ஆதவன் சரவணபவன்
இயல்பான குணம் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அந்தக் குணம் இந்தச் சமூகத்தால் ஏற்றுக் கொண்ட குணமாக இருந்தால் நல்லவனாகவும் இச்சமூகத்தால் புறந்தள்ளுப்பட்ட குணமாக இருந்தால் கெட்டவனாகவும் அவனை வரையறுக்கும். இயல்பான குணம் எப்படி ஒரு சமூகத்தில் அல்லது சமூகத்தால் பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே குறிப்பிட்ட நபர் தனக்கான தனித்துவத்தை அடைகிறார். ஜான் போல் சாத்தர் (Jean Paul Sartre) இருப்பு சாரத்தை முந்துகிறது (Existence Precedes Essence) என்று கண்டடைந்தார். சமூகத்தில் மனிதனின் நடவடிக்கைகள் மூலம் அவன் வரையறுக்கப்படுகிறான். செயல்கள் அவனை வெளிப்படுத்துகிறது. செயல்களின் வீரியமும் அபத்தமும் அவனுக்கான உருவகமாக மாற்றப்படுகிறது. சூழல் மற்றும் சமூகத்தின் பங்கு இந்தச் செயலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலம் அந்த நபர் அடையும் மனவுளைச்சலையும் ம.நவீன் எழுதிய லீகாட் நாவலின் கதை சொல்லியான தீபன் உதாரணமாக இருக்கிறான்.
சிங்கப்பூரில் ஒரு மாலை இரண்டு நாவல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒன்று சிங்கை எழுத்தாளர் ரமா சுரேஷ் எழுதிய ஆகூழ் மற்றது மலேசியா எழுத்தாளர் மா நவீன் எழுதிய லீகாட். நவீனின் சிகண்டி வாசிக்கத் தொடங்கி சில அத்தியாயங்களின் பின் நகரவில்லை. ஆசுவாசமாக வாசிக்க வேண்டும் என்று இன்னும் எனது சேகரத்தில் வைத்திருக்கிறேன். சிகண்டியின் களமோ நடையோ இறுக்கமான மொழியோ சற்று தொந்தரவாக இருந்திருக்கலாம். நவீனின் சில சிறுகதைகள் வல்லினம் இணையத்தில் படித்த அனுபவமும் இருந்தது. இந்த லீகாட் நாவல் சிரமத்தை கொடுக்காமல் அதே நேரத்தில் ஆழ்ந்து வாசிக்க முடிந்ததால் எனது வாசிப்பில் இந்த மதிப்புரையை எழுதத் தூண்டியது.
இரண்டு பக்க கடிதத்தில் தொடங்கும் கதை இறுதி இரண்டு பக்கங்களில் அந்தக் கடிதத்தின் முடிவுடன் நிறைவு செய்கிறது. பேத்தியான நிஷாவுக்கு தனது பால்யகாலத்தை பூச்சுக்களில்லாமல் திறந்து காட்டும் வகையில் ஒப்புவிக்கிறான் தீபன். கடிதத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன என்ற கேள்வியுடன் வாசகன் உள்ளே நகரவேண்டி இருக்கிறது. வாசகனை உள்ளிழுக்கும் உபாயமாக தெரிந்தது. யார் இந்த நிஷா? கடிதம் எழுதும் நபர் யார்? என்ற கேள்விகள் வாசித்து முடிக்கும் வரையும் தேக்கி வைத்திருக்கும் நிலையை கொஞ்சம் சிரமமாகவோ மறந்தோ போயிருந்தேன். கடைசிப் பக்கம் வாசித்து விட்டு மீண்டும் முதல் இரண்டு பக்கங்களை வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஒரு மர்ம முடிச்சாக வைத்திருக்கிறார் ஆசிரியர். நிஷா என்ற விலைமாதின் பெயரைத் தவிர்த்து கதையினூடு இந்த முடிச்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் செல்கிறது.
