Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்வாழ்வின் நிலையாமையை முற்றாகப் பற்றி சுழலும் அன்றாடத்தின் நிலையான கதைகள்

வாழ்வின் நிலையாமையை முற்றாகப் பற்றி சுழலும் அன்றாடத்தின் நிலையான கதைகள்

ஆனந்த பிரகாஷ்

ழைக்கண் – மொத்தம் ஒன்பது, வெவ்வேறு களங்களில், வெவ்வேறு வீச்சுகளில், வெவ்வேறு அன்றாடத் தருணங்களால் பின்னப்பட்ட அன்றாடத் தெறிப்புகளின் கதைகள். ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் தனித்துவமான கதைகள் என்றாலும், எல்லாவற்றையும் இணைக்கும் மையச் சரடாக எதையேனும் சொல்ல முடியுமானால் அது வாழ்வின் நிலையாமை என்ற இடத்தில் போய் கச்சிதமாய் பொருந்தி நிற்கிறது.


நிலையாமை என்பது வெறும் நேற்று இருந்த நிலை இன்றைக்கு இல்லை என்றளவில் சுருக்கிக் கொள்ளாமல் – நேற்று இருந்த பொருளாதாரம் இன்றில்லை, நேற்று இருந்த உடல்நிலை இன்றில்லை, நேற்று இருந்த உடல் இன்றில்லை, நேற்று இருந்த உறவு இன்றில்லை, நேற்று இருந்த மனம், மனநிலை இன்றில்லை என சதா மாறிக்கொண்டே இருக்கும் அத்தனை நிலையாமையையும் கருப்பொருளாக மாறி உணர்வுகளுக்கும், சூழல்களுக்கும், வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் நிலையாமையால் மாறிப்போகும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் சரியே பொருந்திப் போகக்கூடிய ஒன்றாக எல்லா கதைகளிலும் கச்சிதமாக வெளிப்படுகிறது.

வாழ்க்கையின் நிலையாமை, அதன் இரக்கமற்ற கொடூரம், அதை எந்த விதத்திலும் எதிர்நிற்க முடியாத மனிதர்களும், எதிர்க்க முடியாமல் பலியாகிப் போகிற மனிதர்களும் இடம்பெறுகிறார்கள். உடலாகவும் சரி, உயிராகவும் சரி, உணர்வாகவும் சரி, உறவாகவும் சரி, இப்படி எல்லாமும் வாழ்க்கையின் நிலையாமை என்ற மறுக்க முடியாத ஒன்றால் பலியாகிப் போகிற எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது ஒன்பது கதைகளும்.

செந்தில் ஜெகன்நாதனின் மொழி – எந்த பூச்சும் இல்லாத, எந்த சிடுக்குகளும் இல்லாத அன்றாடத்தின் மொழி. அன்றாடத்தின் கதைகளாக விரியும் கதைகளுக்கு அன்றாடத்தின் மொழி கச்சிதமான ஒரு கதைசொல்லல் வடிவத்தைக் கொடுக்கிறது. அன்றாடத்தின் இந்த சிடுக்கற்ற மொழிதான் அவர் கதைகளின் உயிர்நாடியாக இருந்தாலும், அதே அன்றாடத்தின் மொழி ஒரு சில கதைகளின் வீச்சையும், வீரியத்தையும் குறைத்து எடுத்துக்கொண்டு போய் வாசகனுக்கு சேர்க்கிறதோ என்று ஒரு சில கதைகளில் ஐயமும் தோன்றுகிறது.

உதாரணமாக எவ்வம் மாதிரியான கதைகளைச் சொல்லலாம். அக்கதை பேசும் பொருளும், அது தாங்கி நிற்கிற கணமும், வாசகனிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய உணர்வும் அதிகம் என்றாலும், ஏதோ ஒரு வகையில் அதன் வீரியம் குறைபட்டுப் போனதை வாசிப்பின் வழி அறிய முடிகிறது. அது எழுதப்பட்ட அன்றாடத்தின் மொழியில் குறைகள் ஏதும் இல்லை என்றாலும், அன்றாடத்தின் மொழியைத் தாண்டி அக்கதைக்கான பிரத்யேக கதைமொழி தேவைப்பட்டதோ என வாசிப்பின் முடிவில் யோசிக்க வைத்த கதையாக மாறிப்போனது எவ்வம் சிறுகதை.

