Sunday, May 31, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்நீங்கள் யார்? (அம்பேத்கர் காட்டிய மானுடத்தின் விடுதலைப் பாதை)

நீங்கள் யார்? (அம்பேத்கர் காட்டிய மானுடத்தின் விடுதலைப் பாதை)

நிர்மல்

மானுட விடுதலை

‘மனிதன் எதிலிருந்து விடுபட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, வரலாறு பலவிதமான பதில்களைத் தந்துள்ளது. ‘‘மீண்டும் மீண்டும் பிறந்து, மீண்டும் மீண்டும் துன்பம் அனுபவித்து, மீண்டும் மீண்டும் இறந்து போகும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நிரந்தர அமைதியை அடைய வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, பிறப்பு & இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுதலை.

‘‘சாதி, இனம், பாலினம், மதம் உள்ளிட்ட பிறப்பியல் சார்ந்த அடையாளங்களின் பெயரில், மனிதனை மனிதனே தாழ்த்தும் சமூக அமைப்புகளிலிருந்து விடுபட்டு, மரியாதையுடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, சமூக அடக்குமுறையிலிருந்து விடுதலை. 

‘‘ஆசை, பற்று, கோபம், விரக்தி, சலிப்பு, வஞ்சனை, பயம் உள்ளிட்ட மனம் சார்ந்த தாக்கங்களிலிருந்து விடுபட்டு, உள்ளுணர்வின் சமநிலையை அடைய வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, உலகப் பற்றிலிருந்து விடுதலை.

‘‘கடன், வறுமை, உழைப்புச் சுரண்டல், வாழ்வாதார அச்சம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, பாதுகாப்பும் நியாயமான வளப் பகிர்வும் பெற்று வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, பொருளாதாரச் சுமையிலிருந்து விடுதலை.

மேலும், ‘‘சிந்தனை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில் பதிந்த அடிமைத்தன உணர்வுகளிலிருந்து மீண்டு, தன்னாட்சியுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். 

இவ்வாறு மானுட விடுதலையானது அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, பல வடிவங்களில் உள்ளதால், இதுபோன்ற விடுதலைகளைக் குறித்து, காலம் காலமாக மனித சமூகம் பல்வேறு வழிகளில் சிந்தித்துள்ளது. மேலும், தனது சிந்தனைகளை வெறும் கோஷங்களாக மட்டுமல்லாது, நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளாகவும் மானுட சமூகம் வடிவமைத்துப் பார்த்துள்ளது. 

எடுத்துக்காட்டாக, வர்க்கப் போராட்டத்தையும், பொருளாதார அமைப்பின் மாற்றத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கி, ‘‘பொருளாதார விடுதலையே அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படை’’ என்று வாதிட்டார் கார்ல் மார்க்ஸ். 

‘‘வெளிப்புற மாற்றங்களுக்கு முன்பாக, நம் அகத்தில் மாற்றம் தேவை. அறம் மற்றும் தர்மத்தின் அடிப்படையில் வாழ்வியலை மாற்றுவதன் மூலம் ‘சுயராஜ்யத்தை’ வென்றெடுக்கலாம்’’ என, நம் தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள் முன் வைத்த வாழ்வியல் முறையும் மானுட விடுதலைக்கானதே. 

அதேபோல், சாதி, இனம் அல்லது பிறப்பின் அடையாளத்தை வைத்து உருவாக்கப்படும் மேல் – கீழ் எனும் பாகுபாட்டை உடைத்து, மனித கண்ணியத்தையும் சம உரிமையையும் நிலைநிறுத்துவதற்காக, சமூக நீதி இயக்கங்கள் முன்னெடுக்கிற முயற்சிகளும் மானுட விடுதலைக்கானதே. 

மேற்கண்டவற்றிலிருந்து விலகி நின்று, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்றுரைத்து, வாக்குரிமை மற்றும் தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம், அரசியல் விடுதலையை உறுதி செய்தது ஜனநாயக அரசியலமைப்பு. 

இப்படியாக ‘மானுட விடுதலை’ என்ற இலக்கை நோக்கி, உலகில் பலவிதமான சிந்தனைகளும், அதை முன்னெடுக்கும் விதத்தில் பற்பல கட்டமைப்புகளும், முறைகளும் உருவாக்கப்பட்டு, இன்றைக்கும் அந்தப் பயணம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

நீ யார்?: 

 ‘‘சமூக மரியாதை, கல்வி, அதிகாரம், சொத்து, அரசியல் பங்கு உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கை முறையில், தங்களுக்கான உரிமைகளற்ற மனிதர்கள், மேல்சாதியினருக்குச் சேவை செய்து வாழ வேண்டியவர்களாகவே படைக்கப்பட்டவர்கள். அரசியல் அதிகாரம் அல்லது மத அதிகாரம் பெறும் வாய்ப்புகள் வழங்கப்படாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து, அடிமைகளாக சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்கு ‘சூத்திரர்கள்’ என, பெயர்.

 ‘சூத்திரர்கள்’ என அழைக்கப்பட்ட இம் மக்கள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெரிய எண்ணிக்கையில் இருந்தும், சமூக மரியாதை, கல்வி வாய்ப்பு, அரசியல் அதிகாரம், மதப் பெருமை உட்பட பல உரிமைகளில் இருந்து நீண்ட காலம் விலக்கப்பட்டிருந்தனர். 

இப்படியானவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தார்கள் அல்லது தள்ளப்பட்டார்கள்? 

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்காகவே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், சமூகம் கட்டமைத்து வைத்திருந்த ‘புறக்கணிப்பு’ என்ற கோட்டையை தனது அறிவாயுதத்தால் உடைத்து, அதன் உள்ளே சென்று, பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, தொடர் ஆய்வுகளைச் செய்து, அறிவார்ந்து உருவாக்கிய படைப்புதான் ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ & -ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தவர் ஆனார்கள்?’ என்கிற புத்தகம்.

 ‘‘The book is written for the ignorant and the uninformed Shudras, who do not know how they came to be what they are. The Shudra is punished just because he was a Shudra. This is a mystery which requires to be solved.’’ என்கின்றன அந்தப் புத்தகத்தின் ஞானமிகு வரிகள்.

அதாவது, தங்களை யாரென்று தெரியாத, அறியாமையில் உள்ள சூத்திரர்களுக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்பதை முதலில் தெளிவுப்படுத்துகிறார் அம்பேத்கர். 

