Tuesday, May 5, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்தூங்கிய சிறு பொழுதில்

தூங்கிய சிறு பொழுதில்

ராம்

மாம்பலம் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு நான் படியிறங்கிக்கொண்டிருக்கிறேன். தாம்பரம் போகும் ரயில் ஏற்கனவே பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்பு என்றால் ஓடிப்போய் ஏறியிருப்பேன். கொரோனா லாக்டவுனில் வீட்டில் சிக்கி சுகவாசியாகிவிட்ட இந்த உடம்பு இப்போது என் பழைய வேகத்திற்கு ஈடுகட்ட மறுக்கிறது. இந்த ரயில்நிலையப் படிகளை ஏறி இறங்குவதற்குள் எவ்வளவு வியர்வை, எவ்வளவு மூச்சிறைப்பு! “நாளேலேந்து எக்ஸர்ஸைஸ் பண்ணணும்” என்ற தினசரி மந்திரத்தை இன்றைய பொழுதிற்கு ஒருமுறை முணுமுணுத்தபடி என் நடையை இயன்ற அளவு துரிதப்படுத்துகிறேன்.

படியிறங்கிக் கொண்டே “ரயிலேறிவிட்டேன். முக்கால் மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்” என்று மனைவிக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தியைத் தட்டிக்கொண்டிருக்கிறேன். “ஆஃபீஸ்லேந்து கெளம்பும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரணும்னு ஞாபகம் இருந்துச்சு, வீட்டுக்கு வரதுக்குள்ள மறந்துருச்சு”, “ஃபோன் ஸைலண்ட்டுல இருந்துச்சு மா, அதான் உன் தம்பி கால் பண்ணினப்ப எனக்கு தெரியல… வேணும்னே எடுக்காம இருப்பேனா?”, “மால் எதுலயுமே டிக்கெட் இல்ல மா, எதாவது தியேட்டர்ல டிக்கெட் புக் பண்றேன்… ஷாப்பிங்லாம் இன்னொரு நாள் தனியா கூட்டிட்டு போறேன்” என்பது போன்று கணவர்களுக்கு மனைவிகளிடம் சரளமாக வரும் சில்லறைப் பொய்களில் ஒன்று கிளம்புவதற்கு முன்னரே கிளம்பிவிட்டேன் என்று சொல்வது.

அந்தக் குறுஞ்செய்தியை நான் அனுப்பும் முன் என் கைப்பேசி கையிலிருந்து பறந்து சென்று கடைசிப் படியில் ஒருமுறை விழுந்து குதித்து பிளாட்ஃபாரத் தரையில் நிலைகொள்கிறது. என் கையிலிருந்து அதைத் தட்டிவிட்டவனோ என் பறக்கும் கைப்பேசியையும் முந்திக்கொண்டு கடைசி நாலைந்து படிகளை ஒரே தாவில் குதித்து ரயிலை நோக்கி ஓடுகிறான்.

“அறிவுகெட்ட மு…”

சத்தமாக யாரையும் திட்டிப் பழக்கப்படாத என் வாயில் ஒரு நல்ல கெட்ட வார்த்தை கூட அகப்படவில்லை. கைப்பேசிக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலை ஒருபுறமும் இந்த ரயிலை விட்டால் அடுத்த ரயில் பயங்கரக் கூட்டமாக வருமே என்ற கவலை இன்னொரு புறமும் என்னை இம்சை செய்ய, கைப்பேசியைத் தரையிலிருந்து வழித்தெடுத்துக்கொண்டு அவசரமாக ரயிலேறுகிறேன்.

கூட்டம் அதிகம் இல்லை, ஆனால் காலி இருக்கைகளும் அதிகம் இல்லை. ரயில் ஏறியவுடன் வலப்பக்கம் திரும்புகிறேன் – ஒரு காலி இடம் தெரிகிறது. அதை நோக்கி நான் அடி எடுத்துவைக்கும் அதே நொடியில் என் கைப்பேசி மீண்டும் கையிலிருந்து பறக்கிறது. ரயில்நிலையப் படிக்கட்டில் என்னை இடித்த அதே அறிவுகெட்ட மு-தான். ரயிலில் ஏறியவுடன் இடப்பக்கம் போயிருப்பான் போல. அங்கு உட்கார இடம் ஏதும் இல்லாததால் என்னை முந்திக்கொண்டு இந்தப் பக்க இருக்கைக்குப் பறக்கிறான். ஆனால் இந்த முறை என் கைப்பேசி ரயில் தரையில் மோதும் முன் அவன் அதை ஒரு காலால் எத்தி லாவகமாகப் பிடித்துவிட்டு என் கையில் திணிக்கிறான். “சாரி பாஸ்…” என்று முணுமுணுக்கும் அவன், என்னை ஒருமுறை பார்த்துவிட்டு “…சார்” என்று அதை மாற்றிவிட்டு என் கடுகடுப்பான முகத்தைக்கூடச் சட்டை செய்யாமல் நான் பார்த்துவைத்த இருக்கையில் சென்று அமர்கிறான். “பாஸ்”-இலிருந்து நான் ஒரு நொடியில் “சார்”-ஆக மாற்றப்பட்டது என் கடுப்பை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. நான் சில வருடங்களுக்கு முன்பு “அண்ணா”விலிருந்து “அங்கிள்”-க்கு பதவி இறக்கப்பட்டபோது ஆங்கிலக் கலாச்சாரத்தின் மீது உண்டான காரணமற்ற கோபத்தைப் போல இப்போதும் இந்த “பாஸ், ஜீ” கலாச்சாரத்தின் மீது ஒரு எரிச்சல் வருகிறது. ஆனால் இப்போதும் அவனைத் திட்ட ஒரு வார்த்தை வந்து தொலைய மாட்டேன் என்கிறது.

ரயில்நிலையத்தில் விழுந்ததில் என் கைப்பேசியின் முகத்திரையில் சிலந்தி வலை அப்பியது போல விரிசல்கள் விழுந்திருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். எப்படியும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் மாற்றலாம் என்று நினைத்திருந்தது தான், இருந்தாலும் அதை நானே உடைத்திருந்தால் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அந்த அறிவுகெட்ட மு-வை முறைத்துப் பார்த்தபடியே அவன் இருக்கைக்கு அருகே செல்கிறேன் – அவனுடன் சண்டை போடும் நோக்கம் எதுவும் இல்லை; அடுத்த நிலையங்களில் கூட்டம் ஏறும்பொழுது முடிந்தவரையில் ரயில்பெட்டியின் வாயில் அருகே நிற்காமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். தோளில் இருக்கும் பையைக் கழற்றி கால்களுக்கு நடுவே வைத்துவிட்டு அவனை முறைத்தபடியே நிற்கிறேன். என் முறைப்பை அவன் உணர்வானா, என்னைப் பார்ப்பானா என்ற ஒரு ஆர்வம் மட்டும் எனக்குள் இருக்கிறது.

