ஆதவன் சரவணபவன்
மனிதன் சிரிக்கும் விலங்கு என்ற சொலவடை போல அவன் தேடும் விலங்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் தேடிக்கொண்டிருக்கிறான். பொருளாக, வேலையாக, நிலமாக, வளமாக அதற்கான காரணங்களையும் வைத்திருக்கிறான். தேடலின் அந்தம் அதிகாரமாக அவனுள் உருக்கொள்கிறது. அதிகாரம் அடிமைப்படுத்துகிறது. அடிமைப்படுத்தப்படுதலின் வழியே துன்பத்துக்கு ஆளாகும் மனிதர்களின் எதிர்வினையாக போராட்டமும் அதைப் பற்றி வரும் சுதந்திர தாகமும் என்று மனித நாகரீகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்த அதிகாரமும் அடிமைப்படுத்தலும் நடந்துகொண்டே இருந்தது. இதுவொரு முடிவில்லாத சுற்றோட்டம். ஆண்டாண்டு காலமாக வெவ்வேறு பரிணாமங்களாக மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் படிகளில் நடந்தன. இன்றும் நடக்கின்றது. இனியும் நடக்கும். இருவேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை சமாந்தரமாகச் சொல்லும் புதினம் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய தரூக் நாவல். இலகு மொழியில் சிக்கலில்லாமல் வாசகனைத் தன்னுடன் இழுத்துச் செல்லும் நுட்பத்தைக் கொண்டிருக்கும் கதையமைப்பு.
இங்கிலாந்தில் இருந்து கைதிகளை அடிமைகளாக புதிய நிலத்தைத் தேடிச் செல்லும் முதல் குழுவின் கண்டுபிடிப்பான அவுஸ்திரேலிய நிலம். அங்கே நிலைநிறுத்தும் இங்கிலாந்து அரசியின் அதிகாரம். முதன்முதலில் அந்தக்குழுவில் நிலத்தைத் தேடிச் சென்ற வில்லியம் என்ற இங்கிலாந்து அரசின் உத்தியோகத்தன் பார்வையில் நகரும் கதை ஒருபுறம். மனித வாழ்வுக்கு அடிப்படையான உணவை உற்பத்தி செய்யும் நிலவியலை காணும் பயணமாக மேம்போக்காக பார்த்தாலும் உண்மையில் நிலத்தைக் கையகப்படுத்தும் பேரவா இங்கிலாந்துப் பேரரசுக்கு இருந்தது. நிலத்தின் உரிமை அதன் மேல் கீழாக இருக்கும் வளங்களின் உரிமைக்கான முதல்படி.
இன்னொருபக்கம் சமகாலத்தில் சிட்னியில் IT நிறுவனத்தில் வேலைக்கு மனைவியுடன் வந்திருக்கும் இந்திய முஸ்லீம் இளைஞன் காசிம். புதிய நிலத்தில், புதிய கலாச்சாரத்தில் வாழும் சூழலில் காசிம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப்பாடுகளை படர்க்கையில் கதாசிரியர் சொல்கிறார்.
இந்த இரண்டு களங்களையும் தொடுக்கும் ஜெட்டா என்ற தருக் பழங்குடி வம்சாவழிப் பெண்.
சொந்த நிலங்களை விட்டு துரத்தப்படும் மாந்தர்களை மட்டுமல்ல அங்கீகாரம் கிடைக்காமல் நிறவெறியால் உடைந்து போகும் மனித மனங்களை வாசகனின் முன் நிறுத்தும் காத்திரமான புதினம்.
காசிமுக்கு ஜெட்டா மேல் எழும் காதல் பல கேள்விகளை எழுப்புகிறது. இருவரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவள் சமூகத்தின் மீது நிகழ்ந்த அடக்குமுறைகள் இன்னும் தொடர்வதை ஒரு நூலின் வழி அவனுக்குச் சொல்கிறாள். அதை வாசிப்பதால் ஏற்படும் கரிசனை ஈர்ப்பாக மாறுகிறது. தனக்கு நிகழும் இனவெறித் தாக்குதல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அவனுள் பரிதாபமும் அன்பும் பொங்கி எழுகிறது.
அவனுக்கு சொந்த நாட்டிலும் வேலை பார்க்கக் கூடிய தரமான கல்வி அறிவு இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றால் அவனால் இலகுவாக ஊருக்குப் போயிருக்க முடியும். ஆனால் ஏதோ ஒன்று தொடர்ச்சியாக தொந்தரவு செய்து மனைவியிடமும் சொல்லாமல் அந்நியத்தனமாக உணர்கிறான். மனதுள் எழும் தொடர்ச்சியான அந்தரிப்பும் அமைதியின்மையும் காசிம்மை நிதானமில்லாத நிலைக்குத் தள்ளுகிறது. ஒரே ஆறுதலாக இருக்கும் ஜெட்டா மேலான காதல் புறக்கணி உதிரிகளின் பிணைப்பாக மேலெழுகிறது.
