Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்தம்மைத் தாமே கண்டடைதல் - உலகப் பார்வையை உருவாக்குதல்

தம்மைத் தாமே கண்டடைதல் – உலகப் பார்வையை உருவாக்குதல்

ரூபன் சிவராஜா

(ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு | தொடர் 15)

நடனம், இசை, நாடகம் அல்லது வேறெந்தக் கலை வடிவங்களும் அவை சார்ந்த இயங்குதலும் படைப்புருவாக்கமும் அதனை உருவாக்கும் நபரின் உலகப் பார்வையை, அதாவது அந்த நபரின் சித்தாந்தத்தையும் உள்ளடக்கியது. அத்தோடு கலை வடிவத்தின் ஊடாக நுகர்வோருக்கு அவை கடத்தவும்படுகின்றன.

மனிதனின் தன் பற்றியதும், மனிதர்கள், சமூகம், உலகம் பற்றியதுமான புரிதல், ‘அழகியல் அனுபவத்தின்’ மூலம் வளர்கிறது என்பதை Boal ஆழமாக விவரிக்கின்றார். கலைச் செயற்பாடு, படைப்பாக்கப் பரீட்சார்த்த முனைப்பு என்பன குறித்த புரிதல், கலைமனதின் புலலுணர்தல் மூலம் சாத்தியமாகுகின்றது என்கிறார்.

பிக்காசோவின் ‘நான் தேடுவதில்லை, கண்டடைகிறேன்’ என்ற கூற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் உண்மையான கண்டடைவு செயல் வழியாக மட்டுமே நிகழும் என விளக்குகிறார். அழகியல் அனுபவம், உணர்வு, உருவாக்கம், பரிசோதனை போன்ற செயற்பாடுகள், மனிதர்கள் உலகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வழிசெய்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அளவுகளிலும் வழிகளிலும் பிக்காசோவாக இருக்கின்றார்கள் என்றும் Boal கூறுகின்றார்.

புலலுணர்தலில் மூன்று வகைகள் வரையறை செய்யப்படுகின்றன. வாழ்வதற்கும் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கும், ஆள்புலத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், மனிதர்களுக்கும் எல்லா வகையான விலங்குகளுக்கும் வாழும் உலகு பற்றிய புலணுணர்தல் இன்றியமையாதது. தகவல் – உள்வாங்கும் நிலை (Information – The receptive level), அறிவு மற்றும் தந்திரோபாய முடிவெடுத்தல் – இது கூடுதல் செயற்பாட்டியக்க நிலை (Knowledge and tactical decision-making – the more active level), நெறிமுறை உணர்வுகள் – மனித நிலை- (Ethical Consciousnes – the human level) எனவாகப் புலணுணர்தலின் படிநிலைகளை வரையக்கலாம்.

தகவல் – உள்வாங்கும் நிலை 

பொருட்களின் மீது ஒளி பிரதிபலிக்கிறது, எமது கண்களின் படிக வில்லைகளின் (crystalline lens – ஒளிக்கதிர்களை விழித்திரையின் மீது குவியச் செய்யும் கண்ணின் ஒரு பாகம்) வழியாகச் சென்று, விழித்திரையைத் தூண்டுகிறது. இந்தத் தகவல், பார்வை நரம்பிற்குத் தெரிவிக்கப்படுகின்றது. இது மின்வேதியியற் தகவல், மூளைப் பகுதியை அடையும் வரை பரவச் செய்கிறது. அதனால் எமக்கு (கண்களுக்கு) முன்னால் உள்ள பொருள் எமது கண்களுக்குப் புலப்படுகிறது. நாம் பார்த்த அந்தப்பொருள் தொடர்பான செய்தி மூளைக்குக் கிடைக்கப்பெறுகின்றது. இந்தத் தகவல் காப்பகப்படுத்தப்படவில்லை (சேமிக்கப்படவில்லை) – மாறாக, இது ஏனைய நரம்பியற் சுற்றுகளுடன் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றது. ஏனைய புலனுணர்தல்களிலும் இதுவே நிகழ்கிறது. 