சுமார் எட்டு மாதங்களாக வெட்டப்படாத கேசத்தை அடக்க ஒரு பேண்டு அணிந்திருக்கிறான் அவன். இருபதிலிருந்து முப்பத்தைந்து வரை என்ன வயதாகவும் இருக்கலாம் அவனுக்கு – அவன் தாடியும் தலைமுடியும் வயதை எளிதில் கணிக்க முடியாதபடி செய்திருக்கின்றன. இருக்கையில் உட்கார்ந்தவுடன் அவனது தோள்பையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துக் கண்ணை மூடிவிட்டான். இனிமேல் முகத்தை இவ்வளவு கடுகடுப்பாக வைத்துக்கொண்டு பயனில்லை என்று புரிந்து அந்த இருக்கையில் உள்ள மற்றவர்களைக் கவனிக்கிறேன். அறிவுகெட்ட மு-விற்கு இடப்புறத்தில் வெள்ளைச்சட்டை அணிந்த ஒரு பருமனான மனிதர்; அவருக்கு அடுத்து, அவ்வளவு ஒல்லியாக இல்லாவிட்டால் அந்த வெள்ளைச்சட்டை ஆசாமியின் சகோதரரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தார் ஒரு சந்தனச் சட்டை ஆசாமி.

“வெள்ளம் வந்து ரெண்டு மாசம் கூட ஆவல, வெய்யிலு கொளுத்த ஆரம்பிச்சுருச்சு பாத்தீங்களா” – சந்தனச் சட்டை.

“இது என்ன புதுசாப்பா? வருசா வருசம் ஜனவரி முடிஞ்ச ஒடனே ‘இந்த வருசம் போன வருசத்த விட வெயில் ஜாஸ்தி ல?’ன்னு பேச ஆரம்பிச்சுருவானுங்க… எல்லா வருசமும் அதே வெயில்தான்… வெயில்ல வேல செய்யுறவனுக்குதான அதெல்லாந் தெரியும்” – வெள்ளைச் சட்டை. ஆனால் அந்த ஆசாமியைப் பார்த்தால் வெயிலில் வேலை செய்யும் பேர்வழி போலத் தெரியவில்லை. வெயிலில் வேலை செய்பவர்களை மேய்க்கும் ஆளாய் வேண்டுமானால் இருக்கலாம்.

இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்களாகத் தோன்றவில்லை.

அறிவுகெட்ட மு-வின் வலப்பக்கம் மூன்று பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இருக்கலாம் அவர்களது வயது. எனக்கு கொரோனாவிற்கு முந்தைய உடல்வாகு இருந்திருந்தால் அவர்களைச் சற்றே நகரச் சொல்லி இருந்த கொஞ்சம் இடத்தில் அமர்ந்திருப்பேன், ஆனால் பருத்துவிட்ட என் உடல் அதற்கும் வழி செய்யவில்லை. அந்த மூன்று மாணவர்களும் பென்சிலில் கோடு கிழித்தது போல் ஒல்லியாக இருந்தாலும் அவர்களது குரல் அவ்வளவு மெலிதாக இல்லை. அதில் ஒருவன் “ஒருத்தனுக்கு ஒருத்தியின்னு பளமொளி… ஆனா பத்து பேர மேனேஜ் பன்றா கனிமொளி” என்று தலையையும் கைகளையும் ஆட்டிக்கொண்டு நண்பர்களின் எக்காளச் சிரிப்பிற்கு இடையே சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறான். ரயில்பெட்டியில் இருக்கும் அனைவரும் அந்தப் பாடக மாணவனை ஒரு எரிச்சல் கலந்த சிரிப்புடன் பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள் – அறிவுகெட்ட மு-வைத் தவிர. அவனது வலது காதருகில் அமர்ந்து ஒருவன் சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறான்; ஆனால் ரயில் சைதாப்பேட்டை நிலையத்தைத் தாண்டும்பொழுது அவன் தூங்கிப் போயிருக்கிறான். பொறாமையாகத்தான் இருக்கிறது.

சைதாப்பேட்டை ரயில்நிலையத்தைத் தாண்டியவுடன் அடையாறு ஆற்றைத் தாண்டும்போது தினம் இருமுறை அனுபவித்துப் பழகிப் போயிருக்கும் நாற்றம் ரயிலின் இரு பக்க ஜன்னல்களின் வழியாகவும் பெட்டியை நிறைத்து வெளியேறுகிறது.

“கடல போட ஒருத்தன், செலவு பண்ண ஒருத்தன்,

வண்டி ஓட்ட ஒருத்தன்…”

அந்த ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ பாடல் இன்னும் விரசமான வரிகளைத் தொட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே அந்த மெட்டு எனக்கு எங்கு பரிச்சயமானது என்ற சிந்தனை எனக்குள் ஓடுகிறது. இவன் பாடுவதை நிறுத்தினால் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல அவ்வளவு அருகில் இருந்தும் பிடிபடாமல் இருக்கிறது அந்த மெட்டு. ஏதோ ஒரு கிராமிய அல்லது தெம்மாங்கு மெட்டு என்று மட்டும் தோன்றுகிறது – ஆனால் நினைவிற்கு வரும் “ராமன் ஆண்டாலும்”, “வெத்தலயப் போட்டேண்டி”, “தண்ணித் தொட்டி தேடி வந்த”, “நம்ம சிங்காரி சரக்கு”, “எதுக்கு பொண்டாட்டி” போன்ற எந்தப் பாட்டும் அந்த மெட்டுக்குப் பக்கத்தில் கூட வரவில்லை. அதற்குள் சந்தனச் சட்டை மனிதரின் குரல் என் கவனத்தை அவர் பக்கம் ஈர்க்கிறது.

“யாரு சார் இப்போ ஒளுக்கமா இருக்கானுங்க? எல்லாரும் திருட்டுக் கம்மனாட்டிங்கதான். நம்மளும் இந்த கம்மனாட்டி இல்லேன்னா அந்த கம்மனாட்டின்னு ஓட்டுப் போட்டுட்டு இருக்கோம்”

“அப்டில்லாம் சொல்லிர முடியாதுப்பா… அவ்ளோ செலவு பண்ணி எலக்சன்லாம் ஜெயிச்சி அங்க போயி ஒக்கார எவ்ளோ தெறம வோணும் தெரியுமா? சும்மா இங்க இருந்துட்டு நாம என்ன வோணா சொல்லிரலாம். அவனுங்க எடத்துல இருந்தாதான தெரியும் அவன் கஷ்டம் என்னாண்ட்டு… திருடுறானுங்கதான், இல்லேண்ட்டு சொல்லல… ஆனா அவனுங்க திருடாம இருந்தா பொளெக்க முடியாது பாத்துக்க… இன்னுஞ் சொல்லப் போனா ஆச்சி செய்யிறதுக்கு அதெல்லாம் தேவ… திருடுறது, பொய் சொல்லுறது, கால வாருறது, ஏன் ஆளத் தூக்குறதுகூட வெச்சுக்கோயேன்… இதெல்லாம் தெரிஞ்சாதான் நம்பளயும் அவனால நல்லா ஆள முடியும் பாத்துக்க” – வெள்ளைச் சட்டை.

