அ.முனவர் கான்
காஷ்மீரி மொழி கவிதைக்கு மிகவும் உகந்த ‘இசைமை’ கொண்டது. காஷ்மீரி சிறுகதை என்பது கவிதை என்ற ஆழமான வேரிலிருந்து முளைத்த ஒரு செடியாகும். கவிதை வழங்கிய தத்துவம், ஏக்கம், மனிதாபிமானம் ஆகியவையே நவீன காஷ்மீரிய சிறுகதைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
காஷ்மீரி இலக்கியத்தின் வேர்கள் மிகவும் பழமையானவை. ஆழமானவை. தஸ்தான்கள் (Dastans), லால் தெத்தின் தத்துவார்த்த ‘வாக்குகள்’ (Vakhs) மற்றும் ஹப்பா காத்தூனின் உணர்ச்சிகரமான ‘வட்சுன்’ (Vatsun) போன்ற வாய்மொழி மரபுகளே காஷ்மீரி கதையாடலின் அடித்தளமாக அமைந்தன. இருப்பினும், நவீன சிறுகதை என்ற வடிவம் காஷ்மீரில் இருபதாம் நூற்றாண்டின் பாதியில்தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. காஷ்மீரி சிறுகதை, ஒரு சிறிய புவியியல் பரப்பிற்குள் முடங்கிவிடாமல், மனித ஆன்மாவின் உலகளாவிய வலிகளையும், நம்பிக்கைகளையும் பேசுகிறது. 1948-ல் தொடங்கிய அந்தப் பயணம், இன்று நவீனத்துவத்தையும், போர்க்கால அதிர்ச்சிகளையும் கடந்து, நினைவுகளின் வழியாக நல்லிணக்கத்தைத் தேடி நகர்கிறது.
காஷ்மீர் என்பது வெறும் செய்தித்தாள்களில் வரும் மோதல் செய்திகள் மட்டுமல்ல; அது “கதை சொல்லும் ஒரு தொட்டில்” என்பதை இந்த இலக்கிய வரலாறு நிரூபிக்கிறது. போராட்டங்களுக்கு நடுவிலும் காஷ்மீரிகள் தங்கள் கதைகளை நுட்பமான உரைநடையில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
காஷ்மீரி சிறுகதைகளின் ஆன்மாவாகத் திகழும் ‘காஷ்மீரியம்’ என்ற பண்பு சூஃபி கவிதை மரபிலிருந்து வந்ததே. அரசியல் பிளவுகளையும் தாண்டி மனிதநேயம் வெளிப்படுவதற்கு இந்தச் சூஃபி கவிதை மரபு வழங்கிய கலாச்சார அடித்தளமே காரணம் எனலாம் .
1948-ல் தீனநாத் நாதிம் எழுதிய ‘ஜவாபி கார்ட்’ காஷ்மீரியின் முதல் நவீன சிறுகதையாகக் கருதப்படுகிறது. இது வெறும் புனைவல்ல; காஷ்மீரின் நவீன இலக்கிய விடியலின் அடையாளம். 1949 முதல் 1952 வரை ‘க்வோங் போஷ்’ (குங்குமப்பூ) இதழ், நாதிம், சோம்நாத் ஜுத்ஷி போன்ற முன்னோடிகளின் படைப்புகளை வெளியிட்டு ஒரு முறையான மேடையை அமைத்துக் கொடுத்தது.
இந்திய சுதந்திரக் காலகட்டத்தை ஒட்டி காஷ்மீரில் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ பெரும் செல்வாக்கு பெற்றது.ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் தாக்கத்தால் உருவான ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக மாற்றத்தை முன்னிறுத்தியது.
நாதிமின் ‘ஜவாபி கார்ட்’ கதையில் வரும் ‘சூன் தெத்’ என்ற முதிய பெண்மணி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது அன்றைய காலக்கட்டத்தின் புரட்சிகர மாற்றத்தைப் பிரதிபலித்தது.
சோம்நாத் ஜுத்ஷியின் ‘யெலி போல் காஷ்’ (ஒளி உதயமானபோது), பழைய பிற்போக்குச் சிந்தனைகள் மறைந்து சோசலிசச் சிந்தனைகள் உருவாவதைச் சித்தரித்தது
இந்தக் காலகட்டத்தின் முக்கியக் கருப்பொருள்களாக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான குரல் ஆகியவை இருந்தன. அர்ஜுன் தேவ் மஜ்பூர், அஜீஸ் ஹாரூன் மற்றும் நூர் முகமது ஆகியோர் இந்த மரபை முன்னெடுத்துச் சென்றனர்.
