மாஜிதா
லண்டன் பிளக் பிரைர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கமாக திரும்புகையில் தேஷான் வெற்றுப் புன்னகையுடன் நின்றிருந்தான். சட்டென்று ஜாக்கெட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை எடுத்து நேரத்தினை உறுதி செய்துகொண்டதும் மனதில் பற்றியிருந்த பதற்றம் கரைந்து சென்றது. தேஷான் போகலாம் என்பதுபோல் தலையை அசைத்து ரயில் நிலையத்தினைக் கடக்கும் இடது பக்க பாதை வழியாக ஸெளத் பாங்க் நிலையத்தினை நோக்கி நடந்தான். நான் எவ்வித சலனமுமின்றி அவனது கட்டளைக்கு அடிபணிபவன்போல் பின்தொடர்ந்தேன்.
தேஷான் என்னுடைய ஒரெயொரு நண்பன். ஆரம்பப் பாடசாலையிலிருந்து தொடங்கிய சினேகிதம் பின்னர் பியானோ வகுப்பு, மெட்ஸ் கிளப் என அவனுக்கும் எனக்கும் ஒரே விருப்புக்கள். வகுப்பறையில் குழப்பம் விளைவிக்கும் மாணவர்கள் பற்றிய கணிப்பீடு எனக்கும் தேஷானுக்கும் ஒரே தரத்தில் இருந்தது. கவிதை எழுதுவதில் மரபுக்கவிதை மட்டும் தான் என்பதை நானும் அவனும் கராறாகவே கடைப்பிடித்தோம். எங்களது பிறந்த நாள் பரிசுகளாக மைக்கல் ரோஸனை பரிமாறிக் கொண்டோம். பின்னர் உயர்தரம், பல்கலைக் கழகம் என நாங்கள் இருவரும் ஒரே கோட்டில் பயணித்ததால் அந்த நட்பு நீடித்தது. நடுவே தேஷானின் பெற்றோரிடையே ஏற்பட்ட விவாகரத்து அதனைத் தொடர்ந்து அவனது அம்மா சொந்த நாடான கென்யாவிற்கு சென்றமை என்னுடைய குடும்பத்துடனும் தேஷானுக்கு நெருக்கம் ஏற்பட வாய்ப்பளித்தது. நான் மென்மையான செயற்பாட்டு ஆட்டிஸம் உடையவன் என்று அறியப்பட்டவன், சில விடயங்களில் என்னால் தனித்து இயங்க முடியாத சந்தர்ப்பங்களில் தேஷான் பின்னால் நிற்பான். என்னையும் மீறி எழும் கோபங்கள் அவனுக்கு பொருட்டேயல்ல. எப்போதும் அரவணைக்கும் கரங்கள் தேஷானிடம் மட்டுமே உண்டு.
நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சாட்சியங்கள் முக்கியமானவை. நான் கூறவிருக்கும் வாக்கு மூலங்கள் எனது வழக்கின் மைல் கல். அவை சம்பந்தமாக எனது சட்டத்தரணி லூயிஸ் ஏற்கனவே என்னுடன் உரையாடி ஆவணங்களை தயாரித்து விட்டார். மருத்துவர்கள், உளவளவாளர்கள், எல்லோரும் எனக்கு மிகவும் கவனமாக சிகிச்சை அளித்து வருகின்றார்கள். நான் வேலை செய்யும் நிறுவனத்தின் சில ஊழியர்கள் என்னுடன் நெருக்கமாக உள்ளார்கள். என்னுடைய பெயரின் மீது ஊடகங்களின் கண்கள் முற்றுகையிட்ட வண்ணமேயுள்ளன. ஆதரவாக இன்ஸ்டகிராம் முழுவதும் ஒரே முழக்கங்கள். எல்லாவற்றினையும் ஒருங்கிணைப்பவன் தேஷான் தான். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த வழக்கு சார்ந்த சம்பவங்கள் என்னுடைய மனநிலையை மிகவும் பாதித்து வருகின்றன. ஏதாவது ஆபத்து நடந்து விடலாம் என்ற பய உணர்ச்சி துரத்தி வருகின்றது. ஆகவே எதற்கும் ஒரு தடவை மிஸ்ட்டர் லூயிஸை சந்தித்து வெள்ளோட்டம் போல் ஆவணங்களை சரி பார்ப்போம் என்ற திட்டத்தினை தேஷான் முன் வைத்தான். மிஸ்டர் லூயிஸின் காரியாலயத்தில் சந்திப்பதை விட சௌத் பேங்க் செண்டரும் இதனைச் சூழ்ந்துள்ள தேம்ஸ் நதியும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த சந்திப்பு இங்கே திட்டமிடப்பட்டது.
நானும் தேஷானும் பிளக் பிறைர் ரயில் நிலையத்தினை கடக்கையில் வலது பக்கமாக தேம்ஸ் நதி கோடை வறட்சியில் தளர்ந்து மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. கனமற்ற காற்று நதியில் படர்ந்திருந்தால் அலைகள் மேலே எழுவதற்குரிய சக்தியை இழந்து தள்ளாடின. நதியின் இரு பக்கச் சுவர்களின் கொட்டுக்களிலும் பாசி படர்ந்து செயலற்றுப் போயிருந்தன. நீரில் புதைந்திருந்த பிளக் பிரைர் பாலத்தின் சிவப்பு நிறத்தூண்கள் சூரிய வெளிச்சத்தில் ஒளி பெற்று அரண்மனைக் கோபுரங்கள் போல் எழுந்து நின்றன.
நடை பாதையில் ஒரு இளைஞன் துண்டொன்றை விரித்து அமர்ந்து வயலின் இசைத்துக் கொண்டிருந்தான். சிலர் நாணயங்களை அவனுக்கு முன்னால் வீசிச் சென்றார்கள்.
விஞ்சானி குணே….விஞ்சானி குணே….
