ப்ரைன் முகி
தமிழில்: சங்கரன் ரவிச்சந்திரன்
(ஆங்கில தத்துவவியலாளர் ப்ரையன் முகியின் (Bryan Magee) நூல் “அறுதியான கேள்விகள்” ( Ultimate questions) உள்ள கட்டுரையின் மொழியாக்கம்.)
மனித நாகரீகம் என நாம் அழைப்பது சற்றேறக்குறைய ஆறாயிரம் வருடங்களாக இருந்து கொண்டிருக்கிறது. இக்கால அளவு மிக நீண்டது என நினைக்கப் பழகியுள்ளோம். நம்மில் சிலருக்கு இதன் வெளிறிய சுருக்கமே நினைவில் இருக்கும். நான் வசிக்கும் பகுதியில், மானுட நாகரீகம் பொதுவாக பழைய ஏற்பாட்டில் துவங்குகிறது. அதனுடனேயோ அதைப் பின்தொடர்ந்தோ வந்த கிரேக்கம், பின்னர் வந்த ரோம் – இவை ஒவ்வொன்றும் நூற்றாண்டுகள் நீடித்திருந்தன. பிறகு மத்திய காலத்தின் ஆயிரம் ஆண்டுகள் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் நிறைவுற்று, சீர்திருத்தக் காலகட்டத்திற்கு நகர்ந்தது. அங்கிருந்து அறிவொளிக் காலகட்டம், தொழிற்புரட்சிக் காலகட்டம், கற்பனாவாத காலகட்டம் என நகர்ந்து நவீன காலகட்டத்திற்குள் நுழைந்து இன்று இங்கு வந்து நிற்கிறது. இதே அடர் காலஓட்டத்தில் புவியின் மறுபக்கங்களில் நாங்கள் அறிந்திராத நாகரீகங்கள் – சீன, ஜப்பானிய, இந்திய, மத்திய ஆசிய, மத்தியக் கிழக்கு, தென்னமேரிக்க மற்றும் மெக்ஸிகோ எனத் தோன்றி மறைந்திருக்கின்றன. இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் கடலில் பனிப்பாறைகள் நகர்வது போல் வெறுமனே கால நகர்வில் நிகழ்ந்தன என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்படி சிந்தித்துப் பாருங்கள். இன்று மிக அதிகமாகவும் முன்பு மிகக் குறைந்த அளவிலேனும் நூறாண்டுகள் வாழும் மனிதர்கள் எவரேனும் இருந்து கொண்டே இருப்பார்கள். அவ்வாறான மூன்று பேரை நானே அறிவேன், அதில் இருவர் புகழ் பெற்றவர்கள் – அரசியல்வாதி இம்மானுவேல் ஷின்வெல் மற்றும் இசைப் புரவலர் ராபர்ட் மெயர். ராபர்ட் பிறந்திருந்த போது நூறாண்டுகள் அகவை தாண்டிய எவரேனும் நிச்சயம் இருந்திருப்பார் – அவரையும் என்னைப் போல் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டிருந்திருப்பார். அந்த மூத்தவர்கள் பிறந்த போதும் நூறாண்டுகள் தாண்டிய வேறு எவரேனும் இருந்திருப்பார்கள். இப்படியே ஒவ்வொரு தெரிந்த ஆட்களாக வைத்து இடையீடின்றி பின்சென்று பார்த்தால், ஒட்டுமொத்த நாகரீமே வெறும் அறுபது சொச்ச மனிதர்களுடைய ஆயுளுடன் முடிந்து விடுவதைப் பேரதிர்ச்சியுடன் காண்போம். அறுபது நபர்கள் என்பது எனது வரவேற்பறையில் நடக்கும் தேநீர் விருந்தினர்களின் எண்ணிக்கை. இருபது சொச்ச நபர்கள் இயேசுவிடமும் இருபத்து ஒன்றாவது நபர் சீசரிடமும் சென்று நிற்பார்கள். வெறும் பத்து பேர் 1066ம் ஆண்டுக்கும் நார்மன் படையெடுப்புக்கும் சென்று நிற்பார்கள். மறுமலர்ச்சி காலகட்டத்திற்குச் செல்ல வெறும் அரை டஜன் நபர்களே போதும்.