முற்போக்கு இயக்கத்தின் அரசியல் பிடியிலிருந்து விடுபட்டு, புனைகதையை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை அக்தர் மோஹி-உத்-தின் மற்றும் அமின் காமில் ஆகியோரைச் சாரும்.
அக்தர் மோஹி-உத்-தின்: இவரது ‘சத் சங்கர்’ (1955) மற்றும் ‘சோன்சல்’ தொகுப்புகள் காஷ்மீரி சிறுகதைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கின. யதார்த்தமான கதாபாத்திரங்களையும், மனித மனதின் சிக்கல்களையும் இவர் நுட்பமாக கையாண்டார். அமின் காமில்: சமூகத்தின் பாசாங்குத்தனத்தை பகடி (Satire) மூலம் வெளிப்படுத்துவதில் இவர் வல்லவர். இவரது ‘கோக்கர் ஜங்’ (சேவல் சண்டை) கதை இன்றும் மிகவும் புகழ்பெற்றது.
இந்தக் காலகட்டத்தில் உமேஷ் கவுல், குலாம் அஹ்மத் சோபி மற்றும் தீபக் கவுல் போன்ற எழுத்தாளர்கள் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தில் புதிய சோதனைகளைச் செய்தனர். குறிப்பாக சோபி குலாம் முகமதுவின் நேர்த்தியான உரைநடையும், பன்சி நிர்தோஷின் கதை சொல்லும் முறையும் காஷ்மீரி இலக்கியத்தை செழுமைப்படுத்தின. பாரம்பரிய கதை சொல்லும் முறையைத் தகர்த்து, புதிய நவீனத்துவத்தைப் புகுத்தினார். அவதார் கிருஷ்ணா ரஹ்பர், அலி முகமது லோன் ,சந்தோஷ் ஆகியோர் இக்காலகட்டத்தில் கதாபாத்திர உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
1960களுக்குப் பிறகு, காஷ்மீரி சிறுகதை உலகளாவிய தத்துவார்த்தப் போக்குகளை நோக்கி நகர்ந்தது. அதி-உண்மை மற்றும் குறியீட்டு வாதம் கதைகளில் இடம்பெறத் தொடங்கின. பரிசோதனை மற்றும் தத்துவார்த்த நிலைகளின் காலகட்டம். ஹரி கிருஷ்ணா கவுல், ரத்தன் லால் ஷாந்த் மற்றும் ஹ்ரிதே கவுல் பாரதி ஆகியோர் உலகளாவிய தத்துவப் போக்குகளை அறிமுகப்படுத்தினர் யதார்த்தமான பாணியைத் தவிர்த்து, குறியீடுகள் மூலம் குழப்பமான மனநிலையை விவரிக்கின்றனர். இது நேரடியாகச் சொல்ல முடியாத வலிகளைப் பதிவு செய்யும் ஒரு வழியாகும்.
ஹரி கிருஷ்ணா கவுல்: காஷ்மீரி சிறுகதையின் ஒரு மைல்கல். இவரது ‘தாஃப்’ (சூரிய ஒளி) மற்றும் ‘துக்கம் அனுசரிப்பவர்கள்’ போன்ற கதைகள் காஷ்மீரி மக்களின் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் முரண் கலந்து விவரிக்கின்றன. ரத்தன் லால் ஷாந்த்: உளவியல் ரீதியான ஆழம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்குவதில் இவர் சிறந்தவர். ‘த்ரிகோன்ஜால்’ போன்ற இவரது படைப்புகள் முப்பரிமாண சமூகப் படத்தைக் காட்டுகின்றன.
1990களில் காஷ்மீரில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பும், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
நீரஜா மாட்டூவின் “காஷ்மீரின் ஆகச்சிறந்த கதைகள்” (The Greatest Kashmiri Stories Ever Told) தொகுப்பில் உள்ள 25 கதைகளும் ‘காஷ்மீரியம்’ என்ற சொல்லுக்குப் புதிய அர்த்தத்தைத் தருகின்றன. இது வெறும் அரசியல் சொல்லாடல் அல்ல; இது ஒரு வாழ்க்கை முறை. இக்கதைகள் காஷ்மீரை ஒரு நிலப்பரப்பாக மட்டும் காட்டாமல், அதன் தனித்துவமான கலாச்சார அடையாளமான ‘காஷ்மீரியம்’ என்பதன் வழியாக அணுகுகின்றன.
