Saturday, May 2, 2026

தேர் பொம்மை

ந.சிவநேசன்

    மேற்குத் தெருவிலிருந்து திரும்பி வடக்குத் தெரு முனையில் தேர் வளைந்து கொண்டிருந்தது. பின் சக்கரத்தில் கட்டையைப் போட்டதில் கொஞ்சம் ஆடி அதிர்ந்து நிற்பது உச்சியை மச்சுவீட்டு மூலையிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. முரளி தேர்வீதிக்கு போகலாமா என யோசித்தான். கேட் வீட்டையும் திரும்பிப் பார்த்தான். கேட் வீட்டுக்காரப் பையன் திரும்ப வெளியில் வரவில்லை. அந்த வீட்டுக் கறிக்குழம்பு வாசனை வித்தியாசமாக கமழ்ந்தது. மூக்கில் ஏற ஏற இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென மணத்தது. அம்மாவும் நன்றாகத் தான் குழம்பு வைப்பாள். ஆனால் இந்த வீட்டு வாசனை ஏன் நம் வீட்டுக்குழம்பில் வரவில்லை எனக் கேட்பான். 

“ந்தந்த வீட்டுக்குழம்பு மணக்குறது வெளியத் தெரியாதுடா. பக்கத்து வீட்டுக் குழம்பு, எதிர்த்த வீட்டுக் குழம்பு வாசனை தான் மூக்குக்கு ஒனக்கையா இருக்கும்” என ஏன் அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் எனத் தெரியவில்லை. 

அவர்கள் பட்டை இலவங்க சேர்மானங்கள் நிறைய போடுவார்களென பின்னொரு நாளில் பாட்டி சொன்னாள். லேசாக கதவு திறப்பது தெரிந்து கேட்டுக்கு அருகில் சென்றான். இவனுக்காகவே காத்திருந்தது போல அந்தப் பையன் இரண்டு கைகளையும் பின்புறமாக வைத்துக் கொண்டு வெளியே வந்தான். 

இவன் பார்க்கும்படி ஹெலிகாப்டரை வெளியே எடுத்தான். அது நிஜமாகவே வானத்தில் பறந்ததை முரளியால் இன்னமும் நம்பமுடியவில்லை. ஆயா சோடாப்பூ வாங்கி வரச் சொல்லி கடைக்கு அனுப்பிய போது ரகுவைப் பார்த்தான். அவனும் நம்பவில்லை. 

“நெஜமாவே மேல பறந்துச்சாடா? மரத்துல ஏதாவது நூலு கட்டியிருப்பாங்க. நீ சரியா கவனிச்சிருக்க மாட்ட” என்றதும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. 

“அடடா.. அத கவனிக்காம விட்டுட்டமே.. அந்த கேட்டு பையன் நல்லா ஏமாத்திட்டான். இந்த தடவ கண்டுபுடிச்சி ஐய்யாருக்கு மூக்க உடைக்கணும் “ 

நேராக ஓடிப்போய் கேட்டைப் பிடித்தபடி நின்றபோது பொடணியில் அடி விழுந்தது. “அட எருமமாடு.. எங்கடா சோடாப்பு?” 

திரும்பவும் கடைக்கு ஓடி வாங்கிவந்துத் தந்துவிட்டு கேட்டுக்கு அருகில் வந்து நின்றுகொண்டான். நிஜமாகவே அதில் நூல் எதுவும் கட்டப்படவில்லை என அறிந்தபோது இன்னும் வியந்தான். உற்று கவனித்தான். உண்மையில் இறக்கை ஒருபக்கம் சுற்ற ஹெலிகாப்டரும் எதிர்திசையில் சுற்றியது.

 “இப்படி வண்டியே சுத்துனா உள்ள எப்படி உக்காந்து ஓட்டுறது? மயக்கம் வந்துடாது..” இதெல்லாம் ஒரு வண்டியா என்றபடி வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான். ஆயா புகைக்கு கண் கசிகிற நேரத்திலும் தன்னையறியாமல் ஊதாங்குழலில் கொஞ்சம் விசில் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவன் அந்தப் புகைக்கும் எழுந்து கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அவனை அதன் இருப்பு இழுத்தது. கேட்டால் தருவானா எனத் தெரியவில்லை. நின்று பார்த்துக்கொண்டாவது இருப்போமே. 

இவன் வருவதற்காகவே காத்திருந்தது போல நின்றிருந்த அந்தப் பையன் சட்டென ஹெலிகாப்டரை பறக்கவிட்டான். முரளி கேட்டை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான். சிவப்பு கலர் ஹெலிகாப்டர். கைக்கு அடக்கமாக கதாநாயகன்கள் காலால் தொங்கிக் கொண்டு போவார்களே.. அந்த மாதிரி ஸ்டைலாக இருந்தது. 

அவன் விரலுக்குள் ரிமோட் கண்ட்ரோல் வைத்திருப்பது போல குறிப்பிட்ட தூரம் சென்றதும் இறக்குகிறான். நினைக்கிற பாதையில் நினைக்கிற உயரத்தில் செலுத்தி ஏற்றுகிறான். கொய்யா மரங்களும் சன்னமல்லிச் செடிகளும் நிறைந்திருக்கிற அத்தோட்டத்து சேற்றில் ஹெலிகாப்டர் விழுந்துவிடுமோ என இவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அது பாதை விலகி தோட்டத்துக்கு வருகிற பைப்புக்கு நேர் பறந்து நீரில் விழுவது போல் வந்தது. 

“போச்சு… போச்சு..” என இவன் அலறிக்கொண்டிருக்கும்போதே அவன் ஓடிவந்து பிடித்துக் கொண்டான். இவனை ஒரு நொடி பார்த்து திரும்பிக் கொண்டான். எள்ளலோடு சிரித்தது போலிருந்தது. 

