நேர்காணல்: யதிராஜ் ஜீவா
னேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
யதிராஜ ஜீவாவை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும். ஆவநாழி இதழில் வெளிவந்த அவரது “பாரூர் வாய்க்காலில் துணி துவைப்பவர்கள்” என்ற குறுநாவலின் வழியாகத்தான் அவருடைய எழுத்து முதலில் எனக்கு அறிமுகமானது. பின்னர் அந்தக் குறுநாவல் ஆவநாழி குறுநாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றது. 2024 ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற ஆவநாழியின் நூல் வெளியீட்டு விழாவில் ஆவநாழி குறுநாவல்கள் நூலை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, தனது “உன்னதம் ஆரத்தழுவும் நேரம்” கவிதைத் தொகுப்பை யதிராஜ ஜீவா எனக்கு அனுப்பி வைத்தார். முதல் வாசிப்பில் எளிதாகத் திறந்துகொள்ள மறுக்கும் கவிதைகள் பல அந்தத் தொகுப்பில் இருந்தன. மேலோட்டமாகப் பார்த்தால் வாசகனை ஏமாற்றிவிடும் போலத் தோன்றும்; ஆனால் மீண்டும் மீண்டும் வாசிக்கும்போதுதான் அவை தங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்களையும் அனுபவங்களையும் மெல்லத் திறக்கத் தொடங்குகின்றன. அந்த வகையில், வாசகரிடமிருந்து பொறுமையையும் மறுவாசிப்பையும் கோரும் கவிதைத் தொகுப்பாகவே உன்னதம் ஆரத்தழுவும் நேரம் எனக்குத் தோன்றியது. அந்தத் தொகுப்பை மையமாக வைத்து யதிராஜ ஜீவாவுடன் இந்த நேர்காணலை நிகழ்த்தியிருப்பது எனக்கு ஒரு வாசகராகவும், இலக்கிய நண்பராகவும் மனநிறைவை அளிக்கிறது.
கேள்வி: புனைகதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்கள் படைப்புலகின் தொடக்கம் கவிதையிலா அல்லது வேறு வடிவத்திலா? அந்த வடிவமே முதலில் உங்களை ஈர்த்ததற்கு என்ன காரணம்?
பதில்: எனது படைப்புலகின் தொடக்கம் கவிதைதான். இலக்கிய வடிவங்களில் கவிதை என்றைக்குமான ஈர்ப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கவிதை நிலவொளி போன்று வசீகரமானதும், சூரியன் போன்று சுயஒளி கொண்டதுமாகும். மிகச் சில சொற்களிலேயே ஒரு வாழ்நாளின் அனுபவத்தையும், ஒரு பிரபஞ்சத்தின் பரப்பையும், ஒரு இதயத்தின் துடிப்பையும் தாங்கிச் செல்லும் வல்லமை கவிதைக்கே உரியது என்று கூட நாம் காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் உண்மையில் ஈர்ப்பு என்பது சொல்லப்பட்ட ஆயிரம் காரணங்களுக்கும் அப்பால் நிகழும் ஒரு புதிர் என்றே நான் நினைக்கிறேன். அந்த ஈர்ப்பின் உண்மையான மையம் எல்லா காரணங்களையும் தாண்டி, விளக்க முடியாத ஓர் உள்மன அழைப்பாகவே இன்றும் எனக்குத் தோன்றுகிறது.
கேள்வி: இன்றைய தமிழ்க் கவிதை குறித்து உங்கள் பார்வை என்ன? சங்க இலக்கியம் தொடங்கி நவீனக் கவிதை வரை நீளும் தமிழ்க் கவிதை மரபில் உங்களை எங்கே நிறுத்திப் பார்க்கிறீர்கள்? மரபும் புதுமையும் உங்கள் கவிதைகளில் எவ்வாறு ஒன்றோடொன்று உரையாடுகின்றன?
பதில்: இன்றைய தமிழ்க் கவிதை அதன் ஆக சாத்தியமான வீழ்ச்சியின் தருணங்களில் நின்றுகொண்டிருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருக்கிறது. படைப்பாளிகள் மத்தியிலும், பதிப்பகச் சூழலிலும், வாசகப்பரப்பிலும் கவிதையின் வீழ்ச்சி என்னைத் திகைக்க வைக்கிறது. நீங்கள் கவனித்திருக்க முடியும். இன்றையச் சூழலில் ஒரு இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளில் மிகக் குறைவாக வரவேற்கப்படுவது கவிதைதான். கவிதைத் தவிர ஏனைய எந்த வடிவத்தையும் இதழாசிரியர்கள் உவந்து ஏற்றுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.
கவிதைக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் இதழ்களும் இருக்கத்தான் செய்கின்றன என்ற போதிலும் அவை போதுமானதாகவோ திருப்தி அளிப்பதாகவோ இல்லை.
மரபு – புதுமைகள் என்கிற பிரிவினைகளின் பால் நான் ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. எனக்கு என்ன கைவருகிறதோ, என்னால் என்ன இயலுகிறதோ அதையே நான் செய்கிறேன்.
சங்க இலக்கியம் முதல் தற்போது வரையிலான தமிழ்க்கவிதை மரபில் நான் என்னை நிறுத்திப் பார்க்கும் இடம் குறித்து நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டதைத் தொடர்ந்து எனக்குள் யோசித்துப் பார்க்கிறேன். இதற்கு பதிலளிக்கும் முகமாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு என்னுடைய பனிரெண்டாவது வயதில் தமிழ்மொழியின் மீது, இலக்கியத்தின் மீது, மிக ஆழமான பற்றுதலும் நேசமும் உண்டாயிற்று. அப்போது நான் திருவண்ணாமலையில் என் சித்தி வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்த உறவினரான பூபதி மாமா என்பவர் ஒரு தமிழாசிரியர். அவர் வீட்டு அலமாரியில் நிறையத் தமிழ் புத்தகங்கள் வைத்திருந்தார். அவர்தான் எனக்கு கம்பராமாயணத்தை, பட்டினத்தார் பாடல்களை எல்லாம் அறிமுகப்படுத்தி, அதைப் படித்துக் காண்பித்து, விளக்கமும் சொல்வார். அவர் அலமாரியில் இருந்த புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு பிறகு நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஒரு வருடம் மட்டுமே திருவண்ணாமலையில் படித்த நான் பிறகு என் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்திற்கு வந்து விட்டேன். தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள அழகிய ஊர்களில் ஒன்று அது. நூலகத்தில் இருந்து பலதரப்பட்ட புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன் என்றாலும் கவிதைகளும் நாவல்களும் அதிகமாகப் படித்தேன். அவற்றின் பாதிப்பில் சிறு சிறு கவிதைகளை எழுதிப் பார்த்தேன். என்னுடைய பதினாறாவது வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான் வீட்டிலேயே பல மாதங்கள் முடங்கிப்போய், படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது. அப்போது ஓஷோ அறிமுகமானார். அவருடைய ‘உண்மையைத் தேட வேண்டியதில்லை’ எனும் புத்தகம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பம் ஒரு கம்யூனிஸ குடும்பம் என்பதால், என் தாத்தாவைப் பின்பற்றி நானும் சிறு வயதில் இருந்தே ஒரு நாத்திகனாய் இருந்தேன். கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருந்தது. ஓஷோவின் அறிமுகம் கிடைத்த பிறகு வாழ்க்கைப் பற்றிய பார்வையும், கடவுள் பற்றியச் சிந்தனையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஞானம் அடைதல் என்கிற ஒன்றை நோக்கி பயணப்படத் தொடங்கினேன். அதே சமயம் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தேன். என்னுடைய 16 ஆவது வயதில் ’வானவில் கனவுகள்’ என்றொரு தொகுப்பைத் தயார் செய்து, சென்னைக்குச் சென்று மாநில கல்லூரியில் பணிபுரிந்த பிரபலமான பாடலாசிரியர் மு.மேத்தா அவர்களை நானும் என் அண்ணன் மணிகண்டன் என்பவரும் சந்தித்து, கவிதை தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன். அவர் தொகுப்பை படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும் என்றும், அவசரப்பட வேண்டாம் என்றும் சொன்னார், எப்போதும் முதல் தொகுப்பு பேசப்படும் விதத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். முன்னுரையைப் பிறகு தருவதாக கூறிய அவர் என்னை வாழ்த்தி எழுதிக் கொடுத்த சில வரிகள் அப்போது எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருவதாக இருந்தன: ‘ஆகாயம் உன்னை வியப்புடன் வியந்து பார்க்கும். வெற்றி உந்தன் விரல்களிலே நிமிர்ந்து பார்க்கும்’ என்கிற வரிகள்தாம் அவை. பிறகு வானம்பாடி இயக்க வகையிலான கவிதைகளிலிருந்து பரிணாமம் அடைந்து பிரமிள், பசுவய்யா போன்றோரின் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.