அறிவு, தந்திரோபாய முடிவெடுத்தல் – கூடுதல் செயற்பாட்டியக்க நிலை:

இது ஒரு நபர் புதிய தகவலை அல்லது முன்பு பெற்ற அதே அநுபவத்தை ஒத்த அல்லது வேறு நிரப்புதகவல்களுடன் தொடர்புபடுத்துவதனூடாக வினை-எதிர்வினை ஆற்றத்தகுந்த முடிவுகளை எடுக்கிறார். இந்த இரண்டு நிலைகளிலும் மனிதர்களும் மிருகங்களும் ஒன்றே. இரண்டும் முடிவெடுக்கின்றன (Decide), வினையாற்றுகின்றன (React),

தருணங்களில் முடிவுகள் உள்ளுணர்வு அல்லது உயிரியல் சார்ந்தவையாக அமைவன. பரிசோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும் எலிகள், பூனையின் முகத்தையோ நிறத்தையோ பார்த்ததில்லை, அதன் தன்மையை அறியாதவை. எலிகளின் பார்வையில் பூனைகள் தீயவை. பூனையின் வாசனையை உணர்ந்தால் அவை பயந்து ஓடும். தமது எதிரி என்று அறிந்திராத நிலையிற் கூட இதுவே நிகழ்கிறது. காரணம் இந்த வினையாற்றல் உயிரியல் ரீதியாக நிகழ்கிறது. பூனையின் மணத்தை எலி நுகர்வதால் அது பயந்து ஓடுகிறது. 

மனிதர்களின் அறிவு என்பது, ஒரு அகநிலை மதிப்பீட்டுடன் இணைந்துள்ளது. அது தவறுகளுக்கு வழிவகுக்கக்கூடியது. மனிதர்களுக்குள் தகவல் மற்றும் அறிவுசார் கூறுகள் ஒரு மூன்றாவது நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியது. அதனை ஒரு அனுமான உதாரணத்துடன் Boal விளக்குகின்றார்:

நான் என் வீட்டுக் கதவைத் திறந்த போது, கேளிக்கை வட்டரங்கிலிருந்து (Circus) தப்பிய ஒரு புலியைக் காண்கிறேன். எனது பார்வை நரம்பு புலியின் பிரசன்னத்தினைப் பதிவு செய்கின்றது. நான் அந்தத் தகவலை உள்வாங்கிக் கொள்கின்றேன். என் புலன்கள் இயங்கத் தொடங்குகின்றன. புலி நெருங்குகின்றது. மின்-வேதியல் நரம்பின் ஊடாகத் தகவல் துல்லியமாகத் தொடர்கின்றது. புலி உறுமுகிறது. எனக்கு அதன் உறுமல் கேட்கின்றது. அதன் பொருள் என் செவிப்புலன் இயங்குகின்றது. புலி அதன் பெருவாயைத் திறக்கின்றது. என்னுடைய முகரும் சுரப்பிகள் செயற்படுத்தப்பட அதன் சுடுகாற்றை நான் உணர்கிறேன். இப்போ எனது முப்புலன்களான கண், காது, மூக்கு ஆகியவற்றின் தொழிற்பாட்டினை நான் உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். செஷியர் பூனையைப் போல (Cheshire cat) புலி உணவுக்குழாயைத் திறக்கிறது. என்னால் அனைத்தையும் மிக அருகாமையிற் பார்க்க முடிகிறது, அதனுடைய கூரான பற்களுக்கு மிக நெருக்கமாகவுள்ளேன். புலி தன் தாடைகளை என் மீது இறுகப் பற்றிக்கொள்ளும் வரைதான் எல்லாப் புலனுணர்தலும் துல்லியமாக நிகழ்ந்தன. அதன் பின் எந்த புலனுணர் தகவல்களும் என்னை அடையவில்லை. 

இந்த உணர்ச்சித் தகவல் நிலையில் எனது மனச்செயல்முறை நிறுத்தப்பட்டால், நான் மேலும் திணறியிருப்பேன். ஆனால் புலிகளைப் பற்றிய பல முக்கியமான தகவல்களை ஏலவே என் மூளையிற் சேமித்து வைத்திருக்கிறேன். புலி ஆபத்தானது என்பதை அறிவு மட்டத்தில் முன்பே அறிந்திருக்கின்றேன். நான் கதவைச் சாத்தி அதனைப் பூட்ட முடியும் என்பது நான் அறிந்துவைத்திருந்த விடயம். எனக்கு கால்கள் இருப்பதும் தெரியும், அதனால் வீட்டின் மேற்தளத்திற்கு ஓடிச் சென்று தஞ்சம் புகலாம் என்பதும் நான் அறிந்ததுதான். பூனையிடமிருந்து ஓடித்தப்பும் எலியைப் போல என்னாலும் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் இயங்க முடியும் என்பது நான் அறிந்த விடயம்தான்.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு மனிதனாக, நான் ஆக்கபூர்வமான பல முடிவுகளையும் எடுக்க முடியும், படைப்பாக்கம் மிக்கதும் மூலோபாய ரீதியிலானதுமான முடிவுகளை எடுக்கமுடியும். வெறும் தந்திரோபாய ரீதியிலான முடிவுகளை மட்டுமன்றி வேறு தீர்வுகளையும் தேடமுடியும். கண்டடைய முடியும். என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய முடியும். எனது அலமாரிப் பெட்டிக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருக்குமெனில், அதனை எடுத்துப் புலியைச் சுட்டுக் கொல்லவும் முடியும்.

