1. x+y = x+y என ஆகும்.
x ஐந்தாகும் போது
y , அதுவாக இருக்கும் போது
5 + y ஆகிறது.
சிலபோது
yயும் இரண்டாகும்போது
x + y = 7 ஆகும்.
x என்பது ஜனநாயகம்
y என்பது மக்கள்
ஆகும் போது
விடை ஏழு
கிடைப்பதேதில்லை.
*
2.மேடைகளின் குரல்களில் மிகுந்திருக்கும் விஷம்
மேடைகளில்
மனதை அச்சுறுத்தும்
குரல்களில்
அரூபவிஷம் மிகுந்திருக்கிறது
அக்குரல்கள்
மிதக்கும் வார்த்தைகளில்
உழைப்பின் பரிசுகள்
ஏமாற்றத்தின் வாழ்வு
நீதி மறுக்கப்பட்ட தீர்வுகள்
மலர்வதாக…
மிகுந்த சாந்தத்தோடும்
மிகுந்த புன்சிரிப்போடும்
லயக்கதவை தட்டுகின்றன
மற்றும்
வாழ்வற்ற மனிதர்களுக்கு
எதிர்காலமற்ற பிள்ளைகளுக்கு
பொக்கிஷங்களற்ற வருங்காலத்திற்கு
மேடைகள்
அள்ளித்தர வைத்திருப்பதாய்
ஒலி பெருக்கிகள் அலறுகையில்
மெல்ல மெல்ல
மலைகளும் லயங்களும்
புகையின்றி
தீயில் எரிகின்றன.
குரல்களில் ஒளிரும் பொய்களின்
ஈர்ப்பில் விழுந்து
கொடி பிடித்து
கோசமிட்டு
ஈசல்களாய்
பொசுங்கிச் சாகிறோம்
நாம்
தலைவர் வாழ்க
தேசம் வாழ்க
வழமைபோல் அடிமையாய்
சாவோம்.
சுயமாய்
சிந்தித்து
என்னத்தை கிழிக்கப் போகிறோம்.
*
- என் இனிய சொற்களால் உனக்கொரு ஆடை நெய்வேன்.
அம்மா
கிழிந்த உன் பூப்போட்ட ஆடையை மாற்ற
என் இனிய
சொற்களால் உனக்கொரு ஆடை
நெய்வேன்
அவ்வாடை
உன் மகளின் பட்டங்களானது
அவ்வாடை
உன் மகனின் சாதனைகளானது
அவ்வாடை
தோற்கடிக்கப்பட்ட உன் போராட்டங்களை
மீளவும் வெற்றியை நோக்கி
அழைத்துச் செல்வது
அவ்வாடை ஜீவனுள்ளது
அவ்வாடை அதிகாரமுள்ளது
அவ்வாடை சுதந்திரமானது
எனவே
அம்மா உனக்காக
உனது
இழந்த வரலாற்றிலிருந்து
மஞ்சள் நூல்களை சேகரிக்கிறேன்
உனது
காவு கொள்ளப்பட்ட ஒப்பந்த வாழ்விலிருந்து
சிவப்பு நூல்களை ஒன்று சேர்க்கிறேன்
உனது
எதிர்கால சந்ததியின்
பச்சை ஒளிரும் கனவு நூல்களையும்
பிசைந்து
இனிய சொற்களால் உனக்கொரு ஆடை
நெய்வேன்
*
4.நானொரு காலத்தில் கனிகளை சுமக்கும் கிளையாவேன்
ஆம்
நண்பர்களே
வாழ்வதற்கு பூக்க
காத்திருக்கும்
கிளை நான்
வரலாற்றுக்கு முன்னும் பின்னும்
மறைத்து
வளர்க்கப்பட்ட
கிளை நான்
நீர் இன்றி
தவிக்கவிடப்பட்ட
கிளை நான்
அதிகாரத்தின்
கத்திகளால்
கவ்வாத்து செய்யப்பட்ட
கிளை நான்
எனக்கு
தேவை அற்புதமான பூத்தல்
எனக்கு
தேவை சுதந்திரமான வளர்தல்
எனக்கு
தேவை பாடல்கள் நிறைந்த பறவைகள்
ஆதலால்
நான்
பூக்கிறேன்
காய்க்கிறேன்
கனிகின்றேன்
புதிய காலங்களால் நிறைந்து
எதற்கும் அஞ்சாது
காற்றில் ஆடி
மகிழ்ந்து
கிடக்கும்
கிளையாக…
*
- எக்காலத்தின் சொல் நாம்?