பிறகு என் அம்மாவின் நெக்லஸ் மற்றும் என் சகோதரியின் செயின் ஆகியவற்றை விற்று 2001 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பை சொந்தமாக கொண்டு வர முயன்று, 2002 ஆம் ஆண்டு அது வெளியிடப்பட்டது. அதுதான் எனது முதல் புத்தகமான ‘கடைசி இரவின் நடு ஜாமத்தில்’ . அக்காலங்களில் எங்கள் பிரதேசத்தில் பேசுபொருளாக இருந்த பெண்சிசுக் கொலை சார்ந்த கவிதையே தலைப்புக் கவிதை. ஒரு பக்கம் இதுபோன்ற தீவிர இலக்கிய செயல்பாடுகளுக்கும், ஞானத் தேடுதலுக்கும் சம அளவில் நான் ஆட்பட்டதானது ஒரு சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி என் வாழ்வில் வந்தார். ஓஷோ, இரமணமகரிஷி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் மிகவும் தாக்கத்திற்கு உள்ளான என்னால் கல்விபடிப்பைத் தொடர இயலவில்லை. இந்த ஞானத்தேடுதல் என்னை இழுத்துச் சென்ற திசைகளில் எல்லாம் பயணித்தேன். சமூகம் பற்றியோ குடும்பம் பற்றியோ அக்கறைக் கொள்ளவில்லை. ’எது புத்தருக்கு நிகழ்ந்ததோ, எது இரமணருக்கு நிகழ்ந்ததோ, பரிணாமத்தின் எப்புள்ளியை ஜே.கே குறிப்பிடுகிறாரோ, எதை ஒஷோ இன்னொரு பிறப்பு என்று சொல்கிறாரோ அது என்னில் நிகழ வேண்டும். அப்பரிணாமத்தின் புள்ளியை அடைந்திட வேண்டும்’ என்பதே என் தீராத தாகமாகவும் வேட்கையாகவும் இருந்தது. நான் அந்த தாகத்திற்கு முழுமையாக என்னை அர்ப்பணித்தேன். அந்த பயணம் விரிவாக சொல்லும் இடம் இதுவல்ல என்று நினைக்கிறேன். நான் எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் – அந்த முதல் தொகுப்பை கொண்டுவந்த ஓரிரு வருடங்களிலேயே ஞானத்தேடுதல் என் வாழ்வில் பிரதானமாக ஆகிவிட்டது என்பதற்காகத்தான். இலக்கிய முக்கியத்துவம் குறைந்து விட்டது. உதாரணத்துக்கு என்னை பாதித்த ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:
“படைக்கும் கலைதிறன் என்பது ஓவியம் தீட்டுவதோ, கவிதை எழுதுவதோ, அதன் மூலம் புகழடைவதோ அல்ல. அது கலைத்திறன் ஆகாது. அது ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆற்றல்தான். அதைப் பொதுமக்கள் போற்றலாம். அல்லது மதிப்பு கொடுக்காமல் போகலாம். திறமையையும், கலைத்திறனையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. படைப்பாற்றல் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை. அது ’தான்’ என்பது முற்றிலும் இல்லாது போன இலை. ‘தான்’ என்பது இல்லாத போதுதான் படைக்குங் கலைத்திறன் இருக்க முடியும். அந்த ஒரு நிலையில் மட்டுமே எல்லாவறையும் தோற்றுவிக்கும் மெய்ப்பொருள் இருக்க முடியும். ஆனால் அந்த நிலையை மனதில் உருவகப்படுத்துவதோ கற்பனை செய்வதோ முடியாது. அதை வழிமுறைப்படுத்துவதோ நகல் செய்வதோ முடியாது. அதை எந்த முறையாலும் எந்தத் தத்துவத்தாலும எந்தக் கட்டுப்பாட்டாலும் அடைய முடியாது. மாறாக, தன்னை முற்றிலுமாகப் புரிந்து கொள்வதன் மூலமே அது வருகிறது”( விடுதலை: துவக்கமும் முடிவும்)
“செயலில் திறமையாய் மிளிரும் கலைநயமும் அழகும் நாள் முழுவதற்கும் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு நாளில் சில மணி நேரத்திற்கே மிளிர்வதாக இருக்கக்கூடாது. ப்யானோ-வை இனிமையாக வாசித்தால் மட்டும் போதாது, நாள் முழுவதற்கும் கலைநயமும் அழகும் இருக்க வேண்டும்- இதுதான் உண்மையில் சவாலாக இருக்கிறது. இசைக்கருவியை நீங்கள் தொடும் விதத்திலேயே, நீங்கள் இனிமையான இசையை எழுப்ப வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது, அது பரந்த வயலில் சிறிய மூலையில் மட்டும் விவசாயம் செய்வதற்கு ஒப்பாகும். நமது அக்கறை மொத்த வயலிலும் இருக்க வேண்டும். வாழ்க்கைதான் அந்த வயல்..”( நாம் பெற வேண்டிய மாற்றம்)
– இத்தகைய ஜே.கே வின் கருத்துகளால் ஏற்பட்ட புரிதலாலும் உணர்தலாலும் நான் நாளடைவில் இலக்கிய ஈடுபாட்டிலிருந்து முற்றிலும் விலகிவிட்டேன். மெய்யுணர்வை நோக்கிய பயணமே பிரதானமாக இருந்தது. என் தேடல் ஒரு பரிணாமப் புள்ளியை அடைந்த பிறகு (அதற்கு யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி முக்கிய காரணமாக இருந்தார்) நான் அமைதியாக வீட்டில் இருந்தேன். தொலைதூரக்கல்வியில் படித்தேன். அரசுப்பணியும் கிடைத்தது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இலக்கிய செயல்பாடுகளோ ஆர்வமோ இல்லாதிருந்தேன். மீண்டும் 2015 ஆம் ஆண்டு முதல் எப்போதாவது கவிதைகளும், புனைகதைகளும் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறு நான் அரிதாக எழுதிய கவிதைகளின் தொகுப்பே 2024 ஆம் ஆண்டு உன்னதம் ஆரத் தழுவும் நேரம் என்ற தலைப்பில் ஜோலார்பேட்டை மெய்நிழல் பதிப்பக வெளியீடாக வந்தது. புனைகதைகள் ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம் வெளியீடாக 2025 ஆம் ஆண்டு செம்மஞ்சள் நிற மயானம் என்ற தலைப்பில் வெளிவந்தது.
இலக்கியத்தை முதன்மையான ஒன்றாக நான் கைக்கொள்ளவில்லை. நான் ஒரு இலக்கியவாதி அல்ல. மெய்யுணர்வாளன் மட்டுமே.
சக மனிதனுக்கு வாழ்க்கை சார்ந்த மெய்யுணர்வை நோக்கி சுட்டிக்காட்டும் விரல்களாகவே நான் இலக்கிய செயல்பாட்டைக் கொண்டிருக்கிறேன். அக்காரணத்தாலேயே தமிழ்க்கவிதை மரபில் எனக்கென ஒர் இடம் இருப்பதாக நான் கருதவில்லை. அதை நான் பொருட்படுத்தவும் இல்லை. ‘ன்’ விகுதி கொண்டு முடியும் சொற்றொடர்களையும், ’நான்’ என்ற வார்த்தையையும் நான் பயன்படுத்துவது ஒரு உரையாடல் சௌகர்யத்துக்காகவும், புரிதலுக்காகவும்தான் . மற்றபடி நான்- மையம் அழிந்து போன ஒருவன். இங்கு நீடித்த நிலையான செயல்பாட்டை மேற்கொண்டு வருகிற ஒருவன் இல்லவே இல்லை.