நாவலின் முக்கியமான கட்டத்தில் வாசிப்பின் நடுவே சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. ஒருநாள் எனது தமிழ்நாட்டு நண்பனுடன் சிங்கப்பூரின் food court என்னும் திறந்த உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் இவ்வாறான உணவுக்கடைகளின் தொகுதி பிரபலம். பல வகையான உணவுக்கடைகள் இருக்கும். சீன, மலே, இந்திய மற்றும் மேலைநாட்டு உணவகங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் பலதரப்பட்ட மக்களையும் காணலாம். ஒரு வெள்ளைக்காரர் எங்களை அணுகி “ஹாய்” என்றார். நானும் பதிலுக்கு “ஹாய்” சொல்லி முடிப்பதற்குள் கையை நீட்டி கைலாகு கொடுத்தார்.
“நான் நினைக்கிறேன் விலாசம் பக்கத்தில் தான் இருக்கிறது. இந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்குப் போகும் பாதை எது?” என்று கேட்டு கைபேசித்திரையைக் காட்டினார். நான் அந்த விலாசத்தில் இருந்த அடுக்குமாடி இலக்கத்தைப் பார்த்து அவருக்கு இலகுவாகப் போகும் நடைபாதையைக் காட்டினேன். நண்பருக்கும் எனக்கும் சேர்த்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்.
நண்பன், “எடுத்த எடுப்பில் கைகொடுக்கக் கூடாது. ” என்றான். எனக்குப் புரியவில்லை.
“ஒரு நாகரீகம் தானே” என்றேன்.
“நான் ஒரு ஏழுவயசுச் சிறுவனிட்ட இப்படித்தான் கேவலப்பட்டன்” என்று தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்தான். இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் மலானா (Malana) என்ற கிராமத்துக்கு உல்லாசப் பயணியாகச் சென்றிருக்கிறான். அந்தக் கிராமம் இன்னும் பழமை மாறாமல் இருக்கிறது. அங்கே வசிக்கும் மக்கள் தங்களை அலெக்சாண்டருடைய படைவீரர்களின் வழித்தோன்றல்களாகக் கருதி வாழ்கிறார்கள். வழிவழியாக அந்த வரலாறு கடத்தப்படுகிறது. பழமை மாறாத மக்கள் சில முன்னேச்சரிக்கையான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கங்களை ஊட்டி வளர்க்கிறார்கள்.
வெளியில் இருந்து வருபவர்களுக்கு கைலாகு கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தை கிராமத்து மக்கள் கைக்கொள்கிறார்கள். வெளியாட்களுடன் தொடுகையை முற்றுமுழுதாகத் தவிர்க்கிறார்கள். நண்பன் இவ்வாறு தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை என்னுடன் பகிர்ந்தான்.
நாகரீகம் என்பது பாதுகாப்பைச் சிதைப்பதல்ல. நோய்க் காவிகளாக மனிதனின் நகர்வுகள் இன்னொரு மனித சமூகத்தில் இவ்வாறான சமூக பொருளாதார சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்ற புள்ளியில் மானுட அறத்தைக் கேள்வி கேட்கிறது இந்த நாவல்.
கதையை வாசித்துக் கொண்டிருக்கையில் சில சந்தேகங்கள் முளைத்தன. குறிப்பாக முஸ்லிம் இளைஞனுக்கு அவனது மத அனுட்டானங்கள் வாழ்வின் முக்கிய பங்கு வகிக்கும். இங்கே காசிம் தினம் தொழுபவனா நோன்பு இருப்பவனா என்ற எந்த விபரங்களும் கொடுக்கப்படவில்லை. குல்லா அணிந்த இஸ்லாமியனாக இருந்திருந்தால் அவன் மீதான வெறுப்புக்கு சிலவேளை இனவுணர்வை விட மத வெறுப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம். அவனது வழிபாட்டுக் கூறுகள் நாவலின் எந்த பகுதியிலும் உள்வரவில்லை. முஸ்லிம்களின் முக்கிய கடமைகளை அவன் கைக்கொள்ளாததற்கு சரியான காரணத்தை ஆசிரியர் கொடுத்திருக்கவில்லையோ என்று தோன்றியது. இதே காசிம் போல் இன்னொரு வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இந்த பாத்திரம் பொருந்தியிருக்கும் போது ஒரு இஸ்லாமிய குடும்பமும் அந்த குடும்பத்தில் பிறந்த காசிமும் இங்கே பிரதானமான பாத்திரங்களாக வந்திருப்பதின் தாக்கம் இல்லாமல் போய்விடுகிறது.
ஒருவகையில் தந்தை ஊரில் பூர்வீகமாக வாழும் மனிதரின் வீட்டைச் சுவீகரிக்கும் கர்மா தான் காசிம்மின் நிலைக்கு காரணமாக இருக்குமோ என்றும் சிந்திக்க வைப்பதை தவிர்க்கமுடியவில்லை.
இரண்டு ஆண்களில் ஒருவன் அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாது தப்பியோடுகிறான். மற்றவன் அநியாயத்தின் முன் மண்டியிடுகிறான். நாவலின் இன்னொரு பலம் நிலவியலை தத்ரூபமாக கொண்டுவந்தது.
நிறைந்த வாசிப்பனுபவத்தைக் கொடுத்த புதினம் இந்தத் தருக்.
***
ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

