Homeஇதழ்கள்2026 இதழ்கள்பூனைகளின் கணவன்

பூனைகளின் கணவன்

நிஜந்தன்

னுபவுக்குப் பூனைகள் பிடித்தன. அதுவும் அவனுடைய மனைவி பரினிதா தாய் வீட்டிற்குச் சென்ற பின்னால் அவனுக்குப் பூனைகள் மிகவும் பிடித்தன. திருமணம் முடிந்து இரவுப் பயணம் செய்து அவனுடைய வீட்டில் அவள் காலடி வைக்கும்போது அந்தக் கரும்பூனை அவளுடைய கால்களை வருடியது. பயந்து அவள் கால்களை விலக்கியபோது அந்தப் பூனை தூரப் போய் விழுந்தது. அனுபவ் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனுடைய தாய், தந்தை, அக்கா, தம்பிக்கு அவனுடைய பூனைப் பற்று நன்றாகவே தெரிந்தது. வீட்டுக்குப் பின்னால் விரிந்த இருள் காடுகளில் கண்களில் ஒளி வீசும் பூனைகளைத் தேடித் தேடி அவன் காணாமல் போவது அவர்களுக்குப் பெரிய அதிசயமாக இருக்கவில்லை. 

இரவுகள் மிகவும் கொடுமையாக இருந்தன. எப்படியும் ஒரு நாள் சாதித்துவிடுவான் என்றுதான் அவன் நினைத்தான். அது முடியாமலே போனது. பரினிதா ஏமாற்றத்தைக் காட்டாமல் அமைதியாக உறங்கிக் கழித்தாள். ஊரிலிருந்து அவளுடைய தாய் போன் செய்து கேட்டுக்கொண்டே இருந்தாள். ’எல்லாம் நலமா’ என்று அவள் விசாரித்தாள். ’ம்’ என்று மட்டும் பரினிதா சொல்லி வைத்தாள். அவள் ஒரு நாள் உண்மையைச் சொல்லிவிடுவாள் என்று அவன் நினைத்தான். சிறிய ஊர் முன்னால் அவமானம் தாங்க முடியாது. தற்கொலை செய்துகொள்ளக்கூட அவன் நினைத்தான். சே என்று நினைத்துக்கொண்டான். மனைவியும் முழு ஆதரவாக இல்லை. முடியும் என்று அவன் நினைத்தான். அவளிடம் சொன்னான். அவள் எப்போது முடியுமோ என்ற சலிப்பில் முகம் திருப்பிக்கொண்டாள். அவள் அதிருப்தி காட்டினால் அவளுக்குத் தேடல் அதிகம் என்ற அவமானம் வந்து சேரும் என்று அவள் எச்சரிக்கையாக இருந்தாள். அவனுடைய பெற்றோருக்கோ, தம்பிக்கோ எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள். ஒரு பெரிய நகரத்தில் வளர்ந்தவள், ஒரு சிறிய கிராமத்தில் வந்து சேர்ந்து, சிறிய ஊர்க்காரர்களின் மதிப்புக்கு ஏற்ப வாழ்வது பெரும் சுமையாக இருந்தது. அதுவே ஒரு சுய வன்முறையாக இருந்தது. அவளுடைய ஆழ்ந்த மனதின் அவலத்தை அவனுடைய தம்பி புரிந்துகொண்டது போல் இருந்தான். அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறிவிடுவான் போன்ற உடல் பாவனையில் இருந்தான். அரிசி மண்டிக்கு காலை எட்டு மணிக்குப் போகிறவன் இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினான். ஆனால் சில நாட்களில் மதியம் சாப்பாட்டிற்கு வந்து அவள் சாப்பிட்டாளா என்று அக்கறையுடன் கேட்டான். அனுபவ் ஒரு மளிகைக்கடையைப் பார்த்துக்கொண்டான். அவனுக்கும் நாள் முழுக்க கடை வேலையாக இருந்தது. மிச்ச நேரங்களில் வயல்வெளியில் விவசாய மேற்பார்வை செய்தான். 