நெறிமுறை உணர்வுகள் – மனித நிலை

(Ethical Consciousnes – the human level)

இந்த நிலை மனிதனுக்கு மட்டுமே உரித்தானது அல்லது வாய்க்கப்பெற்றது. இது நாம் எடுக்கும் முடிவுகளுக்கு அர்த்தத்தையும் பெறுமதியையும் அளிப்பதை உள்ளடக்குகின்றது. மனிதன் தன்னைத் தானே சுயவிசாரணைக்கு உட்படுத்துகின்ற நிலை. இது சந்தேக நிலையையும், அதன் தொடர்ச்சியாக மனிதன் சீர்தூக்கிப் பார்ப்பதனூடு எடுக்கக்கூடிய அறநெறி சார்ந்து நியாயப்படுத்தப்படக்கூடிய தெரிவு(முடிவு) சார்ந்தது.

நான் புலியைக் கொல்ல வேண்டுமா? புலி தன் பசியைப் போக்க மட்டுமே என்னைத் தின்ன விரும்புகிறது. எனக்கு எந்தத் தீமையையும் உண்டாக்குவது அதன் நோக்கமல்ல. அது மனிதனையோ அல்லது மிருகத்தையோ உண்பது இயற்கையான அம்சம். நான் என்னைக் காப்பாற்றும் அதேவேளை புலியைக் கொல்லாமல் விட்டால், முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் என் பக்கத்து வீட்டுக்காரரின் மகனை அந்தப் புலி தின்றுவிடும் அபாயம் உள்ளது. அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பதா? என் எழுத்து மேசையைப் புலியின் தலையில் எறிந்து அதனைத் திடுக்கிடச் செய்வதா? கத்தவா? இந்த மூன்றாவது நிலை அறநெறி சார்ந்தது. இது ஒவ்வொரு செயலுக்கும் பெறுமதியை வழங்குவதோடு, மனித எதிர்வினைகளின் நிகழ்காலத்தில் மட்டுமே நின்றுவிடாமல், செயல்களில் மனிதனின் எதிர்காலத்தை முன்னிறுத்துகிறது. இது ஆக்கப்பூர்வமானது. அது மாற்று வினைகளையும் மாற்றுத் தெரிவுகளையும் அடைவுகளையும் கோருகின்றது. இத்தகு தார்மீக நெறிமுறை மட்டத்தில்தான் மக்கள் அரங்க (Forum Theatre) அமர்வு செயற்பட வேண்டும். சிறந்த எண்ணங்கள் மட்டும் போதாது, அவை நெறிமுறைகளுக்கு அமைய நியாயப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே நிலவும் சிந்தனைகளுக்குள் நின்றுகொண்டு இயங்குவது போதாது, புதிதான கண்டடைவுகள் அவசியம்.

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கச் செயற்பாட்டில், புலனுணர்தலின் அனைத்து நிலைகளையும் விரிவுபடுத்துவதும், பெருக்குவதும் இன்றியமையாதது. குறிப்பாக அறம்சார் நெறிமுறைகள் முதன்மையானவை. அதாவது எமது தெரிவுகள் மனசாட்சி, அறிவு சார்ந்த பிரக்ஞைபூர்வமானவையாக இருப்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். ஏலவே நிலவுகின்ற அல்லது புதிதாக உருவாக்கப்படுகின்ற வாய்ப்புகளாக இருப்பினும் எந்ததொரு சூழலிலும் எப்போதும் அதற்குள் இவை குறித்த அக்கறையுடனான தெரிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். 