செந்தில் ஜெகன்நாதன் தன் கதைகளுக்கான தலைப்புகளைக் கையாண்டு இருக்கும் விதமும் மழைக்கண்ணில் கவரக்கூடிய ஒரு அம்சமாக வந்திருப்பதை மறுக்க முடியாது. தன் கதைகளுக்கான தலைப்புகளை (எவ்வம், மழைக்கண், காகளம், நெருநல் உள்ளொருத்தி) குறளில் இருந்தும், சங்கத்தில் இருந்தும், பக்தி இலக்கியத்தில் இருந்தும் கையாண்டு இருந்தாலும், அது வெறும் சொல் அல்லது பெயர் என்றளவில் சுருங்கிக் கொள்ளாமல் அக்கதையின் மையத்தோடு இயல்பாய் பொருந்திப் போவதுதான் மிகச் சிறப்பான விஷயம்.

மழைக்கண்ணில் வரும் அத்தனை மாந்தர்களும் தள்ளி நின்று வெறும் கதையின் பாத்திரமாக மட்டும் நிற்காமல் நம்மோடு ஒட்டி நின்று பரிச்சயமான மனிதர்களாகவும், அவர்களின் கதைகள் நாம் கடந்து வந்த மனிதர்களின் கதைகளாகவும் நம்மிடம் வெளிப்பட்டு நிற்பதுதான் அக்கதைகளின் ஊடாக ஒரு பிணைப்பை வெகு விரைவாக நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.

அன்பின் நிழல் – சுயம்புவாக வளர்ந்து வந்த அப்பாவிற்கும், ஒரு போதும் அன்பைப் பெறாத மகனுக்கும், வாழ்வின் நிலையாமைக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமாக விரிகிறது அன்பின் நிழல். சுயம்புவாக வளர்ந்த அப்பாக்களுக்கு என்றே ஒரு தனிக் குணம் இருக்கிறது. அவர்களின் அகராதியில் அன்பு என்ற சொல்லுக்கு ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கிறதா எனப் பல சமயங்களில் யோசிக்க வைக்கும்படியான ஒரு குணம். அவர்களுக்கு தெரிந்த ஒரு அன்பின் வெளிப்பாடாகவும் வெளிவருவது குடும்பத்திற்கான பொருள் ஈட்டுவது என்றளவில் சுருங்கிக் கொள்ளக்கூடியது. அதிலும் கூட முழுக்க அன்பின் வெளிப்பாடு என்றும் நிறுத்திக்கொள்ள முடியாது. அதுவும் ஏதோ ஒரு வகையில் தன் இருத்தலை, அதிகாரத்தை நிரூபிக்கக்கூடிய ஒன்றாகவும் பல சமயங்களில் நிற்கக்கூடியது.

அப்படியான சுயம்பு அப்பாவின் வாழ்வில், நிலையாமையால் தன்னுடைய நிலத்தை இழந்து, குடிக்கு அடிமையாகி எல்லாருக்கும் ஒரு பாரமாகும் அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மொழிகள் பெரிதும் அற்ற ஒரு நிகழ்வாக விரிகிறது அன்பின் நிழல். அப்பா இறந்துபோய் இருந்தால் ஒரு வேலை தேவலை என நினைக்கும் மகன், கதையின் இறுதியில் குழந்தை போல படுத்து இருக்கும் அப்பாவின் நெற்றியில் வைக்கும் முதல் முத்தம், அதன் ஈரம் நமக்குள்ளும் காயாமல் இருப்பதுதான் இக்கதையின் வெற்றி.

எல்லா தந்தை, மகன் உறவும் அன்பினால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக வெளிப்படுவதை விட, பெரும்பாலும் அன்பின் நிழல்களாக மட்டும் வெளிப்படும் எதார்த்தத்தைக் காட்டுகிறது அன்பின் நிழல்.