பரினிதாவுக்குத் தெரியாமல் அனுபவ் மருத்துவர்களை நாடினான். முதலில் நகரத்தில் இருந்த ஒரு உளவியல் மருத்துவரை நாடினான். அவர் அவனை முதலில் அமைதியாக இருக்கச் சொன்னார். சரி என்று சொன்னான். உறவு தொடர்பாக பதற்றம் கூடாது என்று அவர் கூறினார். சரி என்றான். ஒரு முறை பரினிதாவை அவன் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அவளிடம் அவர் தீர விசாரித்தார். அவள் அவனுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்றார். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். வீடு வரும் வரை அவள் பைக்கின் பின் இருக்கையில் பேசாமலேயே அமர்ந்திருந்தாள். வீட்டுக்கு வந்து சாப்பிடாமலேயே அவள் உறங்கப் போனாள். அவள் கோபமாக இருக்கிறாளா என்று அனுபவின் அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் இல்லை என்றான். அவனுடைய அப்பாதான் கொஞ்சம் கூர்ந்து பார்த்தார். விஷயம் தெரியும் போல இருந்தது. அவனுடைய தம்பி கொஞ்சம் உள்ளூரச் சிரித்தது போல இருந்தது. அப்போது அவனுக்குப் பயமாக இருந்தது. 

அடிக்கடி அனுபவும் பரினிதாவும் மருத்துவர்களிடம் சென்று வருவது வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. அவனால் முழுமையான செயல்பாட்டுடன் இருக்க முடியவில்லை என்று அறிந்துவிட்டார்கள். பரினிதாவும் அவளுடைய பெற்றோருக்குச் சொல்லிவிட்டாள். அவர்களும் ஒரு முறை வந்து பொதுவாகவே பேசிவிட்டார்கள். அவர்கள் ஆண், பெண் என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசியது அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவனுடைய பெற்றோர் சமாதானம் பேசி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு அவன் மூலம் வாரிசு வந்தாக வேண்டும் என்று பெற்றோர் உறுதி பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரிலிருந்து வந்த அவனுடைய அக்காதான் பரினிதாவைக் குத்திக்கொண்டே இருந்தாள். அவள் ஏதோ சுகத்திற்கு அலைந்துகொண்டிருப்பவள் போல அவள் காட்டிக்கொண்டே இருந்தாள். அதனால் பரினிதா ஒரு முறை செத்துவிடலாம் என்று தோன்றுவதாகச் சொன்னாள். ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாள். போன ஒரே வாரத்தில் அவளை அவளுடைய பெற்றோர் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். எப்படியாவது மகளைத் தாயாக்கி அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஊரில் தலை காட்ட முடியாது என்று அவர்கள் கவலையுடன் கூறினார்கள். இவனுடைய பெற்றோருக்கு குடும்ப மானம் என்பது இல்லையா என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி கூறினார்கள். அனுபவ் மிகவும் வருந்திப் போனான். 

மீண்டும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுபவை பெற்றோர் கூட்டிப் போனார்கள். அவனால் சாத்தியம் ஆவது சிரமம் என்று மருத்துவர்கள் கை விரித்தார்கள். இனி ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்று அனுபவின் பெற்றோர் முடிவு செய்தார்கள். குடும்ப மானம் முக்கியம் என்று அவனிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஊர் உலகத்தில் நடக்காதது எதுவும் இல்லை என்று அவனைச் சமாதானம் செய்தார்கள். அவனும் சரி என்று சொல்லாவிட்டாலும், வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை. மதியச் சாப்பாட்டிற்கு வரும் அவனுடைய தம்பி கடைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துகொண்டான். 

பரினிதா கர்ப்பமடைந்தபோது அனுபவ் மிகவும் அக்கறையுடன்தான் பார்த்துக்கொண்டான். அவளுக்கும் அது ஆச்சர்யமாக இருந்தது. வீட்டுக்குள் நடக்கும் விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதே மேல் என்று இருந்தது. இருந்தாலும் அவன் இத்தனைப் பற்றுடன் இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. குழந்தைப் பேறுக்காக அவள் ஊருக்குப் போனபோது அவன் மிகுந்த துயருடன் அவளை அனுப்பி வைத்தான். அவனுடைய பற்றைப் பார்த்து அவளுடைய பெற்றோருக்கே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. 