நான் எவ்விதமான இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்பதோ, விவாதங்களில் ஈடுபடுவதோ இல்லை. தேடிச் சென்று இலக்கிய ஆளுமைகளை சந்திப்பதும் இல்லை. நான் வெறுமனே இந்த நதிக்கரையில் எனது பாடல்களோடும், மௌனத்தோடும் அமர்ந்திருக்கிறேன். எனது படைப்புகள் சில சமயம் தன்னியல்பாக, சில சமயம் நண்பர்களுக்காக வெளிப்படுகின்றன. அவற்றை படிப்பவர்கள் படிக்கலாம். அவ்வளவுதான்.
கே: உங்கள் இரண்டாம் தொகுப்பின் முதல் கவிதையே “நீர்க்காடு ஒன்றிலிருந்து மெளனம் ஒன்றைப் பறித்தெடுத்த போது” என்று தொடங்குகிறது. “பெரும் வசீகர நீர்ச்சுழி”, “என் வனநதிகளில் நீர்த்தளும்பும் ஒளி”, “அடர்காட்டு பெருமழை”, “திசையறியா திரவ இருள்” போன்ற வரிகளில் நீர் வெறும் இயற்கைக் கூறாக இல்லாமல் ஒரு வாழ்வியல், ஒரு மனநிலை, ஒரு தத்துவமாக மாறுகிறது. இந்த நீர் குறியீட்டின் பின்னணி என்ன? கவிதை எழுதும் போது முதலில் உருவாகுவது காட்சியா, அனுபவமா, மொழியா?
ப: காட்சியும் மொழியும் கூடி முயங்கும் அனுபவமாகவே கவிதை உருக்கொள்ளத்தொடங்குகிறது. சில நேரங்களில் ஒரு காட்சி மொழியை அழைக்கிறது. சில நேரங்களில் மொழியே ஒரு காட்சியை உருவாக்குகிறது. ஆனால் இறுதியில் அவை இரண்டும் பிரிக்க முடியாத ஓர் அக அனுபவமாகவே கவிதையில் ஒன்றிணைகின்றன.
நிச்சியமாக நீரை வெறும் இயற்கைக் கூறாக மட்டும் நாம் அணுகிட முடியாது.
நீங்கள் குறிப்பிட்டது போல் நீர் வாழ்வியலின் ஆதி ஊற்று. மனநிலைகளோடு இடைவிடாமல் வினைபுரியும் ஒரு ரசவாதம் . மூலத்தை எப்போதும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒரு தத்துவம். எந்த உணர்வையும் நீரின் மேல் ஏற்றி மிதக்கவிட முடியும். அது காதலாகவும் துயரமாகவும் மாறும். அது நினைவாகவும் மறதியாகவும் மின்னும். பிறப்பாகவும், மரணமாகவும் உருவெடுக்கும். அதனால்தான் நீர் என் கவிதைகளில், தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் ஒரு உயிருள்ள குறியீடாக இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் நீரே தாயின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. தாய்ப்பாலின் நிறமும் வாசமும் சுவையும் கொண்ட ஆதித் தாய்மையின் பிரதிபலிப்பே என் நீர்க்குறியீட்டின் உண்மையான பின்னணியாக இருக்கலாம். எல்லாக் கவிதைகளும் இறுதியில் தாயின் கருவறைக்குத் திரும்பிச் செல்லும் ஒரு நீர்ப்பயணம்தான்; அந்தப் பயணத்தின் மொழியே என் கவிதைகளில் மீண்டும் மீண்டும் நீராக வெளிப்படுகிறது என்றும் நான் சொல்ல விரும்புகிறேன்.
கே: உங்கள் கவிதைகளில் வசீகரமான சொற்கோர்வைகள் காணப்படுகின்றன. “இசையை நெய்பவன்”, “நீர்த்தளும்பும் ஒளியை”(ஒளி – எழுத்துப் பிழையல்ல), “மனநாவில் தாகத்தின் அரூப நர்த்தனம்”, “மகரந்த இருள்”, “மருதாணி மேகங்கள் மழை பார்த்து” போன்ற வித்தியாசமான உவமைகள், “முடிவற்ற இருள்தறியால் நெய்தது போல”, “இயலாமையால் ஜோடிக்கப்பட்ட ஒரு பூங்கிண்ணத்தை”, “நினைவின் ரோஜாக்கள் உருகிய அத்தர்” போன்ற வினோத உருவகங்கள் இவ்வாறு விதவிதமான கோணங்களில் படிமங்கள், உருவங்கள், உவமைகளை உருவாக்க காரணமென்ன? இப்படியான படிமங்கள் தற்செயலாக உருவாகிறதா, அல்லது கவிதையின் உள் இயக்கமே அவற்றை உருவாக்குகிறதா?
ப: கவிதை உருவாக்கத்தின் போது எந்தப் படிமம் அதன் உடலாக மாற வேண்டும், எந்த உருவகம் அதன் சுவாசமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் தன்னியல்பாகவே தீர்மானிக்கப்படுகிறது. நான் அந்த நிகழ்வின் சாட்சியாகவே பெரும்பாலான நேர்வுகளில் என்னை உணர்கிறேன்.
ஒவ்வொரு கவிதையும் ஒரு கனவை மொழிபெயர்க்கும் முயற்சியைப் போன்றது. ஆனால் கனவுக்கு நம் பிரக்ஞை மனம் அறியும் இலக்கணமெல்லாம் கிடையாது. அது ஒளியைத் திரவமாகவும், இருளை மலராகவும், மெளனத்தைப் பறவையாகவும், காலத்தை நதியாகவும் மாற்றிவிடுகிறது. அந்தக் கனவின் தர்க்கத்தை மொழி ஏற்றுக்கொள்ளும் கணத்தில்தான் இது போன்ற கவிதைப் படிமங்கள் பிறக்கின்றன. அவை நான் உருவாக்கியவை என்று சொல்வதைவிட, நான் அனுமதித்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு கவிதையும் தன்னுள் மறைந்திருக்கும் படிமங்களைத் தானே முளைக்கச் செய்கிறது. கவிஞன் அந்த முளைப்பை நிகழ்த்துபவன் அல்லன். அதைக் கேட்டு, அதற்கு இடமளித்து, அதற்கு- தானறிந்த, தான் பழகிய, தன்னால் இயலும் விதத்தில்- மொழியளிப்பவன் மட்டுமே.
கே: “எந்த மயானத்திலிருந்து எழுந்து வந்து இதைப் படிப்பாய் தேவி”, “நீ கையேந்தியிருக்கும் என் அஸ்தியைக் கரைத்து தலைமூழ்கு” போன்ற வரிகளில் ஆழமான கையறுநிலை வெளிப்படுகிறது. அதே நேரத்தில் “உன்னை நான் உணரும் இப்போதில் பூப்பதெல்லாம் என் மரமாகவும்…” என்ற வரிகளில் முழுமையான காதல் அனுபவமும் விரிகிறது. இந்த இரு மனநிலைகளும் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புபடுகின்றன?
ப: என்னைப் பொறுத்தவரை, கையறுநிலையும் காதலும் ஒன்றுக்கொன்று எதிரான மனநிலைகள் அல்ல. மாறாக, அவை ஒரே நதியின் இரு ஆழங்கள். காதல் உச்சத்தை அடையும்போது அது கையறுநிலையாக மாறுகிறது. கையறுநிலை முழுமையடையும்போது அது காதலின் இன்னொரு வடிவமாக உருமாறுகிறது. ஒருவரை முழுமையாக நேசிப்பது என்பது, நம் ஆளுமையின் எல்லைகளை மெதுவாகக் கைவிடுவதுதான். அந்தக் கைவிடுதலில் ஒரு வகையான மரணம் இருக்கிறது. அதனால்தான் கவிதைகளில் காதலும் மரணமும், புணர்வும் பிரிவும், தரிசனமும் வெற்றிடமும் ஒன்றையொன்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கின்றன. அவை ஒன்றை ஒன்று மறுப்பதில்லை. மாறாக ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.