ஒரு முழு மானுட ஆயுளை வைத்து வரலாற்றை அளந்து பார்த்தால், மொத்த வரலாறுமே மிகச் சிறியது என்பதை உணர்வோம். வரலாற்று மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்கின்றன என்பதே இதன் பொருள். அரை டஜனுக்கும் குறைவான ஒரு கையளவு மானுடர்களின் மொத்த ஆயுளுக்குள் மகத்தான பேரரசுகள் தோன்றி, வாழ்வாங்கு நிறைந்து மறைந்திருக்கின்றன. நாளை என்பது மறுநாளால், அடுத்த மற்றும் பின்வரும் ஆண்டுகளால், நூற்றாண்டுகளால், ஆயிரமாண்டுகளால், இருபதாயிரம், இரண்டு லட்சம், இருபது லட்சம் ஆண்டுகளால் ஒருபோதும் எந்தவொரு இடையீடும் இல்லாமல் பின்தொடரப்படும். இன்னும் சொல்லப்போனால், புவி மற்றும் பிரபஞ்சத்தின் மற்ற உறுப்புகளது ஆயுளைப் பார்க்கும் போது, இந்த காலகட்டமெல்லாம் மிகக் குறுகியது எனலாம். இங்கு அல்லது பிரபஞ்சத்தில் வேறெங்கும் மானுடர்கள் இருக்கும் வரை, அங்கிருந்து துவங்கி இங்கு இன்று வந்து முடியும் ஒரு இடையீடற்ற தொடர் வரலாற்றைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் என்ன ஆவார்கள் – முடிவற்ற கால ஓட்டத்தில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? மிக நீண்ட நெடும் எதிர்காலத்தில், தமக்குத் தேவையெனில் பேரறிவு பெற்றிருக்கக்கூடிய மானுடர்கள், அதற்கான துவக்கத்தில் இருக்கும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மானுட நாகரீகத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான மிகச்சிறிய காலகட்டத்தினது அளவின் பலநூறு மடங்கு தொலைவில் இருப்பவர்கள், அதுவரையிலான நிகழ்வுகளின் ஒளியில் இன்றிருக்கும் நம்மை எப்படிக் காண்பார்கள்?
வேகமாக கையைத் தூக்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் சில வாசகர்களையாவது கற்பனையில் காண்கிறேன். “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்படி சிந்திப்பது? இவற்றை கைக்கொள்வதற்கான கருத்தியல் அடிப்படைகள் என என்ன இருக்கிறது? வெறும் இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சாக்ரடீஸ் அல்லது ப்ளேட்டோ போன்ற பிதாமகர்களாலேயே இன்று நடப்பதையோ அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரையிலான வரலாற்றையோ சிறிதேனும் ஊகிக்க இயலவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைவிட பலமடங்கு பெரிய எதிர்காலம் குறித்து எந்தவிதமான பொருளுள்ள கற்பனைகளை நம்மால் கொடுக்க இயலும்? அது வெறும் பாழ் மட்டுமே. உடனடி எதிர்காலம் குறித்து மிகச்சிறிய ஊகங்களையே நம்மால் நிகழ்த்த இயலும் – அவையும் பெரும்பாலும் தவறாக இருக்கும் என்பதே வரலாறு நமக்குச் சொல்வது. உண்மை என்னவென்றால், எதிர்காலம் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது, எதுவும் தெரியப்போவதில்லை – மீச்சிறு தடயம் கூட கிடைக்கப்போவதில்லை. நீங்கள் சொல்லும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் (சிந்திக்கக் கூடாது என்றில்லை – அவ்வாறு சிந்தித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதற்கான வழி என எதுவும் இல்லை, அதனுடன் சேர்த்து சிந்திக்கவும் எதுவும் இல்லை) உடனடி சிறு எதிர்காலத்திற்குள் வழுக்கிச் செல்லும் நமது நிகழ்காலத்தில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை”.
எனது பதில்: அமானுஷ்யமானதோ, புலன்கடந்ததோ, ஆன்மீகமான எதையுமே அல்லாமல் சாதாரண அன்றாட நிகழ்வுகளையே நான் முன்வைக்கிறேன். இன்றைய சூழ்நிலை நாம் எதிர்பார்க்கும்படி இப்படியே தொடரும் என்றால் என்ன நிகழும் என்று தான் கேட்கிறேன். இந்த தொடர்ச்சி நிற்பதற்குத் தான் அமானுட குறுக்கீடுகள் ஏதாவது – காலம் உறைந்து நிற்பது போல – தேவை. எதாவது விண்கல் மோதியோ சூரியன் குளிர்ந்து அமைந்தாலோ புவி தனது சுழற்சியை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு என்பது உண்மையே. ஆனால் அவை நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகோ நிகழமுடியாமையின் ஓரத்திலோ தான் இருக்கும். அத்தகைய நிகழ்வுகளையும் மானுடம் முன்னரே அறிந்து கொண்டு பெரும்பாலும் தப்பித்து விடும். உதாரணமாக, அணு ஆயுதங்கள் மானுடத்தின் பெரும் பாதுகாவலாக இருக்கலாம். மாபெரும் விண்கல் ஒன்று புவியின் மீது மோத வருவதாக வானியலாளர்கள் கூறினால் அணு ஏவுகணைகளை வைத்து அதனை தகர்த்துவிட இயலும். அந்த ஏவுகணைகளும் இயல்பான காலப்போக்கிலேயே இப்போது இருப்பவற்றை விட பலமடங்கு வலிமை வாய்ந்தவையாகவும் இருக்கும். மறுபக்கம், அதே ஆயுதங்களை வைத்து மானுடம் தன்னைத்தானே அழித்துக் கொண்டு வரலாற்றையே முடிவுக்கு கொண்டுவரவும் கூடும். ஆனால் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான நமது ஒவ்வொரு நகர்வும், பிழைத்திருப்பதற்கான சிக்கல்களைக் களைவதற்கானதாகவே இதுவரையிலும் இருந்திருப்பதால் முற்றழிவிற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. புவியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தின் ஆழ்விரிவுகளில் மானுடம் வாழ்ந்திருக்கும் என்பதே கண்கூடான சாத்தியம். புவி வாழத்தகுதியற்றதாக மாறிய பின்னர் வேறு வழியில்லாமலோ அல்லது மிக நல்ல வாழ்விடம் வேறெதாவது கிடைத்தாலோ மானுடம் அங்கு சென்று விடும். எப்படியென்றாலும் அவர்களது கடந்த காலம் நம்முடையதுடன் தொடர்ச்சியானதாகவே இருக்கும். அவர்களது காலத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நம்மைவிட மிக ஆழமாகவே அவர்களின் கடந்த காலத்தினை அறிந்திருப்பார்கள்.