பரினிதாவுக்கு குழந்தை பிறக்கும் வரை அவன் ஊர் சென்று பார்க்கவில்லை. குழந்தை பிறக்கும் நாளன்றுதான் அவன் ஊருக்குப் போனான். அந்தப் பெரிய நகரம் அவனுக்கு மிகுந்த அச்சம் ஊட்டியது. பெரும் ஆபத்து காத்திருப்பது போல இருந்தது. குழந்தையைப் பார்க்க அவனுடைய பெற்றோரும், அக்கா, தம்பியும் வந்தார்கள். அவன் எதுவும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக நடந்து சென்று ஒரு பெரிய பாலத்தின் உச்சியில் நின்றுகொண்டான். விழுந்துவிடலாம் என்று இருந்தது. அது முடியாது. வேண்டாம்.

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு அனுபவ் ஊர் வந்துவிட்டான். நகரத்திலிருந்து வரும்போதுதான் கிராமத்தின் ஆழம் புரிந்தது. அவன் வந்த இரண்டு நாட்களும் வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அப்போது அடுத்த வீட்டுப் பூனை ஜன்னலில் எட்டிப் பார்த்தது. வீட்டில் இருந்த பூனை அந்தப் பூனையுடன் சென்று குலாவியது. இரவுகளில் இரண்டு பூனைகளும் சப்தம் எழுப்பி தெருவையே அதிர வைத்தன. 

இரண்டு நாட்களில் அம்மாவும், அப்பாவும் கிளம்பி வந்தார்கள். தம்பி மட்டும் ஊரிலேயே தங்கிக்கொண்டான். அனுபவுக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போதுகூட அவன் சீக்கிரம் அவுட் ஆகிவிடுவான். அவனுடைய தம்பிதான் நின்று ஆடுவான். அனுபவை எப்போதும் டக் அவுட் என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள். அதுவும் அவனுக்கு கிரிக்கெட் பேட்டே பிடிக்கத் தெரியவில்லை என்ற அவர்கள் கேலி பேசி அழ வைத்துவிடுவார்கள். கிரிக்கெட் பேட்டை அவன் இரண்டு கால்களுக்கு நடுவே பிடித்துக்கொண்டு ஆடுவதுதான் எப்போதும் உடன் ஆடுபவர்களுக்கு சிரிப்பைத் தந்தது. அவன் அதற்குப் பிறகு ஆடுவதை நிறுத்திக்கொண்டான். கொஞ்சம் கால் முன் வைத்து இலேசாக இடுப்பை ஆட்டிக்கொண்டு அவன் நடப்பதைக் கண்டு நண்பர்கள் எள்ளி நகையாடுவது உண்டு. அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி இருக்கவில்லை. இறுதியில் திருமணம் முடித்து இப்படி ஒரு அவலம் வரும் என்று அவன் நினைக்கவில்லை.

பிரசவத்திற்குப் போன மனைவி திரும்ப வருவாளா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு முறை வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவள் அவனுக்கு போன் செய்து கூறிக்கொண்டிருந்தாள். அவள் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு வரலாம் என்று அவன் கூறிவிட்டான்.

வீட்டில் இருந்த பூனை இரண்டு மாதங்களில் ஐந்து குட்டிகளை ஈன்றது. அந்த ஐந்து குட்டிகளும் அவன் மடியில் விழுந்து புரண்டன. அவற்றின் மெல்லிய ஒலி அவனுக்கு உற்சாகம் ஊட்டியது. இரண்டு மாதங்களில் அந்தப் பூனைக் குட்டிகள் குதித்து ஓடின. அவற்றில் ஒரு குட்டி பெரிய பூனைக்குட்டியாக மாறியது. களத்து மேடுகளில் அது ஓடும்போது அதைத் துரத்திக்கொண்டு அவன் ஓடினான். அவன் பார்வையில் படாமல் அந்தப் பூனைக்குட்டி துள்ளி ஓடியது. இன்னும் மற்ற பூனைக்குட்டிகளும் அவனுடன் விளையாடிக் களித்தன. அவற்றில் ஒரு பூனைக்குட்டி ஆண் பூனைக்குட்டி என்று அவனுக்குப் புரிந்தது. மற்ற பெண் பூனைக்குட்டிகள் காடுகளில் அலைந்து வந்தன. அவற்றில் ஒரு பூனைக்குட்டி கர்ப்பம் தரித்தது. அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. இரண்டு மாதங்களில் அது மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றது. அவற்றில் ஒன்று இறந்து போனது. மற்ற ஒன்றை இரவு நேரம் உலா வந்த நாய் ஒன்று குதறிவிட்டுப் போனது. அந்தப் பூனைக்குட்டியின் மரணம் அவனை அசைத்துப் போட்டது. இரண்டு நாட்கள் அவன் அழுதபடியே இருந்தான். அவனை அவனுடைய அம்மாதான் தேற்றினாள். 