கதைகளில் வரும் ‘காங்கிரி’ (குளிருக்காகப் பயன்படுத்தப்படும் தீச்சட்டி), ‘கண்டுர்’ (ரொட்டி சுடுபவர்), மற்றும் ‘சோச்வூர்’ (ஒரு வகை ரொட்டி) போன்ற குறிப்புகள் வெறும் அலங்காரச் சொற்கள் அல்ல; அவை காஷ்மீரி மக்களின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் கலந்தவை. ஜீலம் நதி மற்றும் டால் ஏரி சூஃபி ஆலயங்களில் மக்கள் கூடுவது, ஸ்ரீநகரின் சந்துகள் என காஷ்மீரின் நிலவியலும் கலாச்சாரமும் கதைகளில் வெறும் பின்னணியாக இல்லாமல், கதாபாத்திரங்களின் வாழ்வோடும் மகிழ்ச்சியோடும், துக்கத்தோடும் ஒரு அங்கமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
தொகுப்பின் ஆரம்பகாலக் கதைகள் (1940-1950) காஷ்மீரின் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு எதிரான குரலைப் பதிவு செய்கின்றன.
தீனநாத் நாதிம் மற்றும் சோம்நாத் ஜுத்ஷியின் கதைகளில், ஏழை எளிய மக்களின் எழுச்சி மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை முக்கியமாகப் பேசப்படுகிறது.
தீனநாத் நாதிம் காஷ்மீரியின் முதல் நவீன சிறுகதை “ஜவாபி கார்ட்”. இக்கதை 1947-48 காலகட்டத்தில் காஷ்மீர் மீது நடத்தப்பட்ட பழங்குடியினரின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் பின்னணியில் எழுதப்பட்டது.
‘சூன் தெத்’ என்ற வயதான பெண்மணி இக்கதையின் மையக்கதாபாத்திரம். போரின் கொடூரங்களுக்கு மத்தியில், தனது கிராமத்தைப் பாதுகாக்க அவர் காட்டும் தைரியமே இக்கதை.
“ஜவாபி கார்ட்” என்பது தகவல்தொடர்புக்கான ஒரு கருவி. போர்க்காலத்தில் ஒரு குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறியப் பயன்படும் இந்த அஞ்சல் அட்டை, கதையில் உயிர்வாழும் நம்பிக்கையின் குறியீடாக மாறுகிறது.
1940-களிலேயே ஒரு முதிய பெண்ணை வீரத்தின் அடையாளமாகச் சித்தரித்ததன் மூலம், காஷ்மீரி இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைக்கு நாதிம் வித்திட்டார். இது ஒரு சாதாரணக் கதையல்ல, காஷ்மீரிகளின் தற்காப்பு உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு புரட்சிகர ஆவணம் நாதிமின் கதையில் வரும் ‘சூன் தெத்’ என்ற கதாபாத்திரம். ஒரு முதிய பெண்ணாக இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது, அக்காலகட்டத்தில் இருந்த புரட்சிகரமான மாற்றத்தைக் காட்டுகிறது.
அமின் காமிலின் ‘சேவல் சண்டை’ கதை, இரண்டு சேவல்களுக்கு இடையே நடக்கும் சண்டை, உண்மையில் மனிதர்களுக்கு இடையே உள்ள அதிகாரப் போட்டி, பொறாமை., மற்றும் சமூகப் பிரிவினையை எள்ளி நகையாடுகிறது. சாதாரண மக்களின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி பாசாங்குத்தனத்தின் திரைகளை அவர் அகற்றினார். பிடிவாதம் எப்படி ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக்குகிறது என்பதை காமில் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார்.
மனிதர்கள் எப்படித் தங்கள் தோல்விகளை மறைக்க மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள் என்பதையும், சிறிய வெற்றிகளில் எப்படித் தங்களை மேலானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதையும் இக்கதை உளவியல் ரீதியாக அணுகுகிறது.
நாதிமின் கதை வெளிப்புற மோதலையும் (யுத்தம், ஆக்கிரமிப்பு), சமூகத்தின் கூட்டு வீரத்தையும் பேசுகிறது. இது ஒரு லட்சியவாத கதையாகும். காமிலின் கதை உட்புற முரண்பாடுகளையும், மனித இயல்பில் உள்ள பலவீனங்களையும் பேசுகிறது. இது ஒரு யதார்த்தவாத மற்றும் விமர்சனப் பாங்கான கதையாகும்.
ஹரி கிருஷ்ணா கவுலின் ‘துக்கம் அனுசரிப்பவர்கள்’ கதை காஷ்மீரி சமூகத்தின் ஆழமான கலாச்சாரப் புரிதலையும், மனித உறவுகளின் சிக்கலையும் ஒரு மரண வீட்டின் பின்னணியில் விவரிக்கிறது. ஒரு மரண வீட்டில் துக்கம் என்பது எப்படி ஒரு சடங்காக மாறிப்போனது என்பதையும், மக்களின் பாசாங்குத்தனத்தையும் அங்கதச் சுவையுடன் விவரிக்கிறது.
