Sunday, May 3, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கதை – தத்துவம் – உரையாடல்

கதை – தத்துவம் – உரையாடல்

நேர்காணல் : லட்சுமிஹர்

நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி

லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுகதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளுக்கு ஈடாகப் பரிசோதனைக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன (ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், ‘டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம், க்ளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று). சமகாலத் தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறார். திரைத்துறையில் பணிபுரிகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருதை கூத்தொன்று கூடிற்று தொகுப்பிற்காக வென்றிருக்கிறார். அவருடைய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து அதன் அடிப்படையில் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவருடனான இந்த உரையாடல் அவருடைய படைப்பூக்கத்தை மட்டும் அறிய நேராமல் பரந்துபட்ட கதையுலகத்துடனான விவாதமாக அமைந்தது ஓர் நல்வாய்ப்பு. சமகால இலக்கிய உலகம் சார்ந்த தீவிர உரையாடலையும் எழுப்ப வல்லதாய் பதில்கள் அமைந்திருக்கின்றன.

  • யுவ புரஸ்கார் விருது வென்றதற்கு யாவரும் மின்னிதழ் சார்பாக எங்களின் வாழ்த்துக்கள். பாரம்பரியமான கேள்வியுடனேயே இந்த உரையாடலையும் தொடங்க விரும்புகிறேன். எப்போது உங்களுக்கு கதைகளின் மீது விருப்பம் ஏற்பட்டது ?

‘பொய்யை உண்மையாக சொல்ல முனையும் போது’ கதை மீதான ஆர்வம் எழுந்தததை விட ‘சொன்ன பொய்யை நியாப்படுத்த, நிறைய கதைகள் தேவைப்பட்டதே’ அதன் மீது கவனம் செலுத்தசெய்தது, இவை தொடக்க காலங்கள். என்னை அதன் பிறகு வெகுவாக கவர்ந்தது ‘வாய் மொழிக் கதைகளின் திரிபே’. அவை தனக்குள் கொண்டுள்ள உண்மையை ஒவ்வொரு மனிதர்களுக்கு கடத்தும்போது வேறுபடுவதை சிறுவயதிலேயே உணரத் தொடங்கியது, பின் அவற்றின் மீது கேள்விகளை எழுப்பி அது கொண்டு வந்து நிறுத்திய இடம் கதை உலகு. அப்போதே அதன் தொடர்ச்சியாக எழுத்தையும், திரைப்படங்களையும் வந்தடைந்தேன். இரண்டிற்கும் ஒரே நேரத்தில் வந்ததால் என்னவோ, அந்நியப்பட்ட இரு உலகில் என்னால் சுலபமாக நுழைய முடிந்தது. இன்று வரை அது என்னை சுவரஸ்யப்படுத்திக் கொண்டேயிருக்கிறது 

  • முதல் கதை எழுதிய அனுபவம் குறித்து ?

முதல் சிறுகதை வெளிவந்த போது என்னிடம் ஒரு தொகுப்புக்கான கதைகள் இருந்தன. சுமார் ஆறு வருடம் எழுதிய கதைகள் அவை. ஆதலால் எது முதல் கதை என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதுவதில் முதல் என்று ஒன்றைக் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் முதல் கதை பற்றிய ஞாபகம் இல்லை என்றாலும் அது கொடுத்த அனுபவத்தையும், உணர்வையும், பாடத்தையும் ரசிக்க முடிந்தது. இன்றளவும் அதைக் கூர் நோக்குகிறேன். 

  • சிறுகதை எனும் புனைவு வடிவம் ஏன் உங்களுக்கு வசீகரமாக இருக்கிறது ? பிற புனைவு வடிவங்களை முயற்சிக்காததற்கு பிரத்யேகக் காரணங்கள் உண்டா ? 

வடிவங்கள் என்பதை கதையின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். வடிவத்தை நான் என்றும் முன்னிறுத்த முயன்றது இல்லை. வடிவங்கள் காலப்போக்கில் ஒன்றைக் கட்டமைக்கக்கூடிய அடிப்படைவாதியின் மனநிலை கொண்டதாகவே தோன்றுகிறது. கதையின் பக்கமே எனது சிந்தனைகள் அனைத்தும் சுழலும். அதைத் திறம்பட கையாள அல்லது கையளிக்க ஏதுவான பாகங்களாக இருக்கும் அளவில் வைத்துக் கொள்கிறேன். எவ்விதமான வடிவத்திற்குள் அவை பொருந்தும் என்பதை அக்கதையின் போக்கே முடிவு செய்கிறது. அதற்கு முழு சுதந்திரம் அளிக்க நினைக்கிறேன். அப்படியிருக்க எனது வெளிப்பாட்டு தளத்திலிருந்து பொதுவெளிக்கு அறிமுகமானவை தற்போது சிறுகதைகள் மட்டுமே. இன்னும் நிறைய காலங்கள் இருப்பதால் பெயரிடப்படாத வடிவங்களிலும் நிறைய எழுதுவேன் என்று நினைக்கிறேன். 

