தேவிலிங்கம்
அத்தனை நபர்களும் நெருக்கியடித்துக்கொண்டு ஒரே காரில் செல்வதை நினைத்தாலே மூச்சுத்திணறியது. வேறுவழியின்றி அப்பா, அம்மா, இன்னும் நெருங்கிய உறவினர்கள் இருவரோடு இந்தச் சிறிய காரில் பயணம் செய்ய ஒப்புக்கொண்டாள். அவளுக்கு எங்குச் சென்றாலும் தாராளமாகத் தங்கு தடையின்றி வீசிக்கொண்டிருக்கும் காற்று வேண்டும். இல்லையெனில் குமட்டி ஓங்காரித்துக்கொண்டு வரும். முகத்தைப் பட்டுஇழைகள் வருடுவதைப் போன்ற மெல்லிய காற்று. ஆளை அப்படியே தள்ளிப்பார்க்கும் ஆடிக்காற்று. மலை பிரதேசங்களில் முகத்தைச் சிலீரென உறையவைக்கும் பனிக்காற்று. காற்றில் தான் எத்தனை வகைகள்? உள்ளிருக்கும் இறுக்கத்தைக் குறைக்கக் காருக்கு வெளியே பார்த்தவளின் கண்களுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்லும் இளைஞனின் முடியை இழுத்து ஒரு குழந்தைக் காற்று வம்பிழுப்பதைக்கண்டு தன்னைமீறி புன்னகைத்துக்கொண்டாள். எதையோ சொல்ல நினைத்து திரும்பிப்பார்த்த அம்மா இவள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்ததும் முகத்தைச் சட்டெனத் துக்ககரமாக வைத்திருப்பதைப் போலொரு பாவனையோடு இருக்கையில் சாய்ந்துக்கொண்டாள். சன்னலோர இருக்கைதான் வேண்டுமென அடம்பிடித்துப் பிடிவாதமாக அமர்ந்திருந்த சின்னவளை இழுத்து, கலைந்திருந்த தலைமுடியினைக் கைகளால் கோதி சரி செய்தாள் .
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த மகிழினி, சுற்றிலும் நிலவிவந்த அமைதியினை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் கண்களைச் சுழற்றி, இறுக்கமாக அமர்ந்திருந்த தாத்தா பாட்டி உறவினர்கள் அனைவரையும் மெல்ல ஒரு பார்வை பார்த்தது. எவர் முகத்திலும் துளிக்கூடச் சிநேகமான பாவனை இல்லாதது கண்டு கொஞ்சம் திகைத்தது. பின் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக “அம்மா பசிக்குதும்மா எதாவது வாங்கிக்கொடு” என்றது.
கிளம்பும் அவசரத்தில் குழந்தைகளுக்கு எதுவுமே கையில் எடுத்துவராதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் எனத் தன்னை நொந்துக்கொண்டாள். சஞ்சய் வந்திருந்தால் இப்படி யோசித்துக்கொண்டிருக்கவே தேவையில்லை. எங்கு எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவான். அவனோடு செல்கையில் இதுவரை அவளையோ குழந்தைகளையோ பசி எனக் கேட்கவே விட்டதில்லை. அதற்கு முன்பே அனைத்தும் வந்துவிடும். அவசரத்திற்கு “நீ முதலில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போ! பின்னால் வந்துவிடுகிறேன்” என அனுப்பி வைத்துவிட்டான்.
திருமணத்திற்குப் பின்பு சில சொகுசுகளுக்கு மனம் பழக்கப்பட்டுவிட்டிருந்தது. அதொரு பழக்கப்பட்ட கடிவாளக்குதிரை. வெளியே வந்தால் குழந்தைகளை சஞ்சய் கவனித்துக்கொள்வான். எந்தக் கவலையும் இன்றி அவள் சிறுபிள்ளையைப்போல அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டே பயணத்தை ரசிக்கத்தொடங்கிவிடுவாள்.
இப்பொழுது என்ன செய்வதெனத் தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த யாழினிக்கும் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் இருவரும் அழ ஆரம்பித்துவிடுவார்கள். இத்தனை நேரம் குழந்தைகள் பசியைப் பொறுத்துக்கொண்டிருந்ததே மிகப்பெரிய விசயம். காரை நிறுத்தச்சொல்லி உணவுகள் வாங்கச்சொல்லுவது எப்படி என யோசித்தாள்.
நொடிக்கூடத் தாமதிக்காமல் ஊருக்கு சென்றுவிடும் அவசரமும் அவசியமும் அனைவரது முகத்திலும் தெரிந்தது. காரை பின்பற்றித் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்துக்கொண்டிருந்ததால் வெகு வேகமாக ஊரை நோக்கி சென்றுவிடும் முனைப்பில் அனைவருமே இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.