பதுங்கியிருந்து அம்பு எய்வது போல் சட்டென்று எனது பெயர் முக்கியத்துவம் தொனித்த குரலில் ரகசியமாய் அவ்விடத்தில் விரைந்து வந்தது. நான் அடிபட்டவன் போல் விம் என்ற இதய ஒலியுடன் உடனே திரும்பிப் பார்த்தேன். அவர்கள் என்னுடைய வயதை ஒத்தவர்கள். சிலரின் முகங்களில் வெவேறு வடிவிலான அனுதாப அலை, அதில் ஒரு பெண் என்னை நோக்கி பச்சாதாபத்துடன் உதட்டை விரித்தாள். இன்னுமொருத்தி அவளுக்குப் பக்கத்தில் நின்றவனிடம் குணே … என்று உச்சரித்து ஏதோ ரகசியமாய் கிசு கிசுத்தாள். எனது உடல் முழுவதும் வலியில் உழல்வைத்து போல் நடுக்கமுற்றது. கண்கள் நிலைகொள்ளாமல் தவித்தன. அங்கே நின்றிருந்த அனைவரையும் நோக்கி நான் குணே அல்ல குணேரிஸ் என்று கூறி கத்த வேண்டும் போல் இருந்ததது. பக்கத்தில் நின்றிருந்த தேசான் உடனே எனது தோள்பட்டையை பிடித்து அவனது பக்கம் என்னைத் திருப்பினான். பின்னர் அவனது கைகளால் என்னுடைய கைகளைச் சேர்த்து இணைத்து மசாஜ் செய்வது போல் உருவினான். அப்பொழுது அவனது கைகளில் இருந்த வெம்மை என்னுடைய நரம்புகளுக்குள் மெது மெதுவாக பாய்ந்து செல்ல என்னுடைய பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இளகியது. சில நிமிடங்கள் கழித்து நான் அமைதியானேன். “குணேரிஸ்! எல்லாம் சரியாகி விடும்,வா, நேரமாகுது”, தேசான் அழுத்தமாகக் கூறியதும் என்னுடைய நிதானம் பலம் பெற்றது. அப்பா என்னை அழைக்கும் பொழுது அவருடைய குரலில் தவழ்ந்து வரும் கனிவும் உறுதியும் தேசானில் நுழைந்து விட்டதைப் போல் ஒரு கணம் உணர்ந்தேன். நான் மீண்டும் உயிர் பெற்றவன் போல் கண்களை உயர்த்திப் பார்த்தேன். தேசான் வா என்று மீண்டும் கூறி புன்னகைத்தான். நான் பெருமூச்சு விட்டபடி நடந்தேன்.
குணேரிஸ்! இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு உன் பெயரின் பின்னால் இருக்கும் மன சஞ்சலங்கள் தெரியாது. குணேரிஸ் என்று உச்சரிப்பதை விட குணே என்று சொல்வது அவர்களுக்கு இலகுவாக உள்ளது. இந்தக் காரணத்தினை ஏற்றுக் கொள்ள உனக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுதைய நிலையில் கலங்கி விடாதே. மனதை கொஞ்சம் திடமாக வைத்துக் கொள்ள முயற்சி செய். அது இருக்கட்டும், உனது “zero 2” நல்ல விற்பனையில் இருக்குதல்லவா? சார்ள்ஸ் ஸீபின் zeroவை விட, ராயல்டீ கிடைக்கும் பொழுது என்ன செய்வதாக திட்டமிட்டிருக்கின்றாய்? ஏதாவது யோசித்துப் பார்த்தாயா? தேசான் என்னைத் திசை திருப்புவதற்காக முயன்று கொண்டிருந்தான். பார்க்கலாம். இன்னும் முடிவில்லை ஏதாவது தொண்டு நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்க வேண்டும் என்று அம்மா கூறுகின்றாள். அந்த உரையாடலுக்குள் செல்ல வேண்டுமென நினைத்தாலும் மனம் அதுவே செல்வது போல் குணே, குணேரிஸ் என்ற இரு சொற்களையும் அரற்றத் தொடங்கியது. அந்த நாட்களில் அம்மா அப்பா இருவரினதும் பலமும் பலவீனமுமாக இந்த இரண்டு சொற்களும் அவர்கள் இருவரையும் ஆட்சி செய்தன.
நான் பத்து வயதாக இருக்கையில் எனது பெற்றோரின் சொந்த நாடான இலங்கைக்குச் சென்றிருந்தோம். அம்மா பிறந்த ஊரான கண்டியின் தலதா மாளிகையில் அவளது பெற்றோர் வசித்து வந்தனர். அம்மா வளவ் என்ற உயர் சாதியைச் சேர்ந்தவள். அப்பா ஹேன எனும் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அம்மாவின் பெற்றோர் விரும்பவில்லை. தாத்தாவும் பாட்டியும் என்னை முதன் முறையாக சந்திக்கையில் குணே என்று செல்லமாக அழைத்தார்கள். அவர்கள் என்னை அப்படி அழைப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குணே என்று கூறும் பொழுது உடலை இரண்டாக வெட்டுவது போல் இருந்தது.
ஒரு தடவை நான், தாத்தா பாட்டியுடன் தலதா மாளிகாவிற்குச் சென்றிருக்கையில், குணே! இது நமது வம்சத்தின் மிகப் புனிதமான இடம், நீ பெரியவன் ஆனதும் நமது கிராமத்திற்கே வந்து விட வேண்டும். நமது குலத்தின் பெயரை பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கலானார். நான் ஆத்திரம் தாங்காது என்னுடைய பெயர் குணே அல்ல. குணேரிஸ் என்று அவர்கள் முன் சத்தமாக கூறி அழுதேன். அங்கே நின்றிருந்த அனைவரின் கண்களும் என்னை நோக்கித் தாவின. தாத்தாவுக்கு என் மீது கோபம் பொங்கி எழுந்தது. இவனும் இவனுடைய அப்பா மாதிரித்தான் இருக்கான் என்று கூறி என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றார். பாட்டி அமைதியாக என்னை அவளது மடியில் உட்கார வைத்து எனது தலையைக் கோதி நான் பிறந்து பெயர் சூட்டுகையில் தாத்தா, ரஸனாயக என்ற தனது குலப் பெயரை எனது பெயருடன் இணைக்க வேண்டும் என்று வாதிட்டதாகவும் அதற்கு அப்பா இணங்கவில்லை என்றும் ஆகையால் தான் குணே என்று செல்லமாக அழைப்பதாகக் கூறி சமாதானம் செய்தாள்.
பாட்டியின் கூற்று என்னை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கியது. இந்த விடயத்தினை அறிந்த அப்பா, தாத்தாவுடன் சண்டையிட்ட பின்னர் உடனே என்னை மீண்டும் லண்டனுக்கு அழைத்து வந்தார். பின்னர் நான் இலங்கைக்கு செல்வதை மறுத்தேன். அன்றிலுருந்து தான் அம்மா அப்பா இருவருக்குமிடையில் பூசல் ஆரம்பித்தது.
குணேரிஸ்! மிஸ்டர் லூயிஸ் லாக்கம்பாஸ் முன்னால் நிற்பதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அங்கேயே வெளியில் இருக்கும் மேசையொன்றில் அமரச் சொன்னேன். உனக்கு ஓகே யா, தனது கையடக்கத் தொலைபேசியில் தட்டச்சு செய்தவாறே தேசான் கேட்டான். நான் தேசானை நோக்கி புன்னகைத்தேன்.