கலையின் அழகியல்: புரிதலுக்கான புதிய வடிவம் 

ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் என்பது ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் தவிர்க்கமுடியாத உள்ளீடு. புரிதலுக்கான புதிய வடிவத்தை அது உருவாக்குகின்றது, புலன்கள் மற்றும் நுண்ணுணர்வு ஊடாக மனிதர்களை உணர வைக்கின்றது. ஒட்டுமொத்தமாகப் புதிய சமூகப் பார்வையை உருவாக்குகின்றது, சமூக யதார்த்தம் பற்றிய புரிதலை உண்டாக்குகின்றது. ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் எளிமையான உணர்வுகளை மட்டுமன்றி பரந்த அறிதலனுபவத்தினை வழங்குவதோடு அறம்சார் முடிவுகளையும் முன்வைக்கின்றது. அது வார்த்தையின் குறியீட்டு மொழியையும், உணர்வுகளின் சைகை மொழியையும் உள்ளடக்கிய உணர்ச்சி மற்றும் அறிவு மட்டத்திலான தூண்டுதல்களை உருவாக்க முயல்கிறது.

உவமை: மனிதர்களும் ஹோமினிட்களும் (ஆதிமனிதர்கள்)

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியலில், ஒடுக்கப்பட்டவர்கள் தமது உவமை உலகத்தை முழுமையாக உருவாக்கக்கூடிய நிலைகளை உருவாக்கும் முயற்சிகளுக்குக் கவனக்குவிப்பு கொடுக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனை, கற்பனை, குறியீட்டுருவாக்கத் திறன், கனவு காணும் திறன் மற்றும் உருவகங்களை உருவாக்குவதற்குரிய புறநிலைகளை ஏற்படுத்துவது முக்கியமானது. இப்புறநிலை ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து, அவர்கள் மாற்ற விரும்பும் யதார்த்தத்தைக் காண அவர்களை அனுமதிக்கிறது – சமூக யதார்த்த உலகில் அவர்கள் பங்கேற்பதிலிருந்து விலகாமல் இருக்க உதவுகின்றது. யதார்த்தத்தை கண்டடைவதற்குச் சற்று எட்டிநின்று பார்ப்பது அவசியம். கற்பனை, குறியீட்டு மொழி, சொற்களைக் கண்டடைவதனூடான உவமை உருவாக்கம், குகை ஓவியம், நடனம், நாடகம் ஆகியவற்றை கண்டுபிடித்தபோது, ஹோமினிட்கள் தம்மை மனிதர்களாக மாற்றிக் கொண்டனர். முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids) என்று சொல்வதுண்டு. 

பிளேட்டோ ‘பரிபூரண கருத்துலகம்’ பற்றி பேசினார், இது உணர்ச்சிகரமான, யதார்த்த உலகில் இல்லாத ஒரு உலகம். பரிபூரண கருத்துலகம் நாம் வாழும் முழுமையற்ற இந்த உலகிற்கு முற்றிலும் எதிராக நிற்கிறது. இது உணர்ச்சிகரமான யதார்த்தங்களால் நிரப்பப்பட்டது. வேறு வார்த்தைகளிற் சொல்வதானால் நாம் கற்பனை செய்திருக்கும் ஒரு (கருத்தியல்) சிறந்த உலகம், உண்மையான இந்தப் பௌதீக உலகில் இல்லை என்பது அதன் பொருள்.

லோகோஸ், ஏதோஸ், பாதோஸ் வாதமுறைகள் 

சோக்ரடீஸ் ஏற்கனவே லோகோஸ் (Logos) என்ற கருத்தை நிறுவியிருந்தார். ‘லோகோஸ்’ என்பது தர்க்க நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாதமுறை (Rhetorical means of proof). இந்தச் சொல்லின் அடிச்சொல் கிரேக்க மொழியைச் சேர்ந்தது. இது அடிப்படையில் இருபொருளைச் சுட்டுகிறது. ‘சொல்’, ‘பகுத்தறிவு’ (Reason) ஆகிய பொருட்களைக் கொண்டுள்ளது. விவாதிக்கும் போது அல்லது எழுதும் போது லோகோஸ் பயன்படுத்தப்படுவது என்பது உண்மை, ஆதாரம், புள்ளிவிவரம், மற்றும் தர்க்க ரீதியான காரணங்களை கொண்டு ஒருவரை நம்ப வைப்பதைக் குறிக்கிறது. இதன் அடிப்படையில் பிளேட்டோ தனது கோட்பாட்டை அமைத்தார். கவித்துவ உதாரணமாகச் சொல்வதானால் ‘நடனம்’ அசைவின் லோகோஸ், ‘இசை’ ஒலியின் லோகோஸ், ‘நாடகம்’ வாழ்க்கையின் லோகோஸ் என்று கூறலாம். ஒழுக்கம் என்பது மனித நடத்தையின் வடிவவியல் (Geometry)இ அறம் என்பது முழுமையின் கனவு என்று விளக்குகின்றார் அகுஸ்ரூ போல்.