“இதென்னங்க புதுசாச் சொல்றீங்க… அப்போ காந்தீ, காமராசருல்லாம் நம்மள ஆள முடியாதாக்கும்? சும்மா இப்போ இருக்கற கம்மனாட்டிங்களுக்கு இவ்ளோ நியாயம் பேசுறீங்க” – சிரித்துக்கொண்டே கேட்கிறார் சந்தனச் சட்டை.

“காந்தியும் காமராசரும் இருந்தப்போ நம்ம என்ன கண்டோம் அவனுங்க உத்தமங்களாண்ட்டு? நாலு பேரு சொல்றதக் கேட்டுட்டு அவனுங்க மகானுங்கண்ட்டு நம்பளா நம்பிக்கிட்டு இருக்கோம்… காந்தி பத்தி ஒண்ணு சொல்றேன், கேக்குறியா? அந்த ஆளு ஆப்பிரிக்காவுல இந்த மாரி ட்ரெயினு ஒண்ணுல ஃபர்ஸ்ட்டு கிளாஸ் பெட்டியில போனப்போ அந்த ஆளு கறுப்பண்ட்டு களுத்த புடிச்சு வெள்ல தள்ளிட்டானுங்க… ஒடனே இந்தாளு பெரிய ஆளாயிட்டாரு… ஆனா நெசமா என்ன நடந்துச்சுண்ட்டு தெரியுமா? அந்த ஊருல ஃபர்ஸ்ட்டு கிளாஸ் டிக்கெட்டு வெள்ளக்காரங்களுக்கு மட்டுந்தான் தருவானுங்களாம்… நம்ம ஆளு தேர்டு கிளாஸு டிக்கெட்ட வெச்சுக்கிட்டு ஃபர்ஸ்ட்டு கிளாஸ் பெட்டியில போயி ஒக்காந்தா களுத்தப் புடிச்சுத் தள்ளாம என்ன பண்ணுவாங்கன்றேன்! பண்ணது சில்றத்தனம்… ஆனா பெரிய ஆளாயிட்டாப்புல…”

‘அடடா, அப்படியா! இது தெரியாமல் போய்விட்டதே!’ என்று எண்ணியபடி காந்தியின் மிகப் பிரபலமான ரயில் பயணத்தைப் பற்றியும் எனக்கு இத்தனை நாளாய்த் தெரியாமல் போன இந்த ‘தேர்டு கிளாஸ்’ சமாச்சாரத்தைப் பற்றியும் கூகுளில் படிக்க என் கைப்பேசியை எடுக்கிறேன். திரையை உயிர்ப்பித்தவுடன் என் மனைவியின் வாட்ஸப் உரையாடல் திரை முன்னால் வருகிறது. நான் மாம்பலம் ரயில்நிலையப் படியில் இயற்றிய குறுஞ்செய்தி அனுப்பப்படாமல் இருக்கிறது… இப்போது ரயில் பழவந்தாங்கலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. “முக்கால் மணி நேரத்தில்” என்பதை “அரை மணி நேரத்தில்” என்று மாற்றிவிட்டு அந்தக் குறுஞ்செய்தியை அனுப்புகிறேன். பள்ளி மாணவர்களில், ஜன்னலருகே அமர்ந்திருந்த பையன் இப்போது “கும்பலா சுத்துவோம்… அய்யோ யம்மானு கத்துவோம்” என்று மெட்டே இல்லாமல் ஏதோ ஒரு பாடலைக் கத்திக்கொண்டிருக்கிறான். மற்ற இருவரும் இருக்கையிலும் ரயில் பெட்டியின் தகரச் சுவரில் தாளம் போடுகிறார்கள். இதற்குள் வெள்ளைச்சட்டை ஆசாமி காந்தியைத் தாண்டி காமராசருக்கு வந்திருக்கிறார்.

“… வெறகுக்கு வளி பண்றேண்ட்டு கருவேல மரமா கொண்டு வந்து வெப்பானுவ? வெவசாய நெலமாக் கெடந்த ராம்நாடுல்லாம் இப்போ காஞ்சு கெடக்கு… படிக்காத மேதன்ட்டு பேரு வந்தா ஒடனே மேதாவின்ட்டு நெனப்பும் வந்துருமோ… நாலு ஆளுங்க கிட்டே கேட்டுட்டு பண்ணுவம்னுட்டு ஒண்ணு வேணாம்? அந்தக் கருவேல மரத்த எறக்குமதி பண்றேண்ட்டு அந்தாளு எவ்ளோ முளுங்கினாருன்னு யாரு பாத்தா? பாருப்பா… நாம அந்த காலத் தலெவருங்க பத்தி கேக்குறது படிக்கிறதுல்லாம் பாதிக்கு மேல கத தான்… இப்போம்பாரு… இன்னும் அம்பது வருசங் களிச்சு இப்போ நீ கம்மனாட்டின்ட்டு கூப்பிடுறியே… அவனுங்கதான் உத்தமத் தலெவருங்களா இருப்பானுங்க, நமக்கு காந்தி, காமராசரு மாரி…” சொல்லிவிட்டு, கூத்தடித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்களே திரும்பிப் பார்க்கும் அளவு ஒரு சிரிப்பு சிரிக்கிறார்.

‘டப் டப்’

பலத்த கைத்தட்டலுடன் தன் வருகையை அறிவித்தபடி திருநங்கை ஒருவர் இந்தப் பெட்டிக்கும் அடுத்த பெட்டிக்கும் நடுவே இருக்கும் சிறிய வழியிலிருந்து வெளிப்படுகிறார். இத்தனை நேரம் அங்கு ஒரு வழி இருந்ததையே கவனித்திராத எனக்கு அந்த நுழைவு கொஞ்சம் திகைப்பாகத்தான் இருக்கிறது. அந்த கைத்தட்டல் கேட்டவுடன் வெள்ளைச்சட்டையின் சிரிப்பும் மாணவர்களின் கத்தலும் சட்டென்று அடங்குகின்றன. சந்தனச் சட்டை ஆசாமி தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அந்த திருநங்கையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் நீட்டுகிறார். அதை வாங்கிக்கொள்ளும் கை அடுத்து வெள்ளைச்சட்டையிடம் திரும்புகிறது. ‘நான் அவருடன் வந்தவன்’ என்பது போல வெள்ளைச்சட்டை ஆசாமி சைகை செய்ய, அதைச் சட்டை செய்யாமல் அந்த கை அவரது மார்பை நோக்கிக் கிள்ளுவது போல நகர்கிறது. விருட்டென்று தன் சட்டைப்பையில் கையை நுழைத்து வெளிவந்த நோட்டுகளில் மிகச்சிறியதை அவர் தேர்வு செய்யும்முன் திருநங்கையின் கை மிகவும் நெருங்கிவிட்டதால், அவசரமாகக் கையில் சிக்கிய முதல் நோட்டான இருபது ரூபாய் நோட்டு ஒன்றை அவர் நீட்டுகிறார். இதற்கு மத்தியில் நான் வெகு உஷாராக என் பின் பாக்கெட்டிலிருந்து தோல்பையை எடுத்து அதிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவித் தயாராக வைத்திருக்கிறேன். என் பக்கம் முகம் திருப்பாமலேயே அந்தத் தாளை என் விரல்களிலிருந்து விடுவித்துவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அறிவுகெட்ட மு-வைத் தொந்தரவு செய்யாமல் பள்ளிச் சிறுவர்களிடம் நகர்கிறார் அந்த திருநங்கை. அந்த அறிவுகெட்ட மு- மீது எனக்குள் மீண்டும் பொறாமை கொப்பளிக்கிறது.