மரண வீட்டின் துயரத்தை விட, அங்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், அவர்களின் உரையாடல்கள், சமூக அந்தஸ்து மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவற்றையே கவுல் முதன்மைப்படுத்துகிறார்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நிலவி வரும் பழைய ஸ்ரீநகரின் மொஹல்லா (குடியிருப்பு) வாழ்க்கை முறையை இக்கதை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது.
இக்கதை ஒரே நேரத்தில் நகைச்சுவையையும் ,அதே சமயம் வாழ்வின் நிலையாமையைப் பற்றிய சோகத்தையும் கடத்துகிறது. ஹரி கிருஷ்ணா கவுலின் ‘கண்ணாடி போன்ற சொல்லாட்சி’ கதாபாத்திரங்களின் அகந்தையைத் தோலுரித்துக் காட்டுகிறது.அவதார் கிருஷ்ணா ரஹ்பர் காஷ்மீரி சிறுகதையில் ‘நுட்பம்’ மற்றும் ‘கதாபாத்திரப் படைப்பு’ ஆகிய இரண்டிலும் புதிய தரநிலைகளை உருவாக்கியவர்.
இவரது கதைகள் பெரும்பாலும் நேர்க்கோட்டுத் தன்மையுடன் இல்லாமல், கதாபாத்திரங்களின் அகநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நகரும். இவரது புகழ்பெற்ற ‘தோப்ருக்’ என்ற தொகுப்பு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ரஹ்பர் மிகவும் பொருத்தமான மற்றும் செறிவான மொழியைப் பயன்படுத்துவதில் வல்லவர். தேவையற்ற விவரிப்புகளைத் தவிர்த்து, சில வரிகளிலேயே ஒரு கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் வாசகரின் கண்முன் நிறுத்திவிடுகிறார்.
சமூக மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் நம்பிக்கைகளை எப்படி அசைத்துப் பார்க்கின்றன என்பதை ரஹ்பர் ஆராய்கிறார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனை உருவங்கள் அல்ல; அவை காஷ்மீரி சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளின் பிரதிபலிப்புகள்.
பன்சி நிர்தோஷ் காஷ்மீரி யதார்த்தவாத கதைசொல்லிகளில் முக்கியமானவர். இவர் மூன்று முக்கியமான தொகுப்புகள்: பால் மாராயோ, ஆதம் ச்ஹு யிதை பத்நாம் மற்றும் கிருதாப்.
நிர்தோஷின் பலமே அவரது சரளமான கதை சொல்லும் முறைதான். வாசகர்களை முதல் வரியிலேயே கதையோடு கட்டிப்போடும் வித்தையை அவர் அறிந்திருந்தார். சிக்கலான சமூகப் பிரச்சினைகளைக் கூட எளிய மனிதர்களின் கதைகள் வழியாக மிக இயல்பாகக் கடத்திவிடுகிறார்.
இவரது கதைகள் காஷ்மீரின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அன்றாட வாழ்வின் போராட்டங்கள், ஏமாற்றங்கள் மற்றும் சிறு மகிழ்ச்சிகளை அவர் யதார்த்தமான முறையில் பதிவு செய்துள்ளார்.
தனது கதைகள் மூலம் சமூகத்தின் அழுகிப்போன பழைய நம்பிக்கைகளை விமர்சிப்பதில் அவர் தயங்கியதே இல்லை. ‘ஆதம் ச்ஹு யிதை பத்நாம்’ (மனிதன் இப்படித்தான் அவதூறு செய்யப்படுகிறான்) போன்ற தலைப்புகளே அவரது சமூகக் கோபத்தைப் பறைசாற்றுகின்றன
இந்தத் தொகுப்பின் மிகக் கனமான பகுதி 1990-களில் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறியதையும், அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளையும் விவரிக்கும் கதைகள் ஆகும். அரசியல் கொந்தளிப்பும் காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் இலக்கியத்தின் போக்கை மாற்றின. வலி, இழப்பு மற்றும் அந்நியமாதல் ஆகியவை பிரதானக் கருப்பொருள்களாயின.
ரூப் கிரிஷண் பட்டின் அழைப்பு கதை 1990-களில் காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களின் வாழ்வைச் சொல்லும் மிக முக்கியமான கதை., சொந்த மண்ணை விட்டு வெளியேறி டெல்லியின் வெப்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் மனதை உலுக்குகிறது. அவர் தனது கடந்த காலத்தை ‘பிரமை’களின் வழியாகத் தேடுவது, ஒரு சமூகம் தனது வேர்களை இழந்த துயரத்தைப் பிரதிபலிக்கிறது.
