Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்காந்தியப் பொருளியலின் செயல் திறன்

காந்தியப் பொருளியலின் செயல் திறன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

ண்மையில், தொலைத்தொடர்புத் துறையின் முன்னோடிகளுள் ஒருவரும்,  இந்தியத் தொழில்நுட்ப மிஷனின் முன்னாள் தலைவருமான சாம் பிட்ரோடாவுடன் ஒரு காணொளி நிகழ்வில் கலந்து கொண்டேன். அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான துளசிராஜ் ரவில்லா, அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் சாதனைகளைப் பற்றிய ஒரு விளக்கக் காட்சியைக் (Presentation) கொடுத்துக் கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த நண்பர் ஷான் ஷங்கரன், என்னிடம், ‘அரவிந்த் மருத்துவக் குழுமத்தை எப்படி காந்தியப் பொருளியல் வழி நடக்கும் தொழில் என வகைப்படுத்துகிறீர்கள்?’, எனக் கேட்டார்.

துளசிராஜ், தனது விளக்கக் காட்சியை, மதுரையில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாம்பவன் என்னும் ஒரு மனிதருக்குப் பார்வையின்மையினால் ஏற்படும் பிரச்சினையுடன் தொடங்கியிருந்தார். சாம்பவனுக்கு கண்ணில் புரை.  அர்விந்த் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். அதற்கு ஒருவாரம் பிடிக்கும். ஆனால், மருத்துவமனைக்குப் பயணம் செய்து, அங்கே ஒரு வாரம் தங்கியிருப்பதற்கு ஆகும் செலவுக்குக் கூட அவரிடம் பணம் இல்லை. ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கினால், அவருக்குப் பிச்சை எடுப்பதன் வழியே கிடைக்கும் வருமானமும் நின்று விடும். இந்த நிலையில் இருக்கும் சாம்பவன் போன்றோருக்கும் கண் பார்வை கிடைக்க வேண்டும் என ஒரு வழியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது அர்விந்த்.  சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் கடைநிலையில் இருப்பவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே காந்தியப் பொருளியலின் அடிப்படை. அதை முன்னிறுத்தி செயல்படுவதால், இது காந்தியப் பொருளியல் வழி செயல்படும் வணிக நிறுவனம்’, எனப் பதில் சொன்னேன்.

அந்த நிகழ்வின் இறுதியில், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார நிபுணர்களில் ஒருவரான பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் அமலோற்பவநாதன் ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். 

’இன்று இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், மருத்துவத் துறையில் பன்னாட்டு மருத்துவக் குழுமங்களும், நிதி முதலீடுகளும் வேகமாக நுழைந்து வருகின்றார்கள். ஆனால், கண் மருத்துவத் துறையில் எவரும் நுழைய முடியவில்லை. இதற்குக் காரணம், தன் செயல் திறன் வழியே, அர்விந்த் மருத்துவக் குழுமம், உயர் தரக் கண் சிகிச்சையை மிகவும் குறைவான கட்டணம் வழியே வழங்கி வருவதுதான். இதனால், இத்துறையில் பெரிதான லாபமில்லை. எனவே வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை’.

காந்தியத் தொழில் முறையின் செயல் திறனுக்கு இதுதான் மிகப் பெரும் பாராட்டுச் சான்றிதழ்.

எனக்கு சில ஆண்டுகள் முன்பு, அமுல் மேலாண் இயக்குநர் ஆர்.எஸ்.சோதியுடன் நிகழ்த்திய நேர்காணல் நினைவுக்கு வந்தது. அதில் அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார். 

பால்தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்திருந்த ஒரு பன்னாட்டு நிறுவனம், சில ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட்ட பின்னர், இங்கே அவர்களால் லாபகரமாக இயங்க முடியாது என இந்தியச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள். அவரை ஒரு கருத்தரங்கில் சந்தித்த சோதி, அவரிடம், ‘ஏன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறீர்கள்?’, எனக் கேட்டாராம். 

அதற்கு அந்தப் பன்னாட்டுத் தொழில்குழுமத்தின் தலைவர், ‘இந்தியாவின் பால் துறை வணிகச் சங்கிலி மிகவும் செயல் திறன் மிக்க வகையில் இயங்கி வருகிறது. இங்கே எங்களால் போட்டி போட்டு லாபமீட்டுவது மிகவும் கடினம்’, என்று சொன்னாராம்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களுமே மிக முக்கியமான அவதானிப்புகள்.