திருநங்கையார் அந்தச் சிறுவர்களிடமும் எவ்வளவு தேறுமோ அதைப் பெற்றுக்கொண்டு என்னைத் தாண்டி மற்ற இருக்கைகளுக்குச் செல்ல, சிறுவர்கள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் ஏதோ கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கண்கள் குவியும் இடத்தையும் நமட்டுச் சிரிப்பையும் பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. சற்றே நகர்ந்து அந்த மாணவர்களின் பார்வைக்கோட்டில் திருநங்கை விழாதவண்ணம் நிற்கிறேன். அடுத்த சில நொடிகளில் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்றே மறந்தவர்களாய் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஏதோ சினிமாப் படப் போஸ்டரைப் பார்த்துவிட்டு ‘குத்துவிளக்கு குத்துவிளக்கு’ என்று இன்னொரு விரசமான பாடலைக் கத்தத் துவங்குகிறார்கள். இது கொஞ்சம் பழைய பாடலாயிற்றே, இந்த வயது மாணவர்களுக்கு இந்த பாட்டு எப்படி பரிச்சயம் என்று சிந்திக்கிறேன்.

இதற்குள் ரயில் குரோம்பேட்டைக்கு வந்திருக்கிறது. இந்த பெட்டியிலிருந்து பாதி கூட்டம் வெளியேறுகிறது, ஆனால் சுற்றிப் பார்த்தால் ஒரு இருக்கை மட்டுமே காலியாகி இருக்கிறது – சந்தனச் சட்டை ஆசாமிக்கு எதிரே உள்ள இருக்கைதான் அது. என்னைச் சுற்றி அத்தனை பேரா நின்றுகொண்டிருந்தார்கள் என்று ஒரு நொடி யோசித்துவிட்டு அந்த இருக்கையை நோக்கி நகர்கிறேன். நான் ஒரு அடிதான் எடுத்து வைத்திருக்கிறேன், அதற்குள் ஒரு பெண்ணின் கைப்பை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. ஜன்னல் அருகே அமர்ந்திருக்கும் நபரிடம் ரயிலுக்கு வெளியிலிருந்து ஏதோ ஒரு பெண் அந்த இருக்கையைப் பிடிப்பதற்காகக் கொடுத்திருக்கும் பைதான் அது. அந்த ஆசாமியும் ஒரு பெண் கேட்டவுடன் மறுக்காமல் செய்துவிட்டார் போல.

“லிஸன்… நா ட்ரெயின்ல ஏறிட்டேன்… சிக்னல் கெடெக்காது… ஐ கான்ட் டூ திஸ் நவ்” என்று வேகமும் கோபமும் கலந்த குரலில் தன் அலைபேசியில் பேசிக்கொண்டு அந்தப் பெண் இந்தப் பெட்டியில் ஏறுகிறாள். முப்பது வயது கூட இருக்காது. மிக லட்சணமான முகம். கண்களைத் தாண்டி உதட்டை வருடிக்கொண்டு தொங்கிய ஒரு கூந்தல் கற்றையை விலக்கிவிட்டபடி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த இருக்கையில் அமரும் அப்பெண்ணின் கண்களில் நீர் துளிர்த்திருக்கிறது.

‘இன்னும் ரெண்டு ஸ்டாப் தான, இப்ப உக்காந்தா என்ன இல்லேன்னா என்ன’ என்று எண்ணியபடி தாராளமாக அந்த இடத்தை அந்த பெண்ணுக்கு ‘விட்டுக்கொடுக்கிறேன்’. ரயிலில் ஏறும் முன்பே துவங்கிய கைப்பேசி உரையாடலைத் தொடர்ந்தபடி கால் மேல் கால் போட்டு, கைப்பேசியைத் தாங்கிய அவளது இடது கையின் முழங்கையை தன் இடது முழங்காலில் முட்டுக்கொடுத்து அமர்ந்திருக்கிறாள். முன்னே நீட்டிக்கொண்டிருக்கும் காலில் மெட்டி இல்லாததைக் கவனித்துவிட்டு ஏன் என் கண்கள் அந்த விவரத்தைக் கவனித்துப் பதிவு செய்கின்றன என்று ஒரு நொடி சிந்திக்கிறேன்.

“எவ்ளோ தடவப்பா சொல்றது? உனக்கு… நா சொல்றதக் கொஞ்சம்… நா… சரி, சொல்லு” அவளது குரல் நீளமாக இழுக்கப்படும் தங்க நூல் போல எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் ஒரு கனத்துடன் ஒலிக்கிறது. அந்த அழைப்பிற்கு அந்தப் பக்கம் இருப்பது ஒரு காதலனா, நண்பனா அல்லது தந்தையா என்று தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் மேலெழ இன்னும் கூர்ந்து கவனிக்கிறேன்.

அதற்குள் “… நமக்கு தெரிஞ்ச ஆளுதான்… பரமக்குடிக்காரரு… நல்ல மனுசன்தான், என்ன குடி கொஞ்சம் ஓவரு… பகல், ராவு என்னேரமும் குடி… அவரு வேலயும் அப்டி பாத்துக்க… மனுசனுக்கு ஆஃபு போட்டாதான் கை நெலயா நிக்கும் பாத்துக்க… ஆனா வெள்ளிக்கெளமயானா பாட்டிலு தொட மாட்டாரு… ம்… எதுக்கு அவரப் பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்?” என்று வெள்ளைச் சட்டை ஆசாமி கேட்க, தன் நினைவுகளில் தொலைந்து போயிருந்த சந்தனச் சட்டை, “ம்… அது…” என்று யோசிப்பது போல் பாவனை செய்தபடி நேரம் கடத்துகிறார்.

“மச்சி… எறங்கின ஒடனே ஒன் ஆளப் பாக்க ஓடீறாத… யென் டூசன் ஃபீசும் ஒம் பேக்லதான் இருக்கு” அந்த சிறுவர்களில் இடது பக்கத் தலை வெகுவாக மொட்டையாகவும் வலது பக்கத்தில் பரட்டையாகவும் முடி வைத்திருந்தவன் கட்டைக்குரலில் ஜன்னல் அருகே இருக்கும் அவன் நண்பனிடம் கூறுகிறான்.

“ஆ… அதான்… தான் யாருன்ட்டு வெளிய சொல்லாத சாமிங்க… அந்தாளு எப்டின்ட்டு தெரிஞ்சுக்க… குடில இருந்தா மனுசன் ஆளத் தொளச்சுப் பாத்துறுவாரு… ஒருத்தன் புளுகுறானா, எதுனா மறெக்குறானாண்ட்டு பேச்ச வெச்சே சொல்லிறுவாரு பாத்துக்க…” வெள்ளைச் சட்டை தான் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டார்.

“… ஆல்ரைட்… இப்பயாவது நா சொல்றதக் கேக்கறியாப்பா?” அந்த பெண்ணின் குரல் மீண்டும் என் கவனத்தை அவள் பக்கம் ஈர்க்கிறது.