“நிறையா உயரம் பறக்குமா? “ 

“ண்ணா… இன்னும் எவ்வளவு உயரம் பறக்கும்?” 

இவன் கத்திக்கேட்டும் அவன் காதில் விழவேயில்லை. அம்மாவிடம் சொன்னால் “அவங்க தான் கேட்டுக்கு உள்ள இருக்காங்களே.. எப்படி விழும்?” என மீண்டும் பொடி வைத்துப் பேசுவாள்.

அவள் தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறாளே.. அதை கூட கேட்க முடியாது.எட்டிப் பார்த்து தேர் வடக்கு வீதியின் பாதி தூரம் வந்திருக்கிறது எனத் தெரிந்து கொண்டான். சுங்கானும் ரகுவும் முன்பே தேரிழுக்க, தேருக்கு முன்பாக நடனமாட வரச் சொல்லிவிட்டுப் போனார்கள். செண்டை மேளச்சத்தம் கேட்டு உள்ளுக்குள் ஆடுகிற உடலை அடக்கிக்கொண்டான். அங்கே போகணும் போலவுமிருந்தது. விலையை மட்டும் கேட்டுவிட்டுப் போகலாம் என முடிவெடுத்தான். 

“இது எவ்வளவு ண்ணா?”

அந்தப் பையன் கையில் இப்போது ரிமோட் இருந்தது. ரிமோட்டை இயக்கியதும் ஹெலிகாப்டர் கேட்டுக்கு வெளியே பறந்தது. இவன் எட்டிப் பிடிக்கிற உயரத்தில் பறந்தும் பிடிக்க முயற்சிக்கவில்லை. அவன் போக்கு காட்டுவான் எனத் தெரியும். 

“என் வயசு தான் இருக்கும்.. ஒண்ணு ரெண்டு கூட இருக்கலாம்…” என மதிப்பிட்டான். வசதியானவர்கள் எல்லோருமே தன்னைவிடப் பெரியவர்களாக இருப்பதாகப்பட்டது.

தலைக்கு மேலேயே பறந்து கொண்டிருப்பது எரிச்சலைத் தந்தது. இவன் கையை நீட்டினால் ஹெலிகாப்டர் உள்ளே போய்விடும் என்பதால் அசுவாரசியமாக எட்டிப் பிடிப்பது போலக் குதித்தான். சட்டென அந்தப் பையன் வண்டியை உள்ளே இழுத்துக் கொள்ள முரளி தெரிந்தது தான் என்பதுபோலப் பார்த்தான். வேலிக்கு உள்ளே சென்றபிறகு ஹெலிகாப்டர் மீதான ஆசை கூடியிருந்தது.

“இது எவ்வளவு ண்ணா?”

அந்தப் பையன் தெரியாதது போல “எது?” என பறப்பதையே பார்த்துக்கொண்டு கேட்டான். 

“இந்த பொம்ம.. ஹெலிகாப்டர்..”

“தெரியலையே… எங்கப்பா பெங்களூர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு” 

“அதானே பாத்தேன்…நம்ம ஊர் பக்கம் இந்த பொம்மைய பாத்த மாதிரி தெரியலையே” என யோசித்தான். பெங்களூர் எங்கே இருக்கிறதென அவனுக்குத் தெரியவில்லை. ஆத்தூருக்கு அந்தப்பக்கமாகத் தான் இருக்க வேண்டும். இருபத்தியொண்ணாம் நம்பர் பஸ்ஸில் ஏறினால் கூட அந்த ஊருக்குப் போய்விடலாம். பஸ் டிக்கெட் பன்னிரெண்டு ரூபாயிருக்கும். பள்ளிச் சீருடையிலேயே போனால் காசு கேட்கமாட்டார்கள். எப்படியும் பஸ் ஸ்டாண்டிலேயே பொம்மை கடைகளிலிருக்கும். வாங்கிக் கொண்டு அதே பஸ்ஸில் ஏறிக் கொள்ளலாம். துணைக்கு வேண்டுமானால் ரகுவை கூட்டிக்கொள்ளலாம். அவன் சும்மா வருவானா? பாவம். வேண்டுமானால் அவனுக்கு மூன்று முறை மட்டும் ஓட்டிப்பார்க்கத் தருவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். எல்லாம் சரி… எவ்வளவு காசு என்று இந்தண்ணன் சொல்ல மாட்டேன் என்கிறாரே..

பத்து ஐஸ் காசுகளை வைத்தால் ஒரு செருப்பு வாங்கலாமென பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லியிருக்கிறார். இவனிடம் கார் பொம்மை, குதிரை பொம்மையெல்லாம் இருக்கிறது. எல்லாம் உடைந்திருக்கிறது. அவையெல்லாம் போன வருடம் அப்பா சபரிமலை போய்வந்தபோது வாங்கி வந்தவை. எவ்வளவு குடித்தாலும் அவனுக்குத் தேவையானதை மட்டும் வாங்கித் தந்துவிடுகிற அப்பா.

அவன் அப்பாவை நினைத்து வருந்தினான். அப்பா மட்டும் பாக்கு மரம் ஏறிக் கீழே விழுந்து இடுப்பு உடைத்துக் கொள்ளாமல் இருந்தால் இந்நேரம் இப்படி நின்றிருக்க வேண்டியதில்லை. அம்மா சில நேரம் பேரம் படியாமல் போய் பொம்மை வாங்கித் தராமல் வெள்ளரிப்பிஞ்சோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவாள். அப்பா அப்படி கணக்கு பார்க்க மாட்டார். அப்பா எப்போது வீட்டுக்குத் திரும்புவார் என யோசித்தான். வீட்டுக்குத் திரும்பினாலும் எழுந்து நடப்பது சிரமமென சண்முகம் மாமாவிடம் ஆயா நேற்று சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் அம்மா மட்டும் இனிமேல் பாக்கு உரிக்கப் போவாளாயிருக்கும். அப்படியென்றால் யாரிடம் கேட்பது என யோசித்தான். விளங்கவில்லை. 