‘விடுடா. ஏன் இப்படி அழுவறே’ என்று அவள் தேற்றியபடி இருந்தாள். கொஞ்சம் அவன் அடங்காதபோது, ’ஏதோ சொந்த பந்தம் செத்த மாதிரி அழுவறே’ என்று தம்பி குத்திக் காட்டினான். 

அந்தப் பூனைக்குட்டி வளர்ந்து குட்டி ஈன்றபோது தாய்ப் பூனையை அவன் கொஞ்சி மகிழ்ந்தான். அவனைப் பார்த்து தம்பி காறித் துப்பினான். ‘டேய் நீ ஏதோ அந்தப் பூனைக்குட்டிக்கு புருஷன் மாதிரி நடந்துக்கற?’ என்று அவன் கூறினான்.

அவனுக்கு அப்போதுதான் உறைத்தது. தம்பி மீது அனுபவுக்குக் கோபம்தான் வந்தது. 

மேலும் மேலும் பூனைகளை வளர்ப்பது அவனுக்கு உற்சாகம் அளித்தது. அந்தப் பூனைகள் பக்கத்து வீடுகளில் நுழைந்து அட்டகாசம் செய்வதும் அவனுக்குப் பிடித்தது. கழனிக்குப் போகும்போது இரண்டு பூனைக்குட்டிகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு அவன் உற்சாகமாகச் சென்றான். அவன் கண்காணிக்க கூலிக்காரப் பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்வதை அவன் மகிழ்வுடன் கவனித்தான். அவன் கொண்டு சென்ற பூனைகள் மரங்களில் தாவி கிளைகளில் உறங்கி தரையில் ஊர்ந்து படுத்துக்கொள்வதை அவன் மிகவும் ஆசையுடன் ரசித்தான். 

மாலை வேலை முடிந்து கூலி கொடுக்கும் சமயங்களில் அந்தப் பெண்கள் அவனைக் கேலியாகப் பார்த்தனர். 

‘என்னங்க முதலாளி, பூனைக்குட்டிகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’ என்று ஒரு பெண் கேட்டபோது அவன் சற்று புன்முறுவலுடன் பதில் அளித்தான். 

‘பையன் கிடைக்கலை. கிடைச்சதும் கட்டி வைக்க வேண்டியதுதான்’ என்று அவன் பதில் சொன்னபோது அந்தப் பெண்கள் கை கொட்டி வாய் விரித்துச் சிரித்துச் சென்றனர். 

அவனும் சிரித்துக்கொண்டான். 

‘நீங்கதான் இருக்கீங்களே முதலாளி’ என்று ஒரு பெண் பேசிக்கொண்டு போனது அவன் காதில் விழுந்தது. 

வீட்டுக்கு வந்து மற்ற பூனைக் குட்டிகளைப் பார்த்ததும் அவனுடைய கவலைகள் எல்லாம் மறந்து போயின. காற்றில் பறந்து போயின. பூனைக் குட்டிகள் இரவுகளில் சப்தம் எழுப்பி உறவு கொள்வதைப் பார்ப்பதும், அவை கருத்தரித்து கனத்த நடை கொண்டு இயங்குவதைக் கவனிப்பதும் அவனுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தன. இந்த ஆண் பூனைதான் எத்தனை வலு கொண்டதாக இருக்கிறது? எத்தனையோ பெண் பூனைகளை அது தாயாக்கியிருக்கிறது. வாழ்வில் இதெல்லாம் ஒரு மிகுந்த ஆச்சர்யம் கொண்ட அம்சங்கள்தான்.