லோகோஸ் விவாதமுறையோடு எதோஸ், பாதோஸ் (Ethos, Pathos) எனும் கருத்தியல்களும் (வாதமுறைகள்) உள்ளன. எதோஸ் என்பது நம்பகத்தன்மையைப் பற்றியது. இது வாதத்தை முன்வைப்பவரின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது ஒருவரின் அல்லது ஒரு குழுவின் பொதுவான அறப்பண்பையும், வாழ்க்கை முறையையும் குறிக்கலாம். தொடர்பாடலில்; அறிவு, அனுபவம், நேர்மை வெளிப்படும்போது ஏதோஸ் வலுப்படுத்தப்படுகிறது. அதாவது கருத்தியல் வாதங்கள், உகந்த உடல் மொழி மற்றும் நிபுணர்களை மேற்கோள் காட்டுதல் ஆகியவற்றின் மூலம் அது நிகழ்த்தப்படுகின்றது.

‘லோகோஸ்’ என்பது மனித நுண்ணறிவினதும் புரிதலினதும் முக்கியமான அங்கம் என்று கருதினார் சோக்கிரட்டீஸ், லோகோஸைப் பின்பற்ற ஊக்குவித்தார். அது மனித மனதின் (ஆன்மாவின்) கீழ்ப்படிதல்களை அறிவின் இயங்குதலுக்கு உட்படுத்துவதை உள்ளடக்கியது. லோகோஸ் நியாயமான கொள்கைகளையும் ஞானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனித அறிவு, இயற்கைக்கு இசைவான முடிவை அல்லது இலக்கை கொண்டுள்ளது என்று சோக்கிரட்டீஸ் கருதினார். அது இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல, உண்மை மற்றும் இருத்தலியலின் ஆழமான புரிதலுக்குரிய சுட்டியாகவும் அதனை முன்வைத்தார்.

பாதோஸ் உணர்ச்சி சார்ந்த அழைப்புரையைக் குறிக்கிறது. உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் பார்வையாளர்களை அல்லது பங்கேற்பாளர்களை நம்பவைக்க அல்லது ஈர்ப்பதற்கு இந்த வாதமுறை-உரைமுறை பயன்படுத்தப்படுகிறது. எதோஸ் என்பது ‘நம்பிக்கை’, லோகோஸ் என்பது ‘தர்க்கம்’, பாதோஸ் என்பது ‘உணர்ச்சி’ எனச் சுருங்கக் கூறலாம். பாதோஸ் முறைமையானது வாதம், இலக்கியம், திரைப்படம் மற்றும் பிற கதையாற்றல் கலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. பாதோஸ் வாதமுறை உயிரோட்டமான விளக்கங்கள், உருவகங்கள், கதைகள் அல்லது பேச்சாளரின் குரற்பயன்பாட்டின் மூலமும் உரிய வடிவம் பெறுகின்றது.

கலையும் உவமைகளும்

பரிபூரணத்துவம் எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கின்றது, யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித்ததும் அடையமுடியாததுமான உலகம் இல்லை என்று கருதினார் அரிட்டோட்லஸ். கலையும் உவமைகளும் மனித வளர்ச்சியிலும் விழிப்புணர்விலும் முதன்மை வகைபாகத்தைக் கொண்டுள்ளன. அறிவாற்றலுக்கான தேவையின் அழுத்தம் காரணமாக ஹோமினிட்களின் மூளைவளர்ச்சி நிகழ்ந்தது. அதன் பரிணாமமே ‘மூளைக்கோளம்’ (Cortex) எனப்படும் மூளையின் வெளிப்பகுதியை மூடி இருக்கும் கூறு உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தது. அங்கு சிந்தனைகள், மதிப்பீடுகள், கலை மற்றும் அறிவியற் செயலாக்கம் ஆகியன இடம்பெறுகின்றன. கலை என்பது உலகத்தை மறு உருவாக்கம் செய்யும் மனிதத் திறனின் வெளிப்பாடு. மனிதனின் கலைப்படைப்பாக்கத்தின் தொடக்கமான குகை ஓவியங்கள், மனிதன் வேட்டையாடிய விலங்குகளின் உவமைப் பிரதிபலிப்பாகும். 

