ரூபன் சிவராஜா
சாதி ஒழிப்பு | சமூகநீதி | விடுதலை| சமத்துவம்
அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar: 1891–1956) எனும் பேராளுமை குறித்தும் அவருடைய கருத்தியல், கோட்பாடு, தத்துவம், தலைமைத்துவப் பண்பு, சமூகநீதிக் களம், அரசியற் செயற்பாடுகள் குறித்துப் அறிவதற்கும் விவாதிப்பதற்கும் பெரும் பரப்புகள் உள்ளன. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை, நவீன இந்தியாவின் தேச உருவாக்கச் சிற்பிகளில் ஒருவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களை நெறிப்படுத்திய புரட்சியாளர் எனவாகப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட ஆளுமை. புரட்சியின் அடையாளமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவ, கோட்பாட்டுக் குரலாகவும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட ஆளுமை அவர். இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டம், தேச உருவாக்கத்திலும் அம்பேத்கரின் பங்கு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான தலித் தலைவர்கள், பிரதிநிதிகளின் எதிர்வினைகள், அவரது தேசியவாதக் கருத்துக்களை மீளாய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்துவதற்குரிய வெளிகளைச் சமகாலத்தில் ஏற்படுத்தியுள்ளன.
அம்பேத்கரின் சிந்தனைகள், குறிப்பாக அவரது தேசியம், தேசம் குறித்த பார்வைகள் வெறும் கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்கள் மட்டுமல்ல. அவை மாறிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழமைவிலும் வரலாற்றுப் போக்கிலும்; பேண்தகு (Sustainable) கூட்டுச் சித்தாந்தத்தின் (Collective ideology) வெளிப்பாடாகத் திகழ்வன. நவீன இந்தியச் சித்தாந்தங்களில், அம்பேத்கரே தேசியம், தேசம் குறித்த தீர்க்கமான கோட்பாட்டினை உருவாக்கியதோடு, இந்தியச் சூழலுக்கு ஏற்ப அவற்றை விமர்சனப்பூர்வமாகப் பயன்படுத்த முயன்ற முதன்மைச் சிந்தனையாளர். தேசியம் குறித்த அம்பேத்கரின் நிலைப்பாடுகள், கருத்தியல்கள் மீது இந்தக்கட்டுரை கவனம் குவிக்கின்றது. அதற்கு அடிப்படையாக தேசம் (Nation), தேசியம் (Nationalism), அரசு (நாடு – State), தேசிய அரசு (Nation-states) குறித்த புரிதல்கள் அவசியப்படுகின்றன.
தேசம், தேசியம், அரசு (நாடு), தேசிய அரசு
இன்றைய உலக நடைமுறையில் ஐ.நா அவையில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகள் அனைத்தும் தேசிய அரசுகளாகவே கருதப்படுகின்றன. இருந்தபோதும் அவற்றில் சில மட்டுமே தமது மக்களிடை ஒரு தேசிய இனத்தினை மட்டும் கொண்ட நாடுகளாகும். தேசிய அரசு என்பது, மக்கட்தொகை முழுவதும் அல்லது மக்களின் பெரும்பகுதி ஒரேயொரு ஆள்புலத்தை அல்லது நிலப்பரப்பினையும் (Terrotority), ஒரே மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஆட்சி அலகினைக் கொண்ட அமைப்பாகும். 20ஆம் நூற்றாண்டில்தான் ‘தேசிய அரசு’ என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. குறிப்பாக ஐ.நா உறுப்புநாடுகளில் பல்வேறு மாநில அரசுகளைக் கொண்ட அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை வேறுபடுத்தி விளிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் மீதான அரசியற் கவனம் (Political Attention) பல நாடுகளில் அதிகரித்துவரும் புறநிலையில் ‘தேசிய அரசு’ என்ற சொல்லாடல் குறைந்தளவு பயன்பாட்டுக்குரியதாக மாற்றியுள்ளது. ஒரு அரசு ஒரேயொரு தேசிய இனத்தையோ அல்லது ஒரேயொரு இனக்குழுவையோ மட்டும் கொண்டிருக்காதவிடத்து ‘தேசிய அரசு’ என்ற விளிப்பு பொருத்தமற்றதாகுகின்றது.
வரலாற்று ரீதியாகப் பார்க்கின் ஒரு தேசிய இனம் (சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதன் மூலம், By asserting the right to self-determination) தன்னைத் தானே ஆளும் உரிமை ஊடாகத் தனி அரசினை (தேசிய அரசு) அமைக்க முடியும் என்ற சிந்தனை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம்பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சிக்கான தொடக்கத்தினையும் இது தோற்றுவித்தது. 1789இன் பிரெஞ்சுப் புரட்சி அதனை உச்சமாக வெளிப்படுத்திப் பாதையைச் செப்பனிட்டது. இரத்தம் சிந்திய புரட்சியின் வழி மக்கள் மன்னராட்சியை வீழ்த்தி அதற்குச் சாவுமணி அடித்தனர். மக்களாட்சிக் கருத்துகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிற நாடுகளுக்கும் படிப்படியாகப் பரவின.