  • சுய அனுபவங்களிலிருந்தும் மாயக் கற்பனைகளிலிருந்தும் கதைகள் எழுதத் தொடங்குவது இயல்பு. இவ்விரண்டு வகைமையிலும் கதைகளை முதல் சிறுகதைத் தொகுதியிலிருந்தே எழுதியிருக்கிறீர்கள். இவ்விரண்டு விதமான கதைகளிலும் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ? 

பெரும்பாலும் படைப்பு தனிமனித எல்லைக்கு அப்பாற்பட்டது அல்லது எழுதியவனை சார்ந்ததில்லை என்ற வாதங்களை நானும் ஏற்றுக் கொள்பவனே. இருந்தாலும் சில மாதிரிகளை நாம் சொல்லியே ஆகவேண்டும். 

இயல்பு தன்மையோ (அனுபவத்திலிருந்து) அல்லது மாய எதார்த்த வாதமோ (உங்கள் கூற்று படி) எனது முதல் தொகுப்பில் வெளிப்பட்ட கதைகளைப் பொறுத்தளவு என்னுடைய சிந்தனையிலிருந்து தோன்றும் அன்றாட வாழ்கையின் பிரதிகளாகவே அணுகுகிறேன். இன்று கதை எழுதப் போகிறேன் என்று ஒரு முகமூடியை எடுத்து ஒரு போதும் எழுதியதில்லை. அவைதி எனது அன்றாடத்திலிருந்து சிதறிய சில தருணங்களாகவே பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கை என்னுடைய கதைகளைத் தாண்டிய சுவாரஸ்யம் உடையது, சாகசங்களும் உடையது என்று என்னை சுற்றி இருப்பவர்கள் அறிவர். அதை எழுத்திலும் கொண்டுவர முயலும் பொழுதுதான் வெவ்வேறு தளங்களில் தன்னை விரிவு படுத்திக்கொள்கிறது. இன்னும் எழுத எழுத அது வாசகர்களாலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கதைகளை புது தளத்தில் எழுதிட வேண்டும் என்பதைத் தாண்டி எனது வாழ்கையை எந்நிலையிலும் கொண்டாட்டமாகவும், கற்பிதத்துடனும், நிறைய சோம்பேறித்தனமாகவும், மரமண்டையாகவும், அறிவுஜீவியாகவும் கடந்திட விழைகிறேன். 

என்னதான் நமது சிந்தனைகளுக்கு ஒரு அடிப்படை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் கருவியாக இங்கு இருப்பது மொழி. அம்மொழியில் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள சில பயிற்சிகள் அவசியம் தேவை. அதைக் கைகொள்ளக் கூடிய திறம் அவசியம். அதில் தனிக் கவனம் செலுத்தும் போது எவ்விதமான கதைகளையும் நாம் எதிர்பார்க்கும் சட்டகத்திற்குள் கொண்டுவந்திட முடியும். அப்போது அவை சவால்களாக இருக்காது என்றே தோன்றுகிறது. பெரும் மொழியில் என்னை இழக்காமல் கவனத்துடனும் எழுதுகிறேன். 

  • கதைசொல்லல் முறையில் நவீன புனைவு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அ-நேர்கோட்டுப் பாணி, சிதறல்களாக கதை சொல்லுதல் முதலியன. இந்தக் கதைகளுக்கு இந்த பாணி என்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்? 

மிக எளிது. என் அறிவை, கோமாளித்தனத்தை, இசங்களின் மீதுள்ள பற்றை, ஒரு பட்டறைக்குள் இயங்கும் மனநிலையை விடுத்து கதையின் பக்கம் நின்றாலே போதும். எந்தக் கதை எவ்வித வகைமைக்குள் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளலாம். என்னதான் நெறிமுறையற்ற தொனியில் இவை இருந்தாலும் தனிமனிதக் கூற்றையும், சமூகப்பாட்டின் தோற்றுவாயையும் கேள்வி எழுப்பாது, அவற்றிலிருந்து தனித்த அணுகுமுறை கொண்டிராத ஒருவரால் வெளிப்படும் காரணிகள் பயனற்றது. அவற்றிலிருந்து தன்னை மீட்டு உருவாக்கி கொள்ள நினைக்கும் ஒருவன் தேடும் நுட்பங்கள் நாம் வகுத்து வைத்திருக்கும் இலக்கிய நுட்பங்களைத் தாண்டிய ஒன்று. வாழ்க்கை இலக்கியத்தை விட பல வகைமைகளைக் கொண்டிருக்கிறது. 