“… செல பஞ்சாயத்துக்குன்ட்டு அவர அளெக்கிற ஆளுங்கல்லாம் உண்டு… ஏன் நானே ஒரு மொற ஒரு பரதேசி மவனுக்குக் கடன் குடுத்துட்டு திருப்பி வாங்க முடியாம அலெஞ்சுட்டு இருந்தப்போ… காசெ வாங்கினவன் வாங்கவே இல்லென்ட்டு புளுகினான்… அவரெ அளெச்சி அவரு முன்னாடி சொல்லச் சொன்னப்போ ஒரு நிமிசத்துல அவம் புளுகுறான்ட்டு சொல்லிட்டாரு… ஆனா ஒண்ணு பாத்துக்க… வெள்ளிக்கெளம அவரால அதெப் பண்ண முடியாது… அந்தாளுக்கே அவரு சத்தி தெரியாது பாத்துக்க…” வெள்ளைச் சட்டையின் குரல் மீண்டும் இடைமறிக்கிறது.

“நீ சொன்னதுலாம் எனக்கு புரிஞ்ச்சுப்பா… நா ஒண்ணும் கவனிக்காம இல்ல… நீ சொல்றத கேட்டுட்டு ஒடனே ஒத்துக்கணுமா? நா சொல்றதக் கொஞ்சம் கேளேன்பா… நா… ஹலோ?”

ரயில் தாம்பரம் நிலையத்தை நெருங்கும்பொழுது என் மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது.

“ஹலோ… சொல்லும்மா… ஆல்மோஸ்ட் தாம்பரம் வந்துட்டேன்…”

இதற்குள் நான் கவனித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் குரல் சற்றே உயர்கிறது.

“… ஸீ, திஸ் இஸ் ஒய் ஐ டின்ட் வான்ட் டு டூ திஸ் நவ்… ஹலோ? ஹலோ? ஹலோ?” ஒவ்வொரு ‘ஹலோ’விற்கும் அவளது குரல் உரத்துக்கொண்டே போகிறது. அலைபேசியின் துணை இல்லாமலேயே மறுபக்கம் இருப்பவரிடம் தன் கருத்தைப் பதியப்படுத்தத் துடிக்கும் ஆதங்கம் அந்தக் குரலில்.

“இல்லம்மா… ட்ரெயின்ல வேற யாரோ ஃபோன்ல பேசிட்டு இருக்காங்க… இரு, நான் தள்ளி வரேன்” என் இரு கால்களுக்கு நடுவே வைத்திருக்கும் பையை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் வாயில் பக்கம் நகர்கிறேன்.

“… இப்பக் கேக்குதா? ம்… சொல்லு… ஸ்வீட்டா? ஓ, காலேல சொன்னேல்ல… அத்த வந்தாச்சா? ஓ, ஓக்கே… நான் இங்க ஸ்டேஷன் கிட்ட எங்கயாவது வாங்கிட்டு வரேம்மா… என்ன? ம்… லட்டு வாங்க மாட்டேன், டோன்ட் ஒர்ரி…”

வெகுநேரம் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ரயில் நிற்க, உள்ளிருக்கும் சலசலப்பிற்கு ஈடுகொடுத்து வெளியில் புலப்படுகிறது தாம்பரம் ரயில்நிலையம். ரயில் நின்றதோ இல்லையோ எனக்குப் பின்னாலிருந்து வேகமாக வெளியேறுகிறது ஒரு சிறிய உருவம்.

“டே இவனே… இருடா… அவ யாரயும் இளுத்துட்டு ஓடீருக்க மாட்டா… டே, என் டூசன் ஃபீசுடா” அந்த உருவத்தைப் பின்தொடர்கிறது ஒரு குரல்.

இந்த மாலையிலேயே மூன்றாவது முறையாக என் அலைபேசி கையிலிருந்து தட்டப்படுகிறது. இப்போது தட்டிவிடுவது அந்த அறிவுகெட்ட மு- இல்லை; அந்த பாதி மொட்டை பாதி பரட்டைத் தலைப் பொடியன்தான் இப்போது குற்றவாளி.

“அறிவுகெட்ட மு…!” இன்னும் அந்த வசைக்கு என் வாயிலிருந்து சிறந்த முடிவு அமைந்த பாடில்லை.

கீழே விழும் என் அலைபேசி ஒருவர் காலில் விழுகிறது. சட்டென்று அதைக் குனிந்து எடுத்துத் தருபவன் அறிவுகெட்ட மு-தான் – இப்போது ரயிலை விட்டு இறங்கி ஓடிய பொடியன் அல்ல, முதல் இரண்டு முறை என் கைப்பேசியைத் தட்டிவிட்ட பழைய அறிவுகெட்ட மு-.

ஒரு புன்னகையுடன் என்னிடம் அதை நீட்டுகிறான். “அவனுக்கு உங்க ஃபோன தட்டிவிட்டோம்னு கூட தெரியாது சார். வால் பசங்க”

நானும் அதை ஒரு புன்னகையுடன் பெற்றுக்கொண்டு ரயிலை விட்டு இறங்கி அவனுக்கு எதிர் திசையில் நகர்கிறேன்.

அவனைப் பார்த்து ஏன் சிரித்துத் தொலைத்தோம் என்று ஒரு புது எண்ணம் என்னை உறுத்த, என் மேலேயே உள்ள எரிச்சலுடன் வேகமாக டூவீலர் ஸ்டேண்டு நோக்கி நடக்கிறேன், சற்று முன்பு என் மனைவி நினைவுபடுத்திய விஷயத்தை மறந்து.

* * *

ஒன்றரை நாட்கள் தொடர்ந்து கம்பெனியிலேயே இருந்துவிட்டு இப்போதுதான் ரூமுக்குப் போகிறேன். அசதியில் கண்ணைக் கட்டுகிறது. மகாவிடம் வேறு ரயிலேறியவுடன் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். இந்த ரயிலைப் பிடிக்க ஓடிய ஓட்டத்தில் மூச்சு பிடித்துக்கொண்டு வயிற்றில் தையல் போட்டது போல ஒரு சிறிய வலி. என் மடியில் வைத்திருக்கும் தோள் பையைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கையில் சாய்கிறேன். நான் இங்கு உட்கார்ந்திருப்பது குற்றம் என்பது மாதிரி யாரோ என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

“சாரி சார். நைட்டு ஃபுல்லா அந்த ரெண்டாவது டர்னிங் மிஷின் சர்வீஸ் பாத்துட்டு இருந்தேன். இப்பதான் சூப்பர்வைஸர்ட்ட சொல்லிட்டு வந்து கொஞ்சம் கால் வலிக்குதுன்னு ஒக்காந்தேன்… ஒரு அஞ்சு நிமிஷம் சார்…” ஃப்ளோர் மேனேஜரின் அறையில், அதுவும் அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் நான் என் முன் கோபமான முகத்துடன் நின்றுகொண்டிருக்கும் ஃப்ளோர் மேனேஜரிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என் குரல் எனக்கே கொஞ்சம் தொலைவாய் ஒலிக்கிறது.