‘ஒரு சூத்திரன், தான் சூத்திரனாகப் பிறந்ததாலேயே தண்டிக்கப்படுவது என்பது, கடவுள் உருவாக்கிய நியதி’ என்று, ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வந்ததை, தன் அறிவுப் புலமையால் உடைப்பதே இந்தப் படைப்பின் நோக்கம். அதனால்தான், நூலின் தொடக்கத்திலேயே, ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ- ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணமாக ஆனார்கள்?’ என்ற கேள்வியைத் தெளிவாக முன் வைத்து, இந்தியத் துணைக்கண்டத்தில் பின்பற்றப்பட்டு வந்த வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள் உள்ளிட்ட பல நூல்களையும் வாசித்து, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள கதைகள், பழக்க வழக்கங்கள், சமூக நடைமுறைகள், புராணக் குறிப்புகள் அனைத்தையும் ஆழமாக ஆய்வு செய்து, தன் அசாத்தியமான ஆராய்ச்சி உழைப்பின் விளைவாக இந்த நூலைப் படைத்துள்ளார்.

‘சூத்திரர்கள் யார்?’ என்ற கேள்விக்கு தனது நூலில் அம்பேத்கர் தந்துள்ள விளக்கம் வியக்க வைப்பதோடு, சிந்திக்கவும் தூண்டுகிறது.

‘‘முந்தைய கால இந்தியாவில், இந்தோ – ஆரிய சமுதாயத்தில், பிராமணர்கள் மற்றும் சத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வருணங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன. அப்போது சூத்திரர்கள் தனி வருணமாக இல்லை. அவர்கள் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், சத்திரிய மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு நீண்டு கொண்டே சென்றது. அந்த மோதல்களின் விளைவாக சத்திரிய இனத்தவரின் உட்பிரிவாக வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தினருக்கு, உபநயனம் செய்ய பிராமணர்கள் மறுத்தனர். உபநயனம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டதால், அந்த மக்கள் பொது சமூகத்தில் தங்களுக்கான மரியாதையை இழந்து, வைசியர்களுக்கும் கீழே தள்ளப்பட்டு நான்காவது வருணமாக, அதாவது ‘சூத்திரர்கள்’ என, மாற்றப்பட்டனர்’’ என, அந்தப் புத்தகத்தில் தக்க சான்றுகளோடு பகிரும் அம்பேத்கர், மேலும் ஒரு முக்கியமான வேறுபாட்டை உரிய ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார். 

முற்கால இந்தோ- ஆரிய சமுதாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ‘சூத்திரர்’ என்ற சொல்லின் பொருள், பிற்காலத்தில் அதாவது ஆரியர் – மற்றவர்களோடு கலந்த பின் உருவான இந்து சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்ட அதே சொல்லின் பொருளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சூத்திரர்’ என்ற சொல், ஒருவகை குறிப்பிட்ட மக்களைச் சுட்டிக்காட்டும் பெயராகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில், இந்து சமுதாயத்தில் அந்தச் சொல் பல்வேறு கீழ்த்தர சமூகக் குழுக்களை குறிக்கும் பொதுப் பெயராக மாற்றப்பட்டது. நாளடைவில், ‘கலாசார, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட பல இன மக்களும், பல இன குழுக்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ‘சூத்திரர்கள்’ என்ற பொது வட்டத்திற்குள் அடைக்கப்பட்டார்கள்.

அம்பேத்கரின் ஆய்வுப்படி, ‘‘பிற்காலத்தில் ‘சூத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்ட மக்கள், ஆரம்ப காலத்தில் ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்ட சூத்திரர்களுடன் தொடர்பில்லாதவர்கள். என்றாலும், கால மாற்றத்தில், பொருளாதாரப் பின்னடைவு, தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி அறிவின்மை, ஏழ்மை, வறுமை, அறியாமை ஆகியவற்றின் பிடியில் சிக்கி உழன்ற மக்களும், முற்கால சூத்திரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சமூக தாழ்வுக்கும் தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். ஆக, சரியான பிடியின்றி வாழ வழியற்றுத் தவித்த அப்பாவி மக்களை, ஆரம்ப கால சூத்திரர்களுடன் இணைத்து, சம்பந்தமில்லாத குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தது இந்த சமூக நடைமுறைதான்’’ என வருந்துகிறார்.

 மேலும், ‘சூத்திரர் என்பவர் யார்?’ என்கிற கேள்விக்கு, தனது ஆழமான ஆய்வின் மூலம் பதிலுரைக்கிறார் அம்பேத்கர். அதாவது, ‘‘ஜாதி அமைப்பு தெய்வீகமானது அல்ல. அது வரலாற்றில் உருவான அதிகாரப் போராட்டத்தின் விளைவு. அது ஒரு சமூகக் கட்டுமானம். அதற்கும் வேதத்தில் சொல்லப்படுவதற்கும் சம்பந்தமில்லை’’ என, வர்ண அமைப்புக்குப் பின் உள்ள வேதம் சார்ந்த, மதம் சார்ந்த அதிகாரத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கிறார். இதன் மூலமாக ‘‘வர்ண அமைப்பு என்பது மாற்ற முடியாதது அல்ல. மாற்றக் கூடியதே’’ என்பதை நமக்குப் புரிய வைக்கிறார்.

பொதுவாக இறைவன் படைத்ததை மாற்ற மனிதர்களுக்கு உரிமை கிடையாது என்கிற நம்பிக்கை மிக வலிமையானது. சாமியே அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதுக்கு பிறகு அதை என்ன செய்ய என நிலைமையை ஏற்றுக் கொண்டு காலாங்காலமாக வாழப் பழகியவர்களுக்கு அம்பேத்கரின் இந்த அறிவுச் செயல் எவ்வளவு பெரிய திறப்பு. 

மானுட விடுதலையின் முதல் படியாக இருப்பது ‘நாம் யார்?’ என்பதை அறிதல். அதற்கு, நம் வரலாற்றை அறிதல் வேண்டும். நம் மீது முத்திரை குத்தி, ஒட்டப்பட்டுள்ள பெயர்களின் பின்னால் உள்ள உண்மையைத் தேட வேண்டும். இதுதான் அடிப்படை. அம்பேத்கரின் இந்த நூல் அதற்கான அழைப்பாக உள்ளது. 