தேசிய அரசு என்ற எண்ணக்கருவினது ஜனநாயகமயமாக்கலுக்கான அடித்தளமாக ஆள்புலம் (நிலப்பரப்பு) ஒரு தேசிய இனத்தினைக் கொண்டிருக்கவேண்டும் அல்லது அந்த நிலப்பரப்பில் வாழக்கூடிய அனைத்து இனக்குழுக்களும் சமத்துவத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றுப் போக்கில் அத்தகு சமமாக நடத்தப்படுதல் நிகழத்தவறிய அம்சமாகும். பெரும்பான்மை இனங்களும் குழுமங்களும் சிறுபான்மையினரைக் கருத்திலெடுக்காது அதிகாரத்தைத் தமது கையிலெடுத்தன, தமக்கான தேசிய அரசுகளை நிறுவின. இன, மொழி, சமய, பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடுகளில் முரண்பாடுகள் தோன்றின. அந்த முரண்பாடுகள், வன்முறைகள், ஒடுக்குமுறைகளின் வழியாக பெரும்பான்மையினராற் கையாளப்பட்டன.
***
தேசம் (Nation) என்பது பல பொருள்களை உடையது. பொதுவான அல்லது கூட்டுச் சமூக பண்பாடு அடையாளம் கொண்ட மக்கள், அல்லது அத்தகு அடையாளம் கொண்ட மக்களை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு தேசம் எனப்படுகிறது. ‘Nation’ பிரெஞ்சுச் சொல். அது ‘Natio என்ற இலத்தீன் அடியிலிருந்து உருவானது. அதன் பொருள் ‘பிறப்பு’. காலப்போக்கில் அச்சொல், பண்பாட்டு அடையாள அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ‘தேசம்’ என்ற கருத்தாகவும் பரஸ்பர நம்பிக்கை, ஒருமைப்பாட்டு உணர்வினை (கூட்டுணர்வு) அடிப்படையாகக் கொண்ட வரலாற்று ரீதியான பண்பாட்டின் அர்த்தத்தைக் கொடுக்கின்ற அகநிலைப்பட்ட ‘தேசம்’ எனும் கருத்தாகவும் மாற்றமடைந்தது (பயன்படுத்தப்பட்டது).
மொழி, பண்பாட்டு அம்சங்கள் மற்றும் அதிகம் அகநிலைப்பட்ட கூட்டுணர்வுகளின் அடிப்படைகளோடு தேசியவாதம் (Nationalism) ஒரு அரசியல் இயக்கமாகவும் வளர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலங்களில் ‘தேசம்’ என்பது பொதுமையான சட்டங்களின் கீழ், சட்டமன்றத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ‘அரச அதிகாரம்’ மக்களாட்சி முறைமைக்குள் கொண்டுவரப்பட்டது. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மன் போன்ற நாடுகள் அவற்றின் எல்லைகளுக்கு வெளியில் வாழ்ந்த மக்களையும் தேசிய இனங்கள் என்று கருதின. ஹிட்லர், மிக்லோஸ் ஹோர்தி (Miklós Horthy – ஹங்கேரி) போன்றவர்கள் எல்லைகள் தாண்டிய பேரினமாக தமது இனங்களை ஒருங்கிணைக்கும் முனைப்புக் கொண்டிருந்தனர்.
18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி, ‘தேசிய அரசு’ கருத்தியலும் உருவாக்கமும் முதன்மை அரசியல் அமைப்பாக உருப்பெற்றது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சியின் பின் (செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, உக்ரேன், ஜோர்ஜியா, அர்மேனியா, போஸ்னியா, மொன்ரநீக்ரோ) புதிய தேசிய அரசுகள் (தனி அரசுகள்) உருவாகின. யுகோஸ்லாவியா உடைவினால் அதன் தேசிய இனங்கள் மத்தியில், குறிப்பாக போஸ்னியாவில் பாரிய மோதல்கள் ஏற்பட்டன. அதேவேளை நிலைபெற்றுவிட்ட ஜனநாயக நாடுகளில் தேசியத்திற்கான முக்கியத்துவம் அருகவும் தொடங்கிற்று. புலப்பெயர்வு, குடியேற்றம் நாடுகளை அதிகளவில் பல்லின தேசங்களாகவும் தேசியங்களாகவும் (Multinational States, Nations and Nationalities) மாற்றியுள்ளன. ஒப்பீட்டளவில் தேசிய அரசுகளினது உள்ளார்ந்த அர்த்தம் சில பகுதிகளில் வெகுவாகக் குறைந்துள்ளன. சில பகுதிகளில் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக அவற்றின் நடைமுறைப் பெறுமதி குறைந்துள்ளன.
அம்பேத்கரின் தேசியவாதம்
தேசியவாதம் குறித்த அம்பேத்கரின் பார்வை வேறுபட்டது. அகவயப்பட்ட அல்லது கோஷவயப்பட்டது அல்ல. அது கோட்பாட்டு ரீதியான ஆழமும் நுண்ணறிவின் பாற்பட்டதும், விமர்சனபூர்வமானதுமாகும். அரசியலமைப்புச் சபையின் இறுதி உரையில் (25.11.1949) இந்தியத் தேசியம் தொடர்பான அம்பேத்கரின் துல்லியமான விமர்சனம் வெளிப்பட்டது. ‘இந்தியா சமூக மற்றும் உளவியல் அடிப்படையில் இன்றும் ஒரு தேசமாக இல்லை, ஆயிரக்கணக்கான சாதிகளால் பிளவுபட்ட ஒரு சாதியத் தொகுப்பாகவே உள்ளது (Collection of castes divided by ‘thousands of castes’ ) நாம் ஒரு தேசம் என்று நம்புவதன் மூலம், நாங்கள் ஒரு பெரும் மாயையைப் (Great Delusion) பேணிக்கொள்கிறோம். சாதிய உணர்வு அடிப்படையிற் தேசிய விரோதமானது. ஏனெனில் அது ஒருமைப்பாடுமிக்க வாழ்வமைவதற்குத் தடையாகச் செயற்படுகின்றது என்றார்.
