Homeஇதழ்கள்2026 இதழ்கள்கலைக்குள் கண்ணியம்

கலைக்குள் கண்ணியம்

நிர்மல்

ட்டுரையின் தலைப்பு “கலைக்குள் கண்ணியம்” என்பதால், அதைப் பற்றிப் பேச முயலும் இக்கட்டுரையும் அந்தக் கண்ணியத்தை பிரதிபலிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்தக் கட்டுரையின் தொனியிலோ, விமர்சனங்களிலோ, சொல்லாடல்களிலோ அந்தக் கண்ணியத்தின் அளவு குறைந்திருக்குமேயானால், அக்குற்றத்திற்கு என்னைப் பொருத்தருள வேண்டுகிறேன்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களைப் பற்றிப் பேசும்போது, அவர் என்ன செய்தார் என்ற பட்டியலையே பெரும்பாலும் முன்வைக்கிறோம். கிராமத்தைத் திரைக்குக் கொண்டு வந்தார், புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார், தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றி அமைத்தார் எனப் புகழ்கிறோம். ஒரு கலைஞனை அவர் செய்தவற்றால் மட்டும் அளவிட முடியுமா? அவர் செய்யாமல் தவிர்த்தவற்றைக் கொண்டும் அளவிட வேண்டுமல்லவா! பாரதிராஜா அவர்கள் செய்யாமல் தவிர்த்தவை எவை என்ற கேள்வி, ஒருவேளை அவரது திரைப்படங்களையும் அவரது கலை உள்ளத்தையும் வேறொரு வெளிச்சத்தில் பார்க்க நமக்கு உதவக்கூடும்.

அவர் கிராமியப் பண்பாட்டை வினோதப் பொருளாக்கவில்லை. ஆங்கிலத்தில் ‘Fetish’ என்கிற சொல் உண்டு. ஒரு பொருளின் இயல்பானத் தன்மையை மறந்துவிட்டு, அதை வெறும் காட்சிப் பொருளாக, வினோதமாக, ரசனைக்கானப் பொருளாக மட்டும் மாற்றுவது என்று இதற்குப் பொருள். எளிமையாகச் சொன்னால், மனிதர்களை மறந்துவிட்டு அவர்களின் அடையாளங்களையோ பழக்கவழக்கங்களையோ மட்டும் வேடிக்கைப் பார்ப்பது.

உதாரணமாக, கிராமத்தை மனிதர்கள் வாழும் இடமாகப் பார்க்காமல் வெறும் மாட்டு வண்டி, கரகாட்டம், திருவிழா, வண்ண உடைகள் என்பதோடு மட்டுமன்றி—வன்முறை, மீசை, அருவாள், வெட்டு குத்து, ரத்தம், அடக்குமுறை போன்ற காட்சிகளின் தொகுப்பாக மட்டும் சுருக்குவது; ஒரு சமூகத்தின் துயரங்களையும் சிக்கல்களையும் மறைத்துவிட்டு, அதன் “வித்தியாசத்தை” மட்டும் சந்தைப்படுத்துவது. இதை நாம் தமிழில் “வினோதப் பொருளாக்கம்” அல்லது “காட்சிப் பொருளாக்கம்” என்று சொல்லலாம்.

பாரதிராஜா இப்படியானக் காட்சிப் பொருளாக்கத்திற்குத் தன் கலையில் இடம் கொடுக்கவில்லை. ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை, அதன் மனிதத் தன்மையை மறந்துவிட்டு, வெறும் ரசனைக்கான காட்சிப் பொருளாக அவர் மாற்றியதில்லை. திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், கலைகள் ஆகியவற்றின் பின்னால் வாழும் மனிதர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. பண்பாட்டை மதிப்பது என்பது, அதை விற்பனைப் பொருளாக்காமல் இருப்பதில்தான் தொடங்குகிறது.

பாரதிராஜா அவர்கள் மனிதர்களை வெறும் காட்சிப் பொருளாக மாற்றவில்லை. மாற்றுத்திறனாளிகளை நகைச்சுவைக்கான கருவியாகவோ, இரக்கத்தைப் பிச்சையெடுக்கும் பாத்திரங்களாகவோ அவர் பயன்படுத்தியதில்லை. மனிதர்களின் வலியையும் பலவீனத்தையும் மலிவான உணர்ச்சிகளுக்கான சந்தையாக அவர் மாற்றியதே இல்லை. கலையை நாம் நுகரும் ஒரு பண்டமாக (Commodification) அவர் சுருக்கவில்லை. கலை என்பது மனிதர்களைப் புரிந்துகொள்வதற்காகவே என்பதைத் தன் படைப்புகள் மூலம் அவர் உணர்த்தினார்.

