Sunday, May 3, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்நெசவென இழுபடும் வாழ்வு

நெசவென இழுபடும் வாழ்வு

கா.சிவா

 ழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் முதல் நாவல் “அம்மன் நெசவு”. இந்நாவல் வெளிவந்து இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இவரது பிற நாவல்களான மணற்கடிகை, மனைமாட்சி, தீர்த்த யாத்திரை மற்றும் வேங்கை வனம் ஆகியவற்றை ஏற்கனவே வாசித்தபின் முதல் நாவலை வாசிப்பது புதுவித உணர்வை அளிக்கிறது. 

  எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் பிற நாவல்கள் பக்க அளவில் பெருநாவல்கள் எனக் கூறத்தக்கவை. அம்மன் நெசவு நூல் பக்க அளவில் சிறியதாக இருப்பினும் அது பேசும் களம் பெருநாவல்களுக்கு சற்றும் குறைவானதில்லை. 

 அந்நியர்களின் படையெடுப்பால் உஜ்ஜயினியிலிருந்து துங்கபத்திரை நதிக்கரையில் சிலகாலம் வாழ்ந்து அங்கிருந்தும் கிளம்பி திருப்பூர் அருகே தங்கி வாழ்ந்த நெசவாளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்நாவல். அவர்கள் தங்களுடன் கொண்டுவரும் அம்மனின் பார்வை ஒரு குடும்பத்திலிருந்து விலகி இன்னொரு குடும்பத்தின்மேல் படுவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்வதாகவும் கொள்ளலாம். 

    கிராமங்களில் சற்று மேல்கீழ் என்ற சமூக அடுக்கில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கும் இரண்டு சமூகத்தினரிடையே ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட வஞ்சத்தினால் ஏற்படுத்தும் சிறு நெருப்பு, பெருந்தீயாக கொழுந்துவிட்டெரிகிறது. அதன் முடிவில் கீழ் நிலையில் இருப்பவர்கள் நிம்மதியான வாழ்வைத்தேடி வேறு இடத்தை நோக்கிச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நாவலின் நிகழ்வை மிக எளிமையாக இப்படிச் சொல்லலாம். ஆனால் ஆசிரியர் காட்டும் வாழ்வு மிக நுணுக்கமானதும் விரிவானதுமாகும். 

  எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் தன் பெரு நாவல்களில் எல்லா நிகழ்வுகளையும் முழுமையாக காட்டிவிடுகிறார். அதில் இருக்கும் முரணையோ அபத்தத்தையோ கண்டு வாசகன் திகைப்படைவான். ஆனால் முதல் நாவலான அம்மன் நெசவு நாவலில் கோட்டோவியம்போல சம்பவங்களை கோடிட்டு காட்டிவிட்டு நகர்கிறார். அதற்கேற்பவே அத்தியாயங்களும் சில பக்கங்களுக்குள் உள்ளன. இது, தேவையில்லாத ஒரு சொல்கூட இருக்கக்கூடாது என்று வரையறைக்கு உட்பட்ட நவீனத்துவ நாவல்களின் கச்சிதமான வடிவம். வாசகன் கோட்டோவியத்தை தன் கற்பனையால் விரிவாக்கிக் கொள்ளவேண்டும். இதில் கற்பனை வளம் அதிகமாக உள்ளவன் நிகழ்வினைக் கண்டுணர்வதனால் ஏற்படும் திகைப்பையும் சற்று குறைவாக உள்ளவன் துண்டு துண்டான நாவலின் கட்டமைப்பைக் கண்டே திகைப்படையவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளத் தெரிந்த இலக்கிய வாசகனுக்கு எந்த இடர்பாடும் இருக்காது. 

