Homeஇதழ்கள்2026 இதழ்கள்அவன் இல்லாத வீடு

அவன் இல்லாத வீடு

ஶ்ரீரஞ்சனி

தீபன் இன்று வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனிலிருந்து தனியாக இலங்கைக்கு வந்திருக்கிறான். அவனை மீண்டும் சந்திக்கப் போகிறேன் என்ற எண்ணமே மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு பரபரப்பை எழுப்பியது.

தீபன், நான், கண்ணன்—நாங்கள் மூவரும் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தோம். எங்கள் பிள்ளைப் பருவத்தின் பெரும்பகுதியை போர் அபகரித்திருந்தாலும், மருத்துவராக வேண்டும், ஒருவருக்கொருவர் அருகில் வீடு கட்டி வாழ வேண்டும் என்றெல்லாம் எண்ணற்ற கனவுகளை நாங்கள் பகிர்ந்துகொண்டிருந்தோம்.

ஒருநாள் கண்ணன் வீட்டில், மறுநாள் எங்கள் வீட்டில், அடுத்த நாள் தீபன் வீட்டில்—இப்படித்தான் எங்கள் மாலை நேரங்கள் கழிந்தன. கண்ணன் ஒரே பிள்ளை என்பதாலோ என்னவோ, அவன் அம்மாவின் பாசம் எங்களிருவர் மீதும் தாரளமாய்ப் பொழிந்தது. சில நேரங்களில் உளுந்து வடை, சில நேரங்களில் அவித்த பனங்கிழங்கு; இல்லையென்றால், சூடான தேநீருடன் வறுத்த கடலையாவது எங்கள் கைகளில் திணித்துவிடுவார். “படிக்கிற பிள்ளைகளுக்குப் பசி இருக்கக்கூடாது”, என்று புன்னகையுடன் சொல்வார்.

மின்சாரம் இல்லாத இரவுகள், குண்டுவெடிப்புகள், திடீர் சோதனைகள்—இவை அனைத்தும் எங்கள் அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாகி இருந்தபோது, “கல்விதான் அழிக்க முடியாத சொத்து”, என்று பெற்றோர் கூறியதன் பொருள் விளங்கியது. பாடப்புத்தகங்களுடன் பதுங்குகுழிகளுக்குள் ஓடியபோதும், வாழ்க்கை மீதான பிடிப்பு எங்களை விட்டுப்போகவில்லை. பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட நாள்கள் சிலவேளைகளில் ஊரடங்கு நாள்களாக மாறிவிட்டிருந்த போதும், மனம் தளராமல் படித்தோம்.

ஆனால், 2006ஆம் ஆண்டு, நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது போர் மீளவும் உக்கிரமடைந்திருந்தது. பாடசாலை திறந்திருக்கும் நாட்களைவிட, மூடப்பட்டிருக்கும் நாள்களே அதிகமாக இருந்தன. சில நாள்களில் பாடப்புத்தகங்களுடன், அவசரமாக எடுத்துச் செல்லவேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையையும் சுமந்தபடி பாடசாலைக்குச் சென்றோம்.

ஒவ்வொரு காலையும் ஏதோ ஒரு விதத்தில் அசாதாரணமாகவே தொடங்கியது. எப்போது, எங்கே ஓடுவது என்பதைச் சிந்திப்பதே எங்கள் இயல்பாக மாறியிருந்தது எங்கே குண்டு வெடித்திருக்கும் என்று பெற்றோர் பதற்றத்துடன் யோசித்துக் கொண்டிருக்கையில், அவர்களின் முகங்களை நாங்கள் பயப்பிராந்தியுடன் பார்த்துக் கொண்டிருப்போம். காலையில் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, மாலையில் மீண்டும் அதே வீட்டுக்குத் திரும்ப முடியுமா என்பது உறுதியாகத் தெரியாமல் இருந்தது. இரவில் பதறி எழுந்து ஓடாமல் அமைதியாக உறங்க முடிந்தால், அது ஒரு வரமென ஆசுவாசப்பட்டுக் கொள்வோம்.

அந்த நாட்களில் இயக்கத்தினர் பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி வர ஆரம்பித்திருந்தார்கள். விடுதலை, தியாகம், மாவீரம் என எங்கள் காதுகளில் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்த சொற்கள், மெதுமெதுவாக எங்கள் வகுப்பறைக்குள்ளும் நுழைந்தன. இலட்சியங்களின் அவசியத்தை வலியுறுத்தி, எங்களையும் இயக்கத்தில் இணைந்துகொள்ள அவர்கள் அழைப்பது வழக்கமானது. அதன் விளைவாக, வகுப்பறையில் சில இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் காலியாகத் தொடங்கின. நேற்று வரை எங்கள் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த ஒருவர் இன்று இயக்கத்தில் சேர்ந்துவிட்டார் என்ற செய்தி சாதாரணமானதாக மாறிவிட்டது. 