“நீ ஒம்பாட்டுக்கு ஓட்டீ க்ளெய்ம் பண்ணீட்டு டூட்டி டைம்ல வந்து தூங்கிட்டேன்னா இன்னிக்கி வேல எங்க நடக்கறது? ஒண்ணு லீவு சொல்லீட்டு வீட்ல போயி தூங்கு, இல்ல வேலயப் பாரு… இப்டி கண்ட டைத்துல ஒக்காந்துட்டு இருந்தா மத்தவங்களும் ரிலாக்ஸ் ஆயிருவாங்கல்ல”

“சாரி சார்… நாம் போறேன்…” எழுந்து அவர் தொந்தி படாமல் மேசைக்கும் அவருக்கும் நடுவே உள்ள இடைவெளி வழியே புகுந்து அந்த அறையை விட்டு வெளியேறுகிறேன்.

“ஏய், நில்லுப்பா… கொஞ்சம் அந்த வெள்ளம்லாம் வடியட்டும்… இப்பதான் வெயில் வந்திருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணிட்டுப் போ… வெள்ளம் வடிஞ்சதும் அந்த லேத்த மொதல்ல பாரு… எங்கல்லாம் தண்ணி தேங்கியிருக்குமோ”

அவரது அறைக்கு வெளியே உள்ள மிஷின் ஷாப்பில் தரையிலிருந்து ஒரு அடிக்கு பழுப்பும் கருப்புமாக தண்ணீர் ஓடுக்கொண்டிருக்கிறது.

“நான் இப்பவே போயி லேத்தப் பாக்கறேன் சார்” என்று சொல்லிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் தண்ணீரில் இறங்கி நடக்கிறேன். எண்ணெயும் குப்பைகளும் கலந்த தண்ணீரின் நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. நான் அந்த லேத் மிஷினை அடைந்து அதில் எங்கெல்லாம் தண்ணீர் புகுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கையில் தரையில் தண்ணீர் வடிந்து வெயிலில் தரை காய்ந்திருக்கிறது. ஒரு கையை மிஷினுக்குள் நுழைத்து ஒரு நட்டைத் திருகிக்கொண்டிருக்கும்பொழுது என் கைப்பேசியில் ஒரு அழைப்பு வருகிறது.

சூப்பர்வைஸரும் மேனேஜரும் சுற்றி எங்கும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு கைப்பேசியை எடுத்துப் பார்க்கிறேன். மகா.

“எப்போ கால் பண்ணினதுக்கு எப்போ திருப்பி கால் பண்ற… எப்பப் பாத்தாலும் கால் வெய்ட்டிங்!” எரிந்து விழுகிறேன்.

“ஹேய், நீ எப்ப கால் பண்ணின? இத்தன நேரமா ஒரு ரிப்ளை இல்லேன்னு நான்தான் ஒனக்கு கால் பண்ணினேன்”

“கத வுடாத… எவன் கூடல்லாம் கடல போட்டுட்டு இருந்த?” கேட்கும்போதே அந்த கேள்வி என் வாயிலிருந்துதான் வருகிறது என்று என்னால் நம்ப முடியவில்லை.

“ச்சீ… நீ எப்ப இப்டில்லாம் பேச ஆரம்பிச்ச?” அவள் குரலில் இருந்த கோபம் எங்கள் இணைப்பை எரித்துத் துண்டித்தது போல மௌனமாகிறது என் கைப்பேசி.

விருட்டென்று எழுந்திருக்கிறேன். கையை மிஷினுக்குள் வைத்திருந்தேனே என்று நினைவு வரும் அதே நேரம், வலது காலின் பெருவிரலில் ஒரு வலி. மிஷினுக்குள் கையை வைத்துக்கொண்டே எழுந்தேன் அல்லவா, அதனால்தான் காலில் அந்த வலி என்று உறைக்கிறது. என் அலைபேசியை கால்சட்டைப் பையில் வைத்துவிட்டு நிமிரும்பொழுது திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள சிறு திடலில் கூடியிருக்கும் கூட்டத்தில் இருக்கிறேன்.

மைக்கைப் பிடித்துக்கொண்டு அவசியமில்லாத உரத்த குரலில் கூவிக்கொண்டிருக்கிறார் வெள்ளைச்சட்டை அரசியல்வாதி ஒருவர். தெரிந்த முகம்தான். பத்தாம் வகுப்பில் என் பெஞ்ச்சில் என்னுடன் அமர்ந்திருந்த பாலாதான் அவன். இப்போது அவன் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவன் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டான் எனவும் எங்கோ கேள்விப்பட்டதாக நினைவு. அவனைப் பார்த்து சிரித்தபடி கையசைக்கிறேன்.

என்னைப் பார்த்தவுடன் சிடுசிடுப்பான முகத்துடன் கூட்டத்தை நோக்கி ஏதோ ஆவேசமாகப் பேசுகிறான். அவன் சொல்வது என் மனதில் பதியும் முன்பு அவனே என் முன் நிற்கிறான்.

“உன்னை எல்லாம் யாருடா இங்க விட்டது” என்று உறுமியபடி என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறான்.

அவன் தள்ளும்பொழுதே அந்தத் திடல் ரயில்பெட்டியாக மாறுகிறது. ஐயோ, ரயிலிலிருந்து தள்ளிவிடுகிறானே என்று பதைபதைக்கும் அதே நொடியில் ரயிலிலிருந்து வீசப்பட்டு பக்கத்துத் தண்டவாளத்தில் எதிர் திசையில் போய்க்கொண்டிருக்கும் ரயிலில் புகுந்து விழுகிறேன்.

கீழே விழுந்திருக்கும் என்னைத் தூக்கிவிடக் குனிபவர் வெள்ளை வேட்டியும் மேலுடம்பிற்கு வெறும் துண்டையும் மட்டுமே போர்த்திய ஒரு ஒல்லி உருவம்.

இந்த மனிதரை இப்படி எளிமையாக வைத்திருக்க இந்தியா நிறைய செலவழித்தது என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று எண்ணியபடி எழுந்திருக்கிறேன். எழுந்து நிமிரும்போது மீண்டும் பாலா என் முன் நிற்கிறான்.

“டேய் முரளீ, எப்பிட்றா இருக்க? என்ன அடயாளொந் தெரீதா?”

“நான் அந்த ட்ரெயின்ல போணும்டா, என்ன ஏன்டா இந்த ட்ரெயினுக்கு தள்ளி வுட்ட?” அவனை நான் அதட்டலாகக் கேட்கிறேன்.

“அந்த வண்டில நெறய முள்ளு மரொன்டா… நீயே பாரு” என்று பக்கத்துத் தண்டவாளத்தில் போகும் ரயிலைச் சுட்டிக் காண்பிக்கிறான்.

அவன் சொல்வது உண்மைதான். அந்த ரயில் பெட்டிகளில் அடர்த்தியாக முள் மரங்கள் கிளைகளை நீட்டி வளர்ந்திருக்கின்றன.

“சொன்னேம் பாத்தியா” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரிக்கிறான்.