அனுபவ் வளர்த்த பூனைகள் அந்தப் பகுதி முழுக்க நிறைந்தன. பல தெருக்கள் தாண்டி இருந்த பெட்டிக் கடைகளுக்கு அருகில் அவை நின்று வருபவர் போகிறவர்களை உற்று நோக்கின. ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இறைச்சிக் கடைக்கும் அவை சென்று அங்கேயே வாசம் புரிந்தன. அவ்வப்போது தரையில் வந்து விழும் கறிக் கழிவுகளுக்காக அவை ஏங்கித் தவித்தன. அங்கேயே குடி கொண்டு குடும்பம் வளர்த்தன. சில பூனைகளை எப்போவாவது சென்ற லாரிகளின் சக்கரங்களில் அடிபட்டுச் செத்தன.

அப்படி ஒரு பூனை செத்தபோது அனுபவ் நேராக அந்த இடத்திற்குச் சென்று லாரி ஓட்டுநரிடம் கடுமையாகச் சண்டை போட்டுவிட்டான். அவனை அடிக்காத குறையாக அந்த லாரி ஓட்டுநர் அனுப்பி வைத்தார். அந்தப் பூனை உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல பூனைகளை ஈன்றெடுக்கும். அந்தப் பூனைகள் இன்னும் பல பூனைகளைப் பெற்றெடுக்கும். அவை இல்லாமல் போன உலகம் வெறுமையானது. இந்த உலகம் எப்போதும் ஏமாற்றமே அளிக்கிறது. இந்த உலகில் இல்லாமல் போய்விட்டால் என்ன என்றுகூட அவன் நினைக்கத் தொடங்கிவிட்டான். அவனுடைய மன நிலை கண்டு அவனுடைய தம்பி சிரித்துக்கொண்டே இருந்தான். எப்போதும் அதிகம் பேசாத அவனுடைய தந்தைகூட கடிந்துகொண்டார். அவனை யாருமே புரிந்துகொள்வதில்லை என்ற விரக்தியில் அவன் மொட்டை மாடியில் சென்று நின்றுகொண்டான். நிலா காய்ந்தது. அவனுக்கு ஏதேதோ திரைப்படப் பாடல்கள் தோன்றின. அந்தச் சூழல் மிகுந்த ஏக்கம் தந்தது. அந்த ஏக்கமே மகிழ்வின் உயர்வாக இருந்தது. அதெல்லாம் மறுக்கப்படுவது போல இருந்தது. அந்த வெற்றிடம், மிகுந்த வெறுப்பைத் தந்தது. அப்படியே மாடியிலிருந்து குதித்துவிடலாம் என்றுதான் எண்ணினான். அது மட்டும் கூடாது. உயிர் மிகவும் மதிப்பு மிக்கது. அதை இந்த மனிதர்களுக்காக விட்டுவிடக் கூடாது என்று அவன் தீர்மானமாக இருந்தான். 

மெதுவாக அவன் கீழே இறங்கி வந்தான். அவனுடைய அம்மா மேஜையில் அவனுக்காக இட்லி வைத்திருந்தாள். அவனுக்குப் பிடித்த தக்காளி சட்னியும் இருந்தது. அதைப் பார்த்ததும் பசியாக இருந்தது. அவன் மெதுவாகக் கை கழுவி விட்டு வந்து மேஜை அருகே அமர்ந்துகொண்டான். அம்மா தட்டு எடுத்து வைத்து இட்லிகளை அடுக்கினாள். அவன் எதுவும் நினைவு அற்றவன் போல இட்லி சாப்பிட்டான். பால்கனியில் நின்றிருந்த இரண்டு பூனைக் குட்டிகள் அவனையே உற்றுப் பார்த்தன. அவன் அவற்றைப் பார்த்துச் சிரித்தான். அவற்றிற்கு அவனுடைய உணர்வு புரிந்திருக்கும் என்று தெரிந்தது. 

‘பூனை பால் குடிச்சதாம்மா?’ என்று கேட்டான் அவன்.

அம்மா பதில் சொல்லவில்லை. 

’நீ சாப்பிட்டுட்டு அப்புறம் கவனிக்கலாம் உன் பூனைகளை’ என்று அவள் கொஞ்சம் சலிப்புடன் சொல்லிவிட்டாள்.