 ‘‘Intellectual liberation begins with one simple question: Know who you are” என்ற கேள்வியைத் தனது நூல் மூலமாகத் தொடுக்கிறார் அம்பேத்கர்.

‘‘அரசியல் சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம் வருவதற்கு முன், மனித மனம் முதலில் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும்’’ எனக் கூறும் அம்பேத்கர், ‘‘மனிதர்கள் இடையிலான சமத்துவமின்மை இயற்கையானது அல்லது தெய்வீகமாக நிர்ணயிக்கப்பட்டது என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை, எந்தச் சமூக சீர்திருத்தமும் இங்கே நிலைத்து நிற்காது’’ என்கிறார். அதனால்தான், மனிர்களின் உள்ளத்தில் புதைந்து கிடக்கிற அடிமைத்தனத்தை உடைத்து, அவர்களிடையே விமர்சன சிந்தனையை உருவாக்குவதற்காக திட்டமிட்ட முறையில் செயல்பட்டார். இந்த அறிவுச் சுதந்திரப் போராட்டத்தை அவரது பணிகளின் பல தளங்களில் காணலாம்.

மானுட விடுதலைக்காக புத்தகங்கள் எழுதுவதோடு மட்டும் நிற்கவில்லை. அறிவியல் சிந்தனை பரவுவதற்கான மேடைகளையும் உருவாக்கினார் அம்பேத்கர். ‘Mooknayak’, ‘Bahishkrit Bharat’, ‘Janata’ ஆகிய இதழ்களைத் தொடங்கி சமூக பிரச்னைகள், அரசியல் சிந்தனைகள், அரசியலமைப்பு கருத்துகள் உள்ளிட்ட பலதரப்பு விஷயங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றார்.

 இப்படி நான் யார் என்கிற அறிவும் தனிநபர் விழிப்புணர்வு மட்டும் ஒடுக்குமுறைகளை உடைக்கப் போதுமானதல்ல. ஒருவர் மனதளவில் அநீதியை உணரத் தொடங்கினாலும், சமூகத்தில் நீண்ட காலமாகப் பதிந்துள்ள பழக்கங்களும் மரபுகளும் அந்த ஒடுக்குமுறையை தொடர்ந்து உயிர்ப்புடன்தான் வைத்திருக்கும். அதனால்தான் சாதி அமைப்பு, இனவெறி, பாலின அடுக்குமுறை, மாற்றுத் திறனாளிகளின் மீதான அவமதிப்பு மற்றும் பல்வேறு சமூகப் புறக்கணிப்புகள் என்பது, நமது அன்றாட சமூக செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து மறுபடியும் உருவாக்கப்படுகின்றன. அப்படியென்றால் மானுட விடுதலையின் இரண்டாம் படி “சமூக விடுதலை”.

சமூக விடுதலை: 

1935ஆம் ஆண்டு லாகூரில் நடைபெறவிருந்த ‘ஜாத்பட் தோடக் மண்டல்’ என்ற உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாக வாசிக்கப்படுவதற்காக ‘சாதி ஒழிப்பு’ (Annihilation of Caste) என்ற உரை நடைக் கோர்ப்பு டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அந்தக் கோர்ப்பில், அம்பேத்கர் குறிப்பிட்டிருந்த சில கருத்துகள், மாநாட்டில் பங்கேற்க இருந்த சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அந்தக் ‘கோர்ப்பு உரை’ புத்தகமாக வெளியிடப்பட்டு, அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

சாதி அமைப்பை அடிப்படையாக விமர்சித்தும், அதை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவாக வலியுறுத்தி விளக்கும் இந்த நூல், இன்று வரை பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. ‘சாதி ஒழிப்பு என்றால் என்ன, அதன் மூலம் உருவாக வேண்டிய சமூகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், மனிதர்களின் பொது நலனுக்காக சாதி ஒழிப்பு ஏன் அவசியப்படுகிறது?’ என, பல கேள்விகளை அம்பேத்கர் இந்த நூலில், அடிப்படையிலிருந்து விளக்குகிறார். 

மேலும், அந்த நூலில், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைக்காமல், மிகவும் வலுவான தர்க்கங்களுடன் தனது கருத்துகளை முன்வைக்கும் அம்பேத்கர், தனது வாதத்தை ‘‘சமூகம் என்றால் என்ன?’’ என்கிற, மிக அடிப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குகிறார்.

ஒரு சமூகம் என்பது வெறும் மக்கள் கூட்டம் அல்ல. மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வாழும்போது தான் அது உண்மையான சமூகமாகிறது. பரஸ்பர தொடர்பு, அனுபவப் பரிமாற்றம், ஒன்றிணைந்த வாழ்க்கை.- இவையே சமூகத்தின் அடிப்படை. இந்தக் கருத்தை விளக்குவதற்காக அம்பேத்கர் ஓர் அறிவியல் உவமையைப் பயன்படுத்துகிறார். அந்த உவமைக்காக அவர் பயன்படுத்தும் சொல் ‘Social Endosmosis’.

‘Endosmosis’ என்பது உயிரியல் அறிவியலில் பயன்படும் ஒரு கலைச்சொல். உயிரணுக்களின் ஊடுருவும் படலம் வழியாக வெளிப்புற சூழலிலிருந்து திரவம் அல்லது துகள்கள் உள்ளே செல்லும் செயல்முறையை ‘Endosmosis’ என்று அழைக்கிறார்கள். இந்தப் பரிமாற்றமே உயிரணு உயிருடன் இருக்க உதவுகிறது. வெளிப்புறத்துடனான இந்தப் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டால், அந்த உயிரணு செயலிழந்து விடும். இந்த அறிவியல் கருத்தை அம்பேத்கர் சமூகத்திற்கு உவமையாகப் பயன்படுத்துகிறார். 

ஒரு சமூகமும் இதேபோல் மனிதர்கள் இடையே நடைபெறும் அனுபவ பரிமாற்றத்தின் மூலம் தான் உயிருடன் இருக்க முடியும். மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும்போது சிந்தனைகள், பழக்கங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்படும். இந்த இயல்பான பரிமாற்றமே சமூகத்தை வளர்ச்சியடையச் செய்கிறது. இதுவே அவர் கூறும் ‘Social Endosmosis’. ஆனால் ‘‘இந்திய சமூகத்தில் உள்ள சாதி அமைப்பு இந்த இயல்பான ‘Social Endosmosis’ பரிமாற்றத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது’’ என்று அம்பேத்கர் கூறுகிறார். 