டப் டப்

பக்கத்து ரயிலிலுருந்து இந்த ரயிலின் தண்டவாளம் வரை நீண்ட முள் கிளையொன்று இந்த பெட்டியின் அகண்ட வாயில் வழியாகக் நுழைந்து பாலாவை முகத்தில் இரண்டு முறை அறைகிறது. அடி விழுந்த நொடியில் அவன் சிரிப்பு அடங்குகிறது.

ரத்தக் கீற்றுகள் விழுந்த அவன் முகத்தைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கிறது.

“நீயும் தாம்பரம்தான் போறியா? அப்பொ டைம் இருக்கு, வா அந்த சீட்டுல போயி ஒக்காரலாம்” என்று அவனை என்னுடன் கூட்டிச் சென்று ஒரு இருக்கையில் அமர்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் எங்கள் பள்ளி ஆண்டுவிழா ஒன்று நிறைவுக்கு வரும்போது தான் ஒரு பாடல் பாடுவதாகச் சொல்லிவிட்டு பாலா மேடையில் சென்று ‘குத்துவிளக்கு குத்துவிளக்கு’ என்ற விரசமான பாடலை மைக்கில் பாடத் தொடங்கியதும் அவனை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதும் நினைவுக்கு வருகிறது.

“ஸ்கூல் ஆனுவல் டேல ஸ்டேஜ்ல போயி நீ குத்துவிளக்கு சாங் பாடின ஞாபகம் இருக்கா?” என்று சிரித்துக்கொண்டே கேட்கிறேன்.

உடனே அவன் முகம் கறுத்துவிடுகிறது.

“மவனே, பாடினது நீயி, பனிஷ்மென்ட்டு வாங்கினது நானு… அன்னிக்கி என்ன அடி தெரியுமா?”

“என்னடா சொல்ற? நீதானடா ஸ்டேஜ் ஏறி பாடின…”

“கொய்யால… அது நீடா… டீச்சருங்க தூக்கிட்டு போனதுதான் என்னைய”

குழம்பிப் போய் ரயிலுக்கு வெளியே பார்க்கிறேன். அங்கு நின்றுகொண்டிருப்பது மகாவேதான்.

என்னைப் பார்த்தவுடன் ரயிலில் ஏறிவிட்டாள்.

“ஹே மகா! நானே ஒனக்கு கால் பண்ணணும்னு இருந்தேன்”

“இங்க சிக்னல் கெடைக்காது… ஐ கான்ட் டூ திஸ் ரைட் நவ்”

“கோச்சுக்காத டீ… நைட்டு எக்கச்சக்க வேல… வெள்ளம் வேற வந்துருச்சு… தூங்கக் கூட இல்ல தெரியுமா?”

அவள் என்னை நம்பிக்கையே இல்லாமல் பார்க்கிறாள்.

“நெஜமா டீ… வேணும்னா பாலாவையே கேளு” என்று என்னருகில் இருப்பவனைக் கைகாட்டுகிறேன்.

என்னருகில் பாலா இல்லை. காவி அணிந்த ஒரு சாமியார் அமர்ந்திருக்கிறார்.

“சார்… ஐயா… இங்க பாலா இருந்தானே… எறங்கி போய்ட்டானா?” என்று அவரிடம் கேட்கிறேன்.

“நான்தான்டா பாலா… மற களென்டுருச்சா ஒனக்கு?” அவர் பேசும் குரல் பாலாவுடையதுதான்.

“நீங்க… நீ ஏன்டா காவி போட்டுருக்க?”

“இது வெள்ளடா வெண்ண!”

“நீ சாமியார் வேஷம் போட்ருக்கறது ஒனக்கே தெரியலயா?”

“நா சொல்றதக் கொஞ்சம் கேக்கறியா?” மகாவின் குரல் கேட்க, அவள் பக்கம் திரும்புகிறேன்.

அவள் நான்கு இருக்கைகள் தள்ளிப் போய் அமர்ந்திருக்கிறாள். போதையில் தள்ளாடியபடி ஒரு ஆள் அவளருகே வந்து அமர்கிறான். முகம் சுளித்து அவள் அதே இருக்கையில் தள்ளி அமர்கிறாள்.

“சரி, எம் பைசாவ எடு, நாம் போவணும்” பாலா சாமியாரின் குரல் என்னை மீட்கிறது.

“என்ன பைசா?”

“ஒம் பைல இருக்கு பாரு, அதுதான்”

என் பையில் முன் பகுதியைத் திறக்கிறேன், அதில் கத்தையாகப் பழைய ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்!

“என் டூசன் காசு. அதக் குடு, நாம் போறேன்”

“ஆல்ரைட்… இப்பயாவது நா சொல்றதக் கேக்கறியா?” திடீரென ஒலிக்கும் அவள் குரலில் கோபம் தெரிகிறது. இன்னும் நான்கு இருக்கைகள் தள்ளிப்போய் அமர்ந்திருக்கிறாள் மகா. அவள் முகத்தில் என்ன உணர்ச்சி இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

“இது என் காசுடா பாலா” அவளைக் கவனிக்காமல் பாலாவிடம் சொல்கிறேன்.

அந்தக் குடிகாரர் சத்தமாகத் தும்மிவிட்டு இடவலமாகத் தலையாட்டிவிட்டு, பாலாவைக் கைகாட்டி “அது அவன் காசு தம்பீ… பொய் சொல்லாதீங்க” என்கிறார்.

“அவர் கிட்ட ஏதோ சக்தி இருக்கு, முல்ஸ்… சொல்றதக் கேளு” மகாவின் குரலில் கொஞ்சம் கெஞ்சல் தெரிகிறது.

“பட் இது என் காசு மகா!”

“நீ சொல்றத கேட்டுட்டு ஒடனே ஒத்துக்கணுமா? நா சொல்றதக் கொஞ்சம் கேளேன்… நா… ஹலோ?” மகா எழுந்து நிற்கிறாள். ரயில் பெட்டியில் நான் இருக்கும் இருக்கைக்கும் மகா நிற்கும் இடத்திற்கும் இடையே பல இருக்கைகள் முளைத்து மகா வெகுதூரம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறாள்.

“மகா, எங்க போற? நில்லு… இது பாலாவே இல்ல, ஏதோ போலி சாமியார்… அவன் ஒரு குடிகாரன்… நான் சொல்றதக் கேளேன்”

“… ஸீ, திஸ் இஸ் ஒய் ஐ டின்ட் வான்ட் டு டூ திஸ் நவ்… ஹலோ? ஹலோ? ஹலோ?” மகா மேலும் மேலும் தள்ளிப்போக, அவள் குரலில் ஒரு பீதி ஒலிக்கிறது.

“மகா!” கத்தியபடி ஓடத் தொடங்குகிறேன். வலது கால் ஒரு கல்லில் தடுக்க, பெருவிரலில் விண்ணென்று ஒரு வலி. கல் தடுக்கி விழும் நேரத்தில் விழிக்கிறேன்.

சுற்றிப் பார்க்கிறேன். மகா, பாலா, சாமியார், குடிகாரர், எவருமே இல்லை. தாம்பரம் ரயில்நிலையம் வந்துவிட்டது.