‘பல ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்த மக்கள் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்? நாம் சமூக மற்றும் உளவியல் உணர்வில் இன்னும் ஒரு தேசமாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தால் நமக்கு நல்லது. அப்போதுதான் நாம் ஒரு தேசமாக மாறுவதின் அவசியத்தை உணர்ந்து, அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்போம். சமூக வாழ்விற் சாதிகள் பிரிவினையை ஏற்படுத்துவதால் அவை முதலிற் தேச விரோதமாக உள்ளன. சாதிகள் தமக்கிடையேயான பொறாமைகள், விரோதங்களைக் கொண்டியங்குவதால் அவையும் தேச விரோதமாக உள்ளன.’
அவர் இந்தியாவின் இருப்பை நிராகரிக்கவில்லை. ஆனால் அது உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு தேசம் என வாதிட்டார். சமூக ஒருமைப்பாட்டினை உணரச்செய்வதே ஒரு உண்மையான தேசத்தை (Real nation) உருவாக்குவதற்கான முதற்படி என அவர் நம்பினார். ஒரு தேசம் ‘சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். அந்தச் சகோதரத்துவத்தினை சாதிய முறையை ஒழிக்காமற் சாத்தியப்படுத்த முடியாது என்றும் வாதிட்டார். அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதை அடுத்து இந்தியா முரண்பாடுகளின் சூழலுக்குள் நுழையும், அது ‘ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படையில் ஜனநாயக அரசியற் சமத்துவத்தினைக் கொண்டிருந்தாலும், சமூக மற்றும் பொருளாதார அசமத்துவம் தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரின் பார்வையில், ஒரு தேசமாக இருப்பது என்பது ‘சமூகக் கூட்டுணர்வினை’ குறிக்கின்றது. சாதி ரீதியிலான பாகுபாடுகள்; நீக்கப்பட்டு, சமூக, பொருளாதார மற்றும் அரசியற் சமத்துவம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரே உண்மையான தேசிய உணர்வு உருவாகும் என்பது அவரது வலியுத்தலாக இருந்தது. இது இந்தியா முழுவதும் நிலவிய சமூகப் பிளவுகளை நோக்கிய அம்பேத்கரின் விமர்சனத்தின் ஒரு பகுதியாகும்.
சாதி ஒழிப்பு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஒரே நிலத்திலும் ஒரே நிர்வாக எல்லைகளுக்குள்ளும் (ஆள்புலம் – Territory: Geographical and administrative boundaries) வாழ்வது மட்டும் ஒரு மக்களை ‘தேசம்’ என்று ஆக்கிவிடாது. தேசம் என்பது நாடு (State) என்ற அர்த்தத்தில் அல்லாமல் ‘Nation’என்ற அர்த்தத்திலேயே இக்கட்டுரையிற் பயன்படுத்தப்படுகின்றது. சாதியக் கட்டமைப்புகள், குறிப்பாக சமூகத்தின் படிநிலைப் பிரிவுகள், ஒரு தேசத்திற்கு அவசியமான கூட்டுணர்வு (Consciousness of kind) உருவாகுவதைத் தடுக்கின்றன என்று அவர் திடமாக நம்பினார். உண்மையான தேசம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அவை சாதிய அமைப்போடு இணங்கிப்போக முடியாத அம்சங்கள் என்பதை ‘Annihilation of Caste’ என்ற நூலில் வலியுறுத்துகிறார். தேசியம் குறித்த அவருடைய நுண்பார்வையின் அடிப்படை இதுதான். அதாவது தேசியம் என்பது மனிதர்களைக் கூட்டுணர்வோடு ஒன்றுபடுத்தவேண்டியது, ஆனால் அதற்கு முரணாக சாதியப் படிமுறைகள் பிளவுபடுத்துகின்றன. எனவே சாதிய அமைப்பு முறை தேசிய விரோதமானது என்பதை உடைத்துப் பேசினார்.
அம்பேத்கர் அவர்களுடைய ‘சாதி ஒழிப்பு’ நூல் மிக முக்கியமானது. முதலாளித்துவ உலகில் கொம்யூனிச அறிக்கை (Communist Manifesto) எத்தகு முதன்மையானதோ, அதே வகையில் இந்திய சாதிய ஒழிப்புப் போராட்டங்களுக்கு அம்பேத்கரின் இந்நூல் அவசியமானது என்று கூறியுள்ளார் ‘The Persistence of Caste’ நூலின் ஆசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே. 1936 இல் எழுதப்பட்ட இந்தநூல், இந்து மதத்தையும் அதன் சாதிய அமைப்பையும் மிகத் துணிச்சலாகக் கண்டிக்கிறது. படிநிலையான மற்றும் சமத்துவமற்ற சமூக அமைப்பை அங்கீகரிக்கும் இந்து வேதங்கள் குறித்து ஒரு அறிவார்ந்த விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. நவீன இந்தியாவில் சாதி எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதையும் மதவாதம் மற்றும் அறியாமையினால் சூழப்பட்ட அரசியல் போராட்டத்தில், அம்பேத்கரின் அறிவாற்றலும் புலமையும் எவ்வாறு வெளிச்சம் பாய்ச்சின என்பதையும் அந்நூலின் வழி பகுத்துணரலாம்.