  நஞ்சப்பன் நெய்யும் ஒரு புடவை பிரகாசமும் அழகும் மிகுந்து தெய்வாம்சக் கலையைக் கொண்டிருக்கிறது. இதனை, மூன்று தலைமுறையாக பூசாரியப்பன் குடும்பத்தில் குடிகொண்டிருக்கும் சௌடேஸ்வரி அம்மன் நஞ்சப்பன் இல்லத்திற்கு குடிபெயர விரும்புகிறாள் என்பதாக ஊரார் முடிவு செய்கிறார்கள். அம்மனை உரிய சடங்குகளுடன் இல்லம் மாற்றுகிறார்கள். இம்முடிவு பூசாரியப்பன் குடும்பத்திற்கு வருத்தத்தை அளிக்கிறது. அதுவும் இளைய தலைமுறையை சேர்ந்த வெள்ளிங்கிரியின் மனதில் ஊர் மீதே வன்மத்தையும் காழ்ப்பையும் ஏற்படுத்துகிறது.

 சாமிக்கு சேவைகள் சரியாக செய்யவேண்டுமே தங்களால் முடியுமா என்ற சந்தேகத்தால் நஞ்சப்பனுக்கும் அவன் மனைவி உண்ணம்மாளுக்கும் முதலில் தயக்கமும் அச்சமுமே தோன்றுகிறது. ஆனால், ஊர் முடிவு செய்ததும் சாமி தங்கள் வீட்டில் குடியேறப் போகிறாள் என்கிற பெருமிதம் அவர்களுக்குத் தோன்றிவிடுகிறது. அவளின் முடிவு அதென்றால் எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொள்வாள் என்ற சரணாகதி அதற்கு உதவுகிறது. 

  பூசாரியப்பனின் மகன் வெள்ளிங்கிரி, அடுத்த சமூகத்தைச் சேர்ந்த இவன் குணத்தை ஒத்த மயில்சாமியோடு இணைந்து நெசவாளர்களின் வாழ்விற்கு அடுத்தடுத்து இன்னல்களை அளிக்கிறான். எதிர்பாராத பலவித இடையூறுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நஞ்சப்பனும் ஊர்க்காரர்களும் கடும் பிரயத்தனப்படுகிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா, அவர்கள் எடுத்த முடிவென்ன என்பதை நாவல் சொல்கிறது. 

  முக்கியமான பிரச்சனையாக நீர் உள்ளது. இதுவரை நீர் எடுத்துவந்த கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாதென தடுக்கிறார்கள். எதிர்த் தரப்பிலும் மனிதநேயத்தோடு இருக்கும் வெளாந்தோட்டக்காரர் தனது கிணற்று நீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார். இருந்தபோதும் நிரந்தரத் தீர்வு வேண்டுமென நெசவாளர்கள் தங்களுக்கென தனியாக கிணறு வெட்ட முயற்சிகள் எடுக்கிறார்கள். அதனை தடுப்பதற்கு எதிர் தரப்பு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இந்தக் காட்சிகள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. 

 மேல் தரப்பு ஒடுக்க நினைத்து காய்களை நகர்த்துவதும் கீழ்தரப்பு தற்காத்துக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்வதும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று மேல் தரப்பில் யாராவது ஒருவர் கீழ்தரப்பின் நியாயங்களை புரிந்தவராகவும் அதற்கு உதவுபவராகவும் இருக்கிறார் என்பது. இராமாயணத்தில் வீடணனும் மகாபாரதத்தில் விதுரரும் இவ்வகையினரின் முன்னோடிகள். உலகை இதுவரை காத்துவரும் அறம் என்பது வெளாந்தோட்டக்காரர் போன்றவர்கள் வழியாகவே கடத்தப்பட்டு நீடித்து வருகிறது என நானும் நம்புகிறேன்.

 எம். கோபாலகிருஷ்ணன் சில வாக்கியங்களில் விரிவான செய்திகளைக் கூறிவிடுகிறார். உதாரணமாக ஒரு அத்தியாயத்தின் இறுதி, கோவில் பந்தலில் நெருப்பு பற்றிக்கொள்வதோடு முடிகிறது. அடுத்த அத்தியாயத்தில் வேறு விவரணைகளுப்பின் இடையே “பந்தல் நெருப்பு பரவுவதற்குள் நல்ல வேளையாய் அய்யாவுவின் கூச்சலில் ஓடிவந்தவர்கள் மணலை இறைத்து அணைத்துவிட்டார்கள்” எனக் கூறிவிட்டு வேறு விசயத்திற்கு செல்கிறது. 