வழக்கமான முதலாளித்துவத் தொழில் மாதிரி என்பது, உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் பொருள் அல்லது சேவைகளை, கொள்முதல் அல்லது ஒருங்கிணைப்பின் மூலம் பெற்று, அதை நுகர்வோருக்கு விற்று, அதன் வழியே லாபம் ஈட்டுவதாகும். இதில் லாபம் என்பது உழைப்பாளர்கள்/ உற்பத்தியாளர்கள் உருவாக்கும் உபரி மதிப்பினால் வருவது. அந்த உபரி மதிப்பு, நுகர்வோர் தரும் விலையின் வழி கிடைப்பது.

ஆனால், காந்தியப் பொருளியல் வழிநடக்கும் தொழில் மாதிரியில், உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் தொழில் முனைவோர் என்னும் இடைத்தரகர்கள் இருப்பதில்லை.  எனவே, வணிகச் சங்கிலியில், உற்பத்திக்கும், நுகர்வுக்கும் தொடர்பில்லாத முதலீட்டாளர் எடுத்துக் கொள்ளும் லாபம் என்னும் உபரி இழப்பு தவிர்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தியாளரும், நுகர்வோரும் ஒரு நியாயமான விலையில் சந்தித்து, பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது. 

காந்தியப் பொருளியல் வழி வெற்றிகரமாக நடக்கும் தொழில் துறைகளில், இடைத்தரகர்களும், அவர்களுக்கான லாபம் என்னும் கோட்பாடும் இருப்பதில்லை. எனவே அங்கே இன்னாட்டு, பன்னாட்டுத் தொழில் முதலீடுகள் அதிகம் வருவதில்லை. வந்தாலும் அவை பெரிதும் லாபகரமாக இயங்க முடிவதில்லை.

இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகை 8 கோடி. அங்கே தேசியச் சுகாதாரச் சேவை என்னும் தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது. அது வருடம் சுமார் 5 லட்சம் கண் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.5 கோடி. இங்கே அரவிந்த் என்னும் காந்தியத் தொழில் நிறுவனம் கிட்டத்தட்ட 8 லட்சம் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறது. இரண்டின் சேவைத் தரமும் ஒப்பிடத் தக்கவை. ஆனால், இந்த 8 லட்சம் சிகிச்சைகளைச் செய்ய அர்விந்த் செலவிடும் தொகை, இங்கிலாந்தின் தேசியச் சுகாதாரச் சேவை என்னும் அரசு நிறுவனத்தின் செலவில் நூற்றில் ஒரு பங்குதான். இத்தனைக்கும், இங்கிலாந்து அரசு தேசியச் சுகாதார நிறுவனம் என்பது லாப நோக்கமற்ற ஒரு அரசு நிறுவனம். 

அர்விந்த் குழுமம் கிட்டத்தட்ட 50% சிகிச்சைகளை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்குகிறது. மீதமுள்ள 50% சிகிச்சைகளை, சந்தை விலையில் பாதியில் வழங்குகிறது.  இந்தத் தொழில் மாதிரியில், அரவிந்த் ஈட்டும் வருமானம், தனியார் துறையை விட மிகக் குறைவானது. அந்த வருமானத்துக்குள்ளேயே, தனது செலவுகளைச் செய்து கொண்டாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்குள் அர்விந்த் இயங்குகிறது.

செலவுகளைக் குறைக்க ஒரு முக்கியமான தீர்வு, தனது தொழில் மாதிரியின் செயல்திறனை மேம்படுத்துவது. கண் சிகிச்சை முகாம்கள் வழியே, ஃபோர்ட் உருவாக்கிய அசெம்பிளி லைன் உற்பத்தி முறை போல, தனது மருத்துவமனை தொடர்ந்து தனது முழுக் கொள்திறனையும் உபயோகித்துக் கொள்ளும் ஒரு புதிய வழியை உருவாக்கிக் கொண்டது. திட்டமிட்டு நடத்தப்படும் கண் சிகிச்சை முகாம்கள் வழியே, தொடர்ந்து மருத்துவமனைக்கு நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வந்தது அரவிந்த்.  சிகிச்சை செய்யும் மருத்துவரின் செயல்திறனை 400% வரை மேம்படுத்தும் வகையில், மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளில் புத்தாக்கத்தைக் கொண்டு வந்தது. 