வெளியேறியவர்கள் அங்கேயே தங்கியிருக்கும் தங்களின் முஸ்லிம் அண்டை வீட்டாரை ஏக்கம் கலந்த அன்புடன் நினைவுகூர்வது, அரசியல் பிரிவினையும் தாண்டிக் கலாச்சார ரீதியாக அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.
இக்கதையின் நாயகி ‘தெத்’-ஒரு வயதான காஷ்மீரி பண்டிட் பெண். அவர் டெல்லியின் கடும் வெப்பத்தில் ஒரு சிறிய அறையில் வசிக்கிறார். பனி படர்ந்த காஷ்மீர் மலைகளிலிருந்து வந்த அவருக்கு, டெல்லியின் சூழல் அந்நியமாகவும் நரகமாகவும் தோன்றுகிறது.
அவர் தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறார். காஷ்மீரில் அவர் பழகிய முஸ்லிம் அண்டை வீட்டார் (ஹஜிரா, நாத், சாமத்) அவரது நினைவுகளில் நிழலாடுகிறார்கள். இறுதியில், காஷ்மீரிலிருந்து அவருக்கு ஒரு ‘அழைப்பு’ வருவதாக அவர் உணர்கிறார். அந்த அழைப்பு அவரைத் தனது தாய் மண்ணிற்குத் திரும்பி வரச் சொல்கிறது. அந்த ஏக்கத்தின் பிடியில், அவர் தனது உடலை அந்த அறையிலேயே விட்டுவிட்டு, ஆத்மார்த்தமாகத் தனது நிலத்திற்குத் திரும்பிச் செல்கிறார். தனது சொந்த மண்ணின் நினைவுகளால் சிதைந்து, இறுதியில் மரணத்தின் வழியே தனது நிலத்தை அடைவதை உருக்கமாகச் சித்தரிக்கிறது. தனது சொந்த மண்ணின் குளிர்ச்சியைத் தேடி ஏங்குவது மனதை உலுக்குவதாக அமைகிறது
புலம்பெயர்ந்தவர்கள் அனுபவிக்கும் ‘வேரற்ற உணர்வை’ இக்கதை மிக வலிமையாகப் பதிவு செய்கிறது. காஷ்மீர் நிலத்தின் மீதான ஏக்கம் என்பதை விட, அங்கு வாழ்ந்த ‘வாழ்க்கையின்’ மீதான ஏக்கமே இக்கதையின் ஆன்மா.
குல்ஷன் மஜீத்தின் தண்ணீரில் நீந்தும் பாசி காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான உறவுச் சிதைவை ஒரு தத்துவார்த்த மற்றும் உணர்ச்சிகரமான கோணத்தில் அணுகுகிறது.இக்கதையின் மிகப்பெரிய பலம் இது எந்த ஒரு தரப்பையும் நியாயப்படுத்தவோ அல்லது குற்றம் சாட்டவோ முயலவில்லை. மாறாக, காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையால் பண்டிட்கள் தங்கள் நிலத்தை இழந்தனர், அங்கேயே தங்கிய முஸ்லிம்கள் தங்கள் நிம்மதியை இழந்தனர் என்பதைச் சமமாகப் பதிவு செய்கிறது.
தண்ணீரில் வேர் பிடிக்காமல் மிதக்கும் ‘பாசி’ என்பது காஷ்மீரி மக்களின் தற்போதைய நிலைக்கு ஒரு குறியீடு. சொந்த மண்ணிலேயே வேரற்றுப் போன அல்லது அடையாளத்தை இழந்து தவிக்கும் மக்களின் நிலையை இது குறிக்கிறது.இக்கதை இரு தரப்பினரையும் ‘தோற்றவர்களாக’ முன்வைக்கிறது. ஒரு காலத்தில் பின்னிப் பிணைந்து வாழ்ந்த சமூகம், இன்று சந்தேகத்தாலும் வன்முறையாலும் எப்படிப் பிரிந்து கிடக்கிறது என்பதை இது வலியுடன் விவரிக்கிறது.
அரசியல் சூழல் இரு தரப்பையும் பிரித்தாலும், ஒருவருக்கொருவர் காட்டும் மறைமுகமான இரக்கம் மற்றும் பழைய நினைவுகள் இன்னும் அந்த மண்ணில் மனிதநேயம் முழுமையாகச் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது.
மஜ்ரூஹ் ரஷீத்தின் திகைப்பூட்டும் காரிருளின் அணைப்பில் கதை காஷ்மீரின் மோதல் காலங்களில் நிலவிய சொல்லொணா அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஒரு திகில் அனுபவத்தைப் போலச் சித்தரிக்கிறது. ஒரு மனிதன் காட்டில் தொலைந்து போவதும், அங்கிருக்கும் பயங்கரமான இருளில் அவன் சிக்கிக் கொள்வதும் கதையின் கரு. இந்த இருள் என்பது வெறும் இரவு அல்ல; அது காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடியுள்ள வன்முறை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் குறியீடு.