இதுவரை இந்த வழியில் வந்ததே இல்லை. இருபக்கமும் செம்மண் நிலங்கள். மக்களின் வசதிக்காக, தேவைக்காக, இந்த நெடுஞ்சாலைகள் போடப்பட்டபிறகு பயணங்களில் அந்நியத்தன்மை ஒட்டிக்கொண்டது. முன்பு நிறுத்தங்களில் பேருந்திலிருந்து எட்டிப்பார்த்தால் வீடுகளில் எரியும் குண்டுபல்புகளும் அதற்குக் கீழே சிலேட்டில் குனிந்து எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சின்னக்குழந்தைகளும் கண்ணுக்குத் தென்படுவார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் சிவப்போ பழுப்போ கறுப்போ தவறாமல் கழுத்தில் தொங்கும் மணியோடு ஒரு நாய்ப் படுத்துக்கொண்டிருக்கும். அந்தச் சித்திரம் அத்தனை வசீகரமானதாக இருக்கும். இப்பொழுது இரையை உண்ட ஜீரணமாகாத நீண்ட சர்ப்பங்களெனப் பயமுறுத்தும் கரிய சாலைகள் அவ்வளவுதான்.
தூரத்தில் ஒரு சின்ன டீக்கடை தெரிந்தது. இனியும் தாமதிக்ககூடாதென “அப்பா புள்ளைங்களுக்குப் பசி வந்துட்டு… டீ குடிச்சிட்டு போலாம்பா…” என்றாள். அப்பா முன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பிப் பின்னால் அமர்ந்திருக்கும் அம்மாவைப் பார்த்தார். அம்மா புடவைத்தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சியப்படி ”எனக்கு எதுவும் வேணாம்… இப்படிப்பட்ட நிலமையில பச்சை தண்ணிக்கூட என்பல்லு மேல படாது அக்கா! நீயும் அத்தானும் போயி டீக்குடிச்சிட்டு வாங்க… மலரு, நீயும் போயி புள்ளைங்களுக்கு எதாவது வாங்கிக்கொடு…”எனச் சொல்லிவிட்டு சன்னலுக்கு வெளியே பார்வையை இலக்கில்லாமல் அலையவிட்டாள்.
“வானதி… சும்மா எதாவது பேசிட்டு இருக்காத… நீயும் இறங்கு, சுகர் ஏறிட்டுன்னா மயக்கம் வந்துடும்… நாம இனி எப்ப சாப்பிடப்போறோமோ தெரியல…“ எனச் சொல்லியபடியே, டிரைவரிடம் காரை கடையின் அருகில் நிறுத்த சொல்லிவிட்டு கதவைத்திறந்து இறங்கிக்கொண்டார் அப்பா.
“இவுங்கள்லாம் என்ன மனுசங்களோ தெரியல… எப்படித்தான் இவுங்களுக்கெல்லாம் இப்படிபட்ட நிலமையிலையும் பசிக்குதோ? பசி… பசின்னு பொழுதானைக்கும் பசிதான்… கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா பாரு…“ என அம்மா வாயிக்குள் முணுமுணுப்பது காதுக்குள் விழுந்தது. அது ஏனோ தெரியவில்லை ஈசல்கள் பறக்கும் பொழுது அதன் முடிவை நினைத்து நாள் முழுக்க வருத்தப்படுபவளுக்கு எதுவும் சங்கடமாகத் தோன்றவில்லை. கடமைக்காக இந்தப் பயணம் செல்வதாகத்தான் தோன்றியது. எந்த ஒட்டுதலுமின்றி, கடமைக்காக உறவுகள். கடமைக்காகச் செயல்கள். கடமைக்காகப் பேச்சுக்கள். இத்தனை நாட்கள் ரத்தம் கசிந்துக்கொண்டிருந்த வடு இப்பொழுதுதான் ஆறியதாகப்பட்டது. மனசு ஓர் இறகாகி லேசாகக் காற்றில் பறப்பது போல இருந்தது.
பின்னால் வந்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸும் இவர்கள் நின்றதைக் கண்டு அருகில் வந்து நின்றது. டிரைவரும் கீளினரும் இறங்கி கடையை நோக்கிவந்தார்கள். பிளாஸ்டிக் தன்மை வந்துவிட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகங்கள். இந்த வேலையில் காலப்போக்கில் அவர்களுக்கு இப்படியான தன்மை வாய்த்திருக்கக்கூடும். ஆம்புலன்ஸின் பின்புறக்கதவைத் திறந்து தினேஷ் இறங்கி ஓடிவந்தான்.
