Sunday, May 3, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஆடும் குதிரையும் அதிர்ஷ்டமும்

ஆடும் குதிரையும் அதிர்ஷ்டமும்

டி.எச்.லாரன்ஸ்

தமிழில்: சுபஶ்ரீ முரளிதரன்

ரு அழகான பெண் எல்லா விதத்திலும் மேன்மைகள் வாய்க்கப் பெற்றவளாக தன் வாழ்க்கையைத் தொடங்கினாள். ஆனால் அவளுக்கு அதிர்ஷ்டம் மட்டும் இல்லாமல் இருந்தது. அவள் அன்பிற்காகவே திருமணம் செய்துகொண்டாள் என்றாலும், அந்த அன்பு அவளுக்கு மண்ணாகிப் போனது. அவளுக்கு அன்பான குழந்தைகள் இருந்தார்கள் என்றாலும், அவள் அவர்கள் தன்மீது திணிக்கப்பட்டவர்கள் என்பதாக உணர்ந்ததால், அவளால் குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியவில்லை.

அவர்கள், அவள் தன்னுடைய பண்பில் பலவீனமானவளாக இருப்பதை அறிந்துகொண்டு விட்டவர்களாக, அவள்மீது வெற்றுப் பார்வையையே வீசினர். அவள் தன் பலவீனத்தை மறைத்துக்கொள்ளும் வழியைக் கண்டுபிடிக்க நினைத்தாலும் அதை எப்படி செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய பிள்ளைகள் அவளுக்கருகில் இருக்கும்போதெல்லாம், அவள் மனதிற்குள் ஒரு விதமான கடினத்தன்மை நிலவுவதாக உணர்ந்தாள். இது அவளை தொந்தரவு செய்வதாக இருந்தாலும், அவள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள்மீது அவள் அதிக அன்பு செலுத்துகிறாள் என்பதைப்போல, மிகவும் மென்மையையும் அக்கறையையும் காட்டும் விதமானதாகவே இருந்தது.

அவள் இதயத்தில் எவர்மீதுமே அன்பு செலுத்த முடியாத வகையில் ஒரு கடினத்தன்மை நிலவுவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். மற்றவர்கள் அனைவருமே “அவள் ஒரு சிறந்த தாய். அவள் தன் பிள்ளைகளை பெரிதும் நேசிக்கிறாள்”என்பார்கள். அவளும் அவளுடைய பிள்ளைகளும் மட்டுமே, அவள் அப்படியில்லை என்பதை அறிந்தவர்கள். அதை அவர்கள் தங்களின் பார்வை பறிமாற்றத்திலேயே அறிந்து கொண்டார்கள்.

அவளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தார்கள். அவர்கள் அழகிய தோட்டம் அமையப்பெற்ற அருமையான வீட்டில் வசித்தார்கள். அவர்களுக்கு நல்ல வேலையாட்களும் இருந்தார்கள் என்பதோடு, அருகாமையில் வசிக்கும் அனைவரை விடவும் சிறப்பான வாழ்க்கையை வாய்க்கப் பெற்றவர்களாக உணர்ந்தார்கள். 

அவர்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலுமே, ஒருபோதும் முழுமையான மகிழ்ச்சியுடன் அந்த வீட்டில் இருக்கவில்லை. அவர்கள் எப்பொழுதும் போதுமான பணம் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். தாய்க்கு சொற்ப வருமானமும், தந்தைக்கென்று ஒரு சிறிய வருமானமும் இருந்தபோதிலும், சமூகத்தில் அவர்கள் தங்கள் அந்தஸ்த்தை பேணும் அளவிற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. அப்பா நகரத்திலிருந்த ஏதோவொரு அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு வெற்றிகரமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அமைந்தபோதிலும், எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. எப்பொழுதுமே பணப்பற்றாக்குறையின் நிமித்தமான ஒரு அழுத்தம் நிலவிக்கொண்டேயிருந்தது. எப்படியானாலும் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து பேணப்பட்டு வந்தது.

கடைசியில் அம்மா “என்னால் எதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்”என்றாள். ஆனால், அவளுக்கு எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று பலவாறு யோசித்து இதையும் அதையும் செய்துபார்த்த போதிலும், எதிலும் வெற்றி பெறமுடியவில்லை. அவள் அடைந்த தோல்விகள், அவள் முகத்தில் ஆழமான வரிகளை ஏற்படுத்தியிருந்தது. அவள் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்கு அதிக அளவில் பணம் தேவை. அழகும் அதே நேரத்தில் விலையுயர்ந்த ரசனைகளும் கொண்டவரான அப்பா எதையும் உருப்படியாக செய்பவராக இருக்கவில்லை. அவரைப் போன்றே ரசனைகளோடு தன்னை உயர்வாக கருதிக்கொள்ளும் அம்மாவாலும் எதிலும் வெற்றிபெற முடியவில்லை.

அதனாலேயே அந்த வீடு பேசப்படாத வார்த்தைகளால் நிரம்பியதாக இருந்தது. “நிறைய பணம் இருந்திருக்க வேண்டும். நிறைய பணம் இருந்திருக்க வேண்டும்”. இதையேதான் குழந்தைகள், கிருத்துமஸ் காலத்தில் விளையாட்டு அறையில் விலையுயர்ந்த அற்புதமான விளையாட்டுப் பொருட்கள் நிரம்பியதாக இருக்கும்போதுமே கேட்க முடிந்தது. பளபளக்கும் ஆடும் குதிரை, அழகான பொம்மைவீடு என இவற்றிற்குப் பின்னால் மெல்லிய குரல், “அதிக பணம் இருக்க வேண்டும். அதிக பணம் இருக்க வேண்டும்” என்பதாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

ஆடும் குதிரையின் அசைவுகளிலும், சொல்லப்போனால், பொறுமையிழந்து அந்த மரக்குதிரை தன் மரத்தாலான தலையை விரைந்து செல்வதற்காக குனியும்போது அந்த குதிரைக்கும், புரிதலுடன்கூடிய சிரித்தபடி இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்திருக்கும் அந்த பெரிய பெண் பொம்மைக்கும், அது கேட்டபடியே இருக்கும். இந்த ரகசிய வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததில் அந்த அப்பாவி நாய்குட்டி வழக்கத்தைவிட இன்னும் அப்பாவியாக தெரிந்தது. “அதிகப் பணம் இருக்க வேண்டும்”.

 இருந்தாலும் யாரும் அதை வாயால் சொல்லவில்லை. மூச்சு என்பது எப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கும் எனும்போது, எப்படி யாரும் நான் மூச்சு விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டேயிருக்க மாட்டார்களோ, அப்படித்தான் அந்த வார்த்தைகள் எங்கும் நிறைந்து இருந்தபடியால், யாரும் அதை வெளியில் சொல்லவில்லை. 

ஒரு நாள் பால்”அம்மா”என்றழைத்து. “நாம் ஏன் சொந்தமாக ஒரு கார் வைத்துக்கொள்ளக் கூடாது? நாம் ஏன் எப்பொழுதும் வாடகைக் காரையோ அல்லது மாமாவின் காரையோதான் பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான். 

 “ஏனென்றால் நாம்தான் நம் குடும்பத்தில் ஏழையானவர்கள்”என்றாள்.

 “நாம் ஏன் ஏழைகளாக இருக்கிறோம் அம்மா?”

 “உன்னுடைய அப்பா அதிர்ஷ்டமில்லாதவராக இருப்பதால்தான் என்று நினைக்கிறேன்”, எனக் கசப்புடன் நிதானமாக கூறினாள்.

 அந்த சிறுவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

 “அதிர்ஷ்டம்தான் பணமா அம்மா?”என்று அச்சத்துடன் கேட்டான்.

“இல்லை பால். அது அப்படியில்லை. ஆனால் அதிர்ஷடம்தான் பணத்தை அடைய காரணமாக இருக்கிறது”.

