Saturday, May 30, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்அவதானிப்புகள் ஏதுமற்ற உறக்கம்

அவதானிப்புகள் ஏதுமற்ற உறக்கம்

லட்சுமிஹர்

யாரும் வழி சொல்வதில்லை :

ஒவ்வொரு முறை அப்பாதையைக் கடக்கும் போதும் எண்ணற்ற வேண்டுதல்களை நினைத்துக் கொள்வது வழக்கமே. அதுபடி இன்று நடக்கவிருக்கும் தேர்வில் எப்படியாவது படித்த கேள்விகளை விடத் தெரிந்த கேள்விகள் வர வேண்டும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டாள். இன்று சனிக்கிழமை. அவ்வழியில் சாமி கும்பிட ஆட்கள் வர ஆரம்பித்திருந்தனர். சிறுவயது முதல் முனியப்பன் கோவிலுக்குச் செல்லும் அப்பாதையில் அவள் நடந்தது கிடையாது. இப்போது எங்கு நிற்கிறாளோ அதே இடத்தில் நின்று கொள்வது அவளின் எல்லையாக மட்டும் இல்லாமல் அங்கு இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பொருந்துவதாக இருந்தது. சிறு வயதில் அதைச் சுற்றி இருந்த கேள்விகளுக்கு யாரும் பெரிதாகப் பதில் கொடுக்க ஆர்வம் இல்லாதவர்களாகவே இருந்தனர் என்பதைத் தாண்டி அந்த கேள்வி பயனற்றது என்பதாகவே அனைவரது பாவனைகளும் இருந்தன. நாளடைவில் என்ன நடந்து கொண்டிருந்ததோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவளும் வந்திருந்தாள். அவளுக்கு சிரமமும் இருக்கவில்லை. அனைவரைப் போலவும் அதில் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கிவிட்டாள். நம்பிக்கை அவளது கேள்விகளையெல்லாம் மறையச் செய்திருந்தது. அப்பாதையின் வழியே சென்ற பெண்கள் பற்றி உலவும் கதைகளை ஆர்வமாகக் கேட்பது தொடங்கி அதைத் தன் பாணியில் தனது பள்ளி தோழியரிடம் சொல்லிப் புகழ் பெறத் தொடங்கியிருக்கும் சமயத்தில் அவள் புனைந்த ஓர் கதை பள்ளியில் எங்கும் பரவலாகப் பேசப்பட்டது.

அக்கோவிலுக்கு அவ்வூரில் உள்ள பெண்கள் யாரும் வழி சொல்ல மாட்டார்கள் என்று. அக்கிராமத்துப் பெண்கள் அதைச் செய்தது இல்லை என்றும் இன்றுவரை அது அப்படியாகவே நடந்தேறிக் கொண்டிருப்பதாக அவள் சொல்லும் போது உடன் இருந்த மாணவிகளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிலர் அங்குக் கண்டிப்பாக, திருட்டுத்தனமாகக் கூட சென்று வந்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். கண்டிப்பாக முடியாது என்று இவள் மறுத்திருந்தாலும் அவர்களின் அடாவடி நின்ற பாடாக இல்லை. அக்கோவிலுக்குள் பெண்கள் அனுமதியே இல்லை. அதற்குப் பின் எண்ணற்ற வரலாற்றுக் கதை உள்ளது எனக் கூறினாள். அதைக் கேட்டு இப்போது அவளை அவளது தோழிகள் நச்சரிக்க தொடங்கியிருந்தனர்.