ஹோமினிட்கள் மனிதர்களாக மாறியபோது, மூளை-மனம், பொருள்-உயிர் எனவாகப் பகுத்தறியும் நிலை உருவானது. புதிய அறிவுசார் தேவைகளின் அழுத்தம் காரணமாக பௌதீகமும் உடற்கூறியல் மூளையும் மூளைக்கோளத்தினை உருவாக்கின. அங்குதான் சிந்தனைகள், மதிப்பீடுகள், கலை, அறிவியல், மாற்று வழிகளுக்கான ‘உவமை உலகச்’ செயலாக்கம் உருவானது. இப்படித்தான் செயல்கள் உருவாகுகின்றன. அதாவது தேவைகளின் அழுத்தம் புதிய யதார்த்தங்களை உருவாக்குகிறது.

கலை என்பது அடிப்படையில் உவமை. பரந்த பொருளில் அது எல்லாவகையான மொழிபெயர்ப்புகளையும் குறிக்கின்றது. ஒரு சூழமைவிலிருந்து ஒன்றின் இருப்பை இன்னொரு சூழமைவிற்கு நிலைமாற்றும் செயல். ஓவியமும், சிற்பமும் உவமைகளாகும். ஏனெனில் அவை அசலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அதேவேளை ஒத்ததன்மையுடனும் வேறொன்றாகவும் உருவாக்கம் பெறுகின்றன. இதே விடயம்தான் திரைப்பட உருவாக்கத்திலும் நிகழ்கின்றது. யதார்த்த நாடகம் அசலான உண்மையைப் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறு பாணிகள் பின்பற்றப்படினும் காட்சிப்படுத்தல், வெளிப்பாட்டு முறைமை, நேர்த்தி, அழகியல் மற்றும் உவமைகள் கலைநோக்கிற்கு வலுவூட்டுகின்றன. விலங்குகளில் மனிதன் மட்டுமே உவமை உருவாக்கி.

சமுதாயங்களில், ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான முடிவுடன், ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டவர்களின் குறியீட்டு வாழ்வை, அவர்களின் கற்பனையைக் குறைக்க முயல்கின்றனர், அவர்களை எந்தவொரு வேறு நபராலும் இட்டுநிரப்பக்கூடிய இயந்திர வேலைக்கு ஒப்படைக்கின்றனர். அவர்களின் பெயர்கள், எண்களாக மாறுகின்றன. தகமையானது எண்ணிக்கையாக மாறுகிறது, மனிதன் ரோபோவாக மாறுகிறான். 

சொல், உருவகம், ஒலி 

ஒடுக்கப்பட்டோருக்கான அழகியலானது உவமைச் செயற்பாடுகள், குறியீட்டு மொழிகள், நுண்ணறிவு, உணர்திறன் என்பவற்றின் விடுதலை மற்றும் வலுப்படுத்தலை இலக்குகளாகக் கொண்டுள்ளது. நாம் வாழும் உலகு பற்றிய பார்வையை விரிவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. அது சொல், உருவகம், ஒலி ஆகியனவற்றின் ஊடாக மானிடநேய நெறிமுறையால் வழிநடத்தப்படுகின்றது.

நாடகம் என்பது கற்றலுக்குப் பொருத்தமான மிக இயல்பானதும் முதன்மையானதுமான வடிவமாகும். ஒரு குழந்தை நாடக அம்சங்களை இலகுவில் உள்வாங்கப் பழகுகின்றது, விளையாடுகிறது, கதாபாத்திரங்களை நடிக்கிறது. உருவங்களைப் பார்த்து ஓவியம் வரைவது, பாடுவது மற்றும் நடனம் ஆடுவது உட்பட்ட இன்னபிற கலைகளின் மூலம் வாழ்விற் பல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறது. இத்தகு கற்றலும் பயிற்சிகளும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இன்றியமையாதவை. எந்தவகையில் இன்றியமையாதவை என்ற கேள்வியை எழுப்புவோமானால், இந்தச் சமுதாயத்தின் தேக்கமடைந்த இருப்பினைத் தவிர்ப்பதற்காக என்ற பதிலை முன்வைக்கின்றார் அகுஸ்ரூ போல். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அரங்கம் – அதன் நிகழ்த்துமுறைமுறை சமூகத்தில் நிலைபெற்ற கட்டமைப்பகள், மதிப்பீடுகள் மீது கேள்வி எழுப்புகின்றது. 