“ஓ..”என்றான் அவன்.”அப்படியானால் அதிர்ஷ்டம் என்றால் என்ன அம்மா?”

“நான் சொன்னதுபோல, அதுதான் பணத்தை அடைவதற்கான காரணமாக இருக்கிறது. நீ அதிர்ஷ்டக்காரனாக இருந்தால் உன்னிடம் பணம் இருக்கும். அதனால்தான் பணக்காரனாக பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாக பிறப்பது நல்லது. பணக்காரனாக இருந்தால் ஒருவேளை பணத்தை இழக்க நேரிடலாம் ஆனால், அதிர்ஷ்டக்காரனாக இருந்தால் எப்பொழுதும் அதிகப்படியான பணம் இருந்துகொண்டே இருக்கும்”.

“ஓ! அப்படியானால் அப்பா அதிர்ஷ்டசாலி இல்லையா?”

“மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர் என்றுதான் சொல்வேன்”என்றாள் கசப்புடன்.

அந்த சிறுவன் அவளை நிச்சயமற்ற பார்வை பார்த்தான்.

 “ஏன்?”என்று கேட்டான்.

“எனக்குத் தெரியவில்லை. ஒருவர் எதனால் அதிர்ஷ்டமானவர் மற்றவர் அதிர்ஷ்டமில்லாதவர் என்று யாருக்கும் தெரியாது”. 

“தெரியாதா? யாருக்குமேவா? யாருக்குமே தெரியாதா?”

“ஒரு வேளை கடவுளுக்குத் தெரியலாம். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் சொல்ல மாட்டார்”.

“அவர் சொல்லத்தான் வேண்டும். உங்களுக்கும்கூட அதிர்ஷ்டம் இல்லையா அம்மா?”

“நான் அதிர்ஷ்டமில்லாதவரை திருமணம் செய்துகொண்டிருப்பதால் எனக்கும் அதிர்ஷ்டம் இருக்க முடியாது”

“ஆனால் உன்வரையில் நீ அதிர்ஷ்டமில்லாதவளா?

“திருமணத்திற்கு முன்பு நான் அதிர்ஷ்டமானவள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவள்தான்”

“ஏன்?”

“சரி. அதைவிடு. நான் அதிர்ஷ்டம் இல்லாதவளாகக்கூட இருக்கலாம்”என்றாள்.

அவள் அப்படித்தான் நினைக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள அந்த பிள்ளை அவளைப் பார்த்தது. ஆனால் அவள் உதட்டோரமாக தெரிந்த சில வரிகள் அவள் எதையோ அவனிடமிருந்து மறைப்பதை உணர்த்தியது.

“சரி. எப்படியோ நான் அதிர்ஷ்டமானவன்”என்று உறுதியாகக் கூறினான்.

“ஏன்?”என்று திடீரென சிரித்தபடி அவன் அம்மா கேட்டாள்.

அவன் தன் கண்களை அகல விரித்தபடி மீண்டும் அவளைப் பார்த்தான். அவன் எதனால் அப்படிச் சொன்னான் என்று அவனுக்குத் தெரியவில்லை. 

“கடவுள் சொன்னார்”என்று தான் பொய்யாக சொன்னதைத் தொடர்ந்தான்.. 

“அவர் சொல்லியிருப்பார் என்று நான் நம்புகிறேன் கண்ணே”.

“அவர் சொன்னார் அம்மா”.

“அட்டகாசம்” என்று தன் கணவருக்குப் பிடித்தமான ஒரு வார்த்தையை அவள் பயன்படுத்தினாள்.

அவள் தன்னை நம்பவில்லை. அல்லது அவன் சொன்னதற்கு கவனம் செலுத்தவில்லை என்பதை அவன் கண்டுகொண்டான். இது அவனை கோபப்படுத்தியதோடு அவளை நம்பவைக்க எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்க வைத்தது.

அவன் குழந்தைத்தனமாக அதிர்ஷ்டத்தை அடைவதற்கான ரகசியத்தை கண்டடைய வேண்டி, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், யாரையும் கவனிக்காமல் குழப்பத்துடனேயே இருந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். அவனுக்கு அது தேவையாக இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் பொம்மைகளோடு விளையடிக்கொண்டிருக்கும்போது, அந்த பெண்களுக்கு கவலையை ஏற்படுத்தும் விதத்தில், இவன் தன்னுடைய பெரிய ஆடும் குதிரையின் மீதமர்ந்து வெறித்தனமாக அதை செலுத்துவதுவான். காட்டுத்தனமாக ஓடும் குதிரையின் வேகத்தில் அவனது கருத்த தலைமுடி மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்க, அவன் கண்களில் வினோதமான ஜுவாலை தெரிந்தது. அந்த சின்னஞ்சிறு பெண்கள் அவனுடன் பேசவும் பயந்தனர்.

அவன் தனது வெறித்தனமான பயணத்திற்குப்பின் அதன்மீதிருந்து இறங்கி அந்த ஆடும் குதிரையின் முகத்தைப் பார்த்தவாறு நெடுநேரம் நின்றிருப்பான். அதன் கண்கள் அகன்றதாய் கண்ணாடிப்போல ஒளிர்ந்திட, சிவந்தவாய் சற்று திறந்தபடியாக அது காணப்பட்டது.”இப்பொழுதே! இப்பொழுதே அதிர்ஷ்டம் எங்கிருக்கிறதோ அங்கு என்னைக் கூட்டிச்செல்”என்று மௌனமாக உத்தரவிடுவான்.

அவன் தன் மாமா ஆஸ்காரிடம் தான் வாங்கியதைப்போன்றே குதிரையின் பிடரியில் சவுக்கால் அடிப்பான். அந்தக் குதிரையை பலவந்தப் படுத்தினால் மட்டுமே அது தன்னை அதிர்ஷ்டம் இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் செல்லும் என்று அவனுக்குத் தெரியும். எனவே அவன் அவ்விடத்தை அடைய வேண்டி அந்த குதிரையின்மீதேறி தன் வெறித்தனமான சவாரியைத் தொடர்வான். அவனால் அந்த இடத்தை அடைந்துவிட முடியும் என்று அவனுக்குத் தெரியும்.

“உன்னுடைய குதிரையை உடைத்துவிடப் போகிறாய் பால்”என்றாள் ஆயா.

“அவன் எப்பொழுதும் இப்படித்தான் ஓட்டுகிறான். இதை அவன் நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்”. என்றாள் அவன் சகோதரி ஜோன்.

அவன் அவர்கள்மீது மௌனமாக ஒரு கோபமான பார்வையை வீசினான். ஆயா அவனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டாள். அவளால் அவனை எதுவும் செய்ய முடியாது. அவள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய வயதை கடந்து பெரியவனாகிவிட்டான்.

ஒரு நாள் அவன் தன் குதிரை சவாரியில் இருந்தபோது, அவனுடைய தாயாரும் மாமாவும் உள்ளே வந்தார்கள். அவன் அவர்களுடன் எதுவும் பேசவில்லை.

“ஹலோ, இளம் குதிரை வீரனே! வெற்றிபெறும் ஒன்றை செலுத்திக் கொண்டிருக்கிறாயா?”என்றார் அவன் மாமா.

“நீ இந்த ஆடும் குதிரையில் விளையாடும் வயதைக் கடந்துவிடவில்லையா? நீ ஒன்றும் இன்னும் சின்னப் பையன் இல்லை என்று உனக்குத் தெரியுமா?”என்றாள் அம்மா.

ஆனால், ஒன்றுக்கொன்று அருகருகாக அமைந்திருந்த பாலின் நீலநிறக் கண்கள் நேராக முன்னோக்கி பார்த்தபடியிருந்தது. அவன் தன் முழு வேகத்துடன் அதில் சவாரி செய்யும்போது யாரிடமும் பேசமாட்டான். அவன் தாயார் அவனைக் கவலைத் தோய்ந்த முகத்துடன் பார்த்தாள்.