அவர் காதலைப் பற்றிப் பேசத் தயங்கியதில்லை. ஆனால், காதலை வெறும் பாடல்களுக்கும் பொழுதுபோக்கிற்கும் சுருக்கிவிடவில்லை. காதலை அதன் இயல்போடு, மனித சுதந்திரத்தின் அடையாளமாகக் காட்சிப்படுத்தினார். காதல் என்றதும், அதை அதீதமாகப் புகழ்ந்தோ ஆராதித்தோ அவர் காட்டியதில்லை. அதே நேரத்தில், அவரது திரைப்படங்களில் காதல் தோல்வியடையவும் செய்கிறது. ஆனால், அங்கே தோல்வியடைவது காதல் அல்ல; காதலைத் தாங்கிக்கொள்ள முடியாத சமூக அமைப்புகள்தான்! ஒவ்வொரு காதல் தோல்வியிலும் சாதி தோல்வியடைகிறது, குடும்பத்தின் பிடிவாதம் தோல்வியடைகிறது, மனிதர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூக ஒழுங்குகள்தான் அங்கே தோல்வியடைகின்றன. காதலின் தோல்வி, காதலின் பொய்மையை நிரூபிப்பதில்லை; மாறாக, அதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்தச் சமூகத்தின் எல்லைகளையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாரதிராஜா தமிழ்க் கிராமங்களை நேசித்தார். ஆனால், அவற்றைப் பற்றிப் பொய் சொல்லவில்லை. மண்ணின் வாசனையைப் பதிவு செய்த அதே நேரத்தில், அதன் நிழல்களையும் சாதியக் கொடுமைகளையும் மறைக்கவில்லை. அதே நேரத்தில், கிராமங்களை முழுமையான இருளின் சின்னங்களாகவும் அவர் காட்டவில்லை. தீர்ப்பளிப்பதை விட, சிக்கல்களை அப்படியே வெளிப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது.

பாரதிராஜா அவர்கள், மனிதர்களை அவர்களது குழு அடையாளங்களுக்குள் சிறை வைக்கவில்லை. அவரது திரைப்படங்களில் சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது, மரபுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு முழு சமூகத்தையே வில்லனாகவோ, ஒரு சாதியையே ஒரே குணாதிசயத்துடனோ, ஒரு மதத்தையே ஒட்டுமொத்தப் பிரச்சினையின் மூலமாகவோ சித்தரிக்க அவர் முயன்றதே இல்லை. அவருக்கு முக்கியமானது குழு அடையாளம் அல்ல; அந்த அடையாளங்களுக்குள் வாழும் மனிதர்கள்தான். ஏனெனில் ஒரு மனிதன், அவனது அடையாளத்தை விடப் பெரியவன். கலை, அடையாளங்களை அறிமுகப்படுத்தலாம்; ஆனால் மனிதர்களை அந்த அடையாளங்களுக்குள் சிறை வைக்கக் கூடாது.

பாரதிராஜா நட்சத்திரங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவில்லை. நடிகர்களை விடக் கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். தனிமனித வழிபாட்டைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற கலையின் மிக அடிப்படைத் தன்மையை அவர் ஆழமாகப் புரிந்திருந்தார்.

இளையராஜாவுடன் அபூர்வமான கலைச் சேர்க்கையும் ஆழமான நட்பும் இருந்தபோதிலும், அவர் தன்னை அந்த ஒரு கூட்டணிக்குள் மட்டுமே அடைத்துக் கொள்ளவில்லை. தன் கலையுணர்வின் சுதந்திரத் தன்மையை அவர் எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை.

இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவை, உடலை விற்பனைப் பொருளாக்கும் காட்சிகள் போன்ற மலிவானப் பாதைகளை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் காதலைக் காட்டினார், கொச்சைத்தனத்தை அல்ல. அவர் ஈர்ப்பைக் காட்டினார், ரசனையோடு காட்டினார், எப்போதும் எல்லை மீறியதில்லை. 