தீபன் என்ற பதின்ம வயது இளைஞன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஊர் மக்களின் முன் குற்றம் செய்தவனாக நிற்கும் அவனது மனவுளைவை தெளிவாக காட்டுகிற பாங்கு சலிப்பில்லாமல் ஆர்வமாக உள்ளிழுத்து விடுகிறது. ஊரும் அன்பான தாயும் மிகக் கேவலமாக அவனைத் திட்டி அடித்து துன்புறுத்தித் துரத்துவதும் தொடர்ந்து ஒரு மாதம் பினாங்கில் மாமனுடைய சாப்பாட்டுக் கடையில் வேலை செய்து பின் வீடு திரும்புவதும் நாவலின் காலம். பருவ வயதை அடையும் ஆணின் உளவியலை அதாவது சிறுவனாக இருந்து விடலையாக மாறும் போது ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தும் நோக்கம் பிரதியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளது. கதை சொல்லியான பதினாறு வயது தீபன் நிகழ்காலத்தில் ஏற்படும் அவஸ்த்தையுடன் கடந்த கால நினைவு கூறல்களாக பள்ளி வாழ்க்கையில் இருந்து கதையின் நடைமுறை காலம் வரைக்குமான சித்திரத்தை எமக்கு வழங்க முனைகிறான். இந்த வயதில் ஏற்படும் காதலை இனக்கவர்ச்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் அவனுக்கில்லை. எதிர்காலம் குறித்தான எந்த விதமான நோக்கு நிலைகளும் அற்ற வயது என்றாலும் கனகா என்ற பள்ளித் தோழியின் மேல் ஏற்படும் ஈர்ப்பைக் கூட அவனால் உதாசீனம் செய்ய முடியாமல் திணறுகிறான். பள்ளியில் நிகழும் சச்சரவுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் உரையாடல்களும் தத்ரூபமாக அமைந்துள்ளன.
பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஓர்மோன்களின் மாற்றத்தால் இந்தப் பருவத்தில் ஏற்படுவதை மையச் சரடாக இந்தப் புதினம் வைத்திருக்கிறது. அதற்கான விடை தெரியாமல் குழம்பும் தீபன் நிஷா என்ற விலை மாதுவை அடையும் துடிப்புடன் அவள் கேட்கும் குறித்த தொகைப் பணத்துக்காக அல்லாடுவதும் அதனால் மாறன் என்ற நண்பனின் மீது ஏற்படும் விரோதமும் அமைதியின்மையை அவனுள் விதைக்கிறது.
தீபனின் சூழல், குடும்பம், நண்பர்கள் மூலமாக அவன் கட்டமைக்கப்படுகிறான். அவனின் குணவியல்புகளில் இந்த மூன்றும் செல்வாக்கு செலுத்துகின்றது. அவனுக்கென்று சுயமாக முடிவெடுக்க முடியாத வயது. அதனுடன் உடலில் ஏற்படும் பருவ மாற்றம் முடிவுகளில் தன்மையையும் பார்க்கும் பெண்களை அடையும் வேட்கையையும் ஏற்படுத்துவதற்கு மாறன் வடிகாலாகிறான். தனது பாலியல் வெறுமையை நிவர்த்திசெய்து நண்பர்களை சுற்றத்தை பழிவாங்க நிஷாவை அடையும் பேரவா எழுகிறது. முதிராத சிந்தனையுள்ள முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள் என்று அவன் தடுமாறிக் கொண்டிருப்பது தெரிகிறது.
விச்சு மாமனின் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் தீபனை எப்போதும் சீண்டுகிறான். அவன் மிகவும் நல்லவனாக உதவும் மனப்பான்மை உடையவனாக இறுதியில் காட்டப்படுகிறான். ஏன் விச்சுவால் தீபனுடன் அன்பாக ஒருபோதும் பழகவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. பீரைத் திருடிக் குடிக்கும் விச்சு தன்னிலையை நியாயப்படுத்தி மாமனை திட்டும் மனநிலையில் இருப்பவன் போகும் போது அவரின் கஷ்டத்தைப் போக்க பெரிய தொகை பணத்தை கொடுப்பது முன்னுக்குப் பின் முரணான பாத்திர வார்ப்பாக விச்சுவை காட்டுகிறது அல்லது தீபனின் பார்வையில் அப்படித் தெரிந்திருக்கலாம். ஆனால் கேள்வியெதுவும் இல்லாமல் விச்சு போனபிறகு தீபன் கலங்குவதற்கு சரியான நியாயம் சேர்க்கவில்லை.