இழப்பின் வடுக்களை
சுமந்த
எக்காலத்தின் சொல் நாம்?
இருப்பின் அடையாளங்கள்
தொலைத்த
எக்காலத்தின் சொல் நாம்?
நிகழ் காலத்தின் இயக்கமா?
இறந்த காலத்தின் அமைதியா?
எதிர் காலத்தின் கனவா?
எக்காலத்தின் சொல் நாம்?
அல்லது
இறந்த காலத்தில் உழைப்பாய்
இருந்த சொல்லா?
அல்லது
நிகழ்காலத்தின் இருட்டுக்குள்
திரும்ப திரும்ப
தன்னையே துரத்தி துரத்தி
பிடிக்க முயலும்
வட்டச் சொல்லா?
எக்காலத்தின் சொல் நாம்?
*
- மந்திரக்கவிதை
மலைகளிலிருந்து மந்திரக்கம்பளத்தில்
பறந்து போன கவிதை …
உலகமெங்கும் மலைகளின்
இன்பங்களை துன்பங்களை வலிகளை
ஒவ்வொரு இதயச்செவிகளுக்கும் கூறியது…
நொந்து மரணத்தை எதிர்பார்த்து
மலைகளுக்குள் கிடக்கும் எளிய
ஜீவனுக்காக
அக்கவிதை தன் இரத்தத்தை சிந்தி
உரக்க ஒலிக்கிறது…
முதலாளிகளின் காலம்
தின்ற தாய்களின் உயிரின் மீதங்களில்
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மீதமிருக்கும்
பேரொளியின் வலிமையை ஏந்தி
மலைகளிலிருந்து மந்திரக்கம்பளத்தில்
பறந்து போன கவிதை
உங்கள் வாசலின் முன் நிற்கின்றது…
உங்கள் இதயக் கதவை திறந்து
அதன் வலிகளை இன்பங்களை
பாடுகளை செவி கொடுத்துக்
கேளுங்கள்…
பின் மந்திரக் கம்பளத்தில் கவிதையின் அருகில்
ஒளிரும் வார்த்தையாக உருமாறிய
நீங்கள்
எழுதத்தொடங்குவீர்கள்
உங்கள் வாழ்வின் மந்திரக்கவிதையை…
*
- கைவிடப்பட்டதும் தனித்திருப்பதுமான ஒற்றை முகம்
காலத்தாலும் கடவுள்களாலும்
அதிகாரத்தாலும்
கைவிடப்பட்ட முகம்
மலைகளில் தேயிலை கொழுந்தாய் வளர்ந்திருக்கிறது.
தேசத்தில் தனித்த முகம் கொண்டது.
அந்த முகம்உழைத்து உழைத்து தேய்ந்து கிடக்கிறது…
வரலாற்றின் இருண்டக்கூண்டுக்குள்
கிடந்தாலும் அம்முகம்
அகத்துள் பெரும் கனத்த சிவப்புடன்
சூரியனை உள்ளே வைத்திருக்கிறது.
அம்முகம் கைவிடப்பட்டதின் வலியை
நன்கு உணர்ந்திருக்கிறது.
தனித்திருக்கும் ஒற்றை முகமொன்று
என்னை அக்னி குஞ்சாக்கி
லயத்து வாசலில் ஓங்கி எரியவிட்டது.
எரிந்து எரிந்து
செஞ்சிவப்பாக கைவிடப்பட்டதும்
தனித்திருப்பதுமான ஒற்றை முகம்…
இந்த கவிதையை வாசித்து
தனது முகத்தை அறிய முயல்கிறது.
***
சண்முகம் சிவகுமார் – இலங்கை மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை இராணியப்பு தோட்டத்தில் பிறந்து வளர்ந்து தற்போது பாடசாலை ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த 22 வருடங்களாக எழுத்து துறையில் இயங்கி வருகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி போன்ற துறைகளில் மலையக சமுதாயம் சார்ந்த படைப்புகளை உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகைகள் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மலையகத்தில் இயங்கும் பெருவிரல் என்ற இலக்கிய அமைப்பின் தோற்றுவித்தவர்களில் ஒருவர். காற்புள்ளி கவிதை இதழின் நிர்வாக ஆசிரியர். மின்னஞ்சல் : sivakumarnilu@gmail.com