ஒருவழியாக அவன் குதிரை சவாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

“நான் அந்த இடத்தை அடைந்து விட்டேன்” என்று உற்சாகமாக தன்னுடைய நீண்ட கால்களை அகல விரித்தபடி நின்றவாறு கூறினான்.

“எந்த இடத்தை?”என்று அவன் தாயார் கேட்டார்.

“நான் எங்கு போகவேண்டுமோ அந்த இடத்திற்கு!’ என்றான் கடுமையாக.

“அது சரி மகனே! அந்த இடத்திற்குப் போய் சேரும்வரை நிறுத்த மாட்டாயா? அந்த குதிரையின் பெயர் என்ன?”என்று அவன் மாமா கேட்டார்.

“அதற்கு பெயர் இல்லை”என்றான்.

“பெயரில்லாமலே செல்கிறது சரிதானே?”என்று மாமா விசாரித்தார்.

“இல்லை. அதற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. கடந்த வாரம் சன்சோவினோ என்று அழைக்கப்பட்டது. 

“சன்சோவினோவா? அது ஆஸ்காட்டில் நடந்த குதிரைப்பந்தயத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பெயர் உனக்கு எப்படித் தெரியும்?”என்று மாமா கேட்டார். 

“அவன் சதா குதிரைப் பந்தயத்தைப் பற்றியே பஸேட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறான்”என்றாள் ஜோன்.

ஆஸ்கருக்கு தன்னுடைய குட்டி மருமகன் குதிரைப் பந்தயத்தைப் பற்றிய அண்மைய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. பஸேட் என்ற இளவயதுத் தோட்டக்காரனுக்கு போரின்போது இடதுகாலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவன் ஆஸ்கரின் கீழ் பட்டாளத்தில் பணியாற்றி வந்தான் என்பதால் அவர் மூலம் இந்த வீட்டின் தோட்டவேலையை பெற்றிருந்தான். பஸேட்டுக்கு குதிரைப் பந்தயத்தைப் பற்றி நிறைய தெரியும். அவன் குதிரைப் பந்தயத்துக்காவே வாழ்ந்தான். இந்த சிறுவனும் அவனோடு சேர்ந்து அதற்காகவே வாழ்ந்து வந்தான். 

ஆஸ்கர் பஸேட்டிடம் சென்று பேசினார்.

“சின்ன எஜமான் பால் என்னிடம் பந்தயத்தைப் பற்றி கேட்கிறார் என்பதால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை”என்றான் பஸேட்.. அவன் முகம் ஏதோ மதக்கருத்துக்களைப் பற்றி பேசுவதுபோல மிகுந்த தீவிரத்தன்மையுடன் இருந்தது. 

“அவன் ஜெயிக்கும் என்று கருதும் எந்த குதிரையின் மீதாவது பணம் வைத்து பந்தயம் கட்டுகிறானா?”

“நான் அவரைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. அவர் இளவயது ஆட்டக்காரர். அவர் நல்லவர் ஐயா. அவருக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் அவரிடம் நீங்களே கேட்டு விடுகிறீர்களா? நான் அவரைப் பற்றி உங்களிடம் வெளிப்படுத்திவிட்டதாக அவர் நினைத்துவிடக்கூடும்.”

பஸேட் மிகுந்த தீவிரத்தன்மையுடன் பேசுவதாக ஆஸ்கருக்குத் தோன்றியது. அவர் தன் மருமகனிடம் சென்று அவனைத் தன்னோடு காரில் வெளியே கூட்டிச் சென்றார்.

“சொல்லு பால், பெரிய மனுஷனே. நீ எப்போதாவது குதிரையின் மீது பணத்தை பந்தயமாக வைத்திருக்கிறாயா?”என்று மாமா கேட்டார்.

சிறுவன் அந்த வடிவான மனிதரை உற்றுப் பார்த்தான்.

“நான் பந்தயம் வைக்கக்கூடாது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?”என்று பதிலளித்தான்

“நான் துளியும் அப்படி நினைக்கவில்லை. அடுத்த வாரக்கடைசியில் லிங்கனில் நடக்கும் பந்தயத்திற்கு ஏதாவது ரகசியத் தகவலைத் தருவாய் என்றுதான் நினைத்தேன்”

ஆஸ்கரின் இடமான ஹேம்ஸ்பைரை நோக்கி கார் விரைந்து கொண்டிருந்தது.

“யாருக்கும் சொல்லமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து தருவீர்களா?”என்று மருமகன் கேட்டான்.

“நான் உனக்கு சத்தியம் செய்து தருகிறேன்”என்றார்.

“சரி, அப்படியானால் டஃபோடில்.”

“டஃபோடில்! எனக்கு சந்தேகமாக இருக்கிறது செல்லப் பையா. மிர்சாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“எனக்கு வெர்ற்றியாளரைத்தான் தெரியும். அது டஃபோடில்”என்றான் அந்த சிறுவன்.

“டஃபோடில் ஆ?”

மாமா சற்று நேரம் எதுவும் பேசவில்லை. டஃபோடில் அதிகம் அறியப்படாத குதிரை.

“மாமா”

“சொல்லு பையா”

“இதை மேற்கொண்டு வெளியே விடமாட்டீர்கள்தானே? நான் பஸேட்டுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்”

“பஸேட் கிடக்கிறான். அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

“பஸேட்டும் நானும் கூட்டாளிகள். நாங்கள் முன்பிருந்தே கூட்டாளிகள் மாமா. அவர்தான் முதலில் எனக்கு ஐந்து ஷில்லிங்குகள் கடனாகக் கொடுத்தார். நான் அதைத் தோற்றுவிட்டேன். நான் அவரிடம் அது எனக்கும் அவருக்கும் இடையிலானது மட்டுமே என்று சத்தியம் செய்திருக்கிறேன். நீங்கள் எனக்கு ஒரு பத்து ஷில்லிங் நோட்டைக் கொடுத்தது நினைவிருக்கிறதா. அதிலிருந்துதான் நான் வெற்றிபெறத் தொடங்கினேன். அதனாலேயே நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தை மேற்கொண்டு யாரிடமும் கொண்டு செல்ல மாட்டீர்கள்தானே?”

அந்த சிறுவன் தனது பெரிய கவர்ச்சிகரமான நீலக்கண்களால் கூர்ந்து பார்த்தான்.

“சரி பையா! உன்னுடைய ரகசிய தகவலை யாரிடமும் சொல்லவில்லை. டஃபோடில் தானே? என்றால் அதன்மீது எவ்வளவு பந்தயம் கட்டுகிறாய்?”

“அந்த இருபது பவுண்டுகளைத்தவிர எல்லாவற்றையும். அதை நான் பின்னர் தேவைக்கு வைத்துக்கொள்கிறேன்.”என்றான் அவன்.

மாமா அதை நகைச்சுவை என்றே நினைத்தார்.

“நீ தேவைக்காக இருபது பவுண்டுகளை வைத்துக்கொள்கிறாயா? அப்படித்தானே இளம் கனவுக்காரனே? அப்படியென்றால் எவ்வளவு பணத்தை பந்தயம் கட்டுகிறாய்?”

“நான் முன்னூறை கட்டுகிறேன். ஆனால் இது நம்மிருவரிடையே மட்டுமே இருக்கட்டும் மாமா. சத்தியம்?”, என்றான் அவன் தீவிரமாக.

மாமா சத்தமாக சிரித்தார்.

“இது நம்மிருவரிடையே மட்டுமே இருக்கட்டும். ஆனால், உன்னுடைய அந்த முன்னூறு எங்கு இருக்கிறது?”என்று கேட்டார்.

“பஸேட் என்னுடையதை வைத்திருக்கிறார். நானும் அவரும் கூட்டாளிகள்”.