கடிதத்தின் முடிவில் தாத்தாவான தீபன் பிறழ்வு உறவுக்கு ஆட்படும் ஒருவனாகவும் தனது மரணத்தை தானே தேடிக் கொள்பவனாகவும் வருகிறது. விடலைப் பருவத்தில் இருந்து சட்டென்று முதியவனாகிய இடைவெளியை நாவல் அவசரப்பட்டு முடித்து விடுகிறது. வாசகன் தானாகவே தீபன் வாழ்நாள் முழுதும் காமத்தை தேடுபவனாகவும் பிறழ்வு மனநிலையில் தன்னை கட்டுப்படுத்த முடியாத விபரீதமான எண்ணத்துடன் வாழ்ந்ததாகவும் காட்ட முற்படுவது அவனின் பாத்திர வடிவமைப்பில் முழுமையடையாத தன்மையாக இருக்கிறது. விடலைப்பருவத்தில் இருந்தவன் இன்னும் அதே போல குற்றவுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துபவனாக இருப்பது தீபனின் முதிர்ச்சி வயதால் மட்டும் நிகழ்ந்ததாகவும் மனமும் அறிவும் அவனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லாமல் அழுந்திக்கொண்டிருந்ததாக எண்ணவேண்டியிருக்கிறது.
தீபனின் சூழலில் குறிப்பாக நண்பர்களிடையிலும் அயலவர்கள் அவனை அடித்து தூற்றுவதிலும் தாயே தீபனைப் பார்த்து வீட்டை விட்டு துரத்தும் போதும் பயன்படுத்தும் ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் பொதுவானதன்று. அவனின் வாழ்வியல் சூழலில் அது சாதாரணமாக இருப்பதை சிலவேளைகளில் வாசிக்கும் போது சற்று அதிகமாகவும் முகச்சுளிப்புடனுமே கடக்க வேண்டியிருந்தது. தமிழ் சமூகத்தில் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் ஆபாசத்தை விதைக்கும் சொற்களின் பயன்பாட்டை பெற்றோரும் பாடசாலைகளும் கவனத்துடன் களைந்து நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டியது அடிப்படைத் தேவையென்று நினைக்கிறேன். இப்படியான சொற்பிரயோகங்கள் ஒருபோதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லையே என்ற அவா எழுகிறது. உண்மையை யதார்த்தத்தை அப்படியே சொல்லும் நவீன இலக்கியமும் கட்டுக்களை உடைக்கும் பின்நவீனத்துவ இலக்கியமும் பண்புள்ள சமூகத்தையும் அந்தச் சமூகம் நாகரீகமான வார்த்தையையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
ஒரு பிரதியின் அழகியலை விடுத்து சமூகத்தின் ஒழுக்கத்திற்கான விழிப்புணர்வு அவசியமில்லை என்ற வாதம் வைக்கலாம். இலக்கியம் அகத்தை விசாரம் செய்து அதன் மூலம் வாழ்வியலின் தரிசனமொன்றை தரவேண்டும் என்று தீவிர இலக்கியவாதிகள் பேசலாம். தீபனைச் சுற்றி அப்படித்தான் ஒரு உலகம் இருந்தது. அதை அப்படியே தந்திருப்பதால் ஆசிரியர் எந்த சமரசமும் செய்யவில்லை. மாற்ற முடியாதது என்று தட்டிக்கழிக்க முடியாத வகையில் தீபன் போல ஒரு சிறுவனை வழிப்படுத்தும் நல் சமுதாயக் கட்டமைப்பை ஏற்படுத்துவது அனைவரின் கடமையும் கூட. பலர் சேர்ந்த கூறுதானே சமூகம் என்ற பண்பாட்டுத் தளத்தை உருவாக்குகிறது. மலேசியாவில் ஒரு கம்பத்தில் நிகழும் இந்தக் கதை அந்தத் தமிழர் வாழ்வியலை காட்டுவதுடன் அதன் அவலத்தையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் எம்முன் வைக்கிறது.
***
ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