அந்தச் சூழல், எங்கள் எதிர்காலக் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் களவாடியது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதைவிட, நிகழ்காலத்தை எப்படிப் பாதுகாப்பாகக் கடந்து செல்வது என்பதிலேயே எங்கள் கவனம் முழுவதும் குவிந்திருந்தது.

ஒருநாள் கண்ணன் போய்விட்டான்.

எதிர்பாராத அந்தச் செய்தி நெஞ்சை நொறுக்கியது. ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அவன் சென்றுவிட்டான். சொல்லியிருந்தால் எவரும் அவனைப் போகவிட்டிருக்க மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் கணத்திலிருந்து அவன் அம்மாவின் நினைவு என்னைச் சிப்பிலியாட்டியது. 

அவன் குடித்த தேநீர்க் கோப்பையுடனும், படித்த புத்தகங்களுடனும், வெறுமையாகக் கிடந்த அவனின் அறையுடனும், அவன் தொங்கப்போட்டிருந்த அவனின் துவாலையுடனும் கதைத்தபடி அவவின் எத்தனை இரவுகளைக் கழித்திருக்குமோ என்று நினைக்கும்போதெல்லாம் மனம் கனத்துப்போய்விடும்.

கண்ணனின் அந்த முடிவு, தீபனின் பெற்றோருக்கு அச்சத்தைக் கொடுத்தது. சில மாதங்களுக்குள்ளாகவே தீபனை அவர்கள் லண்டனுக்கு அனுப்பிவிட்டார்கள். முடிவில் எங்கள் மூவரில் நான் மட்டுமே எஞ்சியிருந்தேன்.

இப்போது யோசித்துப் பார்க்கும்போது, எங்களில் யாருமே தர்க்கரீதியாக யோசித்து அந்த முடிவுகளை எடுத்திருக்க மாட்டோம். எங்களின் சூழ்நிலைகள்தான் எங்களை வெவ்வேறு திசைகளுக்கு இழுத்துச் சென்றிருக்கின்றது என்பது தெரிகிறது. ஒருவன் துப்பாக்கியைச் சுமக்க முடிவுசெய்தான். மற்றவன் கடவுச்சீட்டைச் சுமந்தான். நான் மட்டும் புத்தகங்களைச் சுமந்தபடி இங்கேயே நின்றுவிட்டேன்.

அதன் பின்னரான இடப்பெயர்வுகள், நண்பர்களையோ பாடசாலைகளையோ தொடர்ந்து பேண விடவில்லை. முடிவில் எப்படியோ பல்கலைக்கழகம் சென்றேன். ஐந்து ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வியை முடிக்க எனக்கு எட்டு ஆண்டுகள் எடுத்தன. அந்தக் காலத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கண்ணனின் வீட்டுக்குச் செல்வேன். அவன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருப்பேன். ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இருந்ததில்லை. இருந்தாலும், அவர்களுடன் இருந்து அவர்களின் கவலையைப் பகிர முடிந்தது..

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்தபோது, போர் முடிந்திருந்தது, ஆனால், அமைதிதான் வரவில்லை. வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன. சிதைந்த வீடுகளில் சில புதிதாக எழுந்தன. இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பின. ஆனால், திரும்பிய ஊர் அவர்கள் விட்டுச் சென்ற அதே ஊராக இருக்கவில்லை. மனிதர்களும் கலாசாரமும் மாறியிருந்தது.

போரின் பலிகடாக்களாக சிலர் மாறினார்கள். கண்ணன், ‘மாவீரன்’ என்ற பெயரால் நினைவுகூரப்பட்டான். உலகின் வெவ்வேறு நாடுகளுக்குச் சிதறிப்போன சிலர் தங்கள் மண்ணை இழந்தார்கள். ஊரிலே தங்கியவர்களில் சிலர் தங்கள் நிம்மதியை இழந்தார்கள். போர் மனிதர்களுக்குள் விட்டுச் சென்ற வெற்றிடம் முடிவடையவில்லை.

தீபன் அகதியாக வெளியேறியிருந்ததால், ஆரம்பத்தில் அவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், அவனுடைய முழுக் குடும்பமும் லண்டனில் குடியேறிவிட்டதாக யாரோ சொல்லிக் கேள்விப்பட்டேன். அதற்குள் என் முதல் நியமனம் குருநாகலில் கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தைவிட்டுப் பிரிந்த வாழ்க்கை, பழைய நண்பர்களையும் நினைவுகளையும் இன்னும் தூரமாக்கியது.