“எந்த மயானத்திலிருந்து எழுந்து வந்து இதைப் படிப்பாய் தேவி” அல்லது “நீ கையேந்தியிருக்கும் என் அஸ்தியைக் கரைத்து தலைமூழ்கு” போன்ற வரிகளில் வெளிப்படுவது வெறும் விரக்தியோ இழப்பின் துயரமோ அல்ல. அது நேசித்த ஒருவரிடம் தன்னை முற்றிலுமாக ஒப்படைத்த பிறகு எஞ்சும் அகநிலை. அங்கே ‘நான்’ என்ற மையம் சாம்பலாகி இருக்கிறது. அந்தச் சாம்பல்கூட நேசிப்பவரின் கைகளில் கரைய வேண்டும் என்ற ஏக்கமே அந்த வரிகளின் உயிர்.
அதேபோல், “உன்னை நான் உணரும் இப்போதில் பூப்பதெல்லாம் என் மரமாகவும்…” என்ற வரிகளில் வெளிப்படுவது -காதலின் வழியாக உலகத்துடனான எல்லா பிரிவுகளும் கரைந்து போய்விடும் அனுபவமே. அங்கே பூக்கும் மரமும், பெய்யும் மழையும், பறக்கும் பறவையும், வீசும் காற்றும் தனித்தனியான பொருட்களாக இல்லை. அவை அனைத்தும் ஒரே பேருணர்வின் வெவ்வேறு வடிவங்களே. காதல் அதன் முழுமையில் எப்போதும் தனிமனித தன்மையைத் தாண்டிச் செல்கிறது.
கே: “என் ஒவ்வொரு பிறழ்ச்சியும் ஒரு புதிய அறிதலின் மலரை கைகளில் உதிர்த்துப் போக” என்ற வரியில் பிறழ்ச்சியை புதிய அறிதலின் தொடக்கமாகப் பார்க்கிறீர்கள். இந்த முரணான சிந்தனை எவ்வாறு உருவாகிறது?
ப: பொதுவாக நாம் “பிறழ்ச்சி” என்பதை ஒரு தவறாகவும், வழுவாகவும், தோல்வியாகவும் புரிந்துகொள்ளப் பழக்கப்பட்டிருக்கிறோம். மனிதன் தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் உண்மையாக அறிந்துகொள்ளத் தொடங்குவது அவனது பிறழ்ச்சிகளின் வழியாகத்தான்.
ஒரு நதி நேராகப் பாய்ந்துகொண்டே இருந்தால் அது ஒரு நேர்க்கோட்டை மட்டுமே உருவாக்கும். ஆனால் அது வளைந்து, உடைந்து, கரைகளை அரித்துக்கொண்டு செல்லும்போதுதான் நிலத்தின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்கிறது. மனித வாழ்வும் அப்படித்தான் இல்லையா. நாம் நம்முடைய உடைவுகளாலும், தயக்கங்களாலும், தவறுகளாலும், தோல்விகளாலும், கையறுநிலைகளாலும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறோம். எனவே பிறழ்ச்சி என்பது முழுமையிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வு அல்ல. இன்னும் ஆழமாக முழுமையை நோக்கி நகரும் பயணமே.
சில அறிதல்களுக்கு உடைதல் தேவைப்படுகிறது. நாம் இழந்ததாக நினைத்த தருணங்களே, பின்னாளில் நம்மை நாம் கண்டடைந்த தருணங்களாக மாறிவிடுகின்றன.
ஒவ்வொரு பிறழ்ச்சியும் நாம் இதுவரை காணாத இன்னொரு சாளரத்தைத் திறக்கிறது. அந்தச் சாளரத்தின் வழியே நுழையும் ஒளிதான் அறிதல்.
பிறழ்ச்சியை நாம் கொண்டாடவில்லை. அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வை நாம் கொண்டாடத்தான் வேண்டும். அதுவே அதற்கு நாம் தரும் முக்கியத்துவம். அந்த முக்கியத்துவத்தின் கனமே விழிப்புணர்வின் ஆயுளைத் தீர்மானிக்கிறது.
வாழ்க்கை நம்மை உடைக்கும் ஒவ்வொரு முறையும், அந்த உடைவின் விளிம்புகளில் விழிப்புணர்வு சுடர்கிறது. அந்தச் சுடரே ’புதிய அறிதலின் மலர்’ என்று உருவகப்படுத்தப்படுகிறது.
பிறழ்ச்சி என்பது ஒரு புதிய பிரக்ஞையின் வாசலாக மாற முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் பிறழ்ச்சி நம்மை மாற்றுவதில்லை. அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம்தான் நம்மை மாற்றுகிறது.
கே: “சொற்களின் பட்டாடைகள் கனத்த மௌனத்தைச் சுற்றி” அல்லது “மகரந்த இருள்” போன்ற உருவகங்களில் முரண் இயல்பாக இயங்குகிறது. முரண்களை கவிதைக்குள் கையாளும் உங்கள் அழகியல் என்ன?”
ப: முரண் என்பது என் கவிதைகளில் நான் திட்டமிட்டு உருவாக்கும் ஒரு உத்தி அல்ல. அது வாழ்வின் இயல்பிலிருந்தே மொழிக்குள் வந்து சேருகிறது. ஏனெனில் வாழ்க்கை நேர்கோட்டில் இயங்குவதில்லை. அது எப்போதும் முரண்களின் இசையில்தான் தன்னை வெளிப்படுத்துகிறது.
முரண்கள் இல்லாத உலகம் ஒருவேளை தர்க்கத்திற்கு வசதியானதாக இருக்கலாம். ஆனால் அது கவிதைக்கு முற்றிலும் அந்நியமானது.
என் கவிதைகளில் முரண் என்பது மோதலாக வருவதில்லை. ஒளியும் இருளும் சந்திக்கும் அந்தி நேரத்தைப் போல உருகலாக வருகிறது என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
“சொற்களின் பட்டாடைகள் கனத்த மெளனத்தைச் சுற்றி” என்று எழுதும்போது, அங்கே சொற்களுக்கும் மெளனத்திற்கும் இடையே எதிர்த்தன்மை இல்லை. உண்மையில், ஒவ்வொரு சொல்லும் மெளனத்தின் உடலில் நெய்யப்பட்ட ஒரு நூலிழைதான். அதைப் போலவே “மகரந்த இருள்” என்பது இருளை ஒளியாக்கும் முயற்சியல்ல. இருளுக்கும் அதன் சொந்த மலர்ச்சியும், அதன் சொந்த நறுமணமும் உண்டு என்ற என்கிற தரிசனமே. நாம் ஒளிக்கு மட்டுமேயாக பூக்களை ஒதுக்கிவிட்டோம். ஆனால் இருளும் பூக்கிறது. அந்தப் பூப்பை காணும் பார்வையைத்தான் கவிதை நமக்குத் தருகிறது என்று கூடச் சொல்லலாம்.
கவிதை என்பது எதிர்ச்சொற்களுக்கு இடையே ஒரு பாலம் கட்டுவது அல்ல. அவை ஒருபோதும் பிரிந்திருக்கவில்லை என்பதை நினைவூட்டுவதே.
தர்க்கம் உலகத்தை விளக்குவதாகவும், முரண் உலகத்தை வியப்பதாகவும் உள்ளது. அந்த வியப்பே கவிதையின் அழகியலாகவும் மலர்கிறது என்றும் சொல்லலாம்.
கே: சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரை காதலும் பெண்மையும் தமிழ்க் கவிதையின் மைய அனுபவங்களாக இருந்து வருகின்றன. உங்கள் கவிதைகளிலும் அவை நுட்பமான காட்சிகளாக வெளிப்படுகின்றன. “உன் வனப்பால் வரையப்பட்ட சித்திரங்கள்/என் இரவுகளைப் பூசிக்கொண்டு/மின்னுவது பொறாமல்” என்ற இடத்திலும் சரி “பேரொளியின் ஒரு துளியாய்/உன்னுள் கசிந்து/பெருந்தவிப்பு உள்நிறைய/உன்னில் கரைப்பேன் என்னை” என்ற வரிகளிலும் சரி “ஒவ்வொரு நிலா நாளிலும்/ததும்பி கதிர்வீசும்/தேவியின் மந்தகாச ஒளியை” என்ற இடத்திலும் அதையே கண்ணுறுகிறேன். காமத்தை கவிதையாக்கும் போது அதன் அழகியல், மரியாதை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் சமநிலையை எவ்வாறு பேணுகிறீர்கள்?