சாதியே ஒவ்வொரு மனிதக் குழுவையும் தனித்தனிப் பிரிவுகளாக மாற்றுகிறது. திருமணம், உணவு, உறவு, கல்வி, தொழில் போன்ற அனைத்திலும் தடைகளை உருவாக்குகிறது. இதனால், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும், அனுபவங்களைப் பகிரவும் முடியாத நிலை உருவாகிறது. அதனால் தான் ‘‘இந்து சமூகம் என்று ஒன்று இல்லவே இல்லை; பல சாதிகளின் தொகுப்பே இந்து சமூகமாக உள்ளது’’ என, அம்பேத்கர் ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும், தன்னை மற்ற சாதிகளிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டே வாழ்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ‘நாம் அனைவரும் ஒரே மதத்தின் உறுப்பினர்கள்’ என்ற உணர்வு உருவாகவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொருவரிடமும் ‘நாம் இந்தச் சாதியினர்’ என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. இதன் விளைவாக அவர்களுக்குள் இருக்க வேண்டிய பொதுநல உணர்வு சிதைந்துவிடுகிறது. இப்படி சாதி அடிப்படையிலான சிந்தனை கொண்ட மனிதர்களிடமிருந்து சமூக ஒற்றுமை உருவாக முடியாது. இவர்களிடையே மனிதர்களுக்கான இயற்கையான திறன்களும் விருப்பங்களும் சமூக விதிகள் என்ற பெயரில் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

சாதிய கட்டமைப்பில் வாழ்வதாலேயே, ஒருவர் தனது வாழ்க்கையின் நோக்கத்தையும் செயல்களையும் சுதந்திரமாக தீர்மானிக்க முடியாத நிலை உருவாகிறது. அம்பேத்கரின் பார்வையில் இது ஒரு சமூக அடிமைத்தனமாகும். எனவேதான், ‘‘சமூக அமைப்பை மாற்றாமல் அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை’’ என்கிறார். 

‘‘அரசியல் அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அவை சமூக அமைப்பின் மீது தான் நிலைநிற்கின்றன. சமூகத்தில் சமத்துவம் இல்லாத நிலையில் அரசியல் ஜனநாயகம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை வழங்க முடியாது. பலர் நினைப்பது போல, முதலில் அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, பின்னர் சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றி பேசுவது சரியான வழி அல்ல. அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் அவசியம்’’ என, மானுட விடுதலைக்கான இரண்டாம் படியை நமக்கு விளக்குகிறார் அம்பேத்கர்.

ஒரு சமூகம் விடுதலை பெற, தனிநபர் விழிப்புணர்வு மட்டும் போதாது. சமூக சீர்திருத்தமும் மட்டும் போதாது. அந்த சமூகத்து மனிதர்கள் தங்களது வாழ்க்கையை பாதிக்கும் அரசியல் சார்ந்த முடிவுகளில் பங்கேற்கக்கூடிய அமைப்புகளும் அவர்களுக்குத் தேவை. ஜனநாயகம் சார்ந்த அமைப்புகள், அரசியலமைப்பு சட்டங்கள், ஆட்சி அதிகாரங்களில் பங்கு உள்ளிட்டவையே அதற்கான கருவிகள். 

‘‘அரசியல் அதிகாரம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தங்களை மேம்படுத்தவும் முடியாது. சமூக ஒடுக்குமுறையை வெறும் நெறிமுறை பேச்சுகளால் மட்டும் உடைக்க முடியாது. அதற்கு அரசியல் அதிகாரமும், சட்ட அமைப்பும் தேவை’’ என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் அம்பேத்கர். அதனால்தான் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அரசியல் விடுதலை

1947ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது, அதில் ‘அடிப்படை உரிமைகள்’ குறித்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவிற்கு அம்பேத்கர் ‘States and Minorities’ என்ற ஆவணத்தை சமர்ப்பித்தார். இந்த ‘அடிப்படை உரிமைகள்’ என்ற கருத்துருவாக்கம் முதலில் திட்டமிடப்பட்டபோது, அது தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான பாதுகாப்புகளை விளக்கும் ஓர் அறிக்கையாக மட்டுமே முதலில் இருந்தது. ஆனால், அம்பேத்கர் அதைக் கடந்துச் சென்றார். அவர் சமர்ப்பித்த ஆவணம் ஒரு சிறிய அரசியலமைப்பு வரைவு போல அமைந்திருந்தது.

அந்த ஆவணத்தில் அவர் ஒவ்வோர் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான சிறப்பு பாதுகாப்புகள் போன்றவற்றை விரிவாக முன்வைத்தார். இதை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் ஒரு முன்னுரையும் (Preamble) வரைந்து வைத்தார். அதில் ‘‘இந்தியா ஓர் ஒன்றிய நாடாக அமைந்து, இங்கே வாழ்கிற அனைத்து குடிமக்களுக்குமான வாழ்க்கையானது சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை, மதச்சார்பின்மை, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

‘அரசியல் உரிமைகள் மட்டும் போதாது; அவற்றைப் பாதுகாக்கும் அமைப்புகளும் தேவை’ என்பதே அம்பேத்கர் இந்த ஆவணத்தில் மிக முக்கியமாக வலியுறுத்திய விஷயம். அதனால்தான் நீதித்துறைக்கான பாதுகாப்பு, அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகள், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் போன்றவற்றையும் அவர் முன்மொழிந்தார்.

இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்த கருத்துகளில் பலவும், இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றன. அடிப்படை உரிமைகள், சட்டத்தின் முன் சமத்துவம், மதசார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்கள் அனைத்தும் அம்பேத்கரின் சிந்தனைச் செயல்பாடுகளுக்கு நெருக்கமானவை. அவை இந்திய அரசியலமைப்பு வாயிலாக அதிகாரம் மிக்க அடிப்படை சட்டங்களாக உருவாகவும் அவர் துணை நின்றார். 