ஏனோ அவர்களது கேள்விகளுக்கு மனம் ஒவ்வாமல், இக்கதைகளைக் குறித்து அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வரத் தொடங்கியிருந்தாள். அதுவே சரியென அவளுக்குப் பட்டது. திடீரென்று மனதிற்கு இன்று நடக்கப் போகும் தேர்வு நினைவுக்கு வர மனம் அனைத்திலிருந்தும் விடுபட துடித்து முழு கவனமும் தனது பாடத்திற்குள் செல்ல அனுமதித்தாள். சமீபத்தில் தான் அப்பாதையின் முன் இருந்த பேருந்து நிறுத்தத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளி அமைத்திருந்தனர். முன்பு இருந்த பேருந்து நிலையம் அவளுக்கு ஏற வசதியாக இருந்தது. இப்போது நடக்க வேண்டும், நடந்தே தீர வேண்டும். நடக்க நடக்க களைப்புற தொடங்கியிருந்தாள்.

அவை பழக்கப்பட்டுவிட்டன :

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து எடுத்த புகைப்படங்களைக் கோவிலின் மூலையில் உட்கார்ந்து பார்த்து வந்தான். எப்போதும் எடுக்கும் புகைப்படங்களாகவே அவை இருந்தது அவனுக்குப் பெரிய திருப்தியைக் கொடுக்கவில்லை. எதையாவது புதிதாகக் காட்சி சட்டகத்துக்குள் புகுத்த அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. முடிந்த அளவு புது முயற்சியைக் கைக்கொள்ள வேண்டும். பெரிதாகத் தொழிற்நுட்பம் சார்ந்து இல்லாமல் அவை கருத்தியல் ரீதியில் இவ்விடத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே அவனது முடிவாக இருந்தது. எப்போதும், எங்கு புகைப்படம் எடுக்க கிளம்பினாலும் அதற்கு முன் சிறு தயாரிப்புகளைச் செய்வது வழக்கம் தான். அது ஒர் வகையில் இது நாள் வரை அவனைத் தேற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்பாடுகள் அவனை ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்துவதாகவே இருப்பதால் அவைகளெல்லாம் இப்போது பயனற்றதாக தோன்றியது. அச்சூழலில் இன்னும் தன்னை எப்படியாவது தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தான்.

மீண்டும் தான் எடுத்த புகைப்படங்களில் தனது குறைகளைக் கவனிக்கத் தொடங்கினான். வெட்டுவதற்காக வரிசையில் ஆடுகளைப் பிடித்துக் காத்திருக்கும் ஆட்களின் முகபாவனைகள், சிதறுண்டு கிடக்கும் தலைகள், அதன் சூடேறிய ரத்தம், கோவிலினைச் சுற்றி உள்ள ஒரே மாதிரியான மரங்கள். அம்மரங்களில் இருக்கும் மனித முகங்களின் பிரதிபலிப்புகள், எங்கும் ஆண்கள் மட்டும் நிரம்பி வழியும் வாசம், பெண்கள் படாத அந்நிலத்தின் வாகு, நிதானமான கறிகளைத் தின்னும் நாய்கள், எப்போதும் கேட்கும் பட்டாசு சத்தம், காவல் தெய்வத்துக்குப் படைத்த கிடாவின் சமையல் முறைகள், அசைவ விருந்து என அவனது புகைப்படங்கள் ஓரளவு அதன் சூழலை முழுவதும் கைகொள்வதாக இருந்தது. இருந்தாலும் மனதிற்குள் இதையெல்லாம் சேர்க்க மையப் புள்ளியாக அல்லது தனித்துவமான கதை சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பாக இதை மாற்ற முயன்று கொண்டிருந்தான். இனியும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தால் ஆகாது, எதையாவது ஒன்றை எடுத்தாலொழிய ஒன்றும் பயன் இல்லை என்று தெரிய வர. அவன் தனது புகைப்படக்கருவியுடன் அடுத்த புகைப்படத்திற்கு முன் நகர்ந்தான். முன்பு பதியப்பட்டிருந்த காட்சிகள் அனைத்தும் அங்கு ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்து மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் எதைக் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு முதலில் அந்த மும்முரத்திலிருந்து வெளியேற நினைத்தான். ஆம் அது அவனை மேலும் கீழும் இழுப்பதாகப்பட்டது. அதனால் முதலில் அவனது பார்வை அதிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதன் விளைவாக ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடிய மனநிலைக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். என்னவோ அவன் கண்கள் அங்குச் சுற்றித் திரியும் நாய்களின் பக்கம் திரும்பியது . அவனைப் போல அவை பெரும் பதற்றம் இல்லாமல் சுற்றி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். சுற்றி அலைந்த நாய்கள் மட்டுமே இப்போது கண்களுக்குப் புலப்பட்டது. அவைகளை நொடிக்கு ஒரு முறை வெடிக்கும் வேட்டின் சத்தத்திற்குத் துளியும் பயப்படாமல் சுற்றிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. இதுவரை பட்டாசுகளுக்குத் தெறித்து ஓடும் நாய்களைத் தான் கண்டிருக்கிறான். இவ்வளவு நிதானமான நாய்களை கவனித்தது இல்லை அல்லது கண்டது இல்லை. இப்போது நாயகர்களாக நாய்கள் உருப்பெறத் தொடங்கினர். அவைகளின் நிதானத்திற்குக் காரணம் அங்கு நிரம்பி வழியும் உணவுகளாகக் கூட இருக்கலாம் இல்லை அச்சத்திற்கு அவை பழக்கப்பட்டதாகக் கூட மாறியிருக்கலாம். இதுவரை தேடிக்கொண்டிருந்த தனித்துவமான கருவைத் தான் கண்டுகொண்டு விட்டதாகப்பட்டது. எங்கும் நாய்கள் ஒய்யாரமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.