நமது சொந்த கடந்தகாலத்தினைப் பற்றிய அறிதல் மிக விரிவானது என நினைத்துப் பழகிவிட்டோம். கடந்த ஆயிரமாண்டுகளில், நிகழ்காலத்திற்கு மிக அருகில் வர வர வரலாறு அடர்விரிவுடன் திகழ்கிறது. இருபதாம் நூற்றாண்டு பற்றிய நமது அறிதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவானது. ஆனால் இந்த அறிதல் வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாருக்குமே அறியக்கூடுவதாக இருந்திருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலத்தில் அவர்களது இடம் அவ்வறிதலைத் தடைசெய்துவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை, நமக்கு எப்படி எதிர்காலம் பாழாகத் தெரிகிறதோ அதே போல் தான் இருபதாம் நூற்றாண்டும் தெரிந்திருக்கும். கால ஓட்டத்தில் மானுடத்திற்கு எப்போதுமே நிகழ்காலத்தையல்ல – தனது கடந்தகாலத்தை மட்டுமே தெரிந்து கொள்ள அமைந்திருக்கிறது. ஆனாலும் கடந்த – நிகழ் – எதிர்கால நிகழ்வுகள் அனைவருக்கும் சமமாக அதே வரிசையில் நிகழ்கின்றன. எதிர்கால நிகழ்வுகள் குறித்து மானுடத்திற்கு மிகச்சிறிதாகவோ அல்லது முற்றிலும் தெரியாததாலோ அவை நிச்சயமாக வறண்டு தெளிவற்றதாக இருக்கவேண்டும் என்பதில்லை. மாறாக, வறண்டு தெளிவற்று இருப்பது நாமே. நமது அறிதல் – அறிதலின்மையே பாழ். எதிர்காலம் நிறைவானதாகவே இருக்கிறது – அது என்னவென்று நாம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அந்நிறைவை நிகழ்த்தும் நிகழ்வுகள் கடந்தகாலத்தியவை போலவே உறுதியான, தெளிவான, திட்டவட்டமானவையே(specific).
நாம் தெரிந்தும் புரிந்தும் கொள்ளக்கூடுவன எவையுமே கால ஓட்டத்தில் நமது இடத்தினைப் பொறுத்து (அதன் தாக்கத்தை மீறி தெளிவாகக் காண இயலாதவாறே) அமைகின்றன. நமது தற்போதைய வரலாறையும் உடனடி எதிர்காலத்தையும் மட்டுமல்லாது தற்போதைய சமூகத்தின் தற்போதைய அறிதலையுமே அது கட்டுப்படுத்துகிறது. (வேறு எந்தக்) கோணத்திலும் நம்மால் கண்டறிந்து உணர இயலாது. காலத்தின் எந்த இடத்திலும் நமது சமூகம் – அதன் கட்டமைப்பு வரைவிலிருந்து ஸ்தூல நிகழ்வு வரையிலும், கலை-அறிவியலிருந்து உணவு-உடை வரையிலும், பொருளாதாரத்திலிருந்து சமயம் வரையிலும், போர்த்திட்டங்களில் இருந்து போக்குவரத்து வரையிலும், நடத்தையிலிருந்து மொழி-பயன்பாடு வரையிலும் – நூறு வருடங்களுக்கு முன்போ பின்போ மாறாமல் உள்ளபடியே நீடிப்பதில்லை. இதனாலேயே மிகப் பெரும்பான்மையினர் இடத்தைப் போலவே காலத்திலும் எல்லைக்குட்பட்டதாக இருக்கிறார்கள் – தங்களது கால எல்லைக்குள் குறுக்கிக் கொண்டு அதையே தமது உலகாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த குறுகலுக்கு நேர் எதிரான ஒன்றே உண்மைக்கு அணுக்கமானது என அமையும். அவர்களது காலம் அடித்துச் செல்லப்பட்டு வெறும் நினைவுகளாகவே – தொடர் விரிவிலுள்ள காலத்தில் தொடர் விலகலில் இருக்கும் சிறுதுண்டு என்று தான் – எஞ்சப் போகிறது. எவருடைய நினைவிலாவது அது ஒரு தீற்றலாக மட்டுமே இருக்கும். இன்னும், வரலாற்றாசிரியர்களைத் தவிர்த்து எவருக்குமே அது ஆர்வமூட்டுவதாகவும் இருக்காது .