அம்பேத்கரின் அரசியல் பணி, இந்திய அரசியலமைப்பை எழுதுவதில் மட்டும் முடிவடையவில்லை. அவர், தான் முன்னெடுத்த பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை உருவாக்க முயன்றார். ‘Independent Labour Party’ மற்றும் ‘Scheduled Castes Federation’ போன்ற அரசியல் அமைப்புகளை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகங்களின் அரசியல் குரலை வலுப்படுத்தினார். தேர்தல் அரசியலில் பங்கேற்று, சட்டமன்றங்களில் அவர்களின் பிரச்னைகளை முன்வைத்தார். ‘பூனா ஒப்பந்தம்’ உட்பட பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அம்பேத்கர் மேற்கொண்ட இவ்வித எல்லா முயற்சிகளின் நோக்கமும் ஒன்றுதான். அது – பழைய சமூக ஒழுங்கை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி, அதை சட்ட ரீதியாக மாற்றுவது.  இந்தியாவின் பழைய சமூக அமைப்பு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு, அந்த பழைய அமைப்பை மறுபரிசீலனை செய்து, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். எந்தக் குடிமகனும் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட முடியாது’ என்று அறிவித்தது. அவர் பழைய இந்தியாவை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றி, புதிய இந்தியாவிற்கான அடித்தளத்தைக் கட்டமைத்தார். 

என்றாலும், மானுட விடுதலைக்கான தனது பயணத்தில், இதை, இறுதி நிலையாக அவர் பார்க்கவில்லை. அதனால்தான், ‘அரசியல் ஜனநாயகம் மட்டும் விடுதலைக்குப் போதாது’ என்று அவர் எச்சரித்தார். ‘சமூகத்தில் வறுமை, பொருளாதார அநீதி, வேலை வாய்ப்பு சமமின்மை ஆகியவை தொடர்ந்தால் அரசியல் சுதந்திரம் முழுமையடையாது’ என்பதை உணர்ந்தே, ‘அரசியல் ஜனநாயகத்துடன் சேர்ந்து பொருளாதார ஜனநாயகமும் அவசியம்’ என்றார் அம்பேத்கர்.

பொருளாதர விடுதலை:

அம்பேத்கரின் எழுத்துக்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது, ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்று, அவரால் எழுதப்பட்ட புத்தகம், அவரைப் பற்றிய வழக்கமான புரிதல்களிலிருந்து விடுவித்து, முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தூண்டியது.

அதுவரையில், ‘சமூக சீர்திருத்தவாதி’ அல்லது ‘அரசியல் சிந்தனையாளர்’ என்ற கோணத்திற்குள் நான் புரிந்து வைத்திருந்த அம்பேத்கர், ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற நூல் வாயிலாக, ‘நான் வேறானவன், மனித விடுதலைக்கு வேரானவன்’ என, ஒரு பொருளாதார அறிஞராக மிளிர்கிறார். பொருளாதாரக் கோட்பாடுகள், புள்ளிவிவரங்கள், நாணயக் கொள்கைகள் உட்பட பல்வேறு சிக்கலான கருத்துக்களால் நிரம்பியுள்ள இந்தப் புத்தகம், சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்டதல்ல.

பொருளாதார முனைவர் பட்டம் பெற, ஓர் ஆய்வு கட்டுரையாகத்தான் அம்பேத்கர் இந்த நூலை எழுதி உள்ளார். எனவே, இந்த நூலில் உள்ள பல பொருளாதார விளக்கங்கள் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை. அப்படிப் புரியவேண்டுமானால், பின்னாளில் அந்த நூலைப் பற்றி எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆராய்ச்சிகளையும் படிக்க வேண்டும். அந்தப் புரிதலின் மூலம் அம்பேத்கர் முன்வைத்த பொருளாதாரக் கோட்பாட்டை அறிய முடிகிறது.

‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற ஆய்வுக் கட்டுரை நூல் வாயிலாக, அம்பேத்கர் இந்திய நாணய அமைப்பின் வரலாற்றை மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, ‘இந்தியத் துணைக்கண்டத்தில் பணம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது?’ என்பதைக்கூட, பல்வேறு கால கட்டங்களாகப் பிரித்து ஆராய்கிறார். முகலாயர்களுக்கு முந்தை காலம், முகலாய ஆட்சி, அதன் பின்னர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி ஆகிய காலங்களில் இந்திய நாணய அமைப்பு எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் விளக்குகிறார். ரூபாயின் மதிப்பு எவ்வாறு மாற்றமடைந்தது, அந்த மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தன என்பதையும் தெளிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

அந்த ஆய்வுப் புத்தகத்தில் அம்பேத்கரின் முக்கியமான விமர்சனங்களில் ஒன்று ‘Gold Exchange Standard’ எனப்படும் நாணய முறையைப் பற்றியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இந்த முறை, ரூபாயின் மதிப்பை நேரடியாக தங்கத்துடன் இணைக்காமல், வெளிநாட்டு நாணயங்களின் மூலம் தங்கத்துடன் இணைக்கும் முறையாக இருந்தது. அம்பேத்கரின் பார்வையில் இந்த முறை பெரும்பாலும் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்குப் பயனளித்தது. ஆனால், இந்தியாவில் வாழும் பெரும்பாலான பொதுமக்களுக்கு இது பெரிதாக உதவவில்லை.

அம்பேத்கரின் கருத்துப்படி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் மிக முக்கியமானது விலை நிலைத்தன்மை. பணத்தின் மதிப்பு நிலைத்திருக்காமல் பொருட்களின் விலை அதிகமாக ஏறி இறங்கினால், அதன் தாக்கத்தை முதலில் அனுபவிப்பவர்கள் ஏழைகள்தான். ஆகவே, நாணயக் கொள்கையின் முக்கிய நோக்கம் வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தைப் பாதுகாப்பது அல்ல; பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் பணத்தின் வாங்கும் திறனை நிலைப்படுத்துவதாக அது இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை நாணய அமைப்பை மட்டும் பற்றியதல்ல. அவர் அரசின் நிதி நிர்வாகம் பற்றியும் ஆழமாகச் சிந்தித்துள்ளார். ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மாகாணத்திற்கும் தங்களுடைய நிதி நிர்வாகத்தில் ஓரளவு சுயாட்சி இருக்க வேண்டும்’ என்று அவர் வாதிடுகிறார். 