அவன் வேகம் வேகமாக இட்லி சாப்பிட்டுவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து பால் கவர் எடுத்து, வெட்டி, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து இலேசாக சூடு செய்து, ஆற்றி, ஒரு கிண்ணத்தில் ஊற்றி பூனைகளுக்கு வைத்தான். அவை சப்பிச் சப்பிக் குடிக்கும் காட்சி அவனுக்கு ஆறுதல் தந்தது. பால் குடித்தப் பூனைகள் பால்கனியின் சுவர் தாண்டி வராண்டாவிற்குள் குதித்து விளையாடத் தொடங்கின.

அபினவுக்குத் தூக்கமாக வந்தது. அவன் படுக்கையில் விழுந்து நன்றாக உறங்கிப் போனான். பூனைகள் சண்டை போடுவது போல சத்தம் கேட்டது. அவன் எழுந்து ஒரு பூனை போல நடந்து சென்று பார்த்தான். 

இரண்டு பூனைகள் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவனுக்கு கோபமாகவும் இருந்தது. ஈர்ப்பாகவும் இருந்தது. பூனையால்கூட முடிகிறது என்று நினைத்துக்கொண்டான். அதைப் பார்த்துக்கொண்டு இருப்பதே போதும் போல இருந்தது. அவன் பார்ப்பதை அந்தப் பூனைகள் அறிந்துகொண்டது போல இருந்தது. தங்கள் தனிமையில் அவன் தலையிடுவதை அவை விரும்புவது போலத்தான் இருந்தது. அது தனக்கு அளிக்கப்பட்ட தனிச் சலுகை என்று அவன் நினைத்துக்கொண்டான். அவற்றின் மகிழ்வில் தானும் பங்கு பெறுவது போல அவன் இருந்தான். இருப்பினும் அவற்றிற்கு எந்த வகையிலும் தொல்லை தந்துவிடக் கூடாது என்று அவன் மறைந்திருந்தே அவற்றை ரசித்தான். அது அவற்றிற்குத் தருகிற தனி கவனம் என்று நினைத்துக்கொண்டான். உண்மையில் தான் மகிழ்வுடன் இருக்கும்போது தன்னை யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை போல அது இருந்தது. 

அடுத்த நாள் இரவும் பூனைகள் பெரும் சப்தம் எழுப்பியபோது அவன் எழுந்து சென்று பார்த்தான். பூனைகள் விளையாடிக்கொண்டு இருந்தன. அது அவனுக்கு உற்சாகம் அளித்தாலும் அவை உறவில் இருந்துவிடாதா என்ற எண்ணம்தான் அவனிடம் மேலோங்கி நின்றது. அந்த மகிழ்வை அந்த பூனைகள் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அடுத்த நாள் இரவு அந்தப் பூனைகள் இணைந்து மகிழ்ந்தபோது அவன் குதூகலித்துக் கிடந்தான். எப்படியும் இந்தப் பூனைகள் இனப்பெருக்கம் செய்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது. இப்படிப் பூனைகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதே பெரும் மகிழ்வு என்று அவன் நினைத்தபடி இருந்தான். 

குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து பரினிதா ஊரில் இருந்து வந்தாள். கொஞ்சம் குண்டாகி இருந்தாள். குழந்தையும் இப்போது கொஞ்சம் வேறு முகம் கொண்டிருந்தது. வளரும் குழந்தைகளுக்கு முகங்கள் மாறும் என்று அவனுடைய அம்மா கூறிக்கொண்டிருந்தாள். அவனுடைய தம்பிக்குத்தான் குழந்தை மீது அலாதியான அக்கறை இருந்தது. இரவுகளில் தனி அறையில் பரினிதாவும் குழந்தையும் உறங்கினார்கள். இரவுகளில் உறங்காமல் குழந்தை அழுதது. அதற்குப் பால் கொடுத்து சீராட்டி விளையாட்டி காட்டினாள் பரினிதா. அபினவுக்கு எங்கோ பூனைகள் போடும் சப்தம்தான் அதிகம் கேட்டது. பூனைகளைச் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்தான். தினமும் உறக்கம் இல்லாமலேயே போனது. பகலில் கடைக்கும் கழனிக்கும் போய் சரியாக பணிகளைக் கவனிக்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது. பெரும்பாலும் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வருவதை அவன் நிறுத்தினான். தம்பிதான் தினமும் மதியம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு உறங்கிவிட்டு வந்தான். மாலைகளில் அபினவ் வீடு திரும்பும்போது பரினிதா சோர்வாகவும் கொஞ்சம் மகிழ்வாகவும் இருந்தாள். அவனுக்குக் கோபமாகவும் அவமானமாகவும் இருந்தது. 