  • பலவிதமான கதைசொல்லல் முறைகளைக் கையாள்வதால் இந்தக் கேள்வி. உங்களுக்கான முன்னோடி அல்லது ஆதர்சம் யார் ? 

முன்னோடிகள் இருப்பதால் தான் இத்தனைத் தெளிவுடன் பல வித கதைகளை சொல்ல வேண்டும், முடியும் என்கிற எண்ணம் எழுகிறது. நான் அடிப்படையில் புனைவு சார்ந்து எனது வாசிப்பை தொடங்கவில்லை. தத்துவம் சார்ந்தே எனது வாசிப்பை ஆரம்பித்ததால் என்னவோ அவை என்னை வரலாற்று பக்கங்களுக்கு கைமாற்றிவிட்டது. தத்துவங்களின் வகைமைக்குள்ளும், வரலாற்று திசைகளின் நடுவே எனது சிந்தனைகள் கட்டமைக்கப்பட்டதால் என்னால் புனைவு மொழியினை இயல்பாய் எடுக்க முடிந்தது. எந்த வித சார்பற்ற எழுத்தை (இங்கு சார்பு என்பது பரந்த பார்வையின் அடிப்படையில்) வாசிக்கவும், எழுதவும் முடிந்தது. 

அப்படியிருக்கையில் நான் ஒரு போதும் பெயர்களை குறிப்பிடுவது இல்லை. நான் குறிப்பிடும் பெயர்கள் என்னை எப்படி தீர்மானிக்க முடியும். என் எழுத்துகளை வாசிப்போருக்கு தெரியும் நானும், என்னுடைய வாசிப்பும், அனுபவமும். இங்கு கண்மூடித்தனமாக பரிந்துரைகளை நம்பக்கூடிய ஒரு தலைமுறையின் மனநிலையை உடைக்கவே அதை சொல்ல மறுக்கிறேன். இங்கு தமிழ் இலக்கிய சூழலில் அப்படியான வாசகர்களும், எழுத்தாளர்களும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பட்டறையின் கீழ் குழுமும் மனநிலை கொண்டவர்கள். அது அவர்களை வழிநடத்தும் எழுத்தாளர் தன் பெயரைத் தக்க வைக்க இளம் வாசகனையும் எழுத்தாளனையும் பயன்படுத்திக் கொள்ளும் ஆயுதம். அதை நான் ஒருபோதும் கையில் எடுக்க மாட்டேன். ‘தேர்ந்து படிக்க முதலில் நீயாக கண்டதை படி’ என்கிற வரையறைக்குள் என்னை போட்டுக்கொள்வேன். அதையே நான் ஆதர்சம் என்று உணர்கிறேன். நான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்று தோன்றும் தமிழில் அசோகமித்திரன் ஒரு எல்லை என்றால் நகுலன் அதன் மறுஎல்லை. அதன் நடுவில் தான் எல்லோரும் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்று. இதில் பெண் எழுத்தாளர்களுக்கென தனி உலகு இருக்கிறது. 

  • தத்துவங்கள் மற்றும் வரலாறு குறித்த உங்களின் தேடலுக்கு வழித்துணையாக அமைந்தவர்கள் யார் ?

கிளாசிக் காலகட்டத்தின் இறுதி அத்தியாயத்தினை சார்ந்த  ‘ Boethius ‘ யினுடைய வரி நினைவுக்கு வருகிறது. ‘In other living things to be ignorant of the self is natural; but in man it is a defect.’  அதை நாம் இப்படி பொருத்தி பார்த்துக்கொள்ளலாம் ‘தன்னை நிலைகொள்ளச் செய்ய விரும்பும் மனித மனம் எதையோ ஒன்றில் தஞ்சமடைவதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.’ அதை அணுக நமக்கு தத்துவங்களே பெரும் உதவி புரிகிறது. 

அப்படியாக எனது ஆரம்பக்கட்ட தத்துவ வாசிப்புக்கு என்னுடைய பள்ளி வரலாற்று ஆசிரியர் அழகரின் ஒரு வரி சொல்லாடலினுடைய முரணே  இன்றுவரை தத்துவங்கள் குறித்த பார்வையை விரிவுபடுத்துகிறது.  ‘நிலைத்து நிற்க தத்துவ பின்புலம் அவசியம்’ என்பதே அது.  தத்துவத்தை நோக்கிய பயணம் இப்படி ஆரம்பித்தாலும் தத்துவ ஆசிரியர்கள் குறித்தான வாழ்வின் போக்கு பெரும் ஈர்ப்பாக இருந்ததே, தொடர் வாசிப்புக்குள் என்னைத் தள்ளியது. 