“அத்தை… அத்தை… அம்மாவுக்கு அந்த வண்டியில உட்காரமுடியலையாம்… மயக்கமா வருதாம்… இறங்கி இந்தக் காருக்கு வந்துடவான்னு கேக்குறாங்க…“ எனப் பதறியபடியே அம்மாவைப் பார்த்துக் கேட்டான். நிமிர்ந்து தினேஷைப் பார்த்தாள். அவனுடைய இமைகள் மெலிதாக வீங்கி பளபளத்தன. அழுதிருக்கக்கூடும். எப்படியாக இருந்தாலும் அவனுக்கு அப்பா.
“என்னாது மயக்கமா வருதா? என் அண்ணனோட சேர்ந்து சொத்தையெல்லாம் அழிச்சி கூத்தடிச்சி அவன ஒண்ணுமில்லாம செல்லாக்காசாக்கி கொன்னுட்டு… இப்ப புருஷன் செத்ததுக்கு அப்பறம் உங்க அம்மாவுக்குப் புருசன் ஒத்துக்க மாட்டேங்குதோ… அப்பமட்டும் இனிச்சிது… இப்ப கசக்குதா? புருஷன் செத்து பொணமா வரப்பக்கூட உங்க அம்மாவுக்குச் சொகுசு கேட்குதோ? அதெல்லாம் இங்க இருக்கிறவங்களுக்கே இடம் இல்லை… அங்கையே உட்கார்ந்து வர சொல்லு” எனச் சொல்லிவிட்டு காரைவிட்டு இறங்கி விறுவிறுவென டீக்கடை நோக்கி நடந்தாள் அம்மா.
அத்தைகள் அன்பாகப் பேசியே பழகிய காதுகளுக்கு இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது கடினமாகத்தான் இருக்கும் தினேஷுக்கு. தந்தையை இழந்த துக்கமும் தனியாக நிராதரவாகத் தந்தையின் பிணத்தோடு பயணிக்கும் தாயின் நிலைமையும் வேலைக்குச் செல்லாமல் சொகுசாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் அவனுக்கு எப்படிபட்ட மனநிலையைத் தந்திருக்கும் என யோசித்தாள். பாவமாக இருந்தது.
வனிதா மாமி மிகவும் சுத்தம் பார்ப்பவள். கழுவிய வீட்டில் யாராவது அழுக்கு காலை வைத்துவிட்டாலே மீண்டும் நாலு முறை வீட்டை கழுவுவாள். தினமும் மூன்று முறை குளிப்பாள். ஆறுதடவை சாமிக் கும்பிடுவாள். தேய்த்த பாத்திரங்களை மீண்டும் மீண்டும் தேய்த்து வைப்பாள். ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை. இவ்வளவு சுத்தம் பார்ப்பவள், ஊர் முழுக்கப் பெண் தொடுப்புகளோடு திரியும் மகேந்திரன் மாமாவை எப்படி அனுமதித்தாள்? ஏன் பெண்கள் அனைவருமே ஆண்கள் விசயத்தில் மெழுகுப்போல உருகிவிடுகிறார்கள்? ஏன் அவர்களது அண்மையை மட்டுமே துணையென நம்புகிறார்கள்? பெண்களுக்கு ஆண்கள் ஏதாவது ஓர் உறவில் அவர்களோடு இருந்தே ஆகவேண்டுமா என்ன?
“அம்மா பாவம்மா வனிதா மாமி…” என மெதுவாக அவள் சொன்னது அவளுக்கே காதில் சரியாக விழவில்லை. அம்மா திரும்பி ஓர் அதிகாரமான பார்வை பார்த்தாள்.
“என்னது பாவமா? அகங்காரம் புடிச்ச நாயி அவ… அண்ணனுக்குக் கல்யாணம் ஆன புதுசுல நீங்கள்லாம் சின்னக்குழந்தைங்க… இடுப்புல ஒண்ணு, கையில ஒண்ணு வச்சிட்டு இரண்டு நாள் எங்க அம்மாவீட்ல தங்கிறதுக்குப் போனேன்… ஒருவாய் சோறு கூட ஒழுங்கா போடமாட்டா… ஏன் அண்ணி இப்படிச் செய்றீங்கன்னு கேட்டதுக்கு… இது என் வீடு, இந்தக் கேள்வி கேக்கிற அதிகாரத்தையெல்லாம் உன் வீட்ல போய் வச்சிக்கன்னு சொன்னா… தரித்திரம் புடிச்ச மூதேவி… இவ காலடி எடுத்து வச்ச நேரம், எங்க அம்மா வீடே ஒண்ணுமில்லாம போயிட்டு…“ எனச் சொல்லிவிட்டு அழுதபடியே அருகில் சுட்டு அடுக்கப்பட்டிருந்த வடைகளில் ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் வைத்து மெல்லத் தொடங்கினாள்.