கிடையின் நடை :

இருவரும் சேர்ந்து அம்மதிய பொழுதுகளில் நடக்கத் தொடங்குவது வழக்கம். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நட்பு எப்போது வேண்டுமானாலும் பகையாக மாறலாம் என்பதால் பெரும்பாலும் அந்நடை அமைதியைக் கொண்டிருக்கும். அது இதுநாள் வரை நன்மையையே கொடுத்திருக்கிறது. ஆதலால் தங்களால் முடிந்தளவு அதைக் காப்பாற்றி வந்தனர். அதனை மீறியும் சில நாட்களில் பேச்சு சண்டையில் போய் முடிவடைவதைத் தடுக்க இயலாது.

என்றும் இல்லாத அளவு இன்று வெயில் உச்சியில் ஏறியிருந்தது. எப்போதும் நடக்கும் பாதை ஆகையால் எந்த ஏற்ற இறக்கங்களுக்கும் கால்கள் தானாகப் பழகியிருந்தது. அவர்களின் கண்களோ நேர் ஈட்டி பார்வைகளாகச் சென்றடைய வேண்டிய கோவிலிலேயே மையம் கொண்டிருந்தது. நடையில் ஒருவருக்கு ஒருவர் மிஞ்சியோ அல்லது பின்னடைந்தோ செல்வது ஒர் நாளும் நிகழ்ந்தது இல்லை. சரியான வேகத்தை இத்தனை வருட நடையில் எட்டியிருந்தனர். காலை முதல் சாப்பிடாத களைப்பு கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே சென்றது. அப்படியான தருணங்களை கைக்கொண்டு விட முடியாமல் பேச ஆரம்பித்தே சண்டையில் போய் முடிந்திருக்கிறது. இப்போது அத்தருணம் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது அதை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்று தங்களுக்குள் முயன்று பார்த்துக் கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தனர்.