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகக் கண்ட அம்பேத்கர், ‘இந்திய விவசாயத்தில் காணப்படும் சிறிய மற்றும் சிதறிய நிலப்பகுதிகள் நாட்டின் உற்பத்தித் திறனை குறைக்கின்றன’ என்று சுட்டிக்காட்டினார். இதற்குத் தீர்வாக நிலங்களை ஒருங்கிணைப்பதும், கூட்டுறவு விவசாய முறையையும் அவர் முன்வைத்தார். அவரது பார்வையில் ‘‘சமூகத்தில் நிலச் சுவான்தாரர்கள் இருக்கக்கூடாது, குத்தகை விவசாயி இருக்கக்கூடாது, நிலமற்ற தொழிலாளி இருக்கக்கூடாது. நிலம் சமூக அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டு, கிராம மக்கள் கூட்டாகச் சாகுபடி செய்யும் அமைப்பு உருவாக வேண்டும்’’ என்று அவர் விரும்பினார்.

இதனுடன் சேர்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொழில் மயமாக்கல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழிற்சாலைகள் வளர்ந்தால் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்வாதாரம் அமையாமல் தொழிற்சாலைகள் மூலமும் வேலை வாய்ப்பை பெற முடியும் எனக் கருதிய அம்பேத்கர், கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தை விமர்சிக்கிறார். அதேவேளையில், முழுமையான கம்யூனிச முறையையும் அவர் ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, முக்கியமான தொழில்களை அரசு உருவாக்கி அரசே அதை நடத்த வேண்டும். இதன் மூலமாக ஜனநாயக அரசின் சார்பில் சமூகநீதி பொருளாதாரம் (Democratic State Socialism) என்ற பாதை உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் சிந்தித்தார்.

அம்பேத்கரின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பெண்களின் பொருளாதார பங்கு மிகவும் முக்கியமானவை. தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையும், வேலைநிறுத்த உரிமையும் அவர்களுடைய கண்ணியமான வாழ்வுக்கு அவசியம் என்று அவர் கருதினார். அதேபோல் பெண்களின் பொருளாதார நிலை உயராமல் ஒரு சமூகமும் முழுமையாக வளர முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொருளாதார சிந்தனைகளின் அடிப்படையில் அம்பேத்கர் ஒரு முக்கியமான உண்மையை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, சாதி அமைப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டும் அல்ல; அது ஒரு பொருளாதாரத் தடை. சாதி என்பது வேலைகளைப் பிரிப்பதல்ல; அது மனிதர்களைப் பிரிக்கிறது. சாதி அமைப்பு பல சமூகக் குழுக்களை பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க முடியாதபடி கட்டுப்படுத்துகிறது, பொருளாதார ஏற்றத்தை அனைத்து வகையிலும் தடுக்கிறது’’ என்பதைத் தீர்க்கமாகச் சொன்னவர் அம்பேத்கர்.

மொத்தத்தில் பார்க்கும்போது, அம்பேத்கரின் பொருளாதார சிந்தனையானது, சாதி என்ற வட்டத்திற்குள் எதையும் அடக்காமல், சமத்துவமும் நடுநிலையும் கொண்ட புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பாக, முயற்சியாகத் தெரிகிறது. அவரது பொருளாதாரக் கண்ணோட்டம் முழுமையான முதலாளித்துவத்திற்கும் முழுமையான கம்யூனிசத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையைத் தேடுகிறது. அதனால்தான், அரசின் பொறுப்பு, சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு பாதையை அவர் முன்வைத்தார்.

‘‘வளர்ச்சி என்பது சிலருக்கான செழிப்பல்ல; சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்களும் அதில் பங்கேற்கும் போதுதான் அது உண்மையான வளர்ச்சியாகும்’’ என்று அவர் நம்பினார்.

அம்பேத்கரின் இந்த பொருளாதார ஆய்வு வெறும் கல்வியியல் ஆய்வாக மட்டுமே இருந்ததில்லை. இந்திய நாணய அமைப்பை பற்றிய அவரது ஆய்வுகள், பின்னர் நடைபெற்ற விவாதங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. பல ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, இந்தியாவின் மத்திய வங்கியான ‘Reserve Bank of India’ உருவாக்கப்படுவதற்கான ஆணி வேராகவும் அமைந்தது அம்பேத்கரின் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற நூல்தான்.

என்றாலும், ‘‘பொருளாதார மாற்றம் மட்டும் மனிதனை முழுமையாக விடுதலை செய்யாது. அப்படியான மாற்றம் சமூக அநீதி என்ற சட்டத்தால் மனித விடுதலைக்கு சவாலாக மாறலாம். மேலும், பொருளாதார வறுமைக் கொள்கைகளால் அந்த விடுதலையின் அளவு குறைக்கப்படலாம். எனவே, மனித மனதில் பதிந்திருக்கும் தாழ்வு உணர்வுகள், புனிதமாக்கப்பட்டு நம்பவைக்கப்பட்ட அநீதிகள், மதத்தின் பெயரில் நிலைத்திருக்கும் அடக்கு முறைகள் ஆகியவை தொடர்ந்தால், மனித விடுதலை ஒருபோதும் முழுமையடையாது’’ என வலியுறுத்தும் அம்பேத்கர், உண்மையான மானுட விடுதலைக்காக மேலும் மிக தனித்து வழி ஒன்றையும் காட்டுகிறார். அது “ இறை நெறி”.

இறை நெறி: 

“மனித சமூகம் காலம் காலமாகத் தன் இறை நம்பிக்கைகளை எந்த அளவுக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ, அதற்கு நிகராக மீண்டும் மீண்டும் அவற்றைப் பரிசீலிக்கவும் செய்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, உலக அரசியல் மாற்றங்கள், சமூகப் போராட்டங்கள், நீதி மற்றும் சமத்துவம் குறித்து எழும் கேள்விகள் ஆகியவை, மதம் என்ற அமைப்பை விமர்சனப் பார்வையில் அணுக, மனிதனைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

இப்படியான விமர்சனங்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; அவை பெரும்பாலும் நசுக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. ‘இது ஒன்றும் புதிதல்ல’ என்று, பழமையோடு கலந்து அதன் வீரியம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. இருப்பினும், புதிய அறிவு மற்றும் சமூக அனுபவங்களைக் கொண்டு, மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளை இன்றளவும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் இப்படியான பல முயற்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் அவை சமய அமைப்புக்குள்ளிருந்தே எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தங்கள் வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்தவர்களாலேயே இத்தகைய சீர்திருத்தக் குரல்கள் ஒலித்துள்ளன. ஐயா வைகுண்டர், வள்ளலார், சுவாமி விவேகானந்தர் உட்பட பல ஆன்மிகச் சான்றோர் பெருமக்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாவர்.