அன்று மாலை பி. எப். ஐ மெக்ஸில் Song of the Sea பார்த்த பின்னர் என்னையும் அக்காவையும் அம்மா வழமையைப் போல் லாகம்பாஸிற்கு அழைத்து வந்தாள். அப்பொழுது அம்மாவும் அப்பாவும் பிரிந்து ஐந்து வருடங்களாகிவிட்டிருந்தன. நான் பதின்ம வயதிற்கு அண்மையில் இருந்தேன். மீசை மெல்லிய பென்சில் கீறலைப் போல் அரும்பியிருந்தது. ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை தலையில் சுமந்து திரிவது போல் மன அழுத்தம் மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்த காலம். என்னால் எதிலும் மனதைக் குவிக்க முடியவில்லை. யாருடைய முகத்தினையும் நான் நிமிர்ந்து பார்ப்பதில்லை. அன்றைய கட்டத்தில் நான் ஆட்டிஸம் மதிப்பீட்டுச் செயல் முறையிற்கு உள்ளாகியிருந்தேன். என்னுடைய அக்கா ஏடி. எச். டி. என்ற செயற்பாடு உடையவள். எங்கள் இருவரின் மீதும் அம்மாவின் முழு ஆன்ம சக்தியும் உரமாக வேரூன்றி இருந்தது.
அக்காவிற்கு இயல்பிலேயே ஞாபகமறதி அதிகமாக இருந்தாலும் அவளுக்குள் மாபெரும் கற்பனைத் திறன் ஊற்றெடுத்தது.அக்காவின் கண்களில் தெரியும் சாந்தமான ஒளி, உதடுகளின் அசைவு எல்லாம் குழந்தைத் தன்மையை ஒத்ததாக இருக்கும். ஆனால் யாராவது ஒரு உரையாடலை தொடக்கி வைத்தால் அல்லது அவள் எதையாவது சிந்திக்க முற்பட்டால் தனக்குள் ஒரு மாபெரும் புத்தகப் பையைச் சுமந்து திரிபவள் போல் பேச ஆரம்பித்து விடுவாள். இதுவரை அக்கா எழுதிய நாவல்கள் அனைத்தையும் வாசித்துப் பார்த்தால் அவளுக்குள் இருந்து பிறிதொருத்தி எழுந்து வந்திருப்பது போல் தோன்றும்.
அன்று லாக்கம்பாஸில் எனக்குப் பிடித்த இறால் வறுவலும் ஒலிவ் சாலட்டும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு தேம்ஸ் நதியில் மிதக்கும் சிறிய படகுகளை ஒன்றன் பின் ஒன்றாக நானும் அக்காவும் ஆராயத் தொடங்கினோம். அலைகள் திரண்டு ஆடைகளைப் போல் படகுகளை சூழ்ந்து கொண்டிருந்தன. அக்கா நதியினை கூர்ந்து நோக்கி விட்டு எதையோ பார்த்துவிட்டவள் போல் திடீரென்று அம்மா! Song of the Sea யில் வருகின்ற சிறுமியைப் போல் நானும் செல்கியாக மாறிவிடப் போகிறேன் கண்களை சிமிட்டி பட படவென்று கூறி முடித்தாள். அந்த நேரத்தில் தான் அம்மாவிற்கு செல்கியின் கதையைச் சொல்ல ஆர்வம் எழுந்தது.. ஸ்கொட்லர்ந்தின் வடக்குத் தீவுகளினை நோக்கி அம்மா சரடுகளை விரித்து வைத்தாள். நானும் அக்காவும் அம்மாவின் ஒவ்வொரு சொற்களையும் இணைத்து தனித்தனியாக செல்கியை கனவு கண்டு கொண்டிருந்தோம். அலைகள் எம்பி எம்பிக் குதிக்க செல்கியின் உலகம் என் முன்னால் வந்து நிற்பது போன்று உணர்ந்தேன்.
லாக்கம்பாஸை நெருங்குகையில் இசை தத்தளித்தது. ஸ்பானிய சிவப்பு நிற கார்னேசன் மலர்கள் நிரம்பிய பூச்சாடிகள் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் மண் சாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கலவையான உணவுகளின் வாசனை, கண்ணாடிக்குடுவைகளின் கிளிங் என்ற ஒலிகள், சிரிப்பும் உரையாடலும் என லாக்கம்பாஸ் பர பரப்பாக இருந்தது.
மிஸ்ட்டர் லூயிஸ் இடது பக்கத்தில் இருந்த கடைசி மேசையில் தேம்ஸ் நதியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். எங்களைக் கண்டதும் ஹலோ! வாருங்கள் என்று கூறிச் சிரித்தார். அன்று மிஸ்ட்டார் லூயிஸ் எப்பொழுதும் போல் இல்லாது வெள்ளை நிற கொரொக்கோடைல் டீசேர்ட் அணிந்து சாதாரணமாக வந்திருந்தார். வழமையாக மிஸ்ட்டர் லூயிஸ் அவரது காரியாலயத்தில் இருக்கும் பொழுது பேசுகின்ற கறார்த்தன்மை இப்பொழுது அவருடைய குரலில் இருக்கவில்லை. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அவரிடம் ததும்பிக் கொண்டிருந்தன. நானும் தேசானும் மிஸ்ட்டர் லூயிஸின் இடதும் வலதுமாக அமர்ந்து கொண்டோம். நீங்கள் இருவரும் என்ன சாப்பிடப்போகிறீர்கள் ? முதலில் டோப்பாஸும் பியரும் எடுத்துக் கொள்வோமா ?மிஸ்ட்டர் லூயிஸ் தனது இரு கை விரல்களையும் ஒன்றுடன் ஒன்றாக பிண்ணி முகத்தில் குத்தி வைத்த படி என்னையும் தேசானையும் நோக்கி இயல்பாகக் கேட்டார். மிஸ்ட்டர் லூயிஸின் எளிமையான தோற்றமும் பாசாங்கில்லாத நடத்தையும் மனதில் இருந்த இறுக்கத்தினை தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையை வருடத் தொடங்கியது.
நீங்கள் இருவரும் நேற்றைய பி் பி.ஸி. செய்தியில் ட்ரம்பின் உரையைக் கேட்டீர்களா?
இதனைக் கூறும்பொழுது மிஸ்ட்டர் லூயிஸின் முகத்தில் ஏளனமும் கிளர்ச்சியும் ஒருங்கே கூடியிருந்தது. நானும் தேஷானும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
கர்ப்பிணிகள் தைலனோல் சாப்பிடுவதால் தான் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுதாம். ஆகவே தைலனோல் சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம், எந்த வித நிரூபனமுமின்றி ஒரு அறிக்கையை ட்ரம்ப் வெளியுட்டிருக்கார், முட்டாள்! முட்டாள்! மிஸ்ட்டர் லூயிஸ் வாய் திறந்து உரக்கச் சிரித்தார். ஓஹ் மை கார்ட்! தேசான் மேசையில் கையை அடித்தான். அந்த ஆளை மன நல விடுதியில் நிச்சயம் சேர்க்கணும், இல்லாட்டி அமெரிக்கா நாசமாயிடும் மிஸ்ட்டர் லூயிஸ் எச்சரிக்கை அடைந்தவர் போல் மேலும் தொடர்ந்தார். சில நிமிடங்கள் எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த நேரத்தில் பியர் கோப்பைகள் காலியானது. மிஸ்ட்டர் லூயிஸ் தொண்டையை செருமிக் கொண்டார். வெறுமையாக இருந்த பியர் கோப்பையில் சட்டென்று அவரது கண்கள் நிலை கொண்டிருந்தன. இனித்தான் உரையாடல் சூடு பிடிக்கும் என்பதை ஊகித்துக் கொண்டேன். நாங்கள் அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்தோம். மிஸ்ட்டர் லூயிஸின் சட்டக்குரல் உயிர் பெற்றது.