அதற்கு சற்றே பொருத்தமான, ஆனால் முற்றிலும் வேறான ஒரு தந்தை, மகன் உறவைக் காட்டுகிறது எவ்வம். தனது வார இறுதி விடுமுறையைக் கூட தன்னிடமிருந்து பறித்துக்கொண்டு, சூதாட்டம் நடத்த அழைத்துச் செல்லும் குடிகார தந்தையையும், அதனால் தினம் தினம் ஒரு குடும்பம் படும் நெடுந்துயர் பற்றியும் பேசுகிறது எவ்வம்.

இப்படியான சூழலில் வளரும் குழந்தையின் உளவியலை வரிக்கு வரி அப்பட்டமாகப் பதிவு ஆக்குகிறது எவ்வம். அக்குழந்தைக்கு தன் குழந்தமையைத் தாண்டிய ஒரு பொறுப்பும் கூடவே வந்து விடுகிறது. அதைக் கண் முன்னே நிறுத்திக் காட்டுகிறது எவ்வம் சிறுகதை. தான் பணத்தை இழந்து பேருந்து நிறுத்தத்தில் கிடக்கும் அப்பாவைப் பார்த்து கண்ணை மூடியவனுக்கு – வெந்த கிழங்கு போல் இருக்கும் தன் தங்கையின் பாதம் மண்ணில் உரச இழுபடும் காட்சி தோன்றுவது ஒரு போதும் நிற்காத எவ்வத்தின் சாட்சி.

நித்தியமானவன் – சினிமா கனவு, ஊரை விட்டு ஓடி வந்து வாய்ப்பு தேடி அலைந்து திரிந்து நொந்துபோன மனிதர்களின் கதை, பல முறை படித்த ஒன்றுதான். இக்கதையும் பல கதைகளை மீண்டும் ஞாபகச் சேகரத்தின் அடியில் இருந்து புலிகலைஞன், கரைந்த நிழல் போன்றவற்றைத் தட்டி எழுப்பிய கதை. இன்றோடு தன் சினிமா கனவையெல்லாம் மூட்டை முடிச்சோடு கட்டி ஊரோடு போய் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று கடைசியாக பிணமாக நடிக்கப் போன ஒருவன், கலையின் தாகத்தால், ஆத்மார்த்த அர்ப்பணிப்பால் ஒரு நிமிடம் பிணமாக மாறி எல்லாரையும் வாயடைக்கச் செய்து என்றும் அழிக்க முடியாத நித்தியமானவனாக வாசிப்பவன் மனதில் உருமாறி நிற்கும் நித்தியமானவனின் கதை. கலை பெரும்பாலும் ஒரு கலைஞன் வாழ்வதற்கு தேவையான எதையும் கொடுக்காத சமயத்திலும், கலைக்கும் கலைஞனுக்கும் இடையே நிகழும் அந்த கணம், அந்த உரையாடல் முழுக்க முழுக்க அந்தரங்கமானது, ஆத்மார்த்தமானது.

முத்தத்திற்கு – சமீபத்தில் படித்த ஆதவனின் நிழல்கள் சிறுகதையை வெகுவாக நினைவூட்டிய ஒரு சிறுகதை. அக்கதையில் ஆதவன் நிகழ்த்திக் காட்டிய உச்சம் பிரமிக்க வைக்கக்கூடிய ஒன்று. கிட்டத்தட்ட அதே பாணியில் எழுதப்பட்ட, சற்று வித்தியாசமான ஒரு அருமையான கதை. குடும்பப் பொறுப்பின் காரணமாக பால்யத்தின் தேவைகளை எல்லாம் விட்டுவிட்டு, பால்யத்தின் இறுதியில் (40 வயதில்) மீண்டும் பால்யத்தின் வால் முளைக்கும் மனிதன் ஒரு முத்தத்திற்காக படும் அவஸ்தையையும், தனக்குள்ளாக நிறைக்கும் கேள்விகளையும், அந்த உணர்வை சக தோழர்களிடம் கூட வெளிப்படுத்த முடியாத வயதிற்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் பதிவு செய்யும் கதை.

தொகுப்பின் முத்தான, அருமையான கதைகளாக வந்து சேர்ந்திருப்பவை மழைக்கண், காகளம், நெருநல் உள்ளொருத்தி. மூன்று கதைகளையும் பற்றியும் எழுதவும் பேசவும் நிறைய இருப்பதால், அதைத் தவிர்த்து அந்தக் கதைகள் கொடுத்த தாக்கத்தை மட்டுமே பேசிக்கடப்பது சரியான அணுகுமுறை என்று நினைக்கிறேன்.