“ஆம். நீங்கள் கூட்டாளிகள் தான் இல்லையா! பிறகு பஸேட் டஃபோடில்மீது எவ்வளவு கட்டுகிறார்?”

“அவர் என்னளவிற்கு அதிகமாக போகமாட்டார். அவர் நூற்றைம்பதுவரை போவார் என்று நினைக்கிறேன்”

“பென்னிக்களில் சொல்கிறாயா? என்று மாமா சிரித்தார்.

“பவுண்டுகள்! பஸேட் என்னைவிட அதிகமாக கையிருப்பு வைத்திருக்கிறார்” என்றவாறு அவன் மாமாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

வியப்பிற்கும் ஆச்சர்யத்திற்கும் இடையில் அவனுடைய மாமா அமைதியாக இருந்தார். அவர் மேலும் எதையும் பேசாமல், அவனை லிங்கன் பந்தயத்திற்கு அழைத்து செல்வதென முடிவெடுத்தார்.

“பையா, இப்பொழுது நான் மிர்சாவின் மேல் இருபது பவுண்டுகள் பந்தயம் வைக்கிறேன். உனக்காக நீ விரும்பும் ஒரு குதிரையின்மேல் ஐந்து பவுண்டுகள் பந்தயம் கட்டுகிறேன். உன் விருப்பம் எதன் மீது?”

“டஃபோடில், மாமா.”

“இல்லை. டஃபோடில்மேல் ஐந்து பவுண்டுகள் கிடையாது”

“என்னுடைய சொந்த பணமாக இருந்தால் நான் அதைத்தான் தேர்வு செய்வேன்”. என்றான் அந்த சிறுவன்.

“நல்லது! நல்லது! சரியாக சொன்னாய். எனக்காக ஐந்து பவுண்டுகளும் உனக்காக ஐந்து பவுண்டுகளும் டஃபோடில்மேல் கட்டுகிறேன்”.

அந்த சிறுவன் இதுவரைக்கும் பந்தய கூட்டத்தை நேரில் பார்த்ததில்லை. அவனுடைய கண்கள் நீல நிறத்தில் தீ போல எரிந்தன. அவன் வாயை இறுக மூடிக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்பிருந்த ஃப்ரென்சுக்காரன் ஒருவன் லேன்சலாட்டின் மீது பணம் கட்டியிருந்தான். அவன் பரவசத்தில் வெறித்தனமாக தன் கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி “லேன்சலாட், லேன்சலாட்”என்று கத்திக்கொண்டிருந்தான்.

டஃபோடில் முதலாவதாக வந்தது. அடுத்து லேன்சலாட்டும் அதற்கடுத்து மிர்சாவும் வந்தன. 

அந்த சிறுவன் தன்னுடைய சிவந்த கன்னங்களோடு, கண்கள் பளபளக்க வித்தியாசமாக அமைதியுடன் இருந்தான். நாலுக்கு ஒன்று என்ற கணக்கில் அவனுடைய மாமா, ஐந்து பவுண்டு நோட்டுகள் நான்கை கொண்டுவந்தார். 

“இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது”என்று அந்த சிறுவனுக்கு முன்பாக பணத்தை ஆட்டியபடி கேட்டார். 

“நாம் பஸேட்டுடன் பேசலாம். என்னிடம் ஆயிரத்து ஐனூறு இருக்கும் என்று நினைக்கிறேன். இருபது கையிருப்பாக இருக்கிறது. அதோடு இந்த இருபதும்”என்றான்.

அவனுடைய மாமா சில கணங்கள் அவனை அளந்தார்.

“இங்கே பார் கண்ணா! நீ பஸேட்டைப் பற்றியும் அந்த ஆயிரத்து ஐநூறு பற்றியும் உண்மையாக சொல்லவில்லை. அப்படித்தானே”என்று கேட்டார்.

“ஆம். நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆனால் அது நம்மிருவருக்கும் மட்டும்தான் தெரியும். நீங்கள் சத்தியம் செய்திருக்கிறீர்கள்”

“எனக்கு நினைவிருக்கிறது பையா! ஆனால் நான் பஸேட்டுடன் பேசவேண்டும்”

“மாமா, நீங்கள் பஸேட்டுடனும், என்னுடனும் கூட்டாளியாக இருக்க விரும்பினால், நாம் மூவரும் கூட்டாளிகளாக இருக்கலாம். நீங்கள், நம் மூவரைத்தவிர வெளியில் வேறு யாரிடமும் சொல்லமாட்டீர்கள் என்று சத்தியம் செய்து தரவேண்டும். பஸேட்டும் நானும் அதிர்ஷ்டசாலிகள். நீங்களும் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பீர்கள், ஏனென்றால் உங்களின் பத்து ஷில்லிங்கைக் கொண்டுதான் நான் ஜெயிக்க ஆரம்பித்தேன்.”

ஆஸ்கர் மாமா பஸேட்டையும் பாலையும் ஒரு மதிய நேரத்தில் ரிச்மண்ட் பார்க்கிற்கு கூட்டிச் சென்றார். அங்கு மூவரும் பேசிக்கொண்டார்கள்.

“இங்கே பாருங்கள் சார், அது எப்படியென்றால், சின்ன ஐயா பால் என்னை குதிரைப்பந்தய நிகழ்வுகள், அது சம்பத்தப்பட்ட கதைகளை சொல்ல வைப்பார். அவர் எப்பொழுதுமே நான் பணத்தை ஜெயித்தேனா அல்லது இழந்தேனா என்பதை தெரிந்து கொள்ளவே விரும்புவார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் அவருக்காக ஐந்து ஷில்லிங்குகளை ஒரு குதிரையின்மீது கட்டுகிறேன். நாங்கள் தோற்றோம். பின்பு நீங்கள் கொடுத்த அந்த பத்து ஷில்லிங்குகளின் மூலம்தான், அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அந்த பணத்தை நாங்கள் ’சிங்கலீஸ்’ மேல் கட்டினோம். அப்பொழுதிலிருந்து எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சரிதானே பால்?”என்றார் பஸேட்.

“நாம் உறுதி என்று நம்பும்போது எல்லாம் சரியாகவே இருக்கும். எப்பொழுது உறுதி குலைந்து போகிறோமோ அப்பொழுதுதான் சரிந்துவிடுவோம்”, என்றான் பால்.

“ஓ, அப்படியானால் இனி நாம் கவனமாக இருப்போம்”என்றார் பஸேட்.

“ஆனால் நீ எப்பொழுது உறுதியாக இருப்பாய்?”மாமா புன்னகைத்தார்.

“அங்குதான் நிற்கிறார் பால். அது ஏதோ அவருக்கு இறைவனிடமிருந்து அருளாகக் கிடைத்திருக்கிறது. முன்பு டஃபோடில் என்றதைப்போல, இப்பொழுது லிங்கன். அது அத்தனை நிச்சயமானது”

“டஃபோடில்மீது நீ பந்தயம் வைத்தாயா?”என்று கேட்டார் ஆஸ்கர் க்ரெஸ்வெல்.

“ஆமாம் ஐயா. எனக்கு கொஞ்சம் கிடைத்தது”.

“அப்படியானால் என் மருமகனுக்கு?”

பஸேட் பாலைப் பார்த்தபடி எதுவும் பேசாமல் இருந்தார்.

“எனக்கு ஆயிரத்து இருநூறு கிடைத்தது இல்லையா பஸேட்? நான் டஃபோடில்மேல் முன்னூறு கட்டுவதாக மாமாவிடம் சொன்னேன்”.

“சரிதான்”என்று தலையை ஆட்டினார் பஸேட்

“ஆனால் பணம் எங்கு இருக்கிறது?’ என்று மாமா கேட்டார்.

“நான் அதை பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறேன். சின்ன ஐயா பால் எப்பொழுது விரும்பினாலும் அதை எடுத்துக்கொள்ளலாம்”.