பிளாட்டோ சொல்கிறார் ‘தuntil philosophers are kings. Or kings…have the spirit and power of philosophy.. cities will never have rest from the evils’ இவ்வரிகள் எப்படி சிறுவனை ஈர்க்காமல் இருக்கும். இப்போது இதிலிருந்து நிறைய தூரம் வந்துவிட்டதால் ஆரம்ப கால கட்டத்தின் முனைப்புக்காக குறிப்பிடுகிறேன். 

தத்துவங்கள் ஒன்றை விளக்குவதாக அறிந்த ஆரம்ப கட்டத்திலிருந்து அவை உலக நகர்வுகளின்  செயல்முறைக்குள் ஊன்றி இருக்கும் பார்வையைக் கூராக்கி  தம்மை செழுமையாக்கிக் கொண்டே வருகிறது என்கிற களத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன், தத்துவ மயிரே தேவையில்லை என்கிற நிலையும் பின்னால் வரலாம். உதாரணத்திற்கு ‘friedrich schiller யினுடைய ‘beautiful soul‘ தொடங்கி ‘Schopenhauer’ எடுத்துக்கொள்ளும் ‘will’ வரை ஒன்றின் பார்வையை பல்நோக்கில் மட்டும் அணுகிடாது அவற்றை விமர்சிக்கவும் முடிகிற தளத்திற்கு வருகிறது. ஒன்றிலிருந்து தானே ஒன்று மேலெழும்புகிறது. அவரே ‘kant’ இன் (the world as we experience it and world as it is in itself )  என்கிறதிலிருந்து தானே முன்னகர்கிறார். 

இப்படியாக நான் குறிப்பிட போனால் பட்டியல் நீளும் Husserl ,scheler ‘detach from bondage and pressure of life through spiritual)  , georgre Santayana , Ortega,  ‘Ludwig Wittgenstein ‘where of one cannot speak ,there of one must be silent’ ;இவருடைய வாழ்வின் முறை தத்துவமாக மாறுவதை வாசிக்கும் போது நாம் மனநிலையின் புதிரான அத்தியாயங்களுக்குள் நுழையலாம்’, hans – George gadamer, theodor adorno (the world is not just mad, it is mad and rational as well) ,Hannah arendt , simone de Beauvoir ( I don’t want my life to obey any other but my own) இப்படியான ஒரு நெடும் பட்டியல் rorty , slavoj zizek , bell hooks வரை நீளும். 

Kierkegaard இன் கூற்று படி ‘நம் வாழ்கையினுடைய  புரிதல்களை கடந்த காலங்களில் இருந்தே  எடுத்தாக வேண்டும், ஆனால் வாழ்தல் எப்போதும் முன்னோக்கியே இருக்கும்’ . இவர்களை போல பெயர்கள் குறிப்பிடும் அளவை தாண்டி இந்திய மரபில் ஆட்கள் இருகிறார்கள். நம் தொன்மம் தொட்ட தத்துவ மரபுக் குடிகளின் மகனிலிருந்து தொடங்கி பூதவாதம், புத்தர் என்று நீளும். நேர்காணலுக்காக நினைவில் வந்த பெயர்களோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக விலங்கினை பதில் சொல்ல வைக்க அல்லது சிந்திக்க ஒருவர் வந்தே ஆக வேண்டும். ஒருவர் என்பது இங்கே நாயக பிம்பம் இல்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறேன். அந்த ஒருவர் நீங்களும் நானும் தான்.

  • முதல் இரண்டு தொகுதிகளிலும் “புலிசாரை” எனும் தலைப்பில் சிறுகதை இடம்பெறுகிறது. ஒரே கதையை, அதே தலைப்பில் இரண்டு பாகங்களாக எழுதியுள்ளீர்கள். அதே போல ‘கூத்தொன்று கூடிற்று’ தொகுப்பில் “கூடாரத் தரிசனம்” மற்றும் “வேடிக்கையும் இன்னபிறவும்” ஆகிய சிறுகதைகள் ஒரே கதையின் இரண்டு பாகங்கள். இவற்றை குறுநாவலாக எழுதாமல் சிறுகதைகளாக எழுதியதற்கு பிரத்யேகக் காரணம் உண்டா ? 