அம்பேத்கரின் தேசியவாதம் சமூகத்தை அடித்தளமாகக் கொண்டது. உண்மையான தேசியவாதம் என்பது நாட்டின் மீதான பற்றுணர்வை மட்டும் மையப்படுத்தியதல்ல, சமூகத்திலுள்ள அனைத்து மக்கள் குழுமங்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதற்கான கூட்டு நெறியியல் பொறுப்பையும் அது உள்ளடக்கியது என அவர் நம்பினார். அவரது பார்வையில், இந்தியா ஆழமாக வேரூன்றிய சாதியப் படிநிலைகளைக் கொண்ட வர்க்க அமைப்பின் மீது கட்டப்பட்ட ஒரு சமூகமாக இருந்தது. இது சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் முரணானது. குறிப்பாக சமத்துவமும் சகோதரத்துவமும் ஜனநாயகத்திற்கு அவசியமான இரு முக்கியக் கொள்கைகள் என்பதை வலியுறுத்திய அவர் சாதியச் சமூக அமைப்பு ஜனநாயகத்திற்கும் பெரிய தடையெனச் சுட்டிக்காட்டினார்.
தேச உருவாக்கத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்
பெரிய சமூகக் குழுக்கள், குறிப்பாக தலித்துகள், அடிப்படை மனித உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கும் வரை – பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியிலிருந்து அரசியல் ரீதியாக விடுபட்டாலும் கூட இந்தியா உண்மையான ஒரு தேசமாகக் கருதப்பட முடியாதது என்றும் அவர்; வலியுறுத்தினார். தேசியவாதம் என்பது கொலனித்துவ ஆதிக்கமான வெளி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அதேவேளை சாதிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென்று கருதினார்.
அரசியல் விடுதலையில் அதாவது பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்திய இந்திய கொங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை போதுமானதல்ல எனவும் சில நேரங்களில் அதன் அணுகுமுறை தவறானதும்கூட என அவர் வாதிட்டிருக்கின்றார். அது சுதந்திரத்தின் சமூக அடித்தளத்தை கவனத்திலெடுக்கவில்லை என்பது அவரது நிலைப்பாடு. சமூக சமத்துவமும் சமூகத்தில் உள்ள கூடுதற் பலவீனமான குழுமங்களின் பாதுகாப்பும் தேச உருவாக்கத்திற்கான (Nation Building) அடிப்படை நிபந்தனைகளாக அவர் முன்வைத்தார். கொங்கிரஸிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார் என்பதோடு பெரும்பான்மை அலையையும் அவர் ஆதரிக்கவில்லை. இந்தியத் தேசிய கொங்கிரஸின் தேசிய விடுதலைப் போராட்டத்திற் கலந்துகொள்வதில்லை எனும் அவரது தீர்மானம் பல சமயங்களிற் தேசிய விரோதமாகப் புரிந்துகொள்ளப்பட்டது. கொங்கிரஸ் தலைமை சமூகத்தின் உயரடுக்குகளை முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பிரித்தானிய வெளியேற்றத்திற்குப் பின் – சமூக மறுசீரமைப்பு நிகழாத புறநிலையில் – இந்த உயரடுக்குச் சமூகங்கள் தலித் மக்கள் மீது ஒடுக்குமுறைகளைத் தொடர்வதற்குரிய வெளியை வழங்கும் என எச்சரித்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கனை வழங்கக்கூடியதும் அரசியல் உரிமைகளையும் தகுந்த நிறுவனமயப்பட்ட வரைபுகளை உறுதி செய்வதும் முக்கியமெனக்கருதினார். அவற்றுக்கு உரிய கட்டமைப்புசார் (Structural) மாற்றங்கள் இல்லாமல், கொலனித்துவத்திலிருந்து பெறப்படும் விடுதலை மேலோட்டமானதாகவே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய இனம் (Nationality) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைத் தெளிவாக விளக்குகிறார். ‘தேசிய இனம்’ என்பதை, பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றாக இணைக்கும், அதே வேளையில் ஏனைய குழுக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு உளவியல் ரீதியான பிணைப்பு மற்றும் கூட்டுணர்வு என்று விவரிக்கிறார். அந்த உணர்வானது ஒரு நிலப்பரப்பு அடிப்படையுடனும், ஒரே தேசமாக வாழ வேண்டும் என்ற அரசியல் அபிலாசையுடனும் இணையும்போது ‘தேசியவாதம்’ உருவாகிறது என்கிறார். மேலும் அது சாதி, மொழி அல்லது மதம் என எதனையும் பொருட்படுத்தாமல் அனைத்துக் குழுக்களையும் சமமானவர்களாக அங்கீகரிப்பதையே முன்நிபந்தனையாகக் கொண்டுள்ளது.
கொலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு – சட்ட நிர்வாகத்திற்கு ஆதரவு
சமூகப் பிரச்சினைகளை, குறிப்பாகச் சாதிய முறைகளைக் கையாளுவதிற் பிரித்தானிய ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொலனித்துவ சக்திகளின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய போதிலும், சமூக விவகாரங்களில் பிரித்தானியர் கடைப்பிடித்த ‘நடுநிலை’ வகிபாகம் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடருவதற்குக் காரணமாக அமைந்ததாக அம்பேத்கர் கருதினார். ஆயினும் இந்தியத் தேசிய கொங்கிரஸ் மீதான அவரது விமர்சனம் மேலும் கூர்மை மிக்கதாக இருந்தது. ஏனெனில், கொங்கிரஸ் (தேசிய) தலைவர்கள் தலித்துகளின் அவலநிலையைக் காண மறுப்பதாக அவர் கருதினார். சமூகப் படிநிலையில் வரலாற்று ரீதியாகக் கடைநிலையில் வைக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாக்காத பட்சத்தில், உருவாகப்போகும் புதிய அரசுக்கு (சுதந்திர இந்தியா) சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கமுடியாது என்பது அம்பேத்கரின் கருத்தாகும்.
அம்பேத்கர் சுயநல நோக்கங்களைக் கொண்டவர் என்றும், அவர் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட்டார் என்றும் சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தை எதிர்த்தவராகவும், உண்மையான தேசப்பற்று இல்லாதவராகவும் அவரால் அம்பேத்கர் சித்தரிக்கப்பட்டார். இத்தகு விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானவை என்ற கருத்துகள் சமூக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது. தலித் மக்களின் சமூகக் கட்டமைப்புச் சூழலை புறக்கணிக்கின்ற வகையிலான விமர்சனங்கள் இவை என்பதையும் ஆய்வுகள் சுட்டுகின்றன.
அம்பேத்கர் இந்தியாவின் சுதந்திரத்தை ஒருபோதும் எதிர்த்தவரில்லை. மாறாக நாட்டின் சுதந்திரம் என்பது சலுகை பெற்ற உயரடுக்கினருக்கு மட்டும் உரித்துடையதாக அல்லாமல், அனைத்து மக்களையும் அது எட்டவேண்டும் என்பதையே அவர் கோரினார் என்றும் பல ஆய்வாளர்களும் தலித் தலைவர்களும் எடுத்துரைத்துள்ளனர். அம்பேத்கரை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள், அம்பேத்கரின் கருத்துக்கள் பரவலான முக்கியத்துவம் பெற்றுள்ளமையையே எடுத்தியம்புகின்றன. குறிப்பாக 1990 களில் உருவான அம்பேத்கர் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கங்களின் எழுச்சிக்குப் பின், இது மேலும் வலுவடைந்தது. இந்தியாவின் சமூகநீதி தொடர்பான வரலாற்று மற்றும் நவீன கால சவால்களைப் புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் மிகவும் அவசியமானவை என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
சமூக விடுதலை
ஒத்துழைப்பு என்பது (Collaborating) பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தலித் உரிமைகளுக்காக அம்பேத்கர் அரசாங்கப் பதவிகளை ஏற்றதை ஷோரி விமர்சித்ததைக் குறிக்கிறது. சமூகக் கட்டமைப்பு சாதிய ஒடுக்குமுறையைக் குறிக்கிறது. அம்பேத்கரிசம் (Ambedkarite): அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசியல் மற்றும் சமூகப் பார்வைகளைக் குறிக்கிறது. அம்பேத்கரின் தேசியம் சமூக விடுதலை (Social Liberation), சமத்துவத்தை இலக்காகக்கொண்டது. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணிக்கும் எந்தவொரு அரசும், அரசியல் சுதந்திரம் பெற்றிருந்தாலும், ஒரு ஜனநாயகச் சமூகமாக இருக்க முடியாது என்று அவர் கருதினார். விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான (காங்கிரஸ் போன்ற) இயக்கங்களை அவர் எதிர்த்தபோதிலும், சுதந்திரம், தேசியம் என்பதன் உண்மையான அர்த்தத்தை விரிவுபடுத்த அவரது விமர்சன நிலைப்பாடுகளும் பணிகளும் உதவின.
தேசியம் என்பது நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து விடுவிப்பது மட்டுமல்ல, தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் அச்சம், ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதுமே என்பதை அம்பேத்கரின் பார்வை தெளிவுறுத்துகிறது. உள்வாங்கல் அணுகுமுறை (Inclusive Approach), சமூகநீதியுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்கிறார்.
விமர்சனங்களும் கேள்விகளும்
அம்பேத்கரின் கொலனியாதிக்க எதிர்ப்பு என்பது தேச உருவாக்கம் எனும் பெரும் இலக்கின் ஒரு பகுதி மட்டுமே. தலித் தலைவர் என்ற அடையாளம் மூலம் அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குகின்ற பிரயத்தனம் இந்தியச் சூழலில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. இது நவீன தேச உருவாக்கத்திற்கான செயற்களத்தில் அவர் உருவாக்கிய அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு நோக்குகளின் பரந்த பரிமாணங்களை இருட்டடிப்புச் செய்வதாகும். ஜனநாயகம், சமத்துவம், சமூக மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது தேசியவாதம், தேசம் குறித்த சிந்தனைகள் ஒரு முழுமையான கோட்பாட்டுப் பார்வையாக வடிமைக்கப்பட்டதாகும்.
இந்திய சமூகத்தையும் தேசியக் கருத்தியலையும் ஆழமான சவாலுக்கு உட்படுத்தினார், கூர்மையான பல கேள்விகளை எழுப்பினார். தேசம் என்றால் என்ன? இந்தியா ஒரு தேசமா? அல்லது ஒரு தேசமாக மாறிக் கொண்டிருக்கிறதா? இந்தியாவின் தேச உருவாக்கத்தின் தடைக்கற்கள் எவை? ஒரு தேசம் எப்படி உருவாகிறது? இந்தியாவுக்கு எவ்வகையான தேசியவாதம் பொருத்தமானது உட்பட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு கோட்பாடு, தத்துவம், அரசியல், நடைமுறை விளக்கங்களையும் வழங்கினார்.