மிஸ்ட்டர் குணேரிஸ்! நாளைய தவணைக்கு எல்லா தகவல்களும் பக்காவாக உள்ளன. வழக்கின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் விரிவாக குறிப்பிட்டு உங்கள் பக்க நியாயங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். எல்லாவற்றினையும் நீங்கள் மீண்டும் ஒரு முறை அசை போட்டு தொகுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இப்படியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் பக்கம் தான் சம்பவங்கள் செறிவாக இருக்கும். நீங்கள் தேவையற்றது என்று கருதும் விடயம் கூட எங்களுக்கு தேவையானதாக இருக்கும். எனவே தன்னை ஒரு நிலைக்கண்ணாடியாக நினைத்துக் கொண்டு உங்களது தகவல்களை விபரிக்க வேண்டும். அப்பொழுது தான் என்னுடைய விவாதத்தில் பலம் செறிவு கொள்ளும். பின்னர் நானும் நீங்களும் இரு பக்கங்கள். இந்த இரண்டுமே ஒரு வழக்கின் வெற்றியில் முக்கியமானது. ஒரு இசை அரங்கு மாதிரி. ஆகவே என்னுடைய வேலை இசை அமைப்பது. குரல் உங்களுடையது. மிஸ்ட்டர் லூயிஸ் மேலும் தொடர்ந்தார்.. நான் அசையாமல் அவரின் முகத்தினையே பார்த்துக் கொண்டிருந்தேன். மிஸ்ட்டர் லூயிஸின் கண்களும் அவர் பேசிக் கொண்டிருக்கும் சொற்களைப் போல மிகத் துல்லியமாக இருந்தன.
இந்த வழக்கினைப் பொறுத்தவரை எல்லை என்ற ஒன்றே கிடையாது. சில வேளைகளில் நீதிபதி உங்களை பேச அழைத்தால் நீங்கள் தாராளமாக மனம் திறந்து பேசுங்கள். தயக்கம் ஏற்பட்டால் எழுதியும் கொடுக்கலாம். ஏனெனில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும் நீங்கள் தான். உங்களுடைய கூற்றிலிருந்து தான் நீதிபதி ஊகங்களை உரசிப் பார்ப்பார். மானுட சக்தியில் கற்பனையை எல்லைப் படுத்த முடியாது. கற்பனை விரிய விரிய அதன் கேள்விகளும் நீளும். உங்களுடைய மொழியில் கூறுவதாக இருந்தால் பூச்சியத்திலிருந்து இராச்சியம் உருவாகுவது போல என்று வைத்துக் கொள்ளலாம். மிஸ்ட்டர் லூயிஸ் பயில்களை என்னிடம் நீட்டினார்.
ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் சங்க உறுப்பினர்கள் மாலை ஐந்து மணிக்கு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வு மையத்தில் கூடியிருந்தார்கள். நாசாவின் தலைமை நிறுவனத்தில் நடைபெறும் “விண்வெளிக்கலம் 2028” சம்பந்தமான ஆராய்ச்சியில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் சார்பில் நான் உட்பட ஆறு விஞ்ஞானிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தோம். எங்களது பணிகள் சம்பந்தமாக ஆராய்ந்து மூன்று மாத பயிற்சிகளுடன் வாஷிங்டன் அனுப்புவதற்கான கலந்தாலோசனைக்காவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக இப்படியான ஆய்வுகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்களின் தகைமை மிகவும் வீரியமாக அமைய வேண்டும். அதே வேளை கொஞ்சம் பாவனை, செல்வாக்கு, மேட்டிமைத் தனம், மேல்மட்ட விஞ்ஞானிகளுடன் சிறந்த சிநேகம் போன்ற இத்தியாதிகள் செல்வாக்குச் செலுத்தும். அதையும் தாண்டி பொதுவில் சமத்துவம் என்ற நல்லதொரு பெயரை நிலை நாட்ட விண்வெளி அறிவாற்றல் நிபுணத்தவம் உள்ள ஓரிருவர் உள்ளே சேர்க்கப்படுவார்கள். அப்படித்தான் நானும் ரவி நாயரும் உள்ளே தள்ளப்படோம். அச்சமயத்தில் நான் விண்வெளிக்கல ஆய்வுத் துறையில் நான்கு கட்டுரைகளை வெளியிட்டிருந்தேன். விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற பொருண்மை – ஆற்றல் சமன்பாட்டிற்கு எழுதிய எனது விரிவான கட்டுரை மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இளம் விஞ்ஞானிகள் மன்றத்தின் மகாநாட்டில் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்தன.
அந்த வட்ட மேசையில் என்னுடைய இருக்கைக்கு பக்கத்தில் அர்ஜூன் அமர்ந்திருந்தான். எங்களுக்கு எதிரில் எமிலி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற் போல் ஜெனிஃபர், ஒலிவியா, லின்டா ஆகியோர் இருந்தார்கள். அவர்களில் ஒலிவியா தவிர மூவருமே கேம்பிரிஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். ஒலிவியா பிரித்தானிய விண்வெளியின் செயலாண்மையில் பணிபுரிபவர். அவ்விடத்தில் இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் கைகளை அசைத்து ஹாய் கூறி நட்பு பாராட்ட நான் மட்டும் என்னுடைய உலகத்தில் தனிமையில் அமிழ்ந்திருந்தேன். உயர் மட்ட விஞ்ஞானி மிஸ்ட்டர் வெல் அறையினுள் நுழைந்ததும் மௌனம் சில்லிட்டது.