பேசக் கூடாது ..பேசக் கூடாது என்று தான் அவர்களின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. தான் முதலில் பேசிவிடக்கூடாது என்பதில் ஒருவருக்கொருவர் தீர்க்கமாக இருந்தனர். அந்த முதல் பேச்சின் பலியை இனிமேலும் தான் சுமக்கக் கூடாது என்பதே எண்ணம். அதில் தோற்றிடாது முயன்று கொண்டிருப்பதை ஒருத்தர் இன்னொருத்தரைக் கவனிக்காதபடி பார்த்துக் கொண்டனர். யார் பேசப் போவது…பசியோ நடக்க நடக்க ஏறிக் கொண்டே சென்றது. இப்போது என்ன செய்ய ஒருவர் மீது ஒருவர் பலி போடத் தயாராக இருந்தனர். அதற்கான காரணங்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் அல்லது முதலில் மற்றொருவரைப் பேச வைத்து பலியைப் போட வேண்டும். அதைச் சாத்தியப்படுத்த தங்களுக்குள் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்க வயிறோ எதையும் யோசிக்க விடாமல் அவர்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருப்பதாகவே இருந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் இந்நடையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் சண்டையை அறிந்த ஊரார் அனைவரும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தனர். எவ்வாறு அவர்கள் மீண்டும் ஒன்றாகிவிடுகிறார்கள் என்பதைப் பற்றியும் யோசித்து இருக்கின்றனர். கோவிலின் அருகில் நெருங்கியதற்கு சுவடாய் வெட்டிய கிடாயின் வாசம் இருவரின் சுவாசத்திற்குள் புகுந்தது. அது அவர்களை முன் நோக்கி நடக்க விடாமல் செய்தது. சாப்பிடப் போகும் கிடையின் உருவம் அவர்களுக்கு முன் வந்து கொண்டேயிருந்தது. இருவரும் ஒவ்வொருவரின் கிடையினை கற்பனை செய்து கொண்டனர். ஒருத்தர் இன்னொருத்தரிடம் இருந்து அந்த கற்பனையை மறைக்கச் சிறிய புன்னகையைப் பயன்படுத்தினர். பசி ஏறிக் கொண்டே சென்றது…

அசைவத் துணுக்கு :

சிறுவயது முதல் இதை மட்டுமே செய்து வருவது இக்காலகட்டங்களில் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா… என்பதே அவனது பந்தியில் அமர்ந்து உண்டவர்களின் புகாராக இருந்தது. இது நாள் வரை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவனுக்கே அது தோன்றியதால் மண்டைக்குள் போட்டு சுழற்றிக்கொண்டிருந்தான். கோவிலின் அருகில் சமைக்கத் தேவையான பாத்திரக் கடையையும், சமையல் ஆட்களையும் இயக்கி வருகிறான். தன் தந்தை வழி வந்த இத்தொழிலில் தற்போது வரை எந்த வித தொய்வும் இல்லை. நாள் ஒன்றுக்கு இருபது கிடா வெட்டுக்கள் சாதாரணமாகக் கடந்து போகும். அதில் அவனே நான்கைந்து பேரின் சமையலைப் பிடித்து விடுவது அவனுக்கு லாபத்தையே கொடுத்தது. பல காலங்களாக அங்கு இயங்கி வருவதால் அங்குத் தனி மௌசும் இருந்து வந்தது எனலாம். ஆனால் இப்போது அதைச் செய்வதில் ஈடுபாடு குறைந்தவனாக இருக்கிறான். அதற்கான காரணத்தைச் சொல்லி இங்கு யாருக்கும் புரிய வைக்க முடியாது என நினைத்தவன் தன்னுள்ளேயே உழட்டிக் கொண்டிருக்க அவனின் அசைவ விருந்தை பற்றிய குறைபாடுகள் எங்கும் பரவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரவும் அச்செய்தியை நிறுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் அதில் உண்மை இருப்பதால்,ஏற்றுக்கொள்வதைத் தாண்டி எதுவும் அவனால் செய்ய முடியவில்லை.