ப: மெய்யுணர்வை நோக்கிய என் தேடலின் பாதையில், தந்த்ரா மரபின் தத்துவங்களோடு எனக்கு ஆழமான பரிச்சயமும், ஈர்ப்பும், பின்னர் சில காலத்துக்கு தீவிரமான ஈடுபாடும் உருவாயின. என் செம்மஞ்சள் நிற மயானம் புனைகதையை வாசித்தால், அந்தப் பயணத்தின் சில பிரதிபலிப்புகளை நீங்கள் காண முடியும். பழகவாய்க்கும், சந்திக்க நேரும், எதிர்ப்படும் ஓவ்வொரு பெண்ணையும் தேவியாக பாவித்து வணங்கும் தியான மன நிலையில் நீண்ட காலங்கள் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் காமம் நம்மைத் தாங்க முடியாத தவிப்புகளின் உச்சத்திற்கும் அவஸ்தைகளுக்கும் கொத்திச் சென்றாலும் கூட, பிற எல்லாவற்றைக் காட்டிலும் காமமே தெய்வீகத்தின் வாசலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நவீன மனித மனம் காமத்துடன் மிகவும் நோய்க்கூறான, வக்கிரங்கள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருக்கிறது. காமத்தை ஒன்று இழிவாகப் பார்க்கிறது, அல்லது வெறும் நுகர்வுப் பொருளாகச் சுருக்குகிறது. இந்தச் சூழலில் மிகுந்த மரியாதையுடன் பக்தியுடன் பெண்களும், மிகவும் தியானப்பூர்வமாக காமமும் அணுகப்பட வேண்டியது அவசியமாய் உள்ளது.
கே: “நுங்குகளாகச் சிரிக்கும் பனைகண்டு அலட்டலுடன் தலைசிலுப்பும் தென்னை” என்ற வரிகள் வாசகனை உடனே காட்சிக்குள் இழுத்துச் செல்கின்றன. மரங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையே இவ்வளவு இயல்பான உறவை உருவாக்கும் உத்தி எப்படி உங்களிடம் உருவானது? அந்தக் காட்சி பிறந்த தருணத்தைப் பகிர முடியுமா?
ப: யுத்திகள் சார்ந்து பிரக்ஞாபூர்வமாக அந்த கவிதை உருவாகவில்லை. கவித்துவ மனநிலையின் இயல்பான பெருக்கிலிருந்து தானாகவே உருவானது. மனித உணர்வுகள் என்று நாம் வகைப்படுத்தும் அகவயமான ஒன்றிற்கும், மரங்களாகிய இயற்கையின் புறவயமான வெளிப்பாட்டிற்கும் இடையே எந்தப் பாகுபாடும் இல்லாத அபேதமான ஓர் உன்னத நிலைக்கு ஆட்பட்டு, நெக்குருகும் தன்மையே கவித்துவ மனநிலையின் அடிப்படையாக உள்ளது.
எனது சொந்த ஊரான அகரத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள காரிமங்கலம் என்னும் ஊருக்குச் செல்லும் குறுகிய, அமைதியான தார்ச்சாலையில் சிறு வயதில் அநேக முறை மிதிவண்டியில் பயணித்திருக்கிறேன். அந்தி சாயும் பொழுதுகளில், அந்தச் சாலையில் நான் தனியாகப் பயணித்த கணங்களின் பிரகாசமான நினைவுகளே இக்கவிதைக்கு உயிர் கொடுத்துள்ளன. அத்தகைய அலாதியான அனுபவங்கள் அகத்தில் விட்டுச் சென்ற சுவடுகளும், அவை ஏற்படுத்திய கிளர்ச்சியூட்டும் மனநிலைகளும் இணைந்து, ஒருவகை படிமங்களாக என்னுள் எஞ்சி, அப்படிமங்களின் வசீகரப் பிடியினால்தான், சற்றே சோர்வுற்ற எனது கால்களுடனும், தனிமையின் பேரொளியுடனும் என்னை எதிர்கொண்டழைத்த காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்த அரசமரத்தடிக்கு என்னால் போய்ச் சேர முடிந்தது.
கே: உங்கள் கவிதைகள் இயற்கையை வெறும் பின்னணியாகப் பயன்படுத்துவதில்லை; அதுவே கவிதையின் உயிராக மாறுகிறது. உன்னிமுள், தூதுவளை, கருநொச்சி, முடக்கற்றான், முசுமுசுக்கை, கிச்சிலி போன்ற எண்ணற்ற தாவரங்கள் கவிதைக்குள் இயல்பாக வருகின்றன. இயற்கையை இவ்வளவு நெருக்கமாக எழுதுவதற்கு காரணமான உங்கள் வாழ்வனுபவம் என்ன? வயல்வெளிகளில் பெரும்காடுகளில் காணக் கிடைக்கும் சிறு சிறு விஷயங்களையும் வண்ணங்களையும் கவிதையுள் எழுதவதற்கும், பிற விஷயங்களைக் கவிதையாக்கும் போது கிடைக்கும் மனநிலைக்கும் இருக்கும் வேறுபாடுகளை சொல்லுங்கள்.
ப: நான் அத்தகையவற்றின் ஆராதகன் என்பதே முதன்மையான விஷயம். இது போன்ற தாவரங்களோடு இயைந்திருந்த வாழ்வியலிருந்து நாம் வெகுவாக விலகி வந்துவிட்டோம். அருட்பிரகாச வள்ளலாரின் ஆன்மநேயப் பரிச்சயமும், சித்தர்கள் மரபின் மீது எனக்குள் அவ்வப்போது வந்து போன ஆகர்ஷணமுமே தூதுவளை, முடக்கற்றான், முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி போன்ற எளிய மூலிகைகளின் மீது நான் ஒரு மிகப்பெரிய ஈர்ப்பையும் ஆராதனையையும் கொள்ளக் காரணமாய் அமைந்தன எனத் தோன்றுகிறது. வயல்வெளிகளிலும், அடர்ந்த பெருங்காடுகளிலும் காணக் கிடைக்கும் மிகச் சிறு விஷயங்களையும், அவற்றின் நுட்பமான வண்ணங்களையும் கவிதையுள் நெய்யும்போது வாய்க்கும் மனநிலை அலாதியானது. பிற விஷயங்களைக் கவிதையாக்குவதைக் காட்டிலும், இந்த இயற்கை ஆராதனை எனக்குள் பேரமைதியை பெருங்களிப்பைத் தருகிறது.
கே: உங்கள் கவிதைகளில் கிராமங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சிகளும் அல்லது முந்தைய தலைமுறை மட்டுமே கண்ட சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. “புளியன் கிளைகளில் டயர் ஊஞ்சலாடும் சிறுமிகள்”, “மிதிவண்டி மேல் பவனி வரும் ஐஸ்பெட்டி”, “கருவேல மரக்கொக்குகள்” போன்ற காட்சிகள் இன்றைய வாசகனுக்கு நினைவையும் ஏக்கத்தையும் தருகின்றன. இப்படியான காட்சிகளைப் பதிவு செய்ய உங்களைத் தூண்டுவது நினைவா, ஆவணப்படுத்தும் விருப்பமா, இழந்துபோன உலகின் மீதான ஏக்கமா, அல்லது வேறு ஏதாவது உள்ளுணர்வா?
ப: நீங்கள் குறிப்பிட்ட அனைத்துடனும், வாசக மனதில் காட்சி உருவாக்கத்தை மீட்டுவதிலும், அதனூடாக கவித்துவக் கிளர்ச்சியை தூண்டச் செய்வதிலும் மீண்டும் மீண்டும் எனக்கு இருந்த ஆர்வமும் அவற்றிற்கு காரணமாக இருக்கலாம்.