கூட்டத்தில் தலைமை தாங்கிய மிஸ்ட்டர் வெல் தனது கண்ணாடிச் சில்லு வழியாக அனைவரையும் உற்று நோக்கினார். அக்கணத்தில் அவரது வளைந்த நெற்றி மடிந்து நிமிர்ந்தது. எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் தருணம் எழுந்தது. ஒவ்வொருவரும் தமது திறமைகளை வெவ்வேறு விதங்களில் விபரித்தார்கள். இப்படியான பாசாங்கினை என்னால் வரவழைக்க முடியவில்லை. என்னைப் பற்றி இங்கிருப்பவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பின்னர் அறிமுகம் என்ற பெயரில் எதற்கு இந்த விளம்பரம் ? ஹலோ நான் விஞ்ஞானி குணேரிஸ். கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தாமல் விறைப்பாகக் கூறி முடித்தேன். என்னிடம் இருந்த சொற்கள் அவ்வளவு தான். இப்பொழுது எனக்கு இருமுனையைப் பிறழ்வு குறைபாடு இருப்பதை எல்லோரும் உறுதி செய்தியிருப்பார்கள். அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.
ஆய்வுக் குழுவின் நோக்கம், திட்ட வரைவு பற்றி மிஸ்ட்டர் வெல் மேலும் தொடர்ந்தார். விஞ்ஞானிகளே! இந்தக் குழுவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமும் அடங்கியுள்ளது. அதாவது பெண்கள் பெரும்பான்மையான இடம்பெற்றிருக்கின்றார்கள். எனவே இது பெண்களின் ஆளுமை வெளிப்படும் தருணம். நிச்சயம் இந்தக் குழுவினர் சிறந்ததொரு ஆராய்ச்சி முடிவை உலகிற்கு தருவார்கள் என்று நம்புகின்றேன். மிஸ்ட்டர் வெல் மிகையான வியப்புடன் ஒரு மேடைப் பேச்சாளரைப் போல உரையாற்றினார். அந்த நேரத்தில் அவருடைய கண்ணாடி ஏறி இறங்கியது. செவிமடுத்துக் கொண்டிருந்த பெண் விஞ்ஞானிகள் அனைவரும் மாபெரும் சாகசக்காரர்கள் போல் பவ்வியமாக புன்னகைத்தார்கள். நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். இது என்ன வகையான வேடிக்கை என்று புரியவில்லை. பிரதிநிதித்துவம் என்ற பெயரில் இத்தகைய வெற்றுத் தத்துவத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆற்றலும் ஆளுமையும் யாரிடம் உள்ளதோ அவர்களே தகுதியானவர்கள். இவை எதையும் என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ஆனால் என்னுடைய கொந்தளிப்பின் சீற்றம் ரொக்கட் வேகத்தில் அதிகரித்தது. அப்பொழுது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த கட்டற்ற கேள்விகளை அசாதாரணமான எனது தனிமையால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஆய்வு வேலைகள் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் தொடங்கியிருந்த பொழுதிலும் ஆய்வகத்தின் புதிய சூழலுக்கு நான் முழுதாக பழக்கப்படவில்லை. மத்திய லண்டனின் கட்டிடங்கள் நிரம்பி வழியும் சாலையில் கண்ணாடிக்குவளையை கவுட்டு வைத்தாற் போன்ற கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் ஆய்வகம் அமைந்திருந்தது. ஆனால் வீதியில் செல்பவர்களுக்கு கட்டிடத்தின் உள்ளே நிகழ்பவை தெரியாத வகையில் கனத்த கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கட்டிடத்திற்குள் நுழைந்தால் வெளியில் ஒரு உலகமும் உள்ளே வேறொரு வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். எங்கள் அனைவருக்கும் தனித்தனி அறை. அங்கே உட்பட நவீன வசதிகளுடன் கூடிய நிலையடுக்குகள். சுவர்களில் விண்வெளி சம்பந்தமான பட வரைபுகள் அதற்கேற்றாற் போல் மின் விளக்குகள். மெல்லிய ஓசையும் எழாத தூய அமைதி. சில வேளைகளில் இரவா பகலா என்ற உணர்வின்றி இந்த ஆய்வகமே ஒரு விண்வெளிக்கலம் போல தோன்றும். எனவே இந்த உலகத்தினைப் பற்றிய எந்தவொரு பிரக்ஞையுமின்றி நம்மை முழுமையாக விண்வெளியில் இணைக்கும் ஒரு ஏற்பாடு போல் தோன்றியது.
ஆய்வுக்குழுவில் நான் தெரிவு செய்யப்பட்டதை விடவும் அதிகம் பெண்கள் அக்குழுவில் இடம் பெற்றிருப்பதை அறிந்த அம்மா மிகவும் புல்லரிப்பும் பர பரப்பும் அடைந்தாள். அக்கா மட்டும் விழிப்புற்றுவள் போன்று சற்று அதிர்ந்து ஓஹ்! அப்போ நீயும் அர்ஜூனும் ஆசியர்கள். எதற்கும் கொஞ்சம் விழிப்பாயிரு என்று தனது வெகுளித்தனமான பார்வையால் எச்சரிக்கை செய்தாள். அக்கா அன்று நினைத்த ஆருடம் அவ்வளவு விரைவில் பலிக்குமென்று நான் நம்பியிருக்கவில்லை.
அம்மா வேலை செய்யும் பெண்கள் நிறுவனங்களில் இவை சம்பந்தமாக சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டு மேசையில் எனது ஆய்வுக்கு குழுவில் உள்ள பெண் விஞ்ஞானிகளைப் பற்றி ஆர்வமாய் விசாரிப்பது அம்மாவின் வழமையான செயற்பாடாகியது. ஆண் பெண் சமத்துவம் தொடர்பில் ஏற்கனவே நானும் அம்மாவும் பல முறை விவாதித்து இருக்கின்றோம். எங்கள் இருவருக்கும் இடையில் அக்கா நடுவராக இருப்பாள். எனினும் அம்மாவின் வரலாறும் அவள் சந்திக்கும் பெண்களின் வாழ்க்கைகளும் மிகவும் கொடூரமானவை. அவள் பார்த்த, கேட்ட, துயருற்ற கதைகளை ஒரு சொல் மீதம் வைக்காமல் பரிமாறுவாள். இறுதியில் நானும் அக்காவும் அமைதியாகி அம்மாவின் அன்பில் கரைந்து விடுவோம்.