“ண்ணா… நான் ஒரு தடவ அது பாத்துட்டு தர்றேன். தர்றீங்களா?”

அவன் ஹெலிகாப்டரை பத்திரமாக சன்னல் திட்டின் மீது வைத்துவிட்டு பந்தை எடுத்து சுவற்றில் அடிக்கத் தொடங்கினான். இவன் இரண்டாவது முறையும் கேட்டபோது அசட்டையாக தலையாட்டினான். சிவப்பு ஹெலிகாப்டரின் வடிவத்தை கண்களில் நன்றாக ஊன்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து வீட்டுக்கு வந்தான். 

ஆயா இவன் அரவம் கண்டு தட்டில் நான்கு இட்லி வைத்து தக்காளி சாம்பார் ஊற்றினாள். ஆயா அம்மா போலில்லை. ஆயா வைக்கிற குழம்பில் தீய்ந்த வாடை வீசும். அவன் பேருக்கு இரண்டு வில்லைகளை பிட்டு வாயிலிட்டுக் கொண்டு தேர்க்காசு கேட்டான். 

ஆயா முதலிரண்டு முறை மௌனமாக பாத்திரங்களை என்னவோ பண்ணிக்கொண்டிருந்தாள். 

திரும்பவும் நச்சரிக்கத் தொடங்க “நாளைக்கி கறி எடுத்து ஆக்குறேன். இப்ப தின்னு” என முனகினாள்.

“தேர்க்காசு தரலன்னா சாப்பிட மாட்டேன் போ” என தட்டை நகர்த்திவிட்டான்.

“அட நக்கியார… திங்கிற தட்ட நவுத்தி விடுறியா? திரும்ப அந்த தட்ட தேடுவடி.. “ 

“தேர்க்காசு தர மாட்டங்குறல்ல… “ 

“அப்பன் குடிச்சிட்டு போய் மரம் ஏறி விழுந்து அங்க ஆஸ்பத்திரில இடுப்பொடஞ்சு கெடக்கான். பொழப்பு என்னாவுமோ ஏதாவுமோனு கெடக்குறேன். தேர்க்காசு வேணுமா தேர்க்காசு?” 

அவனுக்கு அழுகை வந்தது. கையைக் கழுவாமல் ட்ரவுசரில் துடைத்துக்கொண்டு எழுந்து ஓடுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. “டேய் பையா.. டேய் டேய்..” என்றபடி சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தாள். 

“போ…” பிடிவாதமாய் அவள் தந்ததை வாங்க மறுத்து தேர்வீதி பக்கம் ஓடினான். 

அவள் “இந்தாடா.. இருக்குறது தான் தரமுடியும்.. அப்புறம் என்னமோ பண்ணு” என்றபடி கல் திட்டின் மீது வைத்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.

“என்னா இந்த பையன் வேற இப்படி எளவெடுக்குது?” என முணுமுணுத்துவிட்டு “நல்ல நாள்ல…. மாரியாயி…” என தேரிருக்கும் திசையில் திரும்பி கன்னத்தில் போட்டுக் கொண்டாள். மாரியாயி தேர். நாளை முனியப்பன் தேருக்கு கறி எடுத்தாளாவது சண்முகத்திடம் ஆஸ்பத்திரிக்கு கொடுத்தனுப்பலாம். 

முரளி கேட் வீட்டைப் பார்த்தான். அந்தப் பையனைக் காணோம். சிவப்பு ஹெலிகாப்டரும் காணோம். சோறுண்ண உள்ளே போயிருப்பார்கள். அவன் ஒரம்பரை பையன். எப்படியும் முனியப்பன் தேர் முடித்தபிறகு தான் ஊருக்குப் போவார்களாயிருக்கும். இன்றைக்கு ஆர்க்கெஸ்ட்ரா நாளை தான் முக்கிய தினமென்பதால் நாடகம் போடுவார்கள். பார்த்துவிட்டு மறுநாள் தான் போவார்களாயிருக்கும். அதற்குள் அந்தப் பையனை கூட்டாளி சேர்க்க முடியுமா என யோசித்தான். திரும்பி ஆயாவைப் பார்த்தான். அவள் சுருக்குப்பையில் ஏதோ பண்ணிக் கொண்டிருந்தாள். இவன் ஜோப்புக்குள் கைவிட்டு கோலிக்குண்டுகளை எடுத்தான். இரண்டையும் கைகளில் உருட்டிக்கொண்டே மீண்டும் வீடு நோக்கி வந்தான். நினைத்தபடியே கல்திட்டில் வைத்திருந்த ரூபாய் கீழே விழுந்துக் கிடந்தது. பத்து ரூபாய். காலை இடித்துக்கொண்டது போல “ஆ..” என கத்தியபடி கீழே குனிந்துத் திரும்பி ஆயாவைப் பார்த்தான். அவள் இவனுக்கு வாகாகத் தலையைத் திருப்பிக் கொண்டாள். சட்டென காசை எடுத்துக்கொண்டு தேர்வீதி நோக்கி ஓடினான்.

ரகுவிடம் பொம்மை தானாகவே பறப்பதைச் சொன்னபோது முதலில் நம்பவில்லை. சுங்கான் இடையில் வந்து அப்படியொரு பொம்மை புதிதாக புழக்கத்தில் வந்திருப்பதைத் தெரிவித்தான். 

