Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்நறுமுகை தேவி கவிதைகள்

நறுமுகை தேவி கவிதைகள்

யாரிடம் கோபித்துக்கொண்டாலும் போய்ச் சேர ஒரு வீடு இருந்தது
எனக்கான உணவை எடுத்து வைத்துக் காத்திருந்த சமையலறை இருந்தது 
உணவு உண்ணாமல் வைராக்கியமாகக் கிடக்க தனியாய் ஒரு அறை இருந்தது 
யாரும் வந்து எழுப்பாததொரு நீண்ட உறக்கம் இருந்தது 
எல்லாவற்றுக்கும் மேலாய் அப்போதெல்லாம் என்னைச் சகித்துக் கொள்ள என் அம்மா இருந்தாள்!

*

அவள் தினம் ஒரு காதலை தன் நெஞ்சுக்குள் சொருகிக் கொண்டாள் 
சிகப்பு 
வெள்ளை 
ஆரஞ்சு 
இளம் சிவப்பு 
ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு காதல் 
ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வாசம்  
அவளுக்குத் தேவை தினம் ஒரு மலர்ச்சி 
தினம் ஒரு காதலைச் சூடிக்கொள்ளும் அவள் இரவானதும் அவைகளைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் வீசுவாள்
ஏற்றுக்கொள்ள யாரும் இல்லாத அவளது காதல் நாட்களை நகர்த்திக் கொண்டே இருந்தது
பருவங்கள் மாறின 
பூக்கள் நிறம் இழந்தன
மணத்தையும் இழந்தன
காதலை கழற்றிக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் வீசிக் கொண்டிருந்த அவள் ஒரு நாள் தானே அந்த குப்பை தொட்டிக்குள் போய் விழுந்து கொண்டாள்

*

எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவுக்கு பேச்சு மொழி இரண்டு தெரியும்
இரண்டிலும் அழகாகப் பேசுவாள் 
நாங்கள் வளர்ந்த பிறகு அவளுடன் பேச நேரம் இருக்கவில்லை 
அவளும் அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருப்பாள் 
தொலைபேசி வந்த காலங்களில் போன் கூடப் பண்ணவில்லை என்று கோபித்துக் கொண்டு
நான் செத்த பிறகு தெரியும் எனது அருமை என்பாள்
சுகவீனத்தில் விழுந்த பிறகு அவள் மொழிகளை மறந்து போனாள்
யாருடனும் பேச அவளுக்குப்
பிடிக்கவில்லை 
நாங்கள் அருகிலேயே இருந்தோம்
எங்கள் மொழிகளை 
அல்லது 
எங்களை அவள் நிராகரித்தாள்

எப்போதும் ரேடியோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும் அவளுக்கு 
நிறைய அலைவரிசைகள் வந்த பிறகு அவளுக்கு ரெயின்போ எஃப் எம் ஐ விட சூரியன் எஃப் எம் பிடித்திருந்தது 
பேசிட்டே இருப்பாங்க இல்ல அது போடு என்று கண்மூடிக் கொள்வாள்
உண்மை தான்…
இப்போது புரிகிறது அம்மாவின் அருமை!!

நறுமுகை தேவி – கோவையில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காலத்தால் களவு போனவை எனும் கட்டுரைத் தொகுப்பும், சாத்தான்களின் அந்தப்புரம் & மலையடி வாரத்தில் பிறந்தவள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். மின்னஞ்சல்: narumugai99@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here