எங்களது பயிற்சிக்கான அலகுகள் நாசா விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் அன்றைய வாரத்தின் வெளியீடுகளை பரிசோதிப்பதற்காக எங்களது குழுவில் உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். ஒரு தடவை பயிற்சி அலகு தொடர்பில் இருந்த சில எதிர்மறை விளக்கங்களை நான் சுட்டிக் காட்டுகையில் வேண்டுமென்றே சம்பந்தமில்லாமல் லிண்டா எதிர்ப்புத் தெரிவித்தாள். அந்த நேரத்தில் எமிலி நீ என்ன பெரிய முதன்மை விஞ்சானியா எனக் கிண்டலாகக் கூறினாள். அதனை செவிமடுத்த ஜெனிஃபரும் லிண்டாவும் சிரித்தார்கள். பக்கத்தில் இருந்த அர்ஜுனும் ஒலிவியாவும் எதுவும் பேசவில்லை. என்னுடைய தலை சூடேறியது. மேசையில் கைகளால் பலமாக அடித்தேன், பின்னர் அங்கிருந்து வெளியேறினேன். அப்பொழுதும் அந்த மூவரும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
என்னுடைய அறைக்குள் நுழைந்த பொழுதுதான் சற்று தணிந்திருந்தேன். ஆனால் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. எமிலிக்கு நான் ஏன் பதில் சொல்லாமல் நகர்ந்தேன், அவர்களின் சிரிப்பிற்கு எதிராக நான் ஏதாவது செய்திருக்க வேண்டும், அவமானத்தால் இதயம் விம்மத் தொடங்கியது. மனம் மீண்டும் மீண்டும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டேயிருந்தது. முடிவில் ஏதோவொரு உண்மையின் அருகாமையை துல்லியமாகப் புரிந்து கொண்டேன். ஆய்வு வேலைகள் தொடங்கியதிலிருந்தே லிண்டா, எமிலி, ஜெனிஃபர் ஆகிய மூவருமே சற்று கர்வமாகவே தென்பட்டார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் அதிகாரம் தடித்திருந்தது. சில ஆலோசனை விடயங்களில் வேண்டுமென்று என்னையும் அர்ஜூனையும் தவிர்த்தார்கள்.
நீ ஏன் தலையைச் சுற்றி துணியால் கட்டியிருக்கின்றாய்? இப்படி எந்நேரமும் தலையில் துணி இருப்பதால் ஆறுதலை அடைய முடியுமா? சாப்பாட்டு அறையில் அர்ஜூனைப் பார்த்து லிண்டா கேட்டாள். அவளின் பார்வையில் தீவிரம் எரிந்து கொண்டிருந்தது. ஆமாம், இப்படி துணியால் கட்டிக்கொண்டு இருப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது, தலையே கழன்று விடும் பதிலுக்கு எமிலியும் சேர்ந்து ஒப்புவித்தாள். அர்ஜூன் ஏதோ பதிலளிக்க முயலுகையில் அவனை நான் முந்திக்கொண்டு என்ன?… என்ன வகையான கேள்வி இது? முட்டாள்தனம் ! லிண்டாவையும் எமிலியையும் நோக்கி நான் சத்தமாகக் கத்தினேன். அவர்கள் மீண்டும் ஏதோ சொல்ல முனைகையில் இடையில் அர்ஜூன் வேண்டாம் என்பது போல் கைகளால் சைகை செய்து தலைப்பாகை அணிவது சீக்கியர்களின் கலாச்சாரம், நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுதே தலைப்பாகை அணியத் தொடங்கி விடுவோம், எளிமையாக பதிலளித்தான். அவர்கள் இருவரின் கருத்துக்களிலும் இருந்த அபத்தத்தினை அர்ஜூன் நிச்சயம் புரிந்திருப்பான். அவர்கள் காட்டும் ஒவ்வாமையை அவன் அமைதியாக கடந்து செல்ல விரும்பினான். என்னால் அர்ஜூன் போல் நிச்சலனமாக வாழ முடியாது. எல்லாவற்றிற்கும் தகுந்த பதிலடியை நான் கொடுத்து வந்ததால் அவர்களின் மொத்த எதிர்ப்பும் என்னை நோக்கியே திரும்பியிருந்தது.
மூன்றாம் வாரத்தில் ஆய்வகத்தில் நுழைந்ததும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தது போன்ற உணர்வு என்னுள் மலர்ந்து விட்டிருந்தது. ஆய்வுக்குள் முழுமையாக என்னை இறக்கிக் கொண்டேன். மூளையே உடலாக மாறி விட்டிருந்தது. கரோலின் ஹெர்ச்சல், எட்வின் ஹுபல் போன்றோரின் விண்கல ஆய்வேடுகளை முழுமையாக வாசிக்கத் தொடங்கினேன். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட விண்கலங்களின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்தேன். மனதிற்கு புதிய திசைகள் தென்படத் தொடங்கின. ஆய்வகமே எனது சொந்த வீடாகவும் அங்கே போகாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்திருந்தேன். மாத இறுதியில் எங்களது ஆராய்ச்சியின் குறிப்புகளை சமர்ப்பிக்கையில் எனது அறிக்கை முதன்மையிடத்தில் இருப்பதாக நாசாவிலிருந்து செய்தி வந்தது. அந்தச் செய்தியினை அறிந்த லிண்டா, எமிலி, ஜெனிஃபர் மூவரின் முகங்களும் வாட்டம் கண்டன.
திங்களன்று நாசாவின் பேராசிரியர் ரொபேர்ட் ஆய்வகம் வந்திருந்தார். அப்பொழுது எங்களனைவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழமையைப் போலில்லாமல் வலதும் இடதுமாக என்னருகில் ஜெனிஃபரும் லிண்டாவும் வந்து அமர்ந்தார்கள். உரைகளுக்கு நடுவே அவர்கள் இருவரும் கண்ணால் பேசிக் கொள்வதும் சிரிப்பதும் எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. நேரம் செல்லச் செல்ல அவர்களின் நடத்தைகள் தீவிரமானதால் எனது கவனக்குவிப்பு குறைந்து சென்றது. பின்னர் லிண்டா எனது கால்களை அவளது கால்களால் மெதுவாக உரச ஆரம்பித்தாள். நான் எவ்வளவோ விலகியும் அவள் வேண்டுமென்று புன்னைகைத்தவாறு அதே செயலை தொடர்ச்சியாக செய்யத் தொடங்கினாள். ஒரு வித பதற்றத்தால் அடிக்கடி சிறு நீர் கழிப்பதற்காக அறையை விட்டு வெளியே செல்வதும் வருவதுமாக இருந்தேன். அந்த நேரத்தில் எமிலியும் மலசல கூடத்தின் முன்னால் வந்து சென்றாள். இடைவேளையின் பொழுது மீண்டும் நான் உரையாடல் அறையில் நுழைகையில் எமிலி தனது கையில் இருந்த தண்ணீர் போத்தலைக் காட்டி ஐன்ஸ்டைனின் ஆண் குறி என்றதும் அங்கிருந்த லிண்டாவும் ஜெனிஃபரும் சத்தமாகச் சிரித்தார்கள். என்னைக் கண்டதும் அவர்களது சிரிப்பு மேலும் வலுப்பெற்றது. என்னருகில் நின்ற அர்ஜூன் உன்னைத்தான் ஐன்ஸ்டைன் என்று பெயரிட்டுள்ளார்கள் மெதுவாகக் கூறினான். அதனைக் கேட்டதும் வியர்வை அருவி போல் உடலிலிருந்து வெளியேற குமட்டலும் அருவருப்பும் அடைந்தேன்.