“இங்க போட்டுருக்கிற கடைல இருக்குமாடா?”

“இருந்துச்சு. சாமி ஊர்வலத்தப்பயே ஸ்கூலுக்கு முன்னாடி கடைல பார்த்தேன். கடைக்காரரு அத மேல கீழ பறக்கவிட்டு வேடிக்கை காமிச்சிட்டு இருந்தாரு”

முரளிக்கு உடனே அங்கு போகவேண்டும் போலிருந்தது. போய்? ஆயா குடுத்த பத்துரூபாய். தன்னிடம் ஒரு பதினைந்து ரூபாய் இருக்கிறது. இதை வைத்து அப்பொம்மையை வாங்க முடியுமா? கடைக்காரரிடம் கேட்டுப் பார்க்கலாம். 

ஐஸ்வண்டிக்காரர் குவாட்டர் பாட்டில் பழைய இரும்பெல்லாம் வாங்குகிறாரே. அப்படி இவரும் வாங்கினால் பரவாயில்லை. வீட்டிலிருக்கும் எதையாவது? வீட்டில் அப்படி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. டயர்கள் அத்துப்போய் பழைய சைக்கிள் மட்டும் கிடக்கிறது. 

ரகு அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சிரித்தான். 

“ஒரு பொம்மைக்கோசரம் யாராச்சும் சைக்கிள போடுவாங்களாடா? அந்த பொம்மைய இனிமே வாங்கவே முடியாதா? பெரிய இந்த ஹெலிகாப்டர்.. இப்ப ஆட வரப்போறியா இல்லையா?” 

முரளிக்கு மனசே கேட்கவில்லை. சும்மா ஒப்புக்கு கொஞ்ச நேரம் ஆடினான். தேரிலிருக்கும் சாமியைப் பார்த்து வேண்டிக் கொண்டான். விலை விசாரிக்க பள்ளிக்கூடம் இருக்கிற மேற்கு வீதிக்கு நெரிசலில் சிக்கி மீண்டு ஓடினான். தீர்த்தம் தெளித்ததும் வாகனத்தில் சாலையை குளிர்விக்க ஊற்றியதுமாக ஜில்லிட்ட ஈரம் கால்களை நனைத்திருந்தது. கடையில் ரகு சொன்ன ஹெலிகாப்டர் பொம்மைகள் தொங்கிக் கொண்டிருக்கிறதாவெனப் பார்த்தான். கடைக்காரர் உள்ளேயிருந்து டப்பாவை எடுத்து வந்துக் காட்டினார். பெரிய விலை அதிகமான பொம்மையெல்லாம் தொங்கவிட மாட்டார்கள் என்பது உரைத்தது. பயம் கூடி விலை கேட்டான். 

சொன்ன விலையை அவன் கணக்கு போடவே ஐந்து நிமிடம் ஆனது. நிச்சயம் நம்மால் முடியாதெனத் தோன்றியது. 

“நாளைக்கி வருவீங்களாண்ணா?”

“எத்தன மணிக்கு வருவீங்க?” 

“இத மட்டும் எடுத்து வைக்கிறீங்களாண்ணா? நாளைக்கி வந்து வாங்கிக்கிறேன்”

கடைக்காரர் “இப்ப வாங்கலியா நீ?” என்பது போலப் பார்த்தார். 

அவனுக்கு அழுகை வருவது போலிருந்தது. பக்கத்து கடைக்காரர் பேர் சொல்லி அழைக்க ஆச்சரியமாக அருகில் சென்றான். அது சேகர் சித்தப்பா. சித்தப்பா சுற்றுப்புறக் கிராமங்களில் விசேஷமென்றால் கடை போடுவார். மீதி நேரம் பார் ஒதுக்கச் செல்வார். ஒரு கயிற்றுக்கட்டிலில் குளுவான்கள் தின்கிற தீனிகள், விலை மலிவான பொம்மைகள் பரப்பியிருக்கும். 

உள்ளூர் ஆளிடம் தலையாட்டிச் சிரிப்பவர்கள் யாரும் பொருள் வாங்கமாட்டார்கள். அல்லது கடனாக வாங்கிக்கொண்டு அப்புறம் வருவதாகச் சொல்வார்கள். பொம்மைகளை மளிகை சாக்கில் கட்டிக்கொண்டு எக்ஸெலில் கட்டிலை இறுக்கிக் கொண்டு போகையில் அவனுக்கு பாவமாக இருக்கும்.

“வெலையாட லாயக்கி இல்லாத பொம்மைலாம் ஏன்டா விக்கிறாரு?”

“ஆமாடா.. ஒரு துப்பாக்கி கூட இல்லடா. பூராம் பீப்பி, மேளம், பாப்பா பொம்மை..”

அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

“என்னா சித்தப்பா?”

“என்ன பொம்மடா வாங்க வந்த?”

அவர் கட்டிலைப் பார்த்தான். வழக்கம் போலானவையே இருந்தன. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தப்பா. சும்மா வேடிக்க பாக்க வந்தேன்”

“இந்த பொம்மை ஏதாச்சும் வாங்கிட்டு போடா” என்றவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 

“பொம்மைலாம் விளையாட நான் அறியாக் குழந்தையா சித்தப்பா?” என்றபடி அங்கிருந்து ஓடினான்.

இராத்திரிக்கு ஆர்க்கெஸ்ட்ராவில் ரகுவும் சுங்கானும் துணி போட்டு வைத்துக் கொண்டு இவனை அழைத்தார்கள். அங்கேயும் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு அக்கா பழைய பாட்டாக பாடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து கண்களை விலக்கி கோபுரத்தின் மீதிருந்த சீரியல் பல்புகளின் ஒளி நடனங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தூக்கம் சொக்க கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு ஓடினான். கேட்டு வீட்டுப் பையன் இப்போதும் ஹெலிகாப்டரோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிசயமாக இருந்தது. இப்போது மினுக் மினுக்கென வெளிச்சம் வேறு பரப்பியபடி அது பறந்து கொண்டிருந்தது. பகலிலேயே எரிந்திருக்கும் போல… இருட்டில் தான் நன்றாகத் தெரிந்தது. 