இப்போது, நான் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பணியாற்றுவதாலும், சமூக ஊடகங்களின் உதவியாலும் ஊரவருக்கு என்னைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தன. தீபன் தனது மைத்துனியின் திருமணத்துக்காக ஊருக்கு வந்திருந்தபோது, யாரோ ஒருவர் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவே இருபது ஆண்டுகளுக்குப் பிறகான இந்தச் சந்திப்புக்கு வித்திட்டிருக்கிறது. 

அவன் வீட்டுக்குள் நுழைந்த அந்தக் கணத்தில், இருபது ஆண்டுகள் பிரிந்திருந்தோம் என்பதே தெரியவில்லை. அவனின் முகத்தில் வயதின் கோடுகள் விழுந்திருந்தன. உடல் கொஞ்சம் பருத்திருந்தது. தோற்றம் மாறியிருந்தது. காலம் எங்களை மாற்றியிருந்தாலும் நட்பை மாற்றவில்லை.

வரவேற்பறையில் இருந்த சோபாவில் அருகருகே அமர்ந்திருந்து பழைய நினைவுகளைப் புரட்டிக்கொண்டிருந்தோம். சில நினைவுகள் சிரிப்பை வரவழைத்தன. சில நினைவுகள் கண்களைக் கலங்கச் செய்தன. 

திடீரென்று தீபன் கேட்டான். “கண்ணன் வீட்டுக்குப் போய் அவன்ரை அம்மா அப்பாவைப் பாக்கோணும். போவம்… வாறியோ?”

“நீ போட்டுவா, மச்சான்”, என்றேன்.

“ஏன்டா? நீயும் வந்தாலென்ன? வேலை பிஸியோ?”

“அதுவும்தான்…”, அவன் என்னை நேராகப் பார்த்தான்.

“என்னடா இழுக்கிறாய்? எப்ப கடைசியாய் போனனீ? எப்பிடியிருக்கினம் அவை?”.

சுவரைப் பார்த்துக்கொண்டே மெதுவாகச் சொன்னேன். “கன வருஷமாச்சு…”.

“என்னடா? இங்கை இருந்துகொண்டு கன காலமாய்ப் போகேல்லை எண்டு சொல்றாய்?”, நான் அமைதியாக இருந்தேன்..

சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் கேட்டான். “அவையின்ர இடத்துக்கு அவை திரும்பியிட்டினமோ?”

“ஓம்… கன காலத்துக்கு முன்னமே எல்லாரும் தங்கடை தங்கடை இடங்களுக்குப் போட்டினம்.”

அவன் சில கணங்கள் எதுவும் பேசவில்லை. பின்னர் பிசிறிய குரலில் சொன்னான். “ஆனையிறவுச் சண்டையிலை கண்ணன் உயிரைப் பலிகொடுத்திட்டான் எண்டதை அறிஞ்சபோது, அவன்ரை இடத்திலிருந்து அவையை நீ கவனிச்சுக்கொண்டிருப்பாய் எண்டெல்லோ நான் நினைச்சன்.”

“ஆரம்பத்திலை போய் வந்தனான்… பிறகு போகேலாமல் போச்சு…”, தயக்கத்தோடு சொன்னேன்.

“என்னடா? என்னாலை நம்பேலாமலிருக்கு. எங்கடை வீட்டுக்காரரும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தினம். பிறகு லண்டனுக்கு வந்திட்டினம். அதாலை அவையைக் கண்டுபிடிக்கிறது எனக்குக் கரைச்சலாயிருந்துது. உனக்கென்ன பிரச்சினை?”

என் கண்கள் கலங்கின. “அதை விளங்கப்படுத்துறது கஷ்டமடா… நீ போட்டுவா. திரும்பி வந்த பிறகு சொல்றன்.”

அவன் என்னைச் சில வினாடிகள் உற்றுப் பார்த்தான். “சரி… என்னவோ. ஆனா, எனக்குச் சரியான ஏமாற்றமாய்க் கிடக்கடா.”

அந்த நேரத்தில் என் மனைவி சர்மி சாப்பிட வரும்படி அழைத்தாள். அன்று புரட்டாசிச் சனி விரதம். அதனால் எல்லாமே சைவமாக இருந்தது. குத்தரிசிச் சோறு, பருப்பு, மசித்த கீரை, உருளைக்கிழங்குக் குழம்பு, வல்லாரைச் சம்பல், பொன்னாங்கானி வறை, ரசம், பப்படம் என்று சூடாகப் பரிமாறினாள்.

“ருசியான சாப்பாடு… ஆரோக்கியமான சாப்பாடு”, என்று அவளைப் பாராட்டினான்.