ஒரு வாரம் வீட்டின் அறையை விட்டு நான் வெளியே வரவேயில்லை. காய்ச்சலும் தலையிடியும் இடைவிடாது தொடர்ந்தன. இரவுகளில் தண்ணீர் போத்தலும் ஆண்குறியும் என மாறி மாறி கெட்ட கனவுகள் என்னைப் பயமுறுத்தின. ஏதோ என்னைச் சுற்றி நடந்து விட்டது என்பதை அம்மா ஊகித்தாள். சில நேரங்களில் என்னிடம் கேட்கவும் செய்தாள். ஆனால் நடந்தது எதனையும் அம்மா நம்ப மாட்டாள் என்று நினைத்து அவளிடம் சொல்வதைத் தவிர்த்தேன். பின்னர் அவளேதான் என்னை வற்புறுத்தி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தாள்.
ஜூன் 24ம் திகதி நான் அரை மனதுடன் மீண்டும் ஆய்வகம் சென்றேன். அங்கே யாரையும் சந்திக்கக் கூடாது என்ற வழி நெடுகிலும் கடவுளை வேண்டிக் கொண்டேன். இடையில் எனது மின்னஞ்சலை திறந்து பார்த்த பொழுது எமிலி, லிண்டா, ஜெனிஃபர் மூவரும் நாசாவிற்கு தயாரித்து அனுப்பிய ஆய்வறிக்கையைப் பாராட்டி நாசா தலைமையகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதனை வாசித்த பொழுது எனது தலையே சுற்றியது. நான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஆய்வின் மூலங்கள் அதே வடிவத்தில் அவர்கள் மூவரின் அறிக்கையில் ஒவ்வொரு பகுதியாக சேர்க்கப்பட்டிருந்தன. எப்படி இதை செய்திருப்பார்கள் என்ற பதை பதைப்புடன் அவசரமாக ஆய்வகத்தினை அடைந்து நேராக எனது அறைக்குச் சென்று கடவுச் சொல்லை அழுத்தி கதவினைத் திறக்க முயன்றேன். கதவு அசையவில்லை. உடல் சிலிர்த்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பலன் எதுவுமில்லை. கடவுச் சொல் மாற்றப்பட்டிருந்தது. அப்பொழுது தான் தலைக்குள் மின்னல் வெட்டியது. இறுதியாக நான் ஆய்வகத்திலிருந்து வெளியேரும் பொழுது அறையை மூடாமல் சென்றிருக்கிறேன். உடனே ஆய்வகத்தின் பாதுகாப்பாளர் அறையை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பதை விசாரித்த பொழுது என்னுடைய அறைக்கு பக்கத்தில் இருந்த ஸீ ஸீ டீ வீயை யாரோ செயலிழக்க செய்திருப்பது தெரிய வந்தது. என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பல முறை அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் பாதுகாப்பாளர் உதவியுடன் கதவினைத் திறந்து உள்ளே சென்றேன். அறையின் ஒழுங்குகள் தலைகீழாக குழம்பியிருந்தன. ஏற்கனவே நான் கணனியில் தயாரித்து வைத்திருந்த ஆராய்ச்சி ஆவணங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அப்படியே நான் சரிந்து விழுவது போல் உணர்ந்தேன். என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவித்தேன். நான் தள்ளாடிய படி அறையை விட்டு வெளியேறுகையில் எமிலி முன்னால் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் உடல் விறைத்து திகிலுற்றது. அவளது முகம் சூன்யக் கிழவியின் முகத்தைப் போல் விகாரமடைந்திருந்தது. எமிலி ஏளனமான புன்னகையுடன் எனது அருகில் நெருங்கி தோள்களை கைகளால் அமிழ்த்தினாள். நான் அவளை விட்டு விலக முயற்சித்தும் அவள் என்னை இறுகப் பிடித்து எனது உதட்டில் அவளது உதட்டினை வைத்து என்னுடன் ஒரு இரவு உன்னால் இருக்க முடியுமா? அப்படியென்றால் இனி உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். மிகவும் ரகசியமாகக் கூறிவிட்டு அவ்விடத்தினை விட்டு அவசரமாக நகர்ந்தாள்.
என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே கழிப்பறைக்குள் ஓடிச் சென்று உதடுகளை பல முறை கழுவினேன். அவளது உடலிலிருந்த பேர்பியூம் வாசனை எனது ஆடையில் ஒட்டியிருந்தது. அதனை சுவாசிக்கையில் வாந்தி பீரிட்டது. எல்லாம் சேர்ந்து உடல் தீப்பிடித்து எறிவது போல் அல்லது ஒவ்வொரு உறுப்புக்களும் உடைவது போல் வலியில் துடித்தேன். கழிப்பறையிலிலிருந்து வெளியேறுகையில் யாரோ என்னை கொல்ல முயற்சிப்பது போல் பயம் முற்றியிருந்தது. அவசரமாக ஆய்வகத்தினை விட்டு வெளியேறினேன். அந்த இடமே மறந்து விட்டது போல் இருந்தது. எந்தப் பக்கம் செல்வது என்று தெரியவில்லை. தலை விறைத்து கல்லாகிவிட்டிருந்தது. மீண்டும் யாரோ பின்தொடர்கிறார்கள். எமிலியைப் போன்ற உருவங்கள், அங்குமிங்குமாக வீதியில் ஓடினேன். எவ்வளவு தூரம் அதன் பிறகு என்ன நடந்தது எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. மனநல மருத்துவ மனையின் சிகிச்சைப் பிரிவில் கண்கள் திறக்கும் பொழுது கோலொம்பியா பல்கலைக்கழத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த தேசான் உட்பட அம்மாவும் அக்காவும் நின்றிருந்தார்கள்.
சரி, நான் இப்பொழுது புறப்பட வேண்டும், மிஸ்ட்டர் லூயிஸ் புறப்பட எத்தனிக்கையில் எனது தொலைபேசி ரீங்கரித்தது. அம்மா என்றேன். மிஸ்ட்டர் லூயிஸ், சரி அழைப்பை எடுங்கள் என்றார். நான் தொலை பேசியினை அழுத்தியதும் குணேரிஸ் !அம்மா பட படப்புடன் குரலை உயர்த்தினாள். என்ன நடந்தது? நான் அதிர்ச்சியடைய, இப்பொழுது எனக்கு ஒலிவியா போன் பண்ணியிருந்தாள். அங்கே உனக்கு எதிராக நடந்த அனைத்திற்கும் சில சாட்சியங்களை நாளை அவளால் கூற முடியுமாம். மிஸ்ட்டர் லூயிஸ் முதலில் அவளைக் கேட்ட பொழுது அவளுக்கு தயக்கம் இருந்தததாம். அதனால் இப்பொழுது தன்னால் உனக்கு உதவி செய்ய முடியும் என்று சொன்னாள், உனக்கு மூன்று பெண்கள் அநீதி இழைத்து விட்டாலும் அந்த அநீதிக்கெதிராக ஒரு பெண் சாட்சி சொல்ல வருவது நல்லது தானே! அம்மா தயங்கித் தயங்கி சொற்களை அடுக்கினாள். அவளது குரலில் ஈரம் படிந்திருந்தது. நான் எதுவும் பேசாமல் தோலை பேசியைத் துண்டித்தேன்.