நாளைக்கு எப்படியாவது வாங்கியே தீருவதென மனம் அடித்துக் கொண்டது. அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்யலாம் என யோசித்தான்.

ஆயா தட்டை எடுத்து வைத்துவிட்டுத் தூங்கியிருந்தாள். மதியத்து இட்லி கீழேயும் சூடான இட்லி மேலேயும் ஒரு குண்டானில் இருந்தது. தூங்குவதற்கு முன்பு சண்முகம் மாமாவை நாளை சந்திப்பதென முடிவு செய்து கொண்டான். 

காலை எல்லோரது வீட்டிலும் பரபரப்பாக இருந்தார்கள். அம்மா அதிகாலையில் யார் வீட்டிலும் போய் காசுக்கு நிற்கக் கூடாதென சொல்லியிருக்கிறாள். நேராக கடைக்கு ஓடினான். கடைக்காரர் அந்த நேரத்திலேயே திறந்து வைத்து மும்முரமாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். அவன் பதட்டமாக பெட்டியைப் பார்த்தான். நேற்று மூன்று இருந்ததில் இப்போது ஒன்று குறைந்திருந்தது. 

கோயிலைச் சுற்றிலும் கிடா வெட்டி ஓடிய இரத்தம் அவனது துரித நடைக்குத் தடையாக இருந்தது. தாண்டித் தாண்டிச் செல்லும் போது தேர்களைப் பார்த்தான். மாரியாயி தேர் ஓடி முடித்தக் களைப்பில் நின்றிருக்க முனியப்பன் தேர் தன் முறைக்குத் தயாராக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றிருந்தது. பொம்மைய வாங்கிட்டா அப்புறம் தேரைக் கொண்டாடி விடலாம்..

வீட்டில் மாமாவைக் காணவில்லை. பொடக்காலியில் கோழி அரிந்து கொண்டிருந்த அத்தையிடம் கேட்டான். 

“பஸ் ஸ்டாண்டுல நிப்பாரு.. ஏன்டா மருமவனே?”

பதில் சொல்லாமல் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். நல்லவேளையாக பதினாலாம் நெம்பர் இன்னும் வந்திருக்கவில்லை. சண்முகம் மாமா கையில் ஒயர் பையோடு நின்றிருந்தார். இவன் ஓடிப்போய் மூச்சு வாங்க நின்றதை ஆச்சரியமாகப் பார்த்தார். 

“ஏன்டா.. ஆயா உன்னையும் கிளம்பி போகச் சொன்னுச்சா? “

அவனுக்கு கேட்டது புரியவில்லை. 

“இல்ல மாமா”

“பின்ன என்னடா? 

“தேர்க்காசு குடு மாமா… பொம்மை வாங்கணும்”

சண்முகம் மாமா எரித்துவிடுவது போலப் பார்த்தார். “அடத் தாயாளி… உங்க ஆயா கெஞ்சுதேன்னு நோம்பிய விட்டுட்டு உங்கப்பனுக்கு கறிச்சோறு கொடுத்துட்டு வரலாம்னு போய்ட்டு இருக்கேன். அப்பன பாக்க ஆஸ்பத்திரிக்கு வருவன்னு பாத்தா பொம்மை கேட்குதா பொம்ம?”

முரளி இப்படித் திட்டுவாரென எதிர்பார்க்காமல் நிலைகுலைந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே நின்றான்.

“உங்கப்பாவ பாக்க வர்றியா இல்லையாடா? நான் கூட்டிட்டு போறேன். வரியா?” அவர் அழுத்தந்திருத்தமாகக் கேட்டார். 

அவனுக்கு நெஞ்சை என்னவோ பண்ணுவது போலிருந்தது. “நான் வரல்ல மாமா..” எனப் பின்னால் நகர்ந்தான்.

சண்முகம் மாமாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. கொஞ்சம் தன்மையாக சொல்லியிருக்கலாமோ என யோசித்தார். பொங்கல் வைக்க விறகுக்கட்டுக் கூடையோடு நடந்து செல்கிற சனங்கள். ஏதேனுமொரு பொம்மையோடு ஐஸ்குச்சிகளோடு கடக்கும் பிள்ளைகள். அறியா பையனுக்கு என்ன தெரியும் பாவம்? 

“டேய் நீ வர வேணாம்.. இந்தா..” என அவன் கையில் இருபது ரூபாயைத் திணித்தார். அவன் கஷ்டப்பட்டு சிரித்தான். 

“தேர் முடிஞ்சதும் அப்பாவ பாக்க வருவியாம்.. சரியா?” என்றதற்கு தலையாட்டிவிட்டு ஓடினான். மொத்தம் நாற்பத்தைந்து ரூபாய்கள். கடைக்காரர் சொன்ன விலையிலிருந்து நாற்பத்தைந்தை கழிக்க முயற்சித்தான். முடியவில்லை. நோட்டு பேனா இருந்தால் கழிக்கலாம். அதிலும் கடன் வாங்க வந்தால் இடறும். ரகு சுங்கானெல்லாம் அவனை மாதிரியே தலையைச் சொறிவார்கள். சுரேஷ் நன்றாகப் படிப்பான். அவனிடம் கேட்கலாமென்றால் அசலூர்க்காரன். தினமும் பதினாலாம் நெம்பரில் அவன் அக்காவுடன் வந்திறங்குவான். போய் கடைக்காரரிடம் தந்தால் மிச்சம் எவ்வளவு வேண்டுமென சொல்லப்போகிறாரென தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டான். இருந்தாலும் இந்தக் காசு பத்தாதென எதுவோ சொல்லிக் கொண்டே இருந்தது. கோயிலின் வடக்கில் எல்லோரும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். திருநீறு வாசனையை ஆழ்ந்து நுகர்ந்தபடி கோயிலுக்குள் சென்றான். “முனியன் சாமி.. எனக்கு எப்படியாச்சும் அந்த பொம்மை கிடைக்கணும்”

“அந்த பொம்மை என்றால் சாமி எதை நினைத்துக் கொள்ளும்?”

