கொள்ளவே போராடுகிறான். காரணம், இவன் இயற்கை விலங்கல்ல; அதையும் கடந்த சமூக விலங்கு. இந்தச் சமூகம் புறத்தில் இருந்தாலும் அதை அகத்தில் உள்வாங்கிக்கொண்டு, அதன் விதிகள்படி வாழ வேண்டும். இது மனித நிர்பந்தம். அதனால்தான், சமூக விதிகளை ஃப்ராய்ட் அகத்தில் (சூபர் ஈகோ) வைத்தார். சமூகவியலரான மார்க்ஸ் சமூகத்தைப் புறத்தில் வைத்து ஆராய்ந்தார். மார்க்சைவிட ஃப்ராய்ட் ஆழமானவர். இருவரின் சிந்தனைப் போக்கு வேறுபட்டது. அதனால்தான், ‘எனது வழி வேறு.. மார்க்ஸ் வழி வேறு. இருவரும் இணைந்து பயணிக்க முடியாது’ என்றார் ஃப்ராய்ட்.
ஃப்ராய்ட் வழி வந்த லக்கான், சமூகத்தையே புனைவு என்றார். (ஃப்ராய்டியத்தில் மார்க்சியத்தைக் கொஞ்சம் இணைத்துக் கொண்டவர் லக்கான்). மொழி விதிகளே சமூக விதிகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது இவரின் புரிதல். அந்த விதிகள் நெறியில் உளச் செயல்பாடுகள் நடக்கின்றன என்பதைக் ‘குறியீட்டு முறைமை’ (symbolic order) என்கிற கோட்பாட்டைக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நிறுவி வந்தவர் லக்கான். எனவே, அகத்துக்கு (சமூக விதிகளுக்கு) ஏற்ப வாழ வேண்டிய தேவை மனிதனிடத்தில் ஏற்பட்டுவிட்டது. சமூகம் புறத்தில் இருந்தாலும் அதன் விதிகள் அகத்தில் இருப்பவையாகும். இதன் காரணமாகவே, ‘மனத்தால் வாழ்பவன் மனிதன்’ என்று பௌத்தம் சொல்கிறது. அறிவியல் பார்வையில் இன்றைய நவீன உளவியல் சொன்ன விடயங்கள் ஆன்மீகப் பார்வையில் அன்றே புத்தர் சொன்னது சிறப்பு. மனிதனுக்கு ‘உள வாழ்வு’ முதன்மையானது என்கிறது உளவியல். இதைத்தான் ‘மனுஷன்’ என்கிறது பௌத்தம். மனசால் வாழ்பவன் மனுஷன். இதன் எதிரொலியே ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ ஆகும்.
***
தி கு இரவிச்சந்திரன்: ஃப்ராய்ட், யூங், லக்கான் சிந்தனைப் புலங்களில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருபவர். ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்- உளப்பகுப்பாய்வு அறிவியல்’ நூல் மூலம் ஃப்ராய்டையும் ‘ழாக் லக்கான்- குறியியல் உளப்பகுப்பாய்வுக்கு ஓர் அறிமுகம்’ நூல் மூலம் லக்கானையும் தமிழில் விரிவாக அறிமுகப் படுத்தியவர். இதுவரை உளப்பகுப்பாய்வு தொடர்பாகப் பதினாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தொல்காப்பியமும் ஃ ப்ராய்டியமும், தீண்டாமை நனவிலி, எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, அம்மா வந்தாள்- உளப்பகுப்பாய்வு, ஃப்ராய்ட் யூங் லக்கான்- அறிமுகமும் அதற்கு அப்பாலும் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சிக்மண்ட் ஃப்ராய்ட் நூலுக்காகச் சிறந்த நூலாசிரியர் விருதை நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியிலும் (2007), காப்பிய உளப்பகுப்பாய்வு நூலூக்காகச் சிறந்த திறனாய்வாளர் விருதான பஞ்சு பரிசிலைப் புதுவையிலும் (2019) பெற்றுள்ளார். திருப்பத்தூரைச் சார்ந்த இவர், தற்போது புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல்: tkravichandranphd@gmail.com