கண்புரை சிகிச்சையின் இன்னொரு மிக முக்கியமான செலவு செயற்கை விழித்திரை. பல ஆண்டுகளாக ஒரு சோடி செயற்கை விழித்திரைகளை 200 டாலர் விலையில் இறக்குமதி செய்து வந்த அரவிந்த், ஒரு கட்டத்தில், செயற்கை விழித்திரைகளைத் தானே உற்பத்தி செய்து கொள்ள முடிவெடுத்தது. 

செயற்கை விழித்திரையை உற்பத்தி செய்ய அரவிந்துக்கு ஆன செலவு 2 டாலர் மட்டுமே.  ஒரு சோடி செயற்கை விழித்திரையை தானே உற்பத்தி செய்ததன் மூலம், கண்புரை அறுவை சிகிச்சைக்கான கச்சாப் பொருளின் விலையை அர்விந்த் 99% குறைத்தது. இந்த உற்பத்தியின் உபரி, தனியார் தொழில் முதலீட்டாளருக்குச் செல்லாமல் இருப்பதால், அர்விந்த் தனது சிகிச்சைக்காகும் செலவை வெகுவாகக் குறைக்க முடிந்தது.

கண் அறுவை சிகிச்சைக்காகத் தேவைப்படும் கச்சாப் பொருளின் விலையை 99% குறைத்து, அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்திறனை 400% மேம்படுத்தி, கண் சிகிச்சை முகாம்களைத் தொடர்ந்து நடத்தி, அதன் வழியே மருத்துவமனை அறுவை சிகிச்சைக்குத் தொடர்ந்து நோயாளிகளை அனுப்பி அதன் முழுக் கொள்ளளவையும் உபயோகித்து, அரவிந்த், தனது சிகிச்சைகளுக்கான செலவுகளை வெகுவாகக் குறைத்தது. அர்விந்த், ஏழைகளுக்கான கண் சிகிச்சைகளை இலவசமாகவும், மானிய விலையிலும் தருகிறது. பணம் செலுத்தும் பயனாளிகளுக்கும், சந்தை விலையில் 50% த்தில் சிகிச்சையை வழங்குகிறது.

இப்படி சகாய விலையில் தனது சேவைகளை வழங்கும் அர்விந்தின் லாப சதவீதம் (EBITDA) 39% ஆக உள்ளது

இது எப்படி சாத்தியமாகிறது? சமூகத்தில் கண் மருத்துவம் தேவைப்படும் அனைவருக்கும் தரமான சிகிச்சை, பணம் படைத்தவர், ஏழை என்னும் பாகுபாடுகள் இல்லாமல் கிடைக்க வேண்டும். ஏழைகளினால் சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியாது என்னும் நிலையில், மருத்துவச் சேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டும், அதே சமயத்தில் தரம் குறைந்து விடக் கூடாது. இந்த நோக்கத்தில், அரவிந்த் நிறுவனத்தின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து செயல்படுவதினால், இது சாத்தியமாகிறது. 

இதே துறையில் பெரும் தொழிற்குழுமங்கள் நடத்தும் மருத்துவமனைகள் எப்படி இயங்கி வருகின்றன? இந்தியாவின் மிகப் பெரும் மருத்துவக் குழுமங்களில் ஒன்றான ஒரு குழுமத்தின் லாப சதவீதம் (EBITDA) 12%. அங்கே அறைகளில் தங்கும் அறைகளுக்கான வாடகையே நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை உண்டு. இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலித்தும், ஏன் பெரும் மருத்துவக் குழுமங்களின் லாப சதவீதம் குறைவாக உள்ளது?

ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மிகக் குறைந்த விலையிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளை வழங்கும் அர்விந்த் 39% லாபமீட்டுகையில், அதிகக் கட்டணங்கள் வசூலித்து அதே உலகத்தர மருத்துவச் சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் லாப சதவீதம் ஏன் 12% ஆக இருக்கிறது.

இதில் எந்தத் தொழில்முறை சமூகத்துக்கு அவசியமானது? செயல் திறன் மிக்கது?

இப்போது கூட்டுறவு பால்த் தொழில் மாதிரிக்கு வருவோம்.  1970 ஆம் ஆண்டு, இந்தியாவின் பால் உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருந்தது. வெண்மைப் புரட்சி தொடங்கி 25 ஆண்டுகளில், இந்தியா, 65 மில்லியன் டன் பால் உற்பத்தியைச் செய்து உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உருவெடுத்தது.