அவரது பார்வையில், இந்தியா பல கலாச்சாரங்கள், பல இனங்கள், பல மதங்கள் கொண்ட நாடு. அத்தோடு சமூக ஒழுங்கின் ஆழமான கட்டுப்பாடுகளால் நிரம்பியிருந்தது. இந்த சமூகக் கட்டமைப்பு மக்கள் குழுமங்களுக்கிடையில் எதிர்மறை உணர்வுகளை, பொறாமையை, சமூகக் கூட்டுச்சிந்தனையின் பற்றாக்குறைகளை உள்ளிருத்தியிருந்தன. தேசத்தை விட சாதிய உணர்வுகளுக்குக் அதிகம் கட்டுப்பட்டிருந்தன. அம்பேத்கரின் கருத்துப்படி, இந்துக்கள் ஒரு சமூகத்தை உருவாக்க முடிந்தாலும், உண்மையான அர்த்தத்தில் ஒரு தேசத்தினை உருவாக்க முடியாது என்பதாகும்
தேசியம் – விளிம்புநிலைத் தேசியம்
அம்பேத்கர் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பார்வையில் விளிம்புநிலைத் தேசியம் (Subaltern Nationalism) எனும் ஒரு புதிய தேசிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார். விளிம்புநிலைத் தேசியவாதக் கருத்தியலானது, சமூக அடையாளம், பொருளாதார மறுபங்கீடு (Economic Redistribution) மற்றும் அரசியற் பிரதிநிதித்துவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கியது. அவருக்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் பிரித்தானிய ஆட்சியை அகற்றுவது மட்டுமல்ல, இந்தியாவின் உள்ளார்ந்த சமூகக் கட்டமைப்புகளில் ஆழமாகப் பதிந்திருந்த ஒடுக்குமுறை, அநீதி, தீண்டாமை மற்றும் சமத்துவமின்மையை முறியடிப்பதையும் அடிப்படை இலக்காகக் கொண்டது. விளிம்புநிலைத் தேசியம் என்பது மேற்தட்டு வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்படும் அதிகாரத்துவத் தேசக்கட்டமைப்பிற்கு மாற்றாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை முதன்மைப்படுத்தும் ஒரு கருத்தியலாகும். மேல்தட்டு தேசியத்திற்கு எதிரான பார்வை எனவும் வரவிலக்கணப்படுத்தலாம்.
பொதுவாகத் தேசியம் என்பது ஒரு நாட்டின் எல்லை, மொழி, மத, பண்பாடு, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையும். ஆனால், விளிம்புநிலைத் தேசியம் என்பது அந்தப் பாதுகாப்பிற்குள் ஒளிந்திருக்கும் அல்லது உள்ளுறைந்திருக்கும் சாதி, வர்க்கம் மற்றும் பாலினப் பாகுபாடுகளைக் கேள்வி கேட்கிறது. ‘விடுதலை என்பது யாருக்கானது என்ற கேள்வியே இதன் அடிப்படை. தமிழகத்தைப் பொறுத்தவரை விளிம்புநிலைத் தேசியம் முக்கியமாக இரண்டு தளங்களில் செயல்படுகிறது எனலாம். ஒன்று திராவிடத் தேசியம். இது வடமொழி, பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகத் தமிழர்களின் அடையாளத்தை முன்னிறுத்தியது. இதனுள்ளும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் குரல்கள் எந்தளவிற்கு உள்வாங்கப்பட்டன என்ற விமர்சனங்கள் நிலவுகின்றன. மற்றையது ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்கள். பெரியார், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் முன்வைத்த தேசியம் இதில் முக்கியமானது. அவர்கள் சாதி ஒழிப்பு, சமூகநீதி இல்லாத சுதந்திரம் முழுமையான தேசமாகாது என்ற நிலைப்பாட்டினை முன்வைத்தவர்கள். இந்திய அளவில் காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak) மற்றும் ரணஜித் குகா (Ranajit Guha) போன்றோர் இக்கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர். வரலாற்றின் கீழடுக்கிலிருந்து (History from below) சமூகத்தைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மார்க்சிய மற்றும் மேற்கத்திய நவீன சிந்தனையாளர்களின் தாக்கம்
தேசியக் கருத்தாக்கம் தொடர்பான அம்பேத்கரின் நிலைப்பாடுகளில் மேற்கத்திய நவீன சிந்தனையாளர்களான கெல்ல்னர், அன்டர்சன் மற்றும் ஹாப்ஸ்பாம் (Ernest Gellner, Benedict Anderson, and Eric Hobsbawm) ஆகியோரின் தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. தேசியவாதம் தொடர்ச்சியான சமூக ஒருங்கிணைப்பைக் கோருகின்றது என்ற கெல்ல்னரின் கருத்தும் – தேசத்தினைக் ‘கற்பனை செய்யப்பட்ட சமூகமாக’ விளக்கும் அன்டர்சனின் கோட்பாடு – தேசிய மரபுகளை உயரடுக்கினரே உருவாக்குகின்றனர் என்பதை விளக்கும் ஹாப்ஸ்பாமின் புரிதலுமான பார்வைகள் அனைத்தும் அம்பேத்கரின் ஆய்வுகளில் பிரதிபலிக்கின்றன.