“என்ன, ஆயிரத்து ஐநூறு பவுண்டுகளா?”.

“அதோடு ஒரு இருபது! இப்பொழுது பந்தயத்தில் கிடைத்த இருபதுடன் சேர்த்து நாற்பது”. 

“வியப்பாக இருக்கிறது”என்றார் மாமா.

“சின்ன ஐயா பால் உங்களைக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்வதாக சொன்னால், உங்கள் இடத்தில் நான் இருந்தால் சேர்ந்து விடுவேன். மன்னித்துக் கொள்ளுங்கள்”என்றார் பஸேட்.

ஆஸ்கர் அதைப் பற்றி யோசித்தார்.

“நானும் பணத்தைப் பார்க்க விரும்புகிறேன்”என்றார்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். பஸேட் அவரிடம், அவன் வென்ற ஆயிரத்து ஐநூறு பவுண்டுகளோடு கையிருப்பில் இருந்த இருபதையும் சேர்த்து காண்பித்தார். 

“இப்பொழுது பாருங்கள் மாமா, நான் உறுதியென்று சொன்னதும்“

 எல்லாம் சரியாக இருக்கிறது. நாம் முழுபலத்துடன் திடமாக இறங்கலாம். இல்லையா பஸேட்?”

“நாம் அப்படியே செய்யலாம் பால்”

“எப்போது நாம் உறுதியாக இருப்போம்?”என்றார் மாமா சிரித்தபடி.

“ஓ அதுவா, சில சமயங்களில் அந்த டஃபோடிலை சொன்னதுபோல நிச்சயமாக உறுதியாக இருப்பேன். சில சமயங்கள் எனக்கு யோசனைகள் இருக்கும் சில சமயங்கள் இருக்காது, அப்படித்தானே பஸேட்? அப்படியிருக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாம் தோற்றுவிடுவோம்”

“அப்படியா, உனக்குத் தெரியுமா! நீ உறுதியாக இருப்பதாக, டஃபோடிலைப் பற்றி சொன்னதுபோல உறுதியாக சொல்வதற்கு உன்னால் எப்படி முடிகிறது கண்ணா?”

“ஓ அது எனக்குத் தெரியாது. எனக்கு உறுதியாகத் தெரியும் அவ்வளவுதான் மாமா”என்று சற்று அசௌகரியத்துடன் கூறினான்

“அது அவருக்கு கடவுளிடமிருந்து கிடைக்கிறது போல ஐயா”என்று பஸேட் மீண்டும் கூறினார். 

“அப்படித்தான் சொல்ல வேண்டும்”என்றார் மாமா.

அவர் கூட்டாளியானார். லெகெர் கப் நடந்தபோது, யாரும் பெரிதாக நினைத்துப் பார்க்காத ’லைவ்லி ஸ்பார்க்’ வெல்லும் என்பதை அவன் உறுதியாக சொன்னான். அந்த சிறுவன் அதன்மேல் ஆயிரம் கட்டச் சொல்லி வலியுறுத்தினான். பஸேட் ஐநூறும், ஆஸ்கார் க்ரெஸ்வெல் இருநூறும் கட்டினார்கள். லைவ்லி ஸ்பார்க் முதலாவதாக வந்தது, பந்தயம் ஒன்றுக்கு பத்து என்றதாக இருந்ததில், பால்க்கு பத்தாயிரம் கிடைத்தது.

“பார்த்தீர்களா”என்றான். “நான் அதைப்பற்றி அவ்வளவு உறுதியாக இருந்தேன்’.

ஆஸ்கர் க்ராஸ்வெல்க்கு இரண்டாயிரம் கிடைத்திருந்தது.

“இங்கே பார் கண்ணா, இந்த மாதிரியான விஷயங்கள் எனக்கு கவலையளிக்கிறது”என்றார்.

“அதெல்லாம் தேவையில்லை மாமா. நான் இன்னும் சற்று அதிக நாட்களுக்கு இதில் உறுதியைக் காட்டாமல் இருக்க வேண்டும்”

“ஆனால், உன்னுடைய இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்”என்று மாமா கேட்டார்.

“நிச்சயமாக சொல்கிறேன். நான் இதை அம்மாவிற்காகத்தான் தொடங்கினேன். அப்பா அதிர்ஷ்டம் இல்லாதவர் என்பதால் தனக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று அம்மா சொன்னார். அதனால் ஒருவேளை நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இது தன் முணுமுணுப்பதை நிறுத்திவிடக்கூடும்” என்றான்.

“எது முணுமுணுப்பதை நிறுத்திவிடக்கூடும்?”

“எங்கள் வீடு. அது முணுமுணுப்பதால் அதை எனக்கு பிடிக்கவில்லை”

“அது என்ன முணுமுணுக்கிறது?”

“எதனால்…. எதனால்…. எதனால் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுதுமே பணப்பற்றாக்குறை நிலவுகிறது தெரியுமா மாமா”என்று அந்த சிறுவன் பதட்டத்துடன் கூறினான். 

“எனக்குத் தெரியும் கண்ணா. எனக்குத் தெரியும்.”

“நாங்கள் கொடுக்க வேண்டிய பணத்திற்காக அம்மாவிற்கு வக்கீல் நோட்டீஸ்கள் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா மாமா?”

“அப்படி நடப்பது எனக்குத் தெரியும்.”என்றார் மாமா.

“முதுகுக்குப் பின்னால் மனிதர்கள் ஏளனமாக சிரிப்பதுபோல, வீடு முணுமுணுக்கிறது. அது பயங்கரமாக இருக்கிறது. நான் அதிர்ஷடசாலியாக இருந்தால்…”

“அதை நிறுத்தி விடலாம்”என்று மேலும் மாமா கூறினார்.

அந்த சிறுவன் எதுவும் பேசாமல், அவனது பெரிய நீலநிற கண்களால் அவரை வெற்றுப்பார்வையுடன் கவனித்தான். 

“சரி, இப்பொழுது நாம் என்ன செய்கிறோம்?”என்று கேட்டார் மாமா.

“நான் அதிர்ஷ்டக்காரன் என்பது அம்மாவுக்குத் தெரியக்கூடாது”என்றான்.

“ஏன் தெரியக்கூடாது?”

“அவர் என்னைத் தடுக்கக்கூடும்”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை”

“சரி கண்ணா. நாம் அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வோம்”.

அவர்கள் அதை சுலபமாக சமாளித்தார்கள். பால் தன் மாமாவின் ஆலோசனையின்படி அவரிடம் ஐந்தாயிரம் பவுண்டுகளைக் கொடுத்தான். அதை அவர் குடும்ப வக்கீலிடம் கொடுத்தார். அந்த வக்கீல் பாலின் தாயாரிடம் அவர்களது குடும்ப உறவினர் ஒருவர் அவரிடம் ஐந்தாயிரம் கொடுத்திருப்பதாக தெரிவிக்க வேண்டும். இந்தத் தொகையை, அவருக்கு வருடத்திற்கு ஆயிரம் என அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அவரின் பிறந்தநாள் அன்று கொடுக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டியது.

“ஆக, அவருக்கு அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளும், அவரின் பிறந்தநாளின்போது ஆயிரம் பவுண்டுகள் இருக்கும். இது அவருக்கு பின்னர் எந்தவிதத்திலும் கடினமானதாக அமைந்துவிடாது”என்றார் மாமா.

பாலின் தாயாருக்கு நவம்பர் மாதம் பிறந்த நாள். அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தும்கூட, சமீபகாலமாக அந்த வீடு எப்பொழுதையும்விட அதிகமாக முணுமுணுத்துக்கொண்டிருந்தது. பாலால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆயிரம் பவுண்டுகள் குறித்து தன் அம்மாவுக்கு எழுதப்பட்ட கடிதம் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்று மிகவும் கவலைப்பட்டான்.

குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும் வயதைக் கடந்தவனாகிவிட்டான் பால். விருந்தாளிகள் இல்லாத நாட்களில், அவன் தன் பெற்றோரோடு உணவு எடுத்துக் கொள்வான். அவனுடைய அம்மா தினமும் நகரத்திற்கு சென்று வந்தார். தனக்கு நன்றாக ஆடைகள் வரைய வரும் என்பதை கண்டுபிடித்திருந்ததனால், முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை ஓவியராக வேலைப்பார்த்துவந்த தன்னுடைய தோழியொருவரின் அலுவலகத்தில் ரகசியமாக வேலைப் பார்த்து வந்தார்.

அவருடைய தோழி வருடத்திற்கு பல ஆயிரங்களை சம்பாதித்துக் கொண்டிருக்க, பாலுடைய அம்மாவுக்கு சில நூறுகளே கிடைத்தது. அதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். உண்மையிலேயே எதிலாவது தான் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். ஆனால் அவரால் ஆடை வடிவமைப்பு விளம்பரங்களில்கூட வெற்றியடைய முடியவில்லை. 

அவர் தன்னுடைய பிறந்தநாளன்று காலை உணவிற்காக கீழே வந்தார். அவர் அன்றைய கடிதங்களை படித்துக்கொண்டிருக்கும்போது அவர் முகத்தை கவனித்துக்கொண்டிருந்தான் பால். அவன் வக்கீலின் கடிதத்தைப் பார்த்தான். அதை அவர் படிக்கும்போது, அவர் முகம் இறுக்கமாகவும் உணர்ச்சிகளற்றதாகவும் ஆனது. அவருடை உதட்டில் ஒரு தீர்மானமான இறுக்கம் தோன்றியது. அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாமல், அந்த கடிதத்தை மற்ற கடிதக் கட்டுகளுக்கு அடியில் வைத்துவிட்டார். 

“உங்கள் பிறந்தநாளைக்கு வந்த கடிதங்களில் ஏதாவது நல்லதாக வந்திருக்கிறதா அம்மா?”என்று பால் கேட்டான்.
 

“சற்றே நல்லதாக வந்திருக்கிறது”என்ற அவள் குரல் உணர்ச்சியற்று உற்சாகமின்றி வந்தது. 

அவர் மேற்கொண்டு எதையும் சொல்லாமல் நகரத்திற்கு சென்றுவிட்டார். ஆனால், அன்று மதியம் ஆஸ்கர் மாமா வந்தார். அவர் பாலுடைய அம்மா வக்கீலிடம் நீண்ட உரையாடல் நடத்தியதாகக் கூறினார். அவர் நிறைய பேரிடம் கடன் பட்டிருப்பதால் மொத்தமாக ஐந்தாயிரத்தையும் தான் பெறமுடியுமா என்று கேட்டதாகக் கூறினார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மாமா?”என்று அந்த சிறுவன் கேட்டான். 

“நான் அதை உன்னிடமே விட்டுவிடுகிறேன் கண்ணா”.

“ஓ.. அப்படியானால் அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். மீதம் இருக்கும் பணத்தைக் கொண்டு நாம் ஜெயித்துக்கொள்ளலாம்.”என்றான்.

“நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் கலாக்காய் மேல் தம்பி”என்றார் மாமா.

“ஆனால் கிராண்ட் நேஷனல் (இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்றகுதிரைப் பந்தயம்) போட்டியில் லிங்கன் அல்லது டெர்பி இந்த இரண்டில் ஒன்றுதான் ஜெயிக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்”என்றான் பால்.

எனவே, ஆஸ்கார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாலின் அம்மாவுக்கு மொத்தமாக ஐந்தாயிரமும் கிடைத்தது. பிறகு மிகவும் விசித்திரமாக ஒன்று நடந்தது. மழைக்கால மாலை நேரத்தில் கேட்கும் நூற்றுக்கணக்கான தவளைகளின் சத்தத்தைப்போல வீட்டில் கேட்டுக்கொண்டிருந்த குரல் வெறித்தனமானதாக இருந்தது.

வீட்டில் புதிய பொருட்கள் இடம் பெற்றன, பால் தனிப்பட்ட ஆசிரியரிடம் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தொடர்ந்து வந்த இலையுதிர்காலத்தில் பால் ஈடனில் தன் தந்தை படித்த பள்ளிக்குச் சென்றான். குளிர் காலத்தில் மலர்கள் காணப்பட்டன. அவன் தாயார் தன்னுடைய பழக்கப்பட்ட பணக்கார வாழ்க்கையை வெளிக்காட்டினார். ஆனால், புதிய பொருட்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் வீட்டிலிருந்து கேட்ட குரல்கள், கத்தல்களாக வீட்டையே உலுக்குவதாக இருந்தது. “இன்னும் அதிக பணம் வேண்டும்!”என்று அவை கரைந்தன. “ஓ.. இன்னும் அதிக பணம் வேண்டும். இப்பொழுது… இப்பொழுது… இப்பொழுதே! இன்னும் அதிக பணம் வேண்டும். எப்பொழுதையும்விட இன்னும் அதிகமாக”.

 அது பாலை மிகவும் பயமுறுத்தியது. அவன் தன் ஆசிரியர்களிடம் கிரேக்கமும் லத்தீனும் பயின்றான், ஆனால், அவனது பரபரப்பான நேரங்கள் பஸேட்டுடனே கழிந்தது. கிராண்ட் நேஷனல் வந்து போனது அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் நூறு பவுண்டுகளை இழந்திருந்தான். அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. அவன் லிங்கனை நினைத்து கவலையடைந்தான். அது வந்து போனதும் அவனுக்குத் தெரியவில்லை. அதில் அவன் ஐம்பது பவுண்டுகள் இழந்திருந்தான். 

“அது கிடக்கட்டும் விடு கண்ணா! நீ அதைப் பற்றி கவலைப்படாதே”என்று ஆஸ்கர் மாமா கூறினார். ஆனால் அவனுடைய மாமா சொல்வது எதுவும் உண்மையிலேயே அவன் காதில் விழவில்லை. 

“எனக்கு டெர்பி நடப்பது தெரிய வேண்டும். எனக்கு டெர்பி நடப்பது தெரிய வேண்டும்”அந்த சிறுவன் தன் பெரிய நீலநிற கண்கள் ஒளிர்ந்திட வெறித்தனமாகக் கூறினான். 

அவனுடைய அம்மா அவன் எவ்வளவு பதட்டமாக இருக்கிறான் என்பதை கவனித்தார். நீ உன் விடுமுறைக்கு கடல்புரமாக சென்று வருவது நல்லதாக இருக்கும். உனக்கு கடல்புரத்திற்கு செல்வது பிடிக்கும்தானே? நீ போவதுதான் நல்லது, எனக் கவலையுடன் அவனைப் பார்த்துக் கூறினார். 

 அந்த சிறுவன் விசித்திரமான தன் நீலக் கண்களை உயர்த்திப்பார்த்தான்.

“டெர்பிக்கு முன் என்னால் போக முடியாது அம்மா. என்னால் போகவே முடியாது”என்றான்.

“ஏன் முடியாது?”தான் எதிர்த்துப் பேசப்படுகிறோம் என்பதில் அவருடைய குரல் வலுவானதாக வந்தது.”ஏன் முடியாது? நீ அதைத்தான் விரும்புகிறாய் என்றால், உன் மாமா ஆஸ்காருடன் கடல்புரத்திலிருந்தே டெர்பியைக் பார்க்கப் போகலாம். நீ இங்கு காத்திருக்கத் தேவையில்லை. நீ இந்த பந்தயங்களில் அதிக அக்கறைக் காட்டுகிறாய். என்னுடைய குடும்பமே சூதாடிக் குடும்பம். அதனால் எத்தனை சேதங்கள் ஏற்பட்டது என்பது நீ பெரியவனாகும்வரை உனக்குப் புரியாது. அது அதிக சேதங்களை ஏற்படுத்தும். நான் பஸேட்டை வெளியேற்றிவிட்டு, உன் மாமாவிடம் அதைப் பற்றி விவேகமாக நடந்து கொள்வதாக சத்தியம் செய்துதரும்வரை பந்தயத்தைப் பற்றி பேசவேண்டாம் என்று சொல்ல வேண்டும். நீ கடற்புரமாக சென்று அதை மறந்துவிடு. நீ பதட்டமாகவே இருக்கிறாய்.”