எவ்வாறாயினும், நம் ஒவ்வொருவருக்குமே மிகக் குறுகிய காலத்தில் முழு வாழ்க்கையையும் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. நமக்கான முழு ஒதுக்கீடும் அவ்வளவே. வாழ்வு என நாம் அறிந்து கொண்டிருப்பதில், நமது எல்லைகளுள், காலம் ஒன்றே மிகக் கொடூரமானதும் எந்த வடிவிலும் மிக ஆபத்தானதுமாகும். பிரபலமான வரிகளில்,
தொடர் நீரோட்டமென காலம்
அதன் புதல்வர்களை சுமந்து விலகுகிறது.
பறந்து கனவென மறக்கப்பட்டு
நாளின் துவக்கத்தில் இறக்கிறார்கள்.
இதிலிருந்து விடுதலை என்பதே இல்லை. பருவுலகில் நம்முடையவை, நாம் யார் என அமைந்தவை, அனைத்தும் நேரத்துடன் முற்றாகவே பறிக்கப்படும்.
நாம் மகிழ்ந்திருக்கும் இக்கணத்தில், வெளி சார்ந்த நமது நகர்வுகள் மிகச்சிறிய இடத்திற்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால், அந்த பரிமாணத்தில் நமது எல்லைகள் மிகக் கொடூரமானவை. புவியின் மேற்பரப்பில் மட்டுமே வாழுமாறு உயிரியல் ரீதியாக மிகக் குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், நாம் வாழும் சூழலை அப்படியே புற உதவியுடன் கைக்கொள்ளாமல் அதிஉயர விண்ணுக்கோ ஆழமாக மண்ணுள்ளோ சென்றால் இறந்து விடுவோம். மேலோ கீழோ நாம் வெகுதூரம் என எங்கும் செல்லவில்லை. புவியைத் தவிர்த்து மானுடம் இங்கிருந்து வெறும் 240,000 மைல்கள் தொலைவிலுள்ள நிலவில் மட்டுமே காலடி வைத்துள்ளோம். கட்புலனாகும் பிரபஞ்சம் 1,000,000,000,000,000,000,000,000 மைல்கள் தொலைவுக்கு விரிந்துள்ளது. கட்புலனாகாத பிரபஞ்சம் இன்னமும் பெரும் தொலைவில் – மைல்களில் அல்லாது “லட்சக்கணக்கான பூஜ்ஜியங்கள்” நிறைந்த – ஒளியாண்டுகளில் அளவிடப்படும் தொலைவுகள் விரிந்திருக்கும் என இங்கிலாந்தின் வானியல் கனவான் கூறுகிறார். நமது சூரிய குடும்பமே இதில் ஒரு தூசி என அமைந்துள்ளது. இந்த சூரிய குடும்பத்தையே தாண்டிச் செல்ல இயலாதவாறு தான் மனித வாழ்வும் விண்ணின் மாபெரும் தொலைவுகளும் அமைந்துள்ளன.
காலம் மற்றும் வெளி(space) குறித்த கோட்பாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகத்தான் யேல் பல்கலையின் பட்டமேற்படிப்பில் எனக்குக் கற்பிக்கப்பட்டது. வெளி கோட்பாடு இல்லாமல் காலக் கோட்பாட்டையோ அல்லது அதன் நேர்மாறானதையோ விளக்குவது சாத்தியமே அல்ல. ஐன்ஸ்டைனுக்குப் பிறகு காலமும் வெளியும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் சொற்களில் ஒன்றுடன் ஒன்று “விளக்கவியலா ஆழ்தொடர்பினை” கொண்டிருக்கின்றன. இந்த ஆழ்தொடர்புகள் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை. ஆனாலும் சிந்தித்துப் பார்ப்போம்.
நூறு ஆண்டுகள் பயணம் செய்து நம்மை வந்தடையும் ஒளியை உமிழும் விண்மீன் ஒன்றை தொலைநோக்கி வழியாகக் காண்பதாக வைத்துக் கொள்வோம். நாம் காண்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த விண்மீனையே. நானறிந்த வரை இப்போது அந்த விண்மீன் அதேயிடத்தில் அப்படியே இருக்கும் என உறுதியாகக் கூற இயலாது. இந்த நூறாண்டுகளில் அது வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கலாம். வெடித்துச் சிதறியுமிருக்கலாம். எது நிகழ்ந்தாலும் என் விழித்திரையில் வந்து படும் ஒளி நூறு ஆண்டுகளுக்கு முன்னரே விண்மீனிலிருந்து கிளம்பிவிட்டது. ஆனால், இதற்கும் நான் பார்க்கும் மற்றவற்றிற்கும் பெரிய வேறுபாடு என எதுவும் இல்லை. இந்த அறையில் ஒருவரைப் பார்க்கிறேன் என்றால் அவர் “இப்போது” எப்படியிருக்கிறார் என்பதையல்ல, கடந்தகாலத்தின் ஒரு தொலைவில் – ஒளி அவரிடம் இருந்து என்னிடம் வருவதற்கான கால அளவு தொலைவில் இருப்பது. நமது அன்றாட வாழ்வில் இந்த தொலைவுகள் பிரித்து அறிய முடியாத அளவு மிகக் குறுகியவை என்பதால் அதை நாம் அறிவதேயில்லை. ஆனாலும் அவை இருக்கின்றன. அதன் ஒரு பின்விளைவு இதோ:
நாம் முன்பு பேசிக் கொண்டிருந்த விண்மீனில் இருந்து ஒரு உயிரினம் தொலைநோக்கி வழியாக நம்மைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். நமது நூறாண்டிற்கு முந்தைய புவியையே அதனால் காண இயலும். ஒருவேளை, மனித நடமாட்டத்தையே காணக்கூடிய அதிநுண் தொலைநோக்கி அதனிடம் இருந்தால், நமது “நிகழ்காலத்தில்” அமர்ந்து கொண்டு, நிகழ்ந்து கொண்டிருக்கும் முதலாம் உலகப் போரைக் கண்டுகொண்டிருக்கும். அது காண்பது ஒளிப்பதிவையோ ஏதோவொரு வகையில் நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்தும் வகைமையிலோ அல்ல – போர்க்களத்தில் ஒரு அதிகாரி காண்பதையெல்லாம் தானுமே காணும். இருவருமே ஒரே வேகத்தில் செல்லும் ஒரே ஒளியலைகளைப் பெற்று காண்கிறார்கள். தொலைநோக்கியை பயன்படுத்தும் உயிரினம், களத்தில் இருக்கும் அதிகாரியைப் போலவே நிகழ்வுகளை நேரடியாகக் காண்கிறது.