மார்க்சிய அடிப்படைகளையும் அம்பேத்கரின் தேசியக் கோட்பாடுகளிற் தரிசிக்கலாம். மார்க்சியம், தேசியத்துவத்தை ஒரு முதலாளித்துவச் சித்தாந்தமாகவே (Bourgeois ideology ) பார்க்கின்றது. அது வர்க்கச் சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒளித்து, முதலாளித்துவ சக்திகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான அடிப்படை மோதலிலிருந்து கவனத்தைத் திருப்பப் பயன்படும் கருவியாகவவே கருதுகின்றது. ஒட்டுமொத்தமாக தேசியவாதம் என்பது வர்க்க முரண்பாடுகளை இருட்டடிப்புச் செய்யும், முதலாளித்துவ அதிகாரத்தை நியாயப்படுத்தும், தொழிலாளர் வர்க்கத்தினைத் தேசிய எல்லைகளின் அடிப்படையில் பிளவுபடுத்தும். அதேவேளை மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களைப் பலவீனப்படுத்தும் போதும், சர்வதேச தொழிலாளர் ஒற்றுமைக்கான வெளிகளை உருவாக்கும் போதும் அவை முற்போக்கான வகிபாகத்தைக் கொண்டிருக்க முடியும் என்று கருதினர். அந்த அடிப்படையில் அவற்றை அங்கீகரித்துள்ளார்கள்.
வர்க்கப்போரபட்டம் – உற்பத்தி உறவுகள்
மார்க்சியத்தின் கோட்பாட்டுச் சாரம் வர்க்கப் போராட்டமாகும். அதன்படி உற்பத்தி சாதனங்களுடனான மனிதர்களின் உறவின் அடிப்படையில், சமூகம் பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம், உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதோடு, பிழைப்பிற்காகத் தனது உழைப்பை விற்கும் தொழிலாளர் வர்க்கத்தை (Proletariat) சுரண்டுகிறது. இந்தச் சூழலில், தேசியம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவது எனும் உண்மையான பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு காரணியாகவே பார்க்கப்படுகிறது
கொலனித்துவத்திற்கு உட்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட தேசங்களின் தேசிய விடுதலை இயக்கங்கள், ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டங்களிற் காத்திரமான முக்கியப் பங்காற்ற முடியும். ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுப்பதன் மூலம், இந்த இயக்கங்கள் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைவதற்கும், சுரண்டலை எதிர்ப்பதற்கும் உரிய சூழலை உருவாக்குகின்றன. இத்தகைய இயக்கங்கள் சமத்துவத்திற்கான (Socialism) உலகளாவியப் போராட்டத்திற்குப் பங்களிக்கும் ஆற்றல் கொண்டவை என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கருதினர். தேசிய விடுதலை இயக்கங்களின் வெற்றி, தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சமதர்ம சமூகத்தை அமைப்பதற்கான களத்தை உருவாக்குகிறது என்பதும் மார்க்சின் சிந்தனையாகும்.
இந்த அடிப்படையில் இந்திய விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தேசியம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக (வர்க்க) போராட்டத்திற்கு இடையிலான சிக்கலான உறவைப் புரிந்துகொள்ளலாம். 1947 இல் பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான இந்திய விடுதலைப் போராட்டம், கொலனியாதிக்கத்திற்குச் சவால் விடுத்த ஒரு தேசிய விடுதலை இயக்கமாகும். இது பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களைத் தேசிய அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்தது. கொலனித்துவ ஆட்சிக்கு எதிராக கூட்டுணர்வு நிலவியபோதிலும், இந்தியச் சமூகத்திற்குள் வர்க்க, சாதியப் பிரிவினைகள் தெளிவாகத் தெரிந்தன. இந்தத் தேசிய கொங்கிரஸ் இயக்கத்தின் தலைமை அம்பேத்கர் கூறியது போல உயரடுக்குகளின் கைகளில் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைக் காட்டிலும் தங்கள் சொந்த வர்க்க நலன்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்தனர் என்பதை மார்க்சியப் பார்வையாக நோக்கலாம். சுதந்திரத்திற்குப் பிறகும், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வர்க்கமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்பட்டவர்களும் விவசாயிகளும் தொடர்ந்து சுரண்டலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகினர். தேசிய விடுதலை இயக்கங்களின் வழிநடத்தலிலும் தேசியம் என்பது முதலாளித்துவ நலன்களுக்கே சேவை செய்யக்கூடும் என்ற மார்க்சியப் பார்வையை இது பிரதிபலிக்கிறது.
ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக் கோரிக்கைகள்
ஆதிக்கச் சாதிகள் தலித்துகளுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தைத் தாமாக முன்வந்து ஒருபோதும் வழங்கமாட்டார்கள் என்று அம்பேத்கர் வாதிட்டார். எனவே, சமூகநீதியை உறுதி செய்வதற்காக அவர் தனி வாக்காளர் தொகுதிகள் (Separate electorates), சுய-பிரதிநிதித்துவம் (Self – Representation) மற்றும் வலுவான அரசியலமைப்பு உரிமைகளைக் கோரினார். தாழ்த்தப்பட்டவர்கள் வரலாற்று ரீதியாகத் தனிநபர் சுதந்திரம், சொத்துரிமை, பொது நிறுவனங்களில் பங்கேற்பு அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற எந்தவொரு அடிப்படைச் சிவில் உரிமைகளும் இருந்ததில்லை என்பதை வலியுறுத்தினார். இதுவே அவரது தேசியத் திட்டத்தின் (National Project) மையக்கருவாக இருந்தது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது மேலாதிக்கத்தை நிறுவிய போதும் மத்தியிலும், அவர்கள் ஒரு கூட்டுநிர்வாகத்தையும், நவீன அரசியல் நிறுவனங்களையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற முறையான கருத்தாக்கத்தையும் அறிமுகப்படுத்தியதை அம்பேத்கர் அங்கீகரித்தார். இது (இந்திய மக்களிடையே) ஒருவித பொதுவான நலனை உருவாக்கியது. அவர் பிரித்தானிய ஆட்சி நிரந்தரமாக நீடிப்பதை விரும்பவில்லை. மாறாக, தேசியம் என்பது பேண்தகு வகையிலும் உள்ளடக்கியதாகவும் மாறுவதற்கு நிபந்தனையாக, இந்தியா தன்னைத்தானே உள்ளகச் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தவேண்டும் என்ற வலுவான கருத்தினைக் கொண்டிருந்தார்.
பேண்தகு நிலையும் உள்ளடக்கலும் கூட்டுப்பண்பும்
அம்பேத்கர் இந்து மதத்தை விட அதிக சமத்துவமான மற்றும் சமூக நோக்குடைய ஒரு அமைப்பாக பௌத்தத்தைக் கருதினார். அவர் கருத்துப்படி பௌத்தம் என்பது சமத்துவம், கூட்டுப்பண்பு (Collectivism), தார்மீகப் பகுத்தறிவு மற்றும் படிநிலைப் பாகுபாடுகள் இல்லாத வாழ்க்கையை ஊக்குவித்தது. இந்த விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டு அம்பேத்கரும் இலட்சக்கணக்கான தலித்துகளும் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். உணர்ச்சிவயத் தேசியத்தை விட அறிவுப்பூர்வமான ஜனநாயகத்தையே அவர் முதன்மைப்படுத்தினார். அறிவார்ந்த தேசியவாதத்தின் (Intellectual Nationalism) மிக முக்கியமான அம்சம் இது. கடந்த காலத்தைப் பெருமைப்படுத்துவது, தனிநபர் வழிபாடு, மதம், கலாச்சாரம் சார்ந்த தேசியவாதம் ஆகியவற்றை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார். இத்தகைய நடைமுறைகள் விமர்சனப்பூர்வமான சிந்தனையை மந்தப்படுத்தி, அதிகாரத்தை குருட்டுத்தனமாகப் பின்பற்றும் மந்தைகளாக மக்களை மாற்றுகின்றன என்று அவர் கருதினார். அவரைப் பொறுத்தவரை, ஒரு தேசம் என்பது புராணங்கள், கலாச்சார பாரம்பரியம் அல்லது வீரபிரதாப பிம்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளின் அடிப்படையிற் கட்டமைக்கப்பட வேண்டும்.
இந்தியா அரசியலமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இப்போது இந்த சமநிலை ஆபத்துக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா மதவாத அரசு அமைந்த பிற்பாடு, இந்து தேசியவாதிகளின் அரசியல் ஆதிக்கம், நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்தை பலவீனப்படுதியுள்ளது. 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த காலத்தில் மதச்சார்பின்மை பாரிய அச்சுறுத்தற் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. அம்பேத்கர் முன்வைத்த தேசியம் என்பது இந்திய அளவிலும், தமிழகம் உட்பட்ட மாநிலங்கள் அளவிலும் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அவசியமானவை. இந்தியாவில் மட்டுமன்றி பல்தேசிய இனங்களைக் கொண்டதும் சிறுபான்மையினரும் வெவ்வேறு இனக்குழுமங்களும் அரசியல், சமூக, பண்பாட்டு, இன, மொழி எனவான எந்தவொரு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்ற தேசங்களுக்கும் அவசியமானது, பொருத்தமானது. தேசியமும் மனிதாபிமானமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக ஒன்றையொன்று இட்டுநிரப்புபவை.
உசாத்துணை:
- A Study of Dr. B.R Ambedkar‟s Idea of Nationalism in the Context of India’s Freedom Movement | Rashmin C Bhatt
[International Journal of Latest Technology in Engineering, Management & Applied Science (IJLTEMAS) | Volume VII, Issue VII, July 2018]
- Dr. Ambedkar’s Thoughts on Nationalism | Manish Kr. Pandey
[Dept. of Political Science, Shri Rawatpura Sarkar University, Raipur, CG., India]
- Ambedkar and Indian Nationalism: An overview | Dr. C. Vinod Kumar | Indian Streams Reasearch Journal |
[Dr. C. Vinod Kumar: Academic Counselor, Dept. of Political Science, Centre for Distance Education | Acharya Nagarjuna University, Andhra Pradesh.]
- Marx and National liberation | Jack Woddis | Marxism Today | June 1965
- Nation, Nation state, Nationalism | www.snl.no | The Norwegian Encyclopedia
- Hindutva on the March | Achin Vanaik | Jacobin.com | 30.08.2019
- Nationalism and religious intolerance have taken power in India (Nasjonalisme og religiøst trangsyn har fått makten i India) | Nicolay Paus| Aftenposten | 08.10.2003
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