புலிசாரை குறுநாவலாக எழுதப்பட்டது தான். அதன் அத்தியாயங்களை அப்படியே சிறுகதைகளாக பிரித்தேன் அவ்வளவு தான். தற்போது புலிசாரை குறுநாவல் வடிவிலும் வருகிறது. ஆனால் ‘கூடாரக் கரிசனம்’ கதையும் ‘வேடிக்கை இன்னபிறவும்’ அப்படியில்லை. அதன் மாந்தர்கள் ஒருவர்களாக இருப்பினும் அதன் மையம் வேறு ஒன்றைப் பேசுவதாக அமைந்ததால் அது அதன் பொருத்ததில் அமைந்துவிட்டது. என்னுடைய சிறுகதைகளின் மாந்தர்களை இனி வரும் கதைகளில் தொடர்ச்சியாக பார்க்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களைக் குறுநாவலில் அல்லது நாவலில் வடிவமைத்தால் அவர்கள் இறுதியை நோக்கி ஓடுபவர்களாக இருக்கிறார்கள். அதில் உடன்பாடில்லை. எனக்கு நெருக்கமான பாத்திரங்களை இன்னும் பல சூழலில் அணுகிப்பார்த்திட நினைப்பதே காரணம். 

  • யதார்த்தவாத சிறுகதைகளில் தென்படும் செறிவும், நிலத்துடன் கொண்டிருக்கும் rootedness உம் பிற வகையிலான கதைகளில் மங்கித் தெரிவது அதன் வடிவத்தாலா அல்லது கதையின் தன்மையா ?

நாம் கண்ணுக்கு புலப்படுபவற்றை, நம் கைகளுக்கு பழக்கப்பட்டவற்றை எடைபோடப் பழகிக் கொண்டோம். அது நம் மீது தவறில்லை. சமூகம் கட்டமைக்கும் ஒன்றிற்குள் நாம் எதிர் வாதத்தை வைக்கலாம், ஆனால் அதன் போக்கை நம்மால் எப்படி மாற்ற முடியும். அப்படி மாற்ற வேண்டும் என்று இறங்கிவிட்டால் உங்களின் சொகுசுகள் அனைத்தையும் அரசாங்கம், மதங்கள், அரசியல் நாற்றங்கள் உங்களிடமிடருந்து பிடுங்கிக்கொள்ளும். அதை எதிர்த்து நிலைகொள்ள உங்களின் வாழ்கையையே அது கேட்கும். அதற்கு தன்னை பலியிடுபவர்கள் எத்தனை பேர் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். சமூக மாற்றத்தினை விரும்புவர்கள் தன்னுடைய துறையிலிருந்து முன்னெடுப்புகளை செய்தால் போதும் என்பது ஆரம்ப புள்ளியே. அதிலிருந்து நாம் கைகொள்ளும் அதிகாரமே முக்கியம். அப்படியிருக்கையில் முழுமையுடைய, செறிவான வாழ்வு என்பது நம் மனநிலையில் இருக்கிறது. இலக்கியத்தை பொறுத்தவரை அல்லது கலையை பொறுத்தவரை செறிவான ஒன்றை உருவாக்க முடியுமா என்று கேட்டால் அது முக்கியமில்லை என்றே தோன்றுகிறது. செறிவானவைகளும், முழுமையறிவும் போலித்தனமும், முன்கட்டுமான வேலைகளை கொண்டவை என்று நினைக்கிறேன். அதில் அன்றைய நேரத்தை கடத்துவதற்கான பொழுதுபோக்கேயிருக்கும். என்னுடைய கதைகளை அணுகும் நீங்கள் அதைப் பிரித்துக் கொள்ளலாம், உரையாடிக்கொள்ளலாம். நான் அனைத்தையும் ஒன்றாகவே அணுகுகிறேன். கைக்கு எட்டும் தூரத்தில் உங்களுக்கு அனைத்தையும் வைக்க முயன்று கொண்டே இருக்கிறேன். இருப்பேன். 

  • பரிசோதனை முயற்சியான கதைகளைத் தொடர்ச்சியாக முயல்கிறீர்கள். பாராட்டுதலுக்குரிய விஷயம். அதைப் புரியவில்லை என்று வாசகர்கள் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?

விருதுக்கு முன் இதழ்களில் மட்டுமே என்னுடைய கதைகள் பிரசுரமாகியது, புத்தகங்களாக வந்தது. இருந்தும் அது நேரடி வாசகர்களை அடையவில்லை. இங்குள்ள இலக்கிய சூழலில் பலதரப்பட்ட எழுத்துக் கொள்கைகள், பட்டறைகள் இருப்பினும் பெரும்பாலான இதழ்களில் என்னுடைய கதைகள் பிரசுரமானது. பரிசோதனை முயற்சிகளை நமது இலக்கிய இதழ்கள் ஆதரித்துக்கொண்டே இருப்பதாகவேப்படுகிறது. ஆனால் இலக்கியவாதிகளின் நிலைப்பாடு இதில் வேறு என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். அப்படியிருக்கையில் விருது என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இந்த மூன்று மாத கால இடைவெளியில் வாசகர்களிடமிருந்து எனது புத்தகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இக்கதைகளை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற எண்ணமில்லை என்றாலும் புது முயற்சிகளுக்கு மக்களின் ஆர்வமும் அதிகமாகவே இருக்கிறது. புரியவில்லை என்கிற கேள்விகளும் இல்லாமல் இல்லை அதற்கு புன்னகையைத் தவிர என்ன பதில் சொல்ல முடியும். புரியவில்லை என்பதால் என்னை மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா? அது இருமுனை கொண்ட மாறுதலுக்கு உட்படவேண்டியவை. 