சாப்பிட்டுக்கொண்டே என் மகளிடம் என்ன படிக்கிறாள் என்று அக்கறையுடன் விசாரித்தான். தனக்கு ஒரே மகன் என்றும், இப்போது மூன்றாம் வகுப்பில் படிக்கிறான் என்றும் சொன்னான். 

பின்னர் தனது மனைவியினதும் மகனினதும் புகைப்படங்களை எங்களுக்குக் காட்டினான். மகன், தீபன் மாநிறத்தில் இல்லாமல், அவன் மனைவியைப் போலவே, சுண்டினால் சிவந்துவிடும் நிறத்தில், மஞ்சள் தலைமயிருடன் இருந்தான். 

புறப்படுவதற்கு முன், முதலாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் மகளின் தலையை வருடியபடி, “வாசிக்கிறனீங்களோ? நிறைய வாசியுங்கோ. புத்தகங்கள் தெரியாத உலகங்களையெல்லாம் உங்களுக்குக் காட்டும்”, என்றான்.

தீபன் போன பின்னர், வீட்டின் முன் வராந்தாவில் இருந்த சாய்மனைக் கதிரையில் வந்து சாய்ந்தேன். நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக மேலெழத் தொடங்கின.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்திலும், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கண்ணன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். சில நேரங்களில் சேட், சீலை என்று ஏதாவது ஒன்று வாங்கிக்கொண்டும் போயிருக்கிறேன். 

என்னைப் பார்த்தவுடனே கண்ணனின் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரியும். ஆனால், அடுத்த கணம் அது வாடிவிடும். “கண்ணனும் இருந்திருந்தா இப்ப பல்கலைக்கழகத்துக்குப் போயிருப்பான்…”, என்று சொல்வா. அல்லது “கண்ணன் என்ன படிச்சிருப்பான் எண்டு நீ நினைக்கிறாய்? எண்டு கேட்பா. என் தலையைத் தடவியபடி என்னிடம் ஏதோ ஒன்றைக் கேட்கும் அவவின் வார்த்தைகளில் ஏக்கமிருக்கும். 

கண்ணன் உயிரிழந்த முதல் சில ஆண்டுகளில், கண்ணனைப் பற்றித்தான் கதைத்திருந்தா. அவனுக்குப் பிடித்தவை அல்லது அவன் சொன்னவை என்று ஏதாவது சொல்வா, பின்னர் அழுவா. மறுபடியும் இன்னொன்றைச் சொல்வா. நானும் அவவுடன் சேர்ந்து கதைக்கமுடிந்தது. 

காலம் செல்லச்செல்ல, அழுகையின் இடத்தை ஒப்பீடுகள் பிடித்துக்கொண்டன. எனக்கு வேலை கிடைத்தபோதும் அவர்களைச் சந்தித்தேன். திருமணமான பின்னரும் போனேன். குழந்தை பிறந்தபோது, மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போனேன்.

என் குழந்தையை நீண்ட நேரம் மடியிலே வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தா. பின்னர் அவளை மெதுவாக என் கைகளில் திருப்பிக்கொடுத்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சு விட்டா. “கண்ணன் இருந்திருந்தா… அவனுக்கும் இப்பிடியொரு பிஞ்சு இருந்திருக்கும்…”

அந்தக் கணத்தில் என் கைகளில் இருந்த என் குழந்தை திடீரென்று கனமாகிப் போனது. அதற்குப் பிறகு என்னால் அந்த வீட்டுக்குள் மீண்டும் செல்ல முடியவில்லை.

கடந்த மாதம், வாகன விபத்தொன்றில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்தான். வைத்தியசாலையில் அவன் தாயின் கதறலைக் கேட்டபோது, என் கண்முன் தோன்றியது கண்ணனின் அம்மாவின் முகம்தான். அன்று, கண்ணனின் வீட்டுக்குப் போகவேண்டும் என ஏக்கமாக இருந்தது. 

ஆனால், அதே நேரத்தில் எனக்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது. நான் போனால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? அல்லது, ஆறிக்கொண்டிருக்கும் ரணத்தை நான் மீளவும் கிளறிவிடுவேனா? பதில் கிடைக்கவில்லை. போகாமலேயே விட்டுவிட்டேன். 

இப்போது, கண்ணனின் அம்மாவை சந்தித்த பின்னர், தீபனின் நிலை என்னவாக இருக்குமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. 

***

ஶ்ரீரஞ்சனி – இலங்கையில் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசிக்கின்றார். ‘நான் நிழலானால்’, ‘உதிர்தலில்லை இனி’, ‘ஒன்றே வேறே’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இரண்டுக்கு இலங்கையில் விருதுகள் கிடைத்துள்ளன.  சிறுவர்களுக்கான கதைகளையும்  ஶ்ரீரஞ்சனி  தற்போது எழுதிவருகிறார். மின்னஞ்சல்: sri.vije@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here