ஓர் எழுத்தாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் நம்மால் அறியப்பட்ட அம்பேத்கர் ‘புத்தரும் அவரது தம்மமும்’ (The Buddha and His Dhamma) என்ற நூலையும் எழுதி உள்ளார். அந்நூலை வாசித்து பார்க்கும் பொழுது, நவீன இந்தியாவிற்கான அரசியலமைப்பைத் தந்த அண்ணல் அம்பேத்கர் ஆன்மிக அண்ணலாக உருமாறி நமக்கு காட்சித்தருகிறார். கிட்டத்தட்ட பழைய முறைகளை ஒழித்து, புதிய வழிமுறையைத் தரும் இறை தூதராக நமக்கு முதலில் தெரிகிறார்.

‘புத்த தம்மம்’ நூலில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் அவர் கூறவில்லை. புத்த சமயத்தைப் பற்றி மட்டும் விளக்கவும் இல்லை. மாறாக, புத்தரின் ஞானத்தை தனது வாசிப்பின் மூலம் மிகத் துல்லியமாக இன்றைய காலத்திற்கு துலக்கிக் காட்டுகிறார். அந்நூலைத் தொடர்ந்து வாசிக்கும்போது, அவர் செய்ய முயற்சிப்பது சமய மறுவாசிப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான ஆழமான ஒன்று என்பது நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது. மேலும், தன்னை இறை தூதராகவோ, சீடராகவோ யாரும் புரிந்துகொள்ளக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். 

தவிர, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, புத்தரை ஒரு பாரம்பரிய சமய குருவாக நாம் பார்க்காமல், அவருக்குள் இருந்த மானுட விடுதலை மீதான வேட்கையை நமக்குள் கடத்துகிறார் அம்பேத்கர். அதாவது, புத்த சமயத்தின் வரலாறு மற்றும் இறையியலுக்குள், மனித விடுதலைக்கான வழிமுறைகள் எவ்வளவு அடைக்கப்பட்டுள்ளன என்பதை, தன் எழுத்துகள் மூலம் ஒளி பாய்ச்சி நமக்குள் கடத்தும் புரட்சிக ஆன்மிக சிந்தனையாளராக பரிணமிக்கிறார் அம்பேத்கர்.

இந்தப் புத்தகத்தில், ‘மதம்’ என்ற தர்மத்தை, புதிய கோணத்தில் ஆராய்ந்துள்ள அம்பேத்கர், தனது பார்வையில் ‘‘மதம் என்பது மறுமை உலகைப் பற்றிய நம்பிக்கைகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்ற மனிதர்களுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும், சமூகத்தில் நீதி எப்படி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு வாழ்வியல் நெறி’’ என்று உரைக்கிறார்.

விதி, ஆன்மா, பிறப்பு போன்ற மாயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட மதமாக புத்தம் விளங்கவில்லை. அது, மனித அனுபவத்தையும் நெறியையும் மையமாகக் கொண்ட ஒரு வாழ்வியல் சிந்தனை முறையாக உள்ளது. அதனால் தான் அம்பேத்கர் புத்தரின் போதனைகளை மீண்டும் மீண்டும் வாசித்து, அவற்றில் மனித விடுதலைக்கான ஒரு நெறி வகுக்கப்பட்டுள்ளதை நமக்குக் காட்டுகிறார். குறிப்பாக கர்மா, அஹிம்சா, மற்றும் சமயத்தின் சமூகப் பங்கு போன்ற கருத்துகளை அவர் புதிய பார்வையில் விளக்குகிறார்.

புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள், அவருடைய போதனைகள், சங்கத்தின் உருவாக்கம், தம்மத்தின் அடிப்படை நோக்கங்கள் போன்ற பல கருத்துகளை ‘The Buddha and his Dhamma’ நூல் மூலமாக அம்பேத்கர் விளக்கிச் சொல்கிறார். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விவாதங்களில் சில இடங்களில் அவர் பாரம்பரிய விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்; சில இடங்களில் அவற்றை விமர்சனமாக மறுபரிசீலனை செய்கிறார். அவற்றுள் குறிப்பாக ‘கர்மா’ பற்றிய அம்பேத்கரின் பார்வை மிகவும் வித்தியாசமானதாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.

‘‘மனிதன் ஏழையாகப் பிறப்பதும், தாழ்ந்த நிலையில் வாழ்வதும், உடல் குறைபாடுகளுடன் பிறப்பதும் கடந்த பிறவிகளின் பாவத்தின் விளைவு என்ற கருத்து, சமூக அநீதியை நியாயப்படுத்தும் ஒரு தத்துவமாக மாறிவிட்டது’’ என அவர் வாதிடுகிறார். 

‘‘கர்மா என்பது, விதி அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை அல்ல; மனித செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையிலான ஒழுங்கான தொடர்புதான் கர்மா. இதனால்தான் மனிதன் தன் வாழ்க்கையை மாற்றும் பொறுப்பை மட்டுமல்லாது அதற்கான வாய்ப்பைப் பெற்றவனாகவும் மாறுகிறான்’’ என்கிறார் புத்தர்.

அதேபோல் ‘எதையும் கொல்லக்கூடாது’ என்கிற அஹிம்சா நெறியை, ‘அனைவரையும் அன்புடன் பாருங்கள்; அப்போது கொல்ல வேண்டும் என்ற விருப்பமே உங்களுக்குள் எழாது’ என்கிறார் புத்தர். இதை ‘புத்தரின் தம்மம்’ வழியாக, ஓர் அற நெறியாக நமக்கு விளக்குகிறார் அம்பேத்கர்.

‘புத்தரின் தம்மம்’ மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு நெறியாக அம்பேத்கரால் விளக்கப்படுகிறது. சாதி, பிறப்பு, விதி போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து, மனிதன் தனது கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உணர உதவும் ஒரு நெறியாக அது அமைந்துள்ளது.