சமீப நாட்களில் ஆர்டர் குறைந்து கொண்டு போவது அங்கு அவனுக்கு இருக்கும் மௌசு போவதை அப்பட்டமாக காட்டியது. வெறிச்சோடி கிடக்கும் எதிர்க்கடைகளின் தற்போதைய வியாபாரமும் , அசைவ மணமும் அவனை வருத்தப்படச் செய்து கொண்டு இருந்தது. அதிலிருந்து வெளியேற ஒரே வழி மீண்டும் அச்சுவையைக் கொண்டு வருவது தான் என எண்ணி எவ்வளவோ முறை முயன்றும் அச்சுவையை மீண்டும் கொண்டு வரமுடியவில்லை. இது அம்முனியப்பன் தனக்குக் கொடுத்த தண்டனையாகவே நினைத்துக்கொண்டான். அதில் அவனுக்கு கோபமே எழுந்தது. முனியப்பனை மீறி அச்சுவையைக் கொண்டு வருவதென்பது முடியாத ஒன்று என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

தனது காதலியிடம் என்ன பதிலைச் சொல்ல முடியும். அவள் இல்லாத இனிவரும் நாட்களை எண்ணிப் பார்த்திருக்கவில்லை. அவளின் இளமையை அனுபவித்தவனுக்கு அதை மீண்டும் அனுபவிக்கவே எண்ணம் ஓடியது. அவளை ஏமாற்றி விடக்கூடாது தன்னுடனையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவனின் பிரச்சினை அங்கிருந்தே ஆரம்பித்தது. அவனது நினைப்பையெல்லாம் அவளே கைவசம் வைத்திருந்தாள். தன் உணவில் சுவை இல்லாமல் போனதற்கு அவளின் நினைப்பு தான் காரணமா என்று அங்கு அதற்கு முன் சுகபோக வாழ்வில் திளைத்திருந்த ஆண்களிடம் சொன்ன போது, அவனைப் பார்த்து எல்லோரும் கேலி செய்தனர். ‘நான் மூணுபிள்ள பெத்தவன்’ என்று ஒருவர் சொல்லும் போது, இரண்டையும் தானே ஒப்பிட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது. என்ன செய்தாலும் அவனால் பழைய பாணிக்குத் திரும்ப முடியவில்லை. நேராக முனியப்பனிடம் ஓடிப் போய் மனதில் இதுவரை ஓடிக் கொண்டிருந்த விசயத்தையெல்லாம் மொத்தமாக ,முறையான அடுக்குகள் இல்லாமல் கூறி முடித்தான். அது அவனுக்குச் சிறு மகிழ்வைக் கொடுத்தது. சாமியைப் பார்த்துவிட்டு வெளியேறியவன் கண்களில் வேண்டுதலுக்குப் பலி கொடுக்க வரிசையில் காத்திருந்த ஆடுகளை கவனித்தான். முதன் முறை அவளுடன் சேர்ந்த இடம் அவள் வீட்டின் கெடையில் தான்.. அதை அறிந்தது போல அவனுக்கு ஞாபகப்படுத்திய ஆட்டினை கொண்ட முதலாளியின் சமையல் ஆர்டரை வாங்கினான். இனி அது வெட்டப்படும் வரை காத்திருப்பதாக முடிவெடுத்தான். 

நான்கு துண்டுகள் :  

‘ஆட்ட வெட்ட பயப்படும் மனுஷங்க எதுக்கு அத வேண்டிக்குறாங்க, அதுவும் உசுரு தான“ என்று தனக்குள் எப்போதும் புலம்புவது உண்டு. கிடைக்கும் நாட்கள் கோவிலுக்கு வந்து இப்பணியைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும் அப்போது நாலு காசு பார்க்க வேண்டும் அதற்கு எதையும் பலி கொடுத்து விட்டு போங்கள் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தான்.