“அப்படி அக்கறையா இருந்தா, நீ போயி ஆம்புலன்ஸ்ல உட்கார்ந்து வர்றீயா?” என வாயில் மென்றுக்கொண்டிருந்த வடையோடு கேட்டதைப் புரியாதது போலவே புருவத்தை உயர்த்திக் கேள்விக்குறியாகப் பாவித்தபடியே அவசர அவசரமாக நகர்ந்து குழந்தைகளின் கைகளைப் பிடித்துச் சற்றுத் தூரத்தில் தெரிந்த கழிப்பறையை நோக்கி நகரத்தொடங்கினேன்.
வனிதா மாமியைப் பார்த்த முதல் தருணம் ஒளிப்பட்டதும் கிணற்றுக்குள் பதிந்திருக்கும் பாசிப்படர்ந்த பாத்திரங்கள் மின்னுவது போல நினைவிலாடியது. அப்பொழுது L.K.G படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். பாலர் பள்ளியில் “வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே…” எனச் சலங்கை ஒலி படத்திலிருந்து ஆடியபாடலுக்கு அணிந்திருந்த அழகான நீலநிற மேக்ஸியைத்தான் அன்று அணிந்திருந்தாள். வனிதா மாமியின் திருமணப் புகைப்படங்களில் முழுக்க இடுப்பை வளைத்து நடனமாடியபடியேதான் நின்றுக்கொண்டிருக்கிறேன், மனதிற்குள் பாடல் ஓடிக்கொண்டே இருந்திருக்கும் போல!
வெள்ளை வெளேரென மாவு பொம்மை போல அத்தனை அழகாக இருந்தாள் மாமி. கைகால்கள் எல்லாம் நீட்ட நீட்டமாக! அவளருகில் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஒருவார்த்தைகூட அவள் கடிந்து பேசியதாகவோ சச்சரவுகள் செய்ததாகவோ நினைவுகள் இல்லை. ஒருவேளை அப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகள் கூடினால் விளையாட்டுகள்தான் பிரதானமாக இருக்கும். இப்பொழுது உள்ளது போலவா அலைபேசியை வைத்துக்கொண்டே திரிவார்கள்? நொண்டிக்கோடு, குரங்குப்பெடல் சைக்கிள், உப்புமூட்டை, பச்சைக்குதிரை, கண்ணாம்பூச்சின்னு எவ்வளவு விளையாட்டுகள்? எல்லாமே பழங்கதைகளா மாறி வருசங்களாகிருச்சி! அப்படி விளையாட்டுச் சுவாரஸ்யத்தில் ஒருவேளை மாமியின் உண்மையான இயல்புகளையும் குணக்கேடுகளையும் கவனிக்காமல் விட்டிருப்பேனோ? இப்பொழுதுக்கூட மாமி எங்குப் பார்த்தாலும் “மலர் எப்படி இருக்க? நல்லாருக்கீயா?” என விசாரிப்பதில் பொய்மை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அதற்காகவெல்லாம் ஆம்புலன்ஸில் பிணத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து வருவதை யோசிக்க முடியவில்லை. பிணமா? அதைத் தாண்டி மகேந்திரன் மாமாவைப் பற்றி நினைக்க ஒன்றுமே இல்லையா?
மகேந்திரன் மாமா ஏற்காட்டில் மரங்கள் ஏற்றுமதி தொழில் செய்தபொழுது ஒரேயொருமுறை விடுமுறைக்குச் சென்றிருந்தாள். எங்குப் பார்த்தாலும் மலர்ந்திருக்கும் வண்ணப்பூக்கள். உதட்டை உலர வைக்கும் குளிர். திகைப்பூட்டும் மலைவழிபாதை பயணங்கள். எதைக் கேட்டாலும் தின்பதற்கு வாங்கித்தரும் மகேந்திரன் மாமா என உறவினர்கள் சொல்வதைக்கேட்டு அடம்பிடித்து ஏற்காடுச் சென்றாள். பத்து வயதில் பார்ப்பவை அனைத்துமே மிக அழகாக வசீகரமாகத் தோன்றும். தகவல்கள் தரும் குழப்பங்களின் தீர்வை மனம் தேடிக்கொண்டேயிருக்கும். தீர்வுகள் இன்னும் குழப்பும்.