ஒரு குழந்தை வளரும் காலத்தில் இந்தச் சமுதாயத்தில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கற்றுக்கொள்ளலுக்குள் கேள்விகளை எழுப்புகின்ற அம்சமும் தவிர்க்கமுடியாததாக இணைந்திருக்கின்றது. அரங்கச் செயற்பாட்டின் பயிற்சிகளும் விளையாட்டுகளும் ஒழுக்கம், சுதந்திரத்தின் ஒருங்கிசைவை உள்ளடக்கியவை. ஒவ்வொரு விளையாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டிய தெளிவான விதிகள் உள்ளன. ஆனால் விதிகளைப் பின்பற்றும் அதேவேளை படைப்புத்திறனும் சுதந்திரமும் அவசியமானவை.

‘ஒவ்வொரு விளையாட்டும் சமூக வாழ்க்கைக்கான பயிற்சியாகும். அரங்க விளையாட்டும் அத்தகைய பயிற்சியே. அவை சமூக வாழ்க்கைக்கான பயிற்சியுமாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின்; விளையாட்டுகள் இருத்தலுக்கான (Existence) பயிற்சியாகும். நெறிமுறை இல்லாமல், சமூக வாழ்க்கை இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. விளையாட்டுகள் சமூக வாழ்க்கைக்கான உவமைகள்’ என்கிறார் Boal.

சாத்தியமான கற்பித்தல்

எமது அழகியல் நரம்புகளைச் சாத்தியமான கற்பித்தல் மூலம் செயற்படுத்த வேண்டும். படங்களைப் பார்த்தல், காணுதல் ஊடாக – ஒலி மற்றும் இசை வழியாக – கேட்டல் மற்றும் செவிசாய்த்தல் ஊடாக – வார்த்தைகளின் வழியாக (கவிதை மற்றும் கதை) அனைத்து அழகியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளின் வழி நாம் எமது அறம்சார் நெறிமுறைகளைத் தேடவேண்டும். 

மூளையின் ஒரு பகுதியில் நிகழும் தூண்டுதல் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பரவுகிறது: இசையின் ஒலிக்கூறுகள் கேட்கும் திறன்களை மட்டுமல்லாமல் காட்சித்திறன்களையும் உருவாக்குகின்றன. சதுரங்க விளையாட்டு நிபுணர்கள் படைப்பாற்றல் உத்திகளுக்கான கற்பனைத் திறனை வளர்ப்பதற்கு பாரம்பரிய இசையைக் கற்கின்றனர். ஐன்ஸ்டைன் தனது கணிதத் தீர்வுகளை அடையத் தாமதமாகும் தருணங்களில் வயலின் இசைத்தார். வயலினின் இசைக்கோர்வையில் தனக்கு அவசியப்பட்ட தூண்டுதலைக் கண்டுணர்ந்த போது கணிதத்திற்குத் திரும்பினார். இசை என்பது கணிதத்தின் ஒலி. ஒலிகளாகக் கோர்க்கப்பட்ட கணிதம். ஒட்டுமொத்த நரம்பு அமைப்பிலும் அழகியல் நரம்புகள் மிகவும் முக்கியமானவை. அழகியல் நுண்ணுணர்வானது புலனுணர்தலை மட்டுமல்லாமல், உணர்ச்சிகள், காரணம், தீர்வுகள், முடிவுகள் மற்றும் விழுமியங்களையும் உள்ளடக்கியது.

உடலின் ஆற்றல் வளர எப்படி விளையாட்டு வலிமை சேர்க்கின்றதோ, அதேபோன்று மனதின் ஆற்றலை விரிவாக்கம் செய்கிறது கலை. இந்த அழகியற் செயற்பாட்டின் விதைகள் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அசல் வடிவத்தில் உள்ளடங்கியுள்ளன. உருவக விளையாட்டுகள் மற்றும் உத்திகள் ஏலவே காட்சிக் கலைகளாகும். அவற்றைக் கலைப்பொருளாக மாற்ற வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ள வேலை. தாளம் சார் விளையாட்டுகள் மற்றும் அதுசார் உத்திகளுக்குள் ஏற்கனவே இசை உள்நிறைந்துள்ளது. அவற்றை பாடல்களாகவும் சிம்பொனிகளாகவும் மாற்றுவது அதில் எஞ்சியுள்ள வேலை. 

இது குழந்தைகளின் கற்றற் குறைபாடுகளைச் சரிசெய்யக் கூடுதல் கலை வகுப்புகளை ஏற்படுத்துவது பற்றியதல்ல. அல்லது கிரேக்கச் சிலைகள் அல்லது நிர்வாண மாதிரிகளை சிறந்த முறையில் வரைதல் (Greek statues or nude models) நிறம் மற்றும் கோடுகளைக் கற்றுக்கொள்ளல் பற்றியதுமல்ல. இது முற்றிலும் மனிதர்களின் உணர்வுகளை, அவர்களின் கலை நயங்களை மற்றும் அவர்களின் மழுங்கிய அறிவை விரிவுபடுத்த உதவுவது பற்றியதாகும்.