நேற்றிக் கடனுக்காக வந்திருக்கும் சிலர் ஆடுகளை வெட்டுவதில் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பர். அவர்கள் எல்லாம் அவனையும் அவனைப் போல அங்கு இருப்பவர்களையும் தேடி வருவது வழக்கம். வெட்டுக்கு விலை பேசி அவர்களது வேண்டுதலை முடிக்கக் கூடியவனாகவே அவன் இருந்தான். சிலர் அவனது கூலிக்கு ஒற்று வராமல், ஆட்டின் தலையை தானாக வெட்ட முயன்று சரியாக சிதறாமல் பாதி வெட்டிய தலையுடன் எதிரில் தென்படும் யாரையும் கவனிக்காது முட்டி தள்ளி, ஓடும் அளவுக்கு ஓடிச் சோர்ந்து கீழே விழுவதைப் பார்க்க யாருக்கும் மனம் வராது. அதன் மீதி உயிரை நிறுத்த இவனைப் போன்ற சிலரே ஓடிப்போயாக வேண்டும். அதனால் என்னவோ அவர்களுக்கு அங்குத் தனி மரியாதை கிடைத்து வந்தது. ஒரே துண்டாக வெட்டும் பழக்கத்தினை இது நாள் வரை நன்கு பழகியிருந்தான். அக்கிழமைகளில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதைச் செய்தாக வேண்டும் என்பதால் நேரம் போகப் போக அவனுடைய கைகளில் பலம் கூடிக்கொண்டே போகும். சிறு கருணை கூட காட்டாது துண்டாக்குவதில் தனது வாழ்வை நடத்திக் கொண்டிருந்தான். அப்படியான என்னுடைய வேண்டுதலில் அவனை சந்தித்தேன். அவனது கொடூர கைகளைக் கொண்டு பலி கொள்ளும் ஆட்டினை நினைத்து வருத்தப்பட்டேன். அதை அவனிடம் கூறிட விளைந்த போதே முன் சொன்ன வாக்கியத்தைச் சொன்னான்…” ஆட்ட வெட்ட பயப்படும் மனுஷங்க எதுக்கு அத வேண்டிக்குறாங்க, அதுவும் உசுரு தான..உங்களுக்கு உங்க உசுரு தான் முக்கியம்…”. அதன் பிறகு ஒவ்வொரு முறை வேண்டுதலில் போதும் அவனும் அவனது அருவாளும் என் நினைவில் வந்து போவதை நிறுத்த முயன்று கொண்டு இருக்கிறேன்.

ரிஷிவிதை :  

அங்கிருப்பவர்களுக்கு எத்தனை வருடங்கள் அவர் தவம் செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இதுநாள் வரை அவரின் சாபம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். சாந்தமாக யாரையும் தொந்தரவு செய்யாது இருந்தவரை மனைவியின் ஆசைக்கு, காட்டிற்குள் தண்டனை பெற்று வந்த ஓர் குடும்பம், அதனின் தலைவன், மாம்பழத்திற்கு குறி வைக்கப் போய் அது தவம் போலச் சொல்ல இயலாத முதல் சுதந்திர மனிதனின் கனவுகளைக் கலைத்தது. அவரின் கோபம் எய்தவனின் மீது திரும்பினாலும், அதற்குக் காரணமாக இருந்த ஆசை மீதே இருந்தது. அதைக் கைக்கொண்டுள்ள பெண் வடிவ ஒருத்தியின் மீது திரும்பியது. அக்கோபத்திலிருந்து தப்பிக்க அவர்கள் அக்காட்டினுள் ஓடிய ஓட்டத்தைக் கண்டு ரசித்தவர் எந்த சாபமும் கொடுக்கவில்லை. இனி யாரும் தன் சுதந்திரத்தைக் கெடுக்கக் கூடாது என அவ்வூரினுள் இருந்த முனியப்பனை ‘நான் கண்கள் திறக்கும் வரை காத்திரு’ என்று காவலுக்கு நிறுத்தி வைத்து கண்களை மூடிக்கொண்டார். ஓடியவர்கள் திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை. அவரும் கண் திறக்கவில்லை. முனியப்பன் அங்கு இன்னும் காவலுக்கு நின்று கொண்டிருக்கிறார்.

***

லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணிபுரிந்து வருகிறார். இதுவரை யாவரும் வெளியீடாக ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சிந்தாந்தம், கிளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கூத்தொன்று கூடிற்று நூலுக்கு சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மின்னஞ்சல்: latshmihar.malai@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here