அன்றையப்பொழுது பெரும்பாலும் பயணத்திலேயே முடிந்ததால் அடுத்த நாள் மலையைச் சுற்றிப் பார்க்கும் ஊதாக்கனவுளோடு சீக்கிரமே உறங்கச் சென்றுவிட்டாள். மாமா இன்னும் வந்திருக்கவில்லை மாமாவின் குழந்தைகள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கதைகள் பேசியபடியே உறங்கிவிட்டாள். அவளுக்கு விழிப்பு வரும்போது, நேரம் சரியாகத் தெரியவில்லை. நெஞ்சின் மீது எதுவோ பாரமாக இருந்தது. ஊறும் கைகளும் சிகரெட் வாடையும் அது மாமாதான் என உணர்த்தியது. எழுந்திருக்கவோ கைகளைப் பிடித்துத் தள்ளிவிடவோ தோன்றாமல், சில வினாடிகள் அதிர்ச்சி! அது ஒரு மரண அதிர்ச்சி! அதன் பயங்கர அதிர்வுகள் வாழ்நாள் முழுவதும், இன்றுவரை தொடர்வதை என்னால் உணர முடிகிறது.
தனியாகச் செல்ல பயம். எந்த ஆணைப் பார்த்தாலும் நடுக்கம். குழந்தைகளை யாரிடமும் எதற்காகவும் ஒருமணிநேரம் விட்டுச்செல்லக்கூடத் தயக்கம். வாழ்க்கையில் மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பதை போலொரு நிகழ்வு பெரும் துயரம். அதற்குப் பின் வந்த வருடங்கள் நரகமானவை. உள்ளத்தையும் உடலையும் வெறுக்கவைத்தவை. உறவுகளின் மேல் பிடித்தம் இல்லாமல் செய்தவை.
அடுத்த நாள் விடிந்ததும் ஒரே அழுகை. எந்தக் காரணமும் யாரிடமும் சொல்லவில்லை. வனிதா மாமி எவ்வளவோ கெஞ்சியும் சாப்பிடவில்லை. ஊருக்கு போக வேண்டும், அப்பாவிடம் செல்லவேண்டும் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் பேசவில்லை. வனிதா மாமி அன்று மதியமே கிட்டுத் தாத்தாவோடு ஊருக்கு அனுப்பிவைத்தாள். பேருந்து நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைக்க வந்தவள், ”ஏன் மலரு லீவு முழுக்க இங்க தான இருக்கப் போறேன்னு வந்த? புள்ளைங்கல்லாம் ஆசையா இருந்துதுங்க… எங்கிட்ட சொல்லு என்னாச்சு?” என்றவள் அழுதழுது வீங்கிப்போயிருந்த எனது கண்களைப்பார்த்து, “மாமாவ உனக்குப் பிடிக்கலையா?” எனக் கேட்டுவிட்டுக் கண்களை அமைதியாக ஊடுருவிப்பார்த்தாள். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு எதுவோ தெரிந்திருக்கலாம் எனத் தோன்றியது.
கார் புறப்படத் தயாரானது. தேநீரை அவசரமாகக் குடித்தவள், அப்படியே யதார்த்தமாக ஆம்புலன்ஸை பார்த்தாள். நிழலாகக் கலைந்த தலையோடு அதே அழகோடு வனிதாமாமி அமர்ந்திருந்தாள். பளிங்கு உருண்டை நீக்கப்பட்ட காகிதங்கள் போல மனம் பயணங்களின் காட்சிகளில் பறக்க கெஞ்சியது. மாமி பிணத்தின் பக்கத்தில அமர்ந்து வரட்டும். அதுதான் சரி!
***
தேவிலிங்கம் –இயற்பெயர் விஜிதேவி ராமலிங்கம். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. தற்போது குடும்பத்துடன் வேதாரண்யத்தில் வசித்து வருகிறார். இரண்டு சிறுகதை தொகுப்புகள், கவிதை மற்றும் நாவல் எழுதியிருக்கிறார். நெருப்பு ஓடு எனும் நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. இவரது மூன்று நூல்கள் வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் முனைவர் படிப்பின் ஆராய்ச்சி நூலாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவருக்கு ரமேஷ்பிரேதன் நினைவு பரிசு விஷ்ணுபுரம் அமைப்பினரால் வழக்கப்பட்டுள்ளது. இணைய இதழ்கள் வார மாத இதழ்களில் கவிதைகள் சிறுகதைகள் எழுதிவருகிறார்.கலகம் இணைய இதழ் வாசகசாலை இணைய இதழ் குங்குமம் ஆனந்த விகடனில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மின்னஞ்சல்: devilingam0205@gmail.com