உண்மையின் ஒளி 

அழகு என்பதற்குப் பின்வரும் விளக்கத்தினைக் கொடுக்கிறார் தத்துவவியலாளர் ஹெகல்: உண்மையின் ஒளிர்வு புலன்களின் மூலம் உணரக்கூடியதாக மாறுகிறது. தோற்றங்களின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை அக்கூற்றுக் குறிக்கின்றது. ஆனால் ஹெகலின் உண்மை பற்றிய இந்தக்கூற்று அடிப்படையில் கடவுள் வெளிப்படுவதைக் குறிப்பது. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு மனிதர்களிடமிருந்து மனிதர்களாற் கண்டடையப்படும் உண்மையைக் காண்கிறது. அது மனித அறநெறி சார்ந்தது. அறம் என்பது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதாகும். அத்தோடு அதுவொரு விழிப்புணர்வு மற்றும் விருப்புகள் சார்ந்த அம்சம், வெளிப்பாடு அல்ல. ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அழகு மறைந்திருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் ஒரு கலைஞன். இத்தொடரில் முன்னர் கூறியதுபோல எல்லா மனிதர்களும் ஒரு அழகியற் படைப்பினை உருவாக்க முடியாதபோதிலும், அனைவரும் தங்களை வளப்படுத்தும் ஒரு அழகியற் செயல்முறையை உருவாக்க முடியும்.

கலாச்சாரத் தேடல் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் மட்டுமல்ல. பிற கலாச்சாரங்களின் அறிவார்ந்த கூறுகளை உற்றுணர்வதற்கானது மட்டுமல்ல. எமது சொந்த அடையாளத்தை உருவாக்கவுமாகவே கலாச்சாரத் தேடல் எம்மிடையே உள்ளது. நாங்கள் எதனை உருவாக்குகின்றோம் என்பதிற்தான் எமது தனித்துவ அடையாளமும் பெறுமதியும் தங்கியிருக்கின்றது. மற்றவர்கள் கண்டுபிடித்ததை மட்டுமே நாங்கள் உருவாக்கினால் அல்லது செய்தால், நாம் மற்றவர்களின் நகலாக இருப்போமே அன்றி அது ‘நாம்’ அல்ல.

கலைகளைக் கண்டடைவதும் தம்மைத் தாமே கண்டடைவதும்

நடனம், இசை, நாடகம் அல்லது வேறெந்தக் கலை வடிவமும் அது சார்ந்த இயங்குதலும் படைப்புருவாக்கமும் அதனை உருவாக்கும் நபரின் உலகப் பார்வையை, அதாவது அந்த நபரின் சித்தாந்தத்தையும் உள்ளடக்கியது. அத்தோடு கலை வடிவத்தின் ஊடாக நுகர்வோருக்கு அவை கடத்தவும்படுகின்றன.

நாம் எமக்கான கலாச்சாரத்தை உருவாக்காவிட்டால், பிற கலாச்சாரங்களுக்கு கீழ்ப்படிந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நாம் எமக்கான கலாச்சாரத்தை உருவாக்கும் போது, பிற கலாச்சாரங்கள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும், எமது நுண்ணுணர்வை விரிவுபடுத்தும். நான் யார் என்பதை அறியும் போது, நான் யார் என்பதற்கான உண்மை, மற்றவர்களைப் பற்றி அறிவதிலிருந்து என்னைக் கட்டுப்படுத்தாது. நான் யார் என்பதை அறியாதவரை, நான் என்பது இன்னொன்றின் அல்லது இன்னொருவரின் நகலாக மட்டுமே இருக்க முடியும்.

ஒடுக்கப்பட்டவர்களின் அழகியல் என்பது ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களுக்கான கலைகளைக் கண்டடைவதற்கும் அவர்கள் தம்மைத் தாமே கண்டடைவதற்கும் உதவுவதற்கான ஒரு திட்டமாகும், அதனூடு உலக தரிசனத்தைப் பெறவும் பங்களிக்கிறது. ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இன்னபிற தகவல் நுகர்வுகளுக்கு அப்பாற் தமது சொந்த உலகின் கலைத்துவ உவமைகளை உருவாக்க கலையின் அழகியல் உதவுகிறது.

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here