 இது எம். கோபாலகிருஷ்ணனின் ஒரு உத்தியாகவே நாவல் முழுக்க உள்ளது. வாசிக்கும்போது மனம் முன்பின்னாக சென்று வருவது சுவாரசியமாகவே உள்ளது. ஆயினும் சம்பவத்தின் போது நிகழ்வதை வாசகன் ஆழ்ந்து உணருமாறு விவரிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துச் செல்வதாகவும் தோன்றுகிறது. இதனை ஆசிரியரும் உணர்ந்தே அடுத்தடுத்த நாவல்களில் விரிவாக எழுதிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் எனவும் கொள்ளலாம். 

  அம்மன் நெசவு நாவலை வாசிக்கும்போது எனக்கு தோன்றிக் கொண்டேயிருந்த ஒன்று இந்த அம்மன் தன்னையே நம்பி நலிந்து வாழும் இவர்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா என்று. அற்புதமாகக்கூட வேண்டாம் இயல்பாக இவர்களுக்கு சாதகமாக ஏதையாவது நிகழ்த்தக் கூடாதா என மனம் தவித்தது. ஆனால் அம்மனுக்கு கருணையில்லை. தம்மக்கள் படும் துயரங்களை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கிறது. அவர்களும் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள் தாங்கள் செல்லுமிடத்திற்கெல்லாம் தூக்கிச் சுமந்து செல்கிறார்கள்.

 இதில் எழும் கேள்வி தங்களுக்கு எதையுமே செய்யாத அம்மனை எதற்கு தூக்கிச் செல்லவேண்டும், பூஜை செய்ய வேண்டும், விழா எடுக்கவேண்டும். எத்தனை யோசித்தாலும் பொருத்தமான பதில் கிடைக்கவில்லை. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் அம்மன், நாங்கள் வணங்குவோம் என்பது அவர்களுடைய உள்ளுணர்வின் வழிகாட்டல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

 ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, இந்நாவல் முப்பது ஆண்டுகளுக்குமுன் தமிழக கிராமங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சமூகத்திற்கிடையே நிகழ்ந்த மோதல்களை காட்டுவதாகக் கொள்ளலாம். கீழிருப்பவர்கள் மேலே வர எத்தனிப்பதும், மேலிருப்பவர்கள் அவர்களைத் தடுத்து கீழேயே வைத்திருக்க துடிப்பதும் உலகம் தொடங்கிய காலம் தொட்டு உலகமெங்கும் நிகழ்வதுதான். இந்தப் பொதுத்தன்மையே நாவலை மிகச் சிறப்பானதாக சுவாரசியமானதாக மாற்றுகிறது. 

 பூத்துக் குலுங்கும் மரத்தின் மலர்களை முகர்ந்து ரசித்த பிறகு அடித்தண்டை ஆராயும் முயற்சி இது. அம்மன் நெசவு எனும் அடித்தண்டு மிகப் பலமானதாக உள்ளதால்தான் மனைமாட்சி, வேங்கை வனம் போன்ற அழகிய வாசமுள்ள பிரமாண்டமான மலர்கள் தோன்றுகின்றன என்பதை உணர்கிறேன். 

  வெளியாகவுள்ள எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் “மனையறம்” நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  

***

கா. சிவா: சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவலாங்குடியில் பிறந்தவர். தற்போது சென்னையருகே உள்ள ஆவடியில் வசிக்கிறார். விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி, ஆழ்தலும் மிதத்தலும் ஆகிய நான்கு சிறுகதை தொகுப்புகளும் “கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு” எனும் கவிதைத் தொகுப்பும் “தண்தழல்” எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். சரஸ்துதி எனும் நூல் தற்போது வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here