  • உங்கள் கதாபாத்திரங்களின் பொதுக்குணங்களாக தனிமையும், அடையாளத்தைத் தேடுதலும் தொடர்ந்து உணர முடிகிறது. உடனிருக்கும் வீடு, நிலம், தொழில் ஆகியவற்றில் பற்று கொண்டவர்களாக, அதன் வழி அடையாளம் அடைபவர்களாக, அதை இழக்க அச்சம் கொள்பவர்களாக இருப்பது தற்செயலானதா ? 

தனிமையும், அடையாளச் சிக்கலும் என்னுடைய கதைகளில் எப்படி இவ்வளவு முக்கியத்துவம் கொள்கிறது என்று தெரியவில்லை. வாசித்த இலக்கிய நண்பர்களுக்கு மட்டும் அந்தத் தனிமை புலப்பட்டுவிடுகிறது. (வாசகர்கள் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள்) ஒருவேளை அவர்கள் அவர்களுடன் ஒப்பிட்டு அதன் வரைமுறைக்குள் இப்பிரதிகளை கொண்டு வந்து விடுகின்றன போல. இதுவும் ஒரு வகையில் பழமைவாதம் தான். இப்போது கூட இந்தக் கேள்வி பதில்களை நான் நேர்கோட்டில் எழுதவில்லை எனக்கு பிடித்த கேள்விகளுக்கு முதலில் பதில் அளித்து விட்டு பின் மற்ற கேள்விகளுக்கு நகர்கிறேன். அப்படியிருக்கையில் பின் வரும் கேள்வி ஒன்று இருக்கிறது இப்போது இலக்கிய சூழல் எப்படி என்று ‘இலக்கியம் வித்யாசமாக இருந்தாலும் விமர்சனம் ஒரே பாதையில் இருக்கிறது. இன்னும் சுலபமாக சொல்லப்போனால் ‘பிரதியெடுக்கும் விமர்சனம்’ ஆக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர்களே விமர்சகர்களாக இருப்பது தமிழின் சாபக்கேடு. அது மாறுமா என்றால் தெரியவில்லை. ஆனால் ஒன்று எழுத்தாளர்கள் கொடுக்கும் விமர்சனப்பார்வைக்கு முக்கியத்துவம் தேவையில்லை. அதற்கு பின் பல சமயங்களில் பெரிய கத்தியும், சில சமயங்களில் விமர்சனமும் இருக்கிறது என்று மட்டும் தெரியும். ஆகையால் அதைத் தாண்டி என்னுடைய கதைகள் பல தரப்பட்ட களங்களில் பயணிப்பதாகவேப்படுகிறது. இதற்குள் அடங்காது. இவை தொகுத்த பார்வை என்றால் மீண்டும் ஒருமுறை எனது கதைகளைப் படிக்கவும். நேரம் இல்லை என்றால் அவசியம் இல்லை. அவ்வளவு முக்கியமும் இல்லை. 

  • திரைத்துறையில் பணி, சிறுகதை எழுத்தாளர் என்று ஒரு நாளின் முழுமைக்கும் புனைவுகளுடன் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்து செயல்பாட்டை எப்படி சீர்மையுடன் தக்க வைக்கிறீர்கள் ?

வேலையாக செய்தால் கண்டிப்பாக அலுப்பு தட்டிவிடும். அதைவிட முக்கியமான ஒன்று அங்கீகாரத்திற்காக எழுதினால் அதை விட அலுப்பு தட்டக் கூடிய ஒன்றாக அது மாறிப்போகும் . என்னுடைய வாழ்க்கைமுறைக்குள் கலையினை அங்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இயங்குவதாக பார்க்கிறேன். அது அவ்வளவு எளிதில்லை. நம் சமூகம் அப்படியிருக்க விடாது அல்லது இவன் மட்டும் எப்படி இப்படி சுதந்திரமாக சுற்ற முடியும் என்று பல கேள்விகளை மட்டுமில்லாது கேலியையும் நம்மீது உமிழும். ஆனால் நமது படைப்பு மனநிலையினை சரியாக கையாண்டு அதிலிருந்து வெளிப்படும் படைப்புகளிலிருந்து அவர்கள் நமக்கு துணை நிற்பர். பணத்திற்கு என்ன செய்கிறீர்கள் ? எப்படி ? என்கிற கேள்விக்கு தான் உங்களின் இலக்கிய (கலை )வெளிப்பாட்டின் தரம் முக்கியம் என்று தோன்றுகிறது. அதன் மூலம் பணம் என்கிற வாதத்தை கடந்து விட முடியும். அப்படியிருக்கையில் என்னைப் பிற்காலத்தில் நினைவுகூற இதையெல்லாம் நான் செய்யவில்லை. என்னை நினைவு கூற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இவை என்னுடைய வெளிப்பாடு அவ்ளோதான். கலையினை மையமாக வைக்காத லட்சுமிஹரை அறிந்த பல உலகத்தினுள் இருக்கிறேன். 