நமது இதே நேரத்தில் இரண்டாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள விண்மீன் ஒன்றிலிருந்து ஒரு பார்வையாளர் இன்னமும் அதிநுண் திறனுள்ள தொலைநோக்கியை வைத்து நம்மைக் கண்காணிததால் இயேசு சிலுவையில் அறையப்படுவதையே காண்பார். நமக்கு சிறிது அருகிலுள்ள இன்னொரு விண்மீனிலிருந்து பார்த்தால் ஹேஸ்டிங்ஸ் யுத்தத்தினை நேரடியாகக் காண்பார்கள். இன்னும் சற்று அருகிலுள்ள விண்மீன் என்றால் பதினாறாம் நூற்றாண்டில் எலிசபெத் மகாராணி லண்டன் தெருக்களில் ஊர்வலம் செல்வதைக் காண்பார்கள். மனித வரலாறு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வரலாற்றையுமே வெவ்வேறு தொலைவில் உள்ள விண்மீன்களில் உள்ள பார்வையாளர்களால் நேரடியாக ஒரே நேரத்தில் காண இயலும். இதில் எந்தவொரு அமானுஷ்யமும் இல்லை. முழு வரலாற்றையும் ஒன்றாக ஒரே நேரத்தில் காணக்கூடியவரே கடவுள் என்னும் கருத்து நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மனிதர்களின் ஒரு குழு – வெவ்வேறு தொலைவில் உள்ள விண்மீன்களில் சரியான தொலைநோக்கு உபகரணங்களைப் பொருத்தினால் இதையே நிகழ்த்த முடியும். கால ஓட்டத்தில் தொடர்ந்து நிகழும் ஒன்றுடன் தம்மைத் தாமே அக்குழுவினர் தொடர்புறுத்திக் கொள்வதைத் தவிர காலப்பயணமோ மாயமந்திரங்களோ இதில் ஏதும் இல்லை.
முற்றிலும் அறிவியல் அடிப்படையில், இயற்பியலைப் பொறுத்தவரை புறவயமாக “இன்று” என எதுவும் இல்லை என ஐன்ஸ்டைன் நம்பினார். “இன்று” என்பது காணப்படும் பொருளைச் சார்ந்து காண்பவரது இடத்தைப் பொறுத்தது. ஆனால், காண்பவரைச் சார்ந்தே “இன்று” என்பது அமையும் என்றால், “நேற்று”ம் “நாளை”யும் அவ்வாறு காண்பவரைச் சார்ந்தே அமையும். ஐன்ஸ்டைன் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்: நடந்தவை – நடக்க இருப்பவை என்னும் கருத்துகள் புறவயமானவை என மனித மனத்தில் ஆழப் பதிந்திருந்தாலும், அவை கற்பனையே. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் “இன்று” என்பது மக்கள் வாழும் போதும், “நாளை” என்பது வாழ்ந்து முடித்தவர்களுக்கும் , “நேற்று” என்பது இனி வாழப் போகிறவர்களுக்கு என அமையும். ஆனால் வரலாற்றின் நிகழ்வுகளும் அதன் ஒழுங்கும் அனைவருக்குமே ஒன்றாகத் தான் இருக்கும். காலம் குறித்த இவையனைத்தையும் உண்மையென ஐன்ஸ்டைனும் ஏற்றுக் கொள்கிறார். நிகழ்வுகளுக்கு காலத்தில் ஒரு ஒழுங்கும் – லௌகீகமான (temporal) ஒரு ஒழுங்கும் உண்டு. ஐன்ஸ்டைன் இதையும் மறுக்கவில்லை. அவர் சொல்வது, இந்த லௌகீகமான ஒழுங்கில் சிறப்பாக “இப்பொழுது” என எந்தவொரு தருணமும் இல்லை. வேறுவிதமாகக் கூறினால், கால ஒழுக்கு அல்ல கால வரிசை என்பதே புறவயமானது. நமது அனுபவத்தின் ஒரு பண்பே கால ஒழுக்கு என்பது. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் வந்த விஞ்ஞானிகளில் கிட்டத்தட்ட அனைவருமே இது எதுவுமே மாயம் அல்ல – முற்றிலும் அறிவியல்பூர்வமானதே என நிறுவினர். உண்மையில் காண்ட்டுடன் (Immanuel Kant) தத்துவவியலாளர்களே இந்த முடிவுக்கு முதலில் வந்தவர்கள். ஆனாலும் தத்துவ ஊகங்களுக்கு அறிவியல் அடிப்படையும் சரியாக அமைவது உலகளாவிய மாற்றத்திற்கு வழிவகுத்தது.