“டெர்பி முடியும்வரை என்னை அனுப்பமாட்டேன் என்றால் நீங்கள் விரும்பும் எதையும் செய்கிறேன் அம்மா”என்றான்.

“எங்கிருந்து அனுப்பக்கூடாது? இந்த வீட்டிலிருந்தா?”

“ஆம்”என்றான்.

 “அட, என்ன விசித்திரமாக சொல்கிறாய் பையா. திடீரென்று இந்த வீட்டின்மீது உனக்கு இவ்வளவு அக்கறை வருவதற்கு என்னவாயிற்று? உனக்கு இந்த வீட்டைப் பிடிக்கும் என்று எனக்கு ஒருபோதும் தெரியாது”

 அவன் அவரைப் பேசாமல் பார்த்தான். பஸேட்டிடமோ அவன் மாமாவிடமோகூட இதுவரைக்கும் பகிர்ந்திராத ஒன்று அவனிடம் ரகசியத்துக்குள் ரகசியமாக இருந்தது. 

எந்த முடிவும் எடுக்காமல், முகத்தில் அதிருப்தியுடன் சற்று நேரம் நின்றிருந்தபின் அவன் அம்மா,”சரி நல்லது. டெர்பி முடியும்வரை நீ கடல்புரத்திற்குப் போக விரும்பாவிட்டால் போகவேண்டாம். ஆனால் நீ மனம் சோர்ந்து போகமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு. குதிரைப் பந்தயத்தைப் பற்றியும் அதன் நிகழ்வுகளைப் பற்றியும் அதிகம் யோசிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு”என்றார்.

“இல்லை அம்மா, அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்க மாட்டேன். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை அம்மா. நான் உங்கள் இடத்தில் இருந்தால் அதைப் பற்றி கவலைப் படவே மாட்டேன்”என்று தனக்கு குதிரைப் பந்தயம் ஒன்றும் அத்தனை முக்கியமானதில்லை என்பதாக சொன்னான். 

“நீ நானாகவும் நான் நீயாகவும் இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன்”,என்றார் அவன் அம்மா.

“நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அப்படித்தானே அம்மா”என்று அவன் மறுபடியும் சொன்னான்.

“அது தெரிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்”என்று சோர்வான குரலில் கூறினார்.

“அப்படியானால் சரி. நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்”என்று அவன் வலியுறுத்திக் கூறினான்.. 

“அப்படியா? அப்படியானால் நான் பார்த்துக் கொள்கிறேன்.”என்றார்.

 பாலினுடைய ரகசியங்களுள் ரகசியம் என்பது அவனுடைய மரக்குதிரை. அவன் இப்பொழுது தன்னுடைய விளையாட்டு நேரத்தில், ஆயா கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத வயதை எட்டிவிட்டான். அதனால் அவனுடைய அந்த குதிரையை அவன் மாடியிலிருந்த தன்னுடைய படுக்கையறைக்கு கொண்டு சென்றுவிட்டான். 

“நீ இந்த குதிரைமீது ஆடும் வயதை நிச்சயம் கடந்துவிட்டாய்”என்று அந்த நேரத்தில் அவன் அம்மா கூறினார்.

“நான் நிஜத்தில் ஒரு குதிரையை வைத்துக் கொள்ளும்வரை, என்னிடம் விலங்கைப் போல ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்”என்பதுதான் அவனுடைய பதிலாக இருந்தது. 

“அது உனக்குத் துணையாக இருப்பதாக உணர்கிறாயா”என்று சிரித்தார். 

“ஆமாம். இது மிகவும் நல்லது. எப்பொழுதும் நான் இங்கு இருக்கும்போது எனக்குத் துணையாக இருக்கிறது”என்றான் பால்.

எனவே இப்பொழுது சற்று பழையதாகிப் போயிருந்த அந்த மரக்குதிரை, அந்த சிறுவனின் படுக்கையறையில் நின்றிருந்தது.

 டெர்பி நெருங்கிக்கொண்டிருக்க அந்த சிறுவன் இன்னும் இன்னும் பதட்டமாகிக்கொண்டிருந்தான். அவனிடம் பேசிய எதுவும் அவனுக்கு கேட்கவில்லை. அவன் சோர்வடைந்தவனாக, விசித்திரமான பார்வை கொண்டவனாக ஆகியிருந்தான். அவனுடைய அம்மா உண்மையாகவே கவலைப்படத் தொடங்கினார். சிலசமயங்கள், அவனைப் பற்றி நினைத்து பதட்டமாகி வேதனைப்படும் கணங்கள் ஏற்படுவதுண்டு. உடனடியாக அவனிடம் சென்று, அவன் பத்திரமாக இருக்கிறானா என்று தெரிந்து கொள்ள விரும்புவார். 

டெர்பி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்குமுன், அம்மா ஒரு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும்போது அவருக்கு பாலைப்பற்றிய ஒரு பதற்றம் தோன்றியது. விவேகத்தனம் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தும், அந்த உணர்ச்சிகளுக்கு இடையில் அவரால் பேசவோ அதிலிருந்து வெளியேறவோ முடியவில்லை. நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தைவிட்டு கீழிறங்கி வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டி வந்துவிட்டார். குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆயா அந்த நேரத்தில் அழைப்பு வந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். 

“குழந்தைகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா வில்மான்ட்?’ 

“ஆம். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள்.”

“பால் நன்றாக இருக்கிறானா?”

“அவர் நல்லபடியாகத்தான் தூங்கச் சென்றார். நான் மேலே சென்று பார்த்து வரட்டுமா?”

“வேண்டாம். தொந்தரவு செய்ய வேண்டாம். பரவாயில்லை. அலட்டிக் கொள்ளவேண்டாம். நாங்கள் சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிடுவோம்”. அவருக்கு தன் மகனின் தூக்கத்தை கெடுக்க விருப்பமில்லை. 

“மிகவும் நல்லது’ என்றார் ஆயா.

இரவு ஒரு மணி நெருங்கும்போது பாலின் அம்மாவும் அப்பாவும் வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லாம் அமைதியாக இருந்தது. பாலின் அம்மா தன்னுடைய அறைக்கு சென்று, தோலாலான வெள்ளை அங்கியை கழற்றினார். கீழே பாலின் அப்பா விஸ்கியையும் சோடாவையும் கலக்கும் சத்தம் கேட்டது. 

அவரின் மனதுக்குள் தோன்றிய விசித்திரமான உணர்வின் காரணமாக, அமைதியாக மாடியிலிருந்த அவருடைய மகனின் அறைக்குச் சென்றார். அவர் நடைபாதையில் செல்லும்போதே மெல்லிய ஒலியை கேட்டார். என்னது அது?

அதை கவனித்தபடி, அந்த இடத்திலேயெ நகராமல் நின்றார். ஒரு விசித்திரமான, கனத்ததாக ஆனால், அதிகம் ஒலியில்லாத சத்தம் கேட்டது. அவரது இதயம் அப்படியே உறைந்தது. அது ஒரு மெல்லிய சத்தம். என்றாலும் அது அவசரப்படுத்துவதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. பெரியதாக ஏதோ ஒன்று மூர்க்கமாகவும் அமைதியான அசைவுடனும் இருந்தது. அது என்னது? கடவுளே என்னதான் அது? அவருக்குத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு அந்த சத்தம் தனக்கு பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது. அவருக்கு அது என்னவென்று தெரிந்திருந்தது. இருந்தாலும் அதை என்னவென்று சொல்ல முடியவில்லை. அது வெறித்தனமாக மேலும் மேலும் தொடர்ந்தது. 