  • திரைத்துறையில் பணிபுரியும் நபர்கள் பற்றிய நுட்பமான சித்தரிப்புகளுடன் சிறுகதைகள் முயன்றிருக்கிறீர்கள். சண்டை பயிற்சியாளர், ஜூனியர் ஆர்டிஸ்ட், துணை இயக்குனர் என்று. அவர்கள் பெரும்பாலும் கனவுகளை அடைய முடியாமல் தோற்றவர்களாக இருக்கிறார்கள். பெரும் பொருளாதார சூழலுள்ள துறையில் கைவிடப்பவர்களாக இருக்கிறார்கள். பொது வாசிப்பில் கரைந்த நிழல்கள் நாவலும், சுஜாதாவுடைய சில புனைவுகளிலும் இதே மாதிரியான கதாபாத்திரங்களைக் காண முடியும். உங்களுடைய புனைவுலகை அவர்களுடைய புனைவுகளிலிருந்து எப்படி வேறு படுத்த முனைகிறீர்கள் ? 

அசோகமித்திரனின் திரைத்துறை சார்ந்த மாந்தர்களுக்கும், சுஜாதாவின் திரை சார்ந்த மாந்தர்களுக்குமே அவ்வளவு முரண் இருக்கிறது. ஒருவர் அவர்களின் துறையின் துயரை எழுதினால் இன்னொருவர் துயரின் காரணங்களை எழுதக் கூடியவர். அதுமட்டுமில்லாது அவர்கள் இருவரின் மொழி அடிப்படையில் வாசிக்க ஒன்றாக இருந்தாலும் அதன் முறைகள் வெவ்வேறு. ஆனால் திரை சார்ந்த கனிவு இருவரிடமும் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அந்தக் கனிவை என் திரை சார்ந்த கதைகளில் காண முடியாது. அவர்கள் கலையினை தூக்கி எறியவும் சங்கடப்படாதவர்கள். அதன் மாயையினுள் சிக்காத சாமானியர்கள். அவர்கள் கலை மட்டுமே இவ்வுலகில் உயர்ந்த ஒன்று என்று எண்ணாதவர்கள். அது இன்றைய காலகட்டத்தின் பிரதிபலிப்பு மட்டுமில்லை. காலமாற்றம். இத்திசையில் தான் இனி வரக்கூடிய சினிமா மாந்தர்கள் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதற்கு மேல் சொன்னால் நான் எழுதியிருப்பது வீண். ஆகையால் வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும். இங்கு எனது சினிமா சார்ந்த கதையில் வரும் ஒரு வாசகத்தை மட்டும் குறிப்பிட வேண்டும். ‘ மயிராச்சு பணமா, மண்ணானு தூக்கி எறிஞ்சுட்டு வர இது சினிமாவா ? வாழ்க்க …அதுவும் நான் சினிமா எடுக்க போறவன்.’

  • சுய மரியாதையைத் தக்க வைக்கும் மூர்க்கமும், சுயநலமாக இருக்க விழையும் யதார்த்தமும் அனைத்து கதாபாத்திரங்களிடமும் பிரதிபலிக்கின்றன. உங்கள் அனுபவத்திலிருந்து எழுந்தவையா அல்லது அவதானிப்பிலிருந்து கனிந்தவையா?

சுய மரியாதைக்கும் சுயநலத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் நம்மை பற்றியும் பிறர் நம்மை பற்றியும் நினைக்கும்தளத்தில் இவை மாறுபடும். அவ்வளவுதான். முன்பு சொன்னது போல தான் உங்களுடைய அனுபவங்களிலும், முன்தீர்மானங்களிலும் என்னை அணுக நினைத்தால் உங்களுக்கு பிடித்தவனாக நான் மட்டுமில்லை எனது படைப்பும் இருக்காது என்பதை இப்போது இல்லை எப்போதும் சொல்லுவேன். என் பார்வையின் வழியே ஒரு உலகை காட்ட நினைக்கும் ஒருவன் அதில் புலப்படும் யாவையும் அறிந்து புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமா? அப்படி செய்யும் வாய்ப்பு இருந்தால் எவ்வளவோ முயன்று பார்த்திருப்பேன். பறக்க, விலங்குகளுடன் உரையாட, மரத்தினுள் வாழ, ஒவ்வொருவரின் தலையில் ஏறி அமர, எண்ணிக்கையின்றி ஒரு பெண்ணிற்கு கற்பினை வழங்க, ஆணுக்கு சுய ஒழுக்கத்தில் மகிழ்ச்சியுற என்று நீண்டு கொண்டே போகும் மனிதத்தை நிலை நாட்டியிருப்பேன், என்னால் முடிந்தளவு. 