ஆழ்மர்மமென அமைந்திருக்கும் காலத்தினுடைய இயல்பினது முக்கிய கூறுகள் இன்றளவும் இயற்பியலாளர்களிடையே பெரும் விவாதங்களைக் கிளப்பி விடுகின்றன. இதில் இயற்பியலாளராக இல்லாமல் அறிவியல் அடிப்படையில் வாதிட முயல நான் அறிவிலி அல்ல. ஆனால், அறிவியலாளர்களிடையே நிலவும் இந்த சச்சரவு, காலம் குறித்த சிக்கல்கள் சமயத்தையோ தத்துவத்தையோ சார்ந்ததாக இல்லை என்பதைக் காட்டுகிறது. அதற்கான தீர்வுகளும் நமது பொதுப்புத்திக்கு எளிதானதாகவோ, அதை வைத்தோ அமையப் போவதில்லை – உண்மையில் நேர்மாறாகவே அமையும். அத்தீர்வுகள் நமது பொதுப் புத்தியை மிரளச் செய்கின்றன.
காலமும் வெளியும் ஒருவகையில் பருப்பொருளுக்கு அவையின்றித் திகழ முடியாத வகையில் அடிப்படை கட்டமைப்பாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு தனி பருப்பொருளுக்கும் காலத்திலும் வெளியிலும் ஒரு இடம் உண்டு. மேலும், அனைத்து பொருட்களுமே நிலையற்றவை: தத்தமது இருப்பில் வெளிப்படுகின்றன, இடைநில்லா தொடர் மாற்றத்திற்கு உட்படுகின்றன, சடாரென்றோ மெதுவாகவோ இருப்பில் இருந்து மறைந்துவிடுகின்றன. இதற்கு நமது உடல்களும் விதிவிலக்கல்ல. கலலேயோ கூறியபடி, நாம் அமரர்கள் என்றால் இவ்வுலகில் இருக்கவே முடியாது. மனித உடலினது இருப்பின் ஆயுட்காலம் அது செல்லக்கூடிய தொலைவின் எல்லைகளை வரையறுப்பதால், ஏதேனும் ஒரு தருணத்தில் இவையெல்லாம் என்ன என்பதை ஓரளவிற்கு தெளிவாகவே ஊகிக்க இயலுகிறது. உதாரணமாக, எந்தப் பொருளும் ஒளியை விட வேகமாகச் செல்ல முடியாது எனவும் எந்தவொரு மனிதனும் இருநூறு வருடங்களுக்கு மேல் வாழ முடியாது எனவும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியெனில், புவியில் இல்லையென்றாலும் தொடங்கிய இடத்திலிருந்து எந்தவொரு மனிதனும் இருநூறு ஒளியாண்டுகள் தாண்டி எங்குமே பயணிக்கவே இயலாது. ஒருவேளை ஒளியின் வேகம் அதன் திசைவேகத்தை மட்டுப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து வரும் ஆயுட்காலங்களில் நிகழ்த்தப் படும் தொடர் பயணங்கள் ஊழியூழிக் காலங்களுக்கு மனிதனை பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் கட்டிவைத்திருப்பதாகவே அமையும்.
பருப்பொருட்களை நம்மைச் சார்ந்த அதன் அளவினை வைத்தே அறிந்து கொள்கிறோம். புவியை விட பலகோடி மடங்கு பெரிய விண்மீன்களில் துவங்கி அணுத்துகள்களின் அடிப்படை உறுப்புகள் வரை அவை நீண்டிருக்கின்றன. ஒரே அளவுள்ள பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வை, நம்முடன் பொதுப்பண்புகளைக் கொண்டிருக்கும் பிற உணர்வுறு இருப்புகளிலிருந்து இருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு புல்தரை என்பது காலடியில் இருக்கும் ஒரு விரிப்பு என நமக்குத் தோன்றலாம். அங்கு புற்களில் வாழும் எறும்பிற்கு அந்தப் புல்தரை ஒவ்வொரு வகையிலும் முற்றிலும் வேறானதாகவே இருக்கும். ஆயினும் அந்த வேறுபாடுகள் பார்வைக் கோணம், இடம் மற்றும் அளவீடுகளை மட்டுமே பொறுத்தது. அந்த உணர்வுறு இருப்புகளையும் நம்மையும் சேர்த்து மொத்த பருப்பொருட்களுமே ஒரே வஸ்துவால் ஆக்கப்பட்டவை.
நாம் இறந்தாலோ, ஏதேனும் பருப்பொருள் அழிந்தாலோ, அணுக்கள் சிதறிப் பரவி விடுகின்றன – அதன் இருப்பு தீர்ந்து மறைவதில்லை. நமது இருப்பிற்கு முன்பு அவை வேறு திட திரவ வாயுக்களின் உறுப்பாக இருந்திருந்து, தற்காலிகமாக உங்களது மற்றும் எனது உருவாக்கத்தில் பங்கெடுத்து, சிதறிப் பரவி வேறொன்றின் உருவாக்கத்தில் பங்கெடுக்கச் செல்லும். அனைத்து பருப்பொருட்களும் நிலையற்றவையே – தற்காலிக ஏற்பாட்டில் அமைந்தவை. அதன் உறுப்புகளோ அணுக்கள் மட்டுமே அழிவற்றவை.
அதிபிரம்மாண்ட சீட்டுக்கட்டு ஒன்றினை நிறுத்தாமல் அடுக்கிக் கலைத்துக் கொண்டே இருப்பது போல் அனைத்து பொருட்களும் ஒரே அடிப்படை உறுப்பினால் உண்டாக்கப்பட்டுள்ளது என்பது திகைப்பூட்டுவது என்றாலும் ஒரு உண்மை. நிச்சயமின்மைக் கொள்கையை துளிம இயக்கவியலில் ( Quantum mechanics) அறிமுகப்படுத்திய ஹைசன்பர்க், “எப்போதுமே இருப்பது அதே பருப்பொருள், எந்தவொரு பொருளுக்கும், தனிமங்களுக்கும், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் அதே மூலக்கலவைகள் , பருப்பொருளின் பல்வேறு பகுதிகளுள் செயல்படும் விசைகளுமே அறுதியாக அனைத்துவிதமான பொருட்களிலும் உள்ளன…. பருப்பொருளின் ஒருமை என்பதற்கான அறுதி சாட்சியம் இதோ உள்ளது. அனைத்து அடிப்படை துகள்களும், ஆற்றல் என்றோ பிரபஞ்ச பருப்பொருள் என்றோ அழைக்கப்படும் ஒரே வஸ்துவால் உண்டாக்கப்பட்டவை. அவையனைத்தும் பருப்பொருளின் வெவ்வேறு வடிவிலான வெளிப்பாடுகள் மட்டுமே “ . அடிப்படை துகள்களின் ஆயுள் என்பது கற்பனைக்கெட்டாத வகையில் நீண்டது – அவை ஒவ்வொன்றும் பலநூறு கோடி பொருட்களின் – உயிர்ப்பொருட்கள் உட்பட – உறுப்பாக இருந்திருந்த பின்னரே நமது ஒரு பகுதியாக அமைந்திருக்கும். மனித உடலை உண்டாக்குவதற்கான துகள்களது அதிபிரம்மாண்டமான எண்ணிக்கையும், இனப்பெருக்கத்தின் உயிர்வேதியியல் விளைவுகளும் நமது ஒவ்வொரு துகளும் நிச்சயமாக இன்னொருவருடையது என்பதைக் காட்டுகிறது. ஒருவகையில், நாம் ஒவ்வொருவரும் மறுபிறப்புகளே. நான் சொல்லியபடி, நாம் ஒவ்வொருவரும் ஒரு தற்காலிக அமைப்பு மட்டுமே.
அறிவியல் இவற்றை அணுக்கள் துகள்கள் என விளக்குவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஷேக்ஸ்பியர் இதன் சாரத்தை அறிந்திருந்தார் (அவர் அனைத்தையும் அறிந்தாருந்தார் என சிலநேரங்களில் ஒருவர் நினைக்கலாம்.) ஹாம்லெட்டின் ஒரு கணத்தில் இளவரசன் கூறும்/ பாடும் வரிகள்:
மேலாதிக்க சீஸர் இறந்து மண்ணாகி விட்டார்
ஆவி வெளியேறாமல் ஒரு துளையை அடைத்திருக்கலாம்
ஆ! உலகை ஆச்சரியப்படுத்தும் புவி
குளிரின் களங்கத்தை வெளித்தள்ள ஒரு சுவரை ஒட்டியிருக்கலாம்!
அதற்கு முன்னரே ஹாம்லெட் க்ளாடியஸ் அரசரிடம் கூறுகிறார் – “அரசனை உண்ட புழுவினை தூண்டிலாக்கி ஒருவன் மீனைப் பிடித்து உண்ண முடியும்“. தான் தூண்டிலாக்கப்படுவதை அறிந்த மன்னன் ”நீர் சொல்வதன் அர்த்தம் என்ன?” என்று வினவினான். ஹாம்லெட்டின் விடை – “ஒன்றுமில்லை. ஒரு யாசகனின் குடல் வழியாகவும் அரசன் முன்னேறக்கூடும் என உங்களுக்குக் காட்ட விரும்பினேன்”
இந்த பார்வைக் கோணங்கள் ஒவ்வொன்றுமே நம்மைப் பற்றிய சரியான நோக்குகளுக்குள் உள்ளிழுக்கப்பட வேண்டியவை. ஆனால் அவற்றின் பட்டியல் ஒருபோதும் முடிவடையாத ஒன்று. பிரபஞ்சத்தின் போக்கில் இமைக்கணம் மட்டுமே வாழ்ந்து கண்காணாமல் புதைக்கப்படுகின்ற நமக்கு, அறிதலுக்கு முன், அறிந்து கொள்ள என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம் என எப்படி நம்புவது? மானுடன் அறிந்து கொள்ள ஏதுவான கருத்துக்களாகவே ஒவ்வொன்றும் இருக்கின்றன – எனவே அறிய முடியாதது என எதுவுமில்லை – என்னும் கூற்று அறிவுமதிப்பற்றது. முன்னோடி விஞ்ஞானியும் கறாரான பொருள்முதல்வாதி என நான் நம்பும் ஜெ எஸ் ஹல்டேன் ( ஜெ பி எஸ் என் பரவலாக அறியப்பட்டவரின் தந்தை) ஒருமுறை கூறினார்: “ பிரபஞ்சம் நாம் நினைப்பதை விட ஆச்சரியமானது மட்டுமல்ல. நமது நினைப்பின் எல்லையைத் தாண்டியும் ஆச்சரியமானவை.” மிகக்கூரிய பகுத்தறிவாளனும் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய கருத்து இது.
நிதர்சனத்தை அறிவுப்பூர்வமாக கைக்கொள்ள ஒருபோதும் மானுடனால் இயலாது என்பதே இதுவரையிலான அனைத்து கூறுகளையும் வைத்துப் பார்க்கையில் வரும் முடிவு. புதிய கண்டறிதல்கள் தொடர்ந்து நிற்காமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில நமது சிந்தனையையே மாற்றுகின்றன. கண்டறியப்பட வேண்டியவையும் முடிவற்றவையாக எப்போதும் உள்ளன. இந்நூலை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலும் அறிவியல் தொடர் ஓட்டத்திலேயே இருக்கிறது. சமகால கண்டறிதல்களை ஒரு பார்வையாளர் அதன் முக்கியத்துவம் கருதி புரிந்துகொள்வதற்குள் அவை புதிய முன்னகர்வுகளால் திசைமாறி விடுகின்றன. தன்னைச் சுற்றியுள்ள உலகை அறிந்து தனது அறிதலால் கைக்கொள்ள நினைக்கும் ஒருவர் தொடர்ந்து தான் கால்வாரப்படுவதைப் உணர்வார். தமது முந்தைய நோக்கின் போதாமையை உணர்ந்து போராடி வெளிவரவதற்குள் புதிய நோக்கின் போதாமைகள் வெளிப்பட்டுவிடுகின்றன. இந்த சுழற்சி முடிவற்றது.
உலகம் மீதான அறிவுப்பூர்வமான ஆதிக்கத்தை மானுடம் பெறவே முடியாது என நிற்கும் மற்றொரு தடை – அனைத்தையும் உள்ளிருந்து அகவயமாக மட்டுமே புரிந்து கொள்ள இயலாது என்பதே. ஒவ்வொன்றும் புறவயமாகவும் காணப்பட வேண்டும். மக்கள், சமூகங்கள், தேசங்கள், நிறுவனங்கள், சிந்தனைகள், நம்பிக்கை சார்ந்த அமைப்புகள், பொருட்கள் என அனைத்திற்குமே இது பொருந்தும். எனவே, இந்த தேடலில் இருப்பவரது ஒரு கால் தொடர்ந்து ஒரு பொறியில் சிக்கியிருக்கும். பிரபஞ்சத்தினை அறியும் முயற்சியில் அதிலிருந்து வெளியே செல்ல இயலாது. காணும் இவ்வுலகினை அறிய இதிலிருந்து வெளியே செல்ல இயலாது. மானுடன் என நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு மானுடத்திலிருந்து வெளியேற இயலாது. வெளிப்படையாக, நாம் எதையுமே அறிந்து கொள்ள இயலாது என நான் சொல்லவில்லை. நிச்சயமாக எல்லாவற்றையும் நம்மால் அறிய இயலாது.
Bryan magee – ப்ரையன் மேகி ஆங்கில தத்துவவியலாளர், அரசியலாளர், பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுள் ஒருவர். தத்துவம், குறிப்பாக மேலைத் தத்துவத்தினை அதன் தீவிரம் குறையாமல் நூல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக பொது வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தியவர். மேலைத் தத்துவ அறிமுகம், ஷோப்பனோவர், வாக்னர் குறித்த அவரது நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. 2019ல் மறைந்தார்.
***
சங்கரன் ரவிச்சந்திரன் – மென்பொறியாளரான சங்கரன் ரவிச்சந்திரன் அறிவியல், தத்துவம், இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர். ஜெயமோகன், புதுமைப்பித்தன் , க நா சு, கந்தர்வன் முதலானோர் ஆதர்ச எழுத்தாளர்கள். கார்லோ ரொவெல்லியின் Seven Brief lessons in physics நூலை “இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்” என தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். சொல்வனம், அகழ் மின்னிதழ்களிலும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்டவர் சென்னைக்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். மின்னஞ்சல்: shankaraner.b@gmail.com