என் காலைக் குனிந்து பார்க்கிறேன். பெருவிரலில் இருந்து ரத்தம் கசிந்து காய்ந்திருக்கிறது. நகம் பெயர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. நான் இந்த ரயில் ஏறி இந்த இருக்கைக்கு வரும்போது ஒருவரது அலைபேசியைத் தெரியாமல் தட்டிவிட்டதும் அதைக் காலால் எத்திப் பிடித்ததும் நினைவிற்கு வருகிறது. அப்போது ஆன காயமாகத்தான் இருக்கும்.

‘எறங்கினதும் மகாவுக்கு ஃபோன் பண்ணணும்’ என்று நினைத்துக் கொண்டே பையை மாட்டிக்கொண்டு இறங்கத் தயாராகிறேன்.

ரயில் நின்றதும் நிற்காததுமாக இரண்டு சிறுவர்கள் ரயிலை விட்டு குதித்து வெளியேறுகிறார்கள். கால்மீது ஏதோ விழுந்து சுளீரென்று வலிக்கிறது.

“அறிவுகெட்ட மு…!” என் அருகில் நிற்பவர் அந்தச் சிறுவர்களைத் திட்டுகிறார்.

குனிந்து என் கால்மீது கிடக்கும் அலைபேசியை எடுக்கிறேன். அலைபேசியால் ஆன காயத்தை ஒரு அலைபேசியே புண்படுத்துகிறது என்பதை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.

“அவனுக்கு உங்க ஃபோன தட்டிவிட்டோம்னு கூட தெரியாது சார். வால் பசங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவரிடம் அந்த அலைபேசியை நீட்டுகிறேன்.

ரயிலை விட்டு இறங்கி வலது காலை ஊன்றும்பொழுது வலி தொடை வரை பரவுகிறது. சற்றே நொண்டியபடி மகாவை அழைக்க என் கைப்பேசியை எடுக்கிறேன். அவளிடமிருந்து நான்கு அழைப்புகளும் பல குறுஞ்செய்திகளும் வந்திருக்கின்றன நான் தூங்கிய சிறு பொழுதில்.

* * *

  • அன்று வீடு சென்றடைந்தவுடன் வழக்கம்போல என் பையை வாங்கிக்கொள்ளும் என் மனைவி வாசலிலேயே வைத்து பையைத் திறந்து அதில் ஸ்வீட் பாக்ஸ் இல்லாததைக் கவனித்து என்னை மீண்டும் வந்த வழியே அனுப்புவாள்.
  • நான் மகாவை அழைக்கும்பொழுது அவளும் ரயில் நிலையத்திற்கு வெளியில் இருப்பதாகக் கூறி நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் பேக்கரிக்கு வரச் சொல்வாள். தூக்கம் போதாமல் இருக்கும் அசதியும் அவள் குரலில் இருக்கும் கோபமும் என்னை வாட்ட நான் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவேன். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ரத்தம் காய்ந்த கால் பெருவிரல் விண்விண்ணென்று வலிக்க நான் பாதி நொண்டியபடி நடந்து வருவதைப் பார்த்ததும் உர்ரென்று கோபமாக நின்றுகொண்டிருக்கும் மகாவின் முகம் கவலையில் கரையும். அந்த முகமாற்றத்தில் என் தூக்கமின்மையையும் கால் வலியையும் மறந்து ஆறுதல் புன்னகை ஒன்றை உதிர்த்தபடி அவளிடம் விரைவேன்.
  • இந்த ரயில்பயணம் நடந்த புதன்கிழமைக்கு அடுத்த மூன்றாவது புதன்கிழமையன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிசயமாக வார நாளில் ஒரு விடுமுறை வரும். அன்று சன் டிவியில் ஒளிபரப்பும் பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர் காந்திக்கு வெளிநாடுகளில் இருந்த செல்வாக்கைப் பற்றிப் பேசுகையில் காந்தியின் பிரபலமான ரயில் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுவார். அப்போது நான் அம்மா பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியில் பாதி கவனம் செலுத்திக்கொண்டு அடுத்து வாங்கவேண்டிய புதிய அலைபேசிக்கான தேடுதலை மேற்கொண்டிருப்பேன். திடீரென ரயிலில் வெள்ளைச் சட்டை மனிதர் சொன்ன கதை நினைவுக்கு வர, அடுத்த அரை மணி நேரத்திற்கு அந்தச் சம்பவத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றில் அகப்பட்டு கூகுளில் மூழ்குவேன். ஆய்வின் முடிவில் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் கருப்பர்களுக்கு முதல் தரப் பெட்டிகளில் பயணம் செய்யத் தடை எதுவும் இல்லை என்றும், அந்த சம்பவம் நிகழ்ந்து பதினைந்து வருடங்கள் கழித்தே வெள்ளையர்கள் அல்லாதோர் முதல் தரப் பெட்டிகளில் பயணம் செய்யத் தடை விதித்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்றும் அறிந்துகொள்வேன். அதற்குள் என் மனைவி மதிய உணவு தயார் என்று அழைக்க, காந்தியின் பயணம் பற்றிய என் ஆய்விற்கு முன் நான் மேற்கொண்டிருந்த புதிய அலைபேசி பற்றிய ஆய்வை மறந்துவிடுவேன்.
  • கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் எப்போதும் போடும் மருந்துகளுக்கு ஆறாமல் ஒரு வாரத்திற்குப் பின்னும் வீங்கிக்கொண்டே போவதைப் பார்த்து மகா என்னை ஒரு மாலை வேளையில் ஒரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள். கால் மணிநேரத்திற்கும் குறைவான அந்த ஆட்டோ பயணத்தில், சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காதது போலவும் ஒரு காலையே அகற்றவேண்டும் எனக் கூறி காக்கி உடையணிந்த மருத்துவர்கள் மகாவிடம் கையெழுத்து வாங்குவது போலவும் கனவு காண்பேன். நான் கனவிலிருந்து திடுக்கிட்டு எழவும் ஆட்டோ ஓட்டுநருக்கு வழிகாட்ட மகா கையை நீட்டவும் சரியாக இருக்க, அவள் கையில் பற்றியிருக்கும் அலைபேசி நழுவி காயம்பட்ட என் காலிலேயே விழும்.
  • ஒரு வழியாக தமிழ்ப் புத்தாண்டு முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை மீண்டும் புதிய அலைபேசி பற்றிய நினைவு வந்து, ஆய்வு செய்து, அதற்கு அடுத்த சனிக்கிழமை ஒரு அலைபேசியைக் கையில் பெறுவேன். இப்போதிருக்கும் அலைபேசிக்கு இன்னும் ஆயுள் உள்ளதே என்றும் அம்மாவின் தற்போதைய அலைபேசி பழுதாகும்போது இதைக் கொடுக்கலாம் என்றும் எண்ணிக்கொண்டு என் துணிகள் இருக்கும் அலமாரியில் அதை பத்திரப்படுத்துகையில் அறிவுகெட்ட மு-வின் நினைவு வரும். அப்போது அவன் முகம் மட்டுமல்ல, அவன் மேல் நான் கொண்ட வன்மத்தின் சாயல் கூட மறந்து மறைந்திருக்கும் என் அப்போதைய கவலைகளின் பின்னணியில்.

***

ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here