  • நான்கு தொகுப்புகளில் ‘க்ளாஸிக் டச்’ தொகுப்பு அதன் தொகுப்பாத்தில் தனித்துவம் அடைகிறது. பெருவாரியானவை கதைகளைப் பற்றிய கதைகள். இந்த தொகுப்பாக்கம் திட்டமிட்டு நிகழ்ந்ததா ?

கண்டிப்பாக இல்லை. கிளாசிக் டச் கதைகள் எழுதிய காலகட்டம் அப்படியானது. தப்பி உயிர் பிழைத்துக்கொண்ட  காலம். இனி வாழும் ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று தோன்றிய நேரம். இப்போது வரை அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது பார்ப்போம். அக்காலகட்டத்தில் என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் நோய்மை, மரணம், உறவுகளின் மீது ஏற்பட்ட கசப்பு, நம் மருத்துவ உலகம், நம்பிக்கை, கடவுள், தத்துவம், நாத்திகம்  என்று கடுமையாக இருக்க எழுதும் பக்கங்கள் அப்படி இருக்கக்கூடாது என்று எனக்கு தோன்றியதே கிளாசிக் டச் உடைய முதல் வரைவு. அதில் பெரும்பாலும் கையில் எடுத்து கொண்ட ‘young adult fiction’ வகைமை என்னை என் இளமைக்குள் செலுத்தியது. கதைகள் பற்றிய கதைகள் என்பது தீர்மானித்தது தான். அதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நமக்கு முன் எழுதிய ஒரு கலைப் படைப்பையோ அல்லது கலை சார்ந்த நபர்களையோ அல்லது அதிலிருந்து மீண்டவர்களின் மனநிலை எதையும் செய்து பார்க்கும் உத்வேகம் கொண்டது. அது அப்படியாக உருபெற்றது. ஆனால் ஒரு கதை இன்னொரு கதையின் சாயலை தவிர்த்து எழுதியவையே. கிளாசிக் டச் முன்பு கொண்டிருக்கும் உடல் மீதும், நமக்கு முன் கற்பிக்கபட்டிருக்கும் அடையாளங்கள் மீதும் எழுப்பப்பட்ட இன்றைய சிந்தனைகள். இது மாதிரியான கதைகளை எழுதும் போது கதையின் அடிப்படை இல்லை, வாக்கியமே சரியில்லை, புரியவில்லை என்று இங்கு ஒரு கும்பல் புலம்பும். அது புதியவற்றை எதிர்கொள்ள திராணி இல்லாத போக்கு. பழைய புழுத்துபோன சக்கைகளை வாசிப்பவர்கள், எழுதுபவர்கள்.  இன்றளவும் என்னுடைய புத்தகங்களில் எதிலிருந்து வாசிக்க தொடங்கலாம் என்று கேட்டால் இப்போது வெளிவர இருக்கும் புலிசாரை குறுநாவலுக்கு பிறகு கிளாசிக் டச் தான்.

  • சமகாலத் தமிழிலக்கிய சூழலை எப்படி அவதானிக்கிறீர்கள் ? உங்களுக்கு பிடித்த சமகால எழுத்தாளர்கள் யார் ?

இளைய தலைமுறையினர் வாசிப்புக்குள்ளும், எழுத்திற்குள்ளும் தங்களை விரிவுபடுத்திக்கொண்டதாகப்படுகிறது. அதில் அவர்கள் மேம்போக்காக இல்லாமல் ஆழப் பயணிக்க தயாராக இருக்கின்றனர். 

 அனைவரையும் வாசிக்கிறேன். ஆகையால் ஆதர்சம் நாளுக்கு நாள் மாறும். 

  • உங்களின் அடுத்த புனைவு முயற்சிகள் குறித்து.

ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு விருதுக்கு முன்னரே பதிப்பகத்தாரிடம் அளிக்கப்பட்டுவிட்டது. திரைக்கதை சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன். அது படமாக மாறும் பட்சத்தில் மகிழ்வேன். 

***

கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பிறந்தவர். தனியார் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரை என்று தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர். மின்னஞ்சல் முகவரி : krishik10@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here