எதையும் பொருட்படுத்தாமல்தான் வாழ வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டான். காலை எழுவது, அம்மா சமைக்கும் இட்லி, தோசையைச் சாப்பிடுவது, கடைக்கு ஓடுவது, கழனிக்குப் போவது, ஓயாமல் வேலை செய்வது, மாலை வந்து குளித்து மீண்டும் அம்மா தரும் உணவைச் சாப்பிடுவது, கொஞ்ச நேரம் டிவி பார்ப்பது, மனைவி, குழந்தை இருக்கும் அறைக்கு ஒரு முறை சென்று எட்டிப் பார்த்து வந்துவிடுவது, உடனே தன் அறையில் சென்று படுத்துவிடுவது, நள்ளிரவில் எழுந்து பூனைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது. அதில் உளம் மகிழ்வது, உற்சாகம் கொள்வது, மகிழ்வு அடைவது, எதிலும் ஒட்டாமல் இருந்துவிட வேண்டும் என்று மீண்டும் அறையில் வந்து படுத்துவிடுவது. இப்படிப் போயின அவனுடைய நாட்கள்.

இதைவிட வாழ்க்கையில் என்ன முக்கியம் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

இரவில் பூனைகள் சத்தம் இல்லாவிட்டால் அவனுக்கு தூக்கமே வராமல் போய்விட்டது. பூனைகள் வாரம் முழுவதும் சப்தம் போடுவதில்லை. சண்டை இடுவதில்லை. அவற்றிற்குள் முரண் வரும்போதுதான் அவை மூர்க்கம் காட்டுகின்றன. அவற்றிற்குள் ஆசை வந்துவிட்ட போதும் அவை ஒன்றையொன்று துரத்தி அன்பால் கடித்துக் கொஞ்சி சப்தம் எழுப்புகின்றன. இவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி ஆகிவிட்டது. ஒரு நாள் தூக்கம் கலைந்து பூனைகளைத் தேடி அவன் வெளியே வந்து பார்த்தான். பூனைகள் எந்தச் சப்தமும் எழுப்பாமல் சல்லாபம் புரிந்துகொண்டிருந்தன. அவனுக்கு அதைப் பார்க்கப் பார்க்க மகிழ்வும் உற்சாகமும் தலைக்கு ஏறின. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து அவன் உறங்கினான். மீண்டும் பூனைகளின் சப்தம் கேட்டபோது அவன் எழுந்து செல்ல முயன்றான். மனைவியின் அறைக்குள்ளிருந்து தம்பி வருவதைப் பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் கோபமாக வந்தது. அதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம் என்றுதான் நினைத்தான். படுக்கையில் வந்து விழுந்தான். மனம் படபடத்தது. மூளையில் ஏதோ துடித்தது. இதெல்லாம் புதிதாக எதற்கு வர வேண்டும் என்று நினைத்தான். எத்தனையோ மாதங்களாகப் பழகிவிட்டதுதானே. மனதை தேற்றிக்கொண்டு அவன் படுத்தான்.

அடுத்த நாள் அவன் அலுவலகம் போகவில்லை. ஜுரம் என்று சொல்லிக்கொண்டு அவனுடைய அறையிலேயே அவன் முடங்கினான். அவனுடைய அறைக்கே கஞ்சி கொண்டு வந்து கொடுத்தாள் அம்மா. அவள் அவனைப் புரிந்துகொண்டது போல இருந்தது. இதற்கெல்லாம் அவளும்தானே காரணம் என்று அவனுக்கு புதிதாகக் கோபம் வந்தது. அவள் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள்.