உன்னுடைய அம்மா இப்பொழுது பெண்களுக்கெதிராக திரும்பியிருக்கும் பிரச்சாரத்திற்குப் பயந்து ஒலிவியாவை நம்புகிறாள். எனக்கும் உனது அம்மாவின் பதட்டம் புரிகிறது. ஆனால் எனது வாடிக்கையாளரின் நலனும் வழக்கும் மிக முக்கியம். திடீரென்று ஒலிவியா களத்தில் குதிப்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. இது எதிராளிகளின் ஏற்பாடாகக் கூட இருக்கலாம். ஆகவே ஒலிவியாவின் சாட்சியங்கள் தேவையில்லை. இவற்றை அம்மாவிடம் சொல்லி விடு, தைரியமாக இரு. நாளை சந்திப்போம், மிஸ்ட்டர் லூயிஸ் எனது தோள்களைத் தட்டி விடைபெற்றார். மேசையில் நானும் தேசானும் மட்டும் எஞ்சியிருந்தோம். மிஸ்ட்டர் லூயிஸ் சொல்வது தான் சரி, ஒலிவியாவின் சாட்சியத்தில் ஏதோவொரு திட்டம் இருக்கு. சரி நாம் கிளம்புவோம், தேசான் எழுந்ததும் நீ வெளிக்கிடு, நான் கொஞ்சம் இங்கே இருந்து விட்டு வருகிறேன். நான் அமர்ந்திருந்தேன். உண்மையாகவா? உன்னால் தனியாக வீடு செல்ல முடியுமா? ம்ம், எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. ஓகே காலையில் வீட்டிற்கு வந்து இருவரும் ஒன்றாக நீதிமன்றம் போவோம். தேசான் சில எட்டுகள் வைத்தவன் எனது தனிமையின் உள்நோக்கத்தினை புரிந்து கொண்டவன் போல் மீண்டும் என்னருகே வந்து தயவு செய்து அம்மாவிடம் எப்படியாவது ஒலிவியாவைப் பற்றி கூறி விடு, தேசான் நகர்ந்தான்.
லாகம்பாஸில் நான் ஒரு லடே கோப்பியை ஓடர் செய்து குடித்தேன். தேம்ஸ் நதியின் குளிர்ந்த காற்று இருளின் அடர்த்திற்கேற்ப சற்று கனமாக மாறிக் கொண்டிருந்தது. எனது ஜாக்கட்டின் சிப்பரை கழுத்து வரை இழுத்து தலையை மூடிவிட்டு புறப்பட்டேன். அம்மா தொலைபேசியில் மீண்டும் அழைத்தாள். தயக்கத்தில் உடனே அந்த அழைப்பை துண்டித்தேன். நிச்சயம் அவள் எனது பதிலை எதிர்பார்க்கிறாள், ஆனால் மிஸ்ட்டர் லூயிஸின் கருத்தை அவளுக்குக் கூறும் அளவு மன வலிமை என்னிடம் இல்லை. ஏனெனில். இந்த உலகத்தில் நான் பார்க்கும் அன்பு அவளின் கண்ணீரில் மட்டுமே புதைந்துள்ளது. நாளை ஒலிவியாவின் சாட்சியங்களை நான் ஏற்றுக்கொள்ளாமல் வெற்றியீட்டினால் அம்மா எப்படி புரிந்து கொள்வாள். அல்லது ஒலிவியாவின் சாட்சியங்களில் எனது வழக்கு உடைந்து போனால் என்னவாகும். வழக்கின் ஒவ்வொரு அசைவும் என்னை ஏறிட்டுப் பார்ப்பது போல் இருந்தது. வீடு செல்வதா இல்லையா என்று குழம்பினேன். எனது நடை தளர்ந்ததும் நதியிலிருந்து வீசிய பலமான காற்றால் தலையை மூடியிருந்த ஜாகெற்றின் கொழுவி நழுவியது. காரணமேயில்லாமல் வலது பக்கமாக திரும்பிய பொழுது நதியில் இருண்மை விழுந்து கருமையின் ஒளி பரவியிருந்தது. அதன் அலைகளில் இருந்து வந்த மெல்லிய இரைச்சல் கரையை அடைகையில் கண்ணாடித்துண்டுகளில் விழுவது போல் ஒலி எழுப்பின. நதியினைச் சுற்றிக் கட்டியிருந்த சுவரினை நெருங்கிய பொழுது நீரின் குளிர்ச்சியான மணத்தினை சுவாசித்து உள்ளே இழுத்தேன். ஒரு புதுவிதமான இன்ப உணர்ச்சி என்னைத் தாக்கின. நதியின் அடுத்த கரையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்ட்ரை சுற்றியிருந்த கட்டிடங்களில் இருந்த மின்விளக்குகள் மின் மினிகள் போல் ஒளிர்விடத்தொடங்கின. அந்தக் கணத்தில் விண்வெளியின் கூரையில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது போல் குறு குறுப்பு ஏற்பட்டது. அதே பரவசத்துடன் நான் நதியினை மேலும் நெருங்கினேன். அலைகள் உருமாறத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் ஏக்கம். அலையின் விளிம்புகள். செல்கி கதைகள் மாறி மாறி எழுந்தன. திகைப்பு முட்ட நதியின் முகத்தினை கூர்ந்து பார்த்தேன். அம்மாவின் கதைகளில் இருந்தவாறே அந்த அலைகளில் அன்பும் கருணையும் ததும்பி வழிந்தன. அதோ செல்கியின் உருவம், அலைகளுக்குள் அவள் ஒரு பேரரசியாக வீற்றிருக்கிறாள். திகிலுற்ற எனது கண்கள் செல்கியை தேடுகின்றன. நேரம் செல்லச் செல்ல செல்கி என் சிந்தனையை துளைத்து அதன் எல்லையை அடைந்து கொண்டிருந்தது. இவ்வுலகில் நான் எப்பொழுதும் அடையாத இன்பம் அந்த அலையின் கைகளில் விரிந்து தவழ்ந்தன. பரவசம் முற்றிக் கனியும் தருணம். திடீரென்று எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் மலர்ந்த சிரிப்பை வெளியே எடுத்தான். அவனது கைகளை இணைத்து சங்கினை ஊதினான். செல்கி அன்புடன் அரவணைத்து கொண்டாள்.
***
மாஜிதா – இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டு, சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: fhaniffa449@gmail.com