மஜ்ரூஹ் ரஷீத்தின் எழுத்து நடை வாசகர்களை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கும். “ரத்தம் உறைய வைக்கும் சத்தங்கள்” மற்றும் “பயங்கரமான கருப்பு இரவு” போன்ற வர்ணனைகள், காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு இரவும் அனுபவிக்கும் பாதுகாப்பின்மையைப் பிரதிபலிக்கின்றன. இருள் எப்போது முடியும், விடியல் எப்போது வரும் என்று கதையின் நாயகன் காத்திருக்கிறான். ஆனால், விடியலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இது பல தசாப்தங்களாகத் தொடரும் காஷ்மீர் பிரச்சினையின் முடிவில்லாத் தன்மையைக் காட்டுகிறது. இக்கதை வெளிப்படையான போரை விட, ஒரு தனிமனிதனின் மனதிற்குள் நிலவும் பயத்தையும், உதவியற்ற நிலையையும் மிக நுட்பமாக ஆராய்கிறது.
இந்த இரண்டு கதைகளும் காஷ்மீரிய இலக்கியத்தின் ‘அதிர்ச்சிகரமான தசாப்தங்களை’ மிகச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒன்று ‘இழந்த உறவுகளை’ நினைத்து அழுகிறது, மற்றொன்று ‘வாழும் பயத்தை’ எண்ணி நடுங்குகிறது.
விளையாட்டாக உருவான ஒரு சிறிய மோதல் அல்லது பொறி, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மதக்கலவரமாக உருவெடுப்பதை நசீர் ஜஹாங்கீரின் “குற்றவாளிப் பையன்” கதை காட்டுகிறது. உண்மையில் தவறு செய்யாத ஒரு சிறுவன், சமூகத்தில் நிலவும் மதப் பதற்றத்தாலும் மற்றவர்கள் உருவாக்கிய சூழலாலும் “குற்றவாளி” என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். கலவரத்தின் தீவிரத்தை அறியாத சிறுவர்களின் உலகம், பெரியவர்கள் வளர்த்த மதவெறியால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். ஒரு தனிமனிதன் குற்றவாளியாவதற்கு அவன் குணம் காரணமல்ல, அவனைச் சுற்றியுள்ள மனிதர்களும் அவர்கள் உருவாக்கும் வன்முறைச் சூழலுமே காரணம் என்பதை இக்கதை உரக்கச் சொல்கிறது.
ஏ.ஜி. ராதர்: எதிரி என்ற கதை அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோடு, ஒரே ரத்தமும் சதையுமான உறவுகளையும், நண்பர்களையும் எப்படி இரு வேறு துருவங்களாகப் பிரிக்கிறது என்பதை உணர்த்துகிறது. கம்பி வேலிகளால் நிலத்தைப் பிரிக்க முடிந்தாலும், மனிதர்களின் பாசத்தையும் நினைவுகளையும் பிரிக்க முடியாது என்பதை கதை சொல்ல முயல்கிறது. எல்லையோரம் வாழும் மக்களின் அன்றாட அச்சம், அவர்கள் சந்திக்கும் உயிரிழப்புகள் மற்றும் ஒரு சிறிய தவறான புரிதல் எப்படிப் பெரிய வன்முறைக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஆசிரியர் வலியுடன் பதிவு செய்துள்ளார்..
குலாம் நபியின் “தணியாத தாகம்” கதை வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் ஆன்மீகப் பயணம். இங்கு “தாகம்” என்பது தண்ணீருக்கானது அல்ல; அது மனித மனதின் ஓயாத ஆசைகளையும், தேடலையும் குறிக்கிறது. எவ்வளவு வசதிகள் வந்தாலும், மனித மனம் அமைதிக்காக ஏங்குவதை இக்கதை ஒரு குறியீடாக விளக்குகிறது.
வன்முறை மற்றும் ஆணாதிக்கத்தால் துரத்தப்பட்டு கைவிடப்பட்ட பெண்களின் இறுதித் தஞ்சமாக தர்காக்களே அமைகின்றன. சமூகம் அவர்களைப் “பைத்தியங்கள்” என்று ஒதுக்கினாலும், அவர்களின் பேச்சில் வாழ்வின் கசப்பான உண்மைகள் ஒளிந்துள்ளன. தர்காவின் புனிதத்திற்கும், வாசலில் இருக்கும் வறுமைக்கும் இடையிலான முரண்பாட்டை தாஜ் பேகம் ரென்சுவின் “தர்காவில் உள்ள பிச்சைக்காரர்கள்” கதை பேசுகிறது.