“ஆங்.. ஹெலிகாப்டர் பொம்மை”

“ஆனால் தரையில் ஓடுகிற ஹெலிகாப்டர் பொம்மையும் இருக்கிறதே..”

கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

“சாமி.. கேட்வீட்டுக்கார பையன் வச்சிருக்குற மாதிரி பறக்குற, சிவப்பு கலர் ஹெலிகாப்டர்.. இராத்திரில ப்ளூ கலர் லைட் எரியுற ஹெலிகாப்டர்.. எப்பயுமே உடையாம ஓடுற ஹெலிகாப்டர்.. யாருமே கடன் கேட்க கூடாது.. அந்த மாதிரி ஹெலிகாப்டர்..

(சாமி அப்புறமா தரலாம்னு நினைச்சதுன்னா..?)

இப்பவே.. ஆமா.. இன்னிக்கே எனக்கு வாங்கி குடுத்துட்டீன்னா.. ஆமா.. அந்தக் கடைல இன்னிக்கே வாங்கி குடுத்துட்டீன்னா… எங்க ஸ்கூல்ல காமராஜர் பிறந்த நாளுக்கு ஓவிய போட்டி வைப்பாங்க. அதுல உன்னய நான் வரையறேன் சாமி. ஆமா.. கண்டிப்பா வாங்கிக் குடுத்துடு சாமி”

பூசாரி நீட்டிய திருநீற்றுக்கு நெற்றியை பயபக்தியுடன் கொடுத்தான். சாமியை கீழே விழுந்து கும்பிட்டு வெளியே வந்தான். பொங்கல் வைக்கிற இடத்தில் நின்றிருந்த சனங்களைப் பார்த்தான். போன தேருக்கு அம்மாவோடு விறகுக்கட்டு தூக்கி வந்து பொங்கல் வைத்தது ஞாபகம் வந்தது. அம்மா துளுமாவு படைத்துத் தந்ததை வாயெல்லாம் பூசிக்கொண்டது தோன்றிக் கொண்டே இருந்தது. எல்லோரும் சிறப்பு எடுக்கிற தட்டு வைத்திருந்தார்கள். அதில் தேங்காய் பழங்களோடு துளு மாவும் இருந்தது. நமக்கு மாவு தருகிற சொந்தக்காரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்து வைத்துக் கொண்டான். கோயிலில் படைக்கும் போது அருகில் போய் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால் அவர்களாகவே அழைத்து மாவு தந்துவிடுவார்கள். பொங்கல் சருவங்களைத் தாண்டி அவர்களை பார்த்துக் கொண்டே நடந்தான். பெயர் தெரியாத ஒரு சொந்தக்காரர் “அப்பா எப்படிடா இருக்காரு?” எனக் கேட்டார். அவருக்கு தலையசைத்துக் கொண்டே கடந்து வந்தான். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சிநேகமாய் சிரித்தார்கள். பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சுமதி அக்கா நின்றிருந்தாள். சுமதி அக்கா அவனுக்கு தூரத்து பெரியப்பா வீட்டு அக்கா. அவளுக்கும் கும்பக்கொட்டாய் கணேசன் மாமாவுக்கும் நடுவில் என்னமோ இருப்பதாக பெரிய அண்ணன்கள் பேசிக் கொண்டார்கள். அதுவும் முரளியை வைத்தே பேசிக் கொண்டார்கள். 

“இவன் என்னடா சுமதி வீட்டுக்கும் கும்பக்கொட்டாய்க்கும் ஒரு நாளைக்கு ஏழு தடவ ஓடுறான் ஒடியாறான்…”

சுமதியக்கா அவர்கள் வீட்டில் ஒப்புட்டு சுட்டால் கிண்ணத்தில் போட்டுத் தரும். இவன் ஓடிப்போய் கணேசன் மாமா வீட்டு கரண்ட் கொட்டாயில் வைத்துவிட்டு வருவான். கணேசன் மாமா புதுத்துணி வாங்கித் தந்தனுப்புவார். இவன் அதை சுமதி வீட்டுக் கரண்ட் கொட்டாயில் வைத்துவிட்டு வருவான். யார் தந்தனுப்புகிறார்களோ அவர்கள் முரளி கையில் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் தருவார்கள். சுமதி அக்கா வீட்டில் கோயிலுக்கு, கல்யாணத்துக்கு போகிற நாளில் அக்கா வீட்டு கரண்ட் கொட்டாய்க்கு வெளியே இவன் காவலிருக்க வேண்டும். பேசி முடித்து வெளியே வரும்போது அன்றைக்கு மட்டும் பத்து ரூபாய் கிடைக்கும். 

இப்போது சுமதியக்கா வேறொரு மாமாவோடு நிற்கிறாள். மே மாதம் லீவுக்கு தாத்தா வீட்டுக்கு போயிருந்தபோது கல்யாணம் முடிஞ்சிருக்கும். பாவம் கணேசன் மாமா… என்னவோ நேற்றைய அழுகை இன்றைக்கும் தொற்றிக்கொள்ளும் போலிருந்தது. சாமிகிட்ட வேண்டுதல் வச்சிருக்கோம், அழக்கூடாதென தேற்றிக் கொண்டே சுமதி அக்காவுக்கு அருகில் போனான். 