வெண்மைப் புரட்சித் திட்டத்தில், இந்தியப் பசு மற்றும் எருமைகளின் உற்பத்தித் திறன் மேம்பட்டது. ஆனாலும், ஐரோப்பிய பசுக்களின் உற்பத்தித் திறனுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பசுக்களின் உற்பத்தித் திறன் மிகக் குறைவுதான். அப்படியானால், இந்த உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா எப்படி உருவானது?

இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதியாக உருவான அமுல் பால்க் கூட்டுறவு, பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தொடங்கப்பட வில்லை. அது உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அந்தப் பால் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்னும் நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.

சிறு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் எல்லாப் பாலையும் அவர்களே நேரடியாகக் கொண்டு சென்று நுகர்வோரின் வீட்டுக்கு தர முடியாது. எனவே, அவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கினார்கள்.  அந்த நிறுவனம் சிறு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்தார்கள். 

உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் லாபநோக்கம் கொண்ட இடைத் தரகர்கள் இல்லாததால், உற்பத்தியாளர்களும், நுகர்வோரும், இருவருக்கும் கட்டுபடியாகும் விலையில் சந்தித்துக் கொண்டார்கள். 

தாங்கள் உற்பத்தி செய்யும் பால் சீராகக் கொள்முதல் செய்யப்படும் என்னும் நம்பிக்கை வந்த போது, உழவர்கள் கால்நடை வளர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். உற்பத்தி பெருகியது. குறைந்த விலையில் பால் கிடைத்ததால் நுகர்வும் பெருகியது.  நுகர்வும், உற்பத்தியும் நேரடியான, எந்தவித லாப நோக்கும் இல்லாத வணிகச் சங்கிலியின் மூலம் இணைக்கப்பட, இந்தியப் பால் உற்பத்தி, தங்கு தடையின்றிப் பெருகியது. உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளாராக இந்தியா உருவெடுத்தது.

இந்தியப் பசுக்களின் செயல் திறன் (பால் உற்பத்தித் திறன்) ஐரோப்பியப் பசுக்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கலாம். ஆனால், பால் கூட்டுறவு உற்பத்திச் சங்கிலி, உற்பத்தியாளர்களுக்கு ஒரு தொடர்ந்த வருமானத்தை அளித்து வந்தது. வருடம் 2-3 முறை மட்டுமே பயிர்கள் மூலம் வருமானம் பெற்று வந்த உழவர்கள், பால் உற்பத்தி வழியே வாரா வாரம் வருமானம் என்னும் மேம்பட்ட நிலையை அடைந்தனர். இங்கே பசுக்களின் செயல் திறன் குறைவாக இருந்தாலும், பால் உற்பத்திக் கூட்டுறவுத் தொழில் முறை செயல் திறன் மிக்க ஒன்றாக இருந்தது. 

இந்த இரண்டு துறைகளிலுமே, அதீத லாப நோக்கம் கொண்ட தனியார் துறை தவிர்க்கப்பட்டதன், மூலம், அதீதச் செயல்திறன் கொண்ட வணிகச் சங்கிலி உருவாகியுள்ளது. இத்துறைகளில், பொருளும், சேவையும், உலகத் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நுகர்வோருக்கு மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன.  எனவேதான், இந்தத் தொழில்களில், பன்னாட்டு முதலீடுகள் அதிகம் வருவதில்லை. வந்தாலும், அவற்றின் செயல்பாடுகளை, லாப சதவீதத்தை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளே முதன்மையாக தீர்மானிக்கின்றன

உலகின் மிக முக்கியமான வேளாண் சிந்தனையாளரான பீட்டர் ட்ரக்கர், ஒரு நிறுவனத்தின் நோக்கம் என்பது, அது தனது நுகர்வோரின் தேவைகளை நன்றாக அறிந்து கொண்டு, அவற்றை, குறைவான விலையில், சரியாக நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அதில் வரும் லாபம் என்பது, அந்த நிறுவனம், அந்தச் செயலை மிகவும் செயல்திறனோடு செய்து வருவதன் அறிகுறி என்கிறார்.

அவ்வகையில், பால், சுகாதாரம் போன்ற துறைகளில், தனியார் துறை நிறுவனங்களை விட அதீதச் செயல்திறனுடன் இயங்கிவரும் அமுல் மற்றும் அரவிந்த் நிறுவனங்கள் காந்தியப் பொருளியல் கோட்பாடுகளின் வெற்றிகரமான நடைமுறை உதாரணங்கள். 

***

பாலசுப்ரமணியம் முத்துசாமி: தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு ஊரகப் பகுதியைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர். மின்னஞ்சல்: arunbala9866@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here