இதனால் அம்பேத்கரின் பார்வையில் ஆன்மிக விடுதலை என்பது உலகை விட்டு துறவு செய்வது அல்ல. மாறாக, பயம், விதி, மூடநம்பிக்கை, தாழ்வு உணர்வு ஆகியவற்றிலிருந்து மனிதனை விடுவித்து, ஒவ்வொரு மனிதருக்கும், தன்னுடைய வாழ்க்கையை சிந்தனையுடனும் பொறுப்புடனும் அமைத்துக்கொள்ளும் திறனை வழங்குகிறது. அதனால்தான் அம்பேத்கரின் சிந்தனையில் ‘புத்தரின் தம்மம்’ ஒரு சமய போதனை மட்டும் அல்ல; அது மனித கண்ணியம், சமத்துவம், கருணை, சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு விடுதலை நெறி ஆகிறது.

அம்பேத்கரின் மானுட விடுதலைக்கான சிந்தனை என்பது நூல்களில் மட்டும் எழுதப்பட்ட கோட்பாடு அல்ல. அது, அவருடைய வாழ்நாளில் அனுபவித்த ஒடுக்கு முறைகள் என்ற நெருப்பில் உழன்ற வலிகளால் வடிவமைக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதனால் தான் அவரது சிந்தனை பல சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களையும் தாண்டி நிற்கிறது.

அவர் ஒரு சமூகத்தின் வலியை, உலக மக்கள் அனைவரது கண்ணியத்திற்கும் பொதுவான மொழியாக மாற்றியவர். எனவேதான், தலித் சமூகத்துக்கோ, இந்தியாவுக்கோ மட்டும் சொந்தமானவர் என்பதோடு இல்லாமல், ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சொந்தமானவர் ஆகிறார்.

உலக வரலாற்றில் பல சிந்தனையாளர்கள் மனித விடுதலைக்காகப் போராடியுள்ளனர். சிலர் பொருளாதார சமத்துவத்துக்காக, சிலர் அரசியல் சுதந்திரத்துக்காக, சிலர் மத சீர்திருத்தத்திற்காக அல்லது சமூக சமத்துவத்திற்காகப் போராடி உள்ளனர். 

ஆனால், அனைத்து மனித சமுதாயமும் முழுமையாக விடுதலையாக வேண்டுமெனில், ஒரு துறையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் போதாது. மனித விடுதலை என்பது ஒரே ஒரு கதவு திறப்பால் நிகழ்வதல்ல. மனித மனம், சமூக அமைப்பு, பொருளாதார நிலை, அரசியல் அதிகாரம், சட்ட பாதுகாப்பு, நெறி மற்றும் மத அடித்தளம் என,- இவை அனைத்திலும் மாற்றம் ஏற்படும் போதுதான் ஒரு சமூகம் உண்மையான சுதந்திரத்தை அடைகிறது.

எனவே, ஒரு சமூகம் தனக்கான ஒடுக்கு முறையிலிருந்து மரியாதைமிக்க வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும் எனில், அதற்கான மாற்றம் பல தளங்களில் நிகழ வேண்டும். அறிவு, சமூக உறவுகள், பொருளாதார அமைப்பு, அரசியல் நிறுவனங்கள், மற்றும் நெறி மதிப்புகள் ஆகிய அனைத்திலும் மாற்றம் அவசியம். எனவே, விடுதலைக்கான சூத்திரம் என்பது, விடுதலை = அறிவு + மரியாதை + பொருளாதார பாதுகாப்பு + அரசியல் அதிகாரம் + அறநெறி இறை உணர்வு என்பதாக இருக்க வேண்டும்.

மற்றொரு விதமாகச் சொன்னால், மக்கள் சுதந்திரமாக சிந்திக்கும் இடம், மரியாதையுடன் வாழும் இடம், அவமதிப்பின்றி உழைக்கும் இடம், அதிகாரத்தில் பங்கேற்கும் உரிமை கொண்ட இடம், மற்றவர்களை சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளும் இடமே, ஓர் உண்மையான விடுதலைச் சமூகம் வாழும் இடமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, மானுட விடுதலைக்கான உண்மையான முன்னெடுப்புகளைச் செய்துள்ளார் அம்பேத்கர்.

இந்தப் பார்வையில் பார்க்கும்போது அம்பேத்கரின் வாழ்க்கை மிகவும் வியப்பூட்டும் ஒன்றாகத் தோன்றுகிறது. அறிவு மற்றும் கல்வி வழியாக மன விடுதலையை உருவாக்கிய அம்பேத்கர், சமூக அவமதிப்புக்கு எதிராக போராடினார். பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் பிரச்னைகளை ஆராய்ந்தார். ஜனநாயக அரசியல் அமைப்புகளையும், அதற்கு வேண்டிய சட்டங்களையும் வடிவமைத்தார். இறுதியில் புத்த மத நெறிகளை முன்வைத்து ஆன்மிக மாற்றத்திற்கான வழியையும் காட்டினார்.

ஒற்றை மனிதன், இவ்வளவு தளங்களில் ஒரே நேரத்தில் செயல்படுவது வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்று. மனித சமூக விடுதலைக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் தனக்கான வாழ்க்கையில் சிந்தித்து, வடிவமைத்து, செயல்படுத்த முயன்ற ஓர் அற்புதமான மனிதர் நம் நாட்டில் தோன்றியிருக்கிறார். இந்தத் தோன்றலை அவதாரம், மெசியா, இறை தூதர், சித்தர், யோகி, புனிதர் அல்லது காலத்தின் தேவை கருதி இயற்கையால் அனுப்பி வைக்கப்படும் அரிதான மனிதர் என, வரலாற்று நூல்கள் உரைக்கின்றன. 

‘‘மனிதரின் புகழல்ல; அவர் காட்டிய பாதைதான் முக்கியம்’’ என்றுரைக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை ‘‘விடுதலை என்பது ஒரு தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது மனித வாழ்க்கையின் பல துறைகளில் ஒரே நேரத்தில் கட்டப்பட வேண்டிய ஒரு முழுமையான அமைப்பு’’ என்ற மிகப் பெரிய பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. அந்தப் பாடத்தின் மீதான சிறிய ஒளிப் பாய்ச்சலே இந்தக் கட்டுரை! 

ஜெய்பீம்!

***

நிர்மல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல்எனும் ஊருக்கு அருகில் உள்ள திருவழுதிவிளைஎனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்தேசத்தில் பெட்ரோ கெமிக்கல்துறையில் பணி செய்து வருகிறார். காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here