“அக்கா… “

சுமதி அக்கா இவனைப் பார்த்ததும் பதட்டமடைந்தது போலிருந்தது. அந்த மாமாவிடம் “சொந்தக்கார பையன்” என சிரித்துவிட்டு அவன் நெருங்கும் முன்பே தள்ளிக்கொண்டு ஓரமாய் வந்தாள். மணிபர்ஸ் திறந்து இருபது ரூபாய் ஒரே நோட்டாக எடுத்துத் தந்தாள். 

“போய் பொம்ம வாங்கிக்கோடா.. “ எனக் கெஞ்சுவது போலப் பார்த்தாள். 

அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டே ஓடினான். இதேபோல கணேசன் மாமாவையும் பார்த்தால் தேவலாம் என்றிருந்தது. அவன் நினைத்தபடியே வடமேற்கு மூலையில் கணேசன் மாமா இன்னொரு அக்காவோட நின்றிருந்தார். 

“அட.. மாமாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சாட்டங்குது..” 

இவன் அருகில் செல்லும் முன்பே கணேசன் மாமா அவனைப் பார்த்துவிட்டிருந்தார். அந்த அக்காவை அழைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடிப்போய் பைக்கில் ஏறிக் கொண்டதும் இவன் நடையைத் தாமதித்தான். இன்னுமொரு இருபது ரூபாய் கிடைத்திருக்க வேண்டியது… சட்டைப்பையை தடவிக்கொண்டே கடைக்கு ஓடினான்.

மொத்தம் அறுபத்தைந்து ரூபாய்கள். கடைக்காரர் கேட்ட தொகைக்கு பாதியைக் கூட நெருங்கவில்லை. ரகு சொன்ன மாதிரி பெரிய இந்த ஹெலிகாப்டரா? என விடவும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. 

கேட்டுப்பையனுக்கு இணையாக ஹெலிகாப்டர் விடவே முடியாதா என யோசித்தான். அன்றைய பகல் வீட்டுக்கும் தேர்வீதிக்குமாக வெறுமையாகக் கழிந்தது. தெரிந்த சொந்தக்காரர்களிடம் அம்மா சொன்னதாகச் சொல்லி கடன் கேட்கலாமா என யோசித்தான். எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்கிற அம்மாவின் கெச்சலான அடி மார்பெலும்புகள் வெளியே தெரிகிற தேகம் நினைவுக்கு வந்ததில் முடிவை மாற்றிக் கொண்டான். 

இன்னும் சற்றுநேரத்தில் தேரிழுக்கத் தொடங்கிவிடுவார்கள். ரகுவிடம் “நீ கொஞ்சம் காசு போடுடா.. ரெண்டு பேரும் சேர்ந்து ஹெலிகாப்டர் ஓட்டலாம்” என கேட்டுப் பார்த்தான். அவன் சிம்பிளாக “ஆனா எனக்கு குச்சி ஐஸ் தான்டா பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் பன்னெண்டு சாப்டுருக்கேன். இன்னும் எட்டு சாப்டணும்னு எனக்கும் சுங்கானுக்கும் போட்டி” என்றபடியே டாட்டா காட்டிவிட்டு ஓடினான்.

பாட்டுச் சத்தம் நின்று தேரிழுக்கத் தொடங்கிவிட்டார்கள். முரளி அந்தக் கடையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கடைக்காரர் பொருள் வாங்கிக்கொண்டிருந்தவரிடம் “இந்தப் பய நேத்துலருந்து கடையவே சுத்தி சுத்தி வர்றான்” என்று சிரித்துவிட்டு இவனிடம் “ஹெலிகாப்டர்லாம் வித்துடுச்சுடா தம்பி..” எனச் சொன்னார். 

முரளி சேகர் சித்தப்பா கடையைப் பார்த்தான். பெரிதாக ஒன்றும் வியாபாரம் ஆனது போல் தெரியவில்லை. அருகில் சென்றதும் சித்தப்பா கையை நீட்டினார். அவன் தந்ததை எண்ணிப் பார்த்துவிட்டு “எதுடா வேணும்?” என்றார்.

குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை, பீப்பி, பாப்பா பொம்மைகள், ஒன்றிரண்டு தகரக் கார்கள். இரண்டு மூன்று ஜேசிபி வண்டிகள் புதிதாக வாங்கிப் போட்டிருந்தார். அவராகவே எடுத்துத் தந்தார். 

“இந்த பொம்மை நூறு ரூபாடா. உனக்கோசரம் தொண்ணூறுக்கு தர்றேன்” 

அவன் அந்த ஜேசிபியை வாங்கிப் பார்த்தான். கொட்டாய் கட்ட எப்போதோ அப்பா வாங்கிப் போட்டிருந்த மணல் மேடு ஞாபகம் வந்தது. ஆனால் தொண்ணூறு ரூபாய் இல்லாததன் வெறுமையை முகத்தில் காட்டினான். 

“இந்த காசுக்கு ஜேசிபி வராதா சித்தப்பா?”

“இதுக்கு வராதுடா.வேணும்னா எடுத்துட்டு போ. இன்னும் இருவத்தஞ்சு ரூவா நாளைக்கி இல்லனா நாளாரன்னிக்கு குடு” 

முரளி திடமாய் தலையாட்டினான். “இல்ல சித்தப்பா. இந்த காசுக்கு எது வரும்? 

சித்தப்பா சின்னக் குழந்தைகள் விளையாடுகிற பொம்மைகளைக் காட்டினார். 