கே: உங்கள் கவிதைகளில் ஒலி, தாளம், லயம் ஆகியவை மிகவும் நுட்பமாக இயங்குகின்றன. “வல்லாரை தீபம் / கற்றாழை சாபம்” போன்ற வரிகளில் ஓசை முக்கியப் பங்காற்றுகிறது. “ஆக, போக” என்ற ஒற்றுகளோடு முடியும் பல வரிகளும், ஏங்காத்தில் முடியும் வரிகளும் உங்கள் கவிதைகளில் காண முடிகிறது. நவீனக் கவிதைக்கும் சந்தமும் லயமும் அவசியமா? இந்த விஷயத்தில் உங்கள் பார்வை என்ன?
ப: நவீனக் கவிதைக்குச் சந்தமும் லயமும் ஒரு மாறாத இலக்கணம் என்றோ, இன்றியமையாத கட்டாயம் என்றோ சொல்ல முடியாது. ஆனால், எல்லா அழகியல் வழிகளிலும் ஒரு கவிதை செதுக்கப்பட்டு, மெருகேற்றப்பட வேண்டும் என்பதிலும், ஒரு கவிதை தன்னால் இயன்ற அனைத்து சாத்தியங்களிலும் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
வலிந்து சேர்க்கப்படும் ஆபரணங்களாக அவை இருத்தலாகாது. கவிதை தானாகவே சுவாசிக்கும் தருணங்களில் பிறக்கும் இசைகளாக இருக்கலாம்.
கே: உங்கள் கவிதைகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வை எந்தப் பெரும் அறிவிப்புமின்றி பதிவு செய்கின்றன. “வெயிலை அலுத்துக்கொண்டே/நடக்கும் மூதாட்டியின்” என்ற இடத்திலும் “தனிமையின் பிரகாசத்துடன்/எதிர்கொண்டழைக்கிறது/காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்ததாயிருக்கும்/அரசன்.” என்ற இடத்திலும் மூதாட்டி, கிராமத்து வீடு, காரைத்திண்ணை, அரசமரம் போன்றவை மிக இயல்பாகக் கவிதையாகின்றன. அன்றாட வாழ்க்கை கவிதையாக மாறும் அந்தக் கணத்தை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
ப: சாதாரணத்தின் மீது படிந்திருக்கும் அசாதாரண ஒளியைக் கண்டடையும் தருணங்கள் கவிதைகளில் நிகழ்கின்றன. அத்தகைய எளிய காட்சிகளை அவற்றின் அகவயமான மௌனத்தை, அவை சுமந்து நிற்கும் வாழ்வின் பாரத்தை உற்றுநோக்குகையில், சாதாரணம் என்று கருதப்படும் ஒரு விஷயம் கவிதையாக மாறும் அந்த உன்னத கணம் நேரிடுகிறது. கவிதை என்பது வாழ்க்கையிலிருந்து வேறொரு உலகை உருவாக்குவது அல்ல- வாழ்க்கை ஏற்கனவே கவிதையாக இருந்ததை, மீண்டும் ஒருமுறை வாசிப்பவருக்கு காண்பிப்பதுதான்.
கே: கதவு என்ற குறியீடு உங்கள் பல கவிதைகளில் மீண்டும் மீண்டும் வருகிறது. அது மரணத்தின் முன் மூடப்பட்ட கதவாக ஒன்றிலும், அழிவின் நெடுங்கதவாக இன்னொற்றிலும், நாராசம் கசிய சாத்தப்படும் கருணையின் பெருங்கதவாகவும் வருகின்றன. கதவென்பது வழி மறிப்பது. கதவென்பது பாதுகாப்பது. கதவென்பது உள்ளும் வெளியும் என பிரிக்கும் எல்லையும் கூட. உங்கள் கவிதைகளில் வரும் கதவுகள் உங்களுக்குள் எந்தத் தரிசனத்தை உருவாக்கியது?
ப: கதவு என்பது வெறும் மரத்துண்டுகளாலான ஒரு பொருளல்ல. அது பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த இருத்தலியல் குறியீடு.
நீங்கள் குறிப்பிட்டது போல, என் கவிதைகளில் கதவு என்பது வெவ்வேறு கணங்களில் வெவ்வேறு தரிசனங்களாக உருமாறி நிற்கிறது. ஒருபுறம் அது மரணத்தின் முன் சலனமற்று மூடப்படும் இறுதி எல்லை. பிறிதொரு புறம் பேரழிவின் பெரும் பிரவாகத்தை நோக்கித் திறந்துகொள்ளும் நெடுங்கதவு. இன்னும் சில இடங்களில், நாராசம் கசிய கசிய, கருணை அற்றுப்போய் சாத்தப்படும் பெருங்கதவு.
கவிதைகளில் கதவுகள் ஒருபோதும் வெறும் வீட்டுக் கதவுகளாக இருப்பதில்லை. அவை மனதின் வாசல்கள். நினைவின் அறைகள். வலியின் சுவர்கள். கருணையின் திறப்புகள். சில கதவுகள் பாதுகாக்கின்றன.சில கதவுகள் சிறையிலடைக்கின்றன. சில கதவுகள் திறக்கப்படுவதற்காக அல்ல, நாம் எவ்வளவு காலமாக அவற்றின் முன் நின்றிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இருப்பதாகவும் தோன்றுகிறது.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏராளமான கதவுகளாகவே இருக்கிறோம். யாரோ ஒருவருக்கு நாம் நம்பிக்கையின் கதவு. இன்னொருவருக்கு வேதனையின் கதவு. ஒருவரின் வாழ்க்கைக்குள் ஒளி நுழைய காரணமாகவும் இருக்கலாம். இருள் நுழைய காரணமாகவும் இருக்கலாம். மனிதன் தன்னையே ஒரு கதவாகப் பார்க்கத் தொடங்கும் இடத்தில்தான் கருணைமிக்க பரிணாமம் பிறக்கிறது.
கே: “அந்த இலைகள்/ஒலித்துக் கொண்டிருக்கும்/ஒரு இசை/உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்” இந்த வரிகள் சிக்கலாக்கும் விஷயம் தான் என்ன? கவிதை வரிகளுக்குள் இத்தனை சுற்றலை வைத்தால் வாசகர்கள் வாசித்து கவிதை தரும் அனுபவத்தை உள்வாங்காமல் போகும் வாய்ப்புகள் சார்ந்த பயத்தை எப்போதேனும் உணர்ந்திருக்கின்றீர்களா? அதே சமயம் சீவக சிந்தாமணியில் விமலை பந்தாடும் காட்சியை சொல்லும் “அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை ” , திருப்புகழின் “பட்டப்பகல் வட்ட திரிகியில் இரவாக” என்ற வார்த்தை சிக்கலாய் கோர்த்த வரிகளும் அதை சார்ந்த பாடல்களும் இப்போதும் அதன் சிக்கலான வடிவத்துக்காவே வார்த்தையமைப்புக்காவே வாசிக்கவும் பாடுவும் படுகின்றன என்பதை நாம் சாதகமாக்கிக் கொள்ளலாமா? சிக்கலான கவிதை அமைப்பு வாசிப்பு அனுபவத்தை செறிவாக்குகிறதா, அல்லது வாசகனை விலக்குகிறதா? எளிமைக்கும் செறிவுக்கும் இடையிலான சமநிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ப: கவிதையில் ‘சிக்கல்’ என்று நாம் கருதும் ஒரு வடிவம், உண்மையில் மொழியின் ஆழத்தில் உறங்கும் ஒரு மாயாஜாலம். நீங்கள் குறிப்பிட்ட “அந்த இலைகள் / ஒலித்துக் கொண்டிருக்கும் / ஒரு இசை / உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்” என்ற வரிகள் வாசகனை ஒரு நேர்கோட்டுப் பாதையில் பயணிக்க அனுமதிப்பதில்லை. அது ஒரு சுழல். அங்கே இலைகளின் அசைவு இசையாகிறது. அந்த இசைக்குள் உறங்கிக் கிடக்கும் பேரலைகளின் ஆதி இரைச்சல் துளிர்க்கிறது. இந்தச் சுற்றல், புறவயமான தர்க்க மனதிற்குச் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால், அகவயமான தியான மனதிற்கு இது ஒரு தரிசனமாக அமையலாம்.
வாசகர்கள் இந்த வரிகளை உள்வாங்காமல் விலகிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஏனெனில், கவிதை என்பது தகவல்களைக் கடத்தும் ஊடகம் அல்லவே. அது ஒரு மனநிலையைக் கடத்தும் அலைவரிசைதானே.
சில சமயம் கவிஞர்கள் ஆழத்திற்குப் பதிலாக இருளை உருவாக்குவதும் நேர்கிறது. கவிதை மர்மமாக இருக்கலாம். ஆனால் செயற்கைத் தனங்களால் கூடுகட்டப்பட்ட ஒன்றாக அது இருப்பது உவப்பானதில்லை. அதன் ஆழம் இயற்கையாகவும், அதன் இருள் உயிருள்ளதாகதாகவும் இருத்தலே சிறப்பு.
கே: “நடுகல் பீலி” என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள கவிதைகள் உங்கள் தொகுப்பில் தனித்துவமான இடம் பெறுகின்றன. சங்ககால நடுகல் மரபையும் இன்றைய மனநிலைகளையும் இணைக்கத் தோன்றிய காரணம் என்ன? இந்தத் தலைப்பின் வழியாக நீங்கள் உருவாக்க விரும்பிய அனுபவம் என்ன?
நான் ஒருங்கிணைந்த தருமபுரி பிரதேசதைச் சேர்ந்தவன். நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். தருமபுரி பிரதேசத்தில் நடுகற்கள் அதிகமென. நடுகற்களின் பூமி என்று கூட அதைக் குறிப்பிடலாம். நடுகற்களைக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் தருமபுரியில் உள்ளது. அந்த வகையில் நான் அநேக நடுகற்களைப் பார்க்க நேர்வது உண்டு. பண்டையக் காலத்திலிருந்தே நடுகற்களுக்கு மயில்பீலி சூட்டி, ’கள்’ படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருந்ததாக படித்தேன். இதைச் சார்ந்த வியப்பு மற்றும் பகிர்வை முதன்மையான காரணமாகக் கொண்டு உருவான கவிதைகள்தாம் அவை. ஆனால் நடுகற்கள் குறிப்புணர்த்தும் ’தன்னைப் பலியிடுதல்’ என்பதை ஒரு ஆன்மீகப் பயணத்தின் குறியீடாகவும் வைத்து இக்கவிதைகளை வாசிக்கலாம்.
கே: நீங்கள் ரமண மகரிஷியிடம் கற்றவை சார்ந்த சில குறிப்புகள் கவிதையுள் இருக்கின்றன. குறிப்பாக ரமணரில் புன்னகை பேரமைதியையும், அக விடுதலையையும் வழங்கும் ஒரு தெய்வீக அனுபவமாகக் கருதப்படுகிறது. ரமணரின் புன்னகையை நீங்கள் கவிதையுள் குறிப்பிட்டிருப்பது அழகானது. அதே கவிதையில் நீங்கள் புத்தனின் தாமரையையும் சேர்க்கின்றீர்கள். பௌத்த மதத்தில் தாமரை சூத்திரம் தூய்மை, ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் ஞானத்தை குறிப்பது. ரமணரும் புத்தரும் போதிப்பது ஒன்று தான் தன்னிலிருந்து விடுபடுவது. கவிதை எழுதும் செயலும், ஆன்மிகத் தேடலும், அக விடுதலையும் ஒன்றோடொன்று தொடர்புடையவையா?
ப: ஆம். ரமணரும் புத்தரும் குறிப்பிடுவது ஒன்றுதான். அது தன்னிலிருந்து விடுபடுவது அல்ல. ‘தான்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து விடுபடுவது. நீங்கள் குறிப்பிடும் ஆன்மீகத் தேடுதலும் அக விடுதலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆனால் கவிதை எழுதுதல் அப்படியல்ல. அது தனித்தும் இயக்கம் கொள்ளமுடியும். கவிதை எழுதுதல் என்கிற ஒன்று இல்லாத அக விடுதலையும் சாத்தியமே. கவிதை எழுதும் செயல் ஒரு உணர்வு நிலையின் அறிவார்ந்த வெளிப்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கேள்வியில் ’கவிதை எழுதும் செயல்’ என்பதற்குப் பதிலாக கவித்துவ மனநிலை என்று சொல்லியிருந்தால் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதாம் என்று சொல்லியிருக்க முடியும்.
கே: “சாமுவேல் பெக்கெட்டின் பிரபல்யமான நாவல்” என்ற அடிக்குறிப்போடு ஒரு கவிதையும், “யதிராஜ ஜீவாவின் பாரூர் கால்வாயில் துணி துவைப்பவர்கள் புனைகதையில் இடம்பெற்ற கவிதை” என்ற அடிக்குறிப்போடு இன்னொரு கவிதையும் இருக்கிறது. இதைச் சார்ந்து உங்கள் கருத்து என்ன? ஒரு வேறு இலக்கிய வடிவத்தின் நினைவையோ பாத்திரத்தையோ கவிதைக்குள் கொண்டு வரும்போது, அதன் இயல்பான ஓட்டத்தை குலைக்காமல் வைத்திருப்பதில் இருக்கும் சவால்கள் என்ன?
ப: ‘கோடாவிற்கான காத்திருத்தல்’ என்ற சாமுவேல் பெக்கெட்டின் பிரபலமான நாடகத்தின் தலைப்பையும், அதன் அடிநாதமான இருத்தலியல் மற்றும் காத்திருத்தல் குறியீட்டைக் கொண்டும் எழுதிய கவிதை ஒன்றை ‘பாரூரான் கால்வாயில் துணி துவைப்பவர்கள்’ குறு நாவலில் பயன்படுத்தி இருந்தேன். அது குறுநாவலின் அங்கமாக இல்லாமல் தனித்தும் வாசிக்கத்தக்கது என்று நான் கருதியதால் கவிதைத் தொகுப்பிலும் இடம்பெறச் செய்தேன். ஒரு வேறு இலக்கிய வடிவத்தின் நினைவையோ பாத்திரத்தையோ கவிதைக்குள் கொண்டு வரும்போது, அதன் இயல்பான ஓட்டம் குலைக்கப்படும் என்று நான் கருதவில்லை. அது பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கும் போது அவ்வாறு செய்யலாம் என்பதுதான் என் கருத்தாக இருக்கிறது.
கே: ஆன்மீக கவிஞர் மிலரேபாவின் நூறாயிரம் பாடல்கள் மையம் ஆன்மீகமாகவே இருக்க முடியும் என்று நம்புகிறேன். ‘மிலரேபாவின் ஞானச்சபையில் படிக்கப்படும் வலிபுராணம்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளன ஐந்து கவிதைகளில் வலியை ஒரு குழந்தையாக, குருவாக, காதலியாக உருவகித்து எழுதியிருக்கும் கவிதைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? லௌகீக வாழ்விலும் ஞானத்தை அடைய முடியும் என்பது உங்கள் தெரிவா? ஞானமோ அல்லது ஆன்மீகமோ எல்லையற்ற வலிகளின் நிராவண சாரளமா? லௌகீகம், ஞானம் எல்லாம் வலிகள் தானா?
ப: வலி -வலியை அனுபவிப்பவன்- வலியை அனுபவிப்பதாக நினைத்துக் கொள்பவன்- இவை குறித்தெல்லாம் ஒருவர் சரியான புரிந்து கொள்ளுதலைக் கொண்டிருப்பது அவசியம். தன்னை உணரும் ஞான விடுதலையின் பாதையில் வலியைத் தியானித்தலும், வலியைப் புரிந்து கொள்ளுதலும் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமாக உள்ளது. அப்படியான ஒரு ‘வலி தியானத்தை’ வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் விளைவில் அக்கறைக்கொண்டிருப்பதே அக்கவிதை.
லௌகீக -ஆன்மீக என்கிற பிரிவினைகளுக்கும் ஞானத்திற்கும் தொடர்பு இல்லை. நீங்கள் எங்கே எப்படி இருந்தாலும், என்னவாக இருந்தாலும் அது உங்களுக்கு நிகழும். நாம் ஒரு புரிந்து கொள்ளுதலுக்காக ஞானமடைதல் என்னும் வாக்கியத்தை பயன்படுத்துகிறோம். உண்மையில் அங்கு ’அடைதல்’ இல்லை. ஒரு மாயையின் இழத்தல் இருக்கிறது. தன்மையம் அற்ற ஒருவகை கண்டுணர்தலும் உள்ளது.