மதியம் வழக்கம் போல தம்பி சாப்பிட வந்தான். அவனும் அபினவின் அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கடைக்குப் புறப்பட்டுவிட்டான். இல்லாவிட்டால் அவன் கடைக்குப் போயிருக்க மாட்டான் என்று அபினவ் அறிவான். தான் எதற்குப் புதிதாக கிளர்ந்து எழ வேண்டும் என்று தனக்குத் தானே அவன் கேட்டுக்கொண்டான்.

அந்த இரவுதான் அவனுக்கு அன்று பெரும் சுமையாக இருந்தது. தூக்கமே வராமல் அவன் புரண்டு படுத்தான். பூனைகளின் சப்தம் கேட்டால் நலமாக இருக்கும் என்று அவன் ஏங்கினான். அவன் எதிர்பார்த்தது போல பூனைகளின் சப்தம் கேட்டது. அவன் படபடப்பாக எழுந்து வெளியே சென்றான். பூனைகளைக் காணவில்லை. அவன் அவற்றின் சப்தம் இருக்கும் இடம் தேடிப் போனான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. ஒரு இடம் போனால் வேறு இடத்தில் சப்தம் கேட்டது. அவன் சரியாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான். அவனுடைய வீட்டில் இருந்த பெண் பூனையை வேறு ஒரு ஆண் பூனைத் துரத்திக்கொண்டு இருந்தது. அவனுக்கு ஒரு கணம் கோபமாகத்தான் வந்தது. எப்போதும் வீட்டுப் பூனையுடன் வேறு ஒரு ஆண் பூனை இணைவதில்லை. வழக்கமாக அடுத்த வீட்டுப் பூனைதான் இணையத் துரத்தும். இது புது பூனையாக இருந்தது. பூனைகளுக்கும் அந்த வேறுபாடு இருக்காது என்று அவனுக்கும் புரிந்தது. இருந்தாலும் பெரும் கோபமும் ஆற்றாமையும் அவனுள் தகித்துக் கிடந்தன. பூனைகளின் இணைப்பைக் கண்டு பெரு மகிழ்வு கொள்பவன்தான் அவன். தானே அந்த செயல்பாட்டில் இருப்பது போல் அவன் சிலிர்த்துக் கிடந்தது உண்டு. ஆனால் அன்று அவன் இழப்பில் இருந்தவன் போல உணர்ந்தான். அவன் எதிர்பாராத கணம் ஒன்றில் இரண்டு பூனைகளும் இணைப்பில் இருந்தன. அவற்றின் இயக்கத்தில் ஒரு இறுக்கம் இருந்தது. அவற்றின் முகங்கள்கூட மகிழ்வும், வலியும் கொண்டதான ஒரு படபடப்பில் இருந்தன. அதைப் பார்க்கும்போது அவனுக்கு வெறுப்பு தலைக்கு ஏறியது. அவனுக்கு மேல் மூச்சு வாங்கியது. இதை நிறுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான். ஒரு வேகத்தில் அவன் ஒரு கல்லை எடுத்து பூனைகளின் மீது வீசினான். அது நேராக ஆண் பூனை மீது விழுந்தது. அந்தப் பூனை எழுப்பிய சப்தம் பக்கத்துக் காடு வரை எதிரொலித்தது. அவனுடைய வீட்டுப் பூனை மாயமாக எங்கோ பறந்து மறைந்தது. மூச்சு வாங்க அவன் மெதுவாக தன் அறைக்கு வந்து படுத்தான்.

‘அட என்னடா ஆச்சு?’ என்று அம்மா கதறும் சப்தம் கேட்டது.

‘அய்யோ’ என்று பரினிதா போடும் சப்தமும் கேட்டது.

’ஏங்க இங்க வாங்க. டேய் அபினவ் வாடா. இங்கே வந்து பார் தம்பியை’ என்று அம்மா கதறுவது கேட்டது.

அவன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். முன் வாசலில் முகம் கோண தம்பி கீழே கிடந்தான். அவனுடைய இடுப்புக்குக் கீழே பெரிய காயம் ஏற்பட்டு வேட்டியில் இரத்தம் கொட்டிக்கொண்டு கிடந்தது. 

அவனையே உற்றுப் பார்த்தான் அபினவ்.

***

நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மின்னஞ்சல்: knijanthan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here