“வேணாம் சித்தப்பா” என்றவனிடம் காசை தரப்போனவர் ஒரு நொடி யோசித்தார். சாக்குப் பையிலிருந்து ஒரு பச்சை நிற ஜேசிபியை எடுத்தார். 

“சரக்கு போட்டவன் ஏமாத்திப்புட்டான்டா. இதுல ஒரு சக்கரம் உடைஞ்சிருக்கு. இத வேணும்னா வச்சிக்கிறியா?”

முரளி அதை வாங்கிப் பார்த்தான். அழகாக நிஜமான ஜேசிபி போலவே இருந்தது. சின்ன சக்கரங்களில் ஒன்று உடைந்திருந்தது. 

“சரி மாமா..”

தேரை சனிமூலையில் நிறுத்தி மறுபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நிலைக்குப் போய்விடும். முரளி அருகில் செல்லாமல் தொலைவிலிருந்தே பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். திரும்பி வீட்டுக்கு வரும்வழியில் கவரைப் பிரித்து வீசிவிட்டு செட்டியார் கடையிலிருந்து பொறுக்கிவந்த சோடா மூடியை எடுத்து ஓரங்களில் நசுக்கித் தட்டையாக்கினான். கேட்டு வீட்டைக் கடக்கும் போது கவனித்தான். அந்தப் பையனைக் காணவில்லை. 

வீட்டுக்குள் போய் உடைந்த சக்கரத்தை கழட்டி எறிந்தான். சக்கரக் கம்பியில் அளவு பார்த்து கோணி ஊசியை நெருப்பில் காட்டி சோடா மூடியில் துளையிட்டான். சக்கரக் கம்பிக்குள் செருகி மெழுகை உருக்கி மறுபக்கம் ஒட்ட வைத்து “உஃப்.. உஃப்” என ஊதிக் காயவைத்து ஓட்டிப்பார்த்தான். வண்டி சோடாமூடி இருக்கிற பக்கம் சாய்ந்து சாய்ந்து நகர்ந்தும்கூட பார்க்க அழகாகத்தான் இருந்தது. 

வெளியே எடுத்து வந்து மணல் மேட்டில் மணல் அள்ளிப் பார்த்தான். நன்றாகவே வேலை செய்ததில் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. நாளை பள்ளிக்கு கிளம்புவதற்குள் பாதை அமைத்துவிட்டால் சாயுங்காலம் வந்தவுடன் விளையாடலாமென யோசித்துக் கொண்டே திரும்பினான். 

அந்தப் பையன் கேட்டருகில் நின்றபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் அவனிடம் ஹெலிகாப்டரைத் தேடி காணாதது கண்டு அருகில் போனான். 

“ஜேசிபியா அது? எவ்வளவு?” 

அவனே முதலில் பேசியதில் முரளி பெருமிதமாய் “ஆமா.. எங்கம்மா வாங்கித் தந்துச்சு. எவ்ளோனு தெரியல” என்றான்.

 “எங்க உங்க வண்டிய காணோம்?”

அவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது. “ஹெலிகாப்டர் கொய்யா கிளைல மாட்டி உடைஞ்சிடுச்சு. ஓட மாட்டேங்குது” 

“அடடா.. எப்படிண்ணா? நீயி மரத்துக்கிட்ட வுடும்போதே நினைச்சேன் மாட்டிக்கும்னு” 

“ஆமா.. எங்கப்பா அடிச்சிட்டாரு. ஜேசிபி அதுவே ஓடுமா?” 

“இல்ல கைல ஓட்டுறது தான்” என்றவன் தயங்கியபடி கேட்டான். “நான் ஜேசிபி தர்றேன். நீங்க அந்த வண்டி தர்றீங்களா? பாத்துட்டு தர்றேன்” 

“ஆனா அது ரிப்பேர் ஆகிடுச்சே?”

முரளி சிரித்தான். “பரவால்ல குடுங்க பாத்துட்டு தர்றேன்” 

அவன் உள்ளே ஓடிப்போய் ஹெலிகாப்டரை எடுத்து வந்து கேட் கம்பி சந்தில் நீட்டினான். இவன் அதை ஜாக்கிரதையாக வாங்கியபடி ஜேசிபியைத் தந்தான். 

அவ்வண்டியின் நான்கு இறக்கைகளில் ஒன்று பிய்ந்திருந்தது. ப்ளூ லைட் முன்பை விடக் குறைவான ஒளியை சிரமப்பட்டுத் தந்து கொண்டிருந்தது. பட்டனை அணைத்து அழுத்திப் பார்த்தும் உள்ளிருந்த மெஷின் இயங்குவது போலத் தெரியவில்லை. முரளி அதன் இறக்கைகள் சுழலாத போதும் மேலும் கீழும் அசைத்து ஓட்டினான். “விர்ர்ர்…. டபடபடபடப… விர்ர்ர்ர்ர்…. “என ஓசை எழுப்பியபடியே செலுத்திக் கொண்டு ஓடினான். இப்போது கொஞ்சம் ஹெலிகாப்டர் போலத் தெரிந்தது. 

***

ந.சிவநேசன் – சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூர். பள்ளி ஆசிரியர். விவசாயத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம். கவிதைகள் காலச்சுவடு, அகழ், நீலம், புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், குமுதம் தீராநதி, கணையாழி,  கல்வெட்டு, தகவு, நுட்பம், கீற்று, சொல்வனம்  போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும் பல்வேறு இணைய, இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தெற்கு ஜன்னல் சிறுகதை தொகுப்பு நூல். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல், ஞௌ போல வாழ்பவர்கள் ஆகியவை கவிதை நூல்கள். மின்னஞ்சல் : nsivanesan1988@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here