தேன்மொழி அசோக்
மறதியைத் தழுவும் கொற்றவை
பாலையில் பரிதவித்துத் தேடுகிறாள்
ஊற்று நீரில் வளரும் வல்லாரையை.
பொன்னந்தியானது
மழையாய்ப் பொழியும் வேளையில்
ஒட்டகத்தில் நகர்வலம் செல்கிறாள்.
வெண்கம்பிக் கூந்தல்
சிறகெனப் பறக்கின்றன
முழங்கால் வலி கொஞ்சம் ஆசுவாசமடைகிறது.
வெடித்துக் கிடக்கும் தேகம்தனை
கூதிர் காற்று கட்டித் தழுவுகிறது
அவ்வப்போது சில நீர்த்திவலைகள்
தீர்த்து வைக்கின்றன
அவளின் முத்த வேட்கையை!
***
சாதாரணத்திலும் சாதாரணமான கொற்றவை
சாதாரணமானவளாகவே இருந்தாலும்
சாதாரணமானவளாகத் தெரியவில்லையாம் தலைவனுக்கு.
அவளின் சாதாரணமான செயல்களால் மிளிர்வதே
அவள் பலமே தவிர
மிகையாய் எங்கேயும்
காட்சிக்கு நிற்க மாட்டாள்.
அத்தனை நபர்களையும்
அசாதாரணமாக ஈர்க்கும் அவளுக்கு
எத்தனை கொடூர பட்டங்களை
அவன் வழங்கினாலும்
சற்றும் தலை குனியாத
மிடுக்கான நடையும்
அவளுக்கு சாதாரணமானதே.
பாலை நிலத்திலும்
பசுமையாய் முளைக்கின்றன
அவள் சுவடுகள்.
***
அகச் செடியில் மலர்ந்த மலர்
கசங்காமலும்
புறச் செடியில் பூத்திருக்கும் பூ
உதிராமலும்
அன்றாடம் நீர் பாய்ச்சி
வளர்க்கிறாள்.
பாலை நிலக் கொந்தளிப்பில்
இருவேறு செடிகளை
முழுமனதோடோ
அரை மனதோடோ
கொற்றவை வளர்த்துக் கொள்ளலாம்.
உயிர் நிறைந்து வழிபவளாய்த்
தோற்றமளிக்கலாம்
ஒருபோதிலும்
நிலத்தை நீங்கி
பாசனத்தை மட்டும் தேடலாகாது.
***
பல்லிடுக்கில் மாட்டிய
மாமிசத் துகள்களை
ரகசியமாய்
நாவினில் எடுப்பதைப்போல
பால்யத்தில் பதுக்கிய
பாலியல் சந்தேகங்களை
பால்யத்திலிருந்தே பயணிக்கும்
தோழியிடம் கொட்டுகிறாள்
நாற்பதைத் தொட்ட கொற்றவை.
அதோடு
அந்தக் காலத்தின் ரகசியங்களை
இரு சாரரும்
எடுத்துப் பரப்புகின்றனர்.
என்றபோதிலும்..
நாற்பதின் இச்சைகளை மட்டும்
கயற்றில் கோர்த்த உப்புக்கண்டமாய்க்
காவல் காக்கின்றனர்.
இருவரின் ஆழ்மூச்சில் நனைந்த
அந்த உலர்துண்டில்
செல்வதறியாது
வேறெங்கும் செல்லவும் மனதில்லாத
பெருத்த இயலாமைப் புழுவொன்று
அங்குமிங்கும் ஊர்கிறது.
***
என்னதான்
பாலை நிலத்து தெய்வமேயானாலும்
அன்றைய கொற்றவை
வாழும் நாட்களில்
வாழ இயலாமல்
உரியவர்களால் வதைக்கப்பட்டு
பக்தர்கள் கூடி போற்றப்படுகிறாள் இன்று.
கொற்றவைகள்
பாலையில் மட்டும் வளரவில்லை
எல்லா நிலங்களிலும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
***
தேன்மொழி அசோக் – கவிதை,நூல் அறிமுகம் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூர் தமிழ் முரசு, மக்கள் மனம், மின்கிறுக்கள் இணைய இதழ், சிராங்கூன் டைம்ஸ் மற்றும் திணைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வாசகசாலை, வளரி, நுட்பம், ஆனந்த விகடன், கொலுசு மற்றும் கணையாழி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரின் தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் தங்கமுனைப் போட்டிகளில்(2023) கவிதைப் பிரிவில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: honeylx@gmail.com