மழைக்கண் – பருத்தி விவசாயம் செய்து வாழும் விவசாயிகளின் வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால், தோல் நோயால் அவதிப்படும் அம்மாவின் துயரையும், குடும்பம் படும் அவதியையும் உருக்கமாகப் பதிவு செய்த கதை. கதையின் இறுதியில் உடுத்துவதற்காக வாங்கி வந்த பருத்திச் சேலையைக் கட்டிப்பிடித்து கதறி அழும் அம்மாவின் முகத்திற்கு – பால்குடி புள்ளைப்போல பார்க்கிற பருத்திச் செடியின் முகம்தான் மனதிற்குள் வந்தது.

நெருநல் உள்ளொருத்தி – வாழ்வின் நிலையாமையை, அதன் முன்னால் தாய்மை கூட ஒரு பொருட்டல்ல என்கிற நிதர்சனத்தை எந்த பூச்சும் இல்லாமல் அப்பட்டமாகப் பதிவு செய்யும் கதை.

காகளம் – வெறும் சிடுமூஞ்சி முதலாளிகளை மட்டுமே தெரிந்த நமக்கு, சங்கீதத்தில் மிகுந்த பற்று இருந்த, சாந்தமே முகமான முதலாளியையும், வாழ்வின் தேவை கருதி அவரை ஏமாற்றிய ஒருவன் அவருடைய இறப்பிற்கு போய் நின்று பொங்கி வரும் குற்ற உணர்ச்சியையும், அதன் வழியாக விரியும் வாழ்க்கையையும் வாசிப்பை கதையினோடாக மட்டுமே கட்டிப்போட்ட கதை காகளம். இறந்து குளிர்பெட்டியில் சாந்தமே குடிகொண்ட முதலாளியைப் பார்க்கும் போது என் மனதிற்குள், கையில் செம்மறி ஆடுக்கு பதிலாக டேப் ரெக்கார்ட்டை கையில் வைத்து கருணையும் சாந்தமும் உருவான இயேசுவின் உருவப்படத்தை பார்த்தது போன்ற ஒரு எண்ணம்.

அதிலாமல் ஆடிஷன், நேசன் என இரு வேறு கதைகள். ஆடிஷன் – சினிமா கனவைக் கொண்டு முன்னேறி நிற்கிற மனிதர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு அலையடித்துப் போகிற பழைய காதலின் அலையைக் காண்பிக்கிற ஒரு கதை. நேசன் – நாலு கால் ஜீவனின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அது காட்டுகிற அன்பின், நேசத்தின் முன்னால் ஒரு கணம் கரைந்து உருகுகிற கணவனின் கதை.

மொத்தமாக உணர்வுகளும், உறவுகளும், நிலையாமையும் என ஒன்றாக பின்னிப் பிணைந்த மனிதர்களின், வாழ்க்கையின், அன்றாடத்தின் தொகுப்பு. இதெல்லாம் கதையாகுமா என்கிற கேள்விக்கு, அன்றாடத்தின் அத்தனை அம்சங்களும் கதைக்கு உரியன எனக் கூறும் ஒரு தொகுப்பு மழைக்கண்.

செந்தில் ஜெகன்நாதனுக்கு சொல்வதற்கு நிறைய மனிதர்களும், கதைகளும், சம்பவங்களும் இருக்கின்றன. அதைப் புனைவாக்கும் மொழியும், நடையும், கலையும் அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. அவரின் அடுத்த படைப்புகளை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு படைப்பு – மழைக்கண்.

***

சு. ஆனந்த பிரகாஷ் – சொந்த ஊர் மதுரை. பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். தீவிர வாசகரும் புத்தக மதிப்புரையாளரும் (Bookstagrammer) ஆவார். தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை வாசித்து, அவற்றைப் பற்றிய தனது வாசிப்பு அனுபவங்களையும், மதிப்புரைகளையும் தனது Bookstagram பக்கமான @paperbacks_and_me இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மின்னஞ்சல்: ananthaprakash11@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here