கவலையிலும் அச்சத்திலும் உறைந்தவராக மென்மையாக கதவின் கைப்பிடியை திருகினார்.

அறை இருட்டாக இருந்தது. ஆனாலும், ஜன்னல் ஓரத்தில் முன்னும் பின்னுமாக ஏதோ அசைவது தெரிந்தது. அவர் வியப்புடனும் பயத்துடனும் கவனித்தார்.

“பால்!”நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”என்று அழுகையுடன் கேட்டார். 

“அது மலபார்! அது மலபார்!”அவன் விசித்திரமான சக்திவாய்ந்த குரலில் கத்தினான். 

அவன் மரக்குதிரையை தள்ளுவதை நிறுத்திவிட்டு, விசித்திரமாக ஒரு நொடி அவரை எந்த உணர்வுமின்றி கண்கள் ஒளிர பார்த்தான். பிறகு, தரையில் மோதி விழுந்தான். தாய்மையின் எல்லா உணர்வுகளும் உந்தித் தள்ள அவனை ஏந்திக் கொள்ள விரைந்தார்.

அவன் சுயநினைவற்றிருந்தான். மனநிலை பாதிக்கப்பட்டவனைப்போல அவன் அப்படியே சுயநினைவின்றியே கிடந்தான். அவன் தாயார், எந்த உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருக்க, அவன் கட்டிலுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமாக உடலை தூக்கியெறிந்தபடி அரற்றிக்கொண்டிருந்தான். 

“மலபார்! அது மலபார்! பஸேட், பஸேட். எனக்குத் தெரியும். அது மலபார்”

அந்த சிறுவன் அரற்றிக்கொண்டே எழுந்திருந்து, மீண்டும் அந்த ஆடும் குதிரையின் மீதேறி அதை உறுதி செய்துகொள்ள முயன்று கொண்டிருந்தான். 

“மலபார் என்று அவன் எதை சொல்கிறான்?”என்று அம்மா கேட்டார்.

“எனக்குத் தெரியாது”என்று அப்பா உணர்வில்லாத குரலில் கூறினார்.

“அவன் மலபார் என்று என்ன சொல்ல வருகிறான்?”தன் சகோதரன் ஆஸ்கரிடம் கேட்டார்.

“அது டெர்பி பந்தயத்தில் ஓடக்கூடிய ஒரு குதிரை”என்பது பதிலாக வந்தது. 

அது தவறானது என்று தெரிந்திருந்தாலுமே, ஆஸ்கர் க்ரெஸ்வெல் பஸேட்டிடம் பேசி மலபாரின்மேல் தனக்காக, பதினாலுக்கு ஒன்று என்ற கணக்கில் பந்தயம் கட்ட சொன்னார். 

நோயின் மூன்றாம் நாள் மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அன்று, அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். தன்னுடைய நீண்ட சுருட்டை முடியுடன்கூடிய தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையணையில் அசைத்துக் கொண்டிருந்தான். அவன் மறுபடியும் தூங்கவோ சுய நினைவிற்கோ வரவில்லை. அவனது கண்கள் நீலநிற கல்லைப்போல இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அவனுடைய அம்மாவின் மனமும் அதே போலவே கல்லாகியிருந்தது.

 அன்று மாலை ஆஸ்கர் வரவில்லை. பஸேட், தான் வரலாமா என்று கேட்டு செய்தி அனுப்பியிருந்தார். இதைக்கேட்டு பாலின் அம்மாவிற்கு கோபம் வந்தது என்றாலும், இன்னொருமுறை யோசித்துப் பார்த்து சம்மதம் தந்தார். சிறுவன் அதே நிலையிலேயே இருந்தான். ஒருவேளை பஸேட் அவனை நினைவுக்குக் கொண்டுவரக்கூடும்.

 பழுப்புநிற மீசையும், சிறிய கூர்மையான பழுப்பு நிறக் கண்களையும் உடைய குள்ளமான அந்த தோட்டக்காரர் அமைதியாக அறைக்குள் நுழைந்தார். பாவனையாக தன் தொப்பியை தொடுவதாக பாலின் அம்மாவிற்குக் காட்டிவிட்டு கட்டிலுக்கு அருகில் சென்று நின்றார். கண்களில் கண்ணீருடன், இறக்கும் தருவாயிலிருந்த குழந்தையைப் பார்த்தார்.

“சின்ன ஐயா! மலபார்தான் முதலாவதாக வந்தது. எல்லாம் சரியாகவே இருந்தது. சுத்தமான வெற்றி. நீங்கள் சொன்னதுபோலவே செய்துவிட்டேன். நீங்கள் எழுபதாயிரம் பவுண்டுகளுக்குமேல் ஈட்டியிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களிடம் எண்பதாயிரம் பவுண்டுகள் இருக்கின்றன. மலபார்தான் முதலில் வந்தது”

“மலபார்! மலபார்! நான் மலபார் என்றுதானே சொன்னேன் அம்மா? நான் மலபார் என்று சொன்னேனா? நான் அதிர்ஷ்டசாலிதானே அம்மா? எனக்கு மலபார்தான் என்று தெரியும்தானே அம்மா? எண்பதாயிரம் பவுண்டுகளுக்குமேல்! நான் அதை அதிர்ஷ்டம் என்கிறேன், நீங்களும்தானே அம்மா? எண்பதாயிரத்திற்குமேல்! எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்தானே? எனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். மலபார் முதலாவதாக வந்தது சரி. ஆனால் நான் உறுதி என்று நினைக்கும்வரை என் குதிரையின்மீதேறி ஆடிய பிறகு, நான் சொல்கிறேன். பஸேட், நீ விரும்பும் அளவிற்கு எவ்வளவு அதிகம் வேண்டுமானாலும் போகலாம். உன்னுடைய எல்லாப் பணத்தையும் அதில் போட்டாயா பஸேட்?

“நான் ஆயிரம் வைத்தேன் சின்ன ஐயா”

“என்னால் என் குதிரையை ஓட்டிக்கொண்டு அந்த இடத்தை அடைய முடியும், அப்பொழுதுதான் நான் முற்றிலும் உறுதியாக சொல்ல முடியும். முற்றிலும்! அம்மா. இதை நான் உங்களிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை அம்மா. நான் அதிர்ஷ்டசாலி!”

“இல்லை. நீ ஒருபோதும் சொன்னதில்லை.”என்றார் அம்மா.

அன்று இரவு அந்த சிறுவன் இறந்து போனான். 

அவன் இறந்து கிடக்கும்போது அவன் அம்மாவுக்கு அவரின் சகோதரனின் குரல் கேட்டது. “ஹெஸ்டர் உனக்கு எண்பதாயிரம் பவுண்டுகள் லாபமாக கிடைத்திருக்கிறது, ஆனால் அப்பாவி மகனை இழந்துவிட்டாய்”என்றார். ஆனால் அந்த அப்பாவி சிறுவன் தன்னுடைய ஆடும் குதிரையில் ஏறி வெற்றியாளனைக் கண்டுபிடிக்க இந்த உலகை விட்டு வெளியேறிப் போனதே நல்லது.

டி.எச்.லாரன்ஸ் (1885-1930) – இங்கிலாந்தை சேர்ந்த முன்னோடி கவிதை, நாவல் மற்றும் சிறுகதையாசிரியர். போரின் விளைவுகளையும், அந்நியமாதலையும், மனித உணர்வுகளின் சிக்கல்களையும் தன்னுடைய கதைகளின் வழியே ஆழமாக ஆராய்ந்தவர்.

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here