பாரதிராஜா அவர்கள் அரசியலை நேரடிப் பிரசாரமாகவோ, ஒரு பரப்புரையாகவோ திரைப்படங்களில் திணிக்கவில்லை. ஆனால் அவரது திரைப்படங்களே மிகச்சிறந்த அரசியல் உரையாடல்களை உருவாக்கின. யாருடைய கதைகள் சொல்லப்பட வேண்டும்? யாருடைய காதல் மதிப்பிற்குரியது? யாருடைய வாழ்க்கை திரையில் இடம்பெற வேண்டும்? திரையில் காட்டும்போது அதை எப்படி கண்ணியமாகக் காட்ட வேண்டும்? போன்ற அரசியல் கேள்விகளை அவரே அழுத்தமாக எழுப்பினார்.

இன்றைய தமிழ்நாட்டில் கலைத்திறனும் மக்கள் செல்வாக்கும் தேர்தல் அரசியலுக்கான முதலீடாக மாற்றப்படுவது பொதுவான ஒன்றாக ஆகிவிட்டது. அந்தச் சூழலில் பாரதிராஜாவின் தேர்வு கவனிக்கப்பட வேண்டியது. அவரிடம் புகழ் இருந்தது, மக்கள் அன்பு இருந்தது, அரசியல் தொடர்புகளும் இருந்தன. இருந்தும், அவர் தனது கலை வாழ்க்கையை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஏணியாக மாற்றிக் கொள்ளவில்லை. அதே வேளையில், ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றத்தை வெளிக்காட்டவும் அவர் தயங்கியதில்லை.

கலைஞனின் பணி என்பது, மனிதர்கள் தங்களை இன்னும் மேன்மையாகக் கற்பனை செய்துகொள்ளத் தூண்டுவது; மற்றவர்களின் சிந்தனையை மாற்றுவது. மாறாக, மனிதர்களை வெறும் ரசிகர்களாக்கி, வாக்கு வங்கியாக்கி, அவர்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ஆட்சியைப் பிடிப்பது அல்ல.

பாரதிராஜா ஆன்மிகப் பிரசங்கராகவும் மாறவில்லை. அவரது திரைப்படங்களில் மனித வாழ்க்கையே மையமாக இருந்தது. மனிதனைப் புரிந்துகொள்வதையே அவர் தனக்கான ஆன்மிகப் பயணமாகக் கொண்டிருந்தார்.

ஒரு கலைஞனின் மகத்துவம் அவர் அடைந்த வெற்றிகளில் மட்டும் இல்லை. அவர் நிராகரித்த சமரசங்களிலும் இருக்கிறது. பாரதிராஜா திரைப்படங்களை மட்டும் உருவாக்கவில்லை, ஒரு கலைஞன் எதைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தார்மீக அளவுகோலை உருவாக்கினார். சில நேரங்களில் ஒரு கலைஞனின் மகத்துவம் அவர் செய்தவற்றில் இல்லை, அவர் செய்ய மறுத்த சமரசங்களில்தான் இருக்கிறது.

கலைக்குள் மண் இருக்கலாம், காதல் இருக்கலாம், அரசியல் இருக்கலாம், பெரும் வலியும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தாங்கி நிற்க வேண்டிய அடிப்படை ஒன்றுண்டு… அதுதான் கண்ணியம்!

கண்ணியம் என்பது மௌனம் அல்ல. தவிர்ப்பும் அல்ல. சொல்லத் தெரிந்தும், செய்ய முடிந்தும் , காட்டத் தெரிந்தும், எங்கே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பதுதான் கண்ணியம். பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பற்றி நாம் பல விதமாகப் பேசலாம். ஆனால், அவற்றின் ஆழத்தில் இருந்த மிக அமைதியான, உன்னதமான பண்பு இதுதான், கலைக்குள் கண்ணியம்!

நேசிப்பையே சுவாசமாக்கி, காதலால் கனிந்துருகி, அன்பால் புடமிடப்பட்ட அற்புதக் கலை உள்ளத்தின் சீரிய செயல்வடிவமே அந்தக் கண்ணியம். அந்த உள்ளத்தின் வெளிப்பாடுகளே அவரது படைப்புகள். அதனால்தான் அவை காலத்தைக் கடந்து, என்றும் அழியாத, மறக்கப்படாத படைப்புகளாக வாழும். அந்த அழகிய உள்ளத்திற்கு நேசமிகு முத்தங்கள் பாசமிகு புகழ் வணக்கம்.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here