குலாம் முகமதுவின் “காகிதப் புலிகள்” கதை, ஆன்மீகம் என்பது சடங்குகளோ அல்லது வெளிவேஷமோ அல்ல; அது அகத்தில் நிகழும் மாற்றம். புகழுக்காகவும் கர்வத்திற்காகவும் ஆன்மீகவாதி போல் நடிப்பவர்கள் “காகிதப் புலிகள்” போன்றவர்கள். அவர்களால் உண்மையான இறைஞானத்தை அடைய முடியாது என்பதை இக்கதை வலியுறுத்துகிறது. போலி ஆன்மீகத்தை விமர்சிக்கிறது. காகிதப் புலி நிலையிலிருந்து உண்மையான நிலைக்கு மாற சூஃபித்துவம் சொல்லும் வழி இதுதான்:நப்ஸ் (Nafs): பேராசை கொண்ட மனதைக் கட்டுப்படுத்துதல். ஜிக்ர் (Zikr): எப்போதும் இறைநினைவிலும் உண்மையிலும் இருத்தல். இஹ்ஸான் (Ihsan): இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு நற்செயல்களைச் செய்தல். குலாம் முகமதுவின் இக்கதை, நாம் வெளியே எப்படித் தெரிகிறோம் என்பதை விட, உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
இந்தத் தொகுப்பில் பெண் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும் இடம்பெற்றுள்ள கதைகள் மிகவும் காத்திரமானவை. குறிப்பாக, தீபா நசீர் காஷ்மீரி சிறுகதையில் ஒரு புதிய அலையை உருவாக்கியவர்.
தீபா நசீரின் “தேடல்” கதை பிரிவினைக்குப் பிந்தைய காஷ்மீரில் மனித உறவுகளின் சிதைவையும், அதை மீட்டெடுக்கத் துடிக்கும் தேடலையும் பேசுகிறது. வன்முறை மற்றும் அரசியல் சூழலால் சிதறிப்போன ஒரு குடும்பத்தின் அல்லது உறவின் வேர்களைத் தேடும் ஒரு பெண்ணின் பார்வையில் இக்கதை நகர்கிறது.
நசீரின் எழுத்துக்கள் ஆழ்ந்த மென்மையையும் அதே சமயம் ஒருவிதமான மௌனமான வலியையும் கொண்டவை. இவரது ‘சரீன் சக்ஹம்’ தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ‘இரட்டை ஒடுக்குமுறை’ (அரசியல் மோதல்கள் ஒருபுறம், ஆணாதிக்கச் சமூகம் மறுபுறம்) குறித்து இவரது கதைகள் மறைமுகமாகப் பேசுகின்றன.
காஷ்மீரி எழுத்தாளர்கள் நேரடி அரசியலைப் பேசுவதை விட, குறியீடுகள் வழியாகப் பேசுவதையே ஒரு கலையாக வளர்த்தெடுத்தனர். இது தணிக்கையிலிருந்து தப்பிக்கவும், அதே சமயம் ஆழமான உண்மைகளைச் சொல்லவும் உதவியது.
குல்ஷன் மஜீத்தின் கதையில் வருவது போல, பாசி என்பது ‘வேரற்ற நிலைக்கு’க் குறியீடு. காஷ்மீரி மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அந்நியமாகி, எங்கும் வேர் பிடிக்க முடியாமல் மிதந்து கொண்டிருக்கும் நிலையை இது காட்டுகிறது.
அமின் காமிலின் கதையில் வரும் சேவல் சண்டை, மனிதர்களின் வீணான அதிகாரப் போட்டிக்கும், அர்த்தமற்ற எல்லைச் சண்டைகளுக்கும் குறியீடாக அமைகிறது. சேவல்கள் சண்டையிடும்போது ரத்தம் சிந்துவது போல, மனிதர்களின் ஈகோப் போரில் அப்பாவி மக்கள் பலியாவதை இது உணர்த்துகிறது.
மஜ்ரூஹ் ரஷீத் பயன்படுத்தும் காரிருள், வெறும் இரவு அல்ல. அது எதிர்காலம் குறித்த பயம், அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் விடுதலையே இல்லாத ஒரு தேக்க நிலை ஆகியவற்றின் குறியீடாகும்.
காஷ்மீரின் பாரம்பரிய தீச்சட்டியான காங்கிரி, அக்கதைகளில் ‘வெப்பம்’ மற்றும் ‘உயிர்வாழ்தல்’ ஆகியவற்றின் குறியீடு. கடுங்குளிரிலும், துயரத்திலும் காஷ்மீரிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அவர்களின் கலாச்சாரப் பிணைப்பை இது குறிக்கிறது.
பல கதைகளில் கதாபாத்திரங்கள் நீண்ட மௌனம் காக்கின்றனர். இந்த மௌனம், சொல்ல முடியாத அதிர்ச்சியின் வெளிப்பாடாகும். 1990-களுக்குப் பிந்தைய கதைகளில், வார்த்தைகளை விட மௌனமே அதிகக் கதைகளைச் சொல்கிறது.
தொகுப்பில் வரும் பல கதைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட கதாபாத்திரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றனர். இது அந்தப் பள்ளத்தாக்கில் நிலவும் ‘கூட்டு அதிர்ச்சியை’ மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீரில் மூன்றில் ஒருவருக்கு ஏதோ ஒரு மனநலப் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இது அந்த மண்ணின் நீண்டகாலப் போராட்டத்தின் உளவியல் பாதிப்பைக் காட்டுகிறது. காஷ்மீரின் நீண்டகால அரசியல் கொந்தளிப்பு மக்களின் மனநிலையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பல கதைகள் நுட்பமாகப் பேசுகின்றன. வலிகளையும் துயரங்களையும் மட்டும் பேசாமல், மனிதநேயம் எஞ்சியிருக்கும் புள்ளிகளையும் இக்கதைகள் தொடுகின்றன.
நாதிமின் வீரத்திலிருந்து தொடங்கி, ரஹ்பரின் நுட்பம் வழியாக, ரூப் கிரிஷண் பட்டின் ஏக்கம் வரை நீண்டிருக்கும் இந்தப் பயணம், காஷ்மீரிய இலக்கியம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுகிறது. தீபா நசீர் போன்றவர்களின் எழுத்துக்கள் காஷ்மீரி பெண்களின் உள்மன உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. மறுபுறம், குறியீடுகள் மூலமாக எழுத்தாளர்கள் காஷ்மீரின் சிக்கலான அரசியலை ஒரு உலகளாவிய தத்துவமாக மாற்றியுள்ளனர்.
இந்த எழுத்தாளர்கள் அனைவரும் காஷ்மீரி சிறுகதையை ஒரு பிராந்திய மொழியின் படைப்பாக மட்டும் பார்க்காமல், உலகத் தரம் வாய்ந்த ஒரு இலக்கிய வடிவமாக மாற்றப் பாடுபட்டுள்ளனர். நீரஜா மாட்டூவின் தொகுப்பில் இவர்களது பங்களிப்பு, காஷ்மீர் என்ற நிலப்பரப்பின் ஆன்மாவைத் தரிசிக்க ஒரு சாளரமாக அமைகிறது.
நீரஜா மாட்டூவின் இத்தொகுப்பு காஷ்மீரின் குரலை உலகிற்கு உரக்கச் சொன்னாலும், சில குறைகள் இல்லாமல் இல்லை. முக்கியமாக 25 கதைகளில் 2 மட்டுமே பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. இது காஷ்மீரி இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு இன்னும் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல் ‘வெளியேறியவர்களின் வலி’க்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, ‘அங்கேயே தங்கி இராணுவ மற்றும் தீவிரவாத நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களின் வலி’க்குக் கொடுக்கத் தவறியுள்ளது.
காஷ்மீரி புனைகதை என்பது வெறும் கதைகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் ஆன்மா தனது காயங்களை ஆற்றுவதற்காக நிகழ்த்தும் இலக்கியப் போராட்டம். கருத்த இரவு எப்போது முடியும் என்ற திகைப்பூட்டும் காத்திருப்பு ஒருபுறம் இருந்தாலும், தங்களின் வேர்களைத் தேடி அலையும் மனிதர்களின் விடாமுயற்சியே காஷ்மீரி புனைகதையின் நீடித்த தன்மையாகும். வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களுக்கு நடுவிலும், காஷ்மீரிகள் தங்களின் கதைகளைத் துணிச்சலோடும், நுட்பமான உரைநடையோடும் உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இந்த இலக்கியப் பயணம் ஒரு நித்திலச் சான்றாகும்.
மொழிகளைத் தாண்டிய ‘உணர்வுகளின் மொழிபெயர்ப்பு’ இத்தொகுப்பு.
*The Greatest Kashmiri stories ever told – selected & translated by Neeraja Mattoo. Publisher ALEPH BOOK COMPANY
நீரஜா மாட்டூ ஒரு சிறந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். காஷ்மீரில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர். இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த “The Mystic and the Lyric: Four Women Poets from Kashmir” என்ற நூல் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவரது படைப்புகளை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகத்தின் ஆய்வூதியத்தையும் ,பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றவர். தற்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்.
***
அ. முனவர்கான் – முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் : amkhansrv@gmail.com