ஞானத்தை நிவாரண சாளரமாக பார்க்க இயலாது. அப்படியான பார்வையே அதை அந்நியப்படுத்திவிடும். நிவாரணத்தை தேடக்கூடிய, அதற்காக ஏங்க்க கூடிய ஒருவர் இல்லாமல் போகும் நிலைதான் அது. வலி இல்லாமல் போவதில்லை. வலியை வலி என்று பெயர் சூட்டிக்கொண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிலையான ‘நான்’ தன்மை தானாகவே இல்லாமல் போகிறது.
எனக்கு வலிக்கிறது என்று கதறுவது லௌகீகம். நிலையான ஒரு மையத்திலிருந்து வலியை உணரக்கூடிய ஒருவன் இருப்பதான மாயையிலிருந்து விடுபடுவது ஞானம். இரண்டிலுமே வலி சாஸ்வதம்.
கே: உங்கள் ஆரம்பக் கவிதைகளில் கவிதை எழுதும் செயல் பற்றிய சுயபிரக்ஞை அடிக்கடி வெளிப்படுகிறது. ஆனால் பின்னைய கவிதைகளில் அது கணிசமாகக் குறைகிறது. இதை உங்கள் கவிதை மொழியின் பரிணாமமாகக் கருதலாமா? அல்லது கவிதையைப் பற்றிய உங்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றமா?
ப: கவிதை மொழியின் பரிணாமமாகக் கருதலாம்.
கே: ‘உன்னதம் ஆரத்தழுவும் நேரம்’ தொகுப்பு இன்னும் எழுதப்படாத உங்கள் கவிதைகளை நோக்கி ஒரு மஹா மெளனத்தில்/ஆழ்ந்து விடும் முன்/நதிப்பிரவாாகம் கண்ணுற்றபடி” நகர்வது போலத் தோன்றுகிறது. இதுவரை நீங்கள் முயற்சி செய்யாத கவிதை வடிவங்கள், மொழிச் சோதனைகள், அல்லது புதிய அழகியல் முயற்சிகள் குறித்து பகிர முடியுமா?
ப: உங்கள் கேள்வியில் உள்ள விமர்சன நுட்பத்தைப் புரிந்து கொண்டேன். அதிகமாய் முயற்சி செய்யாத கவிதை வடிவம் என்றால் அது’ ஹைக்கூ’தான். மொழிச் சோதனைகள், அல்லது புதிய அழகியல் முயற்சிகள் எதையும் நான் திட்டமிட்டுச் செய்வதில்லை. சில சமயங்களில் அவை தானாக நடக்கக் கூடும்.
உதாரணத்துக்கு ஆவநாழியில் வெளிவந்த ’காகிதப்பூ வானம் மழைநீர்ச்சிறுமிகள்’ என்ற நீள் கவிதை. அதன் இறுதிப்பகுதியில் உள்ள கவிதையில் இரு வேறுச் சரடுகள் ஒன்றையொன்று பின்னி சென்று பொதுவான ஒரு முடிவை எய்துவதாக இருக்கும். பன்முகத் தன்மை கொண்டதான அக்கவிதையில் செய்து பார்த்த சோதனை தன்னியல்பாய் நிகழ்ந்தது. நீங்கள் விரும்பினால் அந்தக் கவிதையோடு நேர்காணலை நிறைவு செய்து கொள்ளலாம். உங்கள் கூர்மையான வாசிப்புக்கும், கவிதையின் ஆன்மாவைப் புரிந்து தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
மடிமலர் பாரிஜாதம்-
அமிர்த ஸ்பரிசத்தின்
ஊற்றுக்கண்ணாய் இருந்தது
உன் சருமம்.
அவளுக்கு அம்மா சொன்னதில்
நினைவில் இருப்பவை:
தரை பார்த்து நடக்க கற்றுக்கொள்
துப்பட்டா காற்றில் பறக்காதிருக்கட்டும்
அளவாக சிரி
அடக்கமாக உட்கார்
கவனமாக உறங்கு
கண்விழித்தபின் சூரியனைப் பார்
ஓரமாக நட
ஒருபோதும் தம்பியின் கைகளை விட்டுவிடாதே
வனநதியின் கல்லிடுக்கிலிருந்து
நிறங்கள் பிசுபிசுக்க
எழும்பி வரும் பட்டாம்பூச்சியே
உன் இருப்பு
அந்த விசேஷ தினத்தில்
நண்பர்களோடு அவள் கோயிலுக்கு போனாள்
ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்லும் காட்டுவழி
வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோயில்
சொன்னதை மறக்காதே
தம்பியின் கைகளை விட்டுவிடாதே
என சொல்லிச்சொல்லி விடையனுப்பினாள் அம்மா.
உன் புன்னகையின் சிறகடிப்புகள்
என் நாட்களில் இருந்து நீங்கிச் சென்றபின்
நான் செய்வதறியாது திகைப்புற்று
பட்டாம் பூச்சிகளைத்தான் தேடிப்போனேன் –
அப்போது
காலம் பழைய இருளுக்கு திரும்பியிருந்தது
கவிதை மௌனத்திற்கும்
காலம் அகாலத்திற்கும்.
எலுமிச்சை பழத்தில் விளக்கு போட்டாள்
தம்பிக்கு சில பொம்மைகள் வாங்கிக் கொடுத்தாள்
நண்பர்களோடு குளிர்பானம் அருந்தினாள்
குரங்குகளுக்கு பொரியும் வாழைப்பழமும் கொடுத்த பின்
தேங்காய் மூடியை பாறையில் மோதி உடைத்து தின்றபடியே
வீடு திரும்பத் தொடங்கினாள்.
பட்டாம்பூச்சிகள்
எனக்கு திராட்சைத் தோட்டங்களை அறிமுகப்படுத்தின
நான் திராட்சை ரஸத்தில் மிதந்துகொண்டே
உன்னை நினைவு கூர்ந்தேன்
பட்டாம்பூச்சிகள்
எனக்கு மூங்கில் வனங்களை அறிமுகப்படுத்தின
நான் மூங்கிலின் நிழலில் அமர்ந்துகொண்டு
உன்னை நினைவுகூர்ந்தேன்.
பட்டாம்பூச்சிகள்
எனக்கு தர்ப்பை புதர்களை அறிமுகப்படுத்தின
நான் தர்ப்பை புதர்களில்
ஒரு சர்ப்பத்தைப் போலச் சுருண்டும்
ஒரு மது உபாசகனைப் போல கவிழ்ந்தும் படுத்தபடி
உன்னை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறேன்.
அன்று மாலை காகிதப்பூ வானம்
அழுதுகொண்டே சொன்னவை:
நான் நீலமாகத்தானிருந்தேன்
நம்புங்கள் நான் நிரபராதி
என் அழுகை ஒரு மழையாகத் திரள்வதற்குள்
என் ஓலம் ஒரு இடியாக எச்சரிப்பதற்குள்
அது நடந்து முடிந்துவிட்டது.
ஆயினும்
ஓராயிரம் நிழல்களின் குளுமை
ஒரு நிஜத்தின் சூட்டிற்கு ஈடாகுமா
இறுதியாக வானம் சொன்னதில்
முக்கியமானது:
சாலையோரம் நடந்துவரும்போது
சிறுநீரை அடக்க விரும்பாதவள்
நண்பர்களை முன்னே அனுப்பிவிட்டு
ஒரு ஈச்சம்செடியின் புதர்மறைவில்
புகுவதற்கு முந்நொடி வரை
தம்பியின் கைகளைப் பற்றியபடியேதான் இருந்தாள்.
வாட்டி வதைக்கிறதே நினைவுப்பெருந்துயர்.
இந்த மெழுகுவர்த்தி
இன்னும் கொஞ்ச நேரம் கூட எரிந்திருக்கலாம் என
அதன் ஒளியில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவன்
நினைக்கவே